பண்டைத் தமிழ்ச் சான்றோர் தம் வாழ்வியலை ‘அகம்’ எனவும் ‘புறம்’ எனவும் இரு கூறாக வகுத்து இயற்கை வழி நின்று பெருவாழ்வு வாழ்ந்து, தம்மவரும் பின்னவரும் பின்பற்ற வழிவகுத்துச் சென்றுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம், இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, போரியல்மரபு ஆகியவை இப் புறத்தின்கண் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் ஈடுபடுவர். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையை எடுத்துக் கூறுகின்றது. இதில் தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் ஈடுபடுவர். அன்புறு காமம் சார்ந்த இப் பகுதியை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று நிலைபற்றிப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் ஒருமித்து ஏழு திணைகள் என்றும் சான்றோர் கூறியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் (கி.மு. 711) சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள். 01)
இதில், அன்புடைக் காமம் என்றும், அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது ஐவகையான நெறி பற்றிய கூற்றாம். அவை ஐவகை நிலங்களிற்கேற்ப ஒட்டிய சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை எனவும், ஐவகை நெறிபற்றி வகுத்தும், அவற்றைப் பற்பல துறைகளில் நின்று உள்ளத்து உணர்வெழுச்சிகளை நயம்படச் செய்யுள் அமைப்பது பண்டைத் தமிழர் மரபாகும்.
ஏழு திணைகளிற் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலம் ஒதுக்காது அன்பின் ஐந்திணைக்கு ஐவகையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களையும் ஒதுக்கியமையான சிறப்பினை இங்கே காண்கின்றோம்.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருள்களும் புலவர் யாக்கும் செய்யுளிற் காணப்படுமென்று திணைகளின் பொருள் பற்றித் தொல்காப்பியர் கூறிப் போந்தார்.
‘முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.’ – (பொருள். 03)
முதற்பொருள்:- முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகிய இயற்கையென உலகவியலை அறிந்தோர் கூறுவரெனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.
‘முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.’ – (பொருள். 04)
நிலம் என்பது குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாகும். பொழுது என்பது அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும் பொழுதும், சிறு பொழுதும் ஆகிய இரண்டுமாம்.
மேலும், நிலம் பற்றிக் கூறுகையில் திருமால் காக்கும் காடாகிய முல்லை இடமும், முருகவேள் காக்கும் மலையாகிய குறிஞ்சி இடமும், இந்திரன் காக்கும் வயலாகிய முருதம் இடமும், வருணன் காக்கும் பெருமணலான நெய்தல் இடமும், முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் மொழியப்பட்ட பெயர்கள் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’ – (பொருள். 05)
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் ‘பாலை’ எனப் பெயரிட்டனர். இதன்பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.
‘முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.’
–(காடுகாண் காதை 11: 64-66)
உரிப்பொருள்:- உரிப்பொருள் என்பன மக்களின் ஒழுகு முறைகளும், அவர் உள்ளத்தில் எழும் மன உணர்வான எழுச்சிகளுமாம். இதைத் தொல்காப்பியர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’ – (பொருள். 16)
இவை ஐந்திணைகளையும் ஒட்டிப் பத்து வகையாகப் பேசப்படுகின்றன. அவையாவன:
1. குறிஞ்சி – புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.
2. முல்லை – இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.
3. பாலை – பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.
4. மருதம் – ஊடலும், ஊடல் நிமித்தமும்.
5. நெய்தல் – இரங்கலும், இரங்கல் நிமித்தமும்.
கருப்பொருள்:- ஐந்திணைகளுக்கும் உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும் இருப்பனவற்றைக் கருப்பொருள் என்று கூறுவர். தெய்வம், உணவு, விலங்கு, மரம், புள், பறை, தொழில், பண் (இசை) முதலிய எட்டும், அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று தொல்காப்பியர் கூறுவர்.
‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப.’ – (பொருள். 20)
இன்னும் ‘பூ’, ‘நீர்’ என்பனவற்றை இளம்பூரணரும், ‘ஊர்’ என்பதை நச்சினார்க்கினியரும் மேற்காட்டியவற்றுடன் சேர்த்துக் காட்டியுள்ளனர். மேலும் ‘உயர்ந்தோர்’, ‘தாழ்ந்தோர்’ என மக்களையும், ‘யாழ்’ என்பதையும் நம்பியகப்பொருள் நூல் இவற்றுடன் சேர்த்துக் கூறும். இதன்படி ஒருமித்துக் கருப்பொருள்கள் பதினான்கு (14=08+03+03) ஆகின்றன. மேற்கூறப்பட்ட தெய்வம் முதலான பதினான்கு கருப்பொருள்களையும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்கும் வகுத்துக் காண்போம்.
I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்
01. தெய்வம் – முருகக் கடவுள் (சேயோன்)
02. உணவு – மலைநெல், மூங்கில் அரிசி, தினை.
03. விலங்கு – யானை, புலி, பன்றி, கரடிஃசிங்கம்.
04. மரம் – சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.
05. புள் – மயில், கிளி.
06. பறை – வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை.
07. தொழில் – வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன்
எடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், சுனை நீராடல்.
08. பண் – குறிஞ்சிப் பண்.
09. பூ – வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை.
10. நீர் – அருவி நீர், சுனை நீர்.
11. உயர்ந்தோர் – பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
12. தாழ்ந்தோர் – குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.
13. ஊர் – சிறுகுடி, குறிஞ்சி.
14. யாழ் – குறிஞ்சி யாழ்.
இதிற் கூறப்பட்டுள்ள குறிஞ்சியின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்புறச் செய்வதற்காக நாற்பத்தேழு (47) வகையான சிறப்புற்ற பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
II. முல்லையின் கருப்பொருள்கள்
01. தெய்வம் – மாயோன் (திருமால்)
02. உணவு – வருகு, சாமை, முதிரை
03. விலங்கு – மான், முயல்.
04. மரம் – கொன்றை, காயா, குருந்தம்.
05. புள் – காட்டுக் கோழி, சிவல்.
06. பறை – ஏறங்கோட் பறைஃ ஏறுகோட் பறை.
07. தொழில் – சாமை, வரகு விதைத்தல், கடலாடுதல், நிரை மேய்த்தல்,
கூத்தாடல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல்.
08. பண் – சாதாரி.
09. பூ – குல்லைப் பூ, முல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ.
10. நீர் – குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்.
11. உயர்ந்தோர் – குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
12. தாழ்ந்தோர் – இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.
13. ஊர் – பாடி, சேரி, பள்ளி.
14. யாழ் – முல்லை யாழ்.
முல்லையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களைச் சார்ந்த மேலும் நாற்பது (40) வகையான சிறப்பான பொருள்கள் காட்டப்பட்டுள்ள சிறப்பினையும் காண்கின்றோம்.
III. பாலையின் கருப்பொருள்கள்
01. தெய்வம் – கொற்றவை.
02. உணவு – வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள்.
03. விலங்கு – வலியிழந்த யானை, புலி, செந்நாய்.
04. மரம் – உமிஞை, பாலை, ஓமை, இருப்பை.
05. புள் – புறா, பருந்து, எருவை, கழுகு.
06. பறை – ஆறலைப் பறை, சூறைகோட் பறை.
07. தொழில் – போர் செய்தல், பகற் சூறையாடல்.
08. பண். – பாலைப் பண், பஞ்சுரம்.
09. பூ – குரா அம்பூ, மரா அம்பூ, பாதிரிப் பூ.
10. நீர் – நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு, அறுநீர்க் கூவலும் சுனையும்.
11. உயர்ந்தோர் – விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
12. தாழ்ந்தோர் – எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
13. ஊர் – குறும்பு, பறந்தலை.
14. யாழ் – பாலை யாழ்.
பாலையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களையும் மேலும் சிறப்புறச் செய்வதற்காக முப்பத்தெட்டு (38) வகையான பொருள்கள் காட்டப்பட்டுள்ள செய்தியையும் காண்கின்றோம்.
IV. மருதத்தின் கருப்பொருள்கள்
01. தெய்வம் – இந்திரன்.
02. உணவு – நெல்.
03. விலங்கு – எருமை, நீர்நாய்.
04. மரம் – காஞ்சி, வஞ்சி, மருதம்.
05. புள் – அன்னம், அன்றில், வண்டானம், மகன்றில், நாரை, கம்புள், தாரா.
