ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.

நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.

நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.

ஒலெ பூதி –

வீட்டில் அமைக்கப்படும் விறகடுப்பினைப் படகர்கள் ‘ஒலெ’ என்று அழைக்கின்றனர். படகர்களின் தொன்மையான வீடுகளில் இரண்டு அடுப்புகள் காணப்படும். அவர்களின் புனித இடமாக விளங்கும் பாலினை ஊற்றிவைக்கும் ‘ஆகோட்டு’ எனும் பால்மனையில் ஒரு அடுப்பு இருக்கும். பால்மனைச் சார்ந்த சடங்குகளை, அன்றாட வழக்கங்களைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்த அடுப்பினை அவர்கள் அவ்விடத்தின் பெயரோடு இணைத்து ‘ஆகோட்டு ஒலெ’ என்றழைக்கின்றனர். வீட்டிற்கு உள்ளே சமையலறையில் உள்ள உலையினை இவர்கள் ‘இட்டுமனெ ஒலெ’ என்றழைக்கின்றனர். அடுக்களையைப் படகர்கள் ‘இட்டுமனெ’ என்றழைக்கின்றனர். ‘இட்டு’ என்பதற்கு உணவு என்று பொருள். இது குறிப்பாகச் சாமை மற்றும் இராகிக் களியினைக் குறிக்கும். படகர்களின் பிரதான உணவாகக் களி உருண்டைகளே விளங்குகின்றன.

படகர்களின் வீடுகளில் அடிப்படையான, புனிதத்துவம் கட்டமைக்கப்பட்ட பொருட்களுள் அடுப்பும் ஒன்று. அதிகாலையில் எழுந்து குளிக்காமல் இவர்கள் அடுப்பினைத் தொடுவதில்லை. குறைந்தப் பட்டசமாக கைகால் கழுவி, வாய்க்கொப்பளித்தப் பின்பே இவ்வடுப்பினைத் தொடுகின்றனர். ஆனால் பால்மனை அடுப்பினை உரியநாளன்றி மற்ற நாட்களில் தொடுவதில்லை. வாயின் எச்சில் உலையில் சிந்துவதையோ, உணவு உண்ணும்போது எச்சில் படுவதையோ இவர்கள் தவிர்க்கின்றனர். இதில் இறுக்கமான வரைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.

விறகடுப்பு நன்றாக எரிவதற்கு அடுப்பில் மிஞ்சும் சாம்பலினை அகற்றுவது சிறந்த உத்திமுறையாகும். படகர்கள் அடுப்பிலுள்ள சாம்பலை எடுப்பதற்கெனவும் சில வரைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அவ்வகையில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் அடுப்பிலிருந்து சாம்பலினை எடுப்பதில்லை. மற்ற நாட்களில் எடுக்கின்றனர். ஆனால் ஊரில் ஏதேனும் இறப்பு நிகழ்ந்துவிட்டால் சாம்பல் எடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட நாட்களிலும் சாம்பல் எடுப்பதைத் தவிர்க்கின்றனர்.

படகர்கள் செவ்வாய்க் கிழமையினை ‘மங்கவாரா’ என்றும், வியாழக் கிழமையைச் ‘சிக்கவாரா’ என்றும், ஞாயிற்றுக் கிழமையை ‘ஆதிவாரா’ என்றும் அழைக்கின்றனர். இந்த மூன்று நாட்களில்தான் இவர்களின் இறப்புச் சடங்கில் முக்கியமான அங்கம் வகிக்கின்ற ‘கொரம்பு அர்சேது’ என்ற மரபார்ந்த சடங்கினை நிகழ்த்துகின்றனர். எனவே இந்த நாட்களில் இவர்கள் தம் உலையில் உள்ள சாம்பலினை எடுப்பதில்லை. இது இவர்களின் மரபார்ந்த வழக்காறாகும்.

