ஆய்வு: கடவுள் வரலாறு

கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே  ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்? ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை.  கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.     கடவுளைத்தேடி காலம் கடந்து பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.

1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு

இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.

மலை, காடு, நதி, கடல் என அனைத்தும் பல்வேறு தனித்துவங்களுடைய உயிரினங்களைச் சுமந்துகொண்டிருந்தன. உயிரினங்களுள் உயிரினமாக மனித மூதாதையர்களும் திரிந்துகொண்டிருந்தனர். நாங்கள் மனித மூதாதையர்களின் வாழ்க்கையைக் கவனிக்கத் தொடங்கினோம். நவீன கால மனித உலகின் எந்தப் பண்புகளையும் அவர்களிடம் காண முடியவில்லை. இயற்கையின் தான்தோன்றித்தனமான அசைவுகளுக்கு ஏற்றபடி வாழ்ந்து கொண்டிருந்தனர். இயற்கையைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்துகின்ற ஆயுதமாக மனித மூளை உருமாறவில்லை. எண்ணங்களைச் சிந்தித்து பகுத்தறிந்து செயல்படுகின்ற மனித அறிவு தோன்றியிருக்கவில்லை. மனித அறிவு தோன்றாததால் அறியாமைகளும் தோன்றவில்லை. அறிவு பற்றியும் அறியாமை பற்றியும் எந்தக் கேள்விகளும் இல்லை. பதில்களும் இல்லை. கேள்வி பதில் இல்லாததால் உரையாடல் இல்லை. உரையாடல் இல்லாததால் கருத்துக்கள் இல்லை. கருத்துக்கள் இல்லாததால் கதைகள், கலைகள், துறைகள், மொழிகள் எவையும் இல்லை.

கொடூரமான வழ்க்கைப் போரில் வேட்டை மிருகங்களுக்கு இரையாகினர். உணவிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் மறைந்து மறைந்து வாழ்ந்தனர். வேட்டை மிருகங்கள் உண்டு முடித்த எஞ்சிய இறைச்சிகளையும் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். அவர்களது வாழ்க்கை மனித சமூகமாக உருப்பெறத் தொடங்காத வாழ்க்கை. இயற்கை அவர்களைப் பலவீனமான உயிரினங்களின் வரிசையில் இடம்பெறச் செய்திருந்தது. அவர்களது வாழ்க்கையில் கடவுள் பற்றிய எந்த நம்பிக்கைகளையும் செயல்பாடுகளையும் காண முடியவில்லை. மற்ற உயிரினங்களைப்போல இயல்பாக வாழ்ந்துகொண்டிருந்தனர். மனித மூதாதையர்கள் எண்ணற்ற தலைமுறைகளைக் கடந்து மனிதர்களாக உருமாறியிருந்தார்கள். வாழ்க்கைப் போரில் பிழைப்பதற்கான ஓட்டத்தில் மனித மூதாதையரின் மூளை, மனித மூளையாகப் பக்குவப்பட்டிருந்தது. எண்ணங்களைச் சிந்தனை செய்துப் பகுத்தறியப் பழகியிருந்தனர். இயற்கைக்குக் கட்டுப்படுபவர்களாக அல்லாமல் கருவிகளால் இயற்கையைக் கட்டுப்படுத்தத் தொடங்கியிருந்தனர். கற்கள், கட்டைகள், குச்சிகள், எலும்புகள் போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தும் உயிரினமாக மாறியிருந்தனர். இயற்கையைப் பற்றிய கண்டுபிடிப்புகளின் தொடக்கமே கருவிகளின் தொடக்கமாக அமைந்தன. கருவிகள் மனிதர்களின் தனித்துவமாக உருவாகியிருந்தன. கருவிகளைப் பயன்படுத்துகின்ற மனித உழைப்பு அவர்களின் வாழ்வை முந்தைய நிலையிலிருந்து படிப்படியாக எளிமைப்படுத்தத் தொடங்கியிருந்தது.

