வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

 பிரசுரக்களம்
கலைப்படைப்பை ரசிகனிடம் இட்டுச் செல்வது வெளியீட்டுச்சாதனம். எழுத்தாளனின் கற்பனையில் உருவாகிக் கையெழுத்துப் பிரதியாக மாறும் படைப்பு அச்சுவாகன மேறி நூல்வடிவில் வெளிவரும் பொழுதே எழுத்துலகத்தின் கவனத்தைக் கவருகின்றது. எழுதுவது எழுத்தாளனின் கலை@ பிரசுரிப்பது வெளியீட்டாளரின் தொழில், ஈழத்துத் தமிழ்நாவலின் வரலாற்றிலே கடந்த சுமார் ஐந்தாண்டுகட்கு முன்வரை எழுத்தாளனே பிரசுரிப்பாளனாகவும் தொழிலாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவியது. எழுத்தார்வத்தின் காரணமாக, சீதனப் பணத்தை அல்லது மனைவியின் நகைகளைத் தியாகம் செய்து இலக்கியப் பணிபுரிந்த வரலாறுகள் பல. வசதிபடைத்த ஒரு சிலர் தமிழ் நாட்டில் பிரபல வெளியீட்டாளர்களின் துணையுடன் தமது படைப்புக்களை வெளிக் கொணர்ந்தனர். வசதியெதுவுமற்ற நிலையில் கையெழுத்துப் பிரதிகளாகவே தமது படைப்புக்களை வைத்துக்கொண்டு ‘அஞ்ஞாத வாசம்’ புரிந்த நாவலாசிரியர்கள் பலரையும் நாமறிவோம். சொந்தச்செலவில் நாவல்களை வெளியிட்டவர்கள் அவற்றை வாசகரிடையில் கொண்டுசெல்வதற்கான வியாபார வசதியற்றவர்களாக இருந்தனர். அத்துடன் தமிழ் நாட்டிலிருந்துவரும் மலிவு விலைப் புத்தகங்களுடன் வியாபார ரீதியில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் போட்டியிட்டு வாசகர்களது கவனத்தைக் கவர முடியாதிருந்தது.

எழுபதில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று தனிப்பட்ட எழுத்தாளர்களின் முயற்சியாக ஆண்டு ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நாவல்களே நூல்வடிவில் வெளிவரக் கூடிய நிலை காணப்பட்டது. நாடறிந்த நாவலாசிரியர்கள் பலரும், தொடர்கதைகளின் மூலம் நாவலிலக்கியத் துறையில், அடியெடுத்து வைத்தவர்களும் நூற்பிரசுரத்துறையிற் சிந்தனை செலுத்தமுடியாத அளவுக்கு அச்சுக்கூலியும் தாள் விலையேற்றமும் அச்சுறுத்தின. சிறுகதை எழுதி, அதன்மூலம் பெற்ற அனுபவ ஆர்வத்துடன் நாவல் எழுத முயன்ற இளம் எழுத்தாளர்களின் ஊக்கமும் மேற்படி சூழ்நிலையால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.

ஈழத்து வாசகரிடையில், ஈழத்து எழுத்தாளர்களைப் பிரபல்யம் அடையச் செய்வதும். ஈழத்து எழுத்தாளர்களது படைப்புக்களை விலைக்கு வாங்கி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதும், அஞ்ஞாத வாசம் செய்யும் எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் வெளிக்கொணர்ந்து இயங்க வைப்பதும், ஈழத்தின் பலபாகங்களிலும் பரவியிருக்கும் வாசகர்களுக்குக் கையடக்க விலையில் நூல்களைக் கிடைக்கச் செய்வதும் ஆகிய முக்கிய குறிக்கோள்களை முன்வைத்து, தொடங்கப்பட்ட இம் முயற்சி வர்த்தகரீதியில் ‘திட்டமிடப்பட்ட’தாகவும். காலத்தின் தேவைக்கு கைகொடுப்பதாகவும் அமைந்தது. முதலில் சிறு கதை, நாவல், நாடகம் ஆகிய பல்துறைகளிலும் நூல்களை வெளியிட முயன்றபோதிலும் சில பிரசுரங்களின் பின்னர் நாவல்களை வெளியிடும் நோக்கே முதன்மை பெற்றது. 1972 ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது.

கடந்த சுமார் ஐந்தாண்டுக் காலப்பகுதியிலே இருபத்தொன்பது எழுத்தாளர்களின் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கே.வி.எஸ். வாஸ் (ரஜனி), க.குணராஜா (செங்கை ஆழியன்), கே.டானியல், க. அருள் சுப்பிரமணியம், வ.அ.இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா.பாலேஸ்வரி, கோகிலம் சுப்பையா, கே. எஸ். ஆனந்தன், அருள் செல்வநாயகம் ஆகிய நாடறிந்த நாவலாசிரியர்களின் எழுத்துக்கள் வீரகேசரிமூலம் பிரசுரமாகியுள்ளன. க.சொக்கலிங்கம் (சொக்கன்), பி.கே. இரத்தினசபாபதி (மணிவாணன்), உதயணன், பொ. பத்மநாதன் ஆகியோர் ஒரு சில தொடர் கதைகள் எழுதியதோடு அமைந்து, பின்னர் வீரகேசரி பிரசுரக்களத்தைப் பயன்படுத்தி நாவலாசிரியர்களானவர்கள்.

வீரகேசரி பிரசுரமூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாவலாசிரியர்கள் என்ற வகையில் அ. பாலமனோகரன், தெணியான், இந்துமகேஷ்.

நயிமா ஏ. பஷீர், எஸ். ஸ்ரீ ஜோன்ராஜன், வை. அஹ்மத், தெளிவத்தை ஜோசப், ஞானரதன், இந்திராதேசி சுப்பிரமணியம், கே. ஆர். டேவிட். வி. ஆர். நீதிராஜா, புரட்சிபாலன், கே. விஜயன் ஆகியோர் அமைகின்றனர். இவர்களைத்தவிர. உருதுமொழி நாவலாசிரியர் கிருஷன் சந்தர் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதனின் தமிழாக்கத்தின் மூலமும், சிங்கள நாவலாசிரியர் கருணாசேன ஜயலத் தம்பிஐயா தேவதாஸின் தமிழாக்கத்தின் மூலமும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயினர்.

வீரகேசரி நூற் பிரசுரக்களத்தைப் பயன்படுத்தி நாவல்களைப் படைத்த எழுத்தாளர்களுட் பலர் சமூக, பொருளாதார நிலையில் கீழ் நடுத்தர வர்க்கத்தினர். ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்கள். இவர்களது நாவல்கள் ஒவ்வொன்றும் சுமார் நாலாயிரம் பிரதிகளுக்குமேல் வெளியிடப்பட்டு சுமார் எண்பதாயிரம் வாசகர்கள் வரை செல்கின்றன என அறிய முடிகின்றது. இத்தகைய வாசகர் பெருக்கம் தமிழ்நாட்டு நாவலாசிரியர்கள் பலருக்கு இல்லை என்பது சிந்திக்கற்பாலது. இப்பெருஞ்சாதனையை, திட்டமிட்ட விநியோக முயற்சிகள் ஈட்டித் தந்துள்ளன.