இறப்புச்சடங்கினை வழிப்பாட்டிற்கு இணையான நிலையில் வைத்து மேற்கொள்கின்ற படகர்கள் ஊரில் மரணம் நிகழும்போதும் இழவு நிகழ்ந்த வீட்டினைத்தவிர மற்ற வீடுகளில் உலையில் சாம்பல் எடுப்பதில்லை. இறந்தவரின் சடலத்தை ஓரிரவு வீட்டில் வைத்து, உறவினர்கள் சேர்ந்து துக்கத்தினை அனுசரித்தப்பிறகு மறுநாள் இடவோ, சுடவோ செய்கின்றனர். படகர்கள் இழவு நிகழ்ந்த அடுத்த நாள் சடலத்தினை இல்லத்தைவிட்டு எடுத்துச் சென்றபிறகு ‘காடு உப்பெ கிடு’ என்ற ஒரு வகையான மஞ்சள்நிறப் பூக்கள் பூக்கின்ற செடியினால் வீடு முழுக்க சாணநீர் தெளித்து, பிறகு இழவு வீட்டின் சமையலறையில் உள்ள அடுப்பிலிருக்கும் சாம்பலினை எடுத்து, இறந்தவரோடு இட்டு அனுப்புவதற்கான பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

அடுப்பிலிருந்து சாம்பல் எடுத்து, அடுப்பினை நன்கு துடைத்தப்பிறகு, அடுப்பேற்றி அதன்மேல் இவர்கள் ‘மடக்கெ’ என்று அழைக்கின்ற சமையல் செய்யும் மண்சட்டியை வைத்து, அதனுள் நீர் ஊற்றி, அதில் இவர்கள் ‘கள்ளெ’ என்றழைக்கும் உலர்ப் பட்டாணியை இட்டப்பிறகே மற்ற பொருட்களைச் சமைக்கின்றனர். இச்சடங்கார்ந்து முதலில் மேற்கொள்ளும் செயலாக இது விளங்குகின்றது. குறிப்பாக இச்சடங்கில் வறுத்த வெள்ளை மற்றும் கருப்பு கீரை விதைகள், படகர்கள் ‘துப்பதிட்டு’ என்றழைக்கும் நெய்யில் சுட்ட பணியாரம் போன்றவை முக்கியமாக இடம்பெறும் பொருட்களாகும்.
ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா
இறப்பு நிகழ்வைத்தவிர மற்றநாட்களில் பெரும்பாலும் அதிகாலையிலேயே சாம்பல் எடுக்கும் வழக்கினைப் படகர்கள் கொண்டுள்ளனர். அதுவும் சாமையலறையில் உள்ள அடுப்பிலிருந்து வீட்டின் மூத்தப்பெண்ணும், பால்மனையிலிருக்கும் அடுப்பிலிருந்து அந்தப் பால்மனைக்குள் நுழையும் தகுதிக்கொண்ட வீட்டின் மூத்த ஆணும் சாம்பலினை எடுக்கின்றனர். பால்மனை அடுப்பிலிருந்து எடுக்கப்படுகின்ற சாம்பலினை அதன் புனிதம் கருதி மனிதர்களின் காலடிப்படாத ஆறு போன்ற இடங்கில் கொட்டுகின்றனர். வீடுகளில் இச்சாம்பலினை எடுப்பதற்காகவே ‘பூதிக் கரண்டி’, ‘பூதிக்குக்கெ’ (‘குக்கெ’ என்பது மூங்கில் கூடை) போன்ற புழங்கு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

சமையல் செய்யும் அடுக்களை அடுப்பிலிருந்து எடுகின்ற சாம்பலினைக் கொண்டுச்சென்று தம் விளைநிலங்களில், குறிப்பாக வீட்டிற்கு அருகில் இருக்கின்ற, வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பயிரிட்டுள்ள நிலங்களில் கொண்டுச்சென்று தூவுகின்றனர். இது இந்நிலத்திற்குரிய சிறந்த எருவாகும். அவ்வாறு சாம்பலினைத் தூவுகின்ற விளைநிலத்திற்கு இட்டச் சாம்பலினை உண்பதற்காக இவர்கள் ‘கும்மா’ என்று அழைக்கின்ற ஆந்தைகள் வருகின்றன. இரவு நேரத்தில் ஆந்தைகளை ஈர்க்கின்ற நிறத்துடன் இச்சாம்பல் விளங்குவதால் ஆந்தைகள் அதிகளவில் சாம்பல் தூவப்பட்ட இந்நிலங்களுக்கு வருகின்றன. ஆந்தை அலறுவதை படகர்கள் தீயச் சகுணமாக, இறப்பிற்குரிய குறியீடாகக் கொள்கின்றனர்.

