உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அகநானூறு
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:
1.களிற்றியானை நிரை (1 – 20)
2.மணிமிடை பவளம் (121 – 300)
3.நித்திலக்கோவை (301 – 400)
என்பனவாகும். இப்பகுப்பினை,
“களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறமாக
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”
என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது.
இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.
திணையும் பாடலும்
அகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,
“ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று”
என்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,
1.1, 3, 5… 399 – பாலைத்திணைக்கு உரியவை
2.4, 14, 24… 394 – முல்லைத்திணைக்கு உரியவை
3.6, 16, 26 …. 396 – மருதத் திணைக்கு உரியவை
4.10, 20, 30…. 400 – நெய்தல் திணைக்கு உரியவை
5.2, 8…. 392, 398 – குறிஞ்சித் திணைக்கு உரியவை
எண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,
பாலைத்திணைப் பாடல்கள் – 200
முல்லைத்திணைப் பாடல்கள் – 40
மருதத்திணைப் பாடல்கள் – 40
நெய்தல் திணைப்பாடல்கள் – 40
குறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80
தொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
பாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.
கடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பாலைப் பாடிய புலவர்கள்
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.
பாலைத் திணை
தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.
“நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)
இதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு. பாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14).
இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)
“பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)
என்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனிக்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)
என்று சுட்டுவதைக் காணலாம்.
“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,
1.முதற்பொருள் – நிலமும் பொழுதும்
2.கருப்பொருள் – கருவாய் அமைந்தவை (தெய்வம், உணவு, விலங்கு…)
3.உரிப்பொருள் – தனிச்சிறப்பு, ஒழுக்கம்
என்னும் பொருள்களாகும்.
பாலையின் முதற்பொருள்
பாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.
சூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.
கருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,
“எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்
பீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென
ஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)
என்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.
இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் – ஆனி, ஆடி
பின்பனிக்காலம் – மாசி, பங்குனி
பண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,
“என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)
“ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)
“எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.
சேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார்.
பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,
“அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)
“மழைகால் அற்சிரம் (அகம்.205:15)
“புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)
என்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா? எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார்,
“வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற
பனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)
என்று பாடுகிறார்.
கருப்பொருள்
கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.
பாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல். பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.
இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,
“மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)
“மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)
“வெள்வேல் விடலை” (அகம்.7:12)
“கூர்வேல் விடலை” (அகம்.315:14)
“திருந்துவேல் விடலை” (அகம்.195:2)
“வன்கண் காளை” (அகம்.263:9)
“வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)
“கடுங்கண் காளை” (அகம்.321:12)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.
பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.
பறை, மா
பாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.
விலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது.
இதனை,
“வல்லையிற்றுச் செந்நாய்” (அகம்.53:6)
“திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)
என்னும் அடிகளால் அறியலாம்.
உரிப்பொருள்
அந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.
அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடுந்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,
“கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)
என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,
“…………. நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)
என்னும் பாட்டினால் உணர்த்துகிறார்.
தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,
“………….. சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்
ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)
என்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.
அகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே ஆங்காங்குப் பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.
துணைநூற்கள்
1.தாமோதரம்பிள்ளை சி.வை.(ப.ஆ),1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ் சென்னை.
2.சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.
3.உ. வே. சாமிநாதையர்(ப.ஆ), 1889, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்
4.சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு
5.இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.
6.இராஜகோபாலையங்கார்.வே. (ப.ஆ.)1923, அகநானூறு மூலமும் உரையும் (உ.வே.ரா.இராகவையங்கார் சோதித்தது)
7.சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.
tamilveppp@gmail.com
* கட்டுரையாளர் – – முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600113 –