வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா: நினைவு முகம் கலைந்து போகுமா?

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா“முடிவில்: நான் ஒரு வைத்தியராகப் பல பயிற்சிகள் பெற்று 40 ஆண்டுகள் கடமையாற்றி இளைப்பாறியது என் பாக்கியமே. எனவே இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போல எங்கள் வைத்தியத் துறை தொடர்ந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் விருத்தியடைய நான் மனதார வாழ்த்துகிறேன்” வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா
    
வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா அவர்கள் எழுதிய “20 ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு” என்ற கட்டுரையை “பிரித்தானியாவின்  தமிழ் பெண் எழுத்தாளர்கள்”  என்ற எனது தொகுப்பிற்காக பதிவு செய்துகொண்டிருந்தவேளை, அவரின் பிரிவுச் செய்தி எழுத்தாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தபோது என் கண்கள் நனைந்;து வேதனையாகியது. யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் பாடசாலையில் தனது கல்வியை மேற்கொண்ட வைத்தியர் சீதாதேவி மகாதேவா 1998 இல் லண்டனில் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியராகத் திகழ்ந்தவர். குழந்தை வைத்தியம், மனநோய்ச்சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியசேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற திருமதி சீதாதேவி மகாதேவா பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் 27 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இலங்கையிலும் சேவையாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.
      
பெண்ணுரிமை, இலட்சிய உள்ளம், இலட்சியத் திருமணம், வைத்திய விஞ்ஞான அபிவிருத்தி, நாளாந்த சுகாதாரம், பிரித்தானியா, காந்தி,- கியூரி – கண்ணதாசன் – பாரதி போன்ற பல்துறை முன்னோடிப் பெரியார்கள், சைவம், தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை அனுபவங்கள், தனது குடும்பத்தார், ஆண்மையும் பெண்மையும் போன்ற கருப்பொருட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டவர். பூந்துணர் – 2007, பூந்துணர் 2010,  பூந்துணர் 2012 தொகுப்பு நூல்களில் இவரது கட்டுரைகள்; அலங்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீதாவின் தமிழ் சமையல் SEETHA’S TAMIL RECIPES , COMPILED & ILLUSTRATED BY UMA MAHADEV என்னும் நூலை 2012 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டவர்.
    
“எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்” என்ற எனது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது  பேராசிரியர் மகாதேவாவுடன் வருகை தந்து எனக்கு அருகில் அமர்ந்திருந்து எனக்கு உற்சாகம் தந்து வாழ்த்தியதை எப்படி என்னால் மறக்க முடியும்? எல்லோரையும் இலகுவாக வருடிக்கொள்ளும் அவரின் புன்சிரிப்பு காற்றாகி மிதந்து என்னுள் திரிகிறது.
    
ஏதோ ஒருவகை இலக்கிய பாசம் என்னை அவர்கள் இல்லத்திற்கு பல தடவைகள் போகச் செய்தது. நான் அவர்கள் இல்லம் செல்லும் வேளைகளில் அவர்களின் மிகவும் அன்பான வரவேற்பும், சீதா அம்மாவின்; உபசரிப்பும் அவரின் உயர்ந்த மனிதப் பண்பை விளப்பி நின்றது.
   
தொலைபேசியில் அழைக்கின்றவேளையெல்லாம் நவஜோதியா கதைக்கிறீர்? ஏப்படி இருக்கிறீh? ‘புரபசரோ’டையா கதைக்கப்போகிறீர்? என்று இனிமையும், அடக்கமும், அமைதியும் கலந்த பண்போடு தொலைபேசியைப் பரிமாறும் பாங்கு என்னுள் ஆழமாய் ஒலித்து வேதனையில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.
   
பேராசிரியர் கோபன் மகாதேவா வைத்தியர் சீதாதேவி அவர்களின்  திருமணவாழ்வின் ஐம்பதாவது ஆண்டு விழாவை 2010 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடிக்கொண்டிருந்தவேளை நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல் அவ்விழாவில் பங்குபற்றியமை எதிர்பாராததொன்றுபேராசிரியர் கோபன் மகாதேவா வைத்தியர் சீதாதேவி அவர்களின்  திருமணவாழ்வின் ஐம்பதாவது ஆண்டு விழாவை 2010 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடிக்கொண்டிருந்தவேளை நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல் அவ்விழாவில் பங்குபற்றியமை எதிர்பாராததொன்று. அவ்வேளை அவர்களுக்கு நேரடியாகவே எனது வாழ்த்துரையை கூறும் ஒரு களமாக அமைந்திருந்தமையை எண்ணும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. பலமொழிகளை பேசும் ஒரு அன்பான குடும்பமாக இருந்தும் ஆங்கிலத்தை பொதுமொழியாக்கிய அழகை என்னால் அவதானிக்க முடிந்தது.   2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற எனது அன்புமகன் அகஸ்ரியின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து அரங்கேற்றத்தை சிறப்பித்து வைத்த வைத்தியை சீதாதேவி அம்மா அவனின் மிருதங்கக் கச்சேரியை நீண்டநேரம் பேராசிரியர் மகாதேவாவுடன் இருந்து அக்கலையை ரசித்ததோடு, வைத்திய நோக்கோடு அவனின் உடலின்; மாற்றங்களை அவதானித்து அருகிலிருந்த எனது தாயார் நவமணிக்கு எடுத்துரைத்த விதத்தை அவர் மகிழ்வுடன் கூறியதும் அடுக்கடுக்காய் நினைவில் வந்து ஆடுகின்றது.
    
கலையை ரசிக்கவும், இலக்கியத்தை வடிக்கவும், வாழ்க்கையை இனியதாய் சுவைக்கவும் தெரிந்த வைத்தியர் சீதாதேவி அம்மாவின் சேவையை தலை சாய்த்து வாழ்த்துகின்றோம். அவரின் சிரித்த முகம்; என்றும் நினைவில் நிற்கும்! பயனுள்ள அவரின் எழுத்துக்களால்; அவர் என்றும் வாழ்வார்!…

25.6.2013
    
navajothybaylon@hotmail.co.uk