இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகளாகக் காலங்காலமாக திகழ்ந்து வருபவை கடந்தகால மக்கள் விட்டுச்சென்ற வரலாற்றுச் சான்றுகளே. குறிப்பாக தமிழகத்தில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றவை கோயில்கள். இக்கோயில்கள் சமய வரலாற்றை மட்டும் எடுத்தியம்புவனாக காணப்பெறவில்லை. அதையும் தாண்டி கலை, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என பல விடயங்களையும் கோயில்கள் பதிவுசெய்கின்றன. இக்கோயில்கள் வழிபாடுகளை முதன்மையாகக் கொண்டு திகழ்கின்றன. வழிபாடுகள் இனக்குழு வாழ்விலிருந்தே தொடங்கப் பெற்றவை. இயற்கையைப் போல் வாழ தலைப்பட்ட அச்சமூக மனிதர்கள் இயற்கையிலிருந்தே தமக்கான அடிப்படைக்கூறுகளை மெய்யக்கற்றுக்கொண்டனர். விலங்குகளை வேட்டையாடக்கூடிய வேட்டைச்சமூகம் அதனைப் பயன்படுத்த கற்றுக்கொண்டதன் பின்புலத்தின்தான் வேளாண் சமூகமாக கால்கொள்கிறது. வேளாண்சமூகம் உற்பத்தி சமூகமாக பரிணமத்தின் தொடக்க நிலையில்தான் சடங்குகளும், வழிபாடுகளும், உரிமைகளும், உடமைகளும் தனிமனிதர்களின் கைகளில் தஞ்சம் அடைந்தன.
அச்சூழலியல் நோக்கில் வழிபாட்டையும் அதனோடு இணைத்துப் பேச வேண்டிய கால்நடைசமூக வாழ்வியலும் ஒன்றுக்கொன்று தக்க முரணில்லாமல் பின்னிப் பிணைந்தே செயலாற்றியுள்ளன. இவற்றில் தெய்வ உருவாக்கங்கள் முதன்மையளிக்கின்றன.பொதுவாக தெய்வப் பரவுதல் உற்பத்திச்சமூகத்திற்கும் கால்நடைச் சமூகத்திற்கும் சில காரணிகளை தொகுத்தளித்துள்ளது.
ஆதி மனிதன் இயற்கையின் ஊடாட்டத்தால் பிணையப்பட்டவன். புரிதலற்ற வாழ்வியல்கூறுகள் சமநிலையற்றதன்மையும், ஒழுங்குமுறையற்ற வாழ்க்கைச்சூழலும் அச்சமூக மனிதர்களில் வாழ்நிலையில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கின. கண்களால் கண்ட இயற்கையும் புலன்களில் மட்டுமே உணரக்கூடிய ஒலிக்கூறுகளும் அவர்களின் வாழ்வியலில் மிக நுட்பமான அடையாளங்களை உருவாக்கின. குறுகிய தன்மைமையுடைய அவர்களின் இருப்புக்குள் இனக்குழுவுக்குள் பயம் கலந்த கால நகர்வை கடத்தவே பற்றுக்கோடாக சடங்குகள் தோன்றின. இத்தன்மையிலிருந்தே வழிபாடுகள் இனக்குழு வாழ்வில் தொடங்கப்பெற்றன. சடங்குளின் நுட்பமான தன்மையிலிருந்து தொடக்கம் பெற்ற தெய்வ உருவாக்கங்கள் படிநிலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் சமூக மனங்களின் ஏற்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கியே பிணைப்பட்டுள்ளன.
