ஆய்வு: கனடா மண்ணில் தமிழிலக்கியம் தோற்றமும் தொடர்ச்சியும்

– கணையாழி சஞ்சிகை வெளியிட்ட கனடாச்சிறப்பிதழில் (ஜனவரி 2017 இதழ்)  வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. கட்டுரையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி உதவிய  பேராசிரியர்  கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி. – பதிவுகள் –


முன்னீடு
- பேராசிரியர்  கலாநிதி நா. சுப்பிரமணியன் -தமிழிலக்கியங்களை வகைப்படுத்தும் நோக்கில் கடந்த ஏறத்தாழ முப்பதாண்டுகளில் வழக்கிற்கு வந்து, நிலைத்து விட்ட அடையாளக் குறிகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது ’புலம்பெயர் இலக்கியம்’. ஈழத்தின் விடுதலைப் போராட்டச் சூழலிலே அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் புகலடைந்த தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ள இலக்கியச் செயற்பாடுகளை ஒரு தனிவகையாக இனங்காட்டும் நோக்கில்  உருவாகி வழக்கில் நிலைத்துவிட்ட தொடர், இது. மேற்சுட்டியவாறு பல்வேறு நாடுகளிலும் புகலடைந்த ஈழத்தமிழர்களிற் பெரும்பாலோர் அவ்வந்நாடுகளின் குடிமக்களாகிவிட்டனர். அவர்களின் பிள்ளைகளும் அவ்வந்நாடுகளின் குடிமக்களாகவே வாழத்தலைப்பட்டுவிட்டனர். அவர்களில் ஒருசாரார் தங்கள் தாய்மொழியில் இலக்கியங்கள் படைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இவ்வாறான வரலாற்றுச்  சூழலிலே   அவ்வந் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் மொழிசார் இலக்கிய முயற்சிகளை ’புலமபெயர்இலக்கியம்’ என அடையாளஞ்சுட்டி இனக்காட்டுவதற்கான அவசியம்  குறைந்துவிட்டது. மாறாக,அவ்வாக்கங்களை அவ்வந்நாடுகள் மற்றும் புவிச்சூழல்களை மையப்படுத்தி, ’அவுஸ்திரேலியத் தமிழிலக்கியம்’, ‘ஐரோப்பியத் தமிழிலக்கியம்’, ’கனடியத் தமிழிலக்கியம்’ முதலான பெயர்களில் தனித்தனியாக அடையாளப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டம் உருவாகிவிட்டது. இவ்வாறான வரலற்றுச் செல்நெறியைக் கோடிட்டுக் காட்டும் முயற்சியாக அமையும் கட்டுரை ,இது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பெருந்தொகையினராக வாழும் நாடுகளில் ஒன்றான  கனடாவிலே தமிழிலக்கிய முயற்சிகள் தோன்றிய சூழல் மற்றும் அவை தொடர்ந்த முறைமைகள் ஆகியன தொடர்பான முக்கிய குறிப்புகள் இக்கட்டுரையில் முன்வைக்கப்படவுள்ளன.

1.கனடா  மண்ணிலே தமிழிலக்கிய முயற்சிகளின்  தோற்றம்
கனடா மண்ணிலே  தமிழர் குடியேற்றமானதுஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. ஏறத்தாழ 1960-70களிலே தமிழகம், ஈழம் மற்றும்சில நாடுகளிலிருந்து தமிழர்கள் கல்வி நோக்கிலும் பணிகளை மையப்படுத்தியும் இம்மண்ணுக்கு வந்துள்ளனர். அவ்வாறு வந்தோரில் ஒருசாரார் இங்கு நிரந்தரமாக வாழவும் தொடங்கிவிட்டனர். அக்காலகட்டங்களில் இங்கு தமிழிலக்கியம்சார்ந்த முயற்சிகள் எவையாவது நடைபெற்றள்ளனவா என்பது தொடர்பான செய்திகள் இதுவரையான தகவல்கள் தேட்டங்களினூடாக நமக்குக் கிடைக்கவில்லை. அண்மைக்காலம்வரை நமக்குக்கிடைத்துள்ள தகவல்களின்படி 1980களிலிருந்தே தமிழிலக்கியம் தொடர்பான முயற்சிகள் இங்கு முளைவிடத் தொடங்கியிருக்க வேண்டும் எனக் கருத வேண்டியள்ளது.

இவ்வகையில், காலத்தால் முற்பட்ட தமிழிலக்கியச் சான்றாக அறியப்படுவது ரொறன்ரோவில் 1981 டிசம்பரில்; வெளிவரத் தொடங்கிய ‘தமிழர் செந்தாமரைஎன்ற மாத இதழாகும். இதிலே ’’பாரதி கண்ட சமுதாயம்’’ என்ற கட்டுரை கையெழுத்து நகலாக இடம்பெற்றுள்ளது(எழுதியவர் யார் என்ற தகவல் இடம்பெறவில்லை) இதனுடைய நான்காவது இதழ் 1982 மார்ச்சில் வெளிவந்தது. திருமதி அலமேலு மணி அவர்கள் (தமிழகக் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மகள் ) எழுதிய ‘நாட்டு நடப்பு‘ என்ற கவிதையும் பேராசிரியர் பசுபதி அவர்களின் ‘தமிழணங்கு’ என்ற கவிதையும் இடம்

பெற்றுள்ளன.1982செப்டம்பரில்வெளிவந்த பத்தாவது இதழிலே அவ்வாண்டு ரொறன்ரோவில் பாரதி கலாமன்றம் என்ற அமைப்பு நிகழ்த்திய பாரதிவிழா பற்றி மேற்சுட்டிய அலமேலு மணியவர்கள் எழுதிய கட்டுரையொன்று இடம்பெற்றுள்ளது.1 மேற்படி செந்தாமரை இதழைத் தொடர்ந்து 1984-85 காலப்பகுதியிலே புரட்சிப்பாதை மற்றும்  தமிழ் எழில் ஆகிய இரு கையெழுத்து இதழ்கள் மொன்றியால் நகரிலிருந்து வெளிவந்தன.2

மேற்சுட்டிய சான்றாதாரங்களின்படி கனடாவின் தமிழிலக்கியம் இப்பொழுது தனது முப்பத் தாறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது என்பது தெளிவு. இவ்வகையில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அது நடந்துவந்த பாதையே இங்க நமது கவனத்துக்குரியதாகிறது. இத்தொடர்பில் நமது கவனத்தக்குரிய அடுத்த அம்சம் இம்மண்ணின் தமிழிலக்கிய முயற்சிகள் தொடர்ந்தமை பற்றியதாகும்.

இத்தொடர்பிலே, கனடா மண்ணிண் மூத்த தமிழிலக்கியவாதிகளுள் ஒருவரும் பதிவுகள் இணைய தளத்தின் ஆசிரியருமான திரு வ.ந.கிரிதரன் அவர்கள் அவ்விணையதளத்தில் தந்துள்ள தகவல்கள் இங்கு நமது கவனத்துக்குரியன. அதிலே அவர், ‘புரட்சிப்பாதை’ இதழின் ஆரம்ப வெளியீடுகளில் தான் எழுதியுள்ளவையான ‘மண்ணின் குரல்’ நாவல் மற்றும்  கவிதைகள், கட்டுரைகள் ஆகியன தொடர்பான  தகவல்களையும் அவ்வெழுத்துகளுக்குப் பின்புலமாகத் திகழ்ந்துள்ள உணர்வுச் சூழலையும்  பதிவுசெய்துள்ளார். அத் தகவற்குறிப்பின் முக்கியபகுதி வருமாறு:

”கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ்நாவல் நானறிந்த வரையில் நான் எழுதிய சிறுநாவலான ‘மண்ணின் குரல்’ நாவலே. … இந்நாவலின் முதல் ஆறோ அல்லது ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984,1985 காலப்பகுதியில் வெளியான ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது. … இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் ‘மண்ணின் குரல்’ என்னுமிந்தச் சிறுநாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன…’ புரட்சிப்பாதை’ சஞ்சிகையில் வெளியான கவிதைகள்,கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி ‘மண்ணின்குரல்’ தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது’’.3

திரு.வ.ந. கிரிதரன் அவர்களது மேற்படி தகவற் குறிப்பின்படி கனடாவில் வெளிவந்த முதலாவது  தமிழ் நாவல் ‘மண்ணின் குரல்’ என்ற ஆக்கமே எனத்தெரிகிறது.

திரு.கிரிதரன் அவர்களே  கவிதைகளும் எழுதியுள்ளார் என்ற வகையில் 1980களின் நடுப்பகுதியிலேயே தமிழ்க்கவிதையின் வரலாறும் இங்கு தொடங்கிவிட்டமைதெளிவாகின்றது.அண்மையில்நமக்குக்கிடைத்த தகவல் களின்படிகவிதைத் தொகுதி என்றவகையில் திரு ரவிஅமிர்தவாசகம் என்பார் எழுதிய ‘விழிப்பூ’ என்ற ஆக்கமே  கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது கவிதைத்தொகுதி  எனத்தெரிகிறது. இதுவே கனடாவில்  உருவான  முதலாவது தமிழ் நூல் என்பதையும் அறியமுடிகிறது. இத்தொடர்பில் திருமதி லீலா சிவானந்தன் என்பார் தந்துள்ள தகவற் குறிப்பொன்றும் இங்கு  கவனத்துக்குரியதாகும்.

‘’ …கனடாவில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு என்று பார்த்தால் ரவி அமிர்தவாசகம் எழுதிய ’விழிப்பூ’ என்ற கவிதைத்தொகுதிதான்முதலாவது நூல் வெளியீடு எனக்கூறலாம். மேமாதம் 11ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு ’விழிப்பூ’ கவிதைத்தொகுதி கையெழுத்துப்பிரதியாக தமிழர் ஒளி கலாசாரப் பிரிவினால் தமிழர் ஒளி நிலையத்தில் வெளியிடப்பட்டது. “ 4

இவ்வாறான ஆரம்ப முயற்சிகளைத் தொடர்ந்து   நாவல்கள் சிறுகதைகளும் கவிதைகளும் இம்மண்ணில் எழுதப்பட்டுள்ளன. கனடாவில் ஆரம்பகாலத்தில் வெளிவந்த சிறுகதைகளில் சில தமிழகத்தில் 1994 இல் எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி மற்றும் எஸ் பொன்னுத்துரை ஆகியோர் தொகுப்பில் வெளிவந்த பனியும்பனையும் என்ற தலைப்பிலான சிறுகதைத்தொகுதியில் ‘வடஅமேரிக்கக்கதைகள்’ என்ற பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

கவிஞர் சேரன் அவர்களுடைய எலும்புக் கூடுகளின் ஊர்வலம் என்ற கவிதைத்தொகுதி 1990இல் வெளிவந்தது. இதனை அடுத்து கௌரி என்பாரின் அகதி என்ற நெடுங்கவிதை நூலும் அ. கந்தசாமி, மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான காலத்தின் பதிவுகள் என்ற கவிதைத் தொகுதியும் 1991இலும் ஆனந்த் பிரசாத் என்பாரின் சுயதரிசனம் என்ற கவிதைத்தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில்  என்.கே.மகாலிங்கம் அவர்களின் உள்ளொளி(1993), அ. கந்தசாமி அவர்களின் கானல் நீர்க் கனவுகள் (1994), நிலா குகதாசன் அவர்களின் இன்னொரு நாளில் உயித்தேன்(1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன5.

மேற்சுட்டியவை தமிழிலக்கியம் தொடர்பாக கனடா மண்ணில் நிகழ்ந்துள்ளஆரம்பகால முயற்சிகள் தொடர்பான சில தகவல்கள் மட்டுமேயாகும். மேற்கண்ட வாறான ஆரம்பநிலைசார் முயற்சிகளைத் தொடர்ந்து கனடாவில்தமிழிலக்கியம் தொடர்பான முயற்சிகள் தொய்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படை. இன்றுவரையான ஆக்கங்கள் பற்றி விபரமாகக் குறிப்பிட முற்பட்டால் அம்முயற்சி பட்டியல்நிலையில் விரிவுபெற்றுவிடும். எனவே அம்முயற்சி தவிர்க்கப்பட்டது. 

எனவே, மேலே நோக்கியவாறு கனடாவில் 1980களின் ஆரம்பத்தில் முளைவிடத் தொடங்கித் தொடர்ந்ததான   தமிழிலக்கிய முயற்சிகளின் இயல்பு மற்றும்  அவற்றின்  தொடர் இயங்குநிலை       என்பன   குறித்த  என்னுடைய    அவதானிப்புகள் மட்டுமே இங்குமுன்வைக்கப் படுகின்றன. 

2.கனடா மண்ணில் எழுந்துள்ள தமிழிலக்கியங்களின் இயல்பு –சில அவதானிப்புகள்.

இத்தொடர்பில் முதலில் குறிப்பிடப்படவேண்டிய அம்சம், ‘கனடாவின் தமிழிலக்கியத்தை நாம் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு தொடர்நிலையாகவே பார்க்கிறோம்’ என்பதாகும். புலம்பெயர் இலக்கியங்களின் உள்ளடக்கம்சார்  பொதுப்பண்புகள் என்றவகையில்   அண்மைக்காலம்வரை  அவதானிக்கப்பட்ட சிலவற்றைப்பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

அ.தாயகஉணர்வு சார்ந்வை: இவற்றில் ஒருவகையானவை ‘பாரம்பரிய மான மண்ணிலிருந்து வேருடன்பிடுங்கயெறிப்பட்ட நிலையிலான அவலங்கள். இன்னொருவகையின அம்மண்ணின்  போராட்டச் சூழல்சார் உணர்வெழுச்சிகள் சார்ந்தவை. மற்றொரு வகையின் ‘பிரிந்த மண் பற்றிய ஏக்கங்களாக வெளிப்படுவன. 

ஆ. புலப்பெயர்வுகளின்போது எய்திய  ‘அலைவுலைவு’கள்  சார்ந்தவை; பயணநிலைத்துயரங்கள், பல்வேறு நாடுகளின் அகதிமுகாம்வாழ்வுகள் சார்’துன்ப-துயர’அநுபவங்கள்மற்றும்குடும்பங்கள்பிரிந்து  சிதறியநிலைகளிலான அவலங்கள் முதலியன.

இ. புகலிடங்கள்சார்ந்தவை: புகலடைந்த நாடுகளில் வதிவிட உரிமை, குடியரிமை,தொழில் வாய்ப்புகள் என்பவற்றைப் பெறுவதிலும்புவிச்சூழல்களின் காலநிலைகள் மற்றும் பண்பாட்டுச் சூழல்கள் ஆகியவற்றுடன்  இசைவாக்கம் பெறுவதிலும் எதிர்கொண்ட  சிக்கல்கள் முதலியன.

காலநிலை சார் சிக்கல்  என்பது   துருவநாடுகளின் குளிர்நிலை மற்றும் பனிப்பொழிவு முட்தலியவற்றைக்குறிப்பதாகும்.  பண்பாட்டுச்சூழல்  சார் சிக்கல்கள்  என்பது  புகலிடநாடுகளில் நிலவிவ்ரும்  பல்வேறு நிலைப்பட்ட பண்பாட்டுப் பாரம்பரியங்களின் மத்தியிலே தமிழரின் ’பாரம்பரியமான சமய நம்பிக்கைகள்’,  ’மரபான  ஒழுக்கவியல்  மதிப்பீடுகள்’ முதலியன சார்ந்தவையாகும்.அவ்வகையில்அவை,’அடையாளம் பேணும் நோக்கு’டன் அமைந்தவையாகும்.

மேலே நோக்கப்பட்டது ஒரு பொதுவான அவதானிப்புதான். மேற்படி வரலாற்றியக்கத்திலே புலப்பட்ட வேறுசில பண்புகளும் இங்கு கவனித்தற்குரியன. அவற்றுள் முக்கியமானவை,  ’தாயகத்தின்  சமூக-பண்பாட்டு அம்சங்கள் மீதான-குறிப்பாக சாதியுணர்வு, பொருளியல் நிலையிலான ஏற்றத்தாழ் வுணர்வு, உறவுமுறை பேணல் மற்றும் பெண் ஒடுக்குமுறை முதலியன சார்ந்த-விமர்சனங்க’ளாகும்.இவ்வாறான விமர்சனங்கள் தாயகத்தின் வாழ்வியலை மையப்படுத்தியனவாக மட்டுமன்றிப் புகலிட வாழ்வியல்களையும் மையப்படுத்தியனவாக வெளிப்பட்டன. மேலைத்தேய சமூகச்சிந்தனைகளின் ஊடாக உருவான உலகநோக்கின்(Vision) விளைபொருளாக அமைந்த விமர்சனங்கள், இவை. 

மேற்சுட்டியவைதவிர, புகலிடநாடுகளின் அறிவியல் வளர்ச்சிநிலைகள் மீதான ஈடுபாடு மற்றும் பரந்தமட்டத்திலான வாசிப்பனுபவம் ஆகியன சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைத்துள்ளனர்.

1980களிலிருந்து ஏறத்தாழ 2010வரையான காலப்பகுதியின் புலம்பெயர் இலக்கிய வரலாற்றியக்கத்தை மையப்படுத்திய அவதானிப்புகள், இவை. கனடா உட்படப் புகலிட நாடுகள் பலவற்றிலிலும் எழுந்த ஆக்கங்கள் மேற்சுட்டியவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ உள்ளடக் கங்களாகக் கொண்டவையே.  கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகிய வடிவநிலைகளிலேயே மேற்படி உள்ளடக்க அம்சங்கள் வெளிப்பட்டன. நாளடைவில் இவை நாவல்களாகவும் உருவெடுக்கத் தொடங்கின.

மேற்படி உணர்வசம்சங்கள் நாவல்களாக உருவெடுக்கும் நிலையில் அடைந்த படைப்புநிலை மாற்றங்களை இருவகைப்படுத்தலாம்.  அவற்றுள் ஒன்று,  ‘தாயகம் சார் வாழ்வியல் மற்றும் புலம்பெயர் அநுபவங்கள் புகலிட வாழ்வியல் ஆகிய அனைத்தையும் புறநிலையாக நின்று தொகுநிலைப்படுத்தி நோக்கி அதனூடாக சமூகத்தின் இயங்குநிலையைக்  இனங்காட்டும் முறைமை’. இன்னொன்று,  ’தாம் பெற்ற அநுபவங்களை மையப்படுத்திநின்று தாம் வாழும் சூழலைத் தரிசித்து விமர்சிக்கும் முறைமை’ யாகும்.இந்தஇரண்டாவது முறைமையிலே எழுதப்படுபவை எழுதுவோருடைய சுய அநுபவப் பதிவுகளாக வெளிப்படுபவையாகும். எழுதுபவர் போராட்ட இயக்கமொன்றுடன் தொடர்பு கொண்டவராக இருப்பின் அவ்வியக்கம் சார்ந்த பார்வையாக அது அமையும்.

இவ்வாறாக புலம்பெயர் இலக்கிய இயங்குநிலை பற்றிய அவதானிப்பில் புலப்படும் மேற்படி பண்புகள் கனடாவில் எழுந்த இலக்கியங்களுக்கும் பொதுவானதாக அமைகின்றமைக்குச் சான்றுகள் பலவுள. இக்கட்டுரையின் தேவைக்கேற்பச் சில சான்றுகளை மட்டும் பதிவுசெய்ய முயல்கிறேன்.

மேற்சுட்டிய தாயக உணர்வு என்ற அம்சம் இம்மண்ணின் கவிதையில் வெளிப்பட்டுள்ள முறைமைக்கு ஒரு  சான்றாக, அண்மையில் நிறைவுபெற்ற கவிஞர் திருமாவளவனின் அஃதே இரவு அஃதே பகல் தொகுதியிலிடம்பெற்ற ‘ஈரம்’  என்ற   கவிதையின் சில பகுதிகள் இங்கு பதிவாகின்றன.

‘இன்னும் இருக்கிறது
எங்கள் ஊர்.
தாழம்பூ மணங்கமழ
இதழ் பரப்பி
றங்குப்பெட்டியுள் பத்திரப்படுத்திய
அம்மாவின் கூறைச் சேலையைப் போலும்

எனத்தமது கிராமத்தின் இருப்பை உணர்த்தத்  தொடங்கிய இக்கவிதை,
……..
சங்கக்கடையின் ஒற்றைக்கதவு
திறந்தபடி
காற்றோடு பறைகிறது
முற்றத்து முருங்கையில்
உலாந்தாக்காய்  நெற்றாகித் தொங்குகிறது
வீணில்
வேலியோரப் பூவரசெல்லாம் 
பூத்துச் சொரிகிறது
தன்னாரவாரம்

கொத்தியாலடிச் சுடலை மடச் சுவரில்
கிள்ளிப்பிடிக்க இடமிலா தளவுக்கு
கரித்துண்டால் நிறைத்துவைத்த
தோற்றம்- மறைவுக் குறிப்புகள்

ஆனாலும்
ஆனி பன்னிரண்டு 1990ற்குப்பின்
எவர் குறிப்பும் இல்லை’    (அஃதே இரவு அஃதே பகல்: பக் 81-84)

என நிறைவடைகிறது.

திருமாவளவன் தரும் இத் தரிசனம் ஈழத்து வடபுலத்தின்  ஒரு கிராமத்தின் இருப்பு மட்டும் அல்ல என்பதை எம்மால் உணரமுடிகிறது. ஒரு வரலாற்றுச் சான்று எனத்தக்கவகையில் ஆண்டுக்குறிப்பையும் இது தந்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும்.(அமைதிப்படைக்காலகட்டத்தின்பின்னர் விடுதலைப்புலிகளுக்கும்  இலங்கை இராணுவத்துக்கும் போர் மூண்ட நாள் 1990-ஜூன் 13 ஆகும்.)

மேற்சுட்டிய பண்புகள் சிறுகதைகளில் புலப்படும் நிலைகளுக்குச் சான்றாக ஒருஆய்வுப் பார்வையை இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.     

‘போர்க்காலசூழல், நாட்டைவிட்டுப் புலம் பெயர்ந்த அநுபவங்கள், முதியோர்பிரச்சினைகள், போர் முடிந்தபின் நாட்டு நிலைமை, கனடிய இளைஞர் பிரச்சினை,முதியோர் பிரச்சினை, பெண்ணியப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை அறிவியல்முன்னேற்றம் போன்றவையே கடந்தகால சிறுகதைகளில் அதிகம் பேசுபொருளாக இருந்தன’

(ரொறொன்ரோ தமிழ்ச்சங்கம் என்ற  சிந்தனைக்களம் 28-03-2015 அன்று நடத்திய ஆய்வரங்கில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன்  அவர்கள்,  ‘கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளின் கருப்பொருட்கள்’  என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. கணிப்பொறி நகல்.)

இவ்வாறு கடந்த காலச் சிறுகதைகள் பற்றிக் குறிப்பிடுபவர், ‘சமீபகாலத்தில் வெளிவந்த சிறுகதைகளிலே, காதல் உணர்வுகள், இனம் மற்றும் மதம்மாறி நடைபெறும திருமணங்கள்; ஓரினச் சேர்க்கை, தனித்துவாழும் தாயின் உணர்வுகள், ஊருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் முதலான அம்சங்கள் கருப்பொருள்களாகியுள்ளன’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.(மேற்படி) கனடாவில் சிறுகதை எழுதியோர் எத்தகைய உள்ளடக்கங்களைத் தேர்ந்துகொண்டனர் என்பதும் அத் தேர்விலே எற்பட்டுவந்த மாற்றங்கள் எத்தகையன என்பதும் பற்றிய ஒரு தொகுநிலைக்கணிப்பாக மேற்படி உரை அமைந்துளது. 

கனடாவிலிருந்து தாயகத்தை விமர்சிக்க முயன்றவர்களின் அணுகுமுறைக்கு ஒரு சான்றாக எழுத்தாளர் ’அகில்’ அவர்களின் ‘பெரிய வீடு’  சிறுகதை  இங்கு  எடுத்துக்காட்டத்தக்கது. இக்கதை தொடர்பான எனது மதிப்பீட்டுக்குறிப்பு வருமாறு:   

‘குடும்பநிலையைப் பேணும் சமூக அமைப்பிலே சொத்துடைமையுணர்வு மற்றும்  சமூக அந்தஸ்துணர்வு என்பவற்றின் முக்கிய குறியீடாகத் திகழ்வனவற்றுள் ஒன்று வீடு எனப்படும் வாழ்வியல் தளம் ஆகும். ஈழத்தமிழர் சமூகத்திலே – குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசச் சமூகக்கட்டமைப்பிலே – அது இவ்வாறான  உடைமைக்குறி யீடாகவும்  சமூக அந்தஸ்துணர்வுக் குறியீடாகவும் திகழ்கின்றமையை நாம் அறிவோம். இவற்றுக்கு மேலாக, ஒரு குடும்பமானது தனது சாதியம் சார்ந்த தனித்துவத்தைப்  பேணிக்கொள்வதற்கான தளமாகவும்கூட யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலின் வீடு திகழ்கின்றதென்பதும் இங்கு நமது சிந்தனைக்குரிய குறிப்பிடத்தக்க சமூக அம்சமாகும்.  இவ்வாறான வீடு என்ற தளத்தை மையப்படுத்திய உணர்வுக்கோலங்கள் இக்கதையில்  மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகின்றன. ‘உறவுகளைப் பேணுவதைவிட உடைமைகளில் உரிமை கொண்டாடுவதையே முதன்மைப்படுத்தும் மனோபாவம்’ என்ற மையஇழையிலே சாதிசார் தீண்டாமையுணர்வை ஊடுபாவாக்கி இந்த மறுமதிப்பீடு இங்கு நிகழ்த்தப்பட்டுளது’.(மேற்படிசிறுகதைத்தொகுப்புக்கு இக்கட்டுரையாளர்  வழங்கியஅணிந்துரையின் ஒருபகுதி.) 

கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவலாக அறியப்படும் ‘மண்ணின் குரல்’ என்ற ஆக்கம் ‘ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை வலியுறுத்தும் நோக்கிலமைந்தது’ என்பதை அதனாசிரியரான திரு. வ.ந.கிரிதரன் அவர்கள், மேலே தொடக்கப்பகுதியில் நாம் நோக்கிய அவரது மேற்கோட் பகுதியில் எடுத்துரைத்துள்ளார்கள். எனவே அது தாயக உணர்வுசார்ந்த ஆக்கம் என்பது வெளிப்படை. அவர் பின்னர் எழுதியவற்றுள் ஒன்றான ‘குடிவரவாளன்’ நாவல் புலப்பெயர்வு சார்ந்த அலைவுலைவுகளைப் பேசுவது. இதைப்போல இக்காலத்தில் ஏனைய பலரால் எழுதப்பட்;ட நாவல்களிலும் மேலே நாம் நோக்கிய புலம் இலக்கியப் பண்புகள் வெவ்வேறு பரிமாணங்களில் பதிவாகியுள்ளன.

