ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மை

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மைதனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் போன்றவை ஒன்றையொன்றுச் சார்ந்தவை. அறம் என்பது தனிப்பட்ட மனிதனுக்காக உருவாக்கப்பட்டதல்ல. இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே சமூக உறவுகள் நிலவும்வேளையில் அறம் தோற்றம் பெறுகின்றது. அறங்கள் சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிகழ்கின்ற ஆதிக்க அடிமை உறவுகளை வெளிப்படுத்துகின்றன எனலாம். தனிமனித அறம், ஈகை, நட்பறம், துறவறம், வணிக அறம் போன்ற அறங்களில் சமூகத்துடன் தொடர்புடைய சான்றாண்மை அறம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

சான்றாண்மை :
‘சால்பு ( Good) என்னும் பொருளைத் தருகின்ற உலகமொழிகளின் சொற்களின் மூலப்பொருள் சான்றோர், சான்றாண்மை ( noble,aristocrat) என்றும், இதற்கு எதிர்மறையான புன்மை ( evil,bad) எனும் சொல் பல மொழிகளில் புலைமை, புலையன் ( low,plebean) என்ற மூலப்பொருளையும் குறிப்பிட்டது.’

(ராஜ்கௌதமன் – தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.எ: 255)

என்னும் நீட்சேவின் கருத்து குறிப்பிடத்தக்கது. இலத்தீன் மொழியில் சால்பு என்ற சொல் போர்வீரர்கள் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சான்றாண்மை என்றால் ‘சால்பு’. தன்னை ஆளுதல் என்று பொருள.; சான்றாண்மை என்பது இனக்குழுச் சமூகத்தில் வேட்டை- பாதீடு என்றும் வீரயுகத்தில் வீரம், மறம் என்றும் மன்னராட்சியில் உயர்ந்தோரின் அறம் என்றும் மாற்றமடைந்துள்ளது. சான்றாண்மை சமூகத்தில் உயர்ந்த விழுமியமாக போற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் சான்றாண்மை :
சங்க இலக்கியங்களில் சான்றான் என்றால் வீரன், அறங்கள் மிக்கவன் என்ற இருபொருளில் கையாளப்பட்டுள்ளது. உயர்ந்த அறங்களைக் கொண்டவன் என்ற பொருளிலேயே அதிகம் சான்றோன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. பொருள்வயின் பிரிய முற்படும் தலைவனிடம் தோழி பெரியோரின் ஒழுக்கம் குறித்து எடுத்துரைப்பதில் சான்றாண்மை புலப்படுகிறது.

‘ விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
நற்கதவு உடைமை நோக்கி மற்றதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்’
(அக.பா.எ-286)

இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத பெரியோரின் உள்ளம் எப்போதாவது அவற்றை விரும்பினும் அறத்தை அங்குசமாகக் கொண்டு யானை என்னும் ஐம்பொறிகளை அடக்குவர். அறத்தையும் பொருளையும் தக்கவழிகளில் நாடி தமக்கு வேண்டியவற்றை முறையாகச் செய்து கொள்வர். ஆராய்ந்து தீநெறிகளை விலக்கி நன்னெறிகளைப் பின்பற்றுவர். இதுவே பெரியோர் ஒழுக்கம். நினைத்ததைச் செய்துமுடித்தல், மனத்தை அடக்குதல் இரண்டும் வௌ;வேறு எல்லைகளைக் கொண்டது. நினைத்ததை முடிக்கும் செயலில் ஆதிக்கவுணர்வு மேம்பட்டிருப்பினும் அறத்தைப் பின்பற்றுவதில் அடக்கம் இருப்பதாலேயே சான்N;றார் எனப்பட்டனர். அறத்தையும் பொருளையும்  மிகுதியாக உடைமை கொண்டவர்கள் சான்றோர்கள். இவர்கள் அரசராகவோ, அந்தணராகவோ, வணிகராகவோ இருந்தார்கள். மன்னராட்சி காலத்தில் கல்வி, கேள்வி, அனுபவத்தில் வெற்றி பெற்ற சிறந்த இலட்சிய  ஆண்களே சான்றோராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

‘ பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர்களான இவர்கள்’
(புற.பா.எ-188)

‘ ஆன்று ஆய்ந்து அடங்கிய கொள்கை உடையவர்கள்’
(புற.பா.எ-191)

என்ற புறப்பாடல்களின் வாயிலாக சான்றாண்மை என்பது அடக்கம் (அறம்), ஆதிக்கம் (செல்வம்) என்ற இரு எல்லைகளைக் கொண்டதை அறியமுடிகிறது.

சான்றோரின் இயல்புகள்:

‘ உண்டாலம்ம ! இவ்வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலர் முனிவு இலர்;
துஞ்சலும்  இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழெனின் உயிருங் கொடுக்கவர் பழியெனின்
உலகுடன் கெறினும் கொள்ளலர் ; அயர்விலர் ;
இன்னமாட்சி அனையராகி
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே ‘
(புற.பா.எ-182)

என்ற கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி இயற்றிய  பாடலின் வாயிலாக சான்றோர்கள் அமிழ்தமாயினும் தனித்துண்ணாமல் பகிர்ந்துண்ணுவர். புகழுக்காக உயிரையும் கொடுப்பர். பழி ஏற்படுமாயின் உலகுடன் பெறினும் இணையமாட்டர். சுயநலமின்றி பிறருக்கென வாழ்பவர் போன்ற கருத்துகள் வெளிப்படுகின்றன.

பிறர் தம்மைப் புகழக் கேட்பின் தலைகுனிதல் (கலி.பா.எ-119) , உலகம் பேணுபவற்றைப் பேணுதல் (நற்.பா.எ-72 , பிறர் துன்பத்தைத் தம் துன்பமாய் கருதுதல் (அக.பா.எ-382) , கடமை தவறாதவர் (நற்.பா.எ-327) ஆன்றோரின் அறவழியில் ஒழுகுபவர்(நற்.பா.எ-196),; .பொய்சாட்சி கூறார் (குறு.பா.எ-184) , பிறரின் குறைகளை நோக்கும் போது தன் குறையை முதலில் உணர்வர் (நற்.பா.எ-116),

நின்ற சொல்லர் (நற்.பா.எ-1) போன்ற அகப்பாடல்களின் வாயிலாகவும்  அறங்களைப் பின்பற்றும் சான்றோர்களின் இயல்புகளை அறியமுடிகிறது.

‘செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்’
(மதுரைக்காஞ்சி .490-492)

செற்றம், உவகையின்றி நெஞ்சினைப் பாதுகாத்து துலாக்கோல் போன்;ற நடுவுநிலைமையுடையவராய் தருமநூலைச் சொல்லும் சான்றோர்களும் மதுரை நகரில் வாழ்ந்தனர். இப்பாடலின் மூலமாக சான்றோர் செற்றம், உவகை போன்;றவற்றில் பிறழாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் விதிகளால் பகை, நட்பு, நொதுமல் என்ற முத்திறத்திலும் பிறழாமல் தீர்ப்புரைக்கும் அமைதியுடையவர் என்ற கருத்து பெறப்படுகின்றது. மக்கள் அறநெறி பிறழாமல் வாழ்வதற்கு அறம் கூறும் அவையங்களே காரணமாகிறது. சான்றோர் தாம் அறநூல் காட்டிய வழியில் ஒழுகுவதோடு பிறரையும் அறநெறியைப் பின்பற்றுமாறு வலியுறுத்துவர் என்பது புலனாகின்றது.

ஆதிக்கமும் பொருளுடைமையும் :
இச்சங்க இலக்கியப் பாடல்களின் வழி நோக்கும்போது சான்றோர்கள் ஈகை, ஊக்கம், புகழ், நாணம், நடுவுநிலைமை, வாய்மை, வலிமை போன்ற குணங்களோடு மனத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக திகழ்கின்றனர். இத்தகைய குணங்களை அனைவராலும் உடைமை கொள்ளவியலாது. பொருளுடைமையாளர்கள் தங்கள் உடைமையை நியாயப்படுத்தி அதனை அறஉடைமையாக மாற்றவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர்.

‘அறன்அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
திறன்இலார் உடுத்த தீமொழி எல்லாம்
நல்அவையுள் படக் கொட்டாங்கு..’
(கலி.பா.எ-144)

இப்பாடலின்படி சான்றோர்களைத் திறனில்லாதவர்கள் இகழ்ந்து தீமொழி கூறினும் அம்மொழிகள் சான்றோர்களின் அவையில் கெட்டு அழியும். அதாவது சான்றோர்க்கு வறுமை வராது. அப்படியே வரினும் அவர்களின் ஆதிககத்தில் குறை ஏற்படாது என்ற கருத்து பெறப்படுகின்றது.

‘அறத்தகுதியும் அறக்குவிப்பும் மிகையான வசதியின் அதிகாரம். இந்த மிகையான வசதியின் அதிகாரம் பிறரிடம் கேட்பதல்லாம் கீழ்ப்படிதலையே’
(ராஜ்கௌதமன் – தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.எ: 258)

என்னும் நீட்சேவின் கருத்துப்படி மிகைவசதி தன் அதிகாரத்தை அறநடத்தையாக மாற்றிக் கொள்கிறது. அதிகாரத்தின் அமைதியான தோற்றத்தை வெளிக்காட்டும் அறநடத்தைகள் மற்றவர்களைத் தம்மை அறியாமலே ஆதிக்கத்திற்கு முன் கீழ்ப்படிய வைக்கின்றன. சான்றாண்மை என்னும் பண்பு பிறரைக் கீழ்ப்படுத்தும் அமைதியான ஆயுதமாக திகழ்ந்திருக்கிறது.

அறங்கள் என்னும் சட்டத்தைக் கொண்டு நோக்கும் போது சமூக ஒழுங்கும், சமூக உறவுகளும் இயல்பானவை. மாற்றத்தை ஏற்காதவை என்ற கருத்து புலனாகின்றது. மன்னராட்சிக் காலத்தில்   சான்றாண்மை என்ற அறத்தைப் பொறுத்து அதிகாரமும், சமூக மதிப்பிடுகளும் அமைந்தன. பிறரை, உலகை ஆளுவதற்கு தன்னை ஆளுதல் அடிப்படையானது. அதாவது தன்னை,தன் பொறிகளை, விருப்பத்தைக் கட்டுப்படுத்தி அறத்தைப் பின்பற்றுதல் இன்றிமையாதது. நாகரிக சமுதாயத்தில் உயர்ந்த விழுமியமாகப் போற்றப்படும்  உடைமையும், ஆதிக்கவுணர்வும் கொண்டவரிடத்தில் சான்றாண்மை இருந்ததை அறியமுடிகிறது. இச்சான்றாண்மை அறத்தின் வாயிலாக மன்னராட்சிக்குப் பாதகமான சக்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம். சான்றோரின் கருத்து மக்களை நெறிப்படுத்தி அவர்களை அடக்கியாளப் பயன்படுத்தப்பட்டுள்ளது புலனாகின்றது.

குறிப்புகள்
1.         பத்துப்பாட்டு – உரையாசிரியர் முனைவர்.வி.நாகராசன்
2.         குறுந்தொகை – உரையாசிரியர் முனைவர்.வி.நாகராசன்
3.         கலித்தொகை – உரையாசிரியர் முனைவர்.அ.விசுவநாதன்
4.         அகநானூறு – உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார்
5.         நற்றிணை – உரையாசிரியர் முனைவர்.கு.வெ.பாலசுப்பிரமணியன்
6.         புறநானூறு – உரையாசிரியர் முனைவர்.கு.வெ.பாலசுப்பிரமணியன்
7.        தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் -ராஜ்கௌதமன்
8.        குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

Radhika lakshmi <radhikalakshmit@gmail.com>

* கட்டுரையாளர் –   – முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி –