– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
புதினம் என்பது அடிப்படை வாழ்வில் காணப்படும் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு உயிரும், உணர்ச்சியும் ஊட்டிக் கற்பனையாகப் புனையப் படும் இலக்கியமாகும். ‘கூடிய வரையில் ஆசிரியர் தமக்குத் தெரிந்த வாழ்க்கைப் பகுதிகளையும், இடங்களையும் அமைத்தே நாவல் எழுதுதல் நல்லது’ என்பார் டாக்டர் மு.வரதராசனார். அந்த வகையில் தமிழ்ப் புனைகதைத் தளத்தில் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி என்னும் நாவல்கள் மூலமாகப் பயணித்துத் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்து கொண்டிருப்பவர் சு.தமிழ்ச்செல்வி.
மக்கள் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடுகளேயான பழமொழிகளைச் சுட்டுவதற்குத் தமிழில் முதுசொல், முதுமொழி, பழமொழி, பழஞ்சொல், சொலவடை போன்ற பல சொற்களால் வழங்கி வருகின்றோம். இவை காலங்காலமாக மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியவர்கள் இன்றும் தங்களின் பேச்சுகளுக்கு இடையில் பழமொழிகளைப் பயன் படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்கள் பேச்சு பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாறுகின்றன.
பழமொழிகள் மூலம் மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், குடும்பச்சூழல், மொழி, சகுனங்கள் போன்றவற்றை அறியலாம். தொல்காப்பியர்,
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்” ( தொல், பொருள், 165)
“ஏது நுதலிய முதுமொழியான” (தொல், பொருள், நூற்பா 175) எனப் பழமொழியை, ‘முதுசொல்’ எனவும் ‘முதுமொழி’ எனவும் கூறுவார். உலகப் பொதுமறையாம் திருக்குறளிலும் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ போன்ற பழமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. பழமொழிகளின் தொகுப்பாக பழமொழி நானூறு என்ற நூலை முன்றுறை அரையனார் எழுதியுள்ளார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பழமொழியை ‘நெடுமொழி’ என்று கூறுகிறார். உரைகளை விளக்கும் பொருட்டு பழமொழிகளைக் கையாண்டுள்ளனர்.
பழமொழிகளில் இடம்பெறும் உயிரினங்கள்:
நம் முன்னோர்கள் இயல்பாகவே இயற்கையில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர்கள். தொல்காப்பியர் நிலத்தையும் காலத்தையும் முதற்பொருள் என்றனர். நிலத்தில் தோன்றிய மரம், செடி, கொடிகளையும், விலங்குகளையும் கருப்பொருள் என்றார். அவற்றின் பண்புகளை உரிப்பொருள் என்றார். ‘இந்திய நாட்டில் தத்துவ ஞானிகள் பலர் தோன்ற காரணம், பாரத மக்கள் பண்டைய நாளில் இயற்கையோடு இயற்கையாய் ஒன்றித்திணைந்து வாழ்ந்ததே தான் காரணம்’ என மேல்நாட்டு அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகிறார். நம்முன்னோர்கள் தாவரங்களின் பண்புகளை அவற்றை உண்ட அனுபவித்துப் பார்த்து பல பழமொழிகளாக நமக்கு படைத்துத் தந்தனர். இதுவே சித்த வைத்தியமாகவும் மாறியது. இதைப் போலவே பறவைகளையும் விலங்குகளையும் கூர்ந்து நோக்கி, அவை நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து அக்குணங்களின் அடிப்படையில் பல பழமொழிகளைக் கொடுத்துள்ளனர். சு.தமிழ்ச்செல்வி புதினங்களின் மூலம் அம்மக்களிடையே நிலவி வரும் உயிரினம் பற்றிய பழமொழிகளையும், அதன் மூலம் கூறவரும் கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கழுதை
சமுதாயத்தில் பெரும்பான்மையான பெண்கள் திருமணம் முடிந்த பின் தன் கணவன் நல்லவனோ கெட்டவனோ கடைசி வரைக்கும் அவனிடமே வாழ வேண்டும் என்று எண்ணுவர். ஆறுகாட்டுத்துறை புதினத்தில் கர்ப்பிணியான சமுத்திரவல்லி, தன் கணவன் எவ்வளவும் கீழ்தரமாகத் திட்டினாலும் பழித்தாலும் அவமானப் படுத்தினாலும் நாம் அவற்றை கருத்தில் வாங்கிக் கொள்ளக் கூடாது. ஆத்திரப்படக் கூடாது, என்றெண்ணி, “கழுதைக்கு மாலையிட்டாச்சி …………….. ஒதக்கிதுன்னு ஓடக்கூடாது” (தமிழ்ச்செல்வி.சு, ஆறுகாட்டுத்துறை, ப.153) என்று மனத்திற்குள் வைராக்கியம் பூண்டாள்.
கழுதையின் பொதுவான இயல்பு உதைப்பது. அதுபோல சமுத்திரவல்லி தான் கொடுமைக்காரனுக்கு மாலையிட்டதால் அவன் பேசும் பேச்சுக்களைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று எண்ணுகிறாள். இங்கு இதே பொருளை உணர்த்தும், ‘கழுதைக்கு வாக்கப்பட்டா ஒதவாங்கி தான் ஆகனும்’ என்னும் பழமொழி புழக்கத்தில் உள்ளதை ஒப்பிடலாம்.
எருமை
சிலர் தன்னிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் எப்படியாவது அடுத்தவரிடமிருந்து வாங்கி அனுபவிக்க வேண்டுமென்று எண்ணுவர். இப்படிப்பட்டவர்களின் மனவியல்பை சு.தமிழ்ச்செல்வி மாணிக்கத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார்.
தொழிலுக்கு கிளம்பும் மாணிக்கத்திடம் செல்லாயி மிளகாய் செலவுக்குப் பணம் கேட்டாள் உடனே மாணிக்கம் நேற்று வாத்தியார் வீட்டு கொல்லியில களையெடுத்த நான் பார்த்தேன் என்றான். உடனே மணிமேகலை “அதயும் பாத்திட்டியளா, அதானபாத்தன், எட்டெரும செத்து எதுக்க வந்திருச்சாம், கண்ணெரும செத்த வூட்டுக்கு போனானாம் கறியெடுக்க ஆயிரம் ஜநூறுன்னு சம்பாதிச்சாலும் நான் வச்சிருக்க அந்த பத்தையும் பிடுங்காம விடமாட்டீங்களே?” ( தமிழ்ச்செல்வி.சு, மாணிக்கம், ப.31) என்று புலம்பிக் கொண்டாள்.
இப்பழமொழி, கறிக்கடைக்காரனுக்கு எதிரில் எட்டு எருமை இறந்து கிடந்தாலும் அவன் அதையெல்லாம் விட்டுவிட்டு கறிக்காக அடுத்தவர் வீட்டில் இறந்த எருமையைத் தேடிப் போவானாம். அது போல மாணிக்கம் தன்னிடமிருந்த பணத்தை செலவு செய்யாமல் செல்லாயியின் பணத்தை செலவு செய்ய எண்ணுகின்றான் எனும் கருத்தைப் புலப்படுத்துகிறது.
பூனை
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கேற்ப பல காலமாகத் திருடிக் கொண்டிருப்பவன் ஒரு நாள் அகப்படுவான். அப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை தரப்பட்டால் பெரும்பாலும் மீண்டும் அத்திருட்டை தொடராமல் கைவிட்டு விடுவான். இக் கருத்து புதினம் கற்றாழையிலும் வெளிப்படுகிறது.
செல்வராசு, வரதராசனின் தென்னற் தோப்புலிருந்து தேங்காய்களை வெட்டி வீட்டிற்கு கொண்டு வந்து மறைத்து வைக்க, வரதராசனின் மனைவி அதனை கண்டு பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்து விட்டாள். செல்வராசு அன்றைக்கு ஊரைவிட்டு தப்பி ஓடியவன் தான் திருட்டுத் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் நல்லபடியாகக் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். இச்செய்தியைக் கேள்விப் பட்ட மணிமேகலை “ சூடு பட்ட பூனை உறியைப் பார்க்காது என்பது போல் எல்லாக் கெட்ட பழக்கங்களையும் விட்டு விட்டானே” (தமிழ்ச்செல்வி.சு, கற்றாழை, ப.264) என்று தமக்குள் ஆச்சரியப் பட்டுக் கொண்டாள்.
இங்கு உறியிலிருந்த ஆறிய பாலை அடிக்கடி தெரியாமல் குடித்து வந்த பூனை என்றாவது ஒரு நாள் நன்கு காய்ச்சிய சூடான பாலைக் குடித்துக் சுட்டிக் கொண்டால் அது மறுபடியும் உறியைத் தேடி வராது. அதுபோல செல்வராசு மாட்டிக்கொண்ட உடன் திருட்டு தொழிலையே கைவிட்டு விட்டான் என்ற கருத்தை சு.தமிழ்ச்செல்வி அழகாக வெளிப்படுத்துகிறார்.
மாடு
கற்றாழை புதினத்தில் மணிமேகலையின் மகள் கலாவை அவளது தங்கை வளர்மதி தன் வீட்டிலேயே தங்க வைத்து, படிக்க வைத்தாள். இதையறிந்த மணிமேகலை தன் மகளின் உடை, நோட்டு, புத்தகம் இவற்றை வாங்குவதற்காகவாவது தான் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி வேலைக்கு சென்றாள். இதையும் வளர்மதியும் கேட்டாள் அது “ புண்ணியத்திற்கு ஏரங்குன மாட்ட பல்லப்புடிச்சி பதம் பாக்குற கதயாயிருக்கும்” (தமிழ்ச்செல்வி.சு, கற்றாழை, ப.251) என்றெண்ணினாள். மணிமேகலை, தன் மகளுக்கு உதவும் வளர்மதியிடம் மேலும் மேலும் உதவி கேட்டு அவளை இடையூறு செய்யக் கூடாது என எண்ணிய எண்ணத்தை அறிந்துக் கொள்ளலாம்.
புண்ணியத்திற்கு பிறருக்கு உதவும் கொடையாளியிடம் மேலும் மேலும் தானம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. என்பதனை புலப்படுத்தும் பலமொழியாக ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி இதனைப் பயன்படுத்தியுள்ளார்.
குரங்கு
ஒரு சிலரிடம் அன்பாக பேசினால் காரியத்தை சாதிக்கலாம். ஆனால் ஒரு சிலரிடம் அன்பாக பேசினாலும் காரியம் சாதிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களிடம் சற்று கடுமையாக பேசி தான் காரியம் சாதிக்க வேண்டும் என்பதனை அளம் புதினத்தில் ஒரு செய்தி மூலம் கூறுகிறார் ஆசிரியர்.
சுந்தரம்பாளின் மாடுகள் வைக்கோல் போரைக் கண்டதும் ஓடின. அவற்றை இழுத்துப் பார்த்தும், அவை நகராமல் இருப்பதை கண்ட சுந்தரம்பாள் கையில் நொச்சிக் குச்சியை எடுத்த உடனே மாடுகள் அதன் வழியில் நடக்க ஆரம்பித்தன. இதனை கண்ட சுந்தரம்பாள் தன் அத்தையிடம் “தெரியாமலா சொல்லி யிருக்காங்க கோலெடுத்தாந்தாய் கொரங்கு ஆடுமுன்று” (தமிழ்ச்செல்வி.சு, அளம், ப.24) என்று கூறி சிரித்துக் கொண்டார்.
ஓணான்
பிறருடைய வீட்டு பிரச்சனையில் தலையிட்டால் தானும் அப்பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டியது வரும் என சிலர் ஒதுங்குவதை “வழியில் போன ஓணான பிடிச்சி காதுக்குள்ள ஒட்டுக்கிட்டு குத்துதே கொடயுதேன்னு நம்ம யாங் கஷ்டப்படனும்” (தமிழ்ச்செல்வி.சு, கற்றாழை ப.273) என்ற பழமொழி மூலம் அறியலாம். பக்கிரியின் மனைவி, தன் அண்ணனையும் மணிமேகலையையும் இணைத்து செல்வராசு பேசும் போது, தான் பேசினால் பிரச்சனை வரும் என ஒதுங்கி சென்றாள். வேலியில் திரியும் ஓணானின் வெளிபகுதி முட்களால் ஆனது அதனை காதில் விட்டாள் கஷ்டம் நமக்குதான் என்பதனை உணர்ந்திருந்தாள் பக்கிரியின் மனைவி.
குதிரை
பெண்கள் தங்கள் மனதில் ஒரு காரியத்தை நினைத்து விட்டால் அதனை எப்படியாவது சாதிக்க அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் எதாவொரு காரணத்தைக் காட்டித் தன் காரியத்தை சாதிக்க எண்ணுவர் அதனை போல கற்றாழை புதினத்தில் ஊதாரித்தனமாகத் திரியும் தன் கணவன் சண்முகத்தை எப்படியாவது திருத்த வேண்டுமென்று எண்ணி அடிக்கடி எதாவவொரு சண்டையிட்டு வயதுக்கு வந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பாள். இருவருக்கும் இடையே வழக்கம் போல் ஏற்பட்ட சண்டையை பார்த்து காளிமுத்து விசாரிக்க சண்முகம், நொண்டிக் குதுரக்கி தடுக்கினதுதான் சாக்குங்கிற மேரி இவளுக்கு சாக்காப் பெயிட்டு” (தமிழ்ச்செல்வி.சு, கற்றாழை,ப.103) என்று அழுத்துக் கொண்டாள்.
நொண்டி குதிரை நடக்க முடியாமல் தடுக்கி விழுந்தால், கல் தடுக்கியது என்று காரணம் கூறுமாம் அது போல தன் மகளுக்கு திருமணம் முடியாமல் போனதற்கு தனது பொறுப்பில்லாத கணவனே காரணம் என்று பாக்கியம் எண்ணுகிறாள்.
ஆடு
இடையர்கள் ஒரு ஆடு செத்தா உப்பு கண்டம் போடுவார்கள். அதே சமயம் பல ஆடுகள் ஒரே நேரத்தில் செத்தால் அதனை ‘படுசாவு’ என்று கூறுவார்கள். பெரிய குழியாக வெட்டி அதில் ஆடுகளை போட்டு புதைத்து விடுவார்கள். அப்பொழுதெல்லாம் ஆட்டுக்காரப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவர். அதனைக் காணும் பக்கத்து கடைக்காரர்கள் “வித்தாடு அருகும் செத்தாடு பலுக்கும்” (தமிழ்ச்செல்வி.சு, கீதாரி.ப.144) என்று கூறி தேற்றுவர். ஆசிரியர் இதில் தனது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் எனும் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். செத்த ஆடுகளை விடுத்து மற்ற ஆடுகளை நன்றாக பராமரித்தால் அடுத்த ஆண்டிலேயே கிடை நிறைந்து விடும் என்பது பழமொழி விளக்கும் கருத்தாகும்.
பல்லி
கற்றாழையில் தாண்டி கிழவரின் மரணத்திற்கு வந்திருந்த மாமணி தன் பின்னாலேயே வந்த மணிமேகலையை வீட்டுக்குத் துரத்தி விட்டாள். அதைக்கண்ட பவுனுக்கிழவி மாமணியைத் திட்டினாள். உடனே மாமணி தாண்டிக்கிழவர், பவுனுக்கிழவியால் தான் இறந்தார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு “ஊரான்வூட்டு எழவுக்கு சவுனஞ் சொல்லுற பல்லிதான் ஊரு முழுக்க எழயிது போலருக்கு” (தமிழ்ச்செல்வி.சு, கற்றாழை, ப.225) என்று திட்டுவதைக் கூறலாம்.
‘பல்லி சகுனம் பார்த்தல்’ என்பது தமிழர்களிடையே காலங்காலமாய் ஊறிப்போன நம்பிக்கைகளுன் ஒன்று பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அது தீய சகுனமா? நல்ல சகுனமா? என்பதைக் கணிப்பார். இங்கு அடுத்தவரிடம் குற்றம் காணும் பவுனுக்கிழவி தன்னிடமும் குற்றம் இருப்பதை அறிய வேண்டும் எனும் கருத்தை இப்பழமொழி புலப்படுத்துகிறது.
இதுபோன்ற ‘பழமொழிகள் நம் சிந்தனையின் செல்ல குழந்தைகள் செல்வக்குழந்தைகள், நமது அனுபவங்களையும் ஆசைகளையும் பிறருக்கு இந்தப் பழமொழிகள் மூலமாகவே தெரிவித்து வருகிறோம். சுருக்கமான வார்த்தைக் கோவைகளில் சுவையேற்றிப் பார்க்கும் போது அவைகள் இனிக்கின்றன’ என்று சு.சண்முகசுந்தரம் அவர்கள் கூறுவார்.
எறும்பு
‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்’ என்பது பேச்சு வழக்கிலுள்ள பழமொழியாகும். இதன் பொருள் எந்தவொரு செயலுக்காகவும் மனம் மாறாத வரை பேசும் விதத்தில் பேசிப் பேசியே மனதை மாற்றி விடலாம் என்பதாகும்.
இதே கருத்தைப் புலப்படுத்தும் ஒரு பழமொழி அளம் புதினத்தில் இடம் பெற்றுள்ளது. விதவைப் பெண் வடிவாம்பாளை காக்கா வலிப்பு முத்துச்சாமிக்கு எப்படியாவது இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென்று தரகர் வேலாயுதம் முடிவெடுத்தார். அதற்கு அவள் தாய் முதலில் சம்மதிக்காவிடிலும் பேசிப் பேசியே காரியத்தை சாதித்துக் கொண்டான். இச் செயலையே, “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” (தமிழ்ச்செல்வி.சு, அளம் ப.223) என்ற பழமொழி உண்மையாகி விட்டதை உணரலாம். பலமுறை ஒரே கருத்தை கூறும் பொழுது மனித மனத்தையும் மாற்ற முடியும் என்பதனை அறியலாம்.
பழமொழிகள் மனித வாழ்வின் அனுபவங்கள். இப்பழமொழிகள் நல்ல மனிதனை உருவாக்கவும் நலம் மிக்க சமுதாயத்தைப் படைக்கவும் வழிவகை செய்வன. தமிழ்ச்செல்வி நாவலில் பழமொழிகளில் கூறப்படும் விலங்குகளின் பெயர்கள் மனிதர்களின் குணம் மற்றும் நடத்தையை உணர்த்தவே பயன் படுத்தப்படுகின்றன. யானை, நரி, புலி, பூனை, குதிரை, எருமை, கழுதை முறையே புத்திக்கூர்மை, தந்திரம், வீரம், கம்பீரம், வலிமையின்மை மற்றும் திருட்டுக்குணம் என மனிதர்களின் குணங்களை பிரிதிபலிக்கவே படைக்கப் பட்டுள்ளதைக் இக்கட்டுரையின் மூலம் நாம் அறியலாம். சு.தமிழ்ச்செல்வியின் புதினங்களில் காணப்படும் பழமொழிகளின் இலக்கணக் கூறுகள், துணுக்குகள், நகைச்சுவை, குறுங்கதை, அங்கதம் போன்றவைகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதையும் அறியலாம். ஆசிரியர் தனது புதின படைப்புகளில் மக்கள் அன்றாடம் பழமொழிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை எளிய வட்டார வழக்கு சார்ந்த நிலையிலும் தம் கருத்துகளை மனம் லயக்குமாறு படைத்துள்ளார்.
துணைநூற் பட்டியல்
1. தமிழ்ச்செல்வி.சு அளம் நாவல்
மருதா பதிப்பு வெளியீடு
திருச்சி
முதற்பதிப்பு, டிசம்பர் 2002
2. தமிழ்ச்செல்வி.சு கற்றாழை நாவல்
சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 2005
3. தமிழ்ச்செல்வி.சு ஆறுகாட்டுத்துறை நாவல்
மருதா பதிப்பக வெளியீடு
சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 2006
4. தமிழ்ச்செல்வி.சு மாணிக்கம் நாவல்
நீயு செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, முதற்பதிப்பு, செப்டம்பர் 2007
5. தமிழ்ச்செல்வி. சு கீதாரி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
சென்னை – 2012
6. தொல்காப்பியம் தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 600098
* கட்டுரையாளர் : வ.ஜெயபார்வதி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது)