பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் அவரது பழைய நூலொன்றை எடுத்து மின்னல் வேகத்தில் படித்துமுடித்தேன். அந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமாகவே எனது இரங்கலை பதிய வைக்கலாம் என்று தோன்றுகிறது.
“வளரும் கிளர்ச்சி”. – இன்று மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் 1953 இல், திமுகவின் வரலாற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் எழுதிய ஒரு குறுநூல்.
அப்போது திராவிட நாட்டு விடுதலைக்கான வரலாற்றுத் தேவைகளை வலியுறுத்தி பல நூல்கள் எழுதப்பட்டன. அண்ணாவின் பணத்தோட்டம் முதலான நூல்கள் உருவாக்கிய ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தில், அன்பழகன் எழுதிய – இன்று பலரும் மறந்துபோன – ஒரு நூல்தான் “வளரும் கிளர்ச்சி”.
திராவிட நாடு கோரிக்கைக்கான வரலாற்றுத் தேவையை இந்த குறு நூலில் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார் அன்பழகன்.
1947 க்கு முன் இந்திய விடுதலைப் போராட்டம் உருவான காலத்தை முதலில் குறிப்பிட்டு, எப்படி உலகளாவிய சூழல் மாற்றங்களாலும் இந்தியாவிலுள்ள மக்களின் விடுதலைப் போராட்டத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிப்பிடும் அன்பழகன், இந்து மதம்சார்ந்த ஆதிக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் கோரிக்கை எழுந்ததையும் சுட்டிக்காட்டி 1947 இல் இரண்டு நாடுகள் – பாரதமும் பாகிஸ்தானும் – உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் அந்த விடுதலைப் போராட்டம் முழுமையானதல்ல, பாதி விடுதலைப்போராட்டம்தான் என்று அவர் கருதுகிறார். தென்னாடு வடநாட்டிடம் எப்படி அடிமையாக இருக்கிறது என்பதை பிறகு விளக்குகிறார். வடவரிடம் நாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை விளக்குவதோடு தமிழ்நாட்டுக்குள் பார்ப்பனீயம் எப்படி மிகப்பெரிய ஆதிக்கச் சக்தியாக செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். அந்தப் பார்ப்பனீயம் ஏன் தமிழ், தமிழர் என்றால் அலறுகிறது என்று கேள்வி கேட்கிறார்.
ஆனால் தொல்காப்பியம் காலம் முதலே தமிழர்களாகிய நாம் நமக்கென ஒரு தனி மரபைக் கொண்டிருந்தோம், அது சாதி சமய வேற்றுமைக்கு அப்பாற்பட்ட மரபு என்பதை சங்க காலம், சித்தர் காலம் எனத் தொடங்கி வள்ளலார் வரை நீண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் அன்பழகன், பார்ப்பனீயும் வடவர் ஏகாதிபத்தியமும் எப்படி நம்மை நமது அடிப்படை அறநிலையிலிருந்து பிறழச்செய்துவிட்டது என்பதை விளக்குகிறார்.
இந்திய தேசிய காங்கிரஸ் அந்த வட ஏகாதிபத்தியமாகவும் பார்ப்பனீயமாகவும் உருவெடுத்து நிற்பதையும் அதற்கு எதிராத தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம் ஆகியவை உருவானதையும் வரலாற்றுப்போக்கில் சுட்டிக்காட்டும் அன்பழகனின் வரிகளில் திராவிட நாட்டு விடுதலைக்கான அரசியல் கோட்பாடுகள் எந்தெந்தப் புள்ளிகளிலிருந்து முளைக்கின்றன என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
காலம் காலமாக தமிழரிடம் உள்ள ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பு பண்பாடு அடித்தளமாக இருக்க, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மொழிக்கிளர்ச்சி போன்றவை உடனடி கோரிக்கைகளை வலுப்படுத்த ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் போக்கினூடாகவே திராவிட நாடு கோரிக்கை முகிழ்த்துவந்தது என்பதை அவர் காட்டுகிறார்.
1953 மும்முனைப் போராட்டம் என்பது குலக் கல்விக்கு எதிரான போராட்டம் என்கிற வகையில் சாதியொழிப்புப் போராட்டமாகவும் நேருவின் ஏதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராட்டம் என்கிற அளவில் தில்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமாகவும் டால்மியாபுரம் என்று பெயர்வைக்கக்கூடாது என்பதினூடாக ஒரு பனியா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுக்கிறது. அந்தப் போராட்டம் ஓயப்போவதில்லை, அது ஒரு விடுதலைப் போராட்டமாக நீள்கிறது என்பதைத்தான்
“வளரும் கிளர்ச்சி” என்று வர்ணிக்கிறார் அன்பழகன்.
அவரது காலத்துக்கேயுரிய நடை, வரலாற்றில் பார்க்கவேண்டிய வேறு பல நோக்குகள் முழுமையாக பதியாமை போன்ற “பிரச்சினைகள்” இந்த நூலில் இருக்கலாம். ஆனால் அன்பழகன் எவ்வளவு ஆழமாக வரலாற்றை முன்வைக்கிறார் என்பது மிகமுக்கியமானதாகும். திராவிட நாட்டுக் கோரிக்கை என்பது வெற்றுவார்த்தை ஜாலம் என்று காட்டநினைத்த அறிவுஜீவிகளில் பலர் இந்த நூலைப் படித்திருப்பார்களா என்றுகூட நான் சந்தேகிக்கிறேன்.
இந்த நூலில் ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார்: “காங்கிரசின் தேச விடுதலை, நீதிக்கட்சியின் வகுப்புரிமை, தாய்மொழிப் பாதுகாப்பு, திராவிட இன உரிமை, திராவிட நாட்டு விடுதலை, பொருளாதார பேத நீக்கம் ஆகிய ஒவ்வொன்றும் காலமுறையிலேயே மக்களிடைய இடம் பெற்று வந்துள்ளன… இவற்றுல் பல ஒன்றொடொன்று தொடர்புகொண்டு தனித்தனி பிரிக்கமுடியாத ஒரு பெருவடிவாகத் திகழ்வதையும் அறிவது கடினமல்ல. அந்தப் பெருவடிவே, பேரிலட்சியமே, “திராவிட நாடு திராவிடர்க்கே” என்பது.”
“தமிழ்நாடு தமிழருக்கே” எ்ன்கிற வைரக்கல் வைத்து இழைத்த தங்கப்பதக்கமே “திராவிட நாடு திராவிடர்க்கே” என்று குறிப்பிடும் அன்பழகனின் இந்த நூலில்தான் முதன்முதலில் ஒரு வரலாற்றுக்குறிப்பை அறிந்தேன். 1938 இல் வேலூரில் நடந்த ஒரு தமிழர் மாநாட்டில் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முதன்முதலில் வெளியிட்டவர் சர் ஏ டி பன்னீர்செல்வம்தான் என்பதே அந்தக் குறிப்பு. மறுநாள் அதே முழக்கம் சென்னையில் மறைமலையடிகள். நாவலர் சோமசுந்திர பாரதியார். தந்தை பெரியார் ஆகியோரால் முன்மொழியப்படுகிறது.
வளரும் கிளர்ச்சி என்கிற இந்த குறுநூல் நவீன தமிழ்நாட்டு வரலாற்றை ஆய்வதற்கான ஒரு முக்கிய ஆவணம்.
க. அன்பழகன் ஏன் பேராசிரியர், அதுவும் இனமானப் பேராசிரியர் என்பதற்கான ஒரு நிரூபணமும்கூட.
இரக்கமற்ற கால வெள்ளத்தால் எவ்வளவோ அழிக்கப்பட்டுவிட்டன. பல நினைவுகளும் கனவுகளும்கூடத்தான். உறுதிப்பாடுகளும் கொள்கைகளும் இலட்சியங்களும்கூட கரைந்துபோகின்றன. ஆனால் நீங்கள் எங்களுக்கான ஒரு காலத்தை ஆண்டிருக்கிறீர்கள் பேராசிரியரே.
ஆனாலும், பேராசிரியரே, உம்மை நினைத்து இரங்குவதற்கான காரணங்கள் பல. எனவே இந்த ஒரு தருணத்தை உமக்கான நன்றியறிதலாகவே ஆக்கவிரும்புகிறேன்.
துயில்கொள்வீர் எம் முன்னத்தி ஏரே!
எந்தக் காலம் உங்களிடமிருந்து அந்த வாய்ப்புக்களை பிடுங்கினவோ அதே காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. உங்களை நினைப்பார்க்கும் நிர்பந்தத்தையும் அது அளிக்கிறது.
பாட்டன் பாட்டிமார் விட்டுச்சென்ற இடத்திலிருந்து பேரன் பேத்திமார் தொடரலாமே என்று அது வினாவெழுப்புகிறது.
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பழைய வீட்டில் நுழைகிறேன். நீங்கள் இளம்வயதில் எடுத்து சட்டகமிட்டு மாட்டிவைத்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்கிறேன், கண்ணீர் மல்க.
துயில்கொள்வீர் எம் முன்னத்தி ஏரே!
கிளர்ச்சி வளரட்டும், மீண்டும்.
தீ பரவட்டும், மீண்டும்.
– ஆழி செந்தில்நாதன்
மார்ச் 7, 2020ஆழி செந்தில்நாதன்