தமிழ் நாட்டில் ‘ராணி முத்து’ பிரசுரங்கள், மலிவுப் பதிப்பு என்றவகையில், நாடறிந்த நாவலாசிரியர்களின் பழைய நாவல்களின் மறுபிரசுரங்களாகவே வெளிவருகின்றன. உயர்ந்த பதிப்பில் தரமான நூல்களை வெளியிடும் ‘வாசகர் வட்டம்’ நாவல்களுடன் பல்துறை வெளியீடுகளிலும் கவனம் செலுத்திவருகின்றது. கலைமகள், ஆனந்த விகடன் ஆகிய சஞ்சிகை நிறுவனங்களும், வேறு பல பிரசுராலயங்களும் ‘தத்தமக்கு அமைந்த’ குறிப்பிட்ட சில ‘பிரபல்யம்’ பெற்ற நாவலாசிரியர்களது படைப்புக்களையே சுமார் இரண்டாயிரம் பிரதிகள் வரையில் வெளியிடுகின்றன. இத்தகையதொரு சூழ்நிலையிலே தமிழ் நாவல்களை வெளியிடுவதையே முக்கிய குறிக்கேளாகக் கொண்டு, ஈழத்தில் பல்வேறு பிரதேசங்களையும் சார்ந்த படைப்பாளிகளுக்கும் பிரசுரக் களமமைத்துக்கொடுத்து, பரந்ததொரு வாசகர் வட்டத்தை உருவாக்கிவரும் ‘வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை’யின் பணி குறைத்து மதிப்பிடுவதற்குரியதொன்றல்ல. வெளியீட்டுக்காக நாவல்களைத் தேர்ந்தெடுக்கும்போது எழுத்தாளனின் ‘பிரபல்ய’த்திற்குப் புறம்பாக எழுத்தின் தரமும் வாசகர் மத்தியில் கிடைக்கக்கூடிய வரவேற்புமே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் ‘புதிய முகங்கள்’ அறிமுகமாவதற்குரிய வாய்ப்பையும் விநியோகரீதியிலான வெற்றிவாய்ப்பையும் அதிகரிக்க முடிகிறது.

நாவல் வகைகள்
இப்பிரசுரங்களின் இலக்கியத்தரத்தை மதிப்பீட செய்வதற்கு. இவற்றைப் பண்படிப்படையில் வகைப்படுத்தி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆராண்வது அவசியம். வரலாற்றுக் கற்பனை, மொழிபெயர்ப்பு ஆகியவகைகளில் அமையும் சில நாவல்களைத்தவிரப் பெரும்பாலானவற்றை இரு முக்கிய வகைகளில் அடக்கலாம். சமூகத்தை அதன் இயல்பான சூழலும், பிரச்சினைகளும் புலப்படும் வண்ணம் சித்திரிக்கும் கதைப்பண்பு கொண்டனவும், சமூக இயக்கப் போக்கை உணர்த்தும் வகையில் சமூகவர்க்கங்ளின் பிரதிநிதிகளான கதைமாந்தரைப் படைத்து இயக்கிச் செல்லும் பண்பினவுமான நாவல்கள் முதல்வகையின. தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து அமையும் கதைப் பண்புடைய ‘குடும்ப நாவல்’களும், சம்பவச் சுகை உடைய மர்ம நாவல்களும் இரண்டாவது வகையின. முதல்வகை நாவல்கள் ‘யதார்த்த’ அம்சமும் சமூக விமர்சன நோக்கும் கொண்டமைவன. இரண்டாவது வகை நாவல்கள் பொழுது போக்கு நோக்கத்தை முதன்மைப்படுத்தி உணர்ச்சி அம்சத்திற்கு உருவம் தருவன.

முதலாவது வகை நாவல்களை, அவற்றி;ன் கதையம்சத்திற்குக் களமாக அமையும் சமூகச் சூழலுக்கு ஏற்ப பிரதேச அடிப்படையில் வேறுபடுத்திநோக்குவது ஆய்வுக்குத் துணைபுரியும். இன்றைய தமிழ் நாவலின் புவியியற் பரிணாமத்தைக் கோடிட்டுக் காட்டுவதற்கும் இவ்வகை ஆய்வு அவசியம்.

ஈழத்தில் தமிழ்மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு. கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் அவ்வப்பிரதேசச் சூழல் சார்ந்த காரணிகளுக்கிடையே வாழ்க்கை முறைகளிலும் பிரச்சினைகளிலும் குறிப்பிடத்தக வேறுபாடுகள் உள. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளன் அல்லது புதிய பிரதேசத்தில் தொழில் புரியும் வாய்ப்பைப் பெற்ற எழுத்தாளன் தன்னைச் சூழவுள்ள சமூகத்தைப் புரிந்து கொண்டு எழுத்தில் வடிக்க முயலும் போக்கு இன்று பெருமளவு காணப்படுகின்றது. சமூகப் பிரச்சினைகள் பற்றிய தேசியரீதியான கணிப்புக்கு பிரதேசரீதியான அவதானிப்புக்கள் அவசியம். இவ்வகையில் தேசிய உணர்ச்சி வலுவடைந்த, 1970 ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதியில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பிரதேசங்கள் பற்றிய கண்ணோட்டத்தை வளர்த்து வந்துள்ளனர்.

இவ்வகையில் வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்த மேற்படி நாவல்களை யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கிலங்கை. மலையகம் ஆகிய நான்கு பிரதேசப் பிரிவுகளில் பொருத்தி நோக்கலாம்.

யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்:
யாழ்ப்பாணப் பிரதேசப் பகைப்புலத்தில் எழுதப்பட்ட நாவல்களாக ‘சொக்க’னின் செல்லம் வழி இருட்டு, சீதா, ‘செங்கை ஆழியா’னின் வாடைக்காற்று, பிரளயம், இரவின் முடிவி ‘தொணியா’னின் விடிவை நோக்கி…. கே. டானியலின் போராளிகள் காத்திருகின்றனர், ஞானரதனின் ஊடை உள்ளங்கள் ஆகியன அமைகின்றன. இவற்றுள் சீதா, பிரளயம், விடிவை நோக்கி மூன்று சமூகக் குறைபாடான சாதிப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டவை. செல்லும் வழி இருட்டு, இரவின் முடிவு, ஊமை உள்ளங்கள் ஆகிய மூன்றும் பொருளாதாரப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டவை. வாடைக்காற்று போராளிகள் காத்திருக்கின்றனர் ஆகியன முறையே நெடுந்தீவு, பாஷையூர் ஆகிய பிரதேசங்களின் மீனவர் சமூகத்தின் கதைகள்.

சாதிப் பிரச்சினையை மேலெழுந்தவாரியான சமரச உணர்வினாலோ அல்லது உணர்ச்சி வசப்பட்ட எழுத்தினாலோ தீர்க்கமுடியாது என்றும், அது உண்மையான, பகிரங்கமான, சுயநலமற்ற தியாகத்தின் மூலமே தீர்க்கப்படவேண்டும் என்றும் சீதா நாவலின் மூலம் வற்புறுத்தப்படுகின்றது. சாதி ஏற்றத்தாழ்வை உயர் சாதியினரின் கண்ணோட்டத்தில் நோக்கும் இந்த நாவலிலே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படவில்லை. உயர் சாதியினரிடத்தில் அப்பிரச்சினை எழுப்பும் அலைகளையே சொக்கன் காட்டுகிறார்.

பகிரங்கமான, சுயநலமற்ற தியாகமெதுவும் நாவலிலே எவராலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதன்காரணமாக, சாதிப்பிரச்சினை பற்றிய கருத்துக்களைக் கூறும் இந்நாவல், கோழையான எழுத்தாளனொருவரின் ‘தோல்வியுற்றதாக’லின் கதையாகவும். சக்களத்தி பெற்ற பிள்ளைக்குத் தனது பாலையூட்டி வளர்த்த தாய்மையின் கதையாகவும் அமைந்துவிடுகின்றது.

யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமப்புறமொன்றில் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு சமூகரீதியாக ஏற்படும் தடைகளையும், அவற்றிற்கெதிராக அவர்களது சமூகத்தவனான ஆசிரியனொருவன் போராட முயல்வதையும், அடையும் முன்னேற்றங்களையும் கூறுவதாக தெணியானின் விடிவை நோக்கி…. நாவல் அமைகின்றது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை ஆழமாக ஆராய்ந்து சித்திரிக்கப்படவில்லை. “உரிமைகளைப் பெறும் போராட்டங்களில் இரு தரப்பினரிடத்தும் மனிதாபிமானமும், நிதானமும் வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்” இந் நாவலை எழுதியதாகக் கூறும் ஆசிரியர் அந்த மனிதாபிமான, நிதான அம்சங்களை நாவலில் தெளிவாக்கத் தவறிவிட்டார். உயர் சாதியினரான தலைமையாசிரியரின் வியத்தகு மனமாற்றமும், கதையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமையும் காதல் அம்சமும் நாவலைப் பாதித்துள்ளன. கதைப் பண்பு நிறைவு பெறவில்லை.

“ஒரு சமூகத்தின் விழிப்பையும் மாற்றத்தையும் பேசுகின்றது” என்ற குறிப்புடன் வெளிவந்த செங்கை ஆழியானின் பிரளயம் நாவல் முன்னர் ‘சிரித்திரன்’ இதழில் மயானபூமி என்ற தலைப்புடன் தொடர் கதையாக வெளிவந்தது. இந் நாவலின் களம் வண்ணார்பண்ணை.

அங்கு சலவைத் தொழிலாளியாகவுள்ள ஒருவரின் குடும்பத்தில் நிகழும் மாற்றங்களை இந் நாவல் பேசுகின்றது. தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய சமூகக் கட்டுப்பாடுகளின் பிடியிலிருந்து விடுபட்டு முன்னேறத் துடிக்கும் ஒரு இளைய பரம்பரையின் கதை இது. கல்வியும் பிறதொழில் முயற்சிகளும் இதற்குப் பயன்படுகின்றன. உயர் சாதியினரால் இம் முயற்சிகட்கு எதிராக அடிக்கடி இன்னல்கள் இழைக்கின்றனர். அவற்றை நீக்கி அக்குடும்பம் முன்னேறுவதற்கு உயர் சாதியைச் சார்ந்த ஒருவனே கைகொடுக்கிறான்.

தமையன் செய்த துரோகத்திற்குப் பிராயச் சித்தமாகத் தன்னையே கொடுக்க முன் வரும் தம்பி மகாலிங்கம் வாசகர் நெஞ்சை விட்டகலாத பாத்திரமாகிறான். தனிமனித தியாகங்கள் சமூகமாற்றத்தை – பிரளயத்தை – ஏற்படுத்தவல்லனவல்ல வெனினும் சமூகமாற்ற உணர்வின் ஒரு பொறியாக மின்னும் இப்பண்புகள் அலட்சியப் படுத்தப்படக்கூடியனவல்ல. இந்நாவலில் ‘பிரதேச’ மண் வாசனையும் ஓரளவு காணப்படுகின்றதெனினும் சலவைத் தொழிலாளியின் குடும்பம், இயல்பான தன்மைகளுடன் சித்திரிக்கப்படாமல் ஒரு ‘தூரப்பார்வை’யாகவே காட்டப்படுகின்றதெனலாம். இந்த நாவலுக்கு 1975ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாதிப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டெழுந்த ஈழத்துத் தமிழ் நாவல்களில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965) போர்க் கோலம் (1970) கே. டானியலின் பஞ்சமர் (1972) ஆகியன முக்கியமானவை. இவை இப்பிரச்சினையை அணுகிய முறைக்கும் சீதா, விடிவை நோக்கி…, பிரளயம் ஆகியன அணுகிய முறைக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுண்டு, சமூக வர்க்கங்களோடு சாதி ஏற்றத் தாழ்வை இனங்கண்டு அதன் ‘புரையோடிய’ புன்மைகளை எதிர்த்த இயக்கரீதியாகத் திரண்டெழும் போராட்ட உணர்வை நீண்ட பயணம் சித்திரித்தது. போர்க்கோலம் அதன் தொடர்ச்சியாக அமைந்தது. பஞ்சமர் சிற்சில வேறுபாடுகளுடன் அப்பணியையே செய்தது. சீதா நாவல் பிரச்சினையை ஆழமாக அணுகவில்லை. விடிவை நோக்கி… ஒரு கிராமப்புற சம்பவங்களைப் படம்பிடிக்க முயன்றதேயொழிய இயக்க ரீதியாக அணுகவில்லை. பிரளயம் இயல்பாக நிகழும் சமூக மாற்றத்தை ஒரு குடும்பத்தை உதாரணமாக வைத்துச் சித்தரிக்கின்றது. நீண்ட பயணம், போர்க் கோலம் ஆகியன எழுதப்பட்ட காலத்தில் சாதிப்பிரச்சினை கொழுந்துவிட்டெரிந்தது. பஞ்சமார் நாவலின் கதை நிகழ்ச்சிகளும் அக்காலத்தனவே. எழுபதுக்குப் பின் அப்பிரச்சினை சமூகரீதியில் போராட்ட உணர்வை வலுப்படுத்தாமை காரணமாக சீதா முதலியவற்றிலே அணுகல் முறை வேறுபடுகின்றதெனலாம். இம் மூன்று நாவல்களிலும் பிரளயம் ஓரளவு தரமானது. பொருளாதாரப் பிரச்சினைகள் என்ற வகையிலே கீழ் நடுத்தர வர்க்கம், தொழிலாள வர்க்கம் ஆகியவற்றைச்சார்ந்த குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளையும், குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் என்பவற்றில் அப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சித்திரிப்பனவாக செல்லும்வழி இருட்டு, ஊமை உள்ளங்கள், இரவின்முடிவு ஆகிய நாவல்கள் அமைகின்றன.

ஈழத்தில் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்குமுன் (1961 க்கு முன்) சமயநிறுவனங்களாலும் தனியாராலும் அவை நடத்தப்பட்ட சூழ்நிலையில் எழுதப்பட்ட கதை செல்லும் வழி இருட்டு. அக்காலப் பகுதியில் பாடசாலை முகாமையாளர்களின் அடக்குமுறை ஆசிரியர்களை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதை இந்நாவலின் மூலம் சொக்கன் விபரிக்கிறார். ஏழை ஆசிரியனொருவன்இப்பாதிப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுத்தாளனாக வாழ முன்வருகிறான். கற்பனாவாத முடிவுடன் அமைந்ததும் உளப்போராட்டங்களுடன் கதைவளர்த்துச் செல்லப்பட்டதுமான இந்த நாவல் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குரிய சமூகப் பிரச்சினைகளைக்காட்டுகின்றதென்ற அளவிலே குறிப்பிடத்தக்கது. தினகரன் இதழில் தொடராக வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின் நூலுருப் பெற்ற நாவல் இது.

ஞானரதனின் ஊமை உள்ளங்கள் நாவல் வர்க்க முரண்பாடும் பொருளாசையும் உறவுணர்ச்சிகளை எங்ஙனம்பாதிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது. கிராமப்புறமொன்றில் இன்றும் நிகழ்ந்துவரும் கதையாக இதைக்கொள்ளலாம். சந்திரசேகரனும் அகிலாவும் காதலர்கள். குடும்பத் தேவைகள் காரணமாக அந்தஸ்தை மீறி ஜெயராணியை மணம் முடித்த சந்திரசேகரன் அவளின் அந்தஸ்து உணர்வினால் பாதிப்புக்குள்ளாகிறான். பல இன்னல்களுக்கு மத்தியில் அகிலா உழைத்து வாழ நேர்கிறது. கணவனை மதிக்காத ஜெயராணி இறுதியில் கீழிறங்கி வந்து இணைகிறாள். இந்நாவலில் கதைப் பண்பைவிட அதற்குக் களமாக அமைந்துள்ள சமூகத்தினதும் அதன் உறுப்பினர்களதும் இயல்பைச் சித்திரிக்கும் பண்பு குறிப்பிடத்தக்கது.

செங்கை ஆழியானின் இரவின் முடிவு என்ற நாவல் ‘ஈழ நாடு’ நாவல் போட்டியில் ‘போராடப் பிறந்தவர்கள்’ என்ற தலைப்புடன் பரிசு பெற்றுத் தொடராக வெளிவந்தது. சிற்சில மாற்றங்களுடன் நூலுருப் பெற்றது. இந்நாவலின் கதை யாழ்ப்பாணக் கிராமப்புற மொன்றின் சுருட்டுத் தொழிலாளர் சமூகத்தைச் சித்திரிப்பது. வறுமையிலும் செம்மையாக வாழ முயகிறார் சுருட்டுத் தொழிலாளியான ஐயாத்துரை. கிடைக்காத ஆடம்பர வாழ்க்கைக்காக ஏங்கும் மனiவி பாக்கியலெட்சுமி குடும்பப் பொறுப்பை அலட்சியம் செய்கிறாள். மூத்த மகன் பொறுப்புக்களிலிருந்து விலகிச் சீரழிகிறான். தொடரான துன்பங்களின் முடிவில் மகள் மகேஸ்வரியும் இளைய மகன் சண்முகநாதனும் குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர். தொழிலாளர் குடும்ப அவல வாழ்க்கையைக் காட்டும் இந் நாவலில் கதையம்சம் நிறைவு பெறவில்லை.

மேற்படி மூன்று நாவல்களும் கதையம்சத்தை விட சமூகத்தை அவற்றின் ஆசிரியர்கள் கண்ட வகையிலே காட்டிய அளவிலேயே குறிப்பிடத்தக்கன. சமூகப் பிரச்சினைகளின் பொருளாதார அம்சங்களையும், சமூக இயக்கப் போக்கையும் ஆழமாக நோக்கவில்லை. ஒரு வகையில் இம் மூன்று படைப்புக்களிலும் ஆசிரியர்களது ‘முதிரா இளமை’ புலப்படுகின்றதெனலாம்.

நெடுந்தீவுக் கடற்கரையின் மீனவ சமூகத்தினரையும் அங்கு மீன்பிடிக்க வரும் மீனவ சமூகத்தினரையும் கதை மாந்தர்களாகக் கொண்டு, அப்பிரதேசத்தின் இயற்கைச் சூழலின் பின்னணியில் புனையப்பட்ட காதல் கதையாக வாடைக் காற்று ஆசிரியரது எழுத்தாற்றலாற் சுவை பெறுகின்றது. மீன் பிடிப்பதில் சம்மாட்டிமாரிடையில் நிலவும் போட்டியும், உள்@ர்ப் பெண்கள் மீது அவர்கள் கொள்ளும் காதலுமே கதையை வளர்த்துச்சொல்கின்றன. இந்நாவலின் சம்வங்கள் இயற்கையுடன் பொருந்தவில்லை என்று பிரதேச மாந்தரது வாழ்க்கையுடன் இணையாமல் ஒரு வெளிப்புறக்காட்சிப் படப்பிடிப்பாகவே காணப்படுகின்றன என்றும் திறனாய்வாளர் கருதுவர். வாசகர் மத்தியில் பெரும் பரபரப்பையும் இந்நாவல் ஏற்படுத்தியது.

பாஷையூர்க் கடற்கரையின் மண் வாசனையும், கடல் வாசனையும் புலப்படும் வண்ணம் எழுதப்பட்ட, கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் நாவல் 1958ம் ஆண்டைப் பின்னெல்லையாகக் கொண்ட சுமார் இருபதாண்டுக்கால சம்பவங்களைக் கொண்ட கதை. தொழில் திறன், குடும்ப உறவு, காதல், வர்க்க உணர்வு என்ற பல்வேறு அம்சங்களையும் கொண்ட பல கதைகளின் இணைப்புருவமான இந் நாவலின் கதைப் பண்பில் ஒருமைப்பாடில்லை. ஆசிரியர் சார்ந்துள்ள வர்க்க உணர்வு நாவலில் சிறப்புறச் சித்திரிக்கப்படவில்லை என்ற குறை கூறப்படுகின்றது. பேச்சுவழக்குமொழி, தொழில் நுணுக்க விவரணம், பிரதேச மணம் என்பன இந்நாவலின் சிறப்பம்சங்கள்.

ஈழத்துத் தமிழ் நாவல் முயற்சிகளில் மீனவக் களம் இதுவரை காலம் தீண்டப்படாத ஒரு துறையாகவே விளங்கி வந்துள்ளது. காலஞ்சென்ற வை.அ.கைலாசநாதன் மண்டைதீவுப் பிரதேச மீனவர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் எழுதிய கடற்காற்று இவ்வகையில் முதல் முயற்சியெனக்கருதலாம். கதைப் பண்புகளில் நிறைவில்லாதிருந்தாலும் வாடைக்காற்று, போராளிகள் காத்திருக்கின்றனர் ஆகிய நாவல்கள் ஈழத்துத் தமிழ் நாவலுலகிற்கு புதிய பிரதேசங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வன்னிப்பிரதேச நாவல்கள்:
யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குத் தெற்கிலும் அநுராதபுர பிரதேசத்திற்கு வடக்கிலும் அமைந்துள்ளதும் பொதுவாக வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான நிலப்பரப்பு வன்னிப்பிரதேசம் என்று வழங்கப்படுகிறது. இப்பிரதேசத்தின் பரப்பும் மக்கள் குடியேற்றம் பற்றிய வரலாறும் இன்னமும் விரிவான ஆய்வுக்குட்படவில்லை. இலக்கியத் துறையிலே நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள், நாடகங்கள் என்பனவற்றைத் தவிர, நவீன இலக்கிய மணம் வீசாத ரதேசமாகவே அண்மைக்காலம் வரை இப்பகுதி விளங்கியது.

வீரகேசரி பிரசுரங்களான ‘மணிவாண’னின் யுகசந்தி, ‘அ.பாலமனோகர’னின் நிலக்கிளி, குமாரபுரம் ஆகியன இந்நிலையை மாற்றியமைத்தன. நாவல் போட்டியில், பரிசுபெற்றுப் பிரசுரமாகும் ‘செங்கை ஆழியா’னின் காட்டாறு நாவலும் வன்னிப்பிரதேச மண்ணின் கதையே என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரப் பிரதேசச் சூழலக் களமாகக் கொண்டெழுதப்பட்ட யுகசந்தி பிரதேசத்துடன் ஒட்டாத ஒரு குடும்பக் கதையாகவே அமைந்துவிடுகின்றது. தண்ணீர் முறிப்புக் கிராம விவசாயிகளது வாழ்க்கை முறையைச் சித்திரிக்கும் நாவலான நிலக்கிளி. பிரதேச நாவல் வரிசையில் குறிப்பிடத்தக்க றிப்புடையது. நாகரிகத்தின் சாயலோ அன்றேல் புறவுலகின் கள்ளங்கபடங்களின் நிழலோ படியாத கிராமியச் சூழலும், அச் சூழலுடன் அமைந்த மாந்தரின் மனப் பண்புகளுமே நிலக்கிளி யின் அடித்தளம். தான் வாழும் பொந்தும் அதைச் சுற்றியுள்ள சிறுபிரதேசமுமே பிரபஞ்சம் என வாழ்வதும், உயரத்தில் எழுந்து பறக்கமுடியாத இயல்பால் எளிதில் பிறரால் அகப்படுத்திக்கொள்ளக் கூடியதுமான “நிலக்கிளி” என்ற பறவைபோல ஒரு பெண் பதஞ்சலி. தனது கணவனைத் தவிரப் பிற ஆடவரைத் தொட்டுப்பழகுவது தவறு என்று கூடத் தெரியாத அவள் தவறு நேர்ந்தபின் பல விடயங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள். இந்த நாவலில் கதையம்சத்தைவிட அதன் சூழல் பற்றிய சித்தரிப்புத் திறனே முதன்மை பெற்றுள்ளது. ஒரு விவசாயக் கிராம வாழ்க்கை முறையை ஒரு சில குடும்பப் பாத்திரங்களையும், சமூக மாந்தரையும் கொண்டு புனைந்து காட்டும் இந்நாவல் இயற்பண்பு பொருந்தியது,

வன்னிப் பிரதேச விவசாயிகளது அடிப்படைப் பிரச்சினைகளையோ, சமூக இயக்கப் போக்கையோ இந்நாவலில் காண்பதற்கில்லை. நிலக்கிளி யாசிரியரின் மற்றொரு படைப்பான குமாரபுரம் பிரதேசப் பகைப்புல வருணனைகளுடன் கூடிய ஒரு ‘குடும்பக் கதை’ குலப்பெருமையைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு பெண் வகிக்கும் முக்கிய பாத்திரத்தையும், அவளது மனப்போராட்டங்களையும் இந் நாவலிற் காணலாம். பிரதேச மரபுக் கதையொன்று நாவலின் கதையம்சத்திற்குதவியாகக் கையாளப்பட்டுள்ளது. இந்நாவலிலும் சமூக இயக்கப் போக்கைக் காண்பதற்கில்லை.

இவ்வகையில் ‘செங்கை ஆழியா’னின் காட்டாறு விதந்துரைக்கத்தக்கது. வன்னிப் பிரதேச விவசாயிகளது அடிப்படைப் பிரச்சினைகளைச் சற்று ஆழமாக அலசும் இந்நாவலில் அதற் கேற்ப சமூகவர்க்கங்களை இனங்கண்டகாட்டும் பண்பு அமைந்துள்ளது. வன்னிப்பிரதேச நாவல் வரலாற்றிலும் செங்கை ஆழியானின் நாவல் வரலாற்றிலும் ஒருதிருப்புமுனை எனலாம்.

விளைந்து வரும் பயிருக்குத் தண்ணீர் பெறமுடியாமல் ஏழை விவசாயிகள் வாடி வருந்தும் பொழுது, பணம்படைத்தவர்களும் கிராமத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும், மக்கள் நலன் கருதிப் பணியாற்ற வேண்டிய அரசாங்க அலுவலர்களும் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் தமக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்@ ஏழைகளைப் பல வகையிலும் சுரண்டுகிறார்கள். இச் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகளின் இளைய தலைமுறை வர்க்க உணர்வுபெறத் தொடங்குகின்றது. சுரண்டுவோருக்கு எதிராக வன்முறை தலை தூக்குகிறது.

‘கடலாஞ்சி’ என்ற கற்பனைக்கிராமமே கதை நிகழிடம். இக் கிராமம் வவுனியா, மன்னார், செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களுக்கு புவியியற் சூழலைப் புலப்படுத்துவதாகக் கொள்ள முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாடு, தீவுப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்து ‘நிலமகளைக் தேடி’ வந்து குடியேறியவர்களும், தொழில் நாடி வந்த இந்திய வம்சாவழியினரும் விவசாயம் செய்து வாழ்கின்றனர். சந்தனம், கணபதி, தாமரைக்கண்டு ஆகிய பாத்திரங்கள் இச் சமூகப் பிரதிநிதிகள். புதுப் பணம் படைத்தவர்களும் கிராமத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள ‘சியாமன்’, விதானை போன்றோரும், பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், நீர்ப்பாசன காணி அலுவலர்கள் முதலிய அரச பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினரும் சுரண்டும் சமூக விரோதப்போக்குடையோராகக் காட்டப்படுகின்றனர். மக்களையும் அரசையும் ஏமாற்றி இவர்கள் புரியும் சமூகவிரோதச் செயல்கள் நாவலின் கதையம்சமாக அமைகின்றன. இவற்றை எதிர்த்து கிராம இளைஞரிடையே வன்முறை தலைதூக்குகின்றது. சந்தனம் இளைஞரியக்கத்தைத் தூண்டும் பாத்திரமாக அமைந்துள்ளான்.

விவசாயிகளது அன்றாட வாழ்க்கை முறை, வேட்டையாடுதல், புதுக்காடு வெட்டிப் பயிர் செய்தல் முதலிய தொழில்முறை விவரணங்கள் நாவலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. காதல், நட்பு முதலிய உணர்ச்சிகளும் கதை வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன.

நிலக்கிளி ஈழத்து நாவல் வாசகர்களுக்கு ஒரு புதிய பிரதேசத்தைக் காட்டிய அளவில் வரவேற்புப் பெற்றது. காட்டாறு புதிய பிரதேசத்தைப் புதிய பார்வையில் புலப்படுத்தியுள்ளது. இவற்றுடன் விவசாயிகளது சமூகநாவல் என்ற வகையில் செ.கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் (1970) நாவலை ஒப்புநோக்குவது பொருந்தும். நிலமற்ற விவசாயிகள் நிலவுடைமையாளருக்கெதிராகப்போராட்ட உணர்வுடன் எழுச்சிபெறுவதைச் சித்தரிப்பது மண்ணும் மக்களும், கோட்பாட்டை முன்வைத்து எழுதப்பட்ட இந்நாவல் அனுபவபூர்வமற்ற அணுகல்முறையினாலே இயற்பண்பைப் பெறத் தவறியது. கணேசலிங்கன் கற்பனையினால் படைத்த அரசங்குடி, பழங்குடியிருப்பு ஆகிய கிராமங்களின் விவசாயிகளது வாழ்க்கைமுறை மண்ணோடு இணையவில்லை. நிலக்கிளி மண்ணோடியைந்த வாழ்க்கையின் வெளித் தோற்றத்தை மட்டுமே காட்டியது. காட்டாறு மண்ணையும் மக்களையும் உள்ளும் புறமுமாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டது. ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதெனலாம். அனுபவபூர்வமான அணுகல் முறையும், சமுதாயத்தின் இயக்கத்தை அவதானிக்கும் மனிதாபிமானக் கண்ணோட்டமும் இதற்குத் துணை புரிந்துள்ளன. நாவலின் முடிவு, முடிவாக அமையாமல் இடையில் நிற்பதுபோல உணர வைக்கின்றது. இயக்கபூர்வமான எழுச்சி தெளிவாகக் காட்டப்படாத பொழுதும் அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது போலத் தெரிகின்றது.

கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள்:
அருள் சுப்பிரமணியத்தின் நான் கெடமாட்டேன், எஸ். ஸ்ரீ ஜோன்ராஜனின் போடியார் மாப்பிள்ளை, வை. அஹ்மத்தின் புதிய தலைமுறைகள் என்பன முறையே திருக்கோணமலைப் பிரதேசக் கீழ் நடுத்தர வர்க்கம், கன்னன்குடாக் கிராம போடியார்சமூகம் வாழைச்சேனைக்கிராம மீனவக்களம் ஆகியவற்றைச் சித்திரிப்பன. இவர்கள் பிரதேசச் சூழலையும், வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட நுணுக்க விபரங்களையும், சமூகமாந்தரின் மனப்பண்புகளையும் சித்திரிப்பதில் காட்டிய அளவு ஊக்கத்தைக் கதையம்சத்திலே காட்டவில்லையென்றே தெரிகிறது. பருவத் தவறினால் அந்தஸ்துக் குறைவான கணவனை அடைய நேர்ந்த ஒரு பெண்ணின் குடும்ப உறவுச் சிக்கலே நான் கெடமாட்டேன் நாவலின் கதையம்சம். இதனால், சமூகப் பகைப்புலத்தில் சித்திரிக்கப்பட்ட ஒரு குடும்பக் கதையாகவே இது அமைந்து விடுகிறதெனலாம். போடியார் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியின் காதல் கதையாக அமையும் போடியார் மாப்பிள்ளையில் அச்சமூக மாந்தரின் சமூக மதிப்பீகள், வாழ்க்கை முறை என்பவை பற்றி அறிய முடிகின்றது. புதிய தலைமுறைகள் நாவலில் உள்@ர் அரசியல் காரணமாக இரு தலைமுறைகளைச் சார்ந்தோரிடையில் நிலவும் போட்டியும் காதலுமே கதையம்சங்கள். தலைப்பின் பெறுமதிக்கேற்ப தலைமுறை வேறுபாட்டுக்கான சமூக, பொருளாதார காரணிகள் நோக்கப்படவில்லை.

ஈழத்துத் தமிழ் நாவல் பரப்பிலே கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்டவை மிகச் சிலவே காணப்படுகின்றன. வ.அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு (1959), அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973) போன்றன அவற்றிற் குறிப்பிடத்தக்கன. இவை இரண்டும் திருக்கோணமலைப் பிரதேசத்தைச் சித்தரிப்பவை. பதிய தலைமுறைகள். போடியார் மாப்பிள்ளை இரண்டும் புதிய பிரதேசங்களைச் சித்திரிப்பன என்ற வகையிலே குறிப்பிடத்தக்கவை.

மலையக நாவல்கள்
‘கோகிலம் சுப்பையா’வின் தூரத்துப் பச்சை, ‘தெளிவத்தை ஜோசப்’பின் காலங்கள் சாவதில்லை, ‘கே.ஆர். டேவிட்’டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது ஆகிய மூன்றும் மலையகத்தின் தோட்டத்தொழிலாளர்களது அவல வாழ்க்கையின் சித்தரங்கள். இந்தியாவினின்று கடந்த நூற்றாண்டில் ஈழத்தில் வந்து குடியேறிய தோட்டத் தொழிலாளரது பரம்பரை வரலாற்றை அவலச்சுவை ததும்பக் கூறுவது தூரத்துப் பச்சை, தேயிலைத் தோட்டங்களில் ‘கொட்டிக் கிடக்கும் செல்வ’த்தை அள்ளும் ஆவலுடன். பிறந்த மண்ணை விட்டு ஓடி வந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்த துன்பங்களே கதைப்பொருள். நான்கு தலைமுறைகளின் வரலாற்றினைக் கூறும் இந்நாவல் வரலாற்றுப் பண்பும் கொண்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்ட இந்த நாவல் வீரகேசரியால் 1973ல் மறுபிரசுரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையின் இன்னல்களை ஒரு சம்பளப் போராட்டத்தின் அடிப்படையில் சித்திரிக்கும் நாவலான காலங்கள் சாவதில்லையின் முதற்பாதி கதையிலுள்ள சிறப்பு பிற்பாதியில் இல்லை. பிரச்சினையுடன் தொடங்கி, காதல் போராட்ட உணர்வு என்பவற்றில் வளர்ந்து இறுதியில் மர்மப் பண்புக் கதையாக நிறைவு பெறுகின்றது. இதில் எடுத்தாளப்பட்ட சம்பளப் பிரச்சினை காலாவதியானறென்றும், சமகாலப் பிரச்சினைபோல அது கையாளப்பட்டது தவறு என்றும் கதையம்சத்தில் விமர்ச்சிக்கப்படுகின்றது. ஆசிரியர் பிரச்சினைகளைக் காட்டும் முறையில் இன உணர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் குறை கூறப்படுகின்றது. வரலாறு அவளைத் தோற்றுவிட்டது நாவலின் கதை தோட்டத்துரையின் கொடுமைகளை எதிர்த்துப் பழிவாங்கும் ஒரு பெண்ணின் மனவுறுதியைக் காட்டுவது. இந்நாவலில் கதையம்சமும் களமும் நிறைவாக அமையவில்லை.

கே.விஜயனின் விடிவுகால நட்சத்திரம் என்ற நாவல் மலையகம், கொழும்புப் பிரதேசம் ஆகியவற்றினைக் களமாகக் கொண்ட 1971ஆம் ஆண்டு ஏப்ரலில்  நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளின் பின்னணியில் எழுதப்பட்டது. உயர் வர்க்கத்தினரின் அடக்கு முறைக் கொடுமைகளையும் சமூக ஊழல்களையும் சித்திரிக்கும் இந்நாவலின் கதை மண்ணோடு இணையவில்லை@ ஒரு சில தனி மனிதர்களது குண தோஷங்களைச் சித்திரிப்பதுடன் அமைந்து விடுகின்றது. பயங்கரவாத நிகழ்ச்சிப் பின்னணி கதையம்சத்தோடு பொருந்தவில்லை. அதில் ஈடுபட்டோர் தவறான முறையில் வழிநடத்தப்பட்டனர் என்ற கருத்து நாவலில் புலப்படுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்கு வடிவம் தந்தது என்ற வகையில் யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவலுடன் வைத்தெண்ணப்படக் கூடிய சிறப்பு தூரத்துப் பச்சைக்கு மட்டுமே உண்டு.

பிரதேச நாவல்கள் என்ற வகையில் மேலே குறிப்பிட்ட பல்வேறு படைப்புகளையும் தொகுத்து நோக்கும்பொழுது அவற்றிற் பெரும்பாலானவை பிரதேச இலக்கியத்திற்கான பலபண்புகளைப் பெற்றிருக்கவில்லை யென்பது புலனாகின்றது. பல நாவல்களில் கதைப் பண்பு நிறைவு பெறாமற் போனமைக்குக் கருத்துத் தெளிவின்மையே காரணம் எனலாம். பிரதேச இலக்கியத்தின் இன்றியமையாத பண்பு மண்வாசைன. இது வெறுமனே இயற்கை வர்ணனையோ அல்லது பேச்சு வழக்கு ஆட்சியோ அல்ல. குறிப்பிட்ட மண்ணுக்கே சிறப்பாகவுரிய சமூக அமைப்பையும் அதன் பிரச்சினைகளுக்கான சமூகக்காரணிகளையும் அறிவு பூர்வமாக அணுகிப் பெற்ற அனுபவத் தரவுகளின் உணர்வு பூர்வமான கதைப் பொருளைக் கொண்டமைவதே முக்கியம். இவ்வகையில் மேற்படி நாவல்கள் பல, தரத்தை எட்டத் தவறிவிடுகின்றன. தமிழ் நாட்டில் ஆர். சண்முகசுந்தரம், ஹெப்ஸிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன், டி.செல்வராஜ், கு.சின்னப்பபாரதி முதலியோரின் நாவல்களின் தரத்துடன் வீரகேசரி பிரசுரங்களான பிரதேச நாவல்களின் நிலக்கிளி, காட்டாறு, தூரத்துப்பச்சை ஆகியவற்றை ஓப்பிடமுயற்சிப்பது கூட சுயதிருப்தி உணர்வுசார்ந்ததே.

இரண்டாவது வகை நாவல்களைக் குடும்ப நாவல்கள் என்ற தலைப்பிலும் மர்மப் பண்பு நாவல்கள் என்ற தலைப்பிலும் நோக்கலாம்.

குடும்ப நாவல்கள்.
ந.பாலேஸ்வரியின் பூஜைக்கு வந்த மலர், உறவுக்கப்பால், பொ. பத்மநாதனின் புயலுக்குப் பின், யாத்திரை, கே.எஸ். ஆனந்தனின் காகித ஓடம், இந்துமகேஷின் ஒரு விலைமகளைக் காதலித்தேன். நன்றிக்கடன், கே.வி.எஸ்.வாஸ் எழுதிய அஞ்சாதே என் அஞ்சகமே, நயிமா ஏ.பஷீர் எழுதிய வாழ்க்கைப் பயணம் அன்னலட்சுமி இராசதுரையின் உள்ளத்தின் கதவுகள், மொழிவாணன் (வி.ஆர்.நீதிராஜா) எழுதிய யாருக்காக, உதயணனின் பொன்னான மலரல்லவோ, அந்தரங்ககீதம், கவிதா (இந்திரா தேவி பாலசுப்பிரமணியம்) எழுதிய கனவுகள் வாழ்கின்றன, புரட்சிபாலனின் உமையாள்புரத்து உமா ஆகிய நாவல்களில் குடும்பம் என்ற தளத்தில் தனி மனித உணர்வுகள் சித்திரிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை காதல், தியாகம் போன்ற உணர்ச்சிகளைப் பொருளாகக் கொண்டவை. பல கதைகள் பருவகாலத்தில் வழுக்கி விழுந்த பெண்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டவை.

பூஜைக்கு வந்த மலர் நாவலில் பருவத் தவறினால் தாய்மை யெய்திய கோமதி அதைப் பழயென விலகியோடிய வேளையில் அவளது குழந்தையை வளர்க்கத் தானே தாயாக வந்த மாலதி என்ற பெண்ணின் தியாகமே கதையின் அடிப்படை. உறவுக்கப்பால் நாவலிலும் தியாகமே கதைப்பொருளாக அமைகின்றது. புயலுக்குப் பின் கோகிலா என்ற பெண் தனது பருவத்தவறால் பெற்றெடுத்த மகள் பார்வதியிடமிருந்து பிரிந்து வாழ்வதையும், பார்வதியின் மனப்போராட்டாங்களையும் சித்தரிப்பது. தனது குடும்பத்தின் பராமரிப்பில் வாழ்ந்த ஒரு பெண்ணுடன் சந்தர்ப்பவசத்தால் தவறுதலாக நடந்து கொண்டதற்குப் பிரதியுபகாரமாக அவளையே மணம் புரிய முன் வந்த இளைஞனின் கதை யாத்திரை. காதலர்களின் மணவாழ்வின் தொடக்கத்தில் எழும் சந்தேகம் தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிப்பதைக் காட்டுவது காகித ஓடம். விலைமகளொருத்திக்கு வாழ்வளிக்கும் இளைஞனொருவனது உளப்பாங்கைச் சித்திரிப்பது ஒரு விலைமகளைக் காதலித்தேன் நாவல். நன்றிக்கடன் நாவல் சந்தர்ப்பவசத்தால் கற்பிழந்த ஒரு பெண் தனது தங்கையின் நல் வாழ்விற்காகத் தன்னை விபசாரத்தில்ஈடுபடுத்திக்கொள்வதையும், ஈற்றில் தங்கையும் தவறான வழியிற் செல்வதைக் கண்டு அவளையும் தன்னையும் ஒருசேர அழித்துக்கொள்வதையும் காட்டுகின்றது. சாதி வேற்றுமையை மீறி எழும் காதல், பெற்றோரது நல்லாதரவுடன் நிறைவு பெறுவதைக் காட்டுகின்றது அஞ்சாதே என் அஞ்சுகமே நாவல். காதல் நிறைவு பெறுவதற்குச் சமூகம் தடை விதிப்பதையும், அத்தடையை மீறிக் காதல் இணைக்கூடிய வாய்ப்பு ஏற்படும் போது விதி குறுக்கிடுவதையும் வாழ்க்கைப பயணம் நாவலில் காணலாம். காதல் பெற்றோரால் தடைப்பட்டு, பின்னர் அவாகளது மனமாற்றத்தால் நிறைவேறுவதை விவரிக்கிறது உள்ளத்தின் கதவுகள் நாவல். காதல் தோல்வியால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் ஒருவனின் கதை யாருக்காக. சந்தர்ப்பவசத்தால் பிரிந்த காதலர்கள் இணைவதான கதை பொன்னான மலரல்லவோ. பணத்திற்காக காதரைப் பிரிக்கும் சமூகக் கொடுமையை அந்தரங்க கீதத்திற் காணலாம். சந்தர்ப்பவசத்தால் தனது காதலனைப் பிரிந்த ஒரு பெண், அவனது குழந்தைக்குத் தானே தாயாகிக் கனவுகளில் வாழ்வதைச் சித்திரிப்பது கனவுகள் வாழ்கின்றன. பெற்ற அன்னையின் ஆத்மசாந்திக்காக, பிரிந்துபோன இரு குடும்பங்களின் இணைப்புப் பாலமாக விளங்கிய இளம் பெண்ணின் கதை உமையாள்புரத்து உமா. காதல், பாசம், தியாகம் போன்ற உணர்ச்சி மோதுதல்களுக்கும், பருவகாலத்தில் தவறிழைக்கப்படுவதற்கும் ஆன காரணிகளைச் சமூகவியல் ரீதியில் நுணுகி நோக்கினால் அரிய கருத்துக்கள் உருவாக இடமுண்டு. நிகழ்ச்சியொன்றின் வெளிப்பரிமாணத்தை உணர்ச்சி முனைப்புடன் மட்டும் அணுகும் போது மேற்கூறிய வகைப் படைப்புக்கள் வெளிவருகின்றன. சமூகப் பிரச்சினைகளை அவ்வப்போதையஉணர்ச்சிகளைச் சார்ந்த பொது நோக்கில் கண்டு, கற்பனையில் உருக்கொடுக்கும் மேற்படி நாவலாசிரியர்கள் தமது எழுத்தாற்றலைச் சமூகப் பார்வையுடன் விரிவுபடுத்த முயற்சிப்பார்களானால் ஈழத்து தமிழ் நாவலுலகம் பயன் பெறும்.

மர்ம நாவல்
பழம்பெரும் எழுத்தாளரான கே.வி.எஸ்.வாஸ் (ரஜனி) இழத்து மர்மநாவல் துறையில் தனியிடம் வகிப்பவர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதிய இவரின் நான்கு மர்ம நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. கணையாழி, மைதிலி, நெஞ்சக்கனல், தாரிணி ஆகிய நாவல்கள் இவரது வழக்கமான பாணியில் தமிழ் நாட்டின் சிரஞ்சீவி, மேதாவி போன்றோரின் மர்மநாவல்களுக்கு நிகராக வாசகர் மத்தியில் வரவேற்புப் பெற்றுள்ளன. வரலாற்றுச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி எழுத்துலகில் இடம்பிடித்த அருள் செல்வநாயகம் மர்மமாளிகை நாவல் மூலம் மர்மநாவல் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். மேற்கூறிய குடும்ப நாவல்களுக்கும் மர்மநாவல்களுக்கும் இலக்கியத் தரத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பில்லையெனினும் வாசகரது ரசனையைப் பொறுத்தமட்டில், தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் இவ்வகைப் படைப்புகளுடன் போட்டியிட்டு சுயதேவைப் பூர்த்திக்கு உதவுகின்றன என்பதை மறுப்பதற்;கில்லை.

வரலாற்று நாவல்கள்
ஈழத்துத் தமிழ்நாவல் துறையில் வரலாற்று நாவல் என்ற பிரிவு தனிப்பண்புடன் வளர்ச்சி பெறவில்லை. ஈழத்துத் தமிழரின் வரலாற்றுப் பாரம்பரியம் தக்க முறையில் வெளிக்கொணரப்படாமை இதற்கு ஒரு காரணமாகலாம். கே.வி.எஸ். வாஸ் எழுதிய ஆஷா என்ற வரலாற்று நாவல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்குரிய வட இந்திய அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சம்பவச் சுவைக் கதை. வ.அ. இராசரத்தினம் எழுதிய கிரௌஞ்சப் பறவைகள் ஈழத்துப் பின்னணியில் எழுதப்பட்ட தரமான வரலாற்று நாவலாக அமைகின்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் ‘ராஜரட்டை’ அரசியற் சூழலில் எழுதப்பட்ட இக்கதையில் – அரசுரிமைப் போட்டி, ராஜதந்திர முயற்சிகள். கிராம ஜனநாயக இலட்சியப் போராட்டம், காதல் ஆகியவற்றின் இணைப்பாக அமையும் இந்த நாவலில் – வரலாற்றுச் சான்றுகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவினின்று வந்த இரு குதிரைப் படை வீரர்களான சேனன், குட்டகன் என்போர் ஈழத்தின் அரியணையைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலையை இந்த நாவல் புலப்படுத்துகின்றது.

தமிழாக்கங்கள்
காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் மொழி பெயர்த்த கிருஷ்ணசந்தரின் நான் சாகமாட்டேன் பாராட்டத்தக்க முயற்சி. 1942 ம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணில் எழுதப்பட்ட உருதுமொழி நாவலான இதன் ஆங்கில ஆக்கத்திலிருந்து தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இத்தகைய நாவல்கள் மொழிபெயர்க்கப்படுவது ஈழத்து இலக்கியத் தரத்தை வளர்க்கப் பயன்படும்.

‘கருணாசேன ஜயலத்’தின் சிங்கள நாவலின் தமிழ் வடிவமான நெஞ்சில் ஓர் இரகசியம் ஒரு காதல் கதை. மூல மொழியில் பல பரிசுகள் பெற்ற படைப்பு என அறிகிறோம் கல்லூhயில் அரும்பி மலரும் காதலை இயற்பண்புடன் சித்திரிக்கும் இந் நாவல் சிங்க சமூக வாழ்க்கை முறைகளைத் தமிழ் வாசககள் அறிந்துகொள்ளப் பயன்படுகின்றது என்ற வகையில் பாராட்டத்தக்கது. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பாற்றல் மேலும் செழுமையடைய இடமுண்டு. தொடர்ந்து மொழி பெயர்ப்பு நோக்கில் சிங்கள நாவல்களை அணுகும்போது, அச்சமூகத்தின் இயக்கப் போக்கையும் வர்க்க முரண்பாடுகளையும் இனங்காட்டவல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுக்க முயன்றால் தமிழ் பயன் கிடைக்கும்.

மதிப்பீட …
இலக்கிய வரலாற்றிலே ஐந்து ஆண்டு காலம் என்பது மிக மிகக் குறுகிய காலப்பகுதியாகும். வரலாற்றுப் போக்கையோ, தர மதிப்பீட்டையோ அறுதியிட்டுக் கூறுவதற்கு மேலும் கால அவகாசம் தேவை. எனினும், சமகால இலக்கியப் போக்கை உணர்ந்துகொள்ளும் முயற்சி என்ற வகையில் சில கருத்துக்களைக் கூறவேண்டியது அவசியமாகின்றது. வெளியீட்டுச் சாதனம் கலைப் படைப்பினது வரலாற்றில் விளைவித்த தாக்கம் என்ற வகையில் கடந்த ஐந்து ஆண்டுக் கால ஈழத்துத் தமிழ் நாவலின் போக்கை வீரகேசரி பிரசுரக்களம்’ பெருமளவு நிர்ணயித்து வந்துள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. அறுபதுகளில் சாதிப் பிரச்சினை, வர்க்கப் போராட்டம் என்பவற்றைப் பொருளாகக்கொண்டு எழுச்சிபெற்ற ஈழத்துத்தமிழ் நாவல், எழுபதுகளில் ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சார்ந்த மக்களது வாழ்க்கை முறைகளைச் சித்திரிப்பதாகப் பரிணாமம் பெற்றுள்ளது. வரலாற்றுப் போக்கிலே குறிப்பிடத்தக்க இம்மாற்றத்தில் வீரகேசரியின் பங்களிப்பே அதிகம். வீரகேசரி பிரசுரங்களுக்குப் புறம்பாக வெளிவந்த நாவல்களில் கே. டானியலின் பஞ்சமர் (1972), எஸ்.பொ.வின் சடங்கு (1971), செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் (1970), அருள் சுப்பிரமணியத்தின்அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973), சி. சுதந்திரராஜாவின் மழைக்குறி (1975. ஏ.ரீ. நித்தியகீர்த்தியின் மீட்டாத வீணை(1974) முதலியன தரமானவை. இவற்றின் தரத்திற்கு நிகராக நிலக்கிளி, கட்டாறு, பிரளயம், போராளிகள் காத்திருக்கின்றனர், வாடைக்காற்று, சீதா, குமாரபுரம், நான் கெடமாட்டேன், புதிய தலைமுறைகள், போடியார் மாப்பிள்ளை, தூரத்து பச்சை, ஊமைஉள்ளங்கள், விடிவைநோக்கி ஆகியவற்றை எடுத்துக்காட்டமுடியும்.

வீரகேசரி நூல் வெளியீட்டுத்துறையின் மூலம் புதிதாக அறிமுகமான நாவலாசிரியர்களில் தெணியான், எஸ்.ஸ்ரீ ஜோன்ராஜன், வை. அஹ்மத், ஞானரதன், கே.ஆர். டேவிட் ஆகியோரது படைப்புக்களில் ‘முதிரா இளமை’ புலப்படுகின்றதெனினும் அவர்களைக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்குவது பொருந்தாது. இவர்களின் எழுத்துக்களின் ஊற்றுக் கண்ணாக உள்ளடங்கியிருக்கும் சமூகப் பார்வையும், ஊக்கமும் வளர்க்கப்பட வேண்டியன.

அ.பாலமனோகரன், தெளிவத்தை ஜோசப், அருள் சுப்பிரமணியம் முதலியவர்களது எழுத்தாற்றலால் இலக்கிய உலகம் பயன்பெற வேண்டுமாயின் இவர்களின் சமூகப் பார்வை விரிவடைய வேண்டும். கே.டானியல், வ.அ. இராசரத்தினம் இருவரிடமிருந்தும் சம கால சமூக வரலாற்று நாவல்களை இலக்கிய உலகம் எதிர்பார்க்கின்றது.

வீரகேசரி பிரசுரக்களத்தைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொண்டவர் செய்கை ஆழியான். பல்வேறு பிரதேச, சமூகங்களை ஈழத்து நாவலுக்கு இவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மீனவர்கள், சலவைத் தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர், விவசாயிகள் ஆகியோரது சமூகப் பார்வை விரிவடைந்து வருவதை பிரளயம், காட்டாறு இரண்டிலும் நன்கு அவதானிக்க முடிகிறது.

முடிவுரை
திறனாய்வாளரிடையிலும் படைப்பாளிகளிடையேயும் வீரகேரி பிரசுரங்களின் தரம் பற்றி வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவலாம். ஆயின் கடந்த ஐந்தாண்டுக்காலப்பகுதியில் அதனால் பிரசுரிக்கப்பட்ட கணிசமான அளவு படைப்புக்கள் சமகால ஈழத்து தமிழ் நாவலின் போக்கை இனங்காட்டுகின்றன என்பதையும், நிலக்கிளி, காட்டாறு இரண்டும் ஈழத்து நாவலுக்குப் புதிய பரிமாணங்களை அளித்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் தரமான படைப்புக்களைத் தரவல்ல வகையில்ம் எழுத்தாளர்களையும், நாடறிந்த நாவலாசிரியர்களையும் வீரகேசரி ‘பிரசுரக்களம்’ இயங்க வைத்துள்ளதென்பதை வரலாற்று நோக்கில் உணர முடிகின்றது.

வீரகேசரி பிரசுரங்கள்

பிரசுர இல. புத்தகத்தின் பெயர் எழுதியவர்

1. கதைக்கனிகள் சிறுகதை தொகுப்பு
2. குந்தளப் பிரேமா கே.வி.எஸ்.வாஸ்
3. கணையாளி கே. வி. எஸ். வாஸ்
4. பூஜைக்கு வந்த மலர் திருமதி. என். பாலேஸ்வரி
5. மைதிலி கே. வி. எஸ். வாஸ்
6. பண்டார வன்னியன் முல்லைமணி
7. தீக்குள் விரலை வைத்தால் கே. எஸ். ஆனந்தன்
8. யுகசந்தி மணிவாணன்
9. நான் சாகமாட்டேன் செ. கதிர்காமநாதன்
10. ஆஷா கே. வி. எஸ். வாஸ்
11. தூரத்துப்பச்சை திருமதி கோகிலம் சுப்பையா
12. நிலக்கிளி ஏ. பாலமனோகரன்
13. மர்ம மாளிகை அருள் செல்வநாயகம்
14. விடிவை நோக்கி தெணியான்
15. புயலுக்குப் பின் பொ. பத்மநாதன்
16. மனக்கோலம் டாக்டர் கோவூர்
17. செல்லும் வழி இருட்டு என். சொக்கலிங்கம்
18. வாடைக்காற்று செங்கை ஆழியன்
19. தாரிணி கே. வி. எஸ். வாஸ்
20. உலகங்கள் வெல்லப்படுகின்றன கே. டானியல்
21. காலங்கள் சாவதில்லை தெளிவத்தை ஜோசப்
22. காகித ஓடம் கே. எஸ். ஆனந்தன்
23. ஒரு விலைமகளைக் காதலித்தேன் இந்து மகேஷ்
24. அஞ்சாதே என் அஞ்சுகமே கே.வி. எஸ். வாஸ்
25. சீதா என். சொக்கலிங்கம்
26. கோர இரவுகள் டாக்டர் கோவூர்
27. வாழ்க்கைப் பயணம் நயீமா சித்திக்
28. குமாரபுரம் ஏ. பாலமனோகரன்
29. உள்ளத்தின் கதவுகள் அன்னலட்சுமி இராஜதுரை
30. பிரளயம் செங்கை ஆழியன்
31. நெஞ்சக்கனல் கே.வி.எஸ்.வாஸ்
32. யாருக்காக மொழிவாணன்
33. போராளிகள் காத்திருக்கின்றனர் கே. டானியல்
34. பொன்னான மலரல்லவோ உதயணன்
35. கிரௌஞ்சப் பறவைகள் வ.அ. இராசரத்தினம்
36. நன்றிக்கடன் இந்து மகேஷ்
37. உறவுக்கப்பால் நா. பாலேஸ்வரி
38. புதிய தலைமுறைகள் வை. அஹ்மத்
39. போடியார் மாப்பிள்ளை எஸ். ஸ்ரீ. ஜோன்ராஜன்
40. ஊமை உள்ளங்கள் ஞானரதன்
41. நான் கெடமாட்டேன் க. அருள் சுப்பிரமணியம்
42. யாத்திரை பொ. பத்மநாதன்
43. கனவுகள் வாழ்கின்றன இந்திராதேவி சுப்பிரமணியம்
44. உமையாள் புரத்து உமா புரட்சி பாலன்
45. இரவின் முடிவு செங்கை ஆழியான்
46. நெஞ்சில் ஓர் இரகசியம் கருணசேன ஜயலத்
47. வரலாறு அவளத் தோற்றுவிட்டது கே.ஆர்.டேவிட்
48. அந்தரங்க கீதம் உதயணன்
49. விடிவுகால நட்சத்திரம் கே.விஜயன்
50. காட்டாறு செங்கை ஆழியான்

நன்றி: http://www.noolaham.net/project/02/170/170.htm