மேற்படி நாவல்களின் பரப்பில் செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து'(1998) என்ற நாவல் இங்கு தனிக்கவனத்துக்குரியது. 1986-87 காலப்பகுதியின் ஈழத்துப் போராட்டச் சூழல் சார்ந்தது, இது. மக்களின் விடுதலைக்காகத் தன்னை உளப்பூர்வமாக ஒப்படைத்துக்கொண்ட ஒருவர், சிலரால் வேட்டையாடப்பட்ட நிலையை இது விபரிக்கிறது. நாட்குறிப்பு என்ற வகையில் ஒருவரால் எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் பதிவுகளை ஆதாரங்களாகக் கொண்ட ஆக்கம் இது. இப்பதிவுகள் 1986ஆம் ஆண்டு மார்கழிமாதம் 13ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்து, 47 நாட்கள் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு தைமாதம் 29ஆம் திகதி மாலை 6.00மணியளவில் முடிவடைகின்றன. இந்த மனிதர் யார் என்பதும் இவரைக் கொலை செய்யமுற்பட்டோர் யார் என்பதும் வெளிப்படையாகப் பேசப்படவில்லை.

இது தாயக உணர்வுசார்ந்த ஒரு ஆக்கம் என்பதும் அவ்வகையில் சுய அநுபவப்பதிவாக அமைந்ததென்பதும் வெளிப்படை. அத்துடன் இது, அன்றைய ‘போராட்ட அரசிய’லின் ‘கோரமுக’ மொன்றை தரிசனத்துக்கு இட்டுவருவது என்பதையும் விளக்கவேண்டுவதில்லை.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்திற் பல ஆண்டுகள் வாழ்ந்து பின்னர்  கனடாவாசியாகிவிட்ட தேவகாந்தன் அவர்கள் எழுதியுள்ள ‘கனவுச்சிறை’ என்ற நாவல் பற்றிய ஒரு குறிப்பையும் இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது. மேலே முதலிற்சுட்டியவாறு ‘புறநிலையாக நின்று  சமூகத்தின் இயங்குநிலையை இனங்காட்டும் முறைமை’யிலமைந்த ஆக்கம் இது. ஐந்து பாகங்களாக 1247 பக்கங்கள் கொண்டமைந்த இவ்வாக்கமானது அவர் தமிழகத்திலிருந்தபோது எழுதப்பட்டு அம்மண்ணிலேயே 1998-2001 காலப்பகுதியில் வெளிவந்ததாகும். ஈழத்தமிழர் சமூகத்தின் 1981-2001 கால வரலாற்றியக்கத்தை–அதாவதுஅச் சமூகத்தின் இருப்பும் பண்பாட்டுணர்வுகளும் பலவகைச் சோதனைகளை எதிர் கொண்டிருந்த காலகட்டமொன்றின் வரலாற்றினை–விமர்சன முறையில் இந்நூல் காட்சிப்படுத்துகிறது. இப்போது 2015இல் 999பக்க அளவில் மீளமைப்புச் செய்யப்பட்டு, ஒரே  தொகுப்பாக தமிழகத்தில் வெளிவந்துள்ளது. புலம்பெயர் இலக்கியம் என்றநிலையில் தாயகம்சார்ந்த அம்சங்களைப் புறநிலையாக நின்று அணுகிய தமிழ்நாவல்களில் முதல்நிலைச் சான்றாகக் கொள்ளத்தக்க ஆக்கம் இது. இவ்வாக்கம் கனடாச் சூழலில் நின்று எழுதப்பட்டதன்று. ஆயினும் தேவகாந்தன் கனடாவில் வாழும் இலக்கியவாதி என்றவகையில் கனடாவின் தமிழிலக்கியம் என்ற பார்வையிலே இவ்வாக்கமும் கவனத்துக்கு வந்துளது.

இதுவரை, ‘கனடாவின் இலக்கியப் பதிவுகளில் புலம்பெயர் இலக்கியப்பொதுப்பண்புகள் புலப்படும் நிலையை’ச் சில சான்றுகளினூடாக நோக்கினோம். இங்கே சுட்டப்பட்டவை பெரிதும் தாயக உணர்வுகளை மையப்படுத்திய சான்றுகளாகவே அமைந்துள்ளமை வெளிப்படை.  கனடா மண்சார்ந்து-இங்குள்ளசமூக-பண்பாட்டுஅநுபவங்களை மையப்படுத்தியமைந்த எழுத்துகள் என்பதால் அம் மண் சார்ந்த பார்வைக்குள் இனங்காணப்படவேண்டினவாகும்.அவ்வகையில் அவை  ‘கனடாவில் எழுந்த தமிழிலக்கியங்கள் புலப்படுத்திநிற்கும் வளர்ச்சிநிலைகள்’ என்ற துணைத் தலைப்பில் நோக்கப்படவுள்ளன. 

3.கனடாவில் எழுந்த தமிழிலக்கியங்கள் புலப்படுத்திநிற்கும் வளர்ச்சிநிலைகள்
இப் பொருண்மையானது இக்கட்டுரையின் ஒருபகுதியாகச் சில பக்கங்களில் சுருக்கிப் பேசப்படக்கூடியதன்று. விரிவான ஒரு தனிநூலாக எழுதப்படவேண்டிய பரப்புடையது, இது.  எனினும் இக்கட்டுரைத் தேவைக்கேற்ப இங்கு அடிப்படையான சில முக்கிய அவதானிப்புகளை மட்டும் முன்வைக்க முயல்கிறேன். ’கனடாவில் நிகழ்ந்துள்ள மற்றும் நிழ்ந்துவரும் தமிழிலக்கியச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலைகள் என எவற்றையாவது சுட்டமுடியுமா?’ என்ற வினாவை முன்வைத்து இந்த விடயம் அணுகப்படுகிறது.

3.1. எண்ணிக்கை நிலையிலான வளர்ச்சி
கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் வளர்ச்சி என்ற அம்சமானது அவற்றின்  எண்ணிக்கையை முன்வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. அவற்றின் ‘தரம்’ என்ற அம்சமே வளர்ச் சியின் அளவுகோல் என்பது வெளிப்படை. ஆயினும் யுத்த சூழல், புலப்பெயர்வு முதலிய நெருக்கடி யான சந்தர்ப்பங்களில் எண்ணிக்கை என்பதும் ஒரு வளர்ச்சி அளவுகோலாகவே  கருதப்படவேண்டிய நிலை உண்டு.

ஏனெனில், மேற்படி நெருக்கடியான சூழல்களில் மக்கள் தமக்குத் தேவையான பாதுகாப்பான  இடங்களைத்தேடவும் வாழ்வாதாரங்களை உறுதிசெய்துகொள்ளவும் முற்படும் நிலையில் கலை மற்றும் இலக்கியம் என்பன தரம் என்ற அளவுகோலை மையப்படுத்தி இயங்குவது சாத்தியமில்லை. அம்மக்களைப் பண்பாட்டுத்தளத்தில் இணைக்கவும் அவர்களுக்கு, ‘தம்மைப்பற்றியும் தமது பாரம்பரியங்களைப் பற்றியுமான நம்பிக்கைகளை’ ஏற்படுத்த அவை துணைநிற்கவேண்டும்.  அந்நிலையில் அவை  இயங்கும்போது, ‘எத்தனைபேரை அவை இணைக்கின்றன? எத்தனைபேர் மத்தியில் பாரம்பரிய பண்பாட்டமசங்களை அவை எடுத்துச் செல்கின்றன?’ என்ற எண்ணிக்கை அங்கு முக்கியமாகிறது. இவ்வாறு, பண்பாட்டம்சங்கள் பற்றிய உணர்வானது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் ஏற்பட்டுவரும் ஒரு  சூழலில்தான் இலக்கியம் படைத்தல் மற்றும் வாசித்தல் என்பன சாத்தியமாகின்றன. இந்த அடிப்படையான அம்சத்தை மனங்கொண்டே இங்கு கனடா உட்படப் புகலிட நாடுகளில் நிகழ்ந்துள்ள கலை இலக்கிய வளர்ச்சிகள் கணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு நோக்கும்போது கனடாவில்கடந்த முப்பத்தாறாண்டுகளில்(1981இல் செந்தாமரை  என்ற இதழ் வெளிவந்த காலம் முதல் இன்றுவரை) தமிழிலக்கியம் தொடர்பாக நிகழ்ந்துள்ளவை நிறைவு தருவனவாகவுள்ளன என்பதை இங்கு முதலிற் குறிபிடவேண்டும். அதாவது பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இங்கு புகலடைந்து பரந்துபட்டு வாழ்ந்த தமிழர்கள் கலை மற்றும் இலக்கிய நிலைகளில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இலக்கியப் படைப்பு, வெளியீடு மற்றும் திறனாய்வுசார் முயற்சிகள் ஒரு சீரான கதியில் இம்மண்ணில் தொடர்கின்றன. தாயகம், தமிழகம் மற்றும் புகலிடநாடுகளிலிருந்தும் பல இலக்கியவாதிகள் ஆண்டுதோறும் இம்மண்ணுக்கு வந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கின்றனர். அவர்களுள்  ஒருசாரார் தங்கள் ஆக்கங்களுக்கு இங்கு அறிமுகவிழாக்களும் நடத்துகின்றனர்.இங்குள்ள இலக்கியவாதிகளும் மேற்படி நாடுகளுக்குச் சென்று தத்தம் ஆளுமைகளை வெளிப்படுத்தி, இம்மண்ணுக்குப் புகழ்சேர்க்கின்றனர்.

