ஆய்வு: ‘கடல்காண் படல’த்தில் – சங்கச் செவ்வி

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
தமிழ் இலக்கிய, இலக்கண வளத்தைச் சங்கப் பாடல்களின் தனித்தன்மைகளைக் கொண்டும், இலக்கண மரபுகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருட்பொதிவாக அமைந்த முதல், கரு, உரி என்னும் பாடற்கூறுகள், அகப்பாடல் பாடல்மரபுகள், திணைக்கோட்பாட்டு மரபுகள், அதன் கருவுரு ஆகியன தமிழ் இலக்கியங்களின் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், அறநூல்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் யாவற்றிலும் உட்பொதிவாக அமைந்து, இலக்கியத்தை வளப்படுத்தி வருவதனைக் காணலாம். 

தமிழ்மொழியின் தலைப்பெரும் காவியமாகத் திகழ்வது கம்பராமாயணம் ஆகும். அது தமிழ் மரபுக்கேற்றவகையில் படைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளமையால் இன்றைக்கும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.

கம்பர், வடமொழிக் காவியமான இராம காதையைத் தமிழில் கம்பர் இராமாயணமாகப் படைத்தளித்தாலும், அதில் தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளின் சாரத்தைக் காணஇயலும். சங்கச் செவ்விகளில் அகப்பாடல் மரபுகளையும், புறப்பாடல் மரபுகளையும் தன் காவியம் முழுவதும் ஒருசேரப் படைத்தளித்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவற்றோடு மட்டுமல்லாது, கம்பர், சங்க அகப்பொருள் மரபினைத் தழுவியே தனது காவியத்தைப் படைத்துள்ளார் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் அறியலாம். அவ்வகையில் கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கடல்காண் படலத்’தில்; உணர்த்தப்படும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் கூறுகளான அக, புறத் திணைக்கோட்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

சங்கச்செவ்வி
சங்க இலக்கியங்களின் உயிராக அமைபவை அதன் திணைக்கோட்பாட்டு மரபுகளாகும். ‘அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும் திணைமரபுகளுக்கு உட்பட்டே படைக்கப்பெற வேண்டும’; என்பது சங்க இலக்கியக்கொள்கைகளில் முதன்மையான கருத்தியலாக அமைந்திருக்கின்றது.

திணை
திணை என்பதற்கு ‘நிலம், இடம், வீடு, குலம், ஒழுக்கம்’ எனப் பல்வேறு பொருள்களைப் பேரகராதி கூறுகின்றது. (ப.1874) மரபுவழிப்பட்ட ஒழுக்கவிதிகள் திணை எனப்படுகின்றன. மேலும் திணை என்பதற்கு ஒழுக்கம் எனப் பொருள ;கொள்வதே பெரும்பான்மை உரையாசிரியர்களின் வழக்காறாக உள்ளது. இந்த ஒழுக்கத்தை அகவொழுக்கம், புறவொழுக்கம் எனப்பகுத்து அகத்திணை, புறத்திணை என வழங்கினர் பண்டை இலக்கண நூலோர்.

திணை இலக்கணப் பகுப்பு தழிழ்மொழிக்கு மட்டுமே உரியது என்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும். அகத்திணைகளை ஏழாகவும், புறத்திணைகளை ஏழாகவும் வகுத்துரைப்பது தொல்காப்பிய மரபு. இவற்றுள் அகத்திணை என்பது காதல் வாழ்வினையும், புறத்திணை என்பது சமூகவாழ்வினையும் குறித்து வருவது எனலாம்.

அகத்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப்படும். இந்த ஐந்தும் உள்ளம் ஒன்றிணைந்த காதலர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடியொற்றியமைந்ததாகும். இத்திணைகள் ஒவ்வொன்றும் முதல், கரு, உரி என முத்திறப் பொருள்களைப் பெற்றுவரும். 

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை.” (தொல்.பொருள்.நூ. 3)

என்னும் நூற்பா இதனை உணர்த்துகின்றது.

