‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
உலகில் தோன்றிய முதல் இனமாம் தமிழ் இனத்தின் தனிப்பெரும் சிறப்பு பண்பாடாகும். அந்தப் பண்பாட்டில் முதன்மை இடம் பெற்று விளங்குவது விருந்தோம்பல் பண்பே ஆகும். தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்துவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
பண்பாடு விளக்கம் :
பண்பாடு என்றச் சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருளாகும். மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துவது பண்பாடாகும். அதனால் தான் கலித்தொகையில் நல்லந்துவனார் ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். மனிதன் உணவு, உடை, உறவினர்கள், விருந்தோம்பல், இல்லற வாழ்க்கை, பொது வாழ்க்கை என அனைத்திலும் அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வதே தலைச் சிறந்த பண்பாடாகும். அந்த பண்பாட்டின் ஓர் அங்கமாக விளங்குவதே விருந்தோம்பல் எனும் பண்பாகும்.
விருந்தோம்பல் பொருள் :
‘விருந்து என்றச் சொல்லுக்கு புதுமை’ என்பது பொருளாகும். தொல்காப்பியரும் புதுமை, புதியவர் என்ற பொருளில் கையாண்டுள்ளார். இதனை.
‘விருந்தெதிர் கோடல்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்’
என்ற தொல்காப்பிய நூற்பாவின் மூலம் விளக்குகின்றார். இன்று நாம் உறவினர்கள். நன்கு பழகியவர்களையே விருந்தினராக வரவேற்று உணவுப்படைக்கின்றோம். ஆனால் சங்கத்தமிழர்கள் முன்பின் அறியாதவராக இருந்தாலும். தன் வீடுத்தேடி வருபவரை வரவேற்று உபசரித்துள்ளனர் என்பதை பல்வேறு பாடல்களில் மூலம் அறிய முடிகின்றது. அன்று முதல் இன்று வரை புதிதாக வருபவர்களுக்கு உணவளித்து உபசரிக்க வேண்டிய பண்பாட்டு மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
விருந்தோம்பல் சிறப்பு :
விருந்தோம்பலின் சிறப்பை உணர்ந்து தான் உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை 133 அதிகாரங்களில் ‘விருந்தோம்பல்’ என்ற அதிகாரத்தையும் படைத்துக்காட்டுவதன் மூலம் விருந்தோம்பல் சிறப்பினை உணரலாம் தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பை
‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு’ (குறள்.85)
என்ற குறளின் மூலம், தன் வீட்டைத் தேடி வந்த விருந்தினரைப் போற்றி, மேலும், இனி எவரேனும் விருந்தினராக வருகிறராரோ என வரும் விருந்தினரையும் எதிர்பார்த்து இருப்பான். அவன் தேவர்க்கு நல்ல விருந்தினனாக அமைவான் என்ற வள்ளுவரின் கருத்தின் வழித் தெளிவாகின்றது. பொதுவாக விருந்து என்பது மூன்று நாட்களுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் விருந்தினர்க்கு மரியாதை கிடைக்காது என்ற முதுமொழி கூறப்படுவதுண்டு. ஆனால் சங்கத் தமிழர்கள் அக்கூற்றை பொய்யென நிருபித்துக் காட்டியுள்ளனர். இதனை
‘ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ’ (புறம்.101)
என்ற பாடலின் மூலம் ஒளவையார். நாம் ஒரு நாள் அல்லது இருநாள் சென்றாலும் முகம் சுழிக்காதவன். மேலும் பல நாட்கள் தொடர்ந்து சென்றாலும் முதல் நாள் எப்படி இன்முகத்தோடு வழங்கினானோ அதைப் போலவே அனைத்து நாட்களும் விருந்தளித்து உபசரிப்பவன் அதியமான் நெடுமானஞ்சி என்று விருந்தோம்பல் பண்பின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விருந்தோம்பல் பண்பின் சோழமன்னர்களில் புகழ்ப்பெற்ற வனான கரிகாற் சோழனின் விருந்தோம்பல் பண்பை பண்டையத் தமிழ் இலக்கியம் எடுத்தியம்புகின்றது. இதனை
‘ஒன்றிய கேளிர்போல கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
……………………………………..
ஆர உண்டு பேர் அநர் போக்கி
செருக்கொடு நின்ற காலை (பொ.ஆ-75-85)
என்ற பாடலின் மூலம் முடத்தாமக் கண்ணியார், தன்னை நாடி வரும் விருந்தினர்க்கு கொழுப்பு நிறைந்த ஆட்டுக்கறியும் மற்றும் பல்வேறு உணவுகளையும் அருகில் அமர்ந்து அவர்கள் போதும் போதும் என பல்வலிக்கும் அளவுக்கு விருந்தளித்து உபசரிப்பவன் கரிகாற்சோழன் என்றும், விருந்தினரை ஏழடி பின்சென்று வழி அனுப்பி வைப்பான் என்பதையும் அறிவதன் மூலம் தமிழரின் விருந்தோம்பல் சிறப்பினைக் காணலாம்.
அகவாழ்வில் விருந்தோம்பல் :
சங்கத் தமிழர்களின் இல்லறம் சார்ந்த அகவாழ்க்கையிலும் தலைவி சிறந்த விருந்தோம்பல் பண்புமிக்க குடும்பத் தலைவியாக செயலாற்றியுள்ளாள். தன் இல்லத்திற்கு விருந்தினர்கள் எந்த நேரத்திற்கு வந்தாலும் சிறிதும் முகம் மாறாமல் இன்முகத்தோடு விருந்தினரை உபசரித்து மகிழ்கின்றாள். குடும்பத் தலைவியின் முதன்மைப் பண்பாக விருந்தோம்பல் இருந்ததை நற்றிணையின் கீழ்க்காணும் பாடல் விளக்குகின்றது. இதனை
‘அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லயற் குறுமகள் உறைவின் ஊரே’ (நற்.142)
என்பதன் மூலம் காணலாம். ஆற்றுப்படை நூல்கள் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றவர்களை தமிழ் மன்னர்கள் எவ்வாறெல்லாம் உபசரித்து விருந்தோம்பலை மேற்கொண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் சிறப்பாக எடுத்தியம்புகின்றது.
நம்மை நாடி வரும் விருந்தினர்க்கு நம்மிடம் உள்ளது எந்த உணவாக இருந்தாலும் அதனை இன்முகத்தோடு கொடுக்க வேண்டும். அது உண்மையான விருந்தோம்பல் பண்பு ஆகும். அதை விடுத்து மனம், முகம் கடுகடுத்து கொடுத்தால் அது விருந்தாகாமல் அவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்தும். அப்படி செய்தவர்க்கு மிகப்பெரிய பாவமும் பழியும் வந்து சேரும் என்பதை உணர வேண்டும். விருந்தோம்பலில் பிறர்மனம் வாட கூடாது என்பதை வள்ளுவர்.
‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்க குழையும் விருந்து’ (குறள்.90)
என்ற குறளின் மூலம், அனிச்சம் பூவானது. மோந்தவுடன் தன்னிலையில் இருந்து வாடிவிடும். அது போல் முகம் திரிந்து விருந்தினரை உபசரித்தால் அவ்விருந்தினரின் முகம், மனம் உடனே வாடிவிடும் என்று கூறுகின்றார். ஆகவே தான் தமிழர்கள் விருந்தோம்பல் பண்பினை தனது தலையாய கடமையாகக் காத்து வந்துள்ளனர்.
வள்ளுவரின் கருத்தை ஒட்டியே விவேக சிந்தாமணியிலும் விருந்தோம்பலின் சிறப்பும் விருந்தினரை உபசரிக்கும் முறையும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை
‘ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமோடு பால் அன்னம் முகம் கருத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே’ (வி.சி-4)
என்ற பாடலின் மூலம், தன்னை நாடித் தேடி வரும் விருந்தினரை உள்ளார்ந்த மனமகிழ்ச்சியோடு வந்தவரை வரவேற்று, அன்புமொழி பேசி, உப்பில்லாத கூழை உணவாகத் தந்தாலும் அது உண்பவர்க்கு அமுதம் போல் இருக்கும் அப்படிச் செய்யாமல் மா, பலா, வாழை என்னும் முக்கனிப் பழங்களோடு, கடுகடுத்த முகத்துடன் விருந்துண்ண வந்தவர்க்குப் பால்சோறு படைத்தாலும் அது பசிக்கு வந்தவரின் பசியைப் போக்காமல் மேலும் பசியையே உண்டாக்கும் என்று கூறுகின்றார். இதன் மூலம் தமிழ்ச்சமுதாயம் விருந்தோம்பலுக்கு கொடுத்த முக்கியத்துவம் புலனாகின்றது.
முடிவுரை :
விருந்தோம்பல் என்பது தமிழர்ப் பண்பாட்டின் அடிப்படைப் பண்புகளில் முதன்மையானது என்பது தெளிவாகின்றது. தன்னை நாடி வருபவர்க்கு தன்னால் முடிந்த அளவு முழுமனதோடும் அன்போடும் சங்கத் தமிழர்கள் விருந்தோம்பல் செய்துள்ளனர். யாழை விற்றும் குப்பைக்கீரைப் பறித்தும் கூட விருந்தோம்பல் செய்த செய்தி சங்க இலக்கியங்களில் பதிவாதியுள்ளது. இன்றளவும் தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெற்று விளங்குவதை காணமுடிகின்றது.
துணைநூற்பட்டியல்
1. அ. விசுவநாதன் (உ.ஆ) – நற்றிணை,
(மூலமும் உரையும்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை-98.
முதல் பதிப்பு – 2007.
2. மேலது – புறநானூறு,
(மூலமும் உரையும்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை-98.
முதல் பதிப்பு – 2007.
3. பரிமேலழகர். (உ.ஆ) – திருக்குறள்,
கழக வெளியீடு,
சென்னை.
பதிப்பு – 1990.
4. ஞா. மாணிக்கவாசகன் (உ.ஆ) – வி.வே.க சிந்தாமணி,
உமா பதிப்பகம்,
மண்ணடி, சென்னை-1.
ஐந்தாம் பதிப்பு – 2008.
கட்டுரையாளர்: முனைவர் க. கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைக்கோவில் திருச்சி.
அனுப்பியவர்: முனைவர் வே.மணிகண்டன் – thenukamani@gmail.com