இயற்கைப் பொருட்களை கருவியாகப் பயன்படுத்துகின்ற நிலையிலிருந்து இயற்கையில் அல்லாத புதியக் கருவிகளை உருவாக்கத் தொடங்கினர். பழைய செயலிலிருந்து புதிய அறிவும், பழைய அறிவிலிருந்து புதிய செயலும் என்ற முறையில், மனித உழைப்பு வலிமை பெற்றுக் கொண்டிருந்தது. வாழ்வதற்காக இயற்கை மீது திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்ட மனிதர்கள் தம்மைப் பற்றியும் இயற்கையின் சவால்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்றனர். ஏராளமான கேள்விகள் உருவெடுத்தன, பதில்கள் உருவாகவில்லை. அச்சங்கள் உருவெடுத்தன, அறிதல் உருவாகவில்லை. வாழ்க்கை பற்றிய மனிதர்களது சிற்றறிவு, அறியாமைப் பெருங்கடலை உருவாக்கிக்கொண்டு மிதந்தது. மழை, இடி, மின்னல், நிழல், எதிரொலி, கனவு போன்றவைப் பற்றிய உண்மைகள் அறிவிற்கு எட்டாதவையாக இருந்தன.

அறிவிற்கு எட்ட முடியாத கேள்விகளுக்கு கற்பனைகளால் விடைகளைப் படைத்தனர். அறியாமைகள் மனித கற்பனைகளால் நிரம்பிக்கொண்டிருந்தன. அந்தக் கற்பனைகளில் ஆதிக் கடவுள் உருவாகத் தொடங்கியது. இயற்கை மீது மனிதர்கள் மாற்றங்களைத் திட்டமிட்டுப் படைப்பதைப்போல, இயற்கையும் மனிதரும் திட்டமிட்டப் படைப்பாக உருவாகினர் என்பதாகக் கருதத் தொடங்கினர். இந்தத் திட்டமிட்டப் படைப்பு யாரால் நிகழ்ந்தது என்ற கேள்விக்கு கற்பனையாற்றலால் பதிலை உருவாக்கினர். அந்தப் பதில் அனைத்தும் கடந்துள்ள கடவுள் என்பதாக உருப்பெற்றது. தமது அச்சத்திற்கும், அறியாமைக்கும், மரியாதைக்கும், உரிய பொருட்கள் மீது கடவுள்  என்ற கருத்தை இணைத்து உணரத் தொடங்கினர். மழை, இடி, மரம், காடு, சூரியன், விண்மின், நிலா, விலங்கு, பறவை, இறந்தவர் பற்றிய நினைவுகள் போன்ற அனைத்தும் கடவுள்களாக உணரப்பட்டன. இந்தக் கடவுள்களில் பாலினக் குறியீடுகளே கட்டமையவில்லை. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இங்கு கடவுளாக இல்லை. மனித உருவங்களுடன் கடவுள் இன்னும் இணைக்கப்படவில்லை. இயல்பான இயற்கை பொருட்களே கடவுளாக வணங்கப்படுகின்றன. அணங்கு, சூர், நாகம், கார், காள், இருள் போன்ற பெயர்களே கடவுளாக அறியப்படுகின்றன. கடவுளை மனித உருவத்தில் காண்பதற்கு பல தலைமுறைகளைக் கடந்து பயணிக்க வேண்டியுள்ளது.

பெண்களைத் கடவுளாக வழிபடுதல்
மனித உருவங்களில் நாங்கள் கவனித்த முதல் கடவுள்களாகப் பெண் உருவங்களேத் திகழ்ந்தன. இயற்கை கடவுள்கள் அனைத்தும் பெண்ணின் அடையாளங்களை ஏற்றிருந்தன. இருட்டையும் கருப்பையும் உணர்த்திக்கொண்டிருந்த கார், காள் போன்ற கடவுள்கள் காரி, காளி என்பதாக உருமாறியிருந்தன. மழை, நாகம், வனம் போன்றன மாரியாத்தா, நாகம்மா, வனதேவதை என்ற பெயர்களைப் பெற்றிருந்தன. கொற்றவை, இருளி, சூழி, எசக்கி போன்று எண்ணற்றப் பெண் கடவுள்கள் உருப்பெற்றிருந்தன. இந்தக் கடவுள்கள் தோன்றிய காலம் தாய்த் தலைமை சமூகமாகும். இந்தக் கடவுள்களுக்கு கணவர் உறவுடைய எந்த ஆண் கடவுள்களும் இருந்திருக்கவில்லை. தாய் தலைமை சமூக மனிதர்கள் ஒன்றிணைந்து சிந்தித்துச் செயல்படுகின்ற சமூகமாக வாழத் தொடங்கியிருந்தனர். மனித இனமாகப் படிமலர்ந்த வெற்றியைத் தனிமனிதர்களாகத் திரிந்து நிலைநாட்ட முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தனர். வாழ்க்கை சவால்களை எதிர்கொள்கின்ற அவர்களது செயல்கள் திட்டமிட்ட உழைப்பில் ஈடுபடுவதன் அடிப்படையில் உருப்பெற்றிருந்தன. சகமனிதர்களாக ஒன்றிணைந்து பல மூளைகளால் சிந்தித்து  செயல்படுகின்ற வாழ்க்கையே பாதுகாப்பானது என்ற முறையில் மனித சமூகமாகப் பக்குவப்பட்டிருந்தனர். அதிக மூளைகளின் தேவை மனிதக் கூட்டம் அதிகரிப்பதற்கான அவசியத்தை உருவாக்கியது. மனிதர்கள் பெருகுவதற்கான அவசியத்திலிருந்து இனப்பெருக்கக் கடவுள் உருவாக்கப்பட்டிருந்தது. இனப்பெருக்கத்திற்கு பாலுறவு நடவடிக்கையே காரணம் என்ற உண்மை கண்டறியப்படாத காலமது. சகமனிதர்களை விரிவுபடுத்தி, பாதுகாப்பை வலிமைப்படுத்த வேண்டி, இனப்பெருக்கத்திற்கான கடவுளை வழிபட்டனர். புதிய மனிதர்களைப் பெற்றெடுப்பவள் பெண். பெண் பூப்பெய்துகிறாள். பிறகு தாயாகிறாள். பூப்பெய்தாத எந்தப் பெண்ணும் தாயாகுவதில்லை. எனவே பெண்ணின் பூப்பெய்தலை இனப்பெருக்கக் கடவுளின் அறிவிப்பாக உணர்ந்தனர். பெண் பூப்பெய்துவிட்டால், இனப்பெருக்கக் கடவுள் இவளுக்கு குழந்தை பெறும் தகுதியைத் தந்துவிட்டதாக மகிழ்ந்தார்கள். குழந்தைகளைப் பெறுகின்ற தாயைக் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடினார்கள். இயற்கை கடவுள்கள் அனைத்தையும் தாய் உருவங்களுடன் இணைத்தனர். எண்ணற்றத் தாய்க் கடவுள்கள் உருவாகின.

நாங்கள் ஆராய்ந்தவரை அந்தத் தலைமுறை மனிதர்களிடம் தாயும், தாய்மையால் பெறப்பட்ட பிள்ளைகளும் முதன்மை உறவுகளாக இருந்தன. தந்தை, கணவர், மனைவி போன்ற உறவுகளே மனிதர்களிடம் தோன்றியிருக்கவில்லை.
யார் யாருடன் பாலுறவில் ஈடுபடக் கூடாது என்ற எந்த வரையறையும் இல்லாதநிலை, தாய்தலைமைச் சமூகத்தில்தான் மாறியிருக்கிறது. தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பாலுறவானது,  இனப்பெருக்கக் கடவுளை அவமதிக்கின்ற நடவடிக்கையாகத் தாய்த் தலைமைச் சமூகம் கருதத் தொடங்கியது. தாயும் பிள்ளைகளும் பாலுறவு உரிமையில் ஈடுபடுகின்ற முறை தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையே பாலுறவு வரலாற்றில் தோன்றிய முதல் வரைமுறை.
தாய் தனது குழந்தைகளையும் கூட்டத்தையும் தலைமை உணர்வுடன் வழிநடத்தினாள். அந்தத் தலைமையில் அதிகாரம், ஆக்கிரமிப்பு, சுயநலம், லாபம் போன்ற எந்தப் பண்புகளும் உருவாகியிருக்கவில்லை. அதாவது தாயின் தலைமைப் பண்பானது இயற்கையின் இயல்பாகவே விளங்கியது. அவள் தனது கூட்டத்தைப் பாதுகாத்து வழிநடத்த, காடு சார்ந்தப் பொருட்களைச் சேகரிக்கின்ற தொழிலை வலிமையாகக் கையாண்டாள். வேட்டையாடுதல், விவசாயம், மந்தை போன்ற தொழில்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தன. காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பகிர்கின்ற தாயினது நடவடிக்கையே கூட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தலைமைப் பண்பாக விளங்கியது.

