‘டொராண்டோ’ கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் ‘யுத்தத்தைத் தின்போம்’ கவிதைத்தொகுப்பையும், ‘காற்றோடு பேசு’, மற்றும் ‘புலரும் வேளையிலே’ இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
தேடகத்தின் அறிக்கை:
” நண்பர் பாபு பரதராஜா இன்று செவ்வாய்க் கிழமை (08-08-2017) காலமானார் என்கிற துயர்மிகு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழர் வகைதுறைவள நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினராகவிருந்து நிலையத்தின் பல செயற்பாடுகளிலும் பங்காற்றியதோடு, தேடக நூலகத்தை நிர்வகிப்பதிலும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக திகழ்ந்தவர். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் மிகுந்த உற்சாகத்தோடு செயலாற்றியதோடு மட்டுமல்லாது ‘பலிக்கடாக்கள்’, ‘பொடிச்சி’ ஆகிய நாடகங்களிலும் சிறப்புற நடித்துமிருந்தார். தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக ‘மனவெளி கலையாற்றுக் குழு’ வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி ‘அரங்காடல்’ எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர். தவநி, அரங்காடல், நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் என பல தீவிர நாடக இயக்கங்களுடன் பணியாற்றியவர்.
தொடர்ச்சியாகக் கலை, இலக்கிய செயற்பாடுகளுக்கு உதவுபவராக இருந்து வந்தார். ஈழத்தமிழர் இசையின்மேல் கொண்ட ஆர்வத்தால் அருவி வெளியீட்டகம் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து ‘புலரும் வேளையில்’, ‘குளிரும் நிலவு’, ‘காற்றோடு பேசு’ போன்ற இசைத்தட்டுக்களை தயாரித்து வெளியிட்டார். கவிஞர்கள் பிரதீபா தில்லைநாதன், திருமாவளவன், சக்கரவர்த்தி ஆகியோரின் கவிதைகளைத் தொகுத்து ‘யுத்தத்தை தின்போம்’ எனும் நூலாக வெளியிட்டார். ரொரன்டோவில் மாற்றுக் கருத்துக்காகவும், தீவிர கலை, இலக்கிய செயற்பாடுகளுக்காகவும் பாபு ஆற்றிய பங்கு அழுத்தமாக குறிப்பிடப்படவேண்டிவொன்று. அவரின் இழப்புக்கு தேடகம் தனது ஆத்மார்த்தமான அஞ்சலியை செழுத்துவதுடன், அவரின் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர், நண்பர் துயரில் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.”
பாபு பரதராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்:
அன்னாரின் உடல் இறுதி மரியாதைக்காக
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave.
Markham, On
L3R 5G1
வெள்ளி (11-08-17) மாலை 5:00-9:00 மணி வரை
ஞாயிறு (13-08-2017) காலை 10:00-11:00 மணி வரை
வைக்கப்பட்டு
தகனம்
ஞாயிறு (13-08-2017) மதியம் 12:00 மணி
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres ல் இடம்பெறும்
1591 Elgin Mills Road East
L4S 1M9
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.