– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கவிதைகள் மீள்பிரசுரமாகின்றன. –
1. எதிர்காலச் சித்தன் பாடல்!
எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
“எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க” என்றான்.
அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
‘செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்” என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.
“எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.
வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
“பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே”
அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.
அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.
செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.
நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும் மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார்.
பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.
புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
“எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.
காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?
ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?
2. அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!
1.
சட்ட மென்னும் கருங்கல்லால்
சமைத்த சிறைவீ டிதுவாகும்
சட்டம் சரியோ பிழையோ நான்
சாற்றவறியேன் அறிவதெலாம்
கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு
கருங்கற் சுவரும் பலமாகும்
மற்றதெல்லாம் எற்றுக்கு
மனதே வீணில் அலைவதுமேன்?
2.
சிறைவீ டென்று கூறிவிட்டால்
சிறியோர் தாமோ அங்கிருப்போர்?
நிறைந்த அறிவின் அலைவீசும்
நீலக் கடலே அனையாரும்
திறந்தே இருளைப் பிளந்தொளியை
திக்கிற் சிதற் விட்டோரும்
மறைந்தே உறைந்த ஆலயமாம்
வணங்கற்குரிய கோவிலிதாம்!
3.
கிரேக்க ஞானி சோக்ரரும்
கீழைத்தேச மகாத்மாவும்
உரைக்க வொண்ணா நற் பெருமை
உத்தமரின்னும் பல நூறாய்த்
தரைக்கே உண்மை வழிகாட்ட
தாரணி தோன்றிய நன் மலர்கள்
சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற
சிறுமை உலகம் இதுவன்றோ?
4.
பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்
பேதை நானும் இடம் பெற்றேன்!
அரிதே இந்த அதிர்ஷ்டத்தை
அறிந்த நண்பர் யாவர்க்கும்
விரிவாய் உரைத்து மகிழ்தற்கு
விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!
சரிந்தே உந்தன் சுவரெல்லாம்
சாய்ந்தே ஒழிந்து போகாவோ?
5.
வானின் சிறிய மலர்கள் போல்
வாவும் வண்ணப் பறவைகளை
கான வேடன் கைப்பற்றி
கட்டிக் கூட்டில் இட்டதுபோல்
மானிடப் புள்ளின் சிறகதனை
மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்
நானிலப் புல்லர் கூட்டம்போல்
நாசகாரர் இங்குண்டோ?
6.
பறவை நல்லூன் உணவாகும்
பயனைக் கருதி அடைக்கின்றார்!
கறவைப் பசுவைப் பாலுக்காய்க்
கட்டிவைத்துக் கறக்கின்றார்!
வறிதே மனிதர் கூட்டத்தைச்
சிறையில் வைத்து வளர்க்கின்றார்!
சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்
சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!
7.
களவு செய்தால் சிறையென்று
கனன்றே என்னை இங்கிட்டார்!
களவு களவு என்ப தெல்லாம்
கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே
முழுதும் பெரிய விளையாட்டே
மூடத்தனத்தின் முடிபேயாம்!
களவு களவு என்ற பதக்
கருத்தை நானும் கழறுவனே!
8.
உள்ளவனிடத்தில் இல்லாதான்
உணவின் உடையின் தேவைக்காய்
மெல்லச் சிறிதே எடுத்திட்டால்
மேதினி அதனைக் களவென்னும்!
உள்ளவனிடத்தில் அல்லாமல்
உடைமை யற்றவன் கையிருந்து
இல்லா மனிதன் எடுப்பதற்கு
எங்ஙன் முடியும் இயல்பு வீரே!
9.
இன்னும் கூறுவன் கேளுமினோ!
இல்லாமனிதன் உள்ளவனைப்
பன்னிப் பன்னிக் கேட்டாலும்
பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!
சென்னியில் அடித்துப் பறித்தாலோ
சிவந்த ரத்தம் வீணாகும்!
அண்ணல் காந்தி சொல்லிவைத்த
அகிம்சை வழியே களவாகும்!
