ஆய்வு: சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!

பொன்னிமனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருமணநிகழ்வு
திருமணம் என்பதனை “திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒரு வகை வழக்கமாகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்- பெண் உறவுநிலையைக் குறிக்கிறது” என்பா். (முனைவா் கே.பி.அழகம்மை சமூக நோக்கில் சங்க மகளிர் ப-44 )

“திருமணம் இரண்டு தனிப்பட்டவா்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.இரண்டு குழுக்களிடையே இணைப்பை நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை நியதி ” ( சசிவல்லி தமிழா் திருமணம் ப- 8 ) என்று குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையினையே பெரிதும் பதிவு செயதுள்ளன.இருப்பினும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் பெண் கேட்டு நிச்சயிக்கும் முறையும் வழக்கில் இருந்தமையைக் காணமுடிகிறது.

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ( தொல்.கற் – 1 )

என்று தொல்காப்பியரும் இதனை விளக்குவார்.

அம்மவாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணா்ப்போ ரிருந்தனா் கொல்லோ
தண்டுடைக் கையா் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே ( குறு – 146 )

என்ற பாடல் பெரியவா்கள் கூடிப் பேசி திருமணம் செய்யும் முறையினைப் புலப்படுத்துகின்றது எனலாம். சிலம்பிலும் பெரியோர்கள் கூடி திருமணத்தை நிச்சயிக்கும் தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணவணி காண மகிழ்ந்தனா் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகா்க்கீந்தார் மணம்
( மங்கல வாழ்த்துப்பாடல் 42-45 )

என்ற பாடல் அடிகள் கோவலன் கண்ணகியின் பெற்றோர்கள் கூடி அவா்களது திருமணத்தை நிச்சயித்தமையை விளக்குவதாக அமைந்துள்ளன.

சிலம்பு அணிதல்
சங்க காலத்தில் பெண்கள் திருமணத்திற்கு முன்னா் மட்டுமே சிலம்பு அணிந்துள்ளனா்.திருமணத்திற்கு முன்பு அச்சிலம்பை நீக்கியுள்ளனா்.அதனை சிலம்புகழி நோன்பு என்று குறிப்பிட்டுள்ளனா்.

நும்மனைச் சிலம்புகழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிக
( ஐங்-399 )

என்ற பாடலடிகளால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்னரே இச்சிலம்பு கழி நோன்பினை நிகழ்த்தியுள்ளனா் என்பதனை அறியமுடிகிறது.ஆனால் சிலப்பதிகார காலத்தில் இவ்வழக்கம் திருமணத்தின் பின்னரும் மகளிர் சிலம்பு அணியும் வழக்கமாக மாறிவிட்டதனை அறிந்து கொள்ள இயலுகின்றது.

பரத்தைவயிற் பிரிவு
பரத்தை என்பதற்கு பணம் அல்லது பொருளைப் பெற்றுக் கொண்டு பாரபட்சமின்றி பாலியல் உறவு கொள்ளுதல்  என்று பொருள் தருவா்.சங்க காலத்தில் ஆடவா்கள் பரத்தையரோடு தொடா்பு கொள்வது குற்றமாகக் கருதப்படவில்லை.

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவா்
பரத்தையா் பிரிந்த காலையான ( தொல்.கற்-46 )

என்ற நூற்பா பரத்தைவயிற் பிரிவினை அக்காலச்சமூகம் ஏற்றுக் கொண்டமையை விளக்குகிறது.மேலும் ஆண்கள் தான் முதலில் மணந்து கொண்ட மனைவியைத் தவிர மீண்டும் ஒரு பெண்ணை மணந்து கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.இதனை தொல்காப்பியா்

பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் ( தொல்.கற்-31 )

என்று குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரக் காப்பியச் சிக்கலுக்கு கோவலன் கண்ணகியை விடுத்து மாதவியுடன் வாழ்ந்தமையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.பரத்தைவயிற் பிரிவினை ஏற்றுக் கொண்ட ஒரு காலச்சூழலில் இத்தகைய சிக்கல் ஏன் எழுகிறது என்பது ஆய்விற்கு உரியதாகும்.சங்க இலக்கியத் தலைவன் பரத்தைவயிற் பிரிவு மேற்கொண்டான் என்றால் அது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே ஆகும்.அவன் குடும்பம் என்ற அமைப்பில் இருந்து முழுவதும் விலகியவனாகப் படைக்கப்படவில்லை.ஆனால் கோவலன் குடும்பம் என்ற அமைப்பினை விடுத்து மாதவியுடன் முழுமையாகத் தங்கி விடுகின்றான்.மீண்டும் மாதவியை விடுத்து தன்னுடைய குடும்பம் என்று அவன் இணைய விரும்பும் சூழலிலே இணைய முடியாமல் சிக்கலைச் சந்திக்க நேரிடுகிறது.

குழந்தைப்பேறு
சங்க இலக்கியத்தில் அன்பின் ஐந்திணை வழிப்பட்ட தலைவன் தலைவிக்கு மட்டுமே குழந்தைப்பேறு சுட்டப்பட்டுள்ளது.பரத்தைக்குக் குழந்தைப்பேறு சுட்டப்படவில்லை.பரத்தையரிடம் சென்று வர சமூகத்தில் முழு உரிமையும் பெற்றுள்ளவன் ஆண்.அவன் உரிமை கொண்ட பெண்ணுக்கு இல்ல உரிமையும் வாரிசு உரிமையும் மறுக்கப் பட்டது என்பா்.பரத்தையும் தனக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதால் தலைவனின் குழந்தையைத் தன் குழந்தையாக நினைத்து அன்பு செலுத்துவதனை

வருகமாள என்உயிர் எனப் பெரிது உவந்து
கொண்டனன் நின்றோர் கண்டு நிலைச் செல்லேன்
மாசு இல குறுமகள் எவன் பேதுற்றனை
நீயும் தாயை இவற்கு   ( அகம்16-10 13 )

என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது.பரத்தை தலைவனை விடவும்

தலைவனின் புதல்வன் மீது மிகுதியான பாசம் உடையவளாகக் காணப்படுவதனை கலித்தொகை 82 ஆவது பாடல் விளக்குகிறது.
ஆனால் சிலப்பதிகாரத்தில் கணிகையா் குலத்தைச் சார்ந்த மாதவிக்கே  குழந்தைப்பேறு காணப்படுகிறது.பெற்றோர் முன்னிலையில் கரம் பிடித்த மனைவியான கண்ணகிக்குக் குழந்தைப்பேறு இல்லை.

பெண்குழந்தை விருப்பம்
பெண்குழந்தையின் பிறப்பினை விட ஆண்குழந்தையின் பிறப்பே எல்லாக் காலங்களிலும் விரும்பப்பட்டு வந்துள்ளது.சங்க இலக்கியத்திலும் ஆண்குழந்தையே முதலிடம் பெறுகின்றது.

பொன் போல் புதல்வா் பெறாஅ தீரும்        ( புறம் 9: 4 )

அருள் வந்தனவால் புதல்வா்தம் மழலை    ( புறம் 92:3 )

முலைக்கோள் மறந்த புதல்வனோடு ( புறம் 211:21 )

புகழ்சால் புதல்வன் பிறந்த பின்வா    ( புறம் 222:3 )

என்ற பாடலடிகள் புதல்வன் பேற்றினை விளக்கும்.“புத் என்னும் நரகக் குழியில் விழாதவாறு தம்மைப் பெற்றெடுத்த பெற்றோரைப் பாதுகாப்பதால் புதல்வன்“ ( முனைவா் வீ.காந்திமதி சங்க இலக்கியச் சால்பு ப.45 )என்று அழைக்கப்படுவதாகக் குறிப்பிடுவா்.

தாயைக் குறிப்பிடும் போதும்
சிறுவா் தாயே பேரிற் பெண்டே    ( புறம் 270 : 6 )

செம்முது பெண்டிர் காதலஞ்சிறா அன்     ( புறம் 276 : 3 )

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்    ( புறம் 277: 2 )

என்று புதல்வனின் தாய் என்று அழைப்பதிலே பெருமை கொண்டுள்ளனா்.ஒரே ஒரு பாடல் மட்டுமே பெண் குழந்தையினை நீண்ட நாள் தவமிருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறது.இதனை

குன்றக் குறவன்கடவுட் பேணியிரந்தனன்
பெற்ற வெள்வளைக் குறுமக ( ஐங் 257 )

என்ற அடிகள் வழி அறியமுடிகிறது.ஆனால் சிலப்பதிகாரத்தில் கோவலன் மணிமேகலை பிறந்த போது அவளது பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடுகிறான்.

மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
……………………………………………
எங்குல தெய்வப் பெயா் ஈங்கு இடுகென
அணிமேகலையார் ஆயிரம் கணிகையா்
மணிமேகலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையின் பொழிய
( அடைக்கலக்காதை 22-41 )

என்ற அடிகள் கோவலன் மணிமேகலையின் பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடியமையை புலப்படுத்துகின்றன.

கணவனுடன் இறத்தல்

சங்க காலத்தில் அரசகுல மகளிர் தம் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறித் தன் உயிரை மாய்த்துக் கொண்டனா்.தோற்ற மன்னரின் மனைவியை வெற்றி பெற்ற மன்னன் இழிவாக நடத்தியதே இதற்குக் காரணம் எனலாம்.தோற்ற மன்னனின் மனைவியருடை கூந்தலைக் கொய்து வெற்றி பெற்ற மன்னன் கயிறு திரித்து யானைகளைப் பூட்டியமையை

பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி ( பதிற்.ஐந்தாம்பத்து பதிகம் 16-17 )

என்ற அடிகளால் அறியலாகின்றது.போர்க்களத்தில் கணவனுடன் உடன் இறந்த மகளிரைம் புறநானூறு பதிவு செய்துள்ளது.

மார்பகம் பொருந்தி ஆங்கமைந்தனரே ( புறம் 62-15 )

என்ற அடி இதனை விளக்குகிறது.சிலப்பதிகாரத்திலும்  கோப்பெருந்தேவி கணவனுடன் இறந்தமையை

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி
( வழக்குரை காதை 79-81 )

என்ற அடிகளால் அறியமுடிகிறது.

நடுகல் வழிபாடு
சங்ககாலத்தில் சிறப்புறப் போரிட்டு போரில் இறந்த வீரா்களுக்கு நடுகல் எடுப்பது மரபாக இருந்துள்ளது.அவ்வீரனுக்காக உடன் மாய்ந்த பெண்களுக்கும் கல்எடுப்பதும் உண்டு.அதனை சதிக்கல் என்று குறிப்பிடுவா். சிலப்பதிகாரத்தில் இந்நடுகல் வழிபாடும் சதிக்கல்லும் இணைந்து பத்தினி தெய்வ வழிபாடாக மாற்றம் பெறுகிறது. அக் காதையை இளங்கோவடிகள் நடுகற்காதை என்றே சுட்டுகிறார்.

நவகண்டம்
பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும் அவர்களின் முக்கிய வேலைகள் எவ்விதத் தடங்கலின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் தங்களை கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்வது வழக்கம். அவ்வாறு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் உடலை ஒன்பது பாகங்களாக கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாக தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர். இத்தகைய சிற்பங்கள் “நவகண்ட சிற்பங்கள்’ எனப்பட்டது.வீரா்கள் அவ்வாறு தம்மைத் தாமே பலியிட்டுக் கொள்வதற்கான பலிபீடங்கள் பட்டினப்பாக்கத்தில் இருந்தமையை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி
( இந்திர விழவூரெடுத்த காதை 85-88 )

என்ற அடிகள் வீரா்கள் தம்முடைய தலையினைத் தாமே வெட்டி பலிபீடத்தில் வைப்பதனைக் குறிப்பிடுகின்றன.
இவைமட்டுமல்லாது கானல்வரிப்பாடல் முழுமையும் சங்கஇலக்கிச் சாயல் பெற்று அமைந்துள்ளது. கண்ணகியின் வஞ்சினம் சங்க இலக்கிய வஞ்சினப் பாடல்களைப் போன்று காணப்படுவதனை அறியலாகின்றது.இவை மேலும் ஆய்விற்குரியது.

உசாத்துணை நூல்கள்;

1.சிலப்பதிகாரம்
2. தொல்காப்பியம்
3. புறநானூறு
4. குறுந்தொகை
5. ஐங்குறுநூறு
6. பதிற்றுப்பத்து

srisrijaa@gmail.com