ஆய்வு: திருவள்ளுவரின் கடலியல் நுண்ணுர்வு

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

கருவிச்சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர். நீர் உயிரினங்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து நிற்பது. உயிரின வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், மானுடப் பயன்பாட்டுக்கும் பயன்தரும் நீர், உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும், உணவுத்தேவைக்கும் அத்தியாவசியமான ஒன்றாக அமைகின்றது. அது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு மூலகாரணியாக அமையும் திறத்தினைக் கருதியே,

“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு”    (குறள். 20)

என்றும் குறித்தார் திருவள்ளுவர். உண்பவர்களுக்குச் சிறந்த உணவாகவும், உணவை உற்பத்தி செய்வதற்குரிய முதன்மையான மூலப்பொருளாகவும், உணவாகக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்குரிய முதன்மைப்பொருளாகவும் அமைகின்ற காரணத்தால்தான்,

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஊம் மழை”    (குறள். 12)

என்று மழைநீரின் சிறப்பினைப் போற்றியுரைத்தார் திருவள்ளுவர்.

நிலவுலகில் கிடைக்கும் நீரை மழைநீர், ஊற்றுநீர், ஆற்றுநீர் என வகைப்படுத்துவது பண்டையோர் மரபாகும். நிலப்பரப்பில் நீர் என்பது தனித்து எங்கும் நிற்பது கிடையாது. நீரின் தன்மைக்கேற்றவகையில் அது நிறைந்திருக்கும், தேங்கியிருக்கும், தேக்கப்பட்டிருக்கும் இடத்தின் தன்மைக்கேற்றவகையிலான பெயர்களையே அது தாங்கி நிற்றலைக் காண்கிறோம். ஆறு, குளம், கேணி, கடல் என்பன நிலத்தோடு நீர் கலந்துள்ள நிலையினைப் பொறுத்தே அமைகிறது. நிலத்தைத் தழுவிய நீரான கடல்நீர் உவர்ப்புத்தன்மை கொண்டது. அவ்வாறு அது உவர்ப்புத்தன்மையுடன் நிலைபெற்றிருப்பதற்கு அறிவியல் அடிப்படையி லான காரணங்கள் உண்டு. திருவள்ளுவர் நீரின் பல்வேறு தன்மைகளையும் ஆழ்ந்து உற்று நோக்கி யுள்ளதோடு, அவற்றின் தன்மைகளையும், நீர்மைகளையும் பொருட்புலப்பாட்டுக்குப் பயன்படுத்தியுள்ளார். சங்க இலக்கியத்தில் நீரின் தன்மைகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மிகுதியும் இடம்பெற்றுள்ளதனைக் கொண்டும் இதனை ஒருவாறு அறிந்துகொள்ளலாம்.  

கடல்சூழ் உலகம்
வானிலிருந்து மண்ணிற்கு வரும் மழைநீர், மண்ணில் பல்வேறு தன்மைகளுக்கு, சூழல்களுக்கு உட்பட்டு அதன் நிலையை அடைகிறது. அவற்றுள் சூரியன் வெப்பத்தால் ஆவியாவதும், காற்றினில் நீராவியாக உறைந்திருப்பதும், பனிநீராக நிலவியிருப்பதும், நிலமும் நீரும் ஒன்றாகிப் போவதும் நிலத்திற்கும் நீருக்கும் உள்ள தன்மைகளால் ஏற்படுவனவாகும்.  

இவ்உலகத்தின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்காக அமைந்திருக்கும் நிலப்பரப்பே மக்கள் வாழிடமாக அமைந்துள்ளது. இவ்வுலகம் கடலால் சூழப்பட்டிருந்தமையை நம் முன்னோர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்துள்ளனர். இதனை,

“கடல்சூழ் மண்டிலம்”    (குறு. பா. 137:7)
“இருள்நிர முந்நீர் வளைஇய உலகம்”     (குறு. 293)
“புலவுக் கடல் உடுத்த… மலர்தலை உலகம்”    (பெரும்பாண். வ.ள். 409-410)
“விரிகடல் வேலி வியலுலகம்”    (சிறுபாண். 114)
“விரிதிரை பெருங்கடல் வளைஇய உலகம்”    (குறு. 41:11)

என வரும் சங்கத்தொடர்கள் கொண்டு நன்கறியலாம்.  

திருவள்ளுவர் நோக்கில் கடல்
திருவள்ளுவர் நீரின் தன்மைகளையும், அதன் குணங்களையும் மிகச் சிறப்பாக அறிந்து வைத்துள்ளார். அது தனக்கென எந்தவொரு இயல்பினையும் கொள்ளாதது என்பதனையும், அது தான் சேரும் இடத்தின் தன்மைக்கேற்றவாறு மாற்றம்பெறும் தன்மை கொண்டது என்பதனையும் தெளிவுறுத்துவதனைக் காணலாம். (குறள். 452) இதே போன்று கடலியல் அறிவினைத் திறம்படப் பெற்றிருந்தார் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. இதனால் தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளைப் பயன்படுத்துவதற்குக் கடலை ஆண்டுள்ளார் என்பது தெளிவு.