இவற்றுள் முதற்பொருள் என்பது நிலமும் பொழுதுமாகும். கருப்பொருள் என்பது நிலத்திற்குரிய தெய்வம், விளைபொருள், விலங்கு, பறவை, பறை, செய்தொழில், யாழ் போல்வனவாகும். உரிப்பொருள் என்பது புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல்; என்பனவாகும். இவற்றைப் பின்னணியாகவும் களமாகவும் கொண்டு அகப்பாடல்கள் படைக்கப்படும.; 

இனி, கம்பர் தனது காவியத்துள் எவ்வாறு இத்திணைக் கோட்பாட்டினைப் பின்பற்றி காவியத்தைச் சிறப்புறச் செய்துள்ள திறத்தினைக் காணலாம்.

கடல்காண் படலம்

சீதையை மீட்பதற்காக இலங்கை நோக்கிச் செல்லும் இராமன், தென்திசைக் கடலைக் கண்டு, அதன் கரையில் எழுபது வௌ;ளம் வானரப் படைகளோடு தங்கிய நிகழ்வு இப்படலத்துள் பேசப்படுகின்றது.

வானரப் படைகள் தென்கடற்பகுதியில் சென்று தங்குகிறது. இராமன் தென் கடலைக் காண்கிறான். தென்கடலிலிருந்து மேலெழுந்து வரும் கடற்காற்று தென்றலாக வந்து இராமனின் உள்ளத்தில் பலவிதச் சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.

நெய்தல் திணை

தொல்காப்பியர், கடலும் கடல் சார்ந்த இடத்தினையும் நெய்தல் எனக் குறிப்பிடுவார். கடல் இணைபிரிந்தவர்க்கு மேலும் துன்பத்தை மிகுவிக்கும் களமாக உள்ளது. கடலின் ஓயாத அலைகள், கடற்காற்று இவ்வெண்ணத்தை மேலும் கிளர்ச்சியுறச் செய்கிறது. 

காதலில் பிரிந்தவர்க்குத் துன்பம் இயல்பாகவே மிகுதியாக எழும். அப்பிரிவுத்துயரின் இரக்கவுணர்வினைப் புலப்படுத்துவதற்கு ஏற்ற களமாகக் கடலும் கடல் சார்ந்த இடமும் அமைகின்றது.

முதற்பொருள் : நிலம்

படலத்தின் தலைப்பு ‘கடல்காண் படலம’;. தலைப்பிலேயே கடலும் கடல் சார்ந்த பகுதியும் உண்டு. காட்சிப்பின்னணியாக இப்படலத்தில் கடற்பகுதி அமைகின்றது.

பொழுது

தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் கடலும் கானலும் காணுந்தொறும் இரக்கம் மிகுதலால், கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் என்றார். அன்றியும் கடற்கரைக் கழிகளில் நெய்தல் மலர் சிறந்து விளங்குவதால் நெய்தல் எனப் பெயர் வந்ததாகக் கொள்ளலாம். இக்கடற்கரையில் இரக்கம் மிகுந்து தோன்றும் நேரம் சுடர்படும் பகலின் இறுதிக்காலமாகும். இரைதேடிய பின் பல்வேறு வகைப்பட்ட பறவையினங்கள் தத்தம் கூடுநோக்கித் திரும்பி வருதலும், புன்னை, தாழை முதலிய பு+க்களின் மணம் பரவுதலும் இரங்கற்பொருள் தோன்றுதற்குக் காரணமாகின்ற பொழுது சுடர்படு வீழ்பொழுது அல்லது ஞாயிறு வீழ்பொழுது ஆகும். இதனையே இலக்கண ஆசிரியர்கள் எல்-சு+ரியன்: படு-படுதல்) எனக் குறித்தனர். இது நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதாகும்.

“……………… எற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”    (தொல்.அகம். நூ. 8)

என்னும் நூற்பா வேனில் காலத்தையும், ஞாயிறுவீழ் பொழுதையும் நெய்தலுக்குரியதாக் குறிப்பிடுகின்றது.

சீதை பிரிவால் எழுந்த காமநோயால் இராமன் இரவுப்பொழுது முழுவதும் உறங்காது விழித்திருந்தான். இதனை இப்படலத்துள்,

“கங்குல் பொழுதும் துயிலாத
கண்ணன் கடலைக் கண்ணுற்றான்”    (பா. 6188:7-8)

என்று உரைக்கின்றார் கம்பர். அதாவது, நெய்தலின் கடற்பரப்பில் இரக்கம் மிகுதியாக எழும் நேரம் இரவுப்பொழுதாகும். அத்தகு இரவுப்பொழுதில் உறங்காது தவித்ததாக இராமனைக் காட்டுகின்றார். இதில் ஞாயிறு வீழ்பொழுது (நள்ளிரவு) பின்னணியாக அமைந்துள்ளதனை அறியலாம்.

கருப்பொருள்

ஒவ்வொரு நிலத்திற்கே உரிய விளைபொருள்கள் கருப்பொருள்களாகும். இதனைக் கருத்தில் கொண்ட கம்பர், இராமன் சீதையை நினைத்த காட்சியில் 

“சங்கின் பொலிந்த கையாளை”     (பா. 6188:3)

என்று சீதை பற்றிய குறிப்பினை உணர்த்துவதற்குச் சங்கினைக் காட்சிப்படுத்துகின்றார். கடல்விளை பொருளான சங்கணிந்த வளையலை உடையவள் சீதை, எனக் கூறியுள்ள திறம் உணரத்தக்கதாகும்.

இதேபோன்று இப்படலத்தில்,

“…………….நுரைத் தொகையும்
முத்தும் சிந்திப் புடைசுருட்டி”    (பா. 6189:6)

“முரல் முறுவல் குறிகாட்டி,
முத்தே! உயிரை முடிப்பாயோ?” (பா. 6193:8)

என்னும் இடங்களில் கடலின் விளைபொருளான முத்து எனக் குறித்துள்ளதனைக் காணலாம்.

உரிப்பொருள்

நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும். ‘காலைப்பொழுதில் இரைதேடச் சென்ற விலங்குகளும், பறவைகளும் தத்தம் துணைநாடித் திரும்பி வருதலையும், மாலைவேளையில் தோன்றும் நிலவின் எழிலையும் கண்ட தலைவி, தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து வருந்துவாள். இரவில் ஊரெல்லாம் துஞ்சும் நிலையில் இருக்க, தான் மட்டும் தூங்காது இருப்பவும், அந்நிலையில் கடல் அலையின் ஓசையும், அன்றிற் பறவையின் குரலும் அவள் துயரத்தை மேலும் மிகுதியாக்குதலும் இயற்கையான நிகழ்வாகும்’ என்று கூறுவர். இங்கு தலைவியின் மீதுற்ற காதலால் தலைவன் துயிலாது விழித்திருப்பது அறியத்தக்கதாகும்.

சீதையை மீட்பதற்காகச் செல்லும் இராமனின் உள்ளத்தில் அவள் பற்றிய நினைவே மேலோங்கி உள்ளது. இமைப்பொழுதும் மறவாத உள்ளத்தனான இராமன், கடலைக் காண்கிறான் அவன் உள்ளத்தில் சீதை பற்றிய எண்ணவோட்டம் மேலும் அதிகரிக்கின்றது. அக்காட்சியை கொல்லன் உலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினை ஒத்ததாய் அவனது மனநிலை இருந்தது என்கிறார். இராமனது துயரநிலையினை இரங்கற்பொருளில்,

“வழிக்கும் கண்ணீர் அழுவத்து
வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூங்கணைக்கும்
பற்றா நின்றான் பொன்தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஒல்உலையில்
துள்ளும் பொறியின் சுடும் அன்னோ?
கொழிக்கும் கடலின் நெடுந்திரைவாய்த்
தென்றல் தூற்றும் குறுந்திவலை.” (பா. 6190)

என்று குறிப்பிடுகின்றார் கம்பர்.

