முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது. அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன. முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.
பசியை இசையாய் நீ இறக்கிய
வெய்யிற் பொழுதில்
அத்தனைச் சோடிக் காதுகளாலும்
முழுச் செவிடாய்
உன்னைக் கடக்கும்
பெரும் வீதி
தன் மகனைக் கடத்திச் சென்ற சோகம் தாளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட ஒரு தாய்க்கான பாடலாக ஹயாத்தும்மா என்ற கவிதை இருக்கிறது. கீழுள்ள வரிகள் மூலமாக அந்தத் தாயின் துயர் நிரம்பிய இதயத்தை தரிசிக்க முடிகிறது.
நீ நெய்த கனவுகள்
நெய்தல் அலைகளில் கரைந்து அழிகையில்
உன்னால் எய்த முடிந்தது
மரணம் மட்டுமாயிற்று
மனிதர்கள் தனக்குக் கிடைத்தவற்றையிட்டு ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. எதைப் பெற்றாலும் அதைவிட சிறந்ததைப் பெறுவதற்கே மனம் அலைவதுண்டு. அதை கருத்தாகக்கொண்டு முரண் வாழ்வு என்ற கவிதை பிறந்திருக்கிறது. அழகிய உவமானமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை, மனித நிலை பற்றி விளக்குவதாக இருக்கின்றது.
குளத்து மீனுக்கு
தூண்டிலும் வலையுமான
அடக்கு முறைக்குள் சிக்காது
கண்ணாடிப் பளிங்குத் தொட்டியில்
வாழும் விருப்பம்
தொட்டி மீனுக்கோ
இன்னது இன்னதென்று எழுதிய
செயற்கை இருப்பின்
சொகுசுச் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு
குளத்தில் நீந்தவே ஆசை
என் வீட்டு மழை என்ற கவிதை ரசிக்கத்தக்கதாகும். மழைக் காலத்தில் நனையாமல் இருந்த எமது சிறுவயதுப் பொழுதுகள் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அந்த அழகிய நாட்களை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது. கவிதையின் கடைசி வரிகள் யதார்த்த வாழ்வை சுட்டிக்காட்டுவதாயும் இருக்கிறது.
பழைய வீட்டுக் கொப்பி
விதவிதமாய் கப்பலாகும்
என் கப்பல்கள் கரையேறுவதெப்படி
நான்கு குமர்களோடு உம்மா இருப்பாள்
முல்லை முஸ்ரிபா அவர்கள் ஆசிரியராக இருப்பதினால் மாணவர்களின் சுமைகள் பற்றி உளப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கின்றார். பிள்ளைகளை படி என்று சொல்கின்றோம். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான துறையில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வைத்தியர், பொறியிலாளர் என்ற வரையறைக்குள் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வலுக்காட்டாயமாக திணிக்கப்படுகிறது. விளைவு, சிலர் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்? கல் தெப்பம் என்ற கவிதையில் ஒரு மாணவனின் மேற்சொன்ன துயரங்கள் கீழுள்ள வரிகளாக…
இதயத்தை தோண்டியெடுத்துவிட்டு
அதனிடத்தில்
ஏதோவொன்றைத் திணிக்கிறீர்கள்
எனதான இலக்குகளை வரையவும்
இலக்கு நோக்கி பறக்கவும் முடியாதபடி
இறக்கைகளைப் பறிக்கிறீர்கள்
எத்தனைப் பிரச்சினைகள் மனதை வாட்டிய போதிலும் மழலையின் மொழி கேட்டால் அவை தூரமாகிவிடும். பெண் என்பவள் போற்றப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தாய்மையும் குறிப்பிடப்படுவது இதனால்தான். பெற்றோர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு பிள்ளைகள் என்கிறோம். அத்தகைய குழந்தைச் செல்வங்களைப் பற்றியதாக நிலவு துளிர்த்து அமாவாசை கருகி என்ற கவிதை காணப்படுகிறது.
செல்லமே நீ காலுதைக்கவும்
மென்பூச் சிரிப்புதிர்க்கவுமான
வினாடிகளில் மனசு மீளவும்
எல்லையில்லாப் பெருவெளியாய்
விரிகிறது
உள் முகங்கள் என்ற கவிதை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிதர்சனத்தை சொல்லி நிற்கின்றதை அவதானிக்கலாம். மாலை அயர்வில் தேனீர் சுவையாக இருக்கின்றது. சோர்வும் பறக்கின்றது. எனினும் தேயிலைத் தோட்டத்தில் உச்சி வெயில் கொடுமையில் பறிக்கப்பட்ட தேயிலையின் வாசம் தொண்டை வழியால் உள்ளிறங்குகிறது. மீண்டும் முகத்தில் அயர்வின் சாயல் படர்கின்றது என்கிறார் நூலாசிரியர்.
சாறாய்ப் பிழிந்த
உழைப்பின் சக்கை
துயராய்க் கசிகிறது
என் கோப்பைக்குள் இறங்குகிறது
வாழ்தலின் யதார்த்தம்
வவுனியா அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை இருள்வெளியும் நாளைய சூரியனும். யுத்தம் விட்டுப்போன எச்சங்களாக வாழ்ந்துகொண்டே மரணத்தை அனுபவிக்கும் அந்த மக்களுக்காக தனது துயரை பதிவு செய்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா அவர்கள். இருளிடம் கையேந்திப் பயனில்லை. சூரியனும் கருகிற்று. காற்றும் அசுத்தமாகிக் கிடக்கின்றது என்றவாறு புறச் சூழலை விபரித்து, இந்த வரிகளின் வழியே அங்குள்ள மக்களின் துயரை துல்லியமாகக் கூறுகின்றார்.
படர்வுறும் முட்கம்பிச் செடி
கிளைப்பதில்லை துளிர்ப்பதில்லை
காய்ப்பதில்லை கனிவதுமில்லையெனின்
குயிலாய்க் கூவித் தோப்பாகும்
கனவுகளுமற்றுப் போக
குரல் கிழிந்து தொங்குகிறது
முட்கம்பி வேலிகளில்
எனது தமிழ்ப்பாட ஆசானாக விளங்கிய இக்கவிஞரின் தொகுதிக்கு எனது குறிப்பை எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது இலக்கியத்தேடல் பற்றி சொன்னபோது, அந்த ஆவலை தன் எழுத்துக்கள் மூலமும், உற்சாக வழிகாட்டுதல் மூலமும் எனக்குத் தந்த நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கு இதனூடாக நன்றி நவில்தலை மேற்கொள்வது எனது கடமையாகிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் – அவாவுறும் நிலம் (கவிதைகள்)
நூலாசிரியர் – முல்லை முஸ்ரிபா
வெளியீடு – வெள்ளாப்பு வெளி
விலை – 200 ரூபாய்