வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தும் பாட்டுப் போட்டி

1_maha_music5.jpg - 45.86 Kbமகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும்  ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் பட்டறை பெற்றோர்கள், மற்றும் பங்குபற்றும் மணவர்களுடனான சந்திப்பாகவும், ஐயம் தெளிதல் நிகழ்வாகவும் அமைந்தது. இரண்டாவது பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விஜே தொலைக்காட்சியில் சுப்பசிங்கர் இசைப் போட்டிக்கு நடுவராகக் கடமையாற்றிய அனுபவசாலியான அவர், போட்டியில் பங்கு பற்றும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தேவை கருதிச் சிறப்பானதொரு உரையாற்றினார். அவர் தனது உரையில் போட்டிக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த எப்படி மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும், ஒவ்வொரு மாணவரும் எப்படித் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும், இதை ஒரு போட்டி என்று எடுத்துக் கொள்ளாமல் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு தனது உரையில் விளக்கம் தந்தார்.

பயிற்சிப் பட்டறையில் பங்கு பற்றிய மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். கர்நாடக இசையைக் கற்கும் பொழுது வேற்று மொழி இசைகளையும் அறிந்து கொண்டால்தான் பிற்காலத்தில் முழுமை அடைந்ததொரு இசைக்கலைஞனாக மாற முடியும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். அப்போது மாணவி ஒருவர் முன்வந்து ஒரு பாடலைப் பாடிக்காட்டிய போது அதைத் தனது மகளுக்குப் போட்டுக் காட்டுவதற்காகப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இசையில் நல்ல திறமையான செல்வங்களை இந்த மணிணில் பார்க்கும் போது தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவ சங்கத்தினரையும் பாராட்டினார். 
 
1_mahajan2014a.jpg - 32.15 Kb

மகாஜனாக் கல்லூரி பழைய மணவர் சங்க நிர்வாகக் குழுவினரும், இசைப் போட்டிக்குப் பொறுப்பான கலைக் குழுவினரும், தன்னார்வத் தொண்டர்களும் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தனர். பயிற்சிப்பட்டறைக்கு உன்னிகிருஷ்ணனை அழைத்து வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த ஈழநாடு பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு. பரமேஸ்வரன் அவர்களுக்கும், மற்றும் விஜே சேனாதிராஜா அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர். ஒக்ரோபர் மாதம் 2014 இல் நடக்க இருக்கும் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடத்தும் கலை விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட இருப்பதாகத் தெரிய வருகின்றது. வெள்ளிவிழாவை முன்னிட்டு கணிதம், பொதுஅறிவு, தமிழ் மொழிப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. வேறுபல போட்டிகளும் குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

kuruaravinthan@hotmail.com