டென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி… நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.
அலன் தர்மன் மட்டுமா.. உயர்கல்வியில் ஈழத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையில் சிகரங்களைத் தொட்டவர்களின் பட்டியலை எழுதப்புறப்பட்டால் பக்கங்கள் போதாது… வானைத் தொடுகிறது உயர்வு. இவர்களைப்பற்றி எழுத முற்பட்டபோது செவிக்குக் கிட்டிய செய்தி அலன் தர்மன் என்ற இளைஞர் டென்மார்க்கின் புகழ்பெற்ற நோவா நோடியா நிறுவனத்தின் நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிர்வாக இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியாகும்.. அவர் அந்த உயர்பதவியை பொறுப்பேற்க மேலும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அவரை உற்சாகப்படுத்த இந்த ஆக்கம் எழுதப்படுகிறது. இவருடைய நோக்கும் போக்கும் வித்தியாசமானது.. தமிழ் மக்கள் தமக்கு பெருமையும், சிறப்பும் தரும் என்று கருதும் கல்வி முறைகளில் இருந்து மாறுபட்டு, சற்று வித்தியாசமாக பொருளியல் துறையைத் தேர்ந்தெடுத்து இன்று சிகரங்களைத் தொட்டுள்ளார். பொருளியல் துறையில் உயர்கல்வி கற்று பல சாதனைகளைப் புரிந்து கடந்த 2009 முதல் 2014 வரை ஸ்கன்டிநேவிய நாடுகளில் புகழ்பெற்ற ஐசிஜி நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தார்.. நவீன வர்த்தக தொடர்பாடல் நெறியில் உயர் பதவியில் பணியாற்றினார். ஐசிஜியின் ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கான சர்வதேச வர்த்தக விரிவாக்க ஆலோசகராக பணியாற்றும் காலத்திலேயே டென் டென்ஸ்க வங்கியின் பொருளாதார விரிவாக்க ஆலோசனைப் பகுதியிலும் பணியாற்றினார். அதுவரை அவர் தொட்ட சாதனைகள் பல ஆனால் தமிழ் ஊடகங்களுக்கு அவை எட்டியதில்லை.. இப்போது தனது பொருளாதார அறிவியலின் அடுத்த கட்டமாக டென்மார்க்கிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நோவா நோடிஸ்க் நிறுவன நிர்வாகியாக பதவி நியமனம் பெற இருக்கிறார். எதிர்வரும் 7ம் திகதி பதவியேற்கிறார்.. கடந்த 2007ம் ஆண்டு எப்.ஐ.எச் வங்கியின் பரிசை பெற்றிருக்கிறார்…
நோவா நோடிஸ்க் சிறந்த தளமாக இருக்கிறது, ஆற்றலை மூலதனமாக்கி உயரப்பறப்போர்க்கு சிறந்த ஓடுபாதையாகவும் அது இருக்கிறது. காரணம் நோவா நோடிஸ்க் பல பில்லியன் குறோணர் ஏற்றுமதி வர்த்தகத்துடன் தொடர்புடைய தாபனமாகும். சமீபத்தில் அமெரிக்காவிற்கான இதனுடைய இன்சுலின் ஏற்றுமதி வருமானம் 23 பில்லியன் குறோணர்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. உலகத்தின் அதிக வருமானம் தரும் ஒரு நிறுவனத்தில் தமிழன் ஒருவன் அதி உயர் பதவியில் அமர்வது நாம் முன்னர் சொன்ன எண்ணங்களை வெற்றிகொள்ள துணையாக அமையும். அதற்கான எத்தனங்களும் இவரிடம் இருக்கிறது, ஆகவேதான் அவரைக் கூர்ந்து நோக்குகிறது இந்த ஆக்கம்.
இப்படி பெரிய பதவிகளை வகித்த பலருடைய வாழ்வு தாயகத்திற்கு பயனில்லாமல் போய்விட்டது.. நமது ஆக்க சக்தி தாயகத்திற்கும் பயன்படாவிட்டால் அது காட்டில் எறித்த நிலவாகிவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..? அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டு டென்மார்க் நிறுவனங்களின் முதலீட்டை வடக்கே கொண்டு செல்லவும் முயன்றுள்ளார்… யாழ். முதல்வருடன் பேச்சுக்களை நடாத்தி அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பாரிய திட்டமொன்றை வரைந்துள்ளார். அந்தக் கனவை நிஜமாக்குவதே இவருடைய அடுத்த கனவாகும்.
இலங்கைத் தீவில் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக தமிழினம் மாற வேண்டும், அதனுடைய உயர்வுக்கு அத்தகைய முயற்சிகள் அவசியம்.. யாழ் பருத்தித்துறையில் அமையவுள்ள டென்மார்க்கின் பொருளாதார மையம் ஒன்று தொடர்பாக வடக்கேயுள்ள தலைவர்களை சந்திக்க விரைவில் செல்லவுள்ளார்… எட்டுத் திக்கும் சென்றிடுவீர் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதி கனவு.. தமிழகத்தை விட இலங்கை தமிழினத்திற்கு சிறப்பாக பொருந்தக் கூடிய நாட்கள் தொலைவில் தெரிகிறது..