வாசிப்பும் , யோசிப்பும் 344: எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் தம்பதிஎழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அம்மா அராலி இந்துக்கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது என் சகோதரன், இளைய சகோதரிகள் இருவரும் அங்குதான் படித்தார்கள். அங்குதான் ஆசிரியராக அப்பச்சி மகாலிங்கம் அவர்களும் பணி புரிந்து வந்தார். நவாலிப்பக்கம் வசித்து வந்ததாக என் தம்பி கூறுவான். அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் அறிந்திருக்காவிட்டாலும் , அவரது சிறுகதைகள் பல வீரகேசரி வாரவெளியீட்டில், ஈழநாடு (யாழ்ப்பாணம்) வாரமஞ்சரியில் வெளியாகியிருப்பதை அறிந்திருக்கின்றேன். கடற்றொழிலாளர்களை மையமாக வைத்து அவரது கதைகள் பல இருந்தன.

என் தம்பி எழுத்தாளர் கடல்புத்திரனாக உருமாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அப்பச்சி மகாலிங்கம். இது பற்றிக் கடல்புத்திரன் தனது ‘வேலிகள்’ சிறுகதைத்தொகுதியில் பின்வருமாறு கூறுவார்: “இந்த என் எழுத்து முயற்சிக்கும் சிறிய வரலாறு இருக்கிறது. முதலில் 6-9 வகுப்பு வரையில் எனக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த அப்பச்சி மகாலிங்கம் ஆசியரை குறிப்பிட்டேயாக வேண்டும். நான் எழுதுகிற கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருந்தபோதும், அவற்றை பொறுமையுடன் படித்து எடுத்த விசயங்களையும், சம்பவங்களையும் பாராட்டியே வந்தார். “அ” னாவையும் ‘சு’ னாவையும் கவனித்து எழுது. வித்தியாசமில்லாமல் எழுதுகிறாய் கவனமாகவிரு உன்னால் கொஞ்சமாவது எழுத முடியும் என்பார்”.

அவரது நாவலொன்றும் வீரகேசரி பிரசுரமாகவும் வெளியானது. அவரது சிறுகதைகளில் ‘கடல் அட்டைகள்’ பற்றிய சிறுகதையொன்றைக் கடல்புத்திரன் அடிக்கடி சிலாகிப்பதை அவதானித்திருக்கின்றேன்.

அவரது ஆக்கங்களை மீண்டும் படிக்க வேண்டுமென்று ஆசையேற்பட்டது. நூலகம் தளத்திலும் தேடிப்பார்த்தேன். நூல்களாகக் கிடைக்கவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். ஈழநாடு பத்திரிகைகள் பல இன்னும் வாசிக்கும்படியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இவரது புத்திரனான மகாலிங்கம் கெளரீஸ்வரன் என் முகநூல் நண்பர்களிலொருவராக இருக்கின்றார். அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அவரிடம் அப்பச்சி மகாலிங்கள் படைப்புகள் இருந்தால் பதிவேற்றம் செய்யும்படி கூறியிருந்தேன். புகைப்படமிருந்தாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தேன். அனுப்பியிருந்தார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். விரைவில் அவரது படைப்புகளை நூலுருவில் பார்க்கக் காலம் துணை செய்யட்டும்.

இவரைப்பற்றி நூலகம் தளத்தில் ஆளுமைகள் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“மகாலிங்கம், அப்பச்சி யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்பச்சி; தாய் சிவக்கொழுந்து. இவர் நவாலி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் மூதூர் பாடசாலையிலும் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் மாணவனாக இருக்கும் போதே வீரகேசரி மாணவர் பகுதியில் சில குட்டிக் கதைகளை எழுதியதுடன் இளஞாயிறு சஞ்சிகையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்று வரதன் என்ற புனைபெயரில் பல ஆக்கங்களை எழுதி வந்தார். விடத்தல் தீவு சிரேஷ்ட பாடசாலை, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி, காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, அராலி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், பாலசுப்பிரமணிய வித்தியாசாலையில் 01.01.1991 இல் ஓய்வு பெறும் வரை தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். இவர் பல சிறுகதைகளையும் வானொலி நாடகங்களையும் மேடை நாடகங்களையும் படைத்துள்ளார். இவர் அந்திரான் முருகமூர்த்தி கோவில் நிருவாக சபையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளார்.”


முகநூல் எதிர்வினைகள்:

1. Jeya Sunda (திருமலை சுந்தா) :  நேரில் தொடர்பு இல்லாது விட்டாலும் நான் சிறு கதை எழுதிய காலத்தில் நிறைய கதைகளை எழுதி உள்ளார்.

2. Alex Paranthaman:  70களில் வீரகேசரி பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தொடராக வெளியிட்டு வந்த நாவல்களில் திரு. அப்பச்சி மகாலிங்கம் ஐயா அவர்களுடைய ‘கமலினி’ எனும் நாவல் அடங்குகிறது. ‘ கமலினி’ ஒரு சமூகநாவல்.
சலனமற்றநிலையில், மெல்லெனநகரும் ஆற்றுநீர் போன்ற அருமையான மொழிநடை! நாவலில் வரும் சிதம்பரியும் கமலினியும் பொன்மலரும் மற்றும் பாலச்சந்திரன், தம்பித்துரை போன்றோர் மறக்க முடியாத பாத்திர வார்ப்புகள். இந்தநாவலை பலமுறை திரும்பத்திரும்பப் படித்துள்ளேன். இத்தனை வருடங்கள் கழிந்தும் நாவலும் நாவலின் கதையோட்டமும் என்மனதில் பதிந்து நிற்பதற்கு காரணம் அப்பச்சி மகாலிங்கம் ஐயா அவர்களுடைய எழுத்தின் ஆளுமையன்றி வேறெதுவுமில்லை.
அவரைப்பற்றி பதிவிட்ட கிரிதரனுக்கு நன்றிகள்!

3. Jawad Maraikar:  அப்பச்சி மகாலிங்கம் பற்றி நான் அறிந்திராத தகவல்களைத் தந்தமைக்கு நன்றி . அவருடைய தோற்றத்தையும் இப்போதுதான் காண்கின்றேன். அப்பச்சி என்பது வேறு காரணத்துக்காக அவர் வைத்துக்கொண்ட புனைபெயர் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.

4. Vadakovay Varatha Rajan:  கலைமகளில் வந்த அவரது இராமருக்கு தோணியோட்டிய வம்சம் சிறுகதை , அற்புத படைப்பு

ngiri2704@rogers.com