`உடல் அங்கங்களில் நெய் அல்லது எண்ணெய் உரைத்தோ, மாமிசம் உண்டப்பின்னரோ, அதிகாலையில் குளித்தப் பின்னரோ, முகம் கழுவியப் பின்னரோ வீட்டினை விட்டு வெளியே செல்ல நேரும்போது அடுப்பிலுள்ள சாம்பலினை நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர். குறிப்பாக கருப்பிணியுற்ற பெண்கள் வீட்டினைவிட்டு வெளியே செல்லும்போது அடுப்பின் சாம்பலையும், அடுப்புக் கரியினையும் நெற்றியில் இட்டுக்கொண்டுச் செல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஹெர்ப்பஸ் எனும் வைரஸ் கிருமியினால் உண்டாகும் ‘ஆனேகிசி’ என்று இவர்கள் அழைக்கின்ற ஒரு விதமான பால்கட்டியக் கொப்பளங்களால் ஆன தோல் ஒவ்வாமைக்கு ஒரு வெள்ளைத் துணியினை, மசிந்த நெருப்பில் உள்ள சாம்பலில் தொட்டு, அச்சூடோடு உடலில் ஏற்பட்டிருக்கும் அக்கொப்பளங்களின் மீது ஒற்றி ஒற்றி எடுக்கின்றனர். சாம்பலைக் கொண்டு பற்றிடும் இந்த மருத்துவத்தினைத் தொடர்ச்சியாக ஐந்து முறைகள் செய்துவர உடலில் உள்ள இந்தக் கொப்பளங்கள் மெதுவாக மறைந்து சீர்மைக்கொள்ளும். அலோபதி மருத்துவத்திற்குக்கூட கட்டுப்படாத இப்பாதிப்பு இவர்களின் இம்முறைக்குக் கட்டுப்படுவது குறிப்பிடத்தக்கது.

சடங்கியல் மற்றும் வழிபாட்டு நிலையில் வனக்கோயில்களில் தங்க நேரும்போது அங்கு நெருப்பிட்டு அதனைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு இரவினைக் கழிப்பது படகர்களின் வழக்கமாகும். இவ்வாறு இடுகின்ற நெருப்பினைப் படகர்கள் ‘மந்தக் கிச்சு’ என்றழைக்கின்றனர். ‘மந்த’ என்ற படகச் சொல்லிற்கு புல் அணை என்றும், மக்கள் கூடும் இடம் என்றும் பொருள். இறப்பு நிகழும்போதும் இரவு முழுக்க இழவுகாக்க, இழவு வீட்டின்முன்பு இந்த ‘மந்தக் கிச்சுவினை’ இடுகின்றனர்.

சடங்கியல் சார்ந்தோ, வழிபாடு சார்ந்தோ ‘மந்தக்கிச்சு’ இடும்போது இவர்கள் ‘நேரி மொரா’ என்றழைக்கின்ற நாவல் மரத்தின் கட்டைகளைக் கொண்டு மட்டுமே ‘மந்தக்கிச்சு’ இடுவது இவர்களது மரபாகும். அதிலும் இதில் எரியூட்டப்படும் நாவல் மரக்கட்டைகளை மீதம் வைக்காமல் காலைக்குள் எரித்துவிட வேண்டும், அந்நெருப்பு அதுவாக எரிந்தணையும்வரை நீர்த்தெளித்தோ, மண்ணை வாரி இறைத்தோ அணைக்கக்கூடாது, வாயினால் ஊதி நெருப்பை எரியவைக்கக் கூடாது போன்ற பல மரபுநிலைகளைப் பின்பற்றுகின்றனர். இவ்வழக்கு அவ்விடத்திற்குரிய புனிதத்தினைக் காக்கவும், வனம் சார்ந்த பகுதிகளில் நெருப்புப் படராமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