தாய்க் கடவுள்கள் படிப்படியாகக் குடிசையில் தங்கவைக்கப்பட்டன. காடு சார்ந்தப் பொருட்களைச் சேகரித்தும், வேட்டைக்காக ஓடித்திரிந்தும் வாழ்கின்ற மனிதர்கள் கடவுள்களுக்கு கோயில் அமைக்கவில்லை. ஓரிடத்தில் தங்குகின்ற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாததால் குடிசையமைத்து வாழவில்லை. அவர்களது கடவுள்களும் ஓரிடத்தில் தங்கும் அடையாளமின்றி வெட்டவெளியில் அமைந்திருந்தன. மனிதர்களிடம் சிறிது சிறிதாக மந்தைத் தொழிலும் விவசாயமும் உருவாகத் தொடங்கின. இதனால் ஓரிடத்தில் குடிசையமைத்து வாழப் பழகினர். குடிசைகளை மையமாக அமைத்து கால்நடைகளை மேய்த்தனர், விவசாயம் செய்தனர். தங்களைப்போல கடவுள்களுக்கும் குடிசையமைக்கத் தொடங்கினர். வெட்ட வெளியில் நின்ற கடவுள்கள் படிப்படியாகக் குடிசைகளில் அமரப் பழகின.

ஒவ்வொரு பெண்ணும் கருவுறும் ஆற்றலை ஏற்பதற்கு முன்னர் இனப்பெருக்கக் கடவுளால் பூப்பெய்துகிறாள். பூப்பெய்திய ஒவ்வொரு பெண்களும் மனிதக் கூட்டத்தை அதிகரிக்க புதிய குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். பிள்ளைகளின் கூட்டத்தைப் பாராமரிக்கும் பொறுப்புடன், தாய் தலைமையேற்று பாதுகாத்தாள். மனிதக் கூட்டம் தாய்த் தலைமைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தன. இத்தகைய சமூகத் தேவையின் முக்கியத்துவத்திலிருந்து தாய்மை கொண்டாடப்பட்டிருக்கிறது. தாய்மையைக் கொண்டாடுகின்ற மனித சமூகத்தால் தாய்க் கடவுள்கள் உருவாகின. இயற்கைக் கடவுள்கள் அனைத்திலும் பெண்மையின் அடையாளங்கள் இணைக்கப்பட்டன. இயற்கைக் கடவுள்கள் எண்ணற்ற தாய்க் கடவுள்களாக உருப்பெற்றன. காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகமும், வேட்டை நாகரிகமும் தாய்க் கடவுள்களின் உலகமாகத் திகழ்ந்தன.

ஆண்களைக் கடவுளாக வழிபடுதல்
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலிருந்து கடவுள்களை ஆண் உருவத்தில் அறிய முடிந்தது. எங்கள் வேகத்தை நிதானித்து மக்களைக் கவனிக்கத் தொடங்கினோம். கற்கருவிகள் மரக்கருவிகள் அனைத்தும் மாறியிருந்தன. உலோகங்களால் கருவிகளைச் செய்து பயன்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். விவசாயமும் மந்தைத் தொழிலும் வளர்ச்சி பெற்றிருந்தன. இந்தத் தொழில்களின் வளர்ச்சி காடுசார்ந்த பொருள் சேகரிப்பின் அவசியத்தைக் குறைத்திருந்தது. தேவைக்கு அதிகமான பொருட்கள் சொத்துக்களாக உருவாகத் தொடங்கின.

