அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.
(1) இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர், என்பன கலந்ததொரு மயக்கமான சூழ்நிலையில் இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் பின்வரும் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும்.
‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.’
– (தொல். பொருள். மரபியல் – 635)
உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்கலந்த மயக்கமாதலான், மேற்கூறப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழுவுதல் இல்லாமல், திரிவுபடாத சொல்லோடு தழுவுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.
(2) புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிற்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர் இருந்த காலமது. இந்நிலையிற்றான் இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜெகதீஸ் சந்திர போஸ் (Jegadish Chandra Bose, கி.பி.30.11.1858- 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றுக்கொண்டார். இதன்பின்புதான் மக்களும் அவைகளுக்கு உயிர் உண்டென்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்.
ஆனால் இதற்கு இரண்டாயிரத்து ஐந்து நூறு (2,500) ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார் தாவரத்தின் உயிர், உணர்வு, அறிவு பற்றியும், மற்றைய உயிரினங்களின் அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்துள்ளார். அதில் பின்வரும் சூத்திரத்தில் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் ஆகிய ஆறு வகையான உயிரினங்களில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் அடக்கிக் காட்டப்பட்ட சீரினையும் காண்கின்றோம்.
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.’ – (பொருள். 571)
ஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது என்றும், ஈரறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும் அறிவது என்றும், மூவறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும், மூக்கினாலும் அறிவது என்றும், நாலறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது என்றும், ஐந்தறிவு உயிரானது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது என்றும், ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது என்றும் தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வண்ணம் உயிர்கள் ஆறு வகை ஆயின.
மேலும் தொல்காப்பியர் ஓரறிவிலிருந்து ஆறறிவுக்குரிய உயிரினங்களின் பெயர்ப் பட்டியலையும் தனித்தனியே வகுத்துத் தந்துள்ள சூத்திரச் சிறப்பினையும் பார்ப்போம்.
1. ஓரறிவு உயிர்கள்
‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (பொருள். 572)
2. ஈரறிவு உயிர்கள்
‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (பொருள். 573)
3. மூவறிவு உயிர்கள்
‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (பொருள். 574)
4. நாலறிவு உயிர்கள்
‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ — (பொருள். 575)
5. ஐயறிவு உயிர்கள்
‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ — (பொருள். 576)
6. ஆறறிவு உயிர்கள்
‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ — (பொருள். 577)
புல், மரம், கொட்டி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவு உடையனவென்றும் நண்டு, தும்பி, ஞிமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக்கர் முதலாயினார் ஆறறிவு உயிர்களென்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர். இவற்றை உற்று நோக்கின், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற அறிவியற் துறைகள் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.
புறநானூறு
(1) கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii) வானையும், (iii) காற்றையும், (iv) நெருப்பையும், (v) நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.
‘மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்…..’ (புறம். 2: 1-6)
இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்த நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.
(2) சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க் காணும் புறநானூற்றுப் பாடலில் ‘செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைச் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்’ என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.
‘செஞ்ஞா யிற்றுச் செலவும்,
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே….‘ – (புறம். 30: 1-7)
அகநானூறு
கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் ‘தோழி வாழ்வாயாக! நான் கூறுவதையும் கேட்பாயாக! மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்திலே, சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி, உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடு இரவில், அதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாள் இரவில், வீதிகளிலே விளக்கு வைத்து, மாலைகள் தொங்கவிட்டுப் பழமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவார்கள்…’ என்று சங்கப் புலவர் நக்கீரர் ஒரு சிறந்த பாடலைத் தந்துள்ளார்.
‘அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
………………………………………………………..
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
…………………………………………………………………’ – (அகம். 141: 1, 6-11)
திருக்கார்த்திகைத் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் அன்றைய மக்கள் மத்தியில் நிறைந்திருப்பதை எம்மால் உணரமுடிகின்றது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் அண்மித்திருக்கும் நாளைத் திருக்கார்த்திகை நாள் என்று விழாவெடுத்துக் கொண்டாடினர். இதில், ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை என்று விண்வெளி அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.
