அகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும் சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.
உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்
முன்பே குறிப்பிட்டதுபோலத் தலைவி தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பெண்ணே உடந்தையாகவும் இருந்திருக்கிறாள். கயமனாரின் பாலைத் திணைப்பாடலில் தோழி, “ நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும் நின் தமையன்மாரது புலியை ஒத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும் நீதான் கலங்காத மனத்தினையுடையையாகி என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக. உடன்போக்கினைத் துணிவாயாக” என்று கூறுகிறாள் (பா.எ.259.)தோழியின் கூற்றின்படி தமையன்மாரது அச்சம்தரும் தலைமையும் இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அன்னையின் துன்பமும் தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வை நோக்கிப் பயணிக்கத் தடையாயிருக்கின்றன. இத்தடைகளைத் தகர்த்தெறியவே உடன்போக்கு என்ற நிகழ்வு. உடன்போக்குக்குக் காரணமாயிருப்பவள் தோழியே. கயமனாரின் மற்றொரு பாடலில் தோழி, நம் தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துள்ளனர், நான் தலைவனுடன் அரிய காட்டுவழியில் செல்வதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறாள்1. உடன்போக்குக் காரணமான தோழியே தலைவியின் நிலையைத் தலைவனுக்குஉணர்த்தும் வாயிலாகவும் அமைகிறாள்.
தாயங்கண்ணனாரின் பாடலொன்று தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு கேட்கும் தோழியைக் காட்சிப்படுத்துகிறது. தினை முதிர்ந்ததால் தலைவி தினைப்புனம் காக்கவாராள் என்ற எச்சரிக்கையுடன் தொடங்கும் தோழிகூற்று, தலைவனைப் பிரிந்த தலைவி வெளுத்திருப்பதால் ஊரார் அலர் பேசுகின்றனர் எனவே வேடர்களின் தங்கையாகிய கொடிச்சியை அருளவேண்டும் என முடிகிறது.மேலும் இப்பாடலில் “மலையைச் சூழக்கொண்ட உறைதற்கினிய நுமது ஊருக்கு அழைத்துச் சென்று அருள வேண்டுமென்கிறாள்2.தலைவனும் தலைவியும் மலையைச் சார்ந்தவர்களென்றாலும் தலைவனது இருப்பிடம் வேறு ஊர் என்பதைப் பாடல் உணர்த்துகிறது. வேற்றூரைச் சார்ந்த தலைவனுடன் தலைவிக்கு வாழ்க்கை மறுக்கப்படுவது ஏன்? உடன்போக்கை நோக்கித்தள்ளப்பட வேண்டியதன் தேவை என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. இவ்வினாக்களுக்குப் பல பாடல்கள் விடை கூறுகின்றன.
நக்கீரரின் செவிலி கூற்றாயமையும் பாலைத்திணைப்பாடல் தலைவியின் நிலையையும் சுற்றத்தாரின் மனோநிலையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. “மகளே நினது கூந்தலைப் புனைக என்றதற்கு என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி அவள் தன் செல்வ நிலைக்கேற்ற பரிசு, சோழரது உறையூரைப்போன்ற செல்வமுடைய மனையில் ஒப்பனை செய்து தமர் மணம் செய்விக்கப் பொருந்தாதவளாகி ஓமைமரங்கள் நிறைந்த காட்டு வழியில் வேலினையும் உடல் வலிமையினையும் கொண்டு அறியப்படாத தேயத்தின் கண் கொண்டு சென்ற இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பமும் தகுதியும் உடைய என் மகள் நன்கு மதிப்பும் உயர்வும் இல்லாது சிறிய ஊரில் வறுமையுற்ற பெண்டினது புல் வேய்ந்த குடிலாய ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத்தூண் கொண்ட இயைபில்லாத வறிய மனையில் சிலம்பு கழித்து அவனுடன் மணம் பொருந்தினாளோ என்று வருந்துவேன்’ எனத் தலைவியின் நிலைகுறித்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள் செவிலி3. செவிலியின் கூற்றில் தலைவியின் செல்வ வளம் x தலைவி சென்று சேருமிடத்தின் வறுமை நிலை என்ற சூழல் முன்வைக்கப்படுகிறது. சோழனின் உறையூர் போன்ற செல்வ வளம் பொருந்திய மனை தலைவியுடையது. தலைவனுடையதோ ஒற்றைத்தூண் கொண்ட முகப்பினையுடைய வறிய மனை. தலைவிக்கு ‘இயைபில்லாத’ வறியமனை. தலைவி செல்லும் ஊரோ அறியப்படாத தேயம். தலைவியோ தகுதியுடையவள். அவளது தகுதிக்கு ஏற்ற மதிப்பும் உயர்வும் இல்லாது தலைவனது ‘சிறிய’ ஊருக்குச் சென்று வறிய மனையில் மணம் செய்கிறாள் .தலைவியின் சுற்றத்தார் தலைவியின் களவை விரும்பாததற்குரிய காரணங்களைச் செவிலியின் சொல்லாடல்கள் தெளிவாக உணர்த்துகின்றன. தலைவி விரும்பிய தலைவனின் ஊரோ அறியப்படாத தேயம். தலைவன் ஏதிலாளன். அவனுடைய ஊரோ சிறியஊர். எனவே தலைவன் ஏதிலாளன், அறியப்படாததேயம், தலைவி சென்று சேருமிடத்தின் சூழல்மீதான ஐயம் அதாவது தலைவன் தலைவிக்கிடையேயான ஏற்றத்தாழ்வு இவையே தலைவியின் களவைச் சுற்றத்தார் ஏற்க மறுத்தமைக்கான காரணங்கள். இப்பாடல் புறமண நிகழ்வைக்குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடவாயிற் கீரத்தனாரின் பாலைத்திணைப்பாடலில் மகட்போக்கிய தாய் ஒருத்தியும், “பாண்டியனது மதுரையை ஒத்த அரிய காவலையுடைய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பு செய்யப்பெறாளாய் காட்டுவழியில் தலைவன் பொய்கூறி அழைத்துச்செல்ல விரைந்து சென்று புதர்போலும் குடிசையின் முன்றிலில் தேக்க மரத்தின் அகன்ற இலையில் குவிக்கப் பெற்ற புழுக்கிய ஊணினை உண்ணும் காட்டில் பொருந்திய வாழ்க்கையையுடையாரது சீறூரின்கண் அவள் தங்கியிருப்பாளோ” என ஐயுற்று வருந்துகிறாள்4. இப்பாடலிலும் தலைவி சென்று சேருமிடத்தின் செல்வவளம் குறித்த ஐயப்பாடே முன்வைக்கப்படுகிறது. மேலும் தாயானவள் தலைவனின் பொய்ம்மொழியை நம்பிச்சென்றனளே என்றும் கூறுகிறாள்.
கயமனாரின் பாடலிலும் செவிலி, ஆயர்களுடைய குடியிருப்பினையும் பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும் கொண்ட அழகிய சீறூரில் தன் துணைவனுடன் ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருப்பாளோ என்ன காரியத்தினைச் செய்வாளோ என்றே வருந்துகிறாள்5 .இங்கும் தலைவனின் வளமற்ற நிலையே பேசப்படுகிறது. மாமூலனாரின் பாடலிலும் மகட்போக்கிய தாய் தந்தையுடைய பாழி என்னும் பதியை ஒத்த பெரிய மனையின் காவலைத்தாண்டித் தன் துணைவனை நினைந்த கொள்கையுடன் புறப்பட்டுச் சென்ற தன் மகள் சென்றடையும் இடம் சோலைகளையுடைய துளு நாட்டை ஒத்த பொருளின்றி வருவோரைப்புரக்கும் நற்பண்பினையுடைய சேரிகளையுடைய முதிய ஊர்களில் முகமறிந்த மக்களையுடையதாக வேண்டுமென்று கூறுகிறாள்6. இப்பாடலில் தலைவியின் செல்வவளமும் தலைவி சென்ற ஊர் செல்வத்தைத் தருவதாக இருக்கவேண்டு மென்ற அச்சமும் அவளுக்கு ஆதரவு வேண்டுமென்ற உணர்வும் வெளிப்படுகிறது. மேலும் தான் கொண்ட கொள்கையால் சென்ற என் அன்னை என்ற தாயின் கூற்று கற்புக்கொள்கையைச் சுட்டுவதாயிருக்கிறது.
இவ்வாறாக உடன்போக்குப் பாடல்கள் செல்வ வளம் என்ற ஒன்றும் வேற்றூர் என்ற நிலையும் தலைவியின் களவை ஏற்க மறுத்த காரணிகளாய் அமைந்ததை உணர்த்தி நிற்கின்றன. மேலும் திருமணம் என்ற அமைப்பில் பெண்ணின் வெளி தந்தையின் இல்லிலிருந்து தலைவனின் இல்லுக்குப் புலம் பெயர்வதாயிருக்கிறது. இந்நிலை தாய்த் தலைமை வீழ்ச்சியைக் குறிப்பதாயிருக்கிறது. ஆனாலும் பெண் இதை விரும்பியே ஏற்றிருக்கிறாள். பொருளுடைமைச் சமுதாயத்தில் பெண் நிலை வீழ்ச்சியடைந்ததைக் குறித்து பிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்கள், “தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள்.அடிமைப்படுத்தப்பட்டாள்”என்று கூறுவது7நோக்குதற்குரியது. அகநானூற்றுப் பாடல்கள் பெண்ணின் களவு வாழ்வில் அவளது உரிமை எவ்வளவு தொலைவு என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
களவு வாழ்வில் தலைவிக்குப் பெருந்தடையாக இருப்பது அன்னை என்பதைவிடக் காவலாக இருப்பது என்பது பொருந்தும். இதைப்பல பாடல்கள் (பாடல்கள் 20,52,60,65,150,68) பதிவு செய்துள்ளன. இந்நிலையில் தலைவியின் களவை ஆதரித்திருப்பேனே என நொந்து அவளுக்குமுன் அவள் செல்லுமிடம் அடைந்து அவளுக்குப் பெண்டாகி அவளை வரவேற்றிருப்பேனே என வருந்தும் தாயைக் கபிலரின் பாடல் அறிமுகம் செய்கிறது8. கருவூர்க்கண்ணம்பாளனாரின் பாடலில் காளையின் மீது அவள் கொண்டுள்ள அன்பின் உறுதியை அறிந்தேன். அவர்களிருவரையும் வதுவை நெறியில் சேர்த்திருப்பேனே என வருந்தும் தாயைக் காணமுடிகிறது9. பல பாடல்களில் தலைவனின் பொய்ம்மொழியை நம்பிச் சென்றனள் என வருந்தும் தாய் அல்லது செவிலியைக் காணமுடிகிறது (பா.எ.153,105,117).விற்றூற்று மூதெயினனாரின் பாடலொன்று கன்னியர்மட்டும் உறையக்கூடிய தெய்வம் இருக்கும் காவல்மிகுந்த மாங்காடு என்னும் ஊரினைப்பற்றிய குறிப்பைத்தருகிறது.இப்பாடலில் மாங்காட்டினை ஒத்த காவல் மிக்க தந்தையின் இல் எனத்தலைவனிடம் கூறி வரைவு கடாவுகிறாள் தோழி. கன்னியரைத்தனித்துக் காவலில் வைத்திருந்த நிலையை ‘மாங்காடு’ பற்றிய பதிவு உணர்த்துகிறது.மாங்காட்டைப்போலத் தந்தையின் இல்லம் தலைவியைக் காவலில் வைத்திருக்கிறது என்பது பாடலின் கருத்து10
தொகுப்புரை
அகநானூற்றுப்பாடல்கள் முன்வைக்கும் உடன்போக்கை ஆய்வுக்குட் படுத்தியதில் ஆணைத்தலைமையாகக் கொண்ட குடும்ப அமைப்பு வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் தனக்கான துணையைத் தாம் அறியா இடத்திலிருந்து தேர்வு செய்தல் என்பது பெண்ணுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரமுடிந்தது .இதற்குச் செல்வநிலையில் ஏற்பட்ட முரண்பாடும் தலைவன் வேற்று நிலத்தவன் என்பதும் காரணமாயிருந்ததைப் பாடல்கள் உணர்த்துகின்றன.ஏனெனில் தலைவன் ஒருவன், ‘சிறந்த பொருளும் அணிகலமும் நிறையக் கொடுப்பினும் பெறுதற்கு அரியள்’ என எண்ணுகிறான்.மேலும், ‘அவள் தந்தை நமக்கு நாம் தங்கும் இந்நாட்டிலிருந்து நீங்கி அவனுடன் கூடிப் பெரிய கடற்கரையினை அடுத்த உப்புச்செறுவில் உப்புப்பொதியுடன் திரிந்து வருந்தியும் கடலின் ஆழத்தில் புணையின்கண் சென்றும், அவன்வயமாகியும்,பணிந்தும் சார்ந்தும் இருப்பின் அறமாதலை உணர்ந்து அவளைத் தருவானோ’ எனக்கேட்கிறான்11.
மற்றொரு தலைவன் தலைவியின் அணிகலன்களுக்கு விலையாகப் புது வருவாயையுடைய நியமம் என்னும் பதியினைத்தந்தாலும் தலைவியின் தந்தை ஏற்பாரல்லர் எனவருந்துகிறான்12. இக்காரணங்களினால்தான் பெண் தான் பிறந்த இடத்திலேயே தான் விரும்பிய தலைவனுடன் வாழமுடியாத நிலை.இதன் காரணமாகவே ஆணின் அதாவது தலைவனின் இல்லத்திற்குச் சென்றே வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் பொதுவாகத் திருமணம் என்ற நிகழ்வுக்குப்பின் அவளது இடம் புதிய இல்லத்தில் அல்லது தலைவனின் இல்லத்தில் என்ற பண்பாடு வலியுறுத்தப்பட்டது. இவையே உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்.
குறிப்புகள்
1. மேலது பா.எ.221.
2. மேலது பா.எ.132.
3. மேலது பா.எ.369
4. மேலது பா.எ.315.
5. மேலது பா.எ.321.
6. மேலது பா.எ.70..
7. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் –
பேரின்பன். தேவ ப.87.
8. அகநானூறு பா.எ.203.
9. மேலது பா.எ.263.