ஆய்வு: திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை

ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20. பதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல்  9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகிறன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும்  திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் ஆய்வு பொருளாகின்றன.

நிலையாமை – விளக்கம் :
நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்த பின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம்.  மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

யாக்கை நிலையாமை :
திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல்  211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப் பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.”             (திருமந்திரம் – 188)

என்ற பாடலில் கூரைப் போல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும்  துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.”         (திருமந்திரம் – 189)

என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு  வைத்த  பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”          (திருமந்திரம் – 202)

 

என்ற பாடலில் உடைந்த குடத்தைக் கூட ஓடென்று வீட்டிலொரு ஓரத்தில் பலநாட்கள் வைக்கமுடியும். ஆனால், உயிரில்லாத உடலை அவ்வாறு வைக்க இயலாது என உயிரற்ற உடலின் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

”பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்.”      (திருமந்திரம் – 211)

என்ற பாடலில் உயிரானது உடலைத் தோற்பையாகப் பயன்படுத்திவிட்டு தனது தொழில் முடிந்த பிறகு உணவருந்திய எச்சில் வாழையிலைப் போன்று தூக்கி எறிந்திடும் என்கிறார், திருமூலர்.

செல்வம் நிலையாமை :
திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 212 முதல்  220 வரை இடம்பெற்றுள்ளன. நிலையில்லாத செல்வத்தை உவா (அமாவாசை) நாளில் மறையும்  நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அப்பாடல்,

”இயங்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லாகவும் வேண்டா. ”      (திருமந்திரம் – 213)

உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற கருத்தை பின்வரும் பாடலில் கூறுகிறார்.

”ஈட்டிய தேன்பூ மணங்கண்  டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஒட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.”              (திருமந்திரம் – 215)

மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனை சேர்த்து தனது கூட்டில் வைக்கும். அத்தேனை பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடு பட்டு செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே பிறரால் கவரப்படுகிறது  என செல்வத்தின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.

” மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்.”          (திருமந்திரம் – 217)

முன்னர், செல்வத்தை தேனீ சேர்க்கும் தேனுக்கு ஒப்பாகக் கூறிய திருமூலர் இப்பாடலில் நீரில் செல்லும் கலத்திற்கு (படகுக்கு) ஒப்பாகக் கூறியுள்ளார். செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்களம் கவிழ்வது போல அழிந்தொழியும் என செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடுயுள்ளார்.

இளமை நிலையாமை :
திருமந்திரத்தில் இளமை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 221 முதல்  228 வரை இடம்பெற்றுள்ளன. இளமை என்பது மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கு இடைப்பட்ட வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் பருவம். மனிதனின் உடல் உறுதியோடு காணப்படும் பருவம். அப்பருவத்தின் நிலையாமையைத் திருமூலர்,

” கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்.”           (திருமந்திரம் – 221)

என்ற பாடலில் சூரியன் கிழக்கில் உதயமாகி (பிறந்து) மேற்கில் மறையும் வரையுள்ள (இறப்பு) இடைப்பட்டக் கால அளவே மனிதனின் இளமை என்று குறிப்பிடுகிறார். மேலும்,

” தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை.”         (திருமந்திரம் – 223)

என்ற பாடலில் இளமை தேய்ந்து ஒழியக்கூடியது எனப் பாடியுள்ளார்.

உயிர் நிலையாமை :
திருமந்திரத்தில் உயிர் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 229 முதல்  238 வரை இடம்பெற்றுள்ளன. உடல் (யாக்கை), செல்வம், இளமை ஆகியவற்றை முதலில் கூறிய திருமூலர் உயிரின் நிலையாமையை இறுதியாகக் குறிப்பிடுகிறார். உடலையும் செல்வத்தையும் இளமையையும் உயிரில்லாமல் அனுபவிக்க இயலாது. உயிரின் நிலையாமையைக் குறித்து,

” தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்.”                (திருமந்திரம் – 229)

என்ற பாடலில் பல கிளைகளைக் கொண்ட மரத்திலிருந்து பழுப்புற்று உதிரும் இலை போல பல உறுப்புகளைக் கொண்ட உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் எனக் கூறுகிறார்.

முடிவுரை :
இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 50-70 வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் வாழப்போகும் சில ஆண்டுகளாவது உயிரைக் கொண்டு இயங்குகின்ற உடலாலோ, செல்வத்தாலோ, இளமைத் துடிப்பாலோ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையை விழைவிக்காது வாழ்வதற்குத் திருமூலரின் இப்பாடல்கள் துணைபுரியும்.

துணைநின்ற நூல்கள் :
1. திருமூல நாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,   சென்னை – 01.
2. தமிழ் இலக்கிய வரலாறு, ஜமால் முகமது கல்லூரி வெளியீடு, திருச்சி – 20.

* கட்டுரையாளர் : ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.

smdazrin1998@gmail.com