06. பறை – நெல்லரி பறை, மணமுழவு.
07. தொழில் – உழவு, விழாச் செய்தல், நீராடல், நெல் அரிதல், குளம் குடைதல்.
08. பண் – மருதப் பண்.
09. பூ – தாமரைப் பூ, கழுநீர்ப் பூ.
10. நீர் – ஆற்று நீர், பொய்கை நீர், கிணற்று நீர்.
11. உயர்ந்தோர் – ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
12. தாழ்ந்தோர் – உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.
13. ஊர் – பேரூர், மூதூர்.
14. யாழ் – மருத யாழ்.
இதிற் காட்டிய முருதத்தின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்பிப்பதற்காக முப்பத்தொன்பது (39) வகையான சிறந்த பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ள செய்தி படிப்போர் மனதில் ஆழப் பதிந்து விடும்.
V நெய்தலின் கருப்பொருள்கள்
01. தெய்வம் – வருணன்.
02. உணவு – மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருட்கள்.
03. விலங்கு – சுறா மீன், கரா மீன்.
04. மரம் – கண்டல், புன்னை, ஞாழல்.
05. புள் – கடற்காகம், அன்னம், அன்றில்.
06. பறை – நாவாய்ப் பறை.
07. தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், கடலாடுதல்.
08. பண் – செவ்வழிப் பண்.
09. பூ – நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ;
10. நீர் – உவர்நீர்க் கேணி, கவர்நீர் (மணற் கிணற்று நீர்)
11. உயர்ந்தோர் – சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
12. தாழ்ந்தோர் – நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.
13. ஊர் – பாக்கம், பட்டினம்.
14. யாழ் – விளரி யாழ்.
நெய்தலிற் கூறப்பட்டுள்ள சிறந்த பதினான்கு (14) கருப்பொருள்களுடன் மேலும் காட்டப்பட்டுள்ள முப்பத்தைந்து (35) வகையான சீர்பெற்ற பொருள்கள் சேர்ந்துள்ளமை நெய்தலின் சிறப்பனை மேம்படுத்துகின்றது.
முடிவுரை
இதுவரை முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள்களையும், முதற்பொருளில் நிலம், பொழுது ஆகிய இரண்டினையும், நிலத்தில் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களையும், பொழுதில் சிறு பொழுது, பெரும் பொழுது என்றும், உரிப்பொருளில் ஐந்திணைகளையும் ஒட்டி மக்கள் மனதில் எழும் மனவுணர்வுகளான புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கள் ஆகியவற்றையும், கருப்பொருளில் ஐந்திணைகளுக்கான ntt;வேறுபட்ட தெய்வம், உணவு, விலங்கு, மரம், புள், பறை, தொழில், பண், பூ, நீர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஊர், யாழ் ஆகிய பதினான்கு (14) சிறப்பு வாய்ந்த கருப்பொருள்களைக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்கும் வகுத்துள்ளதையும் மேற்காட்டிய தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் படித்து அறிந்து கொண்டோம்.
மேற் கூறப்பட்ட கருப்பொருளில் காட்டப்பட்டுள்ள சிறப்புச் செய்திகள் மக்கள் அனைவரையும் ஈர்ப்பனவாக அமைந்துள்ளதைக் காண்கின்றோம். ஒரு திணையில் அமைந்துள்ள பதினான்கு (14) கருப்பொருள்களையும் ஐந்திணைக்கும் அமைத்துக் காட்டியுள்ளதால் ஒருமித்து எழுபது (70) கருப்பொருள்களாக விரிந்து, அவற்றிற்கு மேலும் நூற்றித் தொண்ணூற்றொன்பது (199 = குறிஞ்சி 47, முல்லை 40, பாலை 38, மருதம் 39, நெய்தல் 35) சீர்பெற்ற பொருள்களைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்துள்ள பெருமை தொல்காப்பியனாரைச் சாரும். இவர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர். இவர் யாத்த தொல்காப்பியம் சிறந்ததொரு இலக்கண, இலக்கிய நூலாகும். எமக்குக் கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியம் மூத்ததும் முதன்மையானதும் ஆகும். இதனால் அவர் இன்றும் எம்முடன் வாழ்கின்றார்.