அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் ஒரு நூல்வழிப் பதிவு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது வானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

வடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா ‘பதிவுகள்” இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்”  என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது.  துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.

வாழ்வின் பிரிவுத் துயருக்கும் முதுமைக்கும் மத்தியில் அவரால் இலக்கியத் தேடலிலிருந்து மட்டும் ஒதுங்கிவாழ முடியவில்லை. சங்க இலக்கியத்தை நூல்வழியாக நுகர்ந்து அதன் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து தேடிச் சுவையான தகவல்களை கட்டுரைகளின் வாயிலாக எப்போதும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையங்கள் என ஓயாது பகிர்ந்துகொண்டிருந்த ஒரு முதிய இளைஞன். மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் இலக்கிய ஆய்வுக்கான தமிழியல் விருதினை 2011இலும், தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான தமிழியல் விருதினை 2014இலும் இலங்கை-இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனங்களின் இணை விருதான இரா உதயணன் இலக்கிய விருதினை 2016இலும் பெற்றுக்கொண்டவர். அமரர் கா.வி அவர்களின் இலக்கியத் தேட்டத்தினை மீள்அறிமுகம் செய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது.

அமரர் கா.விசயரத்தினம் அவர்களின் முதலாவது நூல் 2005இல் மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்த கணினியை விஞ்சும் மனித மூளை என்பதாகும். முதலாவது நூலிலிருந்து  2015இல் வெளிவந்த இறுதி நூல்வரை இவரது விருப்பத்துக்குரிய பதிப்பாளராக இரவி தமிழ்வாணனும் அவரது மணிமேகலைப் பிரசுரமுமே இருந்துவந்துள்ளன. கணினியை விஞ்சும் மனித மூளை வீரகேசரி (கொழும்பு), வடலி (லண்டன்) ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் முன்னர் எழுதிவந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இலக்கியத்தில், மருத்துவத்தில், சித்த வைத்தியத்தில், சமூகவியலில், பழந்தமிழர் கணக்கியலில், அவர்தம் பண்பாட்டியலில், விண்வெளியியலில், உயிரியலில் என்று பல்வேறு திக்குகளிலும் தன் ஆய்வுப்பரப்பை விரித்து  இந்த 240 பக்க நூலிலுள்ள 30 கட்டுரைகளையும் சுவைபட உருவாக்கியுள்ளார்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் தமிழ் இலக்கியம் போன்றே ஆங்கிலப் புலமையும் மிக்கவர். 2007இல் அவர் Essentials of English Grammerச என்ற தலைப்பில் ஓர் இலக்கண அறிவியல் நூலை மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார். கா.வி.யின் தனிப் படைப்பில் வெளிவந்த இரண்டாவது நூலும், முதலாவது ஆங்கில நூலும் இதுவாகும். இதன் பின்னர் ஆங்கிலத்தில் அவ்வப்போது கட்டுரைகளை இவர் எழுதி ஊடகங்களில் பிரசுரித்திருந்தாலும், நுலுருவில் எவையும் வந்ததாகத் தகவல் இல்லை.

தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற இவரது மூன்றாவது நூல் 2008இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பேராசிரியர் கோபன் மகாதேவாவின் Century House  வெளியீடாக 225 பக்கங்களுடன் வெளிவந்தது. தொடர்ந்து 2012 வரை வெளியாகிய இரு நூல்களையும் இப்பதிப்பகமே வெளியிட்டிருந்தது. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் எழுதப்பட்டது. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின. இந்நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.

தொல்காப்பியம் இலக்கண நூலாக வகைப்படுத்தப் பட்டபோதிலும், அதிலும் இலக்கியச் சுவை பெரிதும் காணப்படுகின்றது. இந்நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள், தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச் சுவை பற்றியும் அக்காலத்தை சமூக வழக்காறுகள் பற்றியும் இந்நூலில் பெரிதும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், ஆடை அணிகலன்கள், மக்களிடையே வழக்கிலிருந்த கற்பொழுக்கம், களவொழுக்கம், கைக்கிளை, பெருந்திணை மற்றும் அக்காலத்தில் காணப்பட்ட சாதிய வளமைகள், திருமணங்களும் சீதனப் பரிமாற்றங்களும் என்று ஏராளமான விடயங்கள் இந்நூலில் எளிமையான நடையில் வாசித்து வியக்கமுடிகின்றது.

பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் என்ற இவரது மூன்றாவது நூல் 2010இல் 230 பக்கங்களுடன் வெளிவந்தது. அமரர் கா.வி. அவர்களின் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். பிராமணன் புகழ்பாடும் மனுநீதி நூலார் சூத்திரனுக்குக் கொடுத்த கொடுந்தண்டனைகள், மங்கையர் மாண்பினை மங்கவைக்கும் உடன்கட்டையேறல், மதங்களும் புராணங்களும் எழுப்பிய உயிர்ப்பலிகள், தொல்காப்பியர் காட்டும் பண்டைத்தமிழர் வாழ்க்கைநெறி, முச்சங்கங்களை அடுத்த நாலாம் சங்கம் அமைந்த வரலாறு, பரிணாம வளர்ச்சியும் மனித வரலாறும், திருமணமும் அதன் முன் பின் விளைவுகளும், பார்போற்றும் உலகச் சாதனையாளர் மகாத்மா காந்தி, பூவுலகின் நிலப்பரபபில் தோன்றும் உயிரினப் பிறப்பும் இறப்பும், சங்கத் தமிழ் இலக்கியமும் அதன் வளர்ச்சியும், செய்ந்நன்றி மறப்பது அறம் அன்று, நான் விரும்பும் இலக்கிய நாயகன் சிலம்பில் இளங்கோ, மண்ணின் மகிமையும் அதன் வாசனையும், செந்நாப்போதார் திருவள்ளவரும் தெய்வீக நூல் திருக்குறளும், மக்கள் கவிஞன் கவியரசு கண்ணதாசன், இன்றைய உலகும் தமிழர் கலாச்சாரமும், தொல்காப்பியப் பெருநூல் யாத்த தொல்காப்பியனார், உயரத்திலும் பல்லடுக்கு மாடிகளிலும் உலக சாதனை பெற்று நிற்கும் கட்டிடம் (துபாய்- வுhந டீரசத முhயடகைய), மேல்நாட்டுக்கேற்ற சைவமுறைகள், பன்னிரு திருமுறைகளும் அதிலடங்கிய பெரியபுராணமும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளே இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில கட்டுரைகளின் கருப்பொருளை நூலின் தலைப்பு பிரதிபலிக்கின்றது.

இலக்கிய அறிவியல் நுகர்வுகள் என்ற இவரது நான்காவது நூல் 2012இல் 272 பக்கங்களுடன் வெளிவந்தது.

சுவையான இலக்கியம் மற்றும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலை அவர் வெளியிட்டிருந்தார். பண்டைத்தமிழர்; இலக்கியங்கள், தொல்காப்பியர் காலம் கி.மு. 711, வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும், தொல்காப்பியர் காட்டும் ஆறறிவு உயிர்கள், பண்டைத் தமிழரின் திருமணங்கள், குறுந்தொகையில் இரு இலக்கியக் காட்சிகள், சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும், அறிவுத்திறனை மழுங்கவைக்கும் மூடநம்பிக்கைகள், மனித வாழ்வியலும் வாழ்க்கை முறைகளும், கற்றோர் மனதில் எழும் கற்பனைகள், சுவர்க்கத்தில் ஒரு நாள், பேரும் புகழும் நாடித் தேடி ஓடும் மனிதர்கள், புலம்பெயர் தமிழரின் பிரித்தானிய வாழ்க்கை, உலகை உய்வி நிற்கும்இயற்கை, சங்க இலக்கியத்தில் குறிஞ்சித் தலைவன் கூற்று, இயற்கைப் பேரழிவுகள், இலட்சிய இல்லம் நாட்டின் செல்வம், மூன்றாம் பாலினராகிய திருநங்கையர், தேன்நிலவில் சீதைக்கு எழுந்த ஐயுறவு, பூமி தட்டை என்ற நினைப்பில் பலர் இன்றும் வாழ்கின்றனர், பரப்பளவில் சுருங்கிவரும் நிலா, கால்களுடன் நடமாடிய பாம்பினம், புலால் உண்ணும் தாவரமும் மரவினமும், மனித வாயில் ஊறும் உமிழ்நீர் பால் தேன் கலந்த அமிழ்தம், மக்கள் மனதில் மிளிரும் சுதந்திரதாகம், பெருமையும் பேரழிவும், சந்தேகித்தால் சந்தோஷமில்லை, வால்மீகி காட்டும் சஞ்சீவி மலை மூலிகைகள், ஆடவரின் ஆண்மை, ஆசியாவைச் செழிக்கவைத்த கடவுள் சுட்ட அப்பம், தருமர் ஒரு தருமியா கருமியா, பாண்டி ஆட்டம், இறைஞானமும் விஞ்ஞானமும் இரு கண்களானால், திருமந்திரம் காட்டும் வழிபாடு ஆகிய தலைப்புகளில் அமைந்த 34 பலவினக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இவரது ஐந்தாவது நூல் 2013இல் Wijey Publication என்ற இவரது சொந்த வெளியீட்டகத்தினால் 135 பக்கங்களுடன் வியக்க வைக்கும் பிரபஞ்சம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 2013இலிருந்து 2016இல் வெளிவந்த இறுதி நூல்வரை தனது பதிப்பகத்தின் வாயிலாகவே நூல்களை வெளியிட்டுவந்தார். பிரபஞ்சம் என்னும் பெருவெளியுலகத்தில் விளங்கும் சூரியன் முதலான விண்மீன்களைப் பற்றியும், கோள்கள், பால்வெளிப்பாதை, கருங்குழித் திரட்டு என்பதான பல்வேறு அறிவியல் விளக்கங்களையும் ஒருசேரத் தேடித் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார்.  கதிரவன் மண்டலம் (சோலர் சிஸ்டம்)அன்றும் இன்றும், பிரபஞ்சம் (யுனிவேர்ஸ்), விண்மீன்கள் (ஸ்டார்ஸ்), சூரியன் (சன்), நிலாக்கள் (மூன்), புதன் கோள் (மேர்க்குரி), சுக்கிரக்கோள் (வீனஸ்), பூமிக் கோள் (ஏர்த்), செவ்வாய்க் கோள் (மார்ஸ்), வியாழக்கோள் (ஜூப்பிட்டர்), சனிக்கோள் (சட்டர்ன்), விண்மக்கோள் (யுறெனஸ்), சேண்மக்கோள் (நெப்டியூன்), சேணாகக் கோள் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கு அப்பால், வான் கங்கை (கலக்சி), நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளிபெற்றுப் பவனிவரும் ஒரு புதிய கோள், உசாத்துணை நூல்கள் என 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

கா.விசயரத்தினம் அவர்களின் ஆறாவது நூல் 2014இல் பல்வேறு பயன்தரும் பனைமரம் என்ற தலைப்புடன் வெளிவந்திருந்தது. உள்ளடக்கத்தைப் பொருத்தமாகப் பிரதிபலிக்காத இந்நூலின் தலைப்பு அதனை உரிய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கத் தவறிவிடுமே என்று அவருடன் தொலைபேசியில் சுமார் ஒரு மணிநேரம் விளக்கவுரை வழங்கிய பசுமை நினைவுகள் இப்பொழுது என் மனதில் நிழலாடுகின்றன. 212 பக்கங்களில் வெளிவந்த இந்நூல், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் 1937இல் எழுதிய ‘பனைமரம்” போன்றதோ, 1977இல் க.சி.குலரத்தினம் எழுதிய ‘பனைவளம்” போன்றதோ, 2003இல் மு.பாக்கியநாதன் எழுதிய ‘பனையியல்” போன்றதோ அல்ல. வழமைபோல 24 இலக்கியக் கட்டுரைகளே இதிலும் அடக்கம். இருப்பினும் முதலாவது கட்டுரை ‘பல்வேறு பயன்தரும் பனைமரம்” என்பதாக அமைந்ததால் நூலுக்கு மணிமேகலைப் பிரசுரத்தினர் அத்தலைப்பினை வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நூலில் சங்க இலக்கியங்களில் விலங்குகளும் பறவைகளும், தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்துள்ள 14 வகைக் கருப்பொருட்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்-அகநானூறு-சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண்-பெண் பேதம் பேசும் தமிழிலக்கியப் பாங்கு, உலக அரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணங்கள், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனிதநேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியஞ்சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்-நரகம்-மறுபிறப்பு: கற்பனையா நிஜமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகிய 24 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

காலத்தை வென்ற காவிய மகளிர் என்ற நூல் நுணாவிலூராரின் ஏழாவது நூலாக 2015இல் 180 பக்கங்களில் வெளிவந்தது. இக்காலத்தில் தான் இவரது வாழ்க்கைத் துணைவியாரின் பிரிவையும் இவர் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்க இலக்கியங்களில் காணப்பெற்ற பண்டைத் தமிழ் மகளிர் பற்றிய பெருமைபேசும் நூலாக இது அமைந்துள்ளது. மகாபாரத மங்கா மாண்புடை மகளிர், தொல்காப்பிய மகளிர், சிலப்பதிகாரத்தில் பவனிவரும் மகளிர், மணிமேகலையில் தோன்றும் மகளிர், சீவக சிந்தாமணியில் உலாவும் மகளிர், வளையாபதியில் வளையல் அணிந்த வனிதையர், குண்டலகேசி நூலின் கதாநாயகி குண்டலகேசி, கம்பராமாயணம் காட்டும் அரச மகளிர், பண்டைப் பாடல் பாடிய பெண்பாற் புலவர், பெண்பெருமை பேசும் சங்க இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் பேசும் பெண் கூந்தற் பெருமை, ஆகிய பதினொரு ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் தனது இறுதி நூலான சங்ககாலத் தமிழர் வாழ்வியல் என்ற நூலை 2016இல் வெளியிட்டிருந்தார். 160 பக்கம்கொண்ட இந்நூல் தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச் சுவை பற்றியும் பிற சங்ககாலத் தமிழ் நூல்களின் சிறப்புகள் பற்றியும்  பேசும் 13 கட்டுரைகளைக் கொண்டது. சங்ககாலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், கைக்கிளை, பெருந்திணை என்று ஏராளமான விடயங்கள் இந்நூலில் எளிமையான நடையில் வாசித்து வியக்கமுடிகின்றது. அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள், மகளிர் மாண்பை மேம்படுத்திச் சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர், சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மடலேறும் தலைவன், பண்டைத் தமிழரின் திருமணங்களும் பந்தி போசனமும், சங்க இலக்கியங்கள் காட்டும் பிரிவொழுக்க முறைகள், தலைவன் தலைவியர் உடன்போக்குக் காட்டும் சங்ககால இலக்கியங்கள், வாழ்வியல் வாய்ப்புக்கு வழி சமைத்தோர், களவழி நாற்பது விளக்கும் மறமேம்பாடு, புத்துணர்வும் புதுவாழ்வும் பேசும் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம், கதை கண்டே காப்பியங்கள், மக்கள் வாழ்வியல் பேசும் சீவகசிந்தாமணி, சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும், தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும் எனப் 13 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அமரர் கா.வி. அவர்களின் இலக்கியத் தேடலுக்குக் களம் அமைத்துத்தந்த இலக்கிய அமைப்பாக பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் Eelavar Literature Academy of Britain (ELAB)  விளங்கியுள்ளது. நல்ல கலை இலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் 2006இல்  லண்டன் கொலிண்டேல் பகுதியில் உருவாக்கப்பட்டது தான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். இதன் உருவாக்கம் முதல் இவ்வமைப்பின் தலைவராக பேராசிரியர் கோபன் மகாதேவா பணியாற்றிவருகிறார். எழுத்தாளர்களின் ஒருங்கிணைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக பூந்துணர் என்னும் நூலாக வெளியிட்டு வந்துள்ளனர். முறையே 2007, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் நான்கு பூந்துணர் தொகுப்புகளை இவ்வமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இவை அனைத்திலும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களது ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள நூல்களில்; பூந்துணர் தவிர்ந்த அனைத்து நூல்களும் நூலகம் இணையத்தில் எவரும் பார்வையிடக்கூடியதாகத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் எம்மை விட்டுப் பிரிந்தாலும் சங்க இலக்கியம் தொடர்பான அவரது எளிமையான கட்டுரைகள், சங்கத்தமிழரின் விஞ்ஞான வளர்ச்சியும் பெருமையும் பிரதிபலிக்கப்படும் கட்டுரைகள் என அவர் விட்டுச்சென்ற படைப்புக்கள் எம்மை அவருடன் இணைத்து வைத்திருக்கும்- காலாதி காலமாக.

noolthettam.ns@gmail.com