இவற்றுக்கு மேலாக இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பினது செயற்பாடாகும். கனடாவில் 2001ஆம் ஆண்டில் ஒரு அறக்கட்டளை யாக நிறுவப்பட்டு, தொடர்ந்து இயங்கிவரும் இவ்வமைப்பு உலகு தழுவியநிலையில் ஆண்டுதோறும் வழங்கிவரும் பெறுமதியான பணப் பரிசுகளுடனான விருதுகள் தமிழகம், தாயகம் உட்பட பல்வேறு நாடுகளில் வதியும் தமிழிலக்கிய வாதிகளுட் பலரது கவனங்களையும் ஈர்த்துள்ளன. இக் கவனஈர்ப்பானது கனடாவின் தமிழிலக்கிச் சூழலுக்குப் புதியதொரு பரிமாணத்தை நல்கியுள்ளமை வெளிப்படை.

கடந்த முப்பத்தாறாண்டுகளில் இம்மண்ணில் தமிழ் இலக்கியத்துறையில் படைப்பு மற்றும் திறனாய்வு ஆகிய இருநிலைகளிலும் ஈடுபடுபவர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்க முற்பட்டால், நூற்றுக்கு மேற்பட்டோர் அப்பட்டியலில் இடம் பெறுவதைக் காணமுடியும். கவிதை, சிறுகதை, நாவல், நாடக – திரைப்பட எழுத்துப்பிரதிகள் என்பனவாக நூல்வடிவிலும் இதழ்களின் பதிவுகளாகவும் வெளிவந்தவற்றின் தொகையையும் கணக்கிட்டால் அவையும் மேற்படி நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடும். வாசிப்போர் தொகையானது இதைவிட மூன்று நான்கு மடங்காகலாம்.(இது ஒரு தோராயமான கணிப்புதான். இக்கட்டுரையாளர் இக்கணிப்புகளை இன்னமும் நிறைநிலையில் மேற்கொள்ளவில்லை. யாராவது இவ்வாறான கணிப்புக்களை மேற்கொண்டிருப்பின் மேற்கூறிய எண்ணிக்கைகள் திருத்திக்கொள்ளக்கூடியனவாகும்.)

3.2 இதழ்கள் அமைத்தளித்த  தளமும்  ’தரம்பேணும்’ இயங்குநிலையும்
மேற்குறித்த எண்ணிக்கைகளில் இலக்கியம் பற்றிய உணர்வு இங்கு பரவியுள்ளமைக்குக் காரணிகளாக அமைந்தவற்றுள் முக்கியமானவை இதழ்கள். கடந்த முப்பத்தாறாண்டுகளில்  முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இதழ்கள் கனடாவில் வெளிவந்துள்ளன – வெளிவருகின்றன. இவ்வாறான இதழ்களின் பரப்பு மற்றும் அவற்றின் இலக்கியநிலைப் பங்களிப்பு என்பன தொடர்பான தகவல்கள் இங்குள்ள இலக்கியவாதிகள் பலரால் ஏற்கெனவே ஆய்வுநிலையில் பதிவுசெய்யப்பட் டுள்ளன.

இவ்வாறான இதழ்களின் பெருக்கம் கனடாவின் எழுத்தளர்கள் மற்றும் வாசகர்கள் ஆகிய இருசாராரின் தொகையையும் விரிவுபடுத்தியுள்ளது. அவை அமைத்துத் தந்துள்ள   இத்தளத்தில் நின்றுதான் இன்று நாம் இம்மண்ணின் இலக்கியம் பற்றிப் பேசுகிறோம். அவை அமைத்தளித்த பரந்துபட்ட வாசகப்பரப்பை முன்னிறுத்தியே தமிழ்இலக்கிய ஆக்கங்கள் இங்கு உருவாகிவந்துள்ளன-உருவாகி வருகின்றன. இவ்வாறான வாசகத் தளத்திலிருந்துதான் புதிய படைப்பாளிகளும் உருவாகிவருகிறார்கள். 

மேற்படி  பெருந்தொகையாக வெளிவந்த-வெளிவரும்  இதழ்களில்  ஒரு சாரானவை கலை, இலக்கியம் உட்படப் பல்வேறு துறைகள் சார் விடயப்பரப்புகளையும் உள்ளடக்கங்களாகக் கொண்டவையாகும்.  குறித்த ஒரு தொகை இதழ்கள் இலக்கியப்படைப்பு, வாசிப்பு, தினாய்வு மற்றும் கலைசார் சிந்தனைகள் ஆகியவற்றை மைப்படுத்தியவை.  இவற்றுள் 1990இல் வெளிவரத் தொடங்கி இன்று வரை தொடர்கின்றதான ‘காலம்’ இதழ் (ஆசிரியர்: செல்வம் அருளானந்தம்) குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உடையது. கனடிய இலக்கியவாதிகளின் ஆக்கங்களுடன் தமிழகம், தாயகம் மற்றும் புகலிட நாடுகள் ஆகியன சார்ந்த இலக்கியவாதிகளின் ஆக்கங்களையும் உள்ளடக்கிதாக வெளிவரும் இவ்விதழானது‘அனைத்துலகமட்டத்திலான இலக்கியத் தர’த்தை  இனங்காட்டிநிற்பதாகும்.

1991செப்டம்பரில் தொடங்கி 1994 ஏப்ரல் வரை (13இதழ்கள்) வெளிவந்து நிறைவுபெற்றுவிட்ட தான ‘நான்காவது பரிமாணம்’ (ஆசிரியர் க. நவம்- நவரத்தினம்) இதழும் இலக்கியத் தரம் பேணுவதில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது. சமகாலத்தில் திரு. தேவகாந்தன் அவர்களின் தயாரிப்பில் 2008 முதல் 2012 காலப்பகுதியில் வெளிவந்த ‘கூர்’ என்ற இதழும்(நான்கு தொகுப்புகள்) இலக்கியத் தரம் பேணுவதில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது. இதுபோல வேறுசில இதழ்களும் கலை, இலக்கியம் என்பவற்றை மையப்படுத்தி அனைத்துலகத் தரத்தில் சிலகாலம் இயங்கியபின் நிறைவு பெற்றுவிட்டன. அவ்வகையில்  ‘தாயகம்’ என்ற சஞ்சிகையானது நூறு இதழ்கள்வரை வெளிவந்ததாகத் தெரிகிறது.2014இல்தொடங்கிய உரையாடல்(ஆசிரியர்-நடராஜா முரளிதரன்) என்ற சஞ்சிகையின் மூன்று இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

பல்துறைசாரந்து தொடர்ந்து வெளிவருவனவற்றுள் கலை, இலக்கியம் ஆகியவற்றுக்கும் தனி முக்கியத்துவம் தருகின்றவகையில் தாய்வீடு; என்ற மாத இதழ் குறிப்பிடத்தக்க முக்கியத்துவ முடையதாகும்.(2003இல்வீடு என்றபெயரில் தொடங்கப்பட்டு 2007இல் தாய்வீடு எனப் பெயர்மாற்றம் எய்திய இவ்விதழ் இன்றுவரை தொடர்வது.(ஆசிரியர் பி.ஜே.டிலிப்குமார்.)

மேற்குறித்தவை தவிர.,இணைய தள இதழ்களின் பங்களிப்புகளும்  இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியத்துவமுடையனயாகும். குறிப்பாக  Pathivukal.com(V.N. Giritharan), TamilAuthors .com(Ahil) முதலியன  கனட மண்ணின் தமிழிலக்கிய முயற்சிகளுக்கு முக்கிய களங்களாகத் திகழ்ந்துவருகின்றன.  அத்துடன்  பல்வேறு நாடுகள் சார்ந்தவையான   தமிழ் எழுத்துகளையும் கனடாவின் வாசகர்களுக்கு அவை அறிமுகம் செய்துவருகின்றன.

கனடாவில் நாம் இன்று இலக்கியத்தரம் பற்றிப் பேசிக்கொண்டிப்பதற்கு மேற்சுட்டியவாறு  இதழ்கள் அமைத்தளித்த ‘தள’மும் அவற்றுள் ஒருபகுதியின பேணிநின்ற-பேணிநிற்கும்  ‘தர’மும்  முக்கிய காரணிகள் என்பது இலக்கியவாதிகளால் உய்த்துணரப்படுகின்றன.  

3.3 படைப்பாளுமை தொடர்பான வளர்ச்சி அம்சங்கள்.
படைப்பாளுமையின் அடிப்படையம்சம் ‘புதியது புரியும் வேட்கை’யாகும். ஏற்கெனவே வழக்கிலுள்ள அநுபவங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றைக் கடந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் தமது காலம்வரை வழக்கிலிருந்த வடிவநிலைகளைக் கடந்து செல்வதுமான முனைப்புகளே இங்கு ‘புதியது புரியும்’வேட்கை’ எனப்பட்டன. கனடாவாழ் தமிழ் எழுத்தாளருட்பலரும்  தங்களது பிரிந்துவந்த தாயகம் சார்ந்த அநுபவங்களையும் போர்க்கால அவலங்களையும் பதிவு செய்ய முயன்றுகொண்டிருந்த அதே வேளை தமக்குப் புகலளித்த இந்த மண்ணின் வாழ்வியலையும் கூர்ந்து அவதானிக்கமுற்பட்டனர்.  இம் மண்ணின் பல்லினப் பண்பாட்டுச் சூழல்களில் தாம் எய்திய நேரடி அநுபவங்களை உரையாடல்களுக்கு உட்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அவ்வநுபவங் களையும் இலக்கியமாக்க முற்பட்டனர்.

இவ்வாறாக இவர்கள் படைக்கமுற்பட்ட கதைகளுட்சில, தமிழரின் பாரம்பரிய சமூக விழுமியங்கள் தொடர்பாக மாறிவரும் மனப்பாங்குகள் மற்றும் சூழல் தரும் சுதந்திர உணர்வு  என்பன சார்ந்தனவாகும்.

3.3.1.சுதந்திரச் சூழலும் பண்பாட்டு விமர்சனநிலைசார் படைப்பு முயற்சிகளும்
சுதந்திரநிலை என்றவகையில் குறிப்பிடத்தக்க அம்சம் பாரம்பரிய மண்ணிலிருந்த சூழல்சார் தடைகள் இங்கு இல்லை என்பதாகும். ‘இதைத்தான் எழுதவேண்டும்’ என்றோ ‘இப்படி எழுதக்கூடாது’ என்றோ கட்டுப்படுத்துவதான ஒரு ‘மூடுண்ட சமூகச்சூழல்’ தாயக மண்ணில் நிலவிவந்ததை- இப்போதுங்கூட நிலவிவருவதை- இங்கு  மனங்கொள்வது அவசியம். அவ்வாறான நிலை இங்கு இல்லை. இவ்வாறான சுதந்திர நிலையை இங்குள்ள எழுத்தாளர்கள் பலரும் உணரத் தலைப் பட்டுள்ளனர்.

குறிப்பாக, ’கலாசாரம்’ மற்றும் ’பண்பாடு’ ஆகிய சொல்லாடல்களுக்குள் சிறைப்பட்டு நிற்க விரும்பாத ‘சுதந்திரப் பெண்மை’ யுணர்வையும் அது ஆண்சமூகத்தில் நிழ்த்தக்கூடிய உளவியல் தாக்கங்களையும் இங்குள்ள எழுத்தாளர்கள் கதைகளாக வெளிக்கொணர்ந்துள்ளனர். ‘ஆண்-பெண் உறவு’ தொடர்பானபண்பாட்டுநிலை அம்சங்கள் பற்றிய பார்வைகளில் புதிய தலைமுறையினரிடையிலே  நிகழ்ந்துவரும் மாற்றங்களும் இங்கு எழும் தமிழ் இலக்கியங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. சுருங்கக்கூறுவதானால் தமிழரின் பாரம்பரியப் பண்பாட்டம்சங்கள் எனக்கருதப் படுபவை தம்மை நிலைநிறுத்திக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்களை இம்மண்ணின் படைப்பாளிகள் பலரும் துணிவுடன் தரிசிக்கத் தொடங்கிவிட்டமையை சமகால ஆக்கங்கள் பலவும் உணர்த்திநிற்கின்றன. இத்தகைய அம்சங்களை புனைகதைத் துறைகளில் வெவ்வேறு பரிமாணங்களில்  இட்டுவந்துள்ளவர்களாக  குரு அரவிந்தன், சுமதிருபன், ஸ்ரீரஞ்சனி, ரஃபெல் எஸ்.வி, டானியல் ஜீவா, இளங்கோ முதலிய பலரை அடையாளங்காட்டமுடியும். மேற்குறித்தோரில் ஒரு சாராரின் ஆக்கங்களில்-குறிப்பாக ரஃபெல் எஸ்.வி,  மற்றும் இளங்கோ ஆகியோருடைய ஆக்கங்களில், ‘எடுத்துரைப்பு முறைமை’களில் மாற்றங்கள் நிகழ்ந்துவருவதையும்  இனங்காணமுடிகின்றது.

கனடாவின் தமிழிலக்கியச் சூழலிலே படைப்பாளுமை என்ற அம்சத்தில் நிகழ்ந்துவரும் குறித்த சில மாற்றங்களே  இங்கு சுருக்கமாகக் கோடிட்டுக்காட்டப்பட்டன.இவை இம்மண்ணின் இலக்கியப்போக்கின்  வளர்ச்சிநிலைகளை  அடையாளப்படுத்திநிற்கின்றன.  இவ்வகை எழுத்துகளை  முழுநிலையில்  திரட்டித்  தொகுத்து நோக்கும் போது  மேற்படி வளர்ச்சி அம்சங்களை  துல்லியமாக இனம்காண்பது சாத்தியமாகலாம். 

இவ்வாறான பொதுநிலை வளர்ச்சி என்பதற்கு அப்பால் சிறப்பு நிலையாக புலப்படும்  குறிப்பிடத்தக்க சிலவளர்ச்சி அம்சங்களை இங்கு சுருக்கமாவேனும் இனங்காட்டுவது அவசியமாகிறது. அவற்றுளொன்று, படைப்பாளிகள் தமது மனச்சான்றை வெளிப்படுத்துவதில் புலப்படுத்திவந்துள்ள துணிவுநிலை சார்ந்ததாகும். இதுவும்  இம்மண் நல்கியுள்ள சுதந்திரச் சூழலின் பெறுபேறுதான். எனினும் தனியான துணைத்தலைப்பில் பதிவுபெறவேண்டிய  முக்கியத்துவமுடையதுமாகும்.     

3.3.2. மனச்சான்றின் பதிவுகள்
இத்தொடர்பில் இருவருடைய படைப்புகள் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. இவர் களில் முதற்கவனத்திற்கு வருபவர், இம்மண்ணின் இலக்கியத்துறையிலே தீவிரமாக இயங்கி பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவுபெற்றுவிட்டவரான குமார் மூர்த்தி அவர்கள். தாயக மண்ணின் போராட்டச் சூழலுக்குள்ளேயே நிகழ்ந்த மனித அவலங்களைத் துணிந்து பேச முற்பட்டவர்,அவர்.அவரது முகம் தேடும் மனிதன் (1994) என்ற சிறுகதைத் தொகுதி இவ்வகையில் முக்கியமானது. மேற்படி தொகுதிக்கு நிகழ்ந்த வெளியீட்டுவிழாவில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையிலே, அவருடைய (குமாரமூர்த்தியினுடைய)சிறுகதைகள்’’எதிர்ப்பிலக்கியத்தின் மூலக்கூறுகளுள் ஒன்றைக்கொண்டுள்ளன’’ என வைத்துள்ள மதிப்பீடு(பார்க்க: காலம்-15ஆம்இதழ்-2001-ப.40) இங்கு நமது கவனத்துக்குரியது.

மேற்சுட்டிய எதிர்ப்பிலக்கியப் பண்பை மேலே நாம் நோக்கிய கவிஞர் திருமாவளவனின் பல   கவிதைகளிலும்கூட அவதானிக்கமுடியும். ஈழத்தின் போராட்டத்திலே சிறுவர் பயன்பட்ட நிலை மீதான கண்டனங்களை அவர் தமது கவிதைகளில் வெளிப்படையாகவே முன்வைத்துள்ளார். இவ்வகையில், ’சத்திரியம்’,  ’நச்சுக்கொ’, ’முல்லைத்தீவு’, ’எச்சம்’ முதலிய தலைப்புகளில் அமைந்த கவிதைகள்  முக்கியத்துவமுடையன. பூரண மனவளர்ச்சியடையும் முன்பே மூளைச்சலவை மூலம் போர்க்கோலத்துக்குத் தள்ளப்படட இளந்தலைமுறையினர் பலியாகிவந்த பரிதாபநிலை மீதான அறச்சீற்றம் வெளிப் பட்ட நிலையையே, இக்கவிதைகள் உணர்த்திநிற்கின்றன.

கனடா மண்ணின் சுதந்திரச் சூழலானது படைப்பாளுமைகளில் ஏற்படுத்தியள்ள வளர்ச்சியின் ஒரு அம்சமாக இவ்வகையான ’மனச்சான்றின் பதிவு’களை நாம் அடையாளப்படுத்தலாம். 

அடுத்து நமது கவனத்துக்குவரும் வளர்ச்சி அம்சங்கள் என்றவகையில் உள்ளடக்க நிலைசார்ந்தும் வெளிப்பாட்டுநிலை சார்ந்தும் நிகழ்ந்துள்ள சில புது முயற்சிகளைச் சுட்டலாம்.

3.4. உள்ளடக்கநிலை மற்றும் எடுத்துரைப்பு முறை ஆகியவற்றில் புதுவகை முயற்சிகள்.
இவ்வகையில் கனடாவின் தமிழ்ப் புனைகதைத் துறையில் நிகழ்ந்துள்ள சில அகலப்படுத்தல்களும்மாற்றங்களும் கவனத்துக்கு வருகின்றன. அகலப்படுத்தல் என்ற புதுவகைசார் அநுபவங்கள்  கதையம்சங்களாகியுள்ளன. இவற்றில் ஒருவகையானவை ’பல்வேறு நாடுகளின் வாழ்வியல்களையும் தழுவிய எழுத்து முயற்சிகள்’. இன்னொரு வகையானவை ’அறிவியல் துறைகள் சார்ந்த அம்சங்களை புனைகதைக்குரிய உத்திமுறைகளுடன் எடுத்துரைக்கும் முயற்சிக’ளாகும்.

மாற்றங்கள் என்றவகையில் குறிப்பிடத்தக்க அம்சம், ’புனைவுசார் எழுத்துக்கும் புனைவுசாராத எழுத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கடந்த எடுத்துரைப்புமுறை’யாகும். அதாவது கதை, கட்டுரை மற்றும் விபரிப்பு முதலான வெவ்வேறு உத்திகளையும் தனித்தனி மொழிநடைகளையும் ஒரே ஆக்கத்துக்குள் இட்டுவந்து வாசிப்புச்சுவை ஏற்படுத்தும் முறையே, இது. மேற்சுட்டியவாறான கதையாக்க முயற்சிகளுக்கு  முக்கிய சான்றுகளாகத் திகழ்வன திரு. அ.முத்துலிங்கம், காலஞ்சென்ற அதிபர் பொ. கனகசபாபதி ஆகியோரின் எழுத்துகள் ஆகும். 

திரு.அ.முத்துலிங்கம் அவர்கள் தமது ஈழம்சார் வாழ்வியல் அநுபவங்களையும் தாம் பணிபுரிந்த பல்வேறு நாடுகளின் சமூகச்சூழல்களின் அநுபவங்களையும் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் எழுதிவருபவர். இவ்வெழுத்துகள் உலகளாவிய நிலையிலுள்ள சமகால தமிழ் வாசகர்களிடம் பெருவரவேற்பைப் பெற்றவை. இந்த வரவேற்புக்கான முக்கிய காரணிகளுள் ஒன்று, அவர் காட்சிப்படுத்தும் கதைமாந்தர்கள் பலரும் தமிழ் எழுத்துலகில் அண்மக்காலம்வரை கவனத்துக்கு வராதவர்கள். வெவ்வேறுபட்ட புவிச் சூழல்களில் இயங்குபவர்களுங்கூட. அவ்வகையில் தமிழ்வாசகருலகுக்குப் புதிய புதிய அநுபவங்களை அவர் நல்கிவருகிறார். அவரது ஆக்கங்கள்  விரும்பி வாசிக்கப்படுவதற்கான இன்னொருகாரணம் அவைதரும் வாசிப்புச்சுவையாகும் கனடாவின் தமிழிலக்கியத்துக்கு அனைத்துலக மட்டத்தில் ஒரு தனி அடையாளத்தை இவருடைய எழுத்துகள் ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு வளர்ச்சி அம்சம் என்பது வெளிப்படை.

சிறுகதைத் தொகுதிகள் பலவற்றை  இவர் வெளியிட்டுள்ளார்.  இவருடைய நாவல் ஆக்கம்  உண்மைகலந்த நாட்குறிப்புகள் என்ற தலைப்புடன் 2008இல் நூலுருப்பெற்றது.இவ்வாக்கம்அவருடையவாழ்வியல்சார்ந்தஉண்மைக்கதையாகும். அவருடைய எடுத்துரைப்பின் மூலம் இது  நாவலுக்குரிய பரிமாணத்தை எய்தியதாகும். சுயசரிதைகள் புனைவுத்தன்மையினூடாக நாவல்களாக வடிவம் எய்துவது இன்றைய பொதுப் போக்குகளில் ஒன்று. அவ்வகையில் இவ்வாக்கம்  கவனத்துக்குரிய ஒரு படைப்பாகும்.

ஈழத்தில் சிறந்ததொரு  உயிரியல் ஆசிரியராகவும், கல்லூரிகளின் அதிபராகவும் திகழ்ந்து ஓய்வுபெற்றவரான திரு. பொ. கனகசபாபதியவர்கள் கனடாவிற் கால்பதித்த பின்னரே எழுத்தாளராகப் புதிய அவதாரம் எய்தியவர். பரந்துபட்ட வாசிப்பு அநுபவங்கொண்ட அவர் எந்த ஒரு விடயத்தையும் சுவைபட எடுத்துரைக்கும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருந்தவர். அந்த ஆளுமையுடன் அவர் எழுதியவற்றுள், மரம் மாந்தர் மிருகம்(2012) மற்றும் தென்திசை அதிபருக்கு ஒரு அதிபரின் அஞ்சல்   (2015) ஆகிய இரு நூல்கள் இங்கு சுட்டத்தக்க முக்கியத்துவமுடையவையாகும். ‘அறிவியல்  துறைகள் சார்ந்த அம்சங்களைப் புனைகதைக்குரிய உத்திமுறைகளை மையப்படுத்தி எடுத்துரைக்கும் முயற்சிக’ளாக வெளிப்பட்டவை, இவை.

மரம் மாந்தர் மிருகம்  என்ற ஆக்கமானது  தாவரவியல்  மற்றும் விலங்கியல் சார் அறிவியல்   அம்சங்களையும் மானிட குணாம்சங்களையும் அநுபவங்களையும் ஒருங்கிணைத்து அமைந்த புத்தாக்கமாகும். இவற்றை இணைக்கும் வகையில் தனது வாழ்வியல் அனுபவங்களையும் சூழல்சார் அவதானிப்புகளையும் மையப்படுத்தி, கதையம்சங்களை அவர் கட்டமைத்துள்ளார். இவ்வாறான 25 கதைகள் இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஒருவகையில் இவ்வாக்கம் அவரது சுயவரலாறு போலவும்  இன்னொருவகையில் மேற்சுட்டிய அறிவியல் துறைகள் சார்ந்த அவரது அறிவுப்பரப்பின் பதிவாகவும் திகழ்வது.

தென்திசை அதிபருக்க ஒரு அதிபரின் அஞ்சல் என்ற தலைப்பிலான ஆக்கம், அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தின்- மரணத்தை எதிர்நோக்கியிருந்த சூழலின் – இலக்கியப்பதிவாகும். ’மரணத்தை எதிர் கொள்ளவேண்டிய நிலையிலிருந்த ஒரு உயிர் இயமனுக்குக் கடிதமெழுதுவதான உத்தி’யில் இது எழுதப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சைகளின் துன்ப அநுபவங்களைக்கூட நகைச்சுவை உணர்வுடன் எடுத்துரைக்கும் பாங்கில் எழுதப்பட்ட இவ்வாக்கம் மேலே நோக்கியதான மரம் மாந்தர் மிருகம்  என்ற ஆக்கம்போல ஒரு சுய சரிதைப் பாங்கிலமைந்த ஆக்கமேயாகும். ஆயினும் ஒரு வித்தியாசமான படைப்பாக்கமாகும்.(மேற்படி இரு ஆக்கங்களும் இங்குவரும் தாய்வீடு இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலுருவம் பெற்றவை. இரண்டாவது ஆக்கம் அவருடைய நிறைவின் பின்னர் தொகுக்கப்பட்டதாகும்.)

புதுவகை முயற்சிகள் என்ற வகையிலே அடுத்து ‘அகலப்படுத்துதல்’ என்றவகையில்  நிகழ்ந்துவரும் ஆக்கச் செயற்பாடுகளையும் சுட்டுவது அவசியமாகிறது. இவ்வகையில் சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன் அவர்களின் புனைகதையாக்க முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. அவர் கனடியச் சூழலில் தமிழர் எதிர்கொள்ளும் அநுபவங்களைப் புனைகதைகளாக எழுதிவருகிறார். இவற்றுள்ஒருவகையின,’அகதிகளாக இம்மண்ணுக்கு வருவோர் எதிர்நோக்கவேண்டியுள்ள பிரச்சினைகளை’ மையப் படுத்தியவையாகும். இவருடைய 90 நாட்களுள்(1999) என்றநாவல் நாவல் இம்மண்ணில் வதிவிட உரிமை கோருவோர் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினையொன்றை மையப்படுத்திய  கதையம்சங்கொண்டதாகும். இவருடைய ஆக்கங்களில் இன்னொருவகையின, ‘இந்நாட்டில் நிலைத்துவிட்டவர்கள் இங்குள்ள சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் – குறிப்பாக, நேர்மைய அணுகுமுறைகள்- பற்றிய விமர்சனங்களாகும். இவரது பல சிறுகதைகள் இவ்வகை விமர்சனங்களாக  அமைந்துள்ளன. இவ்வகை ஆக்கங்கள் இம்மண்ணின் தமிழிலக்கியத்தின் உள்ளடக்கப் பரப்பை அகலப்படுத்தியுள்ளன.

4. அறிவியல் புனைவுகள் மற்றும்  மொழிபெயர்ப்பு முயற்சிகள்
இம்மண்ணின் தமிழிலக்கியப் பரப்பின் மேற்சுட்டியவாறான பொதுவான வளர்ச்சிப்போக்கிலே   அடுத்துக் கவத்துக்கு வருவன அறிவியல் புனைவு  மற்றும்   மொழிபெயர்ப்பு  ஆகிய  வகைகள் சார் செயற்பாடுகளாகும்.

இங்கு நிகழும் அறிவியல்சார் புனைவு முயற்சிகள் என்றவகையில்  திரு கனி. விமலநாதன்   அவர்களுடைய முயற்சிகள்  கவனத்துக்குரியன. அவர் அறிவியல்சார்   கதைகள் பலவற்றை இங்கு வெளிவரும்  இதழ்களில் தொடர்ந்து  எழுதிவந்துள்ளார் -எழுதிவருகிறார். அவருடைய முக்கிய நாவலாக  அண்மையில்  வந்துள்ள ஆக்கம் விந்தை மிகு விண்வெளி விபத்து (2014) ஆகும்.  இவரும் ஏனைய எழுத்தாளர்களும் மேற்கொண்டிருக்கக் கூடிய இவ்வகை ஆக்கங்கள் எதிர்வரும் காலங்களில் தொகுத்து நோக்கப்படவேண்டும். நோக்குவோம். 

பிறமொழி இலக்கியங்களைத் தமிழுக்கு இட்டுவருவதிலும் தமிழிலக்கியங்களைப் பிறமொழிக்கு இட்டுச் செல்வதிலும்திரு.மணி வேலுப்பிள்ளை, திரு.என்.கே. மகாலிங்கம் மற்றும் திருமதி கீதா சுகுமாரன் முதலியவர்கள்  சிறப்புக்கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழிலக்கியங்களைப் பிறமொழிக்கு இட்டுச் செல்வது எனறவகையிலே நிகழ்ந்துள்ள முயற்சிகளுள் எனது கவனத்தக்கு வந்த முக்கிய ஆக்கம் IN OUR TRANSLATED WORLD  என்ற தலைப்பிலமைந்த ஆக்கமாகும்.  இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பின் முயற்சியில் உருவான இவ்வாக்கத்தின் பதிப்பாசிரியர் காலஞ்சென்ற பேராசிரியர் செல்வாகனகநாயகம்அவர்களாவர்.இவ்வாறான மொழிபெயர்ப்பு சார்செயற்பாடுகளின் வரலாறு தனிநிலையில் விரிவாக எடுத்து ரைக்கப்பட வேண்டியதாகும்.

’’கனடா மண்ணில்  தமிழிலக்கியம்- தோற்றமும் தொடர்ச்சியும்’’  என்ற தலைப்பிலமைந்த  இக்கட்டுரையிலே படைப்பிலக்கியம் என்ற வகையில்  கவிதை மற்றும் புனைகதை சார்ந்தனவே  கவனத்துட் கொள்ளப்பட்டன. அவற்றின் படைப்புநிலையிலான வரலாற்றுப்போக்கை இனங்காட்டக்கூடிய வகைமாதிரியானதரவுகளே இங்கு சான்றாதாரங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன

கனடா மண்ணின் தமிழிலக்கிய  முயற்சிகள் என்ற வகையில்புனைவுசாரா(Nonfiction)எழுத்துகள் தொடர்பான பார்வை இக்கட்டுரையில்  உள்ளடக்கப்பட வில்லை.  அப்பரப்பும்  தனிநிலையில்  வளர்ந்துவருகின்றது.இவ்வகை எழுத்துகளுக்கான எண்ணக்கருக்களை வழங்குவதிலும் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதிலும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதிலும் இதழ்கள் ஆற்றிவந்துள்ள-ஆற்றிவருகின்ற -பங்களிப்புகளும் தனிக் கவனத்துக்குரியன. குறிப்பாக, 25ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் தகவல் இதழும் மேலே நோக்கிய தாய்வீடு இதழும்  இத்தொடர்பிலே சிறப்புக் கவனம் செலுத்திவருகின்றன.

மேற்கண்டவாறு இம்மண்ணில் நிகழ்ந்துவரும் புனைவுசாரா எழுத்து முயற்சிகள் தொடர்பான ஒரு தொடக்கநிலை ஆய்வுக்கட்டுரை  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களால் ‘புலம்பெயர் சூழலில் புனைவுசாராஎழுத்துகள் -கனடாவை மையப்படுத்திய பார்வை.’  என்றதலைப்பில் எழுதப்பட்டுள்ளது(மேலே சுட்டிய ஞானம் மலர்.பக்: 222-229.) என்ற செய்தியை இங்கு வாசகர் பார்வைக்கு முன்வைப்பதோடு இக்கட்டுரை நிறைவுபெறகிறது. 

[ ‘’ கனடாவில்  தமிழிலக்கியம்  – வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள்தொடர்பான சில அவதானிப்புகள் ‘’ என்ற தலைப்பில் தமிழர் தகவல் 25ஆவது ஆண்டுமலரில் (2016ஃபெப்ரவரி) என்னால் எழுதப்பட்ட கட்டுரையில் இடம்பெற்ற தகவல்களை மையப்படுத்தி, புதிய சில தகவல்களையும்  உள்ளடக்கி, கணையாழி  கனடாச்சிறப்பிதழுக்காகப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை, இது.]


குறிப்புகள் மற்றும் சான்றுகள்:
1. இவ்விதழ் தொடர்பான தகவல்களையும் பாரதி தொடர்பான கட்டுரையின் ஒரு பக்கத்தையும்    மார்ச் 15-1982      திகதியிட்டு வெளிவந்த நான்காமிதழின் முகப்பையும் நகலெடுத்து  இக்கட்டுரையாளருக்கு அளித்தவர்,  ரொரொன்ரோவில் வதியும் பௌதிகவியற் பேராசிரியரும்தமிழகத்தைச்சேர்ந்த தமிழறிஞருமான டாக்டர் சு.பசுபதி அவர்களாவர்)

2 .புரட்சிப்பாதை தொடர்பான தகவலைத் தந்தவர், எழுத்தாளர் திரு. வ.ந.கிரிதரன் அவர்கள் (pathivugal.com 20-june2014).  தமிழ் எழில் பற்றிய தகவலைத்  தந்தவர், எழுத்தாளர் திரு. க நவம்(நவரத்தினம்) அவர்கள். (ஞானம்- ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்.டிசம்பர்-2014 ப.677).

3. (Pathivukal.com 20-june2014).

4 .  தாய்வீடு இதழ். ( ரொறன்ரோ –கனடா) ஜூன் 2016 ப.78

5.   இத்தகவல்களைத்தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் திரு.செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு. ப. ஸ்ரீஸ்கந்தன் ஆகியோராவர்.(‘சேரனது மேற்சுட்டிய கவிதைத்தொகுதிக்கு நடைபெற்ற வெளியீட்டுவிழாவே கனடாவில் அரங்கநிலையில் நடந்த முதலாவது    தமிழ்நூல் வெளியீட்டுநிகழ்வு’ என்பதான வரலாற்றுத் தகவலை, திரு. ப.ஸ்ரீஸ்கந்தன் அவர்கள் 28-10-2015 அன்று இக்கட்டுரையாளருடன் நிகழ்த்திய தொலைபேசிஉரையலின்போது குறிப்பிட்டார்)

6.    2010-06-25அன்று தமிழகத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘செம்மொழித் தமிழ் மாநாட்டு  ஆய்வர’ங்கில் இக்கட்டுரையாளரால் வாசிக்கப்பட்ட, ‘ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம்’என்ற கட்டுரையிலும், மேலே முன்னர் சுட்டிய ஞானம்  சஞ்சிகையின் சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை யிலும் தெரிவிக்கப்பட்ட அவதானிப்பு அம்சங்களின் சாராம்சத் தொகுப்பு, இது.)  – 9-12-2016-

* கட்டுரையாளர் – பேராசிரியர்  கலாநிதி நா. சுப்பிரமணியன் –

enmugavari@gmail.com