[எழுத்தாளர் முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட ‘இலக்கியப் பூக்கள் (பகுதி ஒன்று; 2009) ‘ நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம். பதிவுகளில் ஏற்கனவே பிரசுரமான கட்டுரையிது. தற்பொழுது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.]
அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைமாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.
அ.ந.கந்தசாமியின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்…
அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். யாழ் சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வின் பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.] இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.
அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.
மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரிய முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க.. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது ‘மறுமலர்ச்சி’ என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் ‘மறுமலர்ச்சி’ அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.
அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன.
சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்லர். ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது ‘ஓப்பியல் இலக்கியம்’ என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.
அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்….
அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.
இவரது சிறுகதைகள் பற்றித் தனது ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்’ நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் ‘இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், – ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய நாயிலும் கடையர் – மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று…. அத்துடன் வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் – தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்’ என்று கூறுவது கவனிக்கத் தக்கது.
அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..
கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது ‘வில்லூன்றி மயானம்’ என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.
‘சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். ‘எதிர்காலச் சித்தன் பாட்டு’, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை’ என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான ‘சிந்தனையும், மின்னொளியும்’ நல்லதொரு கவிதை. ‘ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் – என்சோரநாயகன்’ என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் “சாகித்திய மண்டலத்தின் ‘பா ஓதல்’ கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. ‘கடவுள் என் சோர நாயகன்’ என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. ‘நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?’ என்றார் கந்தசாமி” என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.
அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்….
அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’ தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது. (ஆயினும் இந்நாவலின் அத்தியாயம் முப்பதினைக் கண்டெடுக்க முடியவில்லை. இந்த அத்தியாயமில்லாமலே பதிவுகள் இணைய இதழில் மேற்படி நாவல் வெளிவந்தது..) இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை ‘நாவல்’ பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் ‘களனி வெள்ளம்’ என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.
அ.ந.க. தாஜ்மகால் பற்றிய ‘கடைசி ஆசை’ , ‘அமர வாழ்வு’ போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்பட்டுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய ‘மதமாற்றம்’ என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் ‘இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும். இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த ‘ராதா’ என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் ‘எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்’ என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. இது பற்றிய விமர்சனக்கட்டுரையொன்றினை ஆங்கில ஏடான ‘ட்ரிபியூ’னில் இலங்கையின் பிரபல இலக்கியத் திறனாய்வாளர்களிலொருவரான கே.எஸ்.சிவகுமாரனும் எழுதியிருக்கின்றார்.மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது ‘டெய்லி மிரர்’ விமர்சனத்தில் அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.
அ.ந.கவும் உளவியலும்…
“வெற்றியின் இரகசியங்கள்” என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார்.
அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்…..
1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீலங்கா’ இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் ‘நானா’ (நாவல்) , பெர்ட்ராண்ட் ரசலின் ‘யூத அராபிய உறவுகள்’, ‘பொம்மை மாநகர்’ என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். இவையெல்லாம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் படைப்பாளிகள் இவை பற்றிய தகவல்களை எமக்கு அறியத் தந்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம்.
எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ‘ நானா’ நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா ‘நானா’ பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் ‘”நானா” கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்’ என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பலர் ‘நானா’ பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய ‘கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்’ என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
அ.ந.க. என்றொரு விமர்சகர்….
சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்’ என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோம். இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!
சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர ‘சங்கீதப் பிசாசு’ என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட ‘கண்மணி’ என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. பின்னர் ‘கண்மணி’ நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் ‘சிரித்திரனில்’ வெளிவந்ததாகச் சிரித்திரன் ஆசிரியர் அவருடனான உரையாடலொன்றின்போது குறிப்பிட்டதாகவொரு நினைவு. இது பற்றிய தேடலினையும் தொடங்க வேண்டும்.
அ.ந.க.வின் உரைநடை…
அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் ‘ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்’ “இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்.” என்று குறிப்பிடும்.
வானொலியில் அ.ந.க….
இலங்கை வானொலியின் “கலைக்கோல” நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசனங்கள், “உலக நாடகாசிரியர்கள்” பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக ‘மொழிபெயர்ப்பு நாடக’மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.
இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.
செயல் வீரர் அ.ந.க!
அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். ‘வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்’ என்று தனது ”ஈழத்துச் சிறுகதை மணிகள்’ நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன. இது பற்றிய அந்தனி ஜீவாவின் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்’ ”வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.” என்று பதிவு செய்யும்.
மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:
“பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. ‘தேசாபிமானி’யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.”.
அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!
“‘மக்கள் இலக்கியம்’ என்ற கருத்தும் ‘சோஷலிஸ்ட் யதார்த்தம்’ என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன” எனத் தனது பிரசித்தி பெற்ற ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:
“எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.
மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். “இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.
பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை….உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.”
‘தேசாபிமானி’யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி ‘போர்ச்சுவாலை அமரச் சுடராகியது’ என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.
இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க. பற்றிய போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அ.ந.க. “ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் – புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்” என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் “இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா“வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை “அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்” என்றும் வெளிப்படுத்துவார்.
அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த ‘தமிழமுது’ என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது ‘அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்’ என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் “அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்…. ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? ‘தமிழமுது’ அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது.” என்று சாடியிருப்பார்.
இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.
நன்றி: பதிவுகள் ஏப்ரில் 2009 இதழ் 112