சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. ‘பாண்டிய நாடே பழம்பதி யென்ன’ என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது. பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.
தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார். இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட நால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.
‘மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.’ – (பொருள். 31)
அந்தணர்:- ‘நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.’ (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள் அறநெறி வாழ்முறையில் ஈடுபடுவர்.
அரசர்:- மக்களைக் காப்பது மன்னன் கடமை. ‘மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.’-(பொருள்.32).மன்னன் ஏவல் வழி வருவர் வணிகரும், வேளாளரும்.
வணிகர்:- வைசிகன் வாணிகத்தினாலே வாழும் வாழ்கைக்குரியவன். ‘வைசிகள் பெறுமே வாணிக வாழ்க்கை.’ –(பொருள். 622).
வேளாளர்:- வேளாண் மாந்தர்க்கு உழுதூண் வாழ்க்கை மட்டும்தான் என்று கூறப்படுகின்றது. ‘வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.’ –(பொருள். 625).
மேலும் அரசர்க்கு, படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகியனவும் உரியவைகளாம்.
‘படையுங் கொடியுங் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுங் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.’ – (பொருள். 616).
இன்னும், அன்று மன்னர்கள் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளை வைத்திருந்தனர் என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது.
‘தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்.’ – (பொருள். 72-1-2)
மேற் காட்டிய, மன்னன் ஏவல் வழி நிற்போர் உதவி, படை, கொடி, குடி, முரசு குதிரை, களிறு, தேர், தார், முடி, காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றுடன் மன்னன் மாற்றான் படையை எதிர்த்து நின்று, மக்களையும் நாட்டையும் காப்பாற்றி வந்தான்.
புறநானூறு
கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு என்ற நூலில் சோழன் குளமுறத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வியந்து பாடுகின்றார் மாறோக்கத்து நப்பசலையார் எனும் புலவர். ‘இமயத்தில் பொறித்த விற்பொறியையும், நெடிய தேரையும் உடையவனான சேரனை வென்று, அவன் கருவூர்க் கோட்டையையும் அழித்த உன் முயற்சிச் சிறப்பை யான் எவ்வாறு கூறுவேன்?;’ என்று வியக்கின்றார் புலவர்.
‘தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் .. .. (பாடல். 39-6-9)
‘தூங்கு எயில்’- ஆகாயத்து மதில் என்பது தற்காலத்தைய குண்டு வீச்சு விமானங்களைப் போன்ற ஒரு சாதனமாய் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. அன்று ஆகாயத்து மதில் படைத்து அரண் அமைத்தனர் என்பதும் தெளிவாகின்றது.
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை மன்னனைப் பற்றி குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் பாடிய பாடல் இது. ‘ பெருமானே! கார்மேகம் போலத் திரண்டு எழும் பரிசைப் படையினையும், மலையென விளங்கும் யானைப் படையினையும், கடலெனப் பொரும் காலாட் படையினையும், இடிபோல் முழங்கும் முரசினையும், எல்லோர்க்கும் குறையாது வழங்கும் வண்மையினை உடையவனே! குட நாட்டின் வேந்தனே! நீ வாழ்க!’ என்று பாடியுள்ளார்.
‘ .. பெரும! ஈண்டிய, மழையென மருளும் பல்தோல், மலையெனத்
தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை.
உடலுநா உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே.’ – (பாடல் 17-34-40)
சேரமான் மன்னனின் பரிசைப் படை, யானைப் படை, காலாட் படை ஆகியன மன்னனின் பாதுகாப்பை மேலும் உயர்த்திய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.
சோழன் நலங்கிள்ளி மன்னனைப் பற்றி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில்-
‘புலவர் பாடும் புகழ் பெற்றோர், வானின்கண் செலுத்துபவன் இல்லாது தானே இயங்கும் வானவூர்தியிற் செல்லும் அளவு உயர்வர்’ என்று பாடியுள்ளார்.
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப, என்ப .. .. .. .. ‘ – (பாடல். 27-7-9)
அன்று, செலுத்துபவன் இல்லாது தானே இயங்கும் வானவூர்தி இருந்துள்ளமை மன்னனின் அரண் அமைப்பு, விண்வெளி ஆதிக்கம் போன்றவற்றை எடுத்தியம்புகின்றன. ஆனால், இன்று விண்ணில் பறக்கும் ஆளில்லா விமானம் பற்றிப் பேசிப் புகழ்ந்து பெருமைப்படுகின்றோம்.
பதிற்றுப் பத்து
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மன்னனின் வீரச் செயல்கள் பற்றிக் காக்கை பாடினியார் நச்சௌ;ளையார் எனும் பெண்பாற் புலவர் ஆறாம் பத்தைப் பாடியுள்ளார். போரில் பகைவர்களை வென்று கோட்டை மதில்களைக் கைக்கொள்ள, பகைவர்கள் பயந்து தம் நாட்டை உனக்குக் கப்பப் பொருளாகத்தர, அதனை நீயும் ஏற்று அவர்களுக்கு நல்லருள் புரிந்து, குன்றுகள் நிறைந்த காவற்காடுகள் சூழ்ந்த புகழ்மிக்க, பெருமை கொண்ட உன் வளநகர்க்குச் செல்லும்போது, வருவோரைக் கவ்விப்பிடிக்கச் செய்தமைத்த எந்திரப் பொறிகளும், சிலம்பும், தழைஉடைகளும் உடைய கோட்டை வாயிலைக் கடந்தால், கால் வைத்தவரைக் கவ்வி நீருக்குள் இழுத்துக் கொன்றுவிடும் முதலைகள் இருக்கம் ஆழமான நீர் அரணான அகழியும், ஆகியவற்றைப் பாடலில் காண்கின்றோம்.
‘வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வுhடா யாணர் நாடு நிறை கொடுப்ப,
‘நல்கினை ஆகுதி, எம்’ என்று; அருளி,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின்.
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி, .. – (பாடல். 53-1-8)
‘குண்டு கண் அகழி’ என்பதற்கு, ஆழமான பெரிய அகழி என்பது பொருள். அக்காலத்தில்; மன்னர் அரண்மனையைச் சுற்றி நீண்ட, அகலமான, ஆழமான அகழி அமைத்து, அதில் நீர் நிரப்பி, பாதுகாப்புக் கருதி வலிமையுடைய முதலைகளை அதில் விட்டு வைப்பர்.
புகைவர் நாடுகளின் பரப்பளவு குறையப் பகையரசர் நாட்டின் எல்லைவரை சென்று பாசறை அமைத்துப் போர் முரசு முழக்க, அதைக் கேட்டு வலக் கையில் தண்டாயுதத்தைத் தாங்கிக் கட்டளை கிடைத்ததும் பகைவர் அஞ்சப் போரிட எழும் உன் வீரர்கள், பகையரசர் யானைப் படைகளைக் கண்டவுடன், அவற்றின்மீது பாய்ந்து அழிக்கத் தயங்காத வல்லமை பெற்றவர்கள்.
‘நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுத்தரும்
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!’ – (பாடல். 54-12-17)
நில்லாத் தானை – பகைவர் யானைப் படையையும் எதிர்த்துத் தாக்கத் தயங்காத படைவரிசை என்பது பொருளாகும். நில்லாத் தானை மன்னனுக்கு ஓர் அரண் ஆகும்.
மூன்றாம் பத்தின் பாடல்களைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். இதில், சேரமன்னனான பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாட்டுடைத் தலைவனாவான். இப்பாடலில் குஞ்சம் அணிந்த குதிரைகள், ஆண் யானைகள், தேர்கள், சேனைப் படைகள் ஆகிய நாற்படைகளும், கணைய மரம், பகைவரைத் தானே தாக்கும் விசை பொருந்திய ஐயவித்துலாம் எனும் மதிற்பொறியும், காவல் மிகுந்த காட்டரண், ஆழமான அகழிகள் உள்ள நீரணை ஆகிய காவல் அரண் அமைப்புகள் பேசப்பட்டுள்ளன.
‘.. ..உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி,
கடி மிளைக் குண்டு கிடங்கின்
நெடு மதில் நிரைப் பதணத்து, .. ..’ – (பாடல் 22-17-25)
சீவக சிந்தாமணி
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி நூலில் ஏமாங்கத நாட்டின் இராசமாபுர நகரில் சச்சந்த மன்னன் அரசாண்டு வந்தான். அவன் விதைய நாட்டு அரசன் மகள் விசயை என்னும் நங்கையை மணந்தான். தன் ஆட்சிப் பொறுப்பை கட்டியங்காரன் என்னும் அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு, விசயையுடன் அந்தப்புரத்தில் மூழ்கிக் கிடந்தான். விசயையும் கருவுற்றிருந்தாள். சச்சந்தனுக்கு ஓர் ஐயுறவு ஏற்பட, வானில் பறக்கும் மயில் பொறி ஒன்றைச் செய்து அதை இயக்கும் முறைகளையும் விசயையிடம் கூறி வைத்திருந்தான். ஒரு நாள் கட்டியங்காரன் மன்னனைச் சிறை பிடிக்க ஆரம்பித்தான். மன்னன் விசயையை மயில் பொறியில் ஏற்றி வேறொரு நாட்டுக்கு அனுப்பி விட்டு, கட்டியங்காரனுடன் யுத்தம் புரிந்து மாண்டு போனான். விசயை ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, சீவகன் என்ற பெயரிட்டு, பின்நாளில் சீவகன் கட்டியங்காரனைக் கொன்று, தான் அரசனாகி எண்மரை மணந்தான்.
இராசமாபுரத்து மன்னனின் அரண்மனைச் சிறப்பாக, நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீதான போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்த அகழிகள், தேர் ஏறும் இடம், வாட்போர் பயிலும் இடம், அரசன் அரண்மனையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த ஆழமான அகழியில் முதலைகள் உலாக் கொள்ளும், அரண்மனைப் படைகள், மதிலுக்கருகில் யானைக் கூட்டங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.
திருக்குறள்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான தீருக்குறள் என்ற நூலில், அரண் சிறப்பு நன்றே கூறப்படுகின்றது. படையெடுத்துப் போர் புரியச் செல்பவர்க்கு அரண் (கோட்டை) சிறந்ததாகும். போருக்கு அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்க்கும் அரண் சிறந்ததாகும். இவ்வண்ணம் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
‘ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.’ – (குறள். 741)
நீலமணிபோன்ற நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும் ஆகிய நான்கும் உடையதே பாதுகாப்பான அரண் என்பர்.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.’ – (குறள். 742)
உயர்ச்சியும், அகலமும், உறுதியும், பகைவரால் அழிக்க முடியாத அருமையும் ஆகிய இந்த நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
‘உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.’ – (குறள். 743)
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
‘சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.’ – (குறள். 744)
பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு அரிதாயும், தன்னிடம் உணவுப் பொருள் கொண்டதாயும், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாயும் அமைந்தது அரண்.
‘கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.’ – (குறள். 745)
அகத்தாரான உள்ளே இருப்பவர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.
‘எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.’ – (குறள். 746)
சூழ்ந்து முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் திடீரெனத் தாக்கியும், வஞ்சனையால் உள்ளிருப்போரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
‘முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.’ – (குறள். 747)
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், உள்ளிருந்தவர் இடம் விட்டுப் பெயராமல் நிலைத்திருந்து வெல்லும் அமைப்பைக் கொண்டது அரண் ஆகும்.
‘முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். – (குறள். 748)
போர்முனையில் முற்றுகையிட்ட பகைவர்கள் அழியும்படியாகப் போர்த்தொழிலில் வல்ல மறவர்களைக் கொண்டதே அரண் ஆகும் என்பர்.
‘முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.’ – (குறள். 749)
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் செயல்வகையால் சிறப்பு இல்லாதவரானால் அரண் பயனில்லாததாகும்.
‘எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.’ – (குறள். 750)
முடிவுரை
அன்று மன்னர் காலத்தில் நிலவியிருந்த அரண் அமைப்புகள் பற்றித் தொல்காப்பியம், புறநானூறு, பதிற்றுப் பத்து, சீவக சிந்தாமணி, திருக்குறள் அகிய சங்க இலக்கிய நூல்களில் பேசப்பட்டுள்ள பாங்கினைப் பார்த்தோம். இனி, அதில் ஒவ்வொரு நூல்களிலும் எவ்வண்ணம் அரண் அமைப்புகள் கூறப்பட்டுள்ளன என்பதை நிரல் படுத்திக் காண்போம்.
தொல்காப்பியம் என்ற நூலில் படை, கொடி, குடி, முரசு, குதிரை களிறு, தேர், தார், முடி ஆகியனவும், காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகள்,
புறநானூறு என்னும் நூலில் ‘தூங்கு எயில் – ஆகாயத்து மதில், பரிசைப் படை, யானைப் படை, காலாட் படை, தானே இயங்கும் வான் ஊர்தி,
பதிற்றுப் பத்து என்ற நூலில் கோட்டை மதில், எந்திரப் பொறிகள், முதலைகள் நிறைந்த நீர் அரணான அகழிகள், யானைப் படைகள், தண்டாயுதம் தாங்கிய படை வீரர்கள், குதிரைப் படை, தேர்ப் படை, யானைப் படை, சேவைப் படை ஆகிய நாற்படைகளும், ஐயவித்துலாம் எனும் மதிற் பொறி,
சீவக சிந்தாமணி என்னும் நூலில் வானில் பறக்கும் மயில் பொறி, நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீதான போர்க் கருவிகள், நீர் நிறைந்த ஆழமான அகழியில் உள்ள முதலைகள்,
திருக்குறள் என்னும் நூலில் அரண் அமைப்பின் சிறப்பு, நீர் நிறைந்த அகழி, உயர்ந்த மலை, காடு, போர்த் தொழிலில் வல்ல மறவர்கள், பகைவர் ஊக்கத்தை அழிக்க வல்ல அரண்,
ஆகிய அனைத்தும் மன்னனைக் காத்து அவனுக்கு அரண் அமைத்துக் கொடுக்க, அவன் செங்கோலும், புகழும் நாட்டில் பரவ, மக்கள் இன்புற்று மன்னன் புகழ் பாட, நாட்டின் செல்வம் செழித்தோங்கியது அன்றைய மன்னன் ஆட்சியில்.