பதிற்றுப்பத்து
கடைச் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் அறிவியல் பற்றிய செய்திகள் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதையும் காண்போம்.
(1) நிலம், நீர், காற்று (வளி), வானம் (விசும்பு) ஆகிய நான்கினதும், விண்மீன்கள் (நாள்), கிரகங்கள் (கோள்), சந்திரன் (திங்கள்), சூரியன் (ஞாயிறு), பெருநெருப்பு (கணை அழல்) ஆகிய ஐந்தினதும் அளப்பரிய பேராற்றல்களைச் சங்கப் புலவர் குமட்டூர்க் கண்ணணார் சிறந்ததொரு பாடலை இரண்டாம் பத்தில் தந்துள்ளார்.
‘நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; ….’- (14: 1-4)
(2) இனி மூன்றாம் பத்தில் சங்கப் புலவரான பாலைக் கௌதமனார் பாடியுள்ள ஒரு சீரிய பாடலையும் பார்ப்போம். நீண்ட தொலைவிலுள்ள வானத்திலிருந்து ஒளிவிடும் மின்னல் வெளிச்சம் விண்ணிலும் மண்ணிலும் பரவி நிற்பதாகவும், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் ஆற்றல் பற்றியும், ஒளி வீசிக் கொண்டு வானில் கதிரவன் சுடர்பரப்ப, அதற்குச் சற்று வடக்கேயுள்ள சிறப்புமிகு வெள்ளிக்கோள் என்னும் சுக்கிரன், பலன் தரும் மற்றக் கோள்நிலைகளும் பொருந்தி நிற்கையில் நல்ல மழை பொழியும் என்று கூறப்படுகின்றது.
‘நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு
………………………………………………………………………
நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்
………………………………………………………………………..
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,
கலிழும் கருவியொடு கை உற வணங்கி….’ – (24: 1, 15, 23-26)
வெள்ளிக் கோள் வடக்கே தோன்றினால் நல்ல மழை பொழியும் என்பது ஒரு வழக்காகும். வானம், மின்னல், வெளிச்சம், விண், மண், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், கதிரவன், சுக்கிரன், மழை ஆகிய இயற்கை வளங்களைத் தொட்டுச் செல்லும் புலவர் ஆகாயத்தில் பறந்து திரியும் ஒர் அற்புதக் காட்சியை நம் முன் வைத்துச் சென்றுள்ளார்.
பரிபாடல்
கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் அறிவியல் பேசும் பாங்கினை நல்லெழுநியார் என்னும் புலவர் யாத்த ஒரு பாடலில் காண்போம். ‘சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்று உரைக்கப்படும் ஐந்தான அவையும் நீயே யாவாய்! இசைமை எனப்படும் முதலான ஓசையால் அறியப்படும் வானமும் நீயே! ஓசை, ஊறு என்னும் இரண்டானும் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை, ஊறு, ஒளி என்னும் மூன்றானும் உணரப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கானும் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தானும் முற்ற உணரப்படும் நிலனும் நீயே! என்று திருமாலைப் போற்றுகின்றார்.
‘…………………………………………….
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
……………………………………………
ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
இரண்டி னுணரும் வளியும் நீயே!
மூன்றி னுணரும் தீயும் நீயே!
நான்கி னுணரும் நீரும் நீயே!
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!…….’ – (பாடல் 13: 14, 18-22)
விசும்பும், வளியும், தீயும், நீரும், நிலமும் ஆகிய இயற்கையான ஐம்பொறிகளும் இங்கேயும் பேசப்படுகின்றன.
ஐங்குறுநூறு
இந்நூலின் பின்வரும் கடவுள் வாழ்த்தைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனும் கடைச் சங்கப் புலவர் பாடியுள்ளார்.
‘நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழல்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே.’
நீலநிற மேனியையும் தூய அணிகளையும் உடைய உமையவளைத் தன் உடலில் ஒரு பாகமாய்க் கொண்ட ஒப்பில்லாத சிவபெருமானின் இரண்டு திருவடிக் கீழ் மூன்று வகைப்பட்ட உலகங்களும் நிலை பெற்றுள்ளன. மூவகையுலகு என்பது மேல், நடு, கீழ் என்பனவாம். அவைதான் விண், மண், பாதலம் ஆகும். பரம்பொருளிலிருந்து வானம் தோன்றியது, வானத்திலிருந்து காற்றுத் தோன்றியது. காற்றிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து நீர் தோன்றியது. நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிலர் உரைப்பர். இங்கே ஐம்பூதங்களின் பரம்பொருளையும் காண்கின்றோம்.
