இயற்கை, இயற்கைச் சார்ந்தப் பொருட்களின் இயக்கமே பொதுவிதியாம். இவ்வியற்கை விதியில் மனித குலத்தின் தோற்றமும் அடங்கும். புவியில் ஓரு செல் உயிரிகள் தோற்றம் பெற்று, பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து, அவை நீர் வாழ்வன, நீர், நில வாழ்வன, நிலவாழ்வன எனப் பன்முகப்பட்டு, மெல்லுடலி, குடலுடலி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈனுபவை, முது நாண் அற்றவை, முது நாண் உடையவை எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ வியக்கத்தக்கது.
மனிதக்குரங்கு மனிதனாக மாறிய வளர்ச்சி நிலையை, டார்வின் கோட்பாடும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கருத்தியலும் தெளிவுற எடுத்துரைத்தன. டார்வினின் ‘தக்கவை பிழைத்தல்’ கோட்பாடானது, இவ்வியற்கை உலகில் ‘தம்மைத் திருத்திக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டோடு விளக்கியது. இக்கருத்தியல் மதக்கருத்துக்களுக்கு நேர்மாறாக,பல்வேறு புதிய சிந்தனைகளையும், உண்மைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தது.
பண்டைக் காலத்தில் மனிதன் வளர்ச்சியடைந்தப் பின்னர், அதாவது நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்து,உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் இயற்கை பொருட்களையும், அதன் மாறுபாடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளான். மதவாதிகள் ஒருபுறமும், இயற்கையியலாளர்கள் மறுபுறமுமாய் இவ்வுலகைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அவற்றுள்,உலகத் தோற்றம், உயிரினத் தோற்றம் பற்றிய சிந்தனைகள் மிக முக்கியத்துவம் உடையவை. குறிப்பாக,பண்டைய கிரேக்கம், தமிழகம், ரோம், அரேபியம், சீனம் போன்ற பிறபகுதிகளிலும் உயிரினங்களின் தோற்றம் அவற்றின் பாகுபாடுகள் ஆகியவற்றின் கருத்துக்களும்,தேற்றமும் உருவாக்கப்பட்டு அவையாவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இன்றும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
உயிரினப் படிநிலையின் பரிணாமவளர்ச்சிக் கொள்கையின் தந்தை என்று வருணிக்கப்படும் – எம்போக்டேக்ளஸ் (Empedocles கி.மு. 495 – 435) அரிஸ்டாட்டில் (Aristottle கி.மு. 384 – 322) ஆகியோரின் காலத்தவராகவோ,அதற்குமுன்னராகவோதோன்றியதாகக் கருதப்படும் பண்டையதமிழ் அறிஞர் தொல்காப்பியர் (காலம்,சுமார். கி.மு.5) உயிரினத்தை அதன் புலன் அடிப்படையில் ஆராய்ந்துபாகுபடுத்தியும்,நிரல் படுத்தியும்,பொதுவைப்புமுறையில் தொல்காப்பியத்துள் ஒருசிலவரிகளில் எடுத்துரைத்துள்ளார்.
அந் நூற்பாவான,
“ஒன்றறிவதுவேஉற்றறிவதுவே
இரண்டறிவதுவேஅதனொடுநாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவேஅவற்றொடுகண்ணே
ஐந்தறிவதுவேஅவற்றொடுசெவியே
ஆறறிவதுவேஅவற்றொடுமனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல். மரபியல்,நூ571)
என்ற பாடல் அடிகள் தரும் விளக்கமாவது,
“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே– ஓரறிவு எனப்படுவது உற்றறிவாகும்;
உற்ற்றிவு– உடம்பினால் பொருந்திஅறியும் அறிவு; தொட்டறிவு.
நா-நாவினாற் சுவைத்து அறியும் அறிவு; சுவையறிவு.
மூக்கு என்றது ,மணத்தை முகரும் அறிவு.
கண் என்றது ,ஒளியைக் காணும் காட்சியறிவு.
செவி என்றது, ஓசையைக் கேட்டும் கேள்வியறிவு.
மனன் என்றது முற்கூறிய புலனறிவுகளை ஆராயும் பகுத்தறிவு. நேரிதின்
உணர்ந்தோர் –பொருந் தஆராய்ந்து அறிந்த ஆசிரியர்.
நெறிப்படுத்தினர் –உயிர்களின் அறிவு நிலையை முறைப்படுத்தினர்”
(பக்.202,தொல்காப்பியம்,தி.சு. பாலசுந்தரம் உரை) என்றுவிளக்குவர்.