நடுகல் வழிபாடு
ஆவியை ஓரிடத்தில் நிறுத்தும் சக்தி மனிதனுக்கு ஏற்பட்டபின் அதை நிரந்தரமாகக் கல்லில் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று நம்பினான். அதனால் மரம்,கல் முதலியவற்றில் ஆவியைக்கொண்டு வந்து நிறுத்தினர். இந்நிலை வந்த பின்பு நடுகல் வணக்கம் தோன்றியது. இறந்தவனது ஆவியை அக்கல்லில் தங்க வைத்த பின்பு அக்கல்லுக்கு வழிபாடு செய்தனர்.அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள் துன்பம் தராதிருக்கவும் அவைகளை அமைதிப்படுத்தவும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இங்ஙனம் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு கல்லை நட்டு அதனை தெய்வமாக வணங்கினர். நடுகல் வழிபாட்டினை தொல்காப்பியம்
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தென
இரு மூன்று வகையிற்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே”1
என சிறப்பிக்கிறது.
காட்சி என்பது இறந்தவர்களுக்கு நடுதலுக்கேற்ற கல்லை தேர்ந்தெடுப்பது, கல்கோள் என்பது கல்லை நடுதல், நீர்படை என்பது கல்லினை நீரில் கழுவுதல், நடுதல், வாழ்த்துதல் என்பது நட்ட நடுகல்லை கல்லை வணங்குதல், இவ்வாறு தொடங்கப்பெற்ற நடுகல் வழிபாடு இன்று பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது..
கால்நடைச்சமுதாயமும் நடுகல் வழிபாடும்
சங்க இலக்கிய காலத்திலிருந்தே கால்நடைச் சமுதாயத்திற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் மிகுந்த தொடர்புள்ளதை பல இலக்கிய சான்றுகள் விளக்குகின்றன. சங்ககாலத்தில் பெரும்போர்களில் உயிர் துறந்த வீரர்கள் நினைவாக மட்டுமின்றி சிறுசிறு சண்டைகளில் உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் கற்கள் எழுப்பட்டுள்ளன. இதனை விளக்கும் முனைவர். வே.கேசவராஜ் “போரின் தன்மைகள் வேறு பட்டிருப்பினும் வீரங்காட்டி இறக்கும் வீரர்களின் வீரத்தன்மை ஒத்ததாகவே இருக்கும். இக்காரணம் கொண்டே அனைத்து வகையான போர்களில் இறந்த வீரர்;களும் வீரக்கற்கள் எழுப்பிச்சிறப்பிக்கப்பட்டனர் என்பது புலனாகிறது”2 என்கிறார். ஆனிரை கவர்தல் போன்ற சிறு சண்டைகளில் மடிந்த வீரர்கள் நினைவாகவும் எழுப்பபட்ட வீரக்கற்கள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
தொறு
தொறு என்னும் சொல் கூட்டம் என்ற பொருளில் சுட்டப்பெறுகின்றது. வீரக்கற்களில் பசு, எருமை, ஆடு ஆகிய மூவினங்களின் கூட்டங்களைக் குறிக்கத் தொறு என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர். ஆநிரை என்ற சொல் கூட்டம் என்ற பொருளைத் தந்து பக்தி இலக்கிய காலகட்டங்களின் தொறு என்று மறுவியுள்ளது.தொறு தொடர்பாக நிகழ்ந்த போர்கள் நடுகற்கள் பெறும்பாலும் போரில் இறந்துபட்ட வீரரின் நினைவாகவே எழுப்பபட்டுள்ளன. கிடைத்துள்ள வீரக்கற்கள் ஆனிரைப் போர்களில் இறந்த வீரர்கள் நினைவாக எழுப்பட்டவையே. ஆனிரைப்போர்கள் அதிகளவில் நடைபெற்றன என்பதனை இலக்கிய இலக்கணச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
சங்க இலக்கிய காலத்தில் முல்லைத்திணைவாழ் மக்கள் தொறு பூசலில் அதிகமாக ஈடுபட்டுவாழ்ந்துவந்தனர். இந்நிலத்தில் ஆநிரைகள் மேய்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. ஆநிரைகளை ஒரு நிலத்திலிருந்து வேறு நிலத்தவர்கள் கவர்ந்து சென்றனர். அதனை மீட்பதற்கு போர் தொடுத்தனர். போரில் வீரர்கள் இறந்தனர். இறந்த வீரர்களுக்கு நடுகல் நடப்பட்டது. ஆக கால்நடைச் சமுதாயத்தில் நடுகல் வழிபாடு முக்கியப் படுத்தப்பட்டன. இதனை விளக்கும் முனைவர் ர.பூங்குன்றன் “கால்நடை மேய்ப்பவர்கள் மலைக்குகைகளில் தங்கியிருந்தனர் பிறகு மலை ஓரங்களில் மண்சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்து வாழத் தலைப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த பகுதி கால்நடை வளர்ப்புக்கு உகந்த காட்டாந்த (முல்லை) பகுதியாகும். கால்நடை மேய்ப்பவர்கள் ஆனிரை செம்மறியாடு வெள்ளாடு ஆகியவற்றை வளர்த்துள்ளனர். இவர்கள் வாழ்விடங்களையும் பட்டிகளையும் அகழ்வு செய்து பார்த்த பொழுது சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை-மாட்டு உருவங்கள் மிகுதியாகக் கிடைத்தன “3 என்கிறார்.