சிலப்பதிகாரம்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ‘திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று பரந்த வானியல் பேசப்படுவதையும் காண்கின்றோம். இங்கே இயற்கையான சந்திரனையும், சூரியனையும், மாமழையையும் ஒரே நேரத்தில் ஏற்றிப் போற்றும் இலக்கிய மேதை இளங்கோவடிகள் விண்வெளி பேசும் விஞ்ஞானியாய் விண்ணில் பறந்து திரிவதையும் உற்று நோக்கிப் பார்க்கின் தெளிவாகும்.
முடிவுரை
இதுகாறும் தொல்காப்பியத்தில் நிலம், ஆகாயம், தீ, நீர், காற்று ஆகிய ஐம்பூதங்கள் பற்றியும், தாவரத்தின் உயிர், உணர்வு பற்றியும், மற்றைய உயிரினங்களின் அறிவு, உயிர், உணர்வு பற்றியும், ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள உயிரினங்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும், புறநானூற்றில் நிலனையும், வானையும், காற்றையும், நெருப்பையும், நீரையும் உலகம் கொண்டுள்ளது பற்றியும், ஞாயிற்றின் வீதியும், இயக்கமும், இயக்கத்தால் சூழும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானம் ஆகியவை பற்றியும், அகநானூற்றில் ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை ஆகியவை பற்றியும், பதிற்றுப்பத்தில் விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன், ஞாயிறு, நெருப்பு மின்னல், வெள்ளிக்கோள் ஆகியவற்றின் ஆற்றல் பற்றியும், பரிபாடலில் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்பன பற்றியும், ஐங்குறுநூற்றில் விண், மண், பாதலம் ஆகிய மூவுலகு பற்றியும், சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், மாமழை என்று பரந்த வானியல் பற்றியும் பேசப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம்.
சங்க இலக்கியங்களில் இலக்கியம் மட்டும்தான் உள்ளது என்று கூறமுடியாது. அவற்றில் அறிவியல் சார்ந்த விடயங்களும் நிறைந்துள்ளன என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகம் நவீனமயமடைந்த வண்ணமுள்ளது. எனவே அறிவியல் சார்ந்த கல்வி மிக முக்கியம் வேண்டற்பாலது. தனி இலக்கியங்களைவிட அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பெரும் பயனை நல்கும்.
சில இலக்கியங்களில் அறிவியலும் கலந்திருப்பது உண்மை. இதற்கு மேற்காட்டிய நூல்கள் சான்றாகும். இவற்றை இலக்கியக் கண்கொண்டு படித்தால் இலக்கியம் முன்வந்து நிற்கும். அதை அறிவியற் கண்கொண்டு பார்த்தால் அறிவியல்தான் முந்திநிற்கும். எனவே இலக்கியமும், அறிவியலும் சமநிலையில் அமைவது சாலச் சிறந்ததாகும்.
காலத்தால் மூத்த இலக்கிய, இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல் சார்ந்த செய்திகளையும் புகுத்தி முதற் காலடியெடுத்து வைத்த பெருமை தொல்காப்பியனாரைச் சாரும். இவரைத் தொடர்ந்து பின்னெழுந்த சங்க இலக்கிய நூல்களிலும் அறிவியற் செய்திகள் பரந்து செறிந்துள்ளதையும் காண்கின்றோம். அறிவியல் சார்ந்த இலக்கியங்களின் வாழ்நாள் மிக நீண்டதென்பதும் தெளிவாகின்றது. மேற் காட்டிய நூல்கள் இதற்குச் சான்று பகரும். எனவே அறிவியலை முன்னிலைப்படுத்தி அதனால் வரும் பயனை ஏற்று எம் வாழ்வியலை மேம்படுத்தத் திடசித்தம் கொள்வோமாக!