வாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்!

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை – பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் – ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.

 1960 ஆம் ஆண்டில் தமிழ்வாணனின் கல்கண்டு என்ற இதழுக்கு ‘பால்காரப் பையன்’ என்ற கதை எழுதியனுப்பியிருந்தார். இதுவே இவரது இலக்கிய வரலாற்றில் முதல் சிறுகதையாகும். ஆனால் அது கடைசிவரையும் பிரசுரிக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து ஜி. உமாபதி நடத்திய ‘உமா’ என்ற மாத இதழுக்கு, அவ்விதழின் அட்டைப் படத்துக்கான கதையினை எழுதியிருந்தார். பாதையில் கிடந்த வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் வாலிபனையும் அதைப் பார்த்துக் குறும்பாகச் சிரிக்கும் இரண்டு இளம் பெண்களையும் சுட்டி நிற்கும் அந்த கதையின் பெயர் ‘வாழைப்பழத் தோல்’ இதுவே பிரசுரமான அவரது முதல் கதை. இதற்கு பிறகு ‘மாயை’ ‘அழகு’ ஆகிய கதைகளை மோகன் நடத்திய ‘கதம்பம்’ என்ற இதழ் பிரசுரித்திருந்தது.

ஜோசப் அவர்கள் தெளிவத்தை தோட்டத்து ஆசிரியர் (வாத்தியார்) அத்தோடு பகுதி நேர எழுதுவினைஞ ராக (தோட்டத்து காரியாலய கிளாக்கர்) தொழில் புரிய ஆரம்பித்த காலத்தில் வீரகேசரியில் பிரசுரமான தோட்ட மஞ்சரி எனும் பகுதிக்கு ‘பெயரோ பெயர்’ என்ற கட்டுரையினை எழுதியிருந்தார். பாடசாலை வரவு இடாப்பில் மாணவர்களின் பெயர்களை கொச்சைப்படுத்தும், சீரழிக்கும் முறை கேடான சம்பவங்களுக்கு எதிரான கட்டுரையது. தோட்ட மஞ்சரியில் பிரசுரமானது தெளிவத்தை ஜோசப் என்ற பெயருடன் அன்றிலிருந்து தெளிவத்தை ஜோசப் ஆனார்.

50 களில் கடைசியில் தொடங்கியிருந்தாலும் 1963 களிலேயே இலக்கியத் துறையில் தடம் பதித்து பலராலும் அறியப்பட்டவரானார். 1963 ஆம் ஆண்டில் வீரகேசரி நடத்திய சிறுகதை போட்டியில் இவரது சிறுகதையான ‘பாட்டி சொன்ன கதை’ முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. பாட்டி சொன்ன கதை பழங்கதை என்று புறந்தள்ளிவிடமுடியாது. இன்றைய சூழலிலும் இந்த பாட்டியின் கதை பலருக்கு அவசியமாகத்தான் இருக்கிறது. அதேபோல 1963இல் மலைமுரசு நடத்திய சிறுகதை போட்டி யில் ‘நாமிருக்கும் நாடே’ என்ற சிறு கதையும் முதலிடம் பெற்றது. 1964 இல் வீரசேகரி நடத்திய சிறுகதை போட்டியிலும் இவரது ‘பழம் விழுந்தது’ என்ற சிறுகதை முதலிடத்தை பெற்றுக்கொண்டதும் இன்னும் பிரபலமடைய தொடங்கினார். வீரகேசரி நடத்திய மூன்றாம் நான்காம் மலையக சிறுகதை போட்டிகளில் தெளிவத்தை ஜோசப்பின் சகோதரரான பாக்கியசாமி என்கிற பரிபூரணன் இரு போட்டிகளிலும் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. வீரகேசரி நடத்திய நான்கு சிறுகதை போட்டிகளிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற சிறுகதைகளை தொகுத்து கதைக் கனிகள் என்ற நூலினை கார்மேகம் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்.

இவரது சிறுகதையான படிப்… பூ என்ற கதையினையும் 1962 இல் வீரகேசரியே பிரசுரித்திருந்தது. 2009 வரை எழுதிய (கடந்த 2 வருடங்களாக இவரால் சிறுகதை எழுதப்படவில்லை) அவரது 66 சிறுகதை களில் 16 சிறுகதைகளை பிரசுரித்து அவரது இலக்கிய வாழ்வுக்கு வீரசேகரி பெரிதும் உறுதுணையாக அமைந்திருக்கிறது. வீரகேசரி மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களும் இதேபோல தங்களது பங்களிப்பினை வழங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

தினகரன், தினக்குரல், செய்தி, சிந்தாமணி, ஜோதி, ஆகிய பத்திரிகை களும், கலைமகள், மலைப்பொறி, மலைமுரசு, தேனருவி, மல்லிகை, கம்பம், ஓலை, அஞ்சலி, தமிழமுது, மாணிக்கம் செளமியம், மூன்றாவது மனிதன், முகில் போன்ற சஞ்சிகைகளும் இவரது சிறுகதைகளை பிரசுரித்த பெருமை பெறும் அதேவேளை சிறந்த பங்களிப்பினையும் நல்கியுள்ளது.

66 சிறுகதைகள் எழுப்பப்பட்டிருந்தாலும் இதுவரையில் 11 சிறுகதையடங்கிய நாமிருக்கும் நாடே என்ற ஒரேயொரு சிறுகதை தொகுப்பு மாத்திரமே வெளிவந்துள்ளது. நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை தொகுப்பு வைகறை வெளியீட்டினால் 1979 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை முன்நின்று வெளிக்கொண்டு வந்ததில் மு. நித்தியானந்தன் அவர்களின் பங்கு அளப்பரியது. இந்த சிறுகதை தொகுப்பு 1979 ஆண்டில் அரசு சாகித்திய விருதுபெற்றிருந்து. மலையகத்தில் முதன் முதலாக அரச சாகித்திய விருது பெற்றவர் தெளிவத்தை ஜோசப் என்பதும் சொல்லப்பட வேண்டியதே.

இவர் 1963 களில் எழுதத் தொடங்கி 1970 களில் கொழும்பிற்கு புலம்பெயர காரணமாகவிருந்ததும் இவரது இலக்கிய படைப்புகளுக்கு வந்த எதிர்ப்புகளும், உயிர் அச்சுறுத்தல்களும், விமர்சனங்களுமே அவ்வாறானதொரு வலைபிடிக்குள் மாட்டிக்கொள்ளாது தொடர்ச்சியாக எழுதியிருந்தாலும் 1972 க்கு பிற்பட்ட காலம் இவரை எழுத்துத் துறையிலிருந்து சற்றே நிறுத்தித்தான் வைத்திருந்துள்ளது. மீண்டும் 1984இல் எழுத ஆரம்பித்தவர் தடைகள் பல கடந்து சாதனை பல படைத்து இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுமளவிற்கு தனது எழுத்துப் பணியினை செய்து வருகின்றவர்.

வீரகேசரி பத்திரிகையில் வெளியான இவரது முதல் சிறுகதையான ‘படிப்…பூ’ மலையக மக்களிடம் நிலவிய பாடசாலை கல்வி பற்றிய அலட்சிய போக்கினை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருந்தது.

அதற்கு பிறகு ‘யாழ்ப்பாண விரோதக்காரன்’ என்று விமர்சிக்கப்பட்ட ‘சோதனை’ என்ற கதையும் பாடசாலை கல்வி பற்றியதாகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும் இது வருட கடைசியில் மாணவர்களை வகுப்பேற்றுவதற்கு ‘இன்ஸ்பெக்டர்’ வருகிற நாளில் வாத்தியார்கள் போடும் போலி நாடகங்களை அம்பலப்படுத்தியது. அப்பொழுது வாத்தியார்களாக யாழ்ப்பாணத்தவர்கள் இருந்ததால் இவர் யாழ்ப்பாணத்துக்கு எதிராக எழுதுகிறார் என்று கதைகள் கூறப்பட்டுள்ளன. அந்த கதை யாழ்ப்பாண வாத்தியார்களுக்கு எதிராகவே எழுதப்பட்டதல்ல என்பதை சுட்டி காட்டியுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். மூன்றாவது மனிதன் நேர் காணலில் (ஒக்டோபர் – டிசம்பர் 2001) ‘நான் யாழ்ப்பாணத்தவர்களில் நன்மதிப்பையே கொண்டிருந்தேன். ‘பதுளைக்கு படிக்க வந்த பிறகு எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தவர்களே. திருவாளர்கள் பொன்னம்பலம், சின்னய்யா, முருகேசு, தோமஸ் ஆகியவர்களை என்னால் மறந்துவிட முடியாது. அவர்கள் கற்றுத்தந்த தமிழ்தான் என்னை உயிர்ப்பித்திருக்கிறது’ என்று நன்றியுடன் நினைவு கூருகின்றார்.

‘காதலினால் அல்ல’ என்ற நாவல் மலையக தோட்டப் புறத்திலிருந்து கொழும்பு போன்ற நகர்ப்புறம் நோக்கி வருகின்ற இளைஞர்கள் கொழும்பின் நாகரீக செயற்பாடுகளுக்குள் சிக்கி சீரழிந்து போவதைக் காட்டுகிறது.

‘குடை நிழல்’ என்ற நாவல் தங்களது இருப்பிடங்களை விட்டு கொழும்புக்கு வந்து வாழ்கின்ற மத்திய வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு வாடகை வீடு தேடுவதில் உள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டது. யுத்த காலத்தில் அப்பாவி தமிழர்களை பெரும்பான்மைவாதிகள் படுத்துகிற பாடுகளையும், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளையும் எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. இது அரசியல் மாற்றம் குறித்து சற்று சிந்திக்க வைக்கிறது. இந்த நாவல் அரசியல் பேசுகிறது என்று ஓரிரு புதின பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்துவிட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனாலும் 2010 ம் ஆண்டு கொடகே பதிப்பகம் ‘குடைநிழல்’ நாவலை நூலுருவில் தந்திருக்கின்றது.

‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்’ என்ற நாவல் 1983 இனக் கலவரத்தினை கருவாகக் கொண்டது. இந்த நாவலும் சிறுபான்மையினத்துக்கெதிராக திட்ட மிட்டு தூண்டிவிடப்பட்ட, கலவரம் பற்றிய பத்திரிகையாக அமைந்துள்ளது. கொழும்பின் 1983 இனக்கலவரக் கொடுமை களைப் பதிவு செய்கின்ற முதல் நாவல் இதுவாகும். இந்த நாவல் கதை என்பதைவிட ஒரு நிஜ சம்பவத்தின் பதிவு என்பதே மிக முக்கியமாகும்.

இவரால் எழுப்பப்பட்டிருக்கின்ற குறுநாவல் மூன்றும் மலையக மக்களின் பிரச்சினைகளை மூன்று விதமான பிரச்சினைகளை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கின்றன.