படகர்களின் முன்னோர்கள் வசித்த புனித வீடுகளான ‘தொட்ட மனெகளில்’ இவர்களின் குலதெய்வத்திற்கான விழாக்கள் வரும்போது அங்கு ‘மந்தக்கிச்சு’ இட்டு இரவு முழுவதும் அருள்வாக்குச் சொல்லும் மரபார்ந்த வழக்கிலும் இவர்கள் இந்த நாவல் மரத்தையே பயன்படுத்துகின்றனர். இரவு முழுக்க உறங்காமல் விழித்திருந்து அச்சடங்கினை முடித்து இல்லம் திரும்பும்போது அந்த ‘மந்தக்கிச்சு’ இட்ட இடத்திலிருந்து சாம்பலினை எடுத்து நெற்றியில் இட்டப்பிறகே செல்லுகின்றனர். இன்றும் இவர்களின் சடங்கியல் சார்ந்து ‘மந்தக்கிச்சுவினை’ உருவாக்கும்போது அவர்களின் மரபார்ந்த வழக்கின்படி, இவர்கள் ‘பிங்கசக்கல்லு’ என்று அழைக்கின்ற சிக்கி முக்கிக் கல்லினை உரசியும், ‘தவட்டை’ மரக்கட்டையினைக் கடைந்தும் நெருப்பினைக் கடைந்தெடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும், முக்கியமான குலதெய்வக் கோயில்களிலும் இந்த ‘மந்தக்கிச்சினை’ இடுவதற்கான தனி இடம் அமைக்கப்பட்டிருக்கும். இது வட்டவடிவில் கல்வேயப்பட்டதாகவும் சில ஊர்களில் காணப்படுகின்றது. இந்த இடங்களைக் கால்களால் இவர்கள் மிதிப்பதில்லை. அதே நிலையில் எரிகின்ற நெருப்பிலும், நெருப்பு எரிக்கப்பட்ட இடத்திலும் சிறுநீர்க் கழிப்பதையும், எச்சில் உமிழ்வதனையும் இவர்கள் பெரும் பாவங்களாகக் கருதுகின்றனர். இதை ‘உரித கொள்ளிக உச்செ அட்டிதது பாப்பா’ எனும் இவர்களின் இறப்புச் சடங்கு சார்ந்த, பாவம் போக்கும் வாக்கொன்று விளக்குகின்றது. தம்வாழ்வியலில் பொது மற்றும் சிறப்பு நிலையில் மேற்கண்டவாறு சாம்பலின் மீது பல்வேறு வழக்காறுகளை மரபார்ந்து கட்டமைத்துள்ள படகர்களின் சடங்கியல் சார்ந்து முக்கியமான, மரபார்ந்த சடங்காக அவர்களின் சாம்பல் வரையும் திருவிழா விளங்குகின்றது.

சாம்பல் வரையும் விழா –

இந்தச் சாம்பல் வரையும் சடங்கினைப் படர்கள் ‘பூதிபரவ ஹப்பா’ என்று அழைக்கின்றனர். கடந்தக் கட்டுரையில் நாம்கண்ட படர்களின் காப்புத் திருவிழாவினைத் தொடர்ந்து இவர்கள் இச் சடங்கினை நிகழ்த்துகின்றனர். வீட்டின் முற்றத்தைச் சாணமிட்டு மெழுகி, அதிகாலையில் வீட்டின் அடுப்பிலிருந்து இச்சடங்கிற்கென தனியாகப் புழங்குகின்ற ‘பூதி குக்கெ’ எனும் சாம்பல் எடுக்கும் மூங்கில் கூடையில் எடுக்கப்பட்ட சாம்பலினைக் கொண்டு, மாலையில், பொதுவாக வீட்டின் மூத்த ஆணோ, இல்லையென்றால் வேறு ஆண்களோ தம் இல்லத்தின் முற்றத்தில் தம் மரபார்ந்த வாழ்வியலோடு இணங்கிய பல்வேறு படங்களை வரைகின்றனர்.

சிலர் படர்களின் அளவைகளுள் ஒன்றான, இரும்பாலான, நான்கு கிலோ கொள்ளவுக்கொண்ட ‘கோக’ எனும் அளவையிலும் அடுப்புச் சாம்பலினை எடுத்து இச்சடங்கினை நிகழ்த்துகின்றனர். வீட்டு முற்றத்தின் நான்கு முனைகளையும் சாம்பலினால் கட்ட வடிவில் கோடுவரைந்து இணைந்து, அதன் நான்கு முனைகளிலும் எருமைகளில் கொம்புகளை கீழ்நோக்கி வரைகின்றனர். பின்னர் அதற்குள் ‘ஒத்து’ (சூரியன்), ‘எரெ’ (பிறை), திங்குவா (முழு நிலவு), ஏர், ‘நோகிலு’ (மாடுகளின் நுகத்தடி), ‘கூ’ (உழுமுனை), ‘கொம்பு’ (எருமைக் கன்றுகளுக்கான மரத்தறி) மற்றும் சில வேளாண் கருவிகளின் படங்களை வரைகின்றனர்.

இச்சடங்கினை மேற்கொள்ளும்போது அவர்தம் பாரம்பரிய உடையணிந்துக் கொள்கின்றனர். கால்களில் காலணிகள் அணிவதில்லை. இச்சடங்கிற்கென வீட்டின் முற்றம் சாணமிட்டு மெழுகியதுத்தொட்டே இங்குக் காலணிகளை அணிந்து யாரும் நடப்பதில்லை. அதேபோல சம்பல் வரைந்தப்பிறகும் யாரும் அதை மிதித்து நடப்பது கிடையாது. குறிப்பாக செருப்பு அணிந்தக் கால்களுடன். தவிர்க்க முடியாத சூழலில் வெறும் கால்களால் சாம்பல் வரையாத இடங்களை மிதித்து நடக்கின்றனர். மறுநாள் அச்சாம்பலினை நீர் ஊற்றி நன்றாகக் கழுவியப்பிறகே செருப்பணிந்துக்கொண்டு அம்முற்றத்தில் நடக்கின்றனர். பொதுவாகவே படகர்கள் தம் கால்களில் காலணிகளை அணிவதில்லை. இன்றும் படகர்களில் வயது முதிர்ந்தவர்கள் இவ்வழக்கினைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் இவ்வழக்கு அருகி வருகின்றது.

இச்சடங்கில் சாம்பல் வரையும்போது சாம்பல் கூடையிலோ, ‘கோக’ எனும் அளவையிலோ உள்ள சாம்பல் முழுவதையும் வழித்தெடுப்பதில்லை. கடைசியில் சிறிதளவுச் சாம்பலினை மீதம் வைத்து அதை இல்லத்திற்குள் கொண்டுச்செல்ல வேண்டும் என்பது இவர்களின் மரபாகும். கலைத்தன்மையும், மரபுநிலையும் மிகுந்த இந்தச் சடங்கின் நோக்கமானது தம் முன்னோர்களின் ஆன்மாக்களை வரவேற்று மகிழ்ச்சிப்படுத்தவும், அவர்கள் பின்பற்றிய மரபுநிலையை வழுவாமல் தாம் கடைப்பிடிப்பதையும் காட்டுவதற்காகும்.

மரபார்ந்து படகர்கள் மேற்கொண்டுவரும் இந்தச் சாம்பல் வரையும் சடங்கானது ஒருவகையில் படகர்களின் புத்தாண்டாகவும் கருதப்படுகின்றது. இந்நிலையில் புத்தாண்டினை வரவேற்கும் விதமாகவும் இச்சாம்பல் வரைதலைப் பொருள்கொள்ளலாம். சிலர் தம்மைக் காணவந்த முன்னோர்களின் ஆன்மாவினை வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்கான தற்காப்பே இந்தச் சாம்பல், அதாவது தாவரங்களால் காப்பிட்டப்பிறகு அத்துடன் இந்தச் சாம்பல் காப்பினையும் இடின், ஆன்மாவாகவரும் தம் முன்னோர்களை வீட்டிற்குள் வராமல் தடுக்க இயலும் என்றும் நம்புகின்றனர். ஆனால் தம் முன்னோர்களின் மீது மீளாத அன்புக் கொண்டுள்ள படர்களின் வாழ்முறையினை நோக்கும்போது தம் முன்னோர்களை இல்லத்துள்ளே அனுமதியாமைக்காக இடப்பெறும் காப்பு எனும் இக்கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களை வரவேற்று, மகிழ்ச்சிப்படுத்தும் விதத்திலேயே இச்சடங்கு அமைந்துள்ளது.

அன்றாடம் கோலமிடும் வழக்கமில்லாத படகர்களின் இச்சடங்கு கோலம்வரைதலினின்று வேறுபட்டது. தொன்றுதொட்டு தம் மகிழ்ச்சியினையும், மரபார்ந்த வாழ்க்கை முறையினையும் தம் முன்னோர்களுக்குப் பறைசாற்றி மகிழ்கின்ற குறியீடுகளாகத் திகழ்கின்றது.

துணை நின்றவை –

கோ.சுனில்ஜோகி, நீலகிரி பெறங்காடு சீமை படகர் இன மக்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2012.

கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகரின மக்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015

திரு. கல்லா கவுடர், நேர்காணல், வயது – ௭௨, ஒரசோலை, கோத்தகிரி.

ஆ.இரமகிருஷ்ணன், பொறங்காடு சீமை வழிபாட்டு மரபுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 1992.

– முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. –

suniljogheema@gmial.com