மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும் ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.
இச்சிலம்போடு தொல்தமிழர்கள் திணைச்சமுதாய வாழ்வில் பெண்களுக்கென்று பண்பாட்டில் சில வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் நிகழ்த்தி வந்தனர். அச்சடங்குகள் திணைச்சமுதாயத்திற்கே உரித்தான பண்பாட்டு அடையாளமாக வளம் வந்தது. அதில் சிலம்பு கழீஇ நோன்பும் அடங்கும். இச்சடங்கைத் திருமணத்திற்கு முன்பாகக் கடைப்பிடித்து வந்ததாகவும் திருமண காலத்தில் அதனை மீண்டும் நீக்கியதாகவும் திணைச்சமுதாயப் பண்பாடு எடுத்துரைக்கிறது. சிலம்புகழீஇ நோன்பின் தொடர் மரபுகளைத் திணைச்சமூக முதுகுடிகள், முதுபெண்டிர்கள் கடைப்பிடித்ததுடன் இளமகளிர்களின் (தலைவியின்) கற்பு வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், இனக்குழு மரபிற்கு உட்பட்டும் இதனைச் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக களவு (காதல்) வயப்பாட்டில் இளமகளிர் (குமரிகள்) தன்னுடைய காதலனுடன் உடன்போக்கு செல்லத் துணிவதும் உடன்போக்கு செல்லும் காலத்தில் காலில் அணியப்பட்ட சிலம்பினைக் கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டு நிலம்பெயர்ந்து செல்வதும் மரபாக்கப்பட்டுள்ளது. பின்னர் வளர்ச்சி பெற்ற காலங்களில் கற்பின் அடையாளமாகவும் மாறத்தொடங்கியது. ஆனால், இன்றைய சூழலில் சிலம்பு பல்வேறு வடிவங்களில் திரிகிறது. அவ்வாறு திரிவதற்கான காரணம், சூழல் மாற்றம் இவைகள் குறித்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இக்கட்டுரை ஆராயப்படுகிறது.
சிலம்பு – விளக்கம்
சிலம்பு நீளவட்டமான ஒரு வகை காலணியாகும். இது பார்ப்பதற்கு குழாய்போன்று அதனுள் பரல்கள் முத்து, மாணிக்கம் ஆகியவைகளால் நிறப்பப்பெற்றிருக்கும். இவ்வணிகலன்களை “சங்க காலத்தில் அரியகம், கழல், கால்வளை, காற்சரி, காற்கொலுசு, கிண்கிணி, சிலம்பு, பரியகம், பாடகம், தண்டை, நூபுரம், குடைச்சூழ், ஞெகிழம், கட்டுவடம், பாதசாலம், தண்டை”1 (பக்.245.இராகவன்.அ:1970) முதலிய பெயரிட்டு அழைக்கப்பட்டன. மேலும் பெண்கள் கேசாதி முதல் பாதாதி வரை அணியக்கூடிய அணிகலன்களைப் பல்வேறு பெயர்கள் கூறி அழைத்து வந்தனர். அவையான:
வலம்புரிச் சங்கு புல்லகம் (தென்பல்லி)
புல்லகம் (வடபல்லி) பூரப்பாளை
தொய்யகம் செவிப்பூ
அளகச் சூடம் ஏகதளம்
குதம்பை சவடி
காறை வாகுமாலை
தோள்வளை வீரச்சங்கிலி
வோளைப்பகுவாய் மோதிரம் பரியகம்
சூடகம் பவழவளை
ஆடைக்கட்டு கடகவளை
முத்தரை (வரிசிகை) உடைதாரம்
நூபுரம் (சிலம்பு) பாடகம்
குறங்குச்செறி
இவைகள் அனைத்தும் மகளிர்க்குறிய அணிகலன்களாகும். இதில் பெரும்பாலும் மாதவி தன்னை அழகுபடுத்திக்கொண்டு கோவலன் முன்பு அடியவையாகும். இவை குறித்து கடலாடுகாதை விரித்துரைக்கிறது. இதில் சிலம்பு காலில் அணியும் ஒரு வகை அணிகலனாகும். இச்சிலம்பு அழகிய பரற்கற்களையுடையது. செம்பொறி கலந்த சிவந்த நிறத்தில் இளமகளிர்கள் அணியக்கூடியது. சிலம்பின் பரல்களிலிருந்து எழும் ஓசைகள் வாகை மரத்தின் முத்துக்கள் போன்று ஒலி எழுப்பக்கூடியது. பாலை நிலத்தின் வறட்சிக் காலத்தை வெளிப்படுத்துவதற்காகவும் வறட்சி காலங்களில் வாகை மரத்தின் நெற்றுக்கள் சிலம்பின் முத்துக்கள் போன்று ஒலி எழுப்பச் செய்யும் ஆகையால் வாகை மரத்தின் நெற்றிற்கு இதனை ஒப்பிட்டும், குறிஞ்சி நிலத்தில் மலை அருவிகளிலிருந்து விழும் நீரின் வீழ் அருவி சத்தத்திற்கும் சிலம்பின் ஒலியை ஒப்பிட்டும் கூறியுள்ளனர் சங்கப் புலவர்கள்.
பெண்கள் அணிவதைச் சிலம்பு என்றும், ஆண்கள், வீரர்கள் அணிவதை வீரக்கழல் என்றும் அழைக்கப்பட்டன. சங்க காலத்தில் பாலை நிலத்தில் வாழ்ந்த ஆண்களும் போர்களில் முன்னின்று போர் புரிந்த போர்வீரர்களும் வீரக்கழல் அணிந்துள்ளனர். இவர்களை வில்லோன் என்றழைத்தனர். பாலை நிலத்தில் வாழ்ந்த மறவர்கள் வேடர்கள், போர்மறவர்கள் இவர்களே வில்லினைக் கையில் கொண்டிருந்தனர். ஆகையால் அவர்களையே வில்லோன் என்றும் அழைத்தனர்.
சிலம்பு குறித்த சொல்லாட்சிகள்
சிலம்பு எனும் சொல்லிற்குப் பல்வேறு பெயர்கள் பண்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. சிலம்பு – ஒலி, காற்சிலம்பு, பூசாரிகள் கைச்சிலம்பு, மலை, பக்கமலை, மகளிர் காலணிவகை, குகை, சிலம்பென்னேவல் எனக் கழக தமிழ் அகராதி பொருளிடுகிறது.”2 சிலம்பு என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளும் உண்டு. சிலம்புதல் என்பதற்கு ஒலித்தல் எதிரொலித்தல் எனவும் சிலம்பு என்பதற்கு ஒலி, மகளிர் காலணிவகை, பூசாரிகள் கைச்சிலம்பு, மலை, பக்கமலை, குகை எனவும் பொருள் சுட்டுகின்றன”3 (தமிழ் லெக்சிகன். தொகுதி-3 ப.1435) என்றும் சேந்தன் திவாகரம், சிலம்பின் பெயராக
“பரிபுரம் அரனும் பைம்பொன் பெயராக
அரிபெய் சிலம்பென் றறைதல் வேண்டும்.” – சேந்தன் திவாகரம். கழகம்.ப.142
எனவும் அரக்குடைச் சிலம்பின் பெயராக, “அரதனம், ஞெகிழி அரக்குடைச் சிலம்பணி”4 எனவும் தருகிறது. (சேந்தன் திவாகரம். கழகம்.ப.142). ஆனால் தொல்காப்பியத்தில் சிலம்பு குறித்த சொல் காணப்படவில்லை. சங்கப்பாடல்களில் பார்க்கும்போது ‘சிலம்பு’ என்பதற்கு குறிஞ்சிப் பாடல்களில் பெரும்பாலும் மலை, பக்கமலை என்றே பொருள் தருகிறது. அவற்றிலும் அருவி நீரின் வெள்ளிய ஒலியை சிலம்புக்கு உவமைப்படுத்தியுள்ளனர். மனிதர்களில் பெண்கள் இளமகளிர்களைச் சுட்டும்போது அவர்கள் காலில் அணியும் அணிகலன்களைக் குறிக்கிறது. பாலை நில மறவர்கள் காலிலும் இச்சிலம்பினை அணிந்துள்ளனர். யாழின் நரம்பில் பத்தரை அமைத்து அதில் கடுகின் சத்தம் போன்று சிலம்பின் ஒலி அமைந்திருக்கவும் செய்துள்ளது.
