இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது‘ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன்,வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப் புனைவுகளில் சமூக விமர்சனம்,தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது. இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர்.சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். மலேயா, சிங்கப்பூர், மெல்பன் ஆகிய பல அயலகப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரதிய பாஷா பரிஷத் (இந்திய மொழிகள் கழகம்) 40ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஓர் அரசு சாராத் தன்னார்வ இலக்கிய அமைப்பாகும். இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பது அதன் முக்கிய நோக்கம். ஆண்டு தோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கிறது
ஒரு இலட்சம் ரூபா பொற்கிழியும்,பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது. பரிசளிப்பு விழா மார்ச் மாதம் கல்கத்தாவில் நடை பெறும்.