கடலின் இரக்கவுணர்வு

இராமன் தன்னிடத்தை விட்டு நீங்கினான் என்பதனை உணர்ந்த பாற்கடல் அவனது துயரநிலைக்கு இரக்கம் கொண்டது. இராமனின் துயர்படிந்த முகத்தைக் கண்ட கடலும் அவனது நிலைக்கு மனம் இரங்கியது. அவனது வருத்தம் விரைவில் தீர்ந்திட வேண்டும்;;. சீதையின் துயரை விரைவில் நீ துடைத்திட வேண்டும்; என்னும் பொருளில்,

“இந்து அன்ன நுதல் பேதை
இருந்தாள் நீங்கா இடர்;க்கொடியேன்
தந்த பாவை தவப்பாவை
தனிமை தகவோ? எனத் தளர்ந்து
கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர்த் தாளில்
வீழ்வது ஏய்க்கும், மறிகடலே.” (பா. 6194)

என்னும் பாடலைப் படைத்துள்ளார். கடலானது, பிறைபோலும் நெற்றியினையுடைய சீதை துன்பத்தில் அகப்பட்டாள்; கொடியேன் பெற்ற கண்மணிப் பாவை போல்பவளும், தவப்பயனால் உதித்தவளுமாகிய அவள் தனியே இருந்து தவித்தல் தகுமோ? அவளது துயரை நீ களைய மாட்டாயா? என வினவும் நோக்கில், தன் கண்ணீரான முத்துக்களை அலைகளாகப் பரப்பி இராமனின் பாதங்களில் விழுந்து முறையிடுவது போலிருந்தது அக்காட்சி என்று குறிப்பிடுகின்றார் கம்பர். 

தன்னைச் சரணடைந்தவர் துயரைப் போக்குபவன் இராமன். மற்றவர்களிடம் அன்பையே பொழிபவன். எனினும், சூழல் (விதி) அவனுக்கும் துயரைத் தந்துள்ளது. அவனது துயரத்தைக் கண்ட கடல் தன் இரக்க உணர்வினை இவ்வாறு வெளிப்படுத்தியது என்றும் கொள்ளலாம்.

அஃறிணைப் பொருள்கள் சிந்திக்கும் திறனற்றவை. எனினும் படைப்பாளர்கள் பார்வையில் அவையும் பாடுபொருளில் இடம்பெறும்போது அவற்றின் செயல்பாடுகள் அறிவுறுத்துவனவாக, செய்வனவாக அல்லது பேசுவனவாக அமையும். இக்குறிப்பை மெய்ப்படுத்தும் வகையில் கடல் தன் கோரிக்கையை இராமனின் பாதங்களில் சென்று தழுவிச்;;சொல்லியது என்றும், சீதையின் பிரிவுத்துயரால் வருந்திநிற்கும் இராமனின் உடல்வெப்பம் தணியுமாறு கடல் தனது திரையாகிய கையால் நுரைப்பு+வாகக் கலவைச் சாந்தினை அள்ளிப்பு+சுவது போல் அச்செயல் இருந்தது என்றும் பாடற்புனைந்துள்ள திறம், கற்பனை நயம் செறிந்தவையாகும்.

‘திணைப்பாடல்களில் முதற்பொருளும் உரிப்பொருளும் கூட இல்லாமற் போகலாம்: ஆனால், உரிப்பொருளின்றிப் பாடல்கள் அமைதல் இல்லை’ என்பதனை விளக்கும் விதத்தில் கம்பர் உரிப்பொருளினைச் சிறப்புறக் கையாண்டு தன் காவியத்தைச் சிறப்பித்துள்ளார்.

புறத்திணைக் கூறுகள்

தும்பைத்திணை

நெய்தல் திணைக்குப் புறமாக அமைந்த திணை தும்பை ஆகும். இதனைத் தொல்காப்பியர்,

“தும்பை தானே நெய்தலது புறனே”    (தொல்.பொருள். நூ. 1015)

“மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற்றென்ப”    (தொல்.பொருள். நூ. 1016)

என்னும் நூற்பாக்களில் குறிப்பிடுகின்றார்.

