
ஓவியமே உலகமாக வாழ்ந்திருந்த கருணாவையே நான் அறிந்திருந்தேன். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பில்லை. இருந்தாலும் சிறிது காலம் 2001 காலகட்டத்தில் 10 கேட்வே புளவாட்டில் அமைந்திருந்த அவரது காரியாலயத்தில் அவரது காரியாலயத்தின் ஒருபகுதியை தகவற் தொழில் நுட்பம் தொடர்பான வகுப்புகளை வழங்கிக்கொண்டிருந்த எனக்கு வாடகைக்குத் தந்திருந்தார். அப்பொழுதுதான் அவரும் கவிஞர் பா.அ.ஜயகரனும் இணைந்து ‘டிஜி கிராபிக்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார்கள். நான் சென்ட் கிளயர், ஒகோனர் பகுதியில் தனிக் காரியாலயமொன்றில் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் நண்பர் ஜயகரன் தங்கள் காரியாலயத்தில் ஒரு பகுதியைப் பாவிக்கலாமென்று கூறியதன் அடிப்படையில் அங்கிருந்து கற்பிக்கத்தொடங்கினேன். ஆனால் அங்கு சிறிது காலமே அவ்விதமியங்க முடிந்தது. அக்கட்டட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி அங்கு தொடர முடியாத நிலையேற்பட்டது. ஆனால் அக்காலகட்டத்தில் ஓவியர் கருணாவை அவதானிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மிகவும் அர்ப்பணிப்புடன் நாள் முழுவதும் தன் பணியில் மூழ்கியிருப்பதை அவதானித்தேன்.
ஓருரு சமயங்களில் கிராபிக்ஸ் மென்பொருள்கள் பலவற்றில் நன்கு அனுபவம் பெற்றிருந்த கருணாவிடம் அவை பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெற்றிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் அவர் அவற்றை விளங்கப்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கான அடையாளச் சின்னங்களை அம்மென்பொருட்களைப்பாவித்து மிகவும் இலகுவாக, இலாகவமாக வரையும் அழகை, நேர்த்தியைக் கண்டு வியந்திருக்கின்றேன். அன்று சிறியதாக ஆரம்பித்த அவரது ஓவியச் சுய தொழிலே பின்னர் அவரது நிரந்தரத் தொழிலானது.
ஓவியர் மாற்குவின் பெயர் சொல்ல விளங்கிய சீடர்களிலொருவரான ஓவியர் கருணாவின் மரணத்துக்கான காரணம் எனக்குச் சரியாகத்தெரியவில்லை. அவ்வப்போது நிகழ்வுகளில் காணும்போது சிரிப்புடன் , ஓரிரு வார்த்தைகளுடன் சந்திப்புகள் முடிந்துவிடுவதுண்டு. அண்மையில்தான் முகநூலிலும் என்னுடன் நண்பராக இணைந்திருந்தார். இந்நிலையில் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் தென்படும் ஓவியர் கருணாவின் திடீர் மரணம் உண்மையிலேயே அதிர்ச்சியினையே தந்தது. ஈழத்தமிழர்தம் ஓவியத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பென்றும் கூறுவேன்.

கனடாவிலிருந்து வெளிவரும் இதழ்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் பல ஓவியர் கருணாவின் கைவண்ணத்தில், வடிவமைப்பில் உருவானவை. அவையும், ஓவியர் கருணாவின் ஓவியங்களும், ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் பற்றிய அவரது எழுத்துகளும் அவரது கலை, இலக்கியப்பங்களிப்பை வரலாற்றில் நிலைத்து நிற்க வைக்கும் அவரது படைப்புகளாகும். அவரது நினைவாகக் கணையாழியின் கனடாச்சிறப்பிதழுக்காக அவர் வரைந்த ஓவியத்தையும், மேலுமொரு ஓவியத்தையும் பகிர்ந்துகொள்வதுடன் எனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் நானும் பங்குகொள்கின்றேன்.

ngiri2704@rogers.com