‘ஞாயிறு வந்தது’ என்ற குறு நாவல் 1966ஆம் ஆண்டில் கி.வா. ஜெகந்நாதன் நடத்திய கலைமகளில் வெளிவந்தது. தினகரன் ஆசிரியராக சிவகுருநாதன் கடமையாற்றிய 1969 களில் தினகரன் மனம் வெளுக்க என்ற குறுநாவலை பிரசுரித்திருந்தது. இதுவே தினகரனில் பிரசுரிக்கப்பட்ட இவரது முதல் படைப் பாகும். ஆனால் காலப் போக்கில் ஆரம்பத்தில் தனக்கு வீரசேகரி கொடுத்த அதேயளவு முக்கியத்துவத்தினை பின் னாளில் தினகரன் வழங்கியிருந்ததாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் நன்றி பகிர்கிறார். அப்பொழுது 1966 ஆம் ஆண்டில் பாலாயி என்ற குறு நாவல் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர்களில் ஒருவரான கே.வி.எஸ். வாஸ் அவர்களு டைய புதல்வரான மோகன் நடத்திய கதம்பத்தின் தீபாவளி சிறப்பு வெளியீ டாக பிரசுரிக்கப்பட்டது. இவர் எழுதிய மூன்று குறுநாவல்களையும் தொகுத்து நூலாக 1997 ஜுலையில் துரைவி பதிப்பகம் வெளியிட்டது. துரைவி பதிப்பகத் தின் உரிமையாளர் துரை விஸ்வநாதன் இருந்த காலத்தில் மலையகத்தில் உள்ள பல எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு நூல் வடிவம் பெற்றுக் கொடுத்தவர். தற்பொழுது அவரது மகன் துரைவிராஜ் பிரசாத் அதனை தொடர்கிறார் என்பதும் முக்கியமானது.

துரை விஸ்வநாதன் அவர்கள் இருந்த காலத்தில் அவரது துரைவி பதிப்பகத்துடன் இணைந்து துரைவி – தினகரன் பரிசு சிறுகதைகள், மலையக சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள் போன்ற நூல்களினதும் தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்துள்ளார். வீரசேகரியின் துணை ஆசிரியர் கார்மேகம் அவர்களு டன் இணைந்து கதைக்கனிகள் என்ற நூலையும் தொகுத்துள்ள அதேவேளை சுதந்திர இலங்கையின் 50 சிறுகதைகள் என்ற சிறுகதைகள் தொகுப்பினை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர் என்பதோடு இந்த சிறுகதைத் தொகுப்பில் 50 சிறுகதைகளுள் இவரது ‘பொட்டு’ என்ற கதை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவத்தை ஜோசப் அவர் களது ஆய்வுத் துறை பரப்பு என்பதும் சற்று விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். இவர் மேற்கொண்டிருக்கின்ற மிகப் பிரதானமான மூன்று ஆய்வுகளையும் எடுத்து நோக்கு மிடத்து, இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு, மலையக நாவல் வரலாறு (தற்போது செய்து கொண்டிருக்கிறார்) என்பனவாகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு என்பது இலங்கையில் ஆங்கிலேய காலத்தில் பத்திரிகை வாசனை தோற்றம் பெற்றதிலிருந்து இவரது இதழியல் வரலாறும் தோற்றம் பெறுகிறது. உதய தாரகை என்னும் பத்திரிகைக்கு முற்பட்ட காலத்திலுள்ள புதினத்தாள்கள் தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரையான பத்திரிகைகள், சிற்றி தழ்கள் வரை அனைத்தினதும் வரலாற் றையும் உள்ளடக்கியதாகவே அமைந்தி ருக்கிறது. ஆய்வின் காலப்பரப்பு நூறு வருடங்கள் என்பது ஆய்வுத் துறையில் இவரது ஆழத் தன்மைக்கு சான்றாக அமைகி றது. இதழியல் துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு எனும் கட்டுரைத்தொடர் 2001 – 2002 காலப் பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது. இது நூல் உருவம் பெறும் பட்சத்தில் மிகப் பெரும் சான்றாதாரமாகவும், மாண வர்களுக்கான கைநூலாகவும் அமையும்.

மலையக சிறுகதை வரலாறு எனும் நூல் மலையக, மலையகம் பற்றி எழுதிய எழுபத்தாறு எழுத்தாளர்கள் படைப்புகள் பற்றிய ஆய்வாகும். இவ்வாய்வு மலையக இலக்கியத்தினை உயிரோட்ட மிக்கதாகுவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு ஏனைய இலக்கியங்களோடு மலையக இலக்கியத்தை சீர்தூக்கி பார்க்கச் செய்யும் உன்னத செயற்பாட்டுக்கான அடித்தளமே என்பதிலும் இரண்டு கருத்தில்லை.

சிறுகதை, நாவல், ஆய்வு என்பதோடு மட்டும் நின்றுவிடாது இலக்கியத்தில் மற்றுமொரு அங்கமான திரைக்கதை வசனம், வானொலி நாடகங்களிலும் தனது பங்களிப்பினை செலுத்தியுள்ளார். இலங்கையின் புகழ் பெற்ற புதிய காற்று என்ற திரைப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் இவரே. ரூபவாஹினியில் ஒளிபரப்பிய பொகவந்தலாவ ராஜ பாண்டியன் நடித்த ‘காணிக்கை’ என்ற நாடகத் தொடர் இவரது ‘புரியவில்லை’ என்ற சிறுகதையாகும். அதை படமாக்க விரும்பியபோது அதற்கு திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். இவர் திரைக்கதை வசனம் எழுதிய ‘ஏன் இந்த உறவு’ என்ற திரைப்படம் காமினி பொன்சேகா நடிக்க விருந்து பட பூஜையுடன் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் எடுக்கவிருந்த திரைப்பட மொன்றுக்கு திரைக்கதை வசனம் எழுதித் தர கேட்ட பொழுது எந்த காலத்திலும் மலையக மக்களின் சுரண்டலுக்கு துணைப்போகும் மேலாதிக்க வர்க்கத்துக்கு சார்பாக என் இலக்கிய படைப்பை மேற்கொள்ள மாட்டேன் என்ற எண்ணத்தினால் அவர்களின் அழைப் பினை புறக்கணித்தமை மலையகம் மீதான இவரது எண்ணப் பாட்டினை தெளிவு படுத்துவதோடு இவர் மீதான மதிப்பை யும் வெகுவாக தூண்டுகிறது.

கவிதை பரப்பிலே இவர் நிலைத்து நின்றிருக்காவிட்டாலும் கவிதைகள் எழுதாமலில்லை. 1965 இல் ஈழக்குமார் தொகுத்து கவிதை நிலையம் வெளியிட்ட ‘குறிஞ்சிப்பூ’ என்ற கவித் தொகுப்பு நூலில் ‘இன்று நீ சுடுவதேனோ’ என்ற கவிதையும் வீரகேசரியில் ‘கருணை இழந்தோம் நாம்’ என்ற கவிதையினை யும் ‘ஜோரு’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார். அதற்கு பின் பாலாயி என்ற குறுநாவல் தொகுதியின் சமர்ப் பணத்துக்காக தனது தாய் தந்தையரைப் பற்றிய கவிதையொன்றினை எழுதியிருந் தார். இவை மூன்றுமே இவரது கவிதை படைப்புகளாகும்.

மலையகத்தின் மூத்த எழுத்தாளராக வலம் வருகிற இவரை பலரும் பல விருதுகளும் பரிசுகளும் வழங்கி கெளரவித்திருக்கிறார்கள். அந்த வகையில் 1963 ஆண்டு வீரகேசரி நடத்திய சிறுகதை போட்டியில் பாட்டி சொன்ன கதை என்ற சிறுகதைக்காக முதல் பரிசும் அதே ஆண்டில் மலை முரசு நடத்திய சிறுகதை போட்டியில் நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை முதலாம் பரிசும் பெற்றது. தொடர்ந்து 1964 இல் வீரகேசரி நடத்திய சிறுகதை போட்டி யில் பழம் விழுந்தது என்ற சிறுகதை முதலிடத்தை தட்டிச் சென்றது.

1996 இல் பரிசு தேசிய கலை இலக்கிய பேரவை சுபமங்களா ஆகியன இணைந்து நடாத்திய குறு நாவலுக்கான போட்டியில் குடைநிழல் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

சுவர் என்ற சிறுகதை 1998 இல் நீதி, அரசியலமைப்பு விவகார, இன உறவு அலுவல்கள் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு நடத்திய சிறுகதை போட்டி யில் முதலிடத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவர் தமிழ்க் கதைஞர் வட்டம் நடத்திய 2009க்கான சிறுகதை போட்டியில் இறுமாப்பு என்ற சிறுகதை சிறப்பு இடம்பெற்றது.

டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்ற சஞ்சிகையில் முகப்பு அட்டையில் ஒவ்வொரு இலக்கியவாதிகளின் படங்களையும் பிரசுரித்து அவர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது இலக்கியவாதிகள் மத்தியில் மிகப்பெரும் கெளரவத்தினையும், நன்மதிப்பையும் பெறுகிறது. அந்த வகையில் தெளிவத்தை ஜோசப்புக்கு 1973 ஏப்பிரல் மல்லிகை இதழிலேயே அந்த கெளரவத்தை அளித்துள்ளது. அதேபோல் ஞானம் சஞ்சிகையும் 23 அங்கம் அடங்கிய நேர்காணலை தொடர்ச்சியாக இரு வருடங்களாக பிரசுரித்ததுடன் பவள விழா சிறப்பு மலரையும் வெளியிட்டு கெளரவித்திருந்தது. ஞானத்தில் வெளிவந்த நேர்காணல் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியினை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேக ரன் மேற் கொண்டு வருவதாக அறியக் கிடைக்கின்றது. ஞானம் பத்திரிகை இதுவரை மூன்று பேருக்கு மட்டுமே பவளவிழா மலரை வெளியிட்டுள்ளது. அவர்களில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை அடுத்ததாக தெளிவத்தை ஜோசப் என்பதும் அறியப்பட வேண்டும்.

1979 நாமிருக்கும் நாடே சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசு, அரச சாகித்திய விருதினையும் 1991 இல் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு இலக்கிய செம்மல் விருதினையும், 1995 இல் இலங்கை, இந்து கலாசார அலுவல் கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் 2000 ஆம் ஆண்டில் தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய கெளரவ விருதினை சிலுமின பத்திரிகை யும், மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வுநூலுக்காக 2001 இல் அரச சாகித் திய விருதினையும், அதே ஆண்டில் இந்நூலுக்காக சம்பந்தன் விருதினையும், 2003 இல் அட்டன் புதிய பண்பாடு அமைப்பு மலையக சிறுகதை வரலாறுக்காக என்.எஸ்.எம். இராமையா நினைவுப் பரிசினையும், பேராதனை பல்கலைக் கழகம் 2007 இல் இலக்கிய விருதினை யும் 2008 இல் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் 2009 இல் மேல் மாகாண கலை, கலாசார அமைச்சு தமிழ் சாகித்திய விருதினையும், 2009 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மத்திய மாகாண சபை தமிழ் சாகித்திய விழாவில் சாதனை யாளர் விருதினையும், 2009 இல் அட்டன் ஆன்மீகக் கலை வட்டம் பாரதி விருதி னையும் (மக்கள் எழுத்து வேந்தன்), 2010 இல் பதுளை நிவ்பேர்க் குறிஞ்சிப் பேரவை எழுத்து வேந்தன் என்ற விருதி னையும் வழங்கி கெளரவித்திருக்கிறார் கள். அதே வேளை 2011 இல் கொடகே வெளியீட்டு நிறுவனம் ‘வாழ் நாள் சாதனை யாளர்’ விருது வழங்கி கெளரவிக்கின் றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல நாடுகளும் இவரை அழைத்து கெளரவம் வழங்கியிருப்பது மலையக இலக்கியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அமைந்திருக்கிறது.

இவரது படைப்புக்களை உற்றுநோக்கும் போது அவரது வாழ்க்கை சம்பவங்கள் அவர் பழகிய நபர்கள் பற்றி சில சில இடங்களில் கதைகளினூடு தொட்டு காட்டப்பட்டிருக்கின்றது. இது இவரது படைப்புக்களுக்கு மேலும் வலுவுள்ள தாக அமைகிறது.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி