அப்துல் ரகுமானே அழகுதமிழ் பாவலரே
செப்பமுடன் கவிதைதந்த சிந்தனையின் கோமானே
முப்பொழுதும் தமிழ்பற்றி மூச்சாக நின்றவரே
எப்பொழுது உன்தமிழை இனிக்கேட்போம் இவ்வுலகில் !
தமிழ்க்கவிதைப் பரப்பினிலே தனியாக ஆட்சிசெய்தாய்
உரத்தகுரல் கொண்டுநீ உயர்கருத்தை ஈந்தளித்தாய்
கவிதை அரங்குகளை களியாட்டம் ஆக்காமல்
புதுமை தனைப்புகுத்தி புத்தூக்கம் கொடுத்துநின்றாய்
அப்துல் ரகுமானை அனைவருமே பார்க்கவைத்தாய்
அருமருந்தாய் கவிதைகளை அனைவருக்கும் கொடுத்துநின்றாய்
இப்போது உன்கவிதை கேட்பதற்குத் துடிக்கின்றோம்
எங்குசென்றாய் ரகுமானே என்றுதேடி அழுகின்றோம் !
பேராசிரியார் பெரும் பதவி வகித்தாலும்
ஆராத காதலுடன் அருந்தமிழை அணைத்தாயே
ஊராரின் மனமெல்லாம் உட்கார்ந்த ரகுமானே
உன்பிரிவால் அழுகின்றோம் ஒருகவிதை சொல்லுவாயா !
ஆராய்ச்சி யாளனே அருந்தமிழ் வல்லோனோ
ஆசிரியாய் இருந்து அருநூல்கள் தந்தவனே
ஆட்சியாளர் அருகிருந்து அருங்கருந்து உரைத்தவனே
அப்துல் ரகுமானே அழவிட்டுப் போனதெங்கே !
jeyaramiyer@yahoo.com.au