அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!
அனிதாவுக்கு அஞ்சலி!அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!


‘ப்ளஸ் டூ தேர்வில்’ 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், ‘நீட்’ தேர்வு காரணமாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவி அனிதாவின் மறைவுச் செய்தி இன்று என்னை மிகவும் பாதித்த செய்தி. வறுமைச்சூழலிலும் அவர் திறமையாகப் படித்திருக்கின்றார். ப்ளஸ் டூ’வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றார். இவ்விதம் திறமையாகச் சித்தியடைந்திருந்தும் அனிதாவுக்கு மருத்துவ பீடத்துக்கான இடம் கிடைக்கவில்லை. முறையற்ற அமைப்பு அநியாயமாக ஒரு திறமையான மாணவியின் உயிரைப்பறித்துள்ளது.


அனிதா! உன் விடாமுயற்சியாலும், திறமையாலும் நீ உன்னைப்பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்தாய். நீ பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தாய். இருந்தும் உன்னை இந்த அமைப்பு பாதுகாக்கத்தவறி விட்டதே! ஊழற் பெருச்சாளிகளையெல்லாம் காப்பதற்காகக் கோடிகளைக் கொட்டும் நீ பிறந்த மண்ணில் இறுதி நேரத்தில் உன்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்பது சோகத்தைத்தருகின்றது. புது தில்லி வரை சென்று போராடிய உன் துணிச்சலை நான் போற்றுகின்றேன். உன் முடிவு சோகத்தைத்தந்தாலும், எதிர்காலத்திலாவது அனிதாக்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகவாவது உன் முடிவு வழி கோரட்டும். இருந்தாலும் உன் முடிவானது மிகப்பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

உனது முயற்சியும், திறமையும் எல்லோருக்கும் அவ்வளவு இலேசில் கிடைத்துவிடுவதில்லை. உனக்கு அவை கிடைத்திருந்தன . இருந்தும் அவற்றை யாரும் இனங்காணவில்லையே என்பது இதயத்தைத் தாக்குகின்றது. ஆனால், உனது முடிவால் உன்னை இம்மண் இழந்து விட்டாலும், நீ வரலாற்றில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாய். எத்தகைய சூழலிலும் திறமையாகக் கற்க முடியுமென்பதற்கு உன் சாதனைகள் முன்மாதிரியாக இருக்கட்டும். சிறுமியாகத் தனித்து உன் உரிமைக்காக நீதி கேட்டுப் புது தில்லி வரை சென்றாயே. அந்தப்போர்க்குணத்தால், மனவுறுதியால் நீ எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து விட்டாய்.