வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!பொள்ளாச்சியில் பல வருடங்களாக நடந்துவந்திருப்பதாகத் தற்போது அம்பலமாகியிருக்கும் பாலியல் வன்முறைச் செய்தி அளிக்கும் அதிர்ச்சியும், ஆதங்க மும் சொல்லுக்கப்பாலானவை. நாளும் நாளிதழ்களில் 4 வயதுப் பெண்குழந்தை முதல் பல்வேறு வயதுகளிலான பெண்கள் இவ்வாறு வன்முறைக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்கவேண்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேரும் மாணவிகளை அந்தக் கல்லூரிகளின் சீனியர் மாணவிகளைக் கொண்டே சினிமா, ஹோட்டல் என்று சுதந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதாய் பொறியில் சிக்கவைத்து, சிகரெட், போதைமருந்து போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தி, பின், விபச்சாரத்தில் தள்ளிவிடும் நாசகார கும்பலொன்று பற்றிய செய்தி வந்தது. ஆனால், இத்தகைய செய்தி வெளிவந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்று இத்தகைய செய்திகளை மறுப்பதும், முடக்குவதுமே பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்களின் அணுகுமுறை யாக இருந்தது; இருந்துவருகிறது. கல்லூரிகளில் இத்தகைய சமூகச் சீர்கேடுகளிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதேனும் விழிப்புணர்வூட்டல் சார் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா தெரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று எல்லோரும் பாதிப்புக்காளாகும் இத்தகைய அக்கிரமங்களை அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களும் தங்கள் அரசியல் பிறவேறு சார்புகளுக்கு அப்பால் தோலுரித்துக்காட்டுவது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தி சேனலில் பெண்விடுதலையைப் போற்றிக் கொண்டே தங்கள் எண்டர்டெயின்மெண்ட் சேனலில் மிக மிகப் பிற்போக்கான பெண் பிம்பங்களை சீரியல்களிலும், விளம்பரங்களிலும் முன்வைத்துக்கொண்டேயிருப்பது தடுக்கப்படவேண்டும்.

இணையதளங்களில் இன்று 10 செகண்ட் போர்னோ படங்களுக்கு இருக்கும் வரவேற்பும், அதற்கான காணொளிகள் எப்படியெப்படியெல்லாம் தயாரிக்கப் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டுகிறது. இந்தவிதமாய் பணம் ஈட்டுவதற்காகவே அப்பாவிச் சிறுமிகள், அநாதரவான பெண்களை – பரிச்சயமானவர்கள், உறவுக் காரர்கள் என பலதரப்பினரும் ஏமாற்றுவதும், அச்சுறுத்துவதும் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் நாளும் வரும் இத்தகைய தகவல்கள் புலப்படுத்துகின்றன. முன்பெல்லாம் காதலித்து ஏமாற்றுவது என்றால் கல்யாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவது என்பதாக மட்டுமே இருந்தது. இப்பொழுது காதல் என்ற பெயரில் வேறு என்னவெல்லாமோ நடக்கிறது. இது குறித்த sensitization வளரிளம்பருவத்தினருக்குக் கிடைக்க பள்ளி, கல்லூரி, சமூகவெளிகளில் வழிவகை செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினசரி காலை வேலைக்குச் சென்று இரவுதான் வீடு திரும்புவதாகவும், தன் மகள்கள் எப்பொழுதும் மௌபைலில் எதையோ பார்த்து, படித்துக்கொண்டிருப்பதாகவும், தந்தை என்பதால் ஓரளவுக்குமேல் தன்னால் அவர்களிடம் வெளிப்படையாக எதுவும் பேச இயலவில்லையென்றும், இணையதளம், அலைபேசி மற்றும் வேறு எந்தவிதமாய் இளையதலை முறையினர் (மற்றவர்களும்கூட) ஏமாற்றப்படுகிறார்கள், எப்படியெல்லாம் அவர்கள் சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைக்கும் நூல் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார். நானும் தேடினேன். கிடைக்கவில்லை. ‘நான் பணம் தந்துவிடுகிறேன் அம்மா, எனக்கு அத்தகைய புத்தகம் வேண்டும்’ என்று அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டபோது வருத்தமாயிருந்தது. இளந்தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அத்தகைய நூல்கள் வெளியாகியிருக்கின்றனவா? இருந்தால் அவை குறித்த விவரம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் எழுதப்படவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.

ஒளி ஊடகங்கள் முன்வைக்கும் மனித பிம்பங்கள் இளந்தலைமுறையினரின் மனங்களில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்த வல்லவை. சினிமா என்றால் நாம் போய்ப் பார்க்க வேண்டும். சீரியலோ நம்மைத் தேடி வந்து சீரழிக்கிறது. சீரியல் மட்டுமா….?
இந்த விழிப்புணர்வுப் பரவலாக்கம் இன்று மிக மிக முக்கியம்.

