அன்னையர் தினக் கவிதை: தாயே தமிழே தத்துவமே

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !

சங்கத் தமிழே சாத்திரமே
சரிதம் போற்றும் தமிழ்கலையே
கங்குல் வெளித்துக் கதிரெழுதும்;
கன்னற் பொழுதே காவியமே
தெங்கின் இளநீர் மாமதுரைத்
தேவி வரைந்த திருமுறையே
பொங்கும் நீரே பேரணியே
பூத்துக் குலுங்கும் மாமரமே !

ஆழம் பரந்த அலைகடலே
அதற்கும் ஆழம் தமிழ்க்கடலே
கீழடி கண்ட குடிமனையே
கீர்த்தி படைத்த அரண்மனையே
சோழம் தென்னைச் சிதம்பரமும்
சித்திரங் காட்டும் பதிணெண்கீழ்க்
காழம் உரைத்த கணக்குஎலாம்
கண்ணுக் கெட்டாக் தூரமடி!

சிலம்பும் கதையின் காப்பியமும்
சேயிழை பஞ்ச பாண்டவரும்;
விளங்கும் கம்பர் விடுத்தகவி
வேராம் அண்டம்; பிரபஞ்;சம்
நிலங்கள் தோறும் நின்றுலவும்
நித்திலம் தமிழாய் நிலைத்தவளே
இலங்கும் மகளே ஏடுகண்ட
இயற்கைக் குரலே இளந்தாயே!

பொங்கும் பூமி வைகாசிப்
பூக்கள் தொடுத்த பூமாலைத்
திங்கட் கெழிலாம் சோதியொடும்
சேர்ந்து பிறந்தாய் தமிழ்த்தாயே
மங்கை குலவும் மணிநாட்டில்
மாதர் தினமே வரைகின்றோம்
செங்கை எழிலுஞ் செம்பவளம்
சிந்தும் தமிழே வாழியவே !

vela.rajalingam@gmail.com