10.
கள்வர் கள்வர் எனக்கூறி
கருணையற்றோர் ஏழைகளை
மெள்ள இங்கே தள்ளுகிறார்
மேலாம் செல்வர் பகலினிலே
கொள்ளை அடிப்போர் உலகெங்கும்
குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!
கள்வர் தமக்கே சிறையென்றால்
அவர்க்கே முதலிடம் தருவீரே!
11.
களவு பிடிக்கும் சட்டமெல்லாம்
காசினி வதியும் செல்வர்களே
அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு
ஆக்கி வைத்த தந்திரமாம்!
வளமார் கிளிகள், பறவையினம்
வனத்தில் வதியும் விலங்குகளில்
களவுச் சட்டம் ஒன்றுண்டோ?
கழறும் கவிதை ரசிகர்களே!
12.
சிறையில் உடலைப் பிணித்தாலும்
சிந்தனை சிறகு தீயவில்லை!
முறையாய் நினைவு முழுவதுமே
முழங்கித் தீர்க்கத் தருணமிலை!
சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,
இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்
சிறையே! என்னுளம் கவிதையினால்
சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!
13.
இரும்புக் கம்பிகள் பின்னால் நான்
இருந்து குமையும் வேளைகளில்
இரும்புக் கம்பிகள் எத்தனை யென்
றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!
திரும்பத் திரும்ப எண்ணிடிலும்
திடமாம் கம்பிகள் பதினெட்டே!
திரும்பத திரும்ப எண்ணுவதேன்
திடுமெனக் கூடிக் குறையுமென்றா?
14.
கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்
கருமைந் நிழல் படர்ந்துள்ள
நெருங்கும் சந்துகள், மூலைகளில்
நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!
கருங்கற் சுவரின் இடையினிலே
காணும் சிறையே! இவ்வுலகின்
கருங்கல் லிதயத் துறைகின்ற
காரிருள் சின்னம் நீயேதான்!
நன்றி: சுதந்திரன் ஆகஸ்ட் 5, 1951.
3. தேயிலைத் தோட்டத்திலே!
– அ.ந.கந்தசாமி கவீந்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கவிதை. ‘பாரதி’ இதழில் வெளிவந்தது. –
1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! “நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு”மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!
2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!
3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மணஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!
4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!
5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!
4.. முன்னேற்றச் சேனை!
– அறிஞர் அ.ந.கந்தசாமி ‘கவீந்திரன்’ என்னும் புனைபெயரிலெழுதி ‘பாரதி’ இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. –
1.
முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட
மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட
முன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்
முடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது!
பின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்
பீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்!
இன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே
இத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட!
2.
எங்கள் சேனை அச்சமென்பதென்றுமறியாதது.
எட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது!
மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்
மரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே!
எங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து
இவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்
துங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே!
துகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே!
3.
ஒளி மிகுந்த அப்புதிய லோகத் தன்மை கேட்பீரே!
ஒரு வறுமை ஓலமில்லை ஒரு கவளம் உணவிற்காய்
விழுவதில்லை அங்கு மாதர் விபசாரக் குழியுளே!
விளையு நாட்டுத் திறமை ஒன்றும் வீணாய்ப் போவதில்லையே!
அழகு கலை என்பதெல்லாம் ஒரு கூட்டம் செல்வரின்
ஆடம்பர அலங்காரம் அல்ல அங்கு சோம்பலின்
விளைவதன்று மக்களது உயர்ந்த செல்வம் கலை என
விளங்கு மக்கள் வாழுகின்ற புதியலோகம் வாழ்கவே!
4.
அடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்
அங்கெழுந்துமறைந்ததுவே! வியர்வைவெள்ளம் பாய்ச்சித்தன்
உடலதனை எருவதாக்கி விளைவுசெய்து பின்னரும்
உணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே!
படியில் நாடு தம்மிடையே பதுங்கிச் சுரண்டல் என்பது
பழங் கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும்
கடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம்!
காளையீர்! நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!
நன்றி: ‘பாரதி’ சஞ்சிகை.
5. சிந்தனையும் மின்னொளியும்!
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
‘சட்’ டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. ‘ஹேர்’ ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? –
அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.
6. துறவியும் குஷ்டரோகியும்!
காலையிருள் வெளிறிவந்து புலர்ந்த போது
கடல்வரைப்பில் கதிரவனின் ஜோதி தோன்றிச்
சோலையிருள் கடிந்தெங்கும் விளங்கும் போது
சொர்ணவொளிக் கிரணம்திசை பாய்ந்த போது
சாலைவழிச் சன்மார்க்கச் சன்னி யாசி
சகப்பெரியான் புத்தனுரை பேணி வாழும்
மேலனாம் காசியபன் ஓடொன் றேந்தி
மெல்லவடி வைத்துநன்று சென்ற போது
வழியங்கும் விழிநோக்கி இருந்த செல்வர்
வட்டிலிலே உணவுகொண்டு காத்திருந்தார்!
விழிதம்மைப் பக்கலிலே செலுத்தா தன்னோன்
விரைவாகச் சிம்மம்போல் நடந்து சென்றான்!
வழியினிலே ஒர்ஏழை நைந்த ரோகி
வடிவுடலம் குஷ்ட்டத்தால் அழுகித் தொங்கும்
அழிவுடலை தின்னுமந்த ரோகி கண்டு
அன்புமழை பொழிந் திடுதற் கங்குசென்றான்.
ஏழையவன் என்புடலில் உடனே யேதோ
ஓர்முறுக்கு ஏறிவிடக் கண்க ளென்னும்
பாழினிலே ஒளி பாய்ந்து பதுமமாகப்
பதைபதைத்துப் பார்த்தனன் பார்த்த போது
காளையருள் கண்ணொழுகக் கையிலோடு
காட்டி ஊன விரந்ததனைக் கண்டான்! கையில்
பேழையிலே கையை விட்டான் அங்கு சேர்ந்த
போசனத்தைப் பெருக அள்ளி ஓட்டிலிட்டான்!
உணைவையிடும் போதங்கு குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழந்தந்தப்
பீடைதனைக் கண்டனன், கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.
புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவிரு நண்பன் இந்தமுனியிற் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதியஃது போயொழியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.
[ சுதந்திரன் ஜனவரி 14, 1951.]
7. வள்ளூவர் நினைவு!
வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.
பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.
மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
தமாக ல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
னிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
துநல்ல மாற்றமென ங்கெடுத்துச் சொல்வோம்
வர்குறளைக் கைஏந்தி வ்வுலகை வெல்வோம்.
வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் ங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1″உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா”டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.
வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2″வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்” என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் தன் பொருளை ஆவேசத்தோடு
3″தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்” என்றார்.
நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
சைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
சைநூலை நாமிழந்தோம் நாடகமும் ழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.
கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?
நீருண்ட வைபோக ருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு ல்லை வன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.
கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.
செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் ங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.
-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-
8. வில்லூன்றி மயானம்!
நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது.
மக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.
கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம்.
பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புதைத்திடுவோம் வாரீர் வாரீர்.
– தினகரன் 9.11.1944 –
9. நகரம்!
நகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்
பகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்
சகலர்க்கும் ஏதோ இந்த ‘சட்டுப்புட்’ அவசரந்தான்
அகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே!
அப்பப்பா! மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ!
தொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்
சப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று
எப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு?
பெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ? சில்லோர்
கண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்
வண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்
பொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.
ட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்
ட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல
தாமரை முகமொன்றந்த ட்\ராமிலே தளிர்க்க அ·தை
காமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்
ரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்
ஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்
உட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.
கட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே! கூச்சல்தானே!
நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!
காற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்
நூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்
நாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி
தூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்!
சிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார மென்னே!
கற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்
புற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்
கற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்!
செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!
சுதந்திரன் மார்ச் 18, 1951