சங்க இலக்கிய காலகட்டங்களில் கால்நடை வளர்ப்G அக்கால மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றமாகும். முல்லைநில மக்கள் தொடக்காலத்தில் கால்நடைகளை உணவிற்காகவே வளர்த்து வந்தனர். பிறகு அக்கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு துணைநின்றன என்பதை அறியமுடிகிறது. சுங்க காலம் முதல் பல்லவர் காலம் வரையிலும் கால்நடை வளர்ப்பு பற்றிய கல்வெட்டுகளை பெரிதளவிலும் காணமுடிகிறது. இக்காலக்கட்டத்தில் நிரைகோடல் வாழ்த்தி பேசப்பட்டு வந்தது. பல்லவர்கள் கால கல்வெட்டுகளில் நடுகற்களில் மாட்டு மந்தைகள் மாட்டு உருவங்கள் போன்ற பல செய்திகளை காணமுடிகிறது. இவ்வாறாக கால்நடைச்சமூகத்தில் வளர்க்கப்பட்ட நடுகல் வழிபாடு இன்று பல்வேறு நிலைகளாக வளர்ச்சியடைந்துள்ளது.
வீரக்குமாரர் கோயிலும் நடுகல் வழிபாடும்
வெள்ளகோவிலில் உறை கொண்டிருக்கும் வீரக்குமாரர் கோயில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்துள்ளது என கோயிலின் அமைப்பு வழியாக அறிய முடிகிறது. இக்கோயிலில் உறை கொண்டுள்ள வீரக்குமாரரின் உருவமானது போர் வீரனைப்போல் காட்சியளிக்கிறது. இடுப்பில்கச்சை, கையில்வாs;; முருக்குமீசை, நேர்கொண்ட வீரப்பார்வை என அனைத்தும் ஒரு போர் வீரனுக்கே உண்டான அமைப்பை பெற்று நிற்கிறது. வீரக்குமாரரது தோற்றத்தைப் பற்றி கள ஆய்வில் பல செய்திகள் கிடைக்கப்பெற்றன.
