வாசிப்பும், யோசிப்பும் 46 : வாண்டுமாமா (கெளசிகன்) நினைவாக……

வாண்டுமாமாசிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக , குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.

நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம், நானும் என் சகோதர, சகோதரிகளூம் கல்கியில் வெளியான இவரது ‘ஓநாய்க்கோட்டை’ என்னும் சித்திரத் தொடரினை விரும்பி வாசித்தோம். இப்பொழுதும் அச்சித்திரத் தொடரில் வரும் ‘தூமகேது’ என்னும் பாத்திரம் நினைவில் நிற்கிறது. பால்ய காலத்தில் எமக்குத் திகிலினை ஏற்படுத்திய பாத்திரங்களிலொன்று தூமகேது.

கல்கியில் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பெயரில் ஓரிரு பக்கங்கள், அழகான வர்ணச் சித்திரங்களுடன் வாண்டுமாமா தயாரித்து வழங்கிய சிறுவர் பக்கம் வெளிவரும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. அதன் பக்கங்களைச் சேகரித்து அழகாக ‘பைண்டு’ செய்து வைத்திருந்தேன் ஏனைய தொடர்களைப் போல. அக்காலகட்டத்தில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் மாணவர் மலர் பக்கமும், கல்கியின் சிறுவர் விருந்து பக்கமும் (வாண்டுமாமாவின் தயாரிப்பில்) மிகவும் பிடித்த சிறுவர் பக்கங்கள். ஈழநாட்டின் மாணவர் மலர் என் மாணவப் பருவத்தில் என் எழுத்தார்வத்தை மிகவும் ஊக்கியது. கல்கியின் சிறுவர் விருந்தும், வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகளும் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தவை.

தனது தொண்ணூற்றியொரு வயதில்  (12.6.2014),   வாண்டுமாமா இவ்வுலகை நீத்தார் என்னும் செய்தி சிறிது துயரத்தினைத் தந்தாலும் அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. தன் வாழ்க்கையையே சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2012இல் எழுத்தாளர் சமஸ் இவருடன் கண்ட நேர்காணல் இவ்வாறு முடிவடைகின்றது:

‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?’’

‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்… என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே?’’

பணம் , பணம் என்று வாழ்க்கையையே பணத்துக்காக வீணாக்குவோர் மத்தியில் ‘பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே’ என்பதை நன்கு விளங்கி, தன் ஆற்றலை, சமூகப்பங்களிப்பை சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த எழுத்தாளரான வாண்டுமாமாவின் நினைவுகளும் , அவரது படைப்புகளும் என்றென்றும் எம்முடனிருந்து வரும்.