நெய்தல், தும்பைத் திணைக்குப் புறமாக அமைவது எவ்வாறு எனின், ‘கடலும் கடல்சார்ந்த மணல்வெளியும் நெய்தல் நிலமாகும். மணற்பாங்கான இடத்தினின்று போர் நிகழும். நெய்தலுக்குரிய காலைப்பொழுது போர் தொடங்கும் காலம் ஆகும். தலைவன் பிரிவால் தலைவி இரங்குதல்போல, இறந்தவர்களின் சுற்றத்தார் இரங்குவதும், வீரக்குறிப்பின் அருள்பற்றி வீரர்கள் இரங்குதலும், ஒருவருமொழியாத் தொகை நிலைக்கண் கண்டோர் இரங்குதலும் ஆகிய முதல், கரு, உரி என்னும் மூன்றும் ஒத்தலான் நெய்தலுக்குத் தும்பை புறனாக அமைந்தது” என்பர். இத்தகு புறத்திணையின் கூறுகளை இப்பாடற்பகுதியில் காணலாம்.

இராமன் போருக்குத் தயாராகிவிட்ட நிலையையும், இராவணனோடு பொருதத் துணிந்த நிகழ்வும் தும்பைத் திணையின் பாற்பட்டதாகக் கொள்ளலாம்.

புறப்பாடல்களில் போரின்பொருட்டுப் பிரிந்துசென்ற தலைவன், பாசறைக்கண் தலைவியை நினைத்து மருகுவது ‘பாசறைப்புலம்பல’; என்னும் திணையாக்கிக் கூறுவர் இலக்கணநூலோர்.

பாசறையில் பாடிவீடமைத்துத் தங்கியிருக்கும் தலைவன், தலைவியை நினைத்துப் பார்ப்பதாக முல்லைப்பாட்டில் குறிப்பிடுவார் நப்பூதனார். அக்காட்சியை ஒப்பதாய் இந்நிகழ்வும் அமைந்திருப்பதனை உற்றுநோக்கலாம்.

சான்றாண்மை மிக்க சங்கப் பாடல்கள் அதன் கருத்தியல் வளத்தில் நிலைபெற்றதோடு மட்டுமல்லாது, அதன் படைப்பாக்க முறைகளாலும் நிலைபேறு பெற்றன. இதன் பொருட்டே தமிழ்ப்புலவர்களும், தமிழ்க்கவிஞர்களும் சங்க இலக்கியப் பாடல் மரபுகளின் தாக்கத்திலிருந்து விடுபட இயலாதவர்களாக விளங்கியுள்ளனர் என்பதனைத் தமிழ் இலக்கியத்தின் எல்லா நிலைகளிலும் பொருத்திக் காணமுடியும்.

பெறப்படும் முடிவுகளாவன :

1. கம்பர் தன் காவியத்துள் திணைக்கோட்பாட்டினைச் சங்கப் பாடல் மரபுகளுக்கேற்பப் பின்பற்றியுள்ளார். அதன் மரபுத் தொடர்ச்சியைக் கம்பராமாயணப் பாடல்களைப் படித்தறிகையில் தெளிவாகிறது.
2. சங்கச் செவ்வியல் பண்புகளான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருட் கூறுகள் கம்பராமாயணத்துள் காட்சி விளக்கப் பின்னணிகளிலும், கதைமாந்தர் நிகழ்வுகளின் செயல்களிலும் புலப்படுத்தப்பட்டுள்ளது.
3. கம்பராமாயணத்துள் கருத்துணர்வு, காட்சிப்பின்னணி என்னும் இரண்டிலும் திணைக்கோட்பாடு இடம்பெற்றுள்ளது.
5. கடல்காண் படலத்தில் நெய்தல் திணைக்கோட்பாட்டினைப் பின்பற்றியுள்ளார். அது முதல், கரு, உரி என்னும் முப்பொருள் திறத்தனவாய் அமைந்துள்ளன.

துணைநின்ற நூல்கள் :
1.கம்பராமாயணம், யுத்தகாண்டம், (முதற்பாகம்) 
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு, 2010
2.தமிழ்ப்பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், பதிப்பு 1968
3.தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பரணர் (உரை) கழக வெளியீடு, பதிப்பு, 2010

psmnthn757@gmail.com

* கட்டுரையாளர் –  – முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை , அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002 –