இதனை,“இலங்கு வெள் அருவியொடு சிலம்புகத்து இரட்ட
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து” (மதுரை.கா.299 -300)
“நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தென் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய்பொன் அவிர் இழை
அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்” (மதுரை.கா.443 – 446)
“நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்” (நெடு.100)
“நளிபடு சிலம்பில் பாயும் பாடி” (குறிஞ்.58)
“கடுக்கலித்து எழுந்த கண்அகன் சிலம்பில்
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின்” (மலைபடு.14-15)
“சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி” (மலைபடு.26-27)
“அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” (மலைபடு.161-162)
“சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும் குன்றச் சிலம்பும் (மலைபடு.343-344)
“நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி (திருமு.238)
“சீர்திகழ் சிலம்புஅகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை” (திருமு.40-41)
“மால்வரைச் சிலம்பில் மகிழ்சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி” (பெரும்.330-331)
“வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
நறுஞ் சிலம்பில் துஞ்சும்” (நற்.பாலை.7:7-8)
“பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே” (நற்.குறி.104:1-2)
“புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று” (நற்.பாலை.110:3-5)
“வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ” (நற்.குறி.176:7)
“படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை” (நற்.குறி.188:1-2)
“தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே” (நற்.குறி.188:8-9)
“வாழை ஓங்கிய அமை சிலம்பில்” (நற்.குறி.222:7)
“தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல் தூ மணல் அடைகரை” (நற்.பாலை.243:1-2)
“மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்” (நற்.குறி.244:3-4)
“வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்” (நற்.குறி.255:4-5)
“விளிவு இல் அரவமொடு தளிசிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்” (நற்.குறி.257:1-2)
“அதர் உழந்து அசையினகொல்லோ – ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்” (நற்.பாலை.279:8-9)
“சிலம்புடன் கமழும் சாரல்” (நற்.குறி.294:8)
“முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்” (நற்.நெய்.295:1)
“நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்” (நற்.குறி.304:3)
“நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப” (நற்.குறி.317:1-2)
“சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா” (நற்.குறி.359:1)
“நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே” (நற்.நெய்.363:8-10)
“அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்” (நற்.குறி.365:7)
“சூருடைச் சிலம்பின் அருவி ஆடி” (நற்.குறி.373:5)
“ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த” (நற்.குறி.379:12)
“சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்” (நற்.குறி.389:8)
“நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்” (நற்.குறி.393:1)
“வாழைஅம் சிலம்பில் கேழல் கெண்டிய” (நற்.குறி.399:4)
“நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலை அம் சிலம்பின் தலையது” (ஐங்.குறி.211:2)
“நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்” (ஐங்.குறி.226:2)
“கறி வளர் சிலம்பிற் கடவுட் பேணி” (ஐங்.குறி.243:1)
“குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும்” (ஐங்.குறி.253:1)
“கிழங்கு அகழ் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர்” (ஐங்.குறி.272:1-2)
“சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்” (ஐங்.குறி.278:1)
“சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன” (ஐங்.குறி.293:1)
“ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே?” (ஐங்.பாலை.389:4)
“காந்தள் கடி கமழும் கண் வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கு அமை மென்தோட் குறவர் மடமகளிர்” (குறி.கலி.39:14-15)
“இலங்குதாழ் அருவியோடு அணிகொண்ட நின்மலைச்
சிலம்பு போல் கூறுவ கூறும்” (குறி.கலி.46:25-26)
“கறிவளா சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி என்று ஓர்க்கும்” (குறி.கலி.52:17-18)
“ஆய்சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழைஇமைப்ப” (குறி.கலி.57:3)
“கூர் எயிற்று முகைவெண்பல் கொடிபுரையும் நுசுப்பினாய்
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை” (குறி.கலி.58:4-5)
“சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிபெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப” (குறி.கலி.59:5-7)
“தௌஅரிச் சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி” (மருத.கலி.69:8)
“இன் மணிச் சிலம்பின் சில்மொழி ஐம்பால்” (நெய்.கலி.125:16)
“வேறு ஒரு பாற்று ஆனது கொல்லோ? சீறடிச்
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் – இலள் மன்னோ” (நெய்.கலி.147:3-4)
“அரி பெய் சில்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை” (அகம்.மரு.6:1-2)
“கழை நரல் சிலம்பின் ஆங்கண்” (அகம்.குறி.8:8)
“புலி செத்து வெரீஇய புகர்முக வேழம்
மழை படு சிலம்பின் கழை பட” (அகம்.குறி.12:11-12)
“சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி” (அகம்.பாலை.17:9)
“மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும்” (அகம்.பாலை.47:15-16)
“கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப” (அகம்.பாலை.49:16-17)
“ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்” (அகம்.குறி.52:5)
“ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் – அதுவே
செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை” (அகம்.மரு.96:9-12)
“கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்” (அகம்.குறி.112:14)
“பொலந்தொடி தெளிர்ப்ப வீசி சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே” (அகம்.பாலை.117:8-9)
“இறும்புபட்டு இருளிய இட்டுஅருஞ் சிலம்பில்” (அகம்.குறி.128:8)
“ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த” (அகம்.பாலை.147:1)
“தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி” (அகம்.குறி.148:4)
“ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்” (அகம்.குறி.152:13)
“சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து” (அகம்.குறி.158:8)
“அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்” (அகம்.குறி.168:8)
“வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்” (அகம்.குறி.172:1)
“கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்” (அகம்.பாலை.177:7)
“வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அம்சிலம்பு ஒடுங்கிஅ ஞ்சினள் வந்து
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள்” (அகம்.குறி.198:9-11)
“ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பில்” (அகம்.குறி.198:14)
“கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்” (அகம்.குறி.202:4)
“நீடுஅமை நிவந்த நழல்படு சிலம்பில்” (அகம்.பாலை.205:16)
“சீர்கெழு வியன்நகர்ச் சில்புநக இயலி” (அகம்.பாலை:219:1)
“தண்என நனைக்கும் நளிர்மலைச் சிலம்பில்” (அகம்.குறி.228:3)
“இருள்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த” (அகம்.குறி.238:4)
“நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்” (அகம்.குறி.242:18)
“நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து” (அகம்.பாலை.249:15)
“சுரம் அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப” (அகம்.பாலை.257:3)
“இலங்குவளை தெளிர்ப்ப வீசி சிலம்புநகச்
சில்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி” (அகம்.பாலை.261:5-6)
“அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
நுண்பல் துவலை புதல்மிசை நனைக்கும்” (அகம்.குறி.262:14-15)
“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய” (அகம்.குறி.282:1)
“சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு அசைவளி உறுதொறும்” (அகம்.குறி.302:1-2)
“பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியல்நகர்ச் சிலம்பும் கழியாள்” (அகம்.பாலை.315:7-8)
“மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று” (அகம்.குறி.328:12)
“யாழ்இசைப் பறவை இமிர பிடிபுணர்ந்து
வாழைஅம் சிலம்பில் துஞ்சும் நாடன்” (அகம்.குறி.332:8-9)
“சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிப்பின்” (அகம்.குறி.362:13)
“ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புஉடன் கழீஇ
மேயினள் கொல்?” (அகம்.பாலை.369:24-26)
“வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப” (அகம்.பாலை.389:22)
“செறி அரிச் சிலம்பின் குநற் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்” (புறம்.36:3-4)
“அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்” (புறம்.85:6)
“பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்” (புறம்.116:11)
“மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்” (புறம்.136:12)
“நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று” (புறம்.143:10-11)
“ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை” (புறம்.158:10)
“செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை” (புறம்.341:3)
“வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே” (குறுந்.பாலை.7:1-2)
“சிலம்பு அணி கொண்ட வலம்சுரி மராஅத்து” (குறுந்.பாலை.22:3)
“ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்” (குறுந்.குறி.52:1)
“சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்இலை” (குறுந்.குறி.76:3)
“சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப” (குறுந்.குறி.78:3)
“காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென” (குறுந்.குறி.100:3)
“சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்” (குறுந்.குறி.239:3)
“கார்எதிர் தண்புனம் காணின் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஒராங்கு விரிந்த” (குறுந்.பாலை.282:4-5)
“ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்” (குறுந்.குறி.308:5)
“வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே” (குறுந்.பாலை.327:7)
“உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை” (குறுந்.குறி.360:6-7)
“அத்தவாகை அமலை வால் நெற்று
அரிஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப” (குறுந்.பாலை.369:1-2)
“மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி” (குறுந்.பாலை.371:2)
என்றும் பொருள் தருகிறது. சிலம்பு குறித்து சிலம்பில், பொருள், நிகழ்ச்சி, குறிப்பு என்ற மூன்று நிலையில் நாற்பத்து நான்கு இடங்களில் காணப்படுகின்றன. அருகி, நூபுரம்(6:84), காற்கு அணி(16:111), காலணி(16:127) ஞெகிழம்(18:25) என்பனவும் சிலம்பின் பெயரைச் சுட்டுகின்றன. பதிகச் செய்யுளில் ஐந்து முறை ‘சிலம்பு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“அம்செம் சீறடி அணிசிலம்பு ஒலிய” (4:47)
“நூபுரம், அருகி” (6:84)
“சிலம்பு வாய்புலம்பவும்” (8:90)
“சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனொடு” (9:74)
“சிலம்பு உள கொண்மம் என” (9:73)
“சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி” (12 பா.16:63)
“ஆய்பொன் அரிச் சிலம்பும்” (பா.12)
“சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான்போய்” (16:92)
“காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி” (16:111)
“போற்று அரும் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்தனன்” (16:16)
“சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்” (16:49)
“கோப்பெருந்தேவிக்கு அல்லதை இச்சிலம்பு” (பதி:23ää16:121)
“கரந்து யான் கொண்ட கால் அணி ஈங்கு” (16127)
“கோயில் சிலம்பு கொண்ட கள்வன்” (16:145)
“தாழ் பூம்கோதை தன் கால் சிலம்பு” (16:151)
“கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு என” (16:153 பதி 30)
“சிலம்பு காணிய வந்தோர் இவர்என” (16:159)
“செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம்” (16:160)
“நின்றிலள் – நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி” (19:2)
“கள்வேனோ அல்லன் கணவன்: என்கால் சிலம்பு” (19:7)
“செம்பொன் சிலம்பு ஒன்றை கை ஏந்தி நம் பொருட்டால்” (19:23)
“இணை அரிச்சிலம்பு ஒன்று ஏந்திய கையள்” (20:27)
“பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்” (20ää42)
“என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்” (20:61)
“பண்டு தான் கொண்ட சில்லரிச் சிலம்பினை” (பதி:25)
“என் கால் சிலம்பு மணி உடை அரியேஎன” (20:67)
“யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே” (20:69)
“கண்ணகி அணி மணிக்கால் சிலம்பு உடைப்ப” (20:69)
“கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்” (20:வெண்பா -3)
“சிலம்பின் வென்ற சேயிழை நங்கை” (22:135)
“தேரா மன்னனைச் சிலம்பின் வென்று” (22:145)
“தனிச்சிலம்பு அரற்றும் தகைமையின்” (23:10)
“தீவினைச் சிலம்பு காரணமாக” (25:69)
“சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்” (25:72)
“செம்சிலம்பு அறிந்து தேவி முன்னர்” (25:73)
“திருநிலைச் சேவடி சிலம்பு வாய் புலம்பும்” (28:67)
“சிலம்பின் வென்றனள் சேயிழை” (27:73)
“அரசு உறைகோயில் அணி ஆர்ஞெகிழம்” (18:25)
“பொன் அம் சிலம்பின் புனைமேகலை” (29: பா.9)
“சூழ்வினைச் சிலம்பு காரணமாக” (பதி.58)
“பண்அமை சிலம்பு பகர்தல் வேண்டி” (பதி:18)”5
போன்ற வரிகள் சிலம்பு குறித்து சிலம்பில் வெளிப்பட்டுள்ளன.
அமைப்பு – தோற்றம்
சிலம்பினைப் பார்ப்பதற்கு வட்டமாக இருக்கக் கூடியது. இச்சிலம்பினை சங்க இலக்கியங்களில் சிலம்பு என்றும் கழல் என்றும் பெயரிடப்பட்டன. இவை இரண்டும் பெயரடிப்படையில் வேறாக இருப்பினும் பொருளின் அடிப்படையில் ஒரே வடிவத்தையையே வெளிப்படுத்துகிறது. சங்க காலத்தில் சிலம்பினை கழலினை செய்வதற்கென்றும் உடைந்த சிலம்பினை சரிசெய்வதற்கென்றும் பொற்கொல்லர்கள் இருந்துள்ளனர். சிலம்பு கழல் குறித்து அதனோடு தொடர்புடைய இரும்பு, மணிவகைகள் குறித்து தொல்பொருள் ஆய்வுகள் மூலம் பார்க்கும்போது நாணயங்களும், மணிகளும், வளையல்களுமே அதிகம் கிடைத்துள்ளன. இவைகளில் மணிகள் பழுப்பு நிறக்கல் நீல வெண்மணிக்கல் மங்கிய சிவப்புக்கல் பளிங்குப் படிகக்கல் போன்ற பல வண்ணக் கற்களால் ஆக்கப்பட்ட மணிகள் ஆகியவை புதுவைக்கடுத்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டிணம், காஞ்சிபுரம், உறையூர் போன்ற இடங்களில் மிகவும் பழமை படிவுகளில் கிடைத்துள்ளன. குறிப்பாக காவிரிப் பூம்பட்டிணத்தில் இவை மிகவும் அதிக அளவில் கிடைத்துள்ளன.
இதிலிருந்து காவிரிப்பூம்பட்டினம், மணிகள் செய்யும் தொழிலுக்கும், அதன் வியாபாரத்திற்கும் மையமாக அமைந்திருந்தது என்று கணிக்கப்படுகிறது. இம்மணிகள் வட்ட வடிவமானவை, நான்கு மூளைகளைக் கொண்ட பட்டை வடிவம் அல்லது வரிப்பள்ளங்களைக் கொண்ட பட்டை வடிவானவை; பல வெட்டுக் கூறுகளைக் கொண்டவை போன்ற பல வகையான மணிகள் செய்யப்பட்டன.
இதுவரை கிடைத்துள்ள மணிகள், மூலப்பொருட்களைத் தேடிக் கொண்டுவருவதில் உள்ள திறன், அவற்றைப் பல பருமன்களில் வெட்டித் துளையிட்டு முறையான நிறைதிட்பத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல் முறை நுணுக்கங்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. மூலக்கற்கள் கிடைக்காத கடலோரப்பதியான காவிரிப்பூம்பட்டினத்தில் பல வண்ணக்கல் மணிகளாலான அணிகள் கிடைத்திருப்பது வியப்பாக உள்ளது.”6 இத்தன்மையைச் சங்கப்பாடல்களும் உறுதி செய்கின்றன. கடற்கரையை ஒட்டி வாழ்ந்த குடிகளில், இளமகளிர்கள் மாலை நேரங்களில் கைகளில் வளையலும், கால்களில் சிலம்பும் அணிந்து கொண்டு கடற்கரை மணலில் நண்டுகளை விரட்டி விளையாடியுள்ளனர். அவ்வாறு விளையாடும்போது காலில் அணிந்துள்ள சிலம்பு உடைந்து தெரிக்கச் செய்தன. அதனை பொற்கொல்லரிடம் கொடுத்து சரிசெய்ய முற்பட்டன. பொற்கொல்லர் அற்றுப்போன சிலம்பினை சந்து ஊதி மண்கொண்டு கட்டிக்கொடுப்பர். இதனை,
“கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியன் கொண்டு ஏகினை ஆயின் எனையாதூஉம்
உறு வினைக்கு அசாவா உவைல இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ – தோழி – மலி நீர்ச் சேர்ப்ப
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே” (நற்.நெய்.363)
என்ற பாடல் வரிமூலம் அறிய முடிகிறது. இங்கு நிலம் நெய்தல் நிலமாக கொள்ளப் பட்ட நிலையில் சிலம்பு, மணிவகைகளை சரிசெய்வதற்கென்று பொற்கொள்ளர்கள் இருந்துள்னர். அவர்கள் துறை மணல்களையே அதற்குப் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் இம்மணிகள் சிலம்புகள் எங்கிருந்து வந்ததென்று இனங்காணும்போது இதன் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமலைப்பிறந்த மணியும் என்று பட்டினப்பாலை கூறுவதிலிருந்து இவைகள் அனைத்தும் மலைப்பகுதியிலிருந்து வந்தனவாகத் தெரிகிறது. இதனை பட்டினப்பாலையும் வெளிப்படுத்துகிறது.
மலைப்பகுதி, மலைப்பகுதியை நில எல்லையாகக்கொண்டு வகுக்கும்போது சேரர்களின் நாடாகத் திகழ்கிறது. அத்தோடு சேரர்களின் தலைநகரம் என்று பார்க்கும்போது தமிழகத்தின் தற்போதைய கரூரே சிறப்புற்றிருந்தது. கரூர் சங்க காலத்தில் சேரர்களின் ஒரு பெரிய வாணிகத் தலமாக விளங்கியது. குறிப்பாக இங்கு ரோமானிய தங்கமும் வெள்ளியும் பெரிய அளவிலே வந்ததற்கு இங்கு கிடைத்துள்ள நாணயப் புதையல்களே சான்று பகர்கின்றன. 1086 முதல் 1904 ஆம் ஆண்டு வரை ஆறு புதையல்கள் இங்கு கிடைத்துள்ளன. இதில் ரோமானிய நாணயங்கள் மட்டுமின்றி ரோமானிய சின்னங்கள் பொறித்த அணிகலன்களும் கிடைத்திருப்பது இவ்வாணிபத் தொடர்புக்கு மேலும் நல்ல சான்றாக அமைந்துள்ளன.
அரிக்கமேட்டில் ரோமானிய கடவுள்(கியூபிட்)பறவை போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்ட மணிகள் கிடைத்துள்ளன. வெள்ளலூரிலும் ரோமணிய நாணயங்களுடன் கூடவே அவர்களது வேலைப்பாடுகளைடைய தங்க அணிகலன்களும் கிடைத்துள்ளது. கரூரில் கிடைத்துள்ள ஒரு தங்க மோதிரத்தில் பாயும் சிங்கத்தின் மீது ஒரு வீரன், வீற்றிருப்பதை சித்தரிக்கின்றது. அவனது தோற்றம், உடைகள், மகுடம், எல்லாமே ரோமானிய கலைப்பாணியிலே உள்ளது. மற்றொரு அழகிய வளைவு மோதிரத்தில் இரண்டு செம்மறி ஆடுகளின் முகங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் வெளிநாட்டு வேலைப்பாடாகவே தெரிகின்றது. இவற்றைத் தவிர நமது கலைப் பாணியில் செய்த மோதிரங்களும் கிடைத்துள்ளன. அவற்றில் பென் உருவம், யானை, எருது அல்லது நந்தி, வராகம், மீன் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்ட மோதிரங்களும் கிடைத்துள்ளன. (பக்.135-136) இவைகள் அனைத்தும் மக்கள் பண்பாட்டில் வழக்கத்தில் இருந்ததிற்கான அடையாளமாகத் தென்படுகிறது. மேலும் மக்களிடத்தில் ஆபரணப்பபொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததை வெளிக்காட்டுகிறது.
மேலும் சங்க காலத்தை சேர்ந்த பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட இரண்டு பொன் மோதிரங்கள் கரூரில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றில் “சா(த்)தன் சாதவேகி” என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்து அமைதி கொண்டு இதன் காலத்தை கி.பி.முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டைச் சார்ந்தது எனலாம். சங்க இலக்கியங்களிலும், தமிழ் பிராமி கல்வெட்டுகளிலும் சாத்தன், ஆதன், கீரன் என்னும் பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. “ஆதன் சாத்தன்” என்ற பெயர் குன்றக்குடி கல்வெட்டிலும், “சாத்தன் அந்தை” என்ற பெயர் முத்துப்பட்டியிலும், “நெடுசாத்தன்” என்று திருப்பரங்குன்றத்திலும் “தேவன் சாத்தன் என்னும் பெயர் அரச்சலூர் கல்வெட்டிலும் காணப்படுகின்றன.”7
சங்க காலத்தில் பெண்கள் தங்கத்தலான ஆபரணங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து கொள்ள புறநானூறும் இது குறித்து எடுத்துரைக்கிறது. கரூவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் கரூரின் வணிகச் சிறப்பினை பெண்கள் அணியும் ஆபரணங்கள் கொண்டே வெளிப்படுத்துகிறார். இளம்பெண்கள் கால்களில் சிலம்பு அணிவதுபோல் கைகளில் சிறிய வலையல்களை அணிந்துள்ளனர். அப்பெண்கள் பொருநையாற்று மணற்பரப்பில் கழற்ச்சிக்காய்களைக் கொண்டு மணலில் விளையாடும்போது சிலம்பும், வலையலும் அணிந்திருந்தனர் என்று கூறுகிறார். இதனை
“செறி அரிச் சிலம்பின் குறந் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்
நெடுங் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீ கழல் நெடுஞ் சினை புலம்ப” (புறம்.36:3-8)
இக்கருத்திற்கு மேல்கொண்டுள்ள கருத்து மிகவும் வலுச்சேர்க்கிறது.
சோழர் காலத்தில் அணிகலன்களின் வெளிப்பாடு
சோழர் காலக் கல்வெட்டுகளில் நூற்றெண்பத்தெழு கலைச்சொற்கள் அணிகலன்கள் தொடர்பாக இருந்துள்ளன என்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. சோழர்காலத்தில் கை, கால், உடம்பு என உடலின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பெண்கள் அணிகலன்களை அணிந்துள்ளனர். இதில் கையில் அணிவதை கைக்காறை என்றும், காலில் அணிவதை காற்காறை என்றும் பெயரிட்டு வந்தனர். “காற்காறை என்னும் அணிகலன் பாதசலயம், திருக்கால்வடம், திருவடிக்காறை, திருவடிநிலை என்னும் பெயர்களையும் பெற்றுள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் காலணிகளை உணர்த்தும் அணிகலன்கள் எனலாம்.
திருவையாறு இராசராசன் கல்வெட்டுகளில் ‘காற்காறை’ குறிப்பிடப்படுகிறது. “மெற்படியார் சாத்தி அருளும் முத்தின் காற் காறெய் ஒன்றி நாற் பொன் எழு கழஞ்சும்” என வரும் கல்வெட்டு அடிகளிலிருந்து காலில் அணியப்பட்ட அணிகலான ‘காற்காறை’ முத்துகள் அழுத்தப்பெற்றுப் பொன்னால் உருவாக்கபட்டிருந்தமையை அறியலாம்.
இராசேந்திர சோழனது கல்வெட்டொன்றில் திருக்காற்காறை என்பதற்குப் பதிலாகத் திருவடிக்காறை என்னும் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவன் காலத்து அசை பதவியிலிருந்த பொந்நங்கை என்னும் அதிகாரிச்சி தென் கயிலநாதர் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கினாள். அவள் வழங்கிய நன்கொடையை “திருக்காறை நாலிநால் பொன் எண் கழஞ்சும் திருவடிக்காறை ஒன்று பொந் முக்கழஞ்சாக இரண்டினால் பொந் அறுகழஞ்சு” என்பனவாகத் திருவையாற்றுக் கல்வெட்டில் பொறித்தாள். இக்கல்வெட்டினால் இரண்டு காலணிகள் ஒவ்வொன்றும் மூன்று கழஞ்சு பொன் எடையுடையதாக உருவாக்கப்பட்ட தென்பதும் அவற்றின் பெயர் ‘திருவடிக்காறை’ என்றழைக்கப்பட்டதென்பதும் புலப்படும்.
தஞ்சைக் கல்வெட்டில் ‘திருக்காற்காறை’ பிறிதொரு பெயர் இருந்ததை அறிய முடிகிறது. அப்பெயர் ‘திருவடிநிலை’ என்பதாகும். “வலத்திருவடிநிலை ஒன்றில் தடவிக்கடின பளிங்கு பத்தும் பளிங்கு வயிரம் முப்பத்தெட்டும் உட்பட நிறை இருபத்தெண்கழஞ்செ கால் இடத்திருவடிநிலை ஒன்றில் தடவிக் கட்டின பளிங்கு பத்தும் பளிங்கு வயிரம் முப்பத்தெட்டும் உட்பட நிறை இருபத்தென் கழஞ்செ கால் என வரும் கால்வெட்டு அடிகளின் துணையால் ‘தருவடிநிலை’ என்னும் பெயர் கால் அணிக்கு இருந்ததை அறியலாம். வலக்கால் அணியும் இடக்கால் அணியும் ஒரே நிறையும் இனமுள்ள மணிகள் அழுத்தப்பெற்றிருந்தன என்பதையும் மேற்காட்டிய கல்வெட்டு வெளிக்காட்டுகிறது.
பரியகம், அரியகம், நூபுரம், கிண்கிணி, காற்சரி, பாடகம் முதலிய அணிகலன்கள் காலணிகளாக விளங்கின. கால்காறையின் மேற்பகுதியில் அணியப்படும் அணிகலன்கள் பரியகம் என்றும் அரியகம் என்னும் கூறப்படும் இவ்வணிகலன் காற்காறை என்ற காலணிக்கும் காற்பெருவிரலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணியப்படுகின்றன.
காலணியான சிலம்பின்மேல் அணியப்படும் அணியைப் ‘பாடகம்’ என்றும் பாடகத்தோடு சேர்த்தணியும் அணியை ‘நூபுரம்’ என்றும் தவளையின் வாய்வடிவில் அமைந்த அணியைக் ‘கிண்கிணி’ என்றும் குழாய் போன்ற உருவில் தண்டைக்கு மேற்பகுதியில் அணியும் அணியைக் ‘காற்சரி’ என்றும் போர் மறவர்கள் மற்றும் அரசர் அணியும் அணியைக் ‘கழல்’ என்றும் அழைக்கப்பட்டன.
‘காலாழி’ ‘தாழ்செறி’ ‘நல்லணி’ ‘பீலி’ முஞ்சி’ மெட்டி முதலிய அணிகளைக் கால்விரல்களுக்குரிய அணிகளாக அறிய முடிகின்றன.”8 (பக்.242-243 ஆர்.கே.அழகேசன்) கால்விரலில் பெண்களே மோதிர வடிவில் அணிகலனை அணிந்து வந்தனர். சிலப்பதிகாரத்தில் இதனை “நலத்தகு மெல்விரல் நல்லணி செறி” என்ற வரியால் அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனைப்பிரிந்து கண்ணகி தனிமையில் வாழும்போது எந்தவொரு அணிகலன்களையும் அணிந்ததில்லை. இதனை
“அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
மேன்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள்
மங்கல வணியிற் பறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்” (சிலம்பு -97)
என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இச்சிலம்பு மற்றும் அணிகலன்கள் சங்கச் சமூகத்தின் சமுதாய அடையாளமகவும் நம்பிக்கையாகவும் திகழ்ந்து வந்துள்ளன. கனவனைப் பிறிந்த காலத்தில் பெண்கள் எந்தொரு ஆபரணங்களையும் அணிந்து கொள்ளாமல் தனித்துக் காணப்பட்டனர்.
பூப்பும் சிலம்பு கழிநோன்பும்
பெண் சமூகத்தில் உடல் ரீதியாக பூப்பு எய்தி விட்டாள் என்பதை அறிந்து கொள்ள பூப்புச் சடங்கு நிகழ்த்தப்பட்டு அவளது காலில் சிலம்பு அணிவிக்கப்படுகிறது. ஆனால் பெண் பூப்பு எய்தியதை அறிந்துகொள்ள தாய் முன்னமே உடல் ரீதியாக மகளின் தோற்றத்தில் பல மாற்றங்களை தெரிந்துகொள்வதுண்டு. பின்பே முறைப்படி சடங்கு நிகழ்த்தப்படுகிறது. பெண் பூப்பு எய்துவது குறித்து சில உடல்கூற்றினை வெளிக்காட்டும். அது குறித்து அர்னால்டு வரையானது, பூப்பு எய்திய பெண்ணின் முலைகள் பருத்தல், அல்குல் அகன்று விரிதல், குறியிடத்தில் உரோமம் முளைத்தல், முதலாவது மாதவிடாய்ப் போக்கு நிகழ்தல் ஆகியவற்றை முன்னேற்பாடகாகக் கருதலாம் என்று கூறுகிறார்.
பெண்ணுக்கு முதலாவதாக நேர்கிற இந்தப் பூப்பிற்குப் பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனிநபரின் உடல் வளர்ச்சியைச் சார்ந்து பெண்ணுக்கு, பூப்பின் முன்போ அல்லது பின்போ அத்தகைய சுகத்தை அவர் உணரலாம். அவருக்குப் பூப்பின் பல ஆண்டுகட்கு முன்னரே கூடப் பாலியல் உச்சசுகம் ஏற்படலாம். எனவே, உடற்கூற்றுக் செயல்பாட்டின் விளைவான பூப்பு எனில், அந்தப் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளிவில்தான் அது பொருள்படுகிறது. இந்த அம்சத்தைச் சுட்டுவதே சமூகரீதியிலான பூப்பு என்பதாகக் கொள்ளமுடிகிறது.”9 ”(ப.80, ராஜ்கௌதமன்:2006) தொல்காப்பியர் பூப்பின் பிறப்பினை எடுத்துரைக்கும்போது,
“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான” (தொல்.பொரு.கற்.1133) என்று கூறுகிறார்.
இவ்விரு கருத்துகளை ஒட்டியே சங்க அகநானூற்றுப் பாலைப் பாடலில் மகள் பூப்பு எய்தியதற்கான தோற்றப்பாட்டினை தாய் அறிந்து கொள்ளவும் செய்கிறாள். அதில்,
பெண்ணின் கூந்தல் நெறிப்பு உடையதாக இருப்பதை அறிந்து கொள்ளல்.
பெண்ணின் முலைகளின் உச்சியில் சிமிழ்கள் போல் அரும்பு விட்டு தென்படுதல்.
பலமுறை அவளையே தாய் உற்றுப் பார்த்தல்.
இவைகள் அனைத்தும் தாயின் செயல்பாடாகும். இதனைக் கண்டறிந்த பின்பே தாய் தனது மகள் பூப்பு எய்தி விட்டாள் என்று கணிக்கிறாள். அதன் பின்பு சிலம்பு கழிநோன்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்று விடுகிறாள். இதில் தாயின் மனபுத்தியானது மகளின் மீது சரிவர நாட்டம் கொள்ளாமையினால் மகள் பூப்பு எய்தியதை முறையாகத் தெரிந்தும் தென்பட்டும் அதனை நிறைவுறச் செய்யாமையாலும் மறைக்கும் தன்மையில் தாய் இருக்கிறாள். மகள் அதனைப்பொருட்படுத்தாமல் தலைவனுடன் உடன்போக்கு செல்லத் துணிகிறாள். இதனை, “அருங்கடி வியல்நகர்ச் சிலம்பும் கழியாள்” (அகம்.பாலை.315:8) என்று குடவாயிற் கீரனத்தனர் பாடல் வாயிலாக அறியமுடிகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் தலைவனுடன் உடன்போக்கு செல்லும் தலைவி இல்லத்தில் தாய்ää தந்தையின் காவலை மீறி செல்லும்போது சிலம்பின் ஒலி சத்தம் கேட்டு விளித்திடுவார்கள் என்று கருதி தனது காலில் அணிந்திருந்த சிலம்பினை கழட்டி கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளாள் ஒரு தலைவி. ஆக இரண்டு நிலைகளில் உடன்போக்கு நிகழ்ந்துள்ளது. இங்கு தாய், தந்தையின் கட்டுப்பாடு அதிகம் இருக்கிறது. முறைப்படி சிலம்பு தலைவிக்கு அணிவிக்கப்டுகிறது. அதே போன்று சமூகத்தில் மற்றொரு இடத்தில் சிலம்பு அணிவிக்கப்பட்டு அதனைப் பொருட்படுத்தாமல் பகற்பொழுதில் இளவேனிற் காலத்தில் (கோடைகாலம்) கால்களில் பரல்கள் ஒலிக்குமாறு சிலம்பணிந்து செல்கிறாள். அவ்வாறு செல்லும்போது வெண்கடம்பின் அரும்பினை தலையில் சூடிக்கொண்டும், கைகளில் வளையல்கள் ஒலிசெய்யும்படி தனது தோளினை உயர்த்திக் கொண்டும் செல்கிறாள். செல்லுகின்ற நேரம் வெயிலின் கொடுமை அதிகம் இருப்பதால் தலைவியின் கால்கள் சிவந்துக் காணப்பட்டன. இதனை. “அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப” (அகம்.பாலை.257:3) என்கிறது. தாய் தனது மகள் பூப்பு எய்தியதை அறிந்து இருந்தபோதும் அவளுக்கு சிலம்பு கழீஇ நோன்பு நிகழ்த்தாவிடினும் தீட்டின் வெளிப்பாட்டை அறிந்தும், தனது மகள் பூப்பு எய்திவிட்டாள் என்பதை தனித்துக் காட்ட கால்களில் சிலம்பு அணிவித்து அடையாளத்தினை காட்டுவது தாயின் செயல்பாடாக இருக்கிறது. அந்தக் கனமும் தான் பூப்பு எய்தி விட்டேன் என்பதையும் மகளும் அறிந்து கொள்ள முற்படுகிறாள். இங்கு பெண் என்பவள் பூப்பு எய்திய அடையாளம் தாய் என்றொரு பெண் மூலமே சமூகத்தில் வெளிப்படுகிறது.
பூப்பு எய்திய தலைவியை தலைவன் பாலை நிலத்தில் நெல்லிக்காய்கள் அறுந்துபோக உதிர்ந்து பளிங்குக்காசுகளைப்போல பரவிக் கிடக்கும். அத்தகைய காட்டு வழியில் தலைவன் தலைவியை அழைத்துச் செல்கிறான். அத்தோடு தலைவி சென்ற இடமோ, கவர்ந்த அடிப்பகுதியையுடைய ஓமை மரங்கள் ஓங்கி வளர்ந் காடாகவும் இருந்துள்ளன. தலைவியை அழைத்துச் சென்ற தலைவன் ஒரு போர் மறவனாகத் தென்படுகிறது. அவனது கையில் கூர்மையான வேலினையும், மணிகள் பதித்த கேடயத்தையும் நீண்ட வேலினையும் கையில் வைத்துக் கொண்டு தலைவியை அழைத்துச் செல்லுகிறான்.
இங்கு தலைவியை தன்னுடைய பேச்சிற்கு கவற்தல்பொருட்டு அழைத்துச் சென்ற தலைவனின் (மறவனின்) வாழ்வு போர்வீரனாகத் தென்படுகிறது. காரணம் தலைவன் தலைவியை அழைத்துச் சென்ற இடம் பாலை நிலச் சுரமாகும். அங்கு வழிப்பறி, கொலைகள் எளிதில் நிகழக்கூடும். அந்த போக்கிற்காக தலைவன் கையில் வேலும், கேடயமும் கொண்டு சென்றானோ? அல்லது போர் மறவனே தலைவியை களவு மேற்கொண்டு உடன்போக்கு அழைத்துச் சென்றானோ என்று சரிவரத் தென்படவில்லை. போர் மறவனாக வைத்து இனங்கானும்போது, தலைவனின் இல்லமானது புதர்போல் தோற்றம் கொண்ட குடிசைகளையும், ஒற்றைப்பசு கட்டப்பட்ட தூண் கொண்ட முகப்பினைக் கொண்ட புல்வேய்ந்த குடிசைகள் நிரம்பப் பெற்ற இல்லாக இருந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் தேக்கு மரத்தின் இலையைப் பறித்து அதில் ஊண் கலந்த உணவினை இட்டு உண்டு வாழக்கூடியவர்கள். அத்தகைய இல்லத்தில் சிலம்பினைக் கழித்து தலைவன் வதுவை புரிந்து கொண்டானா என்று தாய் புலம்புகிறாள். இங்கு ஆணின் இல்லில் சிலம்பு கழீஇ நோன்பு நிகழவில்லை என்பது தெரிகிறது. இதனை,
“……………… தேக்கின்
அகல் இலை கவித்த புதல்போல குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
குhன்கெழு வாழ்நர் சிறுகுடி யானே
…………. புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புஉடன் கழீஇ” (அகம்.பாலை.369:23-25)
என்று புலவர்கள் கூறுகின்றனர்;. ஆனால் சிலம்பு கழீஇ நோன்பிற்கு பின்பு வதுவை நிகழ்ந்துள்ளது. இதனை
“நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக எனச் சொல்லின்
எவனோ மற்றே காளையை ஈன்ற தாய்கே” (ஐங்.399)
என்ற பாடல் அடிகள் பெண் வீட்டில் சிலம்பு கழிப்புச் சடங்கும், வதுவைச் சடங்கு நிகழ்ந்தது பற்றியும் கூறுகிறது. சடங்கிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சிலம்பும் சிலம்புகழீஇ நோன்பும் அரச மகளிர்களும் கடைப்பிடித்து வந்தார்களா என்றால் அது குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அரசருடைய மகளிர்கள் மகள்கள் கால்களில் சிலம்பு அணிந்து இருந்தனர். என்ற குறிப்பு சங்கப்பாடல்களில் இருக்கின்றன.
அரச மகளிர்கள் சிலம்பு அணிதல்
சங்க காலத்தில் அரச குடும்பத்தில் வாழும் அரச மகளிர்களும், அரசர்களின் மகள்களும் காற்சிலம்பு அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அரசகுல பெண்கள் அணியும் சிலம்பானது மணிகள் பதிக்கப்பட்ட சிலம்பினைக் கொண்டிருந்தன. அரச பெண்கள் அணியும் சிலம்பில் மணிகள் பதிக்கப்பட்டதை சங்க இலக்கியம் எடுத்தியம்புவதுபோல்தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தில் மணிகள் உற்பத்தி செய்ததை பதிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய தொழில்களில் ஒன்று மணிகள் செய்தல். பெருங்கற்படைச் சின்னங்களில் கிடைக்கின்ற ஏராளமான மணிகளையே இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். மணிகள் செய்தல் என்பது மூன்று நிலைகளைக் கொண்டது. அரிய மணிக்கற்கள் நிலவியலில் ஏற்பட்ட எண்ணற்ற வேதியல் இயற்பியல் காரணமாகப் பாறைகளுக்கு இடையே தோன்றுபவையாகும். இவ்வகைப் பறைகள் தொடர்பான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தால் மட்டுமே அவற்றின் இருப்பிடமறிந்து கண்டெடுத்து மணிகள் செய்ய இயலும். எனவே அரிய மணிகள் விளையுமிடம் அறிந்து அவற்றை வாழ்வியலுக்குப் பயன்படுத்தும் நிலை முதல் நிலை ஆகும். இரண்டாவதுää இவ்வரிய கல்மணிகள் ஒவ்வொன்றும் சில இயற்பியல் வேதியல் கூறுகள் கொண்டவை. இத்தகைய ஒருவர் அறிந்திருந்தால் மட்டுமே அவற்றை ஆபரணப்பொருட்களாக மாற்ற இயலும். எனவே அரியமணிகள் பற்றிய அறிவியல் சார்ந்த பின்புலம் தேவை. மூன்றாவது நிலை என்பது இவற்றை வணிகத்திற்குப் பயன்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தைக் கொண்டு வடிவமைப்பது ஆகும். இவற்றைச் சங்ககாலத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது குறிப்பாகக் கொடுமணல் அகழாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் ‘மணி’ என்ற சொல் நூலில் மாலையாகக் கோத்து அணிந்து கொள்ளும் ஆபரணம் என்ற நிலையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சங்க இலக்கியத்தில் 381 இடங்களில் இச்சொல் பயின்று வரும் நிலையைப் பார்க்கும்பொழுது இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே இது குறித்தது எனலாம் என்கிறார் க.ராஜன் அவர்கள். கொடுமணலில் இரும்புத் தொழிலைப்போன்றே அரிய கற்களைக்கொண்டு மணிகள் செய்யப்படும் தொழிற் கூடங்கள் சிறந்து விளங்கின. இது குறித்து “கொடுமணம் பட்ட நன்கலம்” (பதிற்.67) “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்” (பதிற்.74) என்று பதிற்றுப்பத்து வாயிலாக கொடுமணலில் சங்க காலத்தில் கல்மணிகள் உற்பத்தி செய்த கல்மணிக்கூடங்கள் இருந்தது தெரிய வருகிறது. அத்தோடு கொடுமணல் என்று சொல்லக்கூடிய இன்றைய கரூர் மாவட்டத்தை ஒட்டிய நிலப்பகுதியான காங்கயத்தில் ‘பெரில்’ எனப்படும் பச்சைக்கல்லும், படியூரில் ‘சபையர்’ என்ற நீலக்கல்லும், சிவன்மலையில் ‘குவாட்ர்ஸ் என்ற பளிங்குக் கல்லும் கிடைத்துள்ளது. இதனால் இங்கு பச்சைக்கல், நீலக்கல், பளிங்குக்கல், சூதுபவளம், ஜேஸ்பர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரியகற்கள் செய்யும் செய்யும் தொழிற்கூடங்கள் இருந்தது தெரிய வருகிறது.”10 இக்கருத்தினைக்கொண்டு சங்கப் பாடல்களில் இணைத்து ஒப்பிடும்போது சங்க காலத்தில் தமிழகத்தில் மணிகள் அணியும் வழக்கம் அரச குலத்தினரித்தும் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. இது குறித்து சங்கப் பாடலில் ஐயை என்பவளைப்பற்றி அறியும்போது ஐயை என்பவள் ஒரு கற்புடைய மகளிராகக் கொள்ளப்படுகிறார். இவனது தந்தை தித்தன் என்பவன். அத்தகையவன் வெண்ணெல்லும் மதிலும் நாற்புறமும் வேலியாகச் சூழப்பெற்ற உறையூரை தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஒரு சோழனாவான். இவளது மகள் ஐயை என்பவள் அரி பெய் சிலமபினை தனது காலில் அணிந்து இருந்துள்ளாள் என்று பரணர் பாடல் வாயிலாக அறியமுடிகிறது.
“அரிபெய் சிலம்பின் ஆம்பல் அம்தொடலை
அரம் போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை
இழை அணி பனைத்தோள் ஐயை தந்தை
முழை வளம் தரூஉம் மா வண் தித்தன்” (அகம்.மரு.6:1-4)
என்ற பாடல் வாயிலாக அறிய முடிகிறது. அதைப்போன்று அஃதை என்பவள் பருவூரினைத் தலையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த ‘அண்ணல் யானை அடு போர்ச் சோழனின்’ மகளாவாள். அடு போர்ச் சோழன் பருவூர்ப் பறந்தலை எனுமிடத்தில் இருபெரும் வேந்தரான சேர பாண்டியருடன் பேர்செய்து அவர்களை இறக்கச் செய்து வெற்றி கொண்டவன். அத்தகையவனின் மகள் அஃதை என்பவள் ஆவாள். அஃதை சிவந்த பொன்னிலான சிலம்பினை தனது காலில் அணிந்திருந்தாள். அத்தையவள் மாமை நிறத்தில் காணப்பட்டனள். இதனை
“செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கழல் மாமை அஃதை தந்தை” (அகம்.மரு.96:11-12)
என்று மருதம் இளங்கடுங்கோ கூறுகிறார். இவ்விரு பாடல்கள் வாயிலாக அரசமகளிர்களின் சிலம்பினைப் பார்க்கும்போது இருவேறு சிலம்புகள் வெளிப்படுகின்றன. அஃதை என்பாளின் சிலம்பு செம்பொன்னாலானது. ஐயை என்பாளின் சிலம்பு மணிகள் பதிக்கப்பட்ட பரல்களைக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. ஆகையால்தான் புலவர்கள் இருவேறு பெயராக ‘செம்பொன்சிலம்பு’ ‘அரிபெய்சிலம்பு’ என தனித்தனியே பிரித்துக் காட்டுகின்றனர். இருப்பினும் இரண்டு மன்னர்களும் உறையூரினை தலையிடமாகக் கொண்டடு ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்களாவர்கள். ஆக சோழர்கள் காலத்தில் இருவேறு சிலம்புகள் அணியும் வழக்கம் பெண்களிடத்தில் இருந்துள்ளது தெரிய வருகிறது.
பரத்தையர்கள் சிலம்பணிதல்
சங்க காலத்தில் பரத்தையரின் செல்வாக்கு நிலப்பிரபுத்துவக் காலத்தில் மேலேங்கியது. அதற்கு முந்தைய காலத்தில் தனித்தனியான கணவாழ்க்கையாகவே நிகழ்ந்து வந்தது. மருதநிலத்தில் மேலோங்கிய பரத்தையரின் வாழ்க்கை பொருளீட்டு நிலையிலே ஆணிணைச் சார்ந்து இருந்துள்ளன. இவர்கள் வாழ்ந்த இடம் புறஞ்சேரியாகக் கொள்ளப்பட்டன. இப்பரத்தையர்கள் பிறரைக்கவரும் விதத்தில் தங்களை அடிக்கடி அலங்கரித்துக்கொள்வதுண்டு. அவ்வாறு அலங்கரித்த பரத்தையர்களில் சிலர் தெளிந்த உள்ளீடு பரல்கள் கொண்ட மணியை உடைய சிலம்பினை அணிந்திருந்தனர். அவ்வாறு அணிந்த சிலம்பினையும் கையில் வளையல்களையும் அணிந்து கொண்டு வீதி (தெரு)யின் முற்றத்தில் நின்று கொண்டு ஆண்கள் இருக்கும் வீதி வழியாக கண்தாங்கி நடந்து செல்வதுண்டு. இதனை
“தௌஅரிச் சிலம்பின் ஆர்ப்ப தெருவின் கண்தாங்கி நின்
உள்ளம் கொண்டு ஒழித்தானைக் குறைகூறிக்கொள நின்றாய்”(மரு.கலி.69:8-9)
என்கிறது. இவை ஒருபுறத்தேனும், மறுநிலையில் இல்லிருக்கும் பெண்கள் இளமகளிர்க்கு ஐம்பால் கூந்தலை எண்ணெய் பூசி வாரிவிடும்போதும் சிலம்பு அணிந்து இல்லில் இருந்துள்ளனர். இதனை,
“இன்மணிச் சிலம்பின் சில்மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தடஅரவு அல்குல்” (நெய்.கலி.125:16-17)
என்று கூறுகிறது. ஆக சங்க காலத்தில் அரச மகளிர்கள் அணிந்துள்ளது போல் புறஞ்சேரிகளில் வாழ்ந்த பரத்தையர்களும் அவர்கள் வாழ்ந்த ஊரினைச் சுற்றியுள்ள குடிகளில் வாழ்ந்த பெண்களும் சிலம்பணிந்து தங்களது மரபினைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். பரத்தையர்கள் சிலம்பணிந்ததுபோல் சங்க காலத்தில் இளமகளிர்கள் விளையாடும்போதும் தங்களது கால்களில் சிலம்பணிந்துள்ளனர்.
விளையாட்டில் சிலம்பணிதல்
சங்க காலம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டமாகும். இக்காலத்தில் ஆண்களுக்கு வீரத்தின் அடையாளமாகவும், பெண்களுக்கு பொழுது போக்கின் வெளிப்பாடாகவும் இவ்விளையாட்டுகள் இருந்தன. இதில் பெண்களுக்கென்று சிற்றில், ஓரை, புனல் ஆகிய விளையாட்டுகள் தொடக்க நிலையில் இருந்து பூப்பு எய்தக் கூடிய காலங்களிலும், பின்பு பூப்பு எய்திய போதும் விளையாடக்கூடிய விளையாட்டாக இவ்விளையாட்டுகள் இருந்துள்ளன. ஏனென்றால் சிற்றில், ஓரை, புனல் ஆகிய விளையாட்டுகளில் மகளிர்கள் தங்களது கால்களில் சிலம்பு அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆகையால் இவ்விளையாட்கள் பெரும்பாலும் பூப்பு எய்திய பின்பு விளையாடக்கூடிய விளையாட்டாக தென்படுகிறது. விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுபோல், சடங்கு சார்ந்த மரபு பொருட்களுக்கும் சமூகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
இளமகளிர்கள் (குமரிகள்) தமது தோழியருடன் சிற்றில் விளையாட்டு விளையாடும்போது மரத்தின் கிளைகளால் உருவாக்கப்பட்ட சிறுபானையையும், மரப்பொம்மையையும் வைத்து சிற்றில் விளையாடுவதுண்டு. அதே போன்று ஓரை விளையாட்டும் தமது தோழியருடன் இணைந்து விளையாடுவதுண்டு. இவ்விரு விளையாட்டுகள் விளையாடும்போது இளமகளிர்கள் உள்ளீடுகள் பதிக்கப்பட்ட அழகமைந்த சிலம்பினைத் தமது கால்களில் அணிந்திருக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தன் பெரிய வீட்டின்கண் காற்சிலம்பு ஒலிக்க தனது சிறிய தோழியரொடு ஓரை, பந்து விளையாட்டு விளையாடும்போது தனது கால்களில் அணிந்துள்ள காற்சிலம்பு ஒலிப்ப ஓடியாடி விளையாடியுள்ள நிலையில் இடையிடையே அழைத்து தனது மகளுக்கு பாலை ஒரு வாய் உண்ணக்கொடுத்து மகிள்வதுமுண்டு. இதனை
“சுடர்விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிபெய்த அழகு அமை புனை வினை
ஆய்சிலம்பு எழுந்து ஆர்ப்ப” (குறி.கலி.59:5-7)
“கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே” (அகம்.பாலை.47:16-18)
“சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி
ஓரை யாயமொடு பந்துசிறி தெறியினும்
வாரா யோவென் றேத்திப் பேரிலைப்
பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல்
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி
என்பா டுண்டனை யாயின் ஒருகால்
நுந்தை பாடும் உண்ணென் ஊட்டிப்
புpறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்
நலம்புனைந் தெடுத்தவென் பொலந்தொடிக் குறுமகள்” (அகம்.219)
என்ற பாடல் வரிகள் மூலம் சங்க காலத்தில் மழலைக் காலத்தில் மகளிர்கள் பாலுண்ட பருவத்திலும் தனது கால்களில் சிலம்பு அணிந்திருந்த வழக்கம் மரபாக இருந்துள்ளன.
சிலம்பணியும் காலம்
சங்க காலத்தில் பெண்களிடத்தில் சிலம்பணியும் மரபு வெறுமனே இனக்குழு சார்ந்த குலமரபாகவே கடைப்பிடிக்கப்பட்டன. சமுதாயத்தில் இனக்குழுக்களில் ஒரு பொருள்சார் பண்பாடு அழிவுறும்போது அதன் தாக்கம் வேறொடு அழிவுறாக்கம் பெறமால் இருப்பதற்காக அதன் மரபினை அதன் எச்சம் கொண்டு தொடர்மரபாக திரும்பவும் கடைப்பிடிக்கும் வழக்கம் இனக்குழு மக்களிடத்தில் இருந்து வந்தன. அந்த வகையில் தொடர்மரபாக இனக்குழு மரபு மக்களிடத்திலிருந்து வந்ததுதான் இச்சிலம்பு அணியும் மரபு. இவை சிறுவயதிலிருந்து பூப்புநிலை பின்பு மாற்றம்பெற்று வதுவை எனப் பல நிலைகளில் மாறுதல் பெற்று பண்பாட்டை வளர்த்தெடுத்து வந்துள்ளது. அவ்வளர்ச்சியின் வெளிப்பாடுதான் இனக்குழுவிலிருந்து தொடர்ந்து இயங்கி சிற்றில், ஓரை, பின்பு நிலப்பிரபுத்துவ காலத்தில் அரமகளிர்களின் கால்களில் சிலம்பாகவும், பரத்தையர்களின் கால்களில் சிலம்பாகவும், மறவர்களின் கால்களில் வீரக்கழலாகவும் தொடர்ந்து இயங்கி வருகிறது இச்சிலம்பு.
இச்சிலம்பு திணைச்சமூகத்தில் குலந்தோறும் ஒரே அமைப்பில் பயன்படுத்தப்பட்டு வந்ததா? இல்லை. குலங்களுக்குள் மாற்று சிந்தனை நிலவி இருந்துள்ளன. இது குறித்து தொல்காப்பியர் கூறினாரல்லர். அவர் கூறாமைக்குக் காரணம் திணைதோறும் குலந்தோறும் வேறு வேறு கரண அடையாளங்கள் வழங்கியிருக்காலம். தற்காலத்துக் கரணக் குறியைக் கூறின், இதுதான் குறியென வழிவழி மக்கள் அடிமைப்படுவர். அதுவேண்டா. புதிய கரணக் குறிகள் காலத்திற்கேற்பக் கொள்ளினும் தவறில்லை என்று தொல்காப்பியர் கூறுகிறார்.”11 (தமிழ்க்காதல்.ப.134). தொல்காப்பியர் அவ்வாறு உரைப்பதற்குக் காரணம் தொல்காப்பியர் காலத்தில் இருந்த இனக்குழுக்களுக்குள் ஒரே நிலையில் வதுவை நிகழவில்லை. மாற்று நிலையில் வதுவை நிகழ்ந்துள்ளது. அதனை
“கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்.பொரு.கற்.1088)
இங்கு வதுவை கொளற்குரிமரபு கொடைக்குரி மரபில் பெண்ணை முறைப்படி கொடுத்து வதுவை நிகழ்த்தப்பட்டன. அதே நிலையில் அடுத்த நூற்பாவில்,
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன்போகிய காலையான” (தொல்.பொரு.கற்.1089).
தலைவியை மணம் செய்து கொடுத்தற்குரியவர்கள் இல்லாமலே தாய் தந்தையின் இரவுக் காவல் தடுப்பினை உடைத்து உடன்போகிய நிலையில் தலைவி செல்லும் தன்மையும் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்துள்ளன. இதனை சங்கப்பாடலும் உறுதி படுத்தியுள்ளது.
“அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்ஞர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்” (அகம்.198)
என்ற பாடல் வரிகள் உடன்போயிம் சங்க காலத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளன. இக்காரணங்களைக்கொண்டே திருமணத்திற்கென்று விலக்கு வைக்கவில்லை. அதனைப்போல்தான் சிலம்பனிதலிலும் பெண்களுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அரச மகளிர்கள் அணிந்த சிலம்பின் தன்மையும், பரத்தையர்கள் அணிந்த சிலம்பின் தன்மையும் வேறாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் பரத்தையர்கள் பிறரைக்கவரும் தன்மையில் சிலம்பினை அணிந்திருப்பதுண்டு. அதனால் அதனின் அமைப்பு ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். பரத்தையருக்கென்று தனித்து சிலம்புகழீ நோன்பு நிகழ்ந்ததாக சங்கப்பாடல்கள் குறிப்பிடவில்லை. இனக்குழு மக்களின் குமரிகளுக்கே சிலம்பு அணியும் வழக்கம் இருந்திருந்ததை சங்கப்பாடல் எடுத்துரைப்பதோடு அவர்களுக்கே உரித்தானதாக இச்சிலம்புகழீஇ நோன்பு இருந்துள்ளது தெரிய வருகிறது. ஆகவே சிலம்பானது பெண்களின் உடல்பெருக்கத்தில் தன்னை தனித்து வெளிப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகவே தெரிகிறத. ஒரு நிலையில் உடல் ஈர்ப்பை பிறருக்கு வெளிக்காட்டுவதற்காகவும், ஆண்மீது கவன ஈர்ப்பு செய்யவுமே இச்சிலம்பு பண்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மறுநிலையில் ஊடலை களவு நிலையில் இருந்து கற்பு வாழ்க்கைக்கு தொடர்வதற்காகவும் சிலம்பை மாற்றுப் பொருளாகவும் சங்க காலத்தில் பெண்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தொகுப்புரை
1. சிலம்பு கழிநோன்பு உடன்போக்கின் பின்பு தலைவன் இல்லத்தில் நிகழக் கூடியது. தாயின் இல்லில் வதுவை நிகழும் முன்பு சிலப்பு கழீஇ நோன்பினை நிகழ்த்திய பின்பும் தாயின் இல்லில் வதுவை நிகழ்ந்துள்ளது.
2. உடன்போக்கில் தலைவன் தலைவியை பாலை நிலத்தின் வழியாக அழைத்துக்கொண்டு சென்றான். அப்போது தலைவி தனது காலில் அணிந்துள்ள சிலம்பின் பரல் ஓசை வாகை மரத்தின் நெற்றின் ஓசையைப் போன்று வெளிப்படுத்தின. சில நேரங்களில் தலைவி இல்லிருந்து வெளியே வரும் காலத்தில் சிலம்பின் ஒலி கேட்கும் என்ற அச்சத்தில் தனது காலில் அணிந்துள்ள சிலம்பினை கலட்டி தனது கைகளில் அணிந்து கொண்டு செல்லவும் செய்துள்ளாள். பின்பு பாலை நிலத்தைக்கடந்து செல்லும்போது அச்சிலம்பினை தனது காலில் அணிந்து சென்றுள்ளாள். இதில் சமூக பண்பாட்டுக்கான ஒழுக்க நம்பிக்கையை சுட்டும்போது பெண்கள் இல்லினைக் கடந்து பொது இடங்களில் செல்லும்போது காலில் இரும்பு அணிந்து செல்லும் மரபு இருந்துள்ளது. அது சிலம்பாக வெளிப்பட்டுள்ளது. இன்றும் கிராமப் புறங்களில் இளம்பெண்கள் பூப்பு எய்திய நாட்களில் தனிமையில் வெளியே செல்வதில்லை. காரணம் தான் தீட்டுக்கு உள்ளாக்கப்பட்ட தன்மையில் தெய்வம், பேய் பிசாசு தன்னருகில் அண்டாமல் இருப்பதற்காகக் கையில் இரும்பு பொருளான மயிர்கோதி, திரவுகோல் (சாவி), அரிவாள் காலில் சிலம்பு கால்விரல்களில் வளையம் முதலியனவைகளை அணிந்து செல்வது இன்றைய மரபாக இருந்து வருகிறது. அதே மரபும் சங்க காலத்தில் இளம்பெண்கள் (பூப்பு எய்திய காலத்தில்) தீட்டின் அடையாளமாகவும், பூப்பு எய்தியதன் அடையாளமாகவும் காலில் சிலம்பு அணிந்து சென்றுள்ளனர்.
3. ஆண்கள் பகைவர்களை வென்று வெற்றியின் அடையாளமாக பகைவர்களின் தலைவடிவு பொறித்த கழலினை வலது காலில் அணியும் மரபும் பண்டைய காலத்தில் இருந்தது. அதே நேரத்தில் குடிக்குரிய கழலினையும் ஆண்கள் தமது இடது காலில் அணிந்திருந்தனர். (குறுந்.பாலை.7) இங்கு கழல் என்பது பெண்கள் அணியும் சிலம்பு போன்று இருந்தாலும், அதன் பரல்கள் ஒலிக்கும் தன்மையில் இல்லை. ஆனால் பெண்கள் அணியும் சிலம்புகள் மழைத்துளிகளின், வாகை மரத்தின் நெத்துக்களின் விதைகள் போன்று ஒலி பரப்பிக்காணப்பட்டன.
துணை நின்ற நூல்கள்
1. இராகவன். அ – தமிழ்நாட்டு அணிகலன்கள், ப.245
2. கழக தமிழ் அகராதி, ப.456.
3. தமிழ் லெக்சிகன், தொகுதி-3 ப.1435.
4. சேந்தன் திவாகரம், கழகம். ப.142
5. பதிப்பாசிரியர்.ச.வே. சுப்பிரமணியன் – சிலம்பதிகாரம் – பண்பாட்டுச் சுரங்கம். பக்.167-168.
6. கே.வி.இராமன் – தொல்லியல் ஆய்வுகள், பக்.7-8
7. மேலது. நூ. பக்.134-135
8. ஆர்.கே.அழகேசன் – பக்.242-243
9. ராஜ்கௌதமன். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும். ப.80
10. க.ராஜன் – தொல்லியல் நோக்கில் சங்க காலம், பக்.121-122
11. வ.சு.ப. மாணிக்கம் – தமிழ்க்காதல். ப.134
ramvini2009@gmail.com