சொத்துக்களைத் தாய் பராமரித்தாள். ஆனால், சொத்துக்களை ஆண்கள் உருவாக்கியிருந்தார்கள். ஆண்களின் அதிகபட்ச உழைப்பிலிருந்து சொத்துக்கள் உருவாகின. பெண்களின் இயல்பான உழைப்பு குறைந்தபட்சமாக இருந்தது. ரத்தப்போக்கு காலங்களிலும், கர்பக் காலங்களிலும் பெண்களுக்குச் சமூக ஓய்வு கிடைத்தன. அவள் உழைப்பிலிருந்து தற்சமயம் ஓய்வு பெற்று பராமரித்துக்கொள்ள உரிமை பெற்றிருந்தாள். ஆண்களுக்கு இத்தகைய ஓய்வுகள் இயற்கையாகவே கிடைக்கவில்லை. எனவே சமூகச் சொத்துக்களில் அதிக உழைப்பு ஆண்களுடையதாக இருந்தன. ஆனால் சொத்தின் உடைமை தாயிடமிருந்தது.

உழைப்பின் அளவை மதிப்பிடாமல் சொத்துக்களைத் தாய் பராமரித்தாள். அவள் நடவடிக்கைகள் சமூகத் தேவைகளை மட்டுமே கருதிக்கொண்டிருந்தன. ஆனால் சமூகத் தேவையைக் காட்டிலும் உழைப்பின் அளவையே ஆண்கள் உயர்வாகக் கருதினர். தாயின் தலைமையை வெறுக்கத் தொடங்கினர். சொத்தின் வலிமையிலிருந்து சமூகத் தலைமையைப் பெற ஆண்கள் முயற்சித்தனர்.

ஆண்களின் முயற்சிக்கு சொத்திலிருந்த அதிகபட்ச உழைப்பு நியாயத்தைக் கற்பிக்க உதவியது. இயற்கையில் அமைந்த தாய் தலைமைச் சமூகத்திற்கு எதிராக செயற்கையான ஆணதிகாரச் சமூகம் உருவாகத் தொடங்கியது. ஆணதிகாரச் சமூகத்தை ஆதரிப்பவர்கள் தாய் தலைமைக்கு எதிராக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். தாயின் தலைமைப் பண்பிற்கு எதிராக ஆண்கள் சொத்ததிகாரத்தைக் கையாண்டார்கள். சமூகச் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை தாயிடமிருந்து ஆண்கள் கைப்பற்றினார்கள்.

தாய் தலைமையால் பராமரிக்கப்பட்ட சமூகச் சொத்து ஆண்களின் தனிச்சொத்துக்களாக உருமாறின. சொத்ததிகாரத்தின் அடிப்படையில் ஆண்கள் கொண்டாடப்பட்டார்கள். தாய்க்கு நிகராக ஆண்கள் தந்தை உறவில் மதிக்கப்பட்டார்கள். மக்களின் கடவுள்கள் படிப்படியாக ஆண் உருவத்தை ஏற்கத் தொடங்கியிருந்தன. தாய்க் கடவுள்களின் கூட்டங்களுக்கு இடையில் தந்தை கடவுள்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

தாய்க் கடவுள்களுக்கும் தந்தை கடவுள்களுக்கும் இடையிலான பலவிதமான புனைவுகளை உருவாக்கினர். தாய்க் கடவுள்களைக் கொண்டாடுபவர்களுக்கும், தந்தைக் கடவுளைக் கொண்டாடுபவர்களுக்கும் இடையிலான போர்கள், பலவிதமானக் கதைகளாகப் புனையப்பட்டன. தந்தை கடவுளும் தாய்க் கடவுளும் போரிட்டதாகவும், தோற்றதாகவும், கொல்லப்பட்டதாகவும், சரணடைந்ததாகவும், வெற்றி பெற்றதாகவும் பலவிதமானக் கதைகள் உருப்பெற்றன.
நாங்கள் ஆண் உருவங்களில் அமைந்த ஏராளமானக் கடவுள்களைக் கண்டோம். இயற்கைக் கடவுள்கள் பெண் அடையாளங்களை ஏற்றதற்கு நிகராக, ஆண் அடையாளங்களையும் ஏற்கத் தொடங்கியுள்ளன. மாரியாத்தா மாரியப்பனாகவும், கருப்பி கருப்பனாகவும், நாகம்மா நாகப்பனாகவும் விரிவு பெற்றன. தனித்துவமான தாய்க் கடவுள்களுக்கு நிகரான தந்தைக் கடவுள்கள் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. தாய்த்தலைமை சமூகத்தின் பல்லாயிரம் ஆண்டு கால உணர்வுகளால், தந்தை கடவுள்களின் வளர்ச்சிகள் முடக்கப்பட்டே அமைந்துள்ளன. இத்தகைய முடக்கங்களைக் கடந்துதான் தந்தை கடவுளரின் மத நிறுவனங்கள் உலக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், மத நிறுவனங்களின் ஆதிக்கங்கள் இருந்தும்கூட மக்களின் நாடும், காடும், நதியும், கடலும், மலையும், அருவியும் தாய்க்கடவுள்களின் பெயர்களாலேயே இன்றும் அமைந்துள்ளன.