அவையாவன:
• புதிணென் சித்தர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி இத்தெய்வதம் உருவாக்கப்பட்டது என்றும்
• மாடு புற்றில் பால் சுரக்கும் பொழுது அப்புற்றில் தோன்றியது வீரக்குமாரர் என்பதும்
• செல்லாண்டியம்மன் என்ற தாய்தெய்வத்தின் நான்கு குமாரர்களுள் ஒருவர் என்பதும்
• சுயம்பு வடிவில் தானாகதோன்றியவர் வீரக்குமாரர் என்பதும்
என்றதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இத்தெய்வத்தோற்றத்தை விளக்கும் பொழுது பல விடயங்களை நம்மால் உய்த்துணர முடிகிறது. வீரக்குமாரர் தோற்றத்திற்கான முதன்மை கதையாடல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள இடத்தில் புற்று இருந்ததாகவும் புற்றிலுள்ள பாம்பிற்கு மாடு பால் சுரந்ததாகவும்; அதனைக்கணட ஊர்மக்கள் அப்பா வீரக்குமாரh; என்று கூறி அழைத்தனராம். இச்செய்தியே கள ஆய்வில் பரவலாகக் கிடைக்கப்பெற்றன. இக்கதையாடலை நோக்கும் பொழுது பொதுவாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தெய்வத் தோற்றத்திற்குக் காரணமான கதையாகவே தென்படுகிறது.இதனைத்தொடர்ந்து சித்தர்களால் பதினென சித்தர்களால் உருவாக்கப்பட்டவர் வீரக்குமாரர் என்றாலும் பதினெண் சித்தர்களால் ஒரு இடத்தில் ஒன்று கூடி தெய்வத்தை உருவாக்குவது என்பதும் இயலாத செயலே.இதனைவிடுத்து செல்லாண்டியம்மனின் காவல் தெய்வம் என்ற செய்தியை நோக்கும் பொழுதும் பல விடயங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன. காரணம் வீரக்குமாரரை முதன்மைப்படுத்தியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சுயம்பு வடிவில் வீரக்குமாரர் தோன்றியிருந்தாலும் தோன்றி இடமும் இப்பொழுது தெய்வம் உறைந்துள்ள இடமும் மாறுபட்டிறுக்கிறது. இந்நான்கு வித புனைவுகளையும் விடுத்து கோயிலுள்ள சிலைகளின் அமைப்பையும் வெள்ளகோவிலின் நிலவியல் சூழலையும் ஒப்பிட்டு இத்தெய்வத்தோற்றத்தினை ஆராயும் முணையும் பொழுது வீரக்குமாரர் தெய்வம் நடுகல் வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
சங்க காலத்தில் இருந்து இன்று வரையிலான வழிபாட்டு முறைகளிலிருந்து நடுகல் வழிபாடு முதன்மையளிக்கிறது. முக்கியமாக கால்நடைச் சமுதாயத்தில் நடுகல் வழிபாடு பெரிதும் பேசப்படுகிறது.
வெள்ளகோவிலின் பழங்கால நிலவியல் சூழலை நோக்கும் பொழுது வேளாண்மை தொழிலையே மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதும் அதனை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் ஆடு மாடுகளையே வளர்த்து வந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இன்றைய சூழல்களில் ஆடு மாடு வளர்ப்பு என்பது முக்கியமாக திகழ்கிறது. இக்கருத்தாடலை முதன்மையாககொண்டு வீரக்குமாரர் கோயிலில் மூலவர் சன்னிதிக்கு அடுத்தாற்போலுள்ள நரிபழனிக்கவுண்டர் சன்னிதியை உற்று நோக்க வேண்டிய தேவையாகிது. நரிபழனிக்கவுண்டரின் சிலை போர்வீரனைப்போல் கையில் துப்பாக்கியுடன் நரியுடன் போர் இடுவது போல் காட்சியளிக்கிறது.
ஆநிரைகளை கவர்ந்து வந்த விலங்கிடமோ அல்லது அயலாரிடமோ அநிரைகளை காப்பாற்றுவதற்கு வேண்டி போரிட்டு மரணம் எய்ததாக இச்சிலையை கண்டு Cகித்து உணரலாம். கால்நடைச்சமுதாயத்தில் வாழ்ந்த ஆண்டான் ஒருவன் ஆநிரைகளை காப்பாற்றுவதற்காக போரிட்டு மாய்ந்துள்ளான். அதற்கு அக்காட்சியை நினைவு கூறுவது போல் வைக்கபட்டதே வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரர் கோவிலிலுள்ள நரிபழனிக்கவுண்டர் சிலை இச்செய்திகளை அடிப்படையில் நோக்கும் பொழுது வீரக்குமார் சிலை என்பது நரிபழனிக்கவுண்டர் சிலைலாகவே ஆதி காலத்தில் இருந்திருக்கலாம் என கள ஆய்வு செய்திகளை கொண்டு விளக்கலாம். வீரக்குமாரர் தெய்வத்தை முருகக் கடவுளாக வணங்கி வருகின்றனர். முருகக் கடவுள் போருக்கான கடவுளே இதனை விளக்கும் தமிழண்ணல் “தமிழர்களின் கடல் வாணிகத்தில் குறிக்கிட்டு கொள்ளையடித்த கடற்கொள்ளையர்களை போரிட்டு அழித்துத் தமிழரைக் காத்தவன் முருகன், அதனால் தான் அவன் போர் முனைகளாக முன்பு கொண்ட ஆறு இடங்களும் “ படை வீடுகள் “ எனப்பட்டன. அவன் பின்னர் ஓர் போர் கடவுளாக போற்றப்பட்டான் “ – என்கிற இச்செய்திகளை அடிப்படையாகக் நோக்கும் பொழுது வீரக்குமாரர் என்பது போருக்கான தெய்வம் என புலப்படுகிறது.
ஆக வீரக்குமாரர் தெய்வம் நடுகல் கடவுள் எனவும் கூறலாம். நடுகல் வழிபாட்டிற்கு இக்கோவில் தக்க சான்றாகவும் இருக்கிறது. கால்நடைச்சமுதாயாத்தில் வெள்ளகோவில் முதன்மையளித்து வந்துள்ளதை இன்றும் கண்ணபுரம் (ஓலப்பாளையம்) என்ற ஊரில் வருடம் ஒருமுறை சித்திரை மாதம் குறிப்பிட்ட நாட்கள் ஓலப்பளையத்தில் சந்தை கூடுகிறது. இது தென்னிந்தியாவிலியே மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வெள்ளகோவில் பகுதி கால்நடைச் சமூகத்தில் முதன்மையளித்தற்கு இது தக்க சான்று பகிர்கிறது.
மாடு பிடி சண்டைக்கும் நடுகல் வழிபாட்டிற்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றி இன்றும் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. சமீபத்தில் தினமலர் நாளிதல் பசுவை தானமாக வழங்குவது போல் உள்ள கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றதாக செய்திகள் வெளிவந்தன.
மாடு பிடிச்சண்டை பெரும்பாலான வீரர்களின் உருவங்கள் முறுக்கு மீசை தலைமுடி கொண்டை அமைப்பு இடுப்பில் கச்சையணிந்தே பெரும்பாலான உருவங்கள் காணப்படும். இந்த அமைப்பை ஒத்திருக்கிறது வீரக்குமாரர் கோயிலுள்ள நரிபழனிக்கவுண்டர் என்ற தெய்வத்தின் நடுகல் சிலை. வெள்ளகோவிலுள்ள வீரக்குமாரர் தெய்வத்திற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதையும் இது போன்ற செய்திகள் விளக்குகின்றன.
நடுகல் வழிபாட்டில் பெண் விலக்கு
சங்கப்பாடல்களில் நடுகல் வழிபாட்டை சிறப்பித்துள்ளது வேந்தன் வெற்றி பெற வேண்டும் என நடுகல்லை வழிபட்டனர் என குறிப்புகள் கிடைக்கின்றன. போரில் கணவன் இறந்துவிட்டாலும் கணவனின் உருவச்சிலை கொண்ட நடுகல்லை பெண்கள் வழிபட்டனர் என சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன. சங்க காலத்தை தொடர்ந்த நடுகல் வழிபாடு மேல்நிலையாக்கத்தின் காரணத்தால் நடுகல் வழிபாட்டில் பெண்கள் அனுமதி விலக்கப்படுகிறது.
கால்நடைச்சமூதாயத்திலும் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர். கால்நடைச் சமுதாயத்தில் பெண் விலக்கு இருந்துள்ளது. கால்நடை சமுதாயத்தில் பெண் இரண்டாம் நிலையிலேயே சித்தரிக்கப்படுகிறாள். கhல்நடைச் சமுதாயத்தில் வீரக்குமார் தெய்வம் தோற்றம் பெற்றதால் பெண்கள் இன்றும் இக்கோயிலுக்குள் மூலவரை கண்டு வணங்க அனுமதிப்பதில்லை. சுமார் 600 ஆண்டுகள் முடிந்தாலும் பெண் விலக்கு என்பது இக்கோயிலில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. இதுபோன்ற வரலாற்று உண்மைகள் எல்லாம் வெளிக்கொணர்ந்து கோயில் வரலாறுகள் எழுப்பப் பெற்றதால் இனியும் பல அறிய வரலாற்று சான்று தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைக்கப்பெறும் என்பது திண்ணமே.
ஆண் பெண் என்ற பேதமற்ற இனக்குழச் சமூகம் பகிர்தல் சமூகமாக விளங்கியது. உற்பத்திச்சமூகம் தன்னிறைவைக் கடந்தபின்பு தன் சுயத்தை மட்டுமே நிறுவ முயன்றது. பகிர்தல் என்ற நிலையைவிடுத்து தன்குடும்பம் தனிமனிதன் சுயம் என்ற வரையறைக்குள் இணக்கம் பெற்ற பொழுதுதான் ஆண் பெண் என்ற பேத நிலைகள் முகிழ்ந்தன. பெண்களின் இருப்புகளும் ஆண்களின் இருப்புகளும் வடிவம் மாறின.இவை தொடர்ச்சியாக காலந்தோறும் கையாளப்பட்டத்தின் விளைவாக அது பண்பாடாகவே பரிணமித்தன. இச்சார்பு நிலைத்தன்மையிலிருந்து கோயில் என்ற நிறுவனக்கட்டமைப்பையும் உள்வாங்க வேண்டியுள்ளது. அத்தொடர்நிலைக்கூறில் வீரக்குமாரசாமி வழிபாட்டில் பெண் விளக்கு என்பது பெண்ணை திட்டமிட்டு விளக்கி வைத்தல் என்ற நோக்கில் அமைந்தததா இல்லை அவ்வழிபாடு தொடக்கம் பெற்ற சூழலில் உருவான ஆண் சடங்கியல் தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதா என்றும் ஆயவேண்டியுள்ளது.
கள ஆய்வுச் செய்திகளின் அடிப்படையில் முல்லை நில மேய்ச்சல் சமூகம் வேளாண் சமூகமாக மாறுதல் அடைந்த காலச்சூழலில் உருபெற்ற வீரக்குமாரசாமி வழிபாடு, ஆண் தன்மையின் மேல்நிலையாக்ககூறுகளிலிருந்தே வடிவம் பெற்றுள்ளது. உற்பத்திச்சமூகத்தில் உயிர்நீத்த வீரனின் நினைவேந்தலாக கட்டமைந்த பின்புலத்தில் வேட்டைச்சமூகத்தில் சமநோக்கில் கருத பெண் இருப்பு உற்பத்திச் சமூகத்தில் கீழிரங்கிய தன்மையையும் பொருளாதார தன்மையின் அடிப்படையில் ஆண்களின் தனித் தன்மையையும் தலைமையும் அதீத இருப்புக்குள்ளாகவே பெண் விளக்கை முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது.
அடிக்குறிப்புக்கள்:
1. தொல்காப்பியம்- புறத்திணையியல்-நூற்பா-5
2. வெ. கேசவராஜ் தென்னிந்நிய வீரகற்கள்-ஓர் ஆய்வு (பிஎச்.டி ஆய்வேடு) பக் 227
3. தொல்குடி-வேளிர்- அரசியல் (செங்கம் நடுகற்கள் -ஓர் ஆய்வு) பக் 51
4. தமிழர் சமயமும் சமஸ்கிருதமும் – தமிழண்ணல் பக்-13
mahesboopathyvkl@gmail.com
* கட்டுரையாளர் – – பா.மகேஸ்வரி, தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) , கோயமுத்தூர் – 641018. –