விழியாக விளங்குகிறாய் பாரதியே!

– பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் –
மகாகவி பாரதியார்
வறுமையிலே  உழன்றாலும்
பெறுமதியாய்   கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !

பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !

பாப்பாக்குப்  பாட்டுரைத்தாய்
படிப்பினைகள் அதில்நுழைத்தாய்
சாப்பாடு தனைறந்தாய்
சந்தமொடு சிந்துதந்தாய்
ஏய்ப்பாரை எண்ணியெண்ணி
எறிகணையாய் கவிசொன்னாய்
ஆர்த்தெழுந்த உன்பாட்டால்
அனைவருமே விழித்தெழுந்தார் !

பாஞ்சாலி சபதத்தால்
பலவற்றை காட்டிநின்றாய்
பதராக  இருப்பாரை
விதையாக்க பலவுரைத்தாய்
அழியாத உணர்வுகளை
அள்ளித்தந்தாய் கவியாக
விழியாக தமிழ்த்தாய்க்கு
விளங்குகிறாய் பாரதியே !

jeyaramiyer@yahoo.com.au