பத்தினியைக் கடவுளாக வழிபடுதல்

கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலிருந்து மக்கள் தலைமை சமூகத்தின் அறிவியல் தத்துவப் பண்பாடு சாத்தியமாகும்வரை, கடவுள் பற்றிய சமூக நம்பிக்கை தவிர்க்க முடியாதபடி அமைந்திருக்கும். தந்தை அதிகாரச் சமூகங்களில் சகமனிதர்களைப் பெற்றெடுக்கின்ற தாயின் சமூக மதிப்பு அழிந்துகொண்டிருந்தது. தாய், ஆணின் சொத்ததிகாரத்திற்கு கீழ்படிந்தாள். அவளது சமூகப் பாதுகாப்பிற்கு கீழ்படிதலே அவசியமாகியது. தாய், தந்தையின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டாள். சமூகத்தில் அடிமை என்ற புதிய உறவு தோன்றத் தொடங்கியது. சகமனிதர்கள் சொத்ததிகாரமுடைய ஆண்களுக்கு அடிமையானார்கள். சொத்ததிகாரம் உடையவர்கள் சமூக உழைப்பில் பங்கேற்காமல் அடிமைகளை உழைக்கச் செய்து சொத்துக்களை வலிமைபடுத்தினர்.

ஆண்களின் சொத்ததிகாரம் தலைமுறை கடந்து நீடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. தாய் தலைமையில் பராமரிக்கப்பட்ட சொத்துக்கள், அவளது பிள்ளைகளுக்கு உரிமையாகி வந்தன. ஆனால், தந்தையதிகாரச் சமூகத்தில் இந்த முறை சாத்தியப்படவில்லை. குழந்தை பெறுகின்ற ஆற்றல் ஆண்களுக்கு இல்லாததால், சொத்ததிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்ற முடியவில்லை. குழந்தை உருவாகின்ற ரகசியத்தைப் பற்றி தந்தை அதிகார சமூகத்தினர் தீவிரமாக சிந்தித்தனர். அவர்களது சிந்தனை கருவுருதல் பற்றிய உண்மையைக் கண்டறிந்தது.

பெண்ணின் கருவுருதலுக்குக் காரணம் இனப்பெருக்கக் கடவுள் அல்ல. ஆண்களுடன் ஈடுபடுகின்ற பாலுறவு உரிமையே பெண்ணைக் கருவுறச் செய்கிறது. இந்த உண்மை தந்தை அதிகாரச் சமூகம் நீடிப்பதற்கு தூண்டுகோளாக அமைந்தது. ஆண்கள் குழந்தை மீது உரிமை பெறுவதற்காக பெண்களைச் சொத்தாக்கினர். பெண்கள் சொந்த விருப்பத்திலிருந்து பாலுறவு உரிமையில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உருவாகின. எந்த ஆணின் சொத்துக்களைச் சார்ந்து வாழ்கிறாளோ, அந்த ஆணுடன் மட்டுமே பாலுறவில் ஈடுபட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டாள். அவளது குழந்தைகள் அந்த ஆணின் குழந்தைகளாக அங்கீகாரம் பெறத் தொடங்கின. சொத்ததிகாரமுடைய ஆணுக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற சொத்தாக பெண் மாற்றப்பட்டாள். ஆணின் குழந்தைகளைப் பெற்றுத்தரும் சொத்தாக அங்கீகாரம் பெறுவதே பெண்ணின் சமூகமதிப்பாக அடையாளம் பெறத் தொடங்கியது.

ஆணின் சொத்தாக பெண்ணை உருமாற்றுகின்ற நிகழ்வாக திருமணங்கள் கொண்டாடப்பட்டன. சமூகத்தில் ஏராளமானத் திருமணங்கள் நிகழத் தொடங்கின. திருமணமான ஆணும் பெண்ணும், கணவர் மனைவி என்ற உறவுப் பெயரில் அங்கீகரிக்கப்பட்டனர். குழந்தைகள் தாயின் அடையாளங்களை மறைத்து, தந்தையின் அடையாளங்களை ஏற்கத் தொடங்கின. தந்தை அடையாளம் ஆணதிகாரச் சமூகத்தை பல தலைமுறைகளாக வளரச் செய்தன. தந்தை அதிகாரச் சமூகம் உறுதிபெறத் தொடங்கியது.

தலைமைப் பண்பிலிருந்த பெண்கள் தந்தைக்கு கீழ்படிபவளாகவும், கணவருக்குக் கீழ்படிபவளாகவும், மகனுக்குக் கீழ்படிபவளாகவும் உருமாறியிருந்தாள். பாலுறவு உரிமையில் இயல்பாக வாழ்ந்த பெண்களை பாலுறவு அடிமைகளாகவே ஆணதிகாரம் உருமாற்றியிருந்தது. ஆணதிகாரச் சமூகம் சுமத்திய பாலுறவுக் கட்டுப்பாடுகளை பெண்கள் வெறுத்தனர். ஆணதிகாரத்தின் பாலுறவு விருப்பங்களால் தோன்றிய விபச்சார முறையும், கள்ளக்காதல் முறையும், பெண்களின் பாலுறவு உரிமை மீதான கட்டுப்பாடுகளை நெகிழ்ந்திருக்கும்படி செய்தன.

சொத்ததிகாரமுடைய ஆண்கள் தனக்கு சொத்துக்களாகிய பெண்களைக் கள்ளக்காதலிலிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டனர். திருநங்கைகளைக் கண்காணிப்பிற்கு அமர்த்தியும், வேட்டை நாய்களை உலவவிட்டும், பெண்களைப் பாதுகாத்தனர். அடக்குமுறை தன்னைத்தானே உடைத்துக்கொள்ளும் என்ற வரலாறு பெண்களுக்கும் பொருந்துமல்லவா. பெண்களின் பாலுறவு உரிமைகளை எந்தக் கட்டுப்பாடுகளாலும் தடுக்க முடியவில்லை. நவீன கால மனித உலகிலும் இந்த எதார்த்தத்தைப் பார்க்க முடிகின்றது.

இந்த எதார்த்தம் ஆணதிகாரச் சமூகத்தின் இயலாமையாக நீட்சி பெற்றது. இத்தகைய இயலாமையிலிருந்துதான் கற்புக் கடவுள்கள் உருவாக்கப்பட்டன. பெண்கள் ஆணின் சொத்தாக நேர்மையாக வாழ்வதில் பெருமையடைய வேண்டும். ஆணின் நிர்பந்தத்தால் அல்லாமல் தாமே விரும்பி பாலுறவுக் கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர்களாக, பெண்களை உருமாற்ற வேண்டும். இதற்கான முயற்சியாக ஆணதிகாரத்தால் திட்டமிட்டு  உருவாக்கப்பட்ட கடவுள்களே கற்புக் கடவுள்கள்.
கணவருக்குச் சொத்தாகிய நேர்மையான மனைவி, கடவுளின் ஆற்றலுக்கு நிகரானவளாகிறாள் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. மனைவி, கடவுளின் ஆற்றலைப் பெற்றதும் கற்புக் கடவுளாக மதிக்கப்படுகிறாள் என்ற நம்பிக்கையைப் பெண்களிடம் உருவாக்க முயன்றனர். பெண்களின் ஆழ்மன உணர்வில் கற்புக் கடவுளாக உருமாற வேண்டும் என்ற விருப்பம் விதைக்கப்பட்டது. கற்புக் கடவுள்கள் பற்றிய ஏராளமான கதைகள் உருவாகத் தொடங்கின. அவற்றில் கண்ணகி கதைகள் வலிமையான சமூக அங்கீகாரத்தைப் பெற்றன. புகழ்பெற்ற கண்ணகி இலக்கியமான இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் அறியப்படுகின்றது. ஆணதிகார முயற்சியிலிருந்து உருவாக்கப்பட்ட கற்புக் கடவுளாக கண்ணகி உருப்பெற்றிருந்தாள்.  தந்தை அதிகாரச் சமூகத்தால் ஏராளமான பத்தினிக் கடவுள்கள் உருவாக்கப்படாவிட்டாலும் பழைய தாய்க் கடவுளர்களை மனைவிகளாகப் புனைந்து கதைகட்டினார்கள். தாய்க் கடவுள்களுக்கு பொருத்தமற்ற முறையில் பத்தினி பட்டங்களைச் சூட்டினார்கள். கண்ணகி என்ற கற்புக் கடவுளையே கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில்  மக்கள் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுவது இத்தகைய பட்டங்களுக்கு மகுடம் அணிவிப்பதாகவே அமைகிறது. இத்தகைய பத்தினி மகுடங்கள் அனைத்தும், தாய்த் தலைமை சமூகத்தை மூடி மறைப்பதற்கு, தந்தையதிகாரம் மேற்கொள்கின்ற முயற்சிகளாவும் அமைகின்றன.

கடவுளின் அந்தம்
சொத்தாதிக்கம் தோன்றிய உலகிலிருந்து கடவுள் நம்பிக்கை இரண்டு வடிவில் செயல்படுகின்றது. ஒன்று, அடிமைப்பட்ட மக்கள் தங்களது மன அழுத்த நோயிலிருந்து விடுபட கடவுளைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டு, அடக்கி ஆள்பவர்கள் மக்களை அடிமைப்படுத்தும் கருவியாகக் கடவுளைப் பயன்படுத்துகிறார்கள்.

அறியாமைக் கடலை எதிர்கொண்டு விடுபட, காலந்தோறும் முயன்றுகொண்டிருக்கிறது மனித அறிவு. நவீன கால மனித உலகம் சமூக விடுதலையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

மனித அறிவுகள் உழைப்பை புதுமை செய்தன. அறியாமைகள் கடவுள்களைப் புதுமை செய்தன. மனித அறிவால் உருப்பெற்ற அறியாமைகள் அறிவை மூழ்கடித்தன. எனினும், அறியாமைகளால் உருப்பெற்ற கடவுள் நம்பிக்கைகளும் மனித இனம் பிழைத்து நீடித்ததற்கு உதவியிருப்பதை மறுக்க முடியாது. அறிவியல் தத்துவம் முதிர்ச்சியடையாத சூழலில், அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் வளர்ச்சியடையாத நிலைமைகளில் இத்தகைய உதவிகள் அவசியப்பட்டிருக்கலாம். ஆனால், சமூக வளர்ச்சியின் இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கைகள் அவசியமற்ற சுமைகளாக மாறிவிட்டன. மாறாக, சமூக அக்கறையின் எழுச்சிகளும், அறிவியல் தத்துவப் பயிற்சிகளும், சமூகவிஞ்ஞான முயற்சிகளும் அவசியப்படுகின்றன.
அறியாமைத் தத்துவத்தின் இடிக்க முடியாத கோட்டைகள் சமூக விஞ்ஞானிகளால் நொறுங்கிக் கொண்டு வருகின்றன. அழிந்து போகும் உயிரினங்களின் வரிசையை நெருங்கிக் கொண்டிருக்கும் மனித இனம் சமூக விஞ்ஞானத்தால் மீட்கப்படும். சமூக விஞ்ஞானிகளின் அறிவியல் தத்துவ முயற்சியால் மனிதஇனம் இயற்கையின் அங்கமாக நீடித்து வாழப்போவது நிச்சயம்.

துணை செய்தவை
1.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்    தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
2.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை : பாரதி புத்தகாலயம்.
3.செல்வராசு, சிலம்பு நா. 2013. கண்ணகி தொன்மம். நாகர் கோவில் : காலச்சுவடு.
4.சுரேஷ், செள. 2016. சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் சமயமும் கண்ணகி தெய்வநிலையாக்கமும் : இனவரைவியல் நோக்கு. முனைவர்பட்ட ஆய்வேடு. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
5.பக்தவத்சல பாரதி. 2003.(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6.புதியவன். மே 2016. காதல் வரலாறு. புதிய கோடாங்கி. பக். 20-25.
https://puthiyavansiva.blogspot.in/2016/06/blog-post_71.html   
7.புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37.
https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
8.ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.

puthiyavan1986@gmail.com