சமீபத்தில் படைப்பாளியான ஆசிரியை ஒருவர் தன்னுடைய வகுப்புமாணவிகளோடு தான் இருக்கும் புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பெருமையோடு தனது டைம்-லைனில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார். இது சரியில்லை. சட்டப்படியும் தவறு. இது அவருக்குத் தெரியாதா? தெளிவாகத் தெரியும் அந்தச் சிறுமிகளின் முகங்களை சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ள வழியுண்டு என்று அவர் எண்ணிப் பார்க்க மாட்டாரா? அந்தச் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு இவ்விதம் தங்களுடைய குழந்தைகளின் படங்கள் முகநூலில் வெளியிடப்படுவது தெரியுமா? அதற்கு அவர்கள் அனுமதி உண்டா? தான் செய்வது சரி. மற்றவர்கள் அதையே செய்தால் அது அநியாயம் என்ற போக்கு என்னவிதமான சமூகப்பிரக்ஞை? தன்னுடைய புகைப்படத்தை அவர் எத்தனை வேண்டுமானாலும் வெளியிட்டுக்கொள் ளட்டும். ஆனால், தன் பொறுப்பிலுள்ள மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட அவருக்கு என்ன உரிமையிருக்கிறது? அவருக்கு அவசர அவசரமாக ‘லைக்’ போட்டு தங்களுடைய சமூகப் பொறுப்பைப் புலப்படுத்திவிட முந்தும் யாரும் இதைப் பற்றி ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை? இது குறித்து நமக்கு போதிய sensitivity, sensitization இல்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

மேலும், இத்தகைய சம்பவம் பற்றிய தகவல் வெளியாகும்போதெல்லாம் அதை சாதிரீதியாகப் பார்த்துப் பகுத்துப் பேசுவது விழிப்புணர்வுடையோராகக் கூறிக்கொள்ளும் சிலரின் வழக்கமாக இருக்கிறது. நிர்பயா, ஸ்வாதி, அயனாவரம் சிறுமி என்று எல்லோருடைய விஷயத்திலும் இத்தகைய அணுகுமுறையை சிலர் வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது. இன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசும்போதும் அந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில சாதிகளை இப்படி மிகக் கேவலமான சொற்களால் சாடுவோர் உண்டு. ஆதிக்கசாதி என்ற அடைமொழியில் சில சாதிகளை எப்படிவேண்டுமானாலும் இழிவாகப் பேசலாம். யாரும் எதுவும் கேட்கமுடியாது என்ற எண்ணத்தில் பேசுவோர் நம்மிடையே விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் சமுதாயப் போராளிக ளாகவும் வலம் வருவது வருந்தத்தக்கது.

ஒரு சமுதாயச் சீர்கேட்டைச் சாடுகிறோம் என்ற பெயரில், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சக மனிதர்களை, சக படைப்பாளிகளை எப்படிவேண்டு மானாலும் சாடலாம், மதிப்பழிக்கலாம், அதுவே தாம் சார்ந்த சாதியை யாரேனும் பேசினால் அவர்களை சாதிவெறியர்கள் என்று கட்டங்கட்டிவிடலாம் என்ற மனப்போக்குடன் சமூகப்பிரக்னையாளர்களாக அறியப்படும் சிலர் செயல்படுவதையும் காணமுடிகிறது. இத்தகைய சமூகசீர்கேடுகளில் ஈடுபடுபவர்களை சாதி, மத ரீதியாக அடையாளப்படுத்திப் பேசுவதும், ஒரு சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த நாலுபேர் செய்யும் அக்கிரமங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட மக்கட்பிரிவினர் அனைவரையும் பொறுப்பாளிகளாக்கி மதிப்பழித்துப் பேசுவதுமான அணுகுமுறை சரியல்ல. நிறைய நேரங்களில் இத்தகைய முன்னெடுப்பு எதிர்மறையான விளைவை அளிப்பதாகி விடும். சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடுவோர் சமூக எதிரிகள். சமூகப் பிரக்ஞையுள்ள அனைத்துத் தரப்பினராலும் எதிர்க்கப்படவேண்டியவர்கள். எதற்கெடுத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களையே victim-shame செய்யும் மனப்போக்கு மாறவேண்டும். பொள்ளாச்சியில் நடந்தேறியுள்ள பயங்கரங்களுக்குக் காரணமான மனிதத்தோல் போர்த்திய அ-மனிதர்கள் (மிருகங்கள் என்று சொல்வது மிருகங்களை அவமானப்படுத்துவதாகிவிடும்) கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்

ramakrishnanlatha@yahoo.com