ஆய்வு: அற இலக்கியங்களின் அமைப்பு

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது. அறம் என்பதன் பொருள்
அறம்   என்னும்   சொல்லிற்கு   ஒழுக்கம், வழக்கம், நீதிகடமை,ஈகை,புண்ணியம்,கடவுள்,சமயம் என்ற எட்டு வகையானயான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.த.திருநாவுகரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,)

அறம் என்பது தகுதியானது,ஞானம், அறசாலை,உண்ணா நோன்பு,தீப்பயன் உண்டாக்கும் நச்செழுத்துக்களை வைத்துப் பாடுதல்,கற்பு,இல்லறம்,துறவறம் என்பன போன்ற வேறு சில பொருட்களும் வழங்கி வருகின்றன. (க.த.திருநாவுகரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,) நற்பண்பு அல்லது ஒழுக்கம்,வழக்கம்,நீதி,கடமை,புண்ணியம்,ஈகை,அறக்கடவுள்,சமயம் எனும் பல்வேறு பொருட்களையும் பிறிதோரிடத்தில் சுட்டுகிறார். (க.த.திருநாவுகரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப)

அறநூல்கள்
1.  திருக்குறள்
2.  நாலடியார்
3.  நான்மணிக்கடிகை
4.  இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6.  திரிக்கடுகம்
7.  ஆசாரக்கோவை
8.  பழமொழி நானூறு
9.  சிறுபஞ்சமூலம்
10. முதுமொழிக்காஞ்சி
11. ஏலாதி
இந்நூல்கள் பதினொன்றும் அறநூல்கள் என வழங்கப்படுகின்றன.

திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவர்.நாயனர்,தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன்,  மாதாநுபங்கி,செந்நாப் போதார்,பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

நாலடியார்
இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் சமணமுனிவர்கள் ஆவார்.இந்நூலுக்கு வேளாண்வேதம்,நாலடி  நானூறு என்ற பெயர்கள் குறிப்பிடுகின்றன.அறத்துப்பால் 13, பொருட்பால் 24, காமத்துப் பால் 3 என அதிகாரம் பகுக்கப்பட்டுள்ளன.அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.முப்பாலாகப் பகுத்தவர் தருமர் ஆவார்.கீழ்க்கணக்கில் திருக்குறளுக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் நாலடியார்.40 அதிகாரங்களும்,12 இயல்களும் உள்ளன.

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”
“பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்”;

நாலடியாரை ஜி.யு.போப்  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். (தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம்,ப.87) பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை ஆகும்.

நான்மணிக்கடிகை
இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.

இன்னாநாற்பது
இந்நூல் அறநூல் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களில் ஒன்றாக   இன்னா நாற்பது விளங்குகின்றன.இந்நூலின் ஆசிரியர் கபிலர் ஆவார். இவரின் கடவுள் வாழ்த்து செய்யுள் முருகன், சிவன், திருமால், பிரம்மன் ஆகிய நால்வரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது. 4 அடிகளைக் கொண்ட நூல் ஆகும்.160 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன், திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் ஆவார். இந்நூல் நான்கு இனிய பொருட்களை எடுத்துக்கூறும் பாடல்கள் நான்கு மட்டுமே (ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து ) எஞ்சியவை மும்மூன்று இனிய பொருட்களையே சுட்டியுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு பாடல்களைக் கொண்டுள்ளன. மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

திரிகடுகம்
திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற திரிகடுக சூரணம் என்று பெயர்.அம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு.

ஆசாரக்கோவை
இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளார்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூல் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

சிறுபஞ்சமூலம்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல்,கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்,சமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு ஐந்து வேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர்,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர்,ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல்,இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை.ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87,-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன

முதுமொழிக்காஞ்சி
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.முதுமொழி,முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.”காஞ்சி தானே பெருந்திணைப் புறனே” (தொல்.பொருள் புறம்.22) என்பது தொல்காப்பியம்;.இவ்விரு சொற்களால் குறிப்பிடப்படும் இந்நூல் நிலையாமை குறித்தோ,பழமொழியைப் பெற்றோ அமையவில்லை.மாறாக உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச் சுட்டும் ஆசிரியர்,

“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று”

என்று விளக்குகிறார்.அதாவது உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமமக்கள் எடுத்துயம்புவது என்பது இந்நூற்பாவிற்குரிய விளக்கமாகும்.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக்கோவை ஆகும்.பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இந்நூலின் குறள் வெண்செந்துறைகள் அமைகின்றன.அதாவது முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.நூற்சேர் முதுமொழிக்காஞ்சி என்ற பிரபந்த தீபிகைக் குறிப்பினால்,இந்நூல் நூறு எண்ணிக்கையுடையது என்பது பெறப்படுகிறது.இந்நூலில் பத்துப்பத்து முதுமொழிகளாக அமைந்துள்ளன.ஆர்கலி உலகத்து மக்கட்;கு எல்லாம் எனத் தொடங்கி பத்துக் கருத்துக்கள் கொண்ட குறள் எல்லாம் எனத் தொடங்கி பத்துக் கருத்துக்கள் கொண்ட குறள் வெண்செந்துறைகளால் இந்நூல் அமைந்துள்ளது. அவைவருமாறு:-சிறந்த பத்து,அறிவுப் பத்து, பழியாப் பத்து,துவ்வாப் பத்து,அல்லபத்து,இல்லைப் பத்து,பொய்ப்பத்து,எளியபத்து,நல்கூர்ந்த பத்து,தண்டாப் பத்து முதலியனவாகும்.

ஏலாதி
பதினெண்கீழ்க்கணக்கு அறநூல் பதினொன்றில் ஒன்று ஆகும்.ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள்.ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம்,நாககேசரம்) சுக்கு,மிளகு,திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்.மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன.இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார்.

முடிவுரை
இவ்வாறு  பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களின் அமைப்பு முறை அமைந்துள்ளப் பாங்கை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)  பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001  முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)  பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)  பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)  நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017  முதற்பதிப்பு -2014
5. அகராதி தமிழ் – தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6. கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ) இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014
7.இராசாராம்.துரை பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு – 1995
8 நாமக்கல் கவிஞர் திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
9 மாணிக்கம் .அ திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999 பெண்ணின் பெருமை புனித நிலையம் சென்னை -600017 பதிப்பு – 1973

 


கட்டுரையாளர்:  –  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 –

 

jenifersundararajan@gmail.com