வகை எண் |
புலனறி உயிர்கள் |
புலன் தகுதி நிலைகள உயிரினங்கள் எடுத்துக்காட்டு |
1 |
ஓரறிவு உயிர்கள் |
உடம்பு உடையவை – புல், மரம் போன்றவை |
2 |
ஈரறிவு உயிர்கள் |
உடம்பும், நாக்கும் உடையவை – நந்து, மரல் போன்றவை |
3 |
மூவறிவு உயிர்கள் |
உடம்பொடு நாக்கும், மூக்கும் உடையவை. . – சிதல், எறும்பு போன்றவை |
4 |
நான்கறிவு உயிர்கள் |
உடம்பொடு நாக்கும், மூக்கும், கண்ணும் உடையவை . நண்டு,வண்டு போன்றவை |
5 |
ஐந்தறிவு உயிர்கள் |
உடம்பொடு நாக்கும், மூக்கும், கண்ணும், செவியும் உடையவை. பறவைகள், விலங்குகள் போன்றவை. |
6 |
ஆறறிவு உயிர்கள் |
உடம்பொடு நாக்கு, மூக்கு, கண், செவியொடு‘மனம்’எனும் தகுதிபெற்றவை. மனிதர் |
எனப் புலன் அடிப்படையில் உயிரினப் பாகுபாட்டைப் பகுத்து ஆராய்ந்து விளக்கும் தொல்காப்பியர், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என மூன்று பெரும் பிரிவாகவும், அவற்றுள் 6 வகை பொதுப் பிரிவாகவும் பகுத்தாய்ந்ததை அறிய முடிகிறது. இவை, அடிப்படையில் புலனடிப்படையிலான பண்டைக் காலத்தின் மிகச் சிறந்த ‘உயிரின படிநிலைப் பாகுபாடே’ஆகும் எனலாம். இக்கருத்தை உறுதிசெய்யும் பொருட்டு,
இன்றைய பரிணாம இயல் (Evolution) அடிப்படைக் கோட்பாட்டிற்கு பெரிதும் நெருங்கிய வடிவிலேயே தொல்காப்பியரின் உயிர்களின் வரிசையொழுங்கு அமைந்துள்ளது என்பர் அறியலாளர். இந்தியாவில் குறிப்பாக மனுஸ்மிருதியில் அசையாதவைஃ அசைபவை என இரண்டாகப் பிரித்து, அசையாதவை தாவரங்கள் எனவும், அசைபவை விலங்குகள் எனவும் பிரித்தனர். கருவிலிருந்து பிறப்பவை, தளிர்களிலிருந்து பிறப்பவை எனஉயிர்களின் பிறப்பைப்பிரித்தனர். தமிழ்மக்கள் புலன் அடிப்படையே இயற்கை விதியாகக் கொண்டனர். இவை பொருள் முதல் வாதசிந்தனையின் அடிப்படைக் கருத்தியலே ஆகும். ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட,பகுக்கப்பட்டஉயிர்களென மதங்களெல்லாம் கூறிக் கொண்டிருக்கையில், அக்காலத்திலேயே உயிர்கள் தோற்றத்தினை புலன் அடிப்படையில் ஆராய்ந்தது பொருள்முதல் வாதசிந்தனையன்றி வேறல்ல.
இன்றைய நவீன சிந்தனையாளர்கள் கூட மனிதனைப் பற்றிப் பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். குறிப்பாக, பெஞ்சமின் ப்ராங்கிளின் மனிதனைச் சமூகவிலங்கினம் (social animal ) என்றார். சிக்மண்ட் ஃப்ராய்டு நாகரிகத்தால் கட்டுண்ட மிருகம் என்றார். கோன்ரட் லொரன்ஸ் நவீனமனிதனை மிருகத்திற்கும் ,உண்மை மனிதனுக்கும் இடையிலான உயிரினம் என்றார். கே.டார்லிங்டன் , மனிதர்களின் சமூகப் பழக்க வழக்கங்களும் ஏன் இவர்களின் வர்க்கங்களும் கூட மரபுவழிப் பண்பியல் ரீதியாக முழுநிர்ணயம் செய்யப்பட்டவை என்று விளக்கினார். காரல்மார்க்சும், ஏங்கெல்சும், “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்”என்ற நூலில், மனிதக்குரங்கு மனிதனாக மாறிய காலகட்டம் உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக்கட்டம். ஆகவே, மனித உற்பத்திக் கருவிகளை உருவாக்கத் தொடங்கிய காலக்கட்டமே ‘மனிதன்’ என்ற நிலைக்கு மாறிய காலக்கட்டம் என்பார்.
இது போன்ற பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். எனின் ,பண்டைய காலத்திலேயே புலன் அடிப்படையில் பகுத்தாய்ந்த பெருமை, தொல்காப்பியரை மட்டுமின்றி பண்டைய தமிழ் மக்களின் அறிவையும் வெளிக் கொணரும்.
தாவரங்களை ஓர் அறிவு உயிரினமாகவும், சிற்றுயிர்களை முறையே ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு உயிரினங்களாக பகுத்து கூறியமைவியக்கத்தக்கது. பேருயிரினமான ஐம்புலன்கள் கொண்ட பறவைகள், விலங்குகள் ஐந்தறிவு உடைய உயிரினமாகவும் ,மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபட்ட ‘மனிதனை’ ஆறு அறிவுபடைத்த உயிரினமாக தெளிவுறவேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
இக்கருத்தியலில் ஓர் அறிவு உயிரினமென, தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று எடுத்துரைத்ததும் ,மற்ற உயிர்களை 3 வகையாக அடக்கியதும்,விலங்கு பறவைகளை தனித்தத் தன்மையில் பகுத்துக் காட்டியமையும், மனிதனை‘ மனம்’ என்ற சொல்லால், அறிவார்ந்த சிந்தித்து பகுத்தறிந்து வாழும் அறிவுடையோனே மானுடன் என விளக்கியதும் புராண, இதிகாசகருத்தியலின்றிபண்டையதொல்காப்பியர் காலத் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் இயற்கையின் உயிரியல் சார் சிந்தனையை நுட்பத்துடன் ஆராய்ந்திருந்தனர் என்பதும் புலனாம்.
துணை நூல்கள் :
1. தொல்காப்பியம், இளம்ப10ரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மு.ப. 1947.
2. தொல்காப்பியம், இளம்ப10ரணர் உரை (அடிகளாசிரியர் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவ10ர். மு.ப. 2008.
* கட்டுரையாளர் – பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் – 603306. –
baluprabhu777@gmail.com