திருவள்ளுவர், இவ்வுலகம் கடலால் சூழப்பட்டது என்பதனை,

“விரிநீர் வியனுலகம்..” (குறள். 13)
“மாறாநீர் வையம்…”    (குறள். 701)

என்ற தொடர்களால் காட்டுகின்றார். உலகிலேயே அகன்று விரிந்த நிலப்பினைப் பரப்பினைக் கொண்டது கடல் என்ற கருத்தினைக் காட்டுவதற்கு ‘விரிநீர் வியனுலகம்’ என்ற தொடரினையும், எக்காலத்திலும் வற்றாத நீர்மை கொண்டது கடல் என்பதனை உணர்த்தும் விதத்தில். ‘மாறாநீர் வையம்’ என்ற தொடரினையும் ஆண்டுள்ளதனை இதில் காணலாம்.

திருவள்ளுவர் ‘கடல்’ என்னும் சொல்லினையும், அடைகளைச் சேர்த்து, ‘பெருங்கடல்’, ‘நெடுங்கடல்’, ‘காமக்கடல்’ என்னும் சொற்றொடர்களையும், கடலைக் குறித்து வரும் ‘நாமநீர்’ என்ற சொல்லாக்கத்தினையும் ஆண்டுள்ளார். இவற்றின் பொருள் விளக்கத்தின்வழி அவரது கருத்தாக்கத்தினைக் காணலாம்.

பிறவிப் பெருங்கடல்
கடலின் அலைகள் விழுந்து எழுந்து மீண்டும் மீண்டும் எழுந்து விழுந்து வருவதைப் போன்றே, மனிதப் பிறவியும் பிறந்து இறந்து, இறந்து பிறந்து எனத் தொடர்ச்சியான பிறவிச் சங்கிலியைக் கொண்டிருக்கிறது என்பது சமயநெறியின் வழிவந்த விளக்கமாகும். கடல் அலைகளைப் போன்றே எண்ணற்ற பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் பிறந்து பிறந்து இளைக்கிறார்கள். அந்தப் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரைசேர விரும்புபவர்களுக்கு நல்லதொரு தெப்பமாக, புணையாக அமைவது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பிறப்பிலியாகிய இறைவனின் திருவடிகளை அடிபணிவதாகும். இறைவனின் திருவடிகளை இடையறாது நினைந்து, தன்னை அறிந்து நினைந்து வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் இல்லை. அவர்கள் பிறவித்துன்பத்தை அறுத்து, விடுதலை பெறுகிறார்கள். பிறவியாகிய நெடுங்கடலைக் கடந்து, அக்கரைக்குச் சென்றடைகிறார்கள். இறைவனின் திருவடிப்பேற்றை அடையப் பெறாதவர்கள், நினையாதவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்த முயற்சிக்காமல், கடக்க மாட்டாமல் மீண்டும் மீண்டும் பிறந்தே இளைப்பர். பிறவியாகிய பெருங்கடலை நீந்திக்கரை சேர்வது யாராலும் இயலாத செயல்; என்றாலும், இறைவனின் அருளாற்றல் கிடைக்கப் பெற்றால் அதுவும் இயலும் என்பதனை வலியுறுத்தவே,

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”     (குறள். 10)

என்று குறித்தார். பிறவியைக் கடலாகவும், அப்பிறவித்துயர் கடலைப் போன்று அகன்று பரந்து விரிந்த்து என்ற கருத்தினையும் காட்டக் காணலாம். பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு இறைவன் திருவடியே தெப்பமாக இருந்து துணைபுரியும் என்பதனை இக்குறளின்வழி வலியுறுத்துவது சிறப்பு.

இதில் கடலைப் பிறவித் தொடர்ச்சிக்கு ஆண்டுள்ள திறம் சிறப்புடைத்து. மக்கள் அறிந்த கடலை, மக்கள் அறிந்திராத பிறவிக்குத் தொடர்பு படுத்துவதும் சிறப்பு.

அறக்கடல்

‘பிறவி தொடர்ச்சியுடையது’ என்ற கருத்தினைக் காட்டுவதற்குக் கடலை உருவகப் படுத்திய திருவள்ளுவர், அறத்தையே கடலாக உருவகித்துக் காட்டுகிறார். அறத்தைக் கடலாக உடைய இறைவனின் திருவடிகளைப் பற்றினால் இத்துன்பக் கடலை நீந்தி அக்கரை சென்று சேரலாம் என்று தெளிவுறத்துவதற்குக் கடலை ஆள்கிறார் திருவள்ளுவர்.

அறக்கடலாக விளங்கும் அழகிய தண்ணளியை உடைய இறைவனின் திருவடிகளாகிய தெப்பத்தை அடைந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு ஏனைய உலக, துன்ப, இன்பங்களாகிய கடல்களைக் கடத்தல் இயலாது என்பதனை,

“அறஆழி அந்தணன்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது”    (குறள். 8)

என்னும் குறட்பாவழி தெளிவுறுத்துகிறார். அறத்தையே ஆழியாக (கடலாக) உடைய அந்தணன் என இறைவனை அறக்கடலாகக் குறித்துள்ளது சிறப்பு நோக்கியே. இதில் எல்லையில்லா அருட்பெரும் ஆற்றல்கொண்டு விளங்கும் அறத்தைக் கடலாக உருவகித்திருப்பது சிறப்பு நோக்கியே.

நெடுங்கடல்
இந்த உலகம் கடலால் சூழப்பட்டது; அது யாராலும் கடக்க இயலாதது; ஆழ்ந்தறிந்து அறியமுடியாததாக இருப்பது என்பதனையும் உணர்த்திய பின்னர், முற்றிலும் கடலால் சூழப்பட்ட உலகமும் மழைஇன்றிப் பொய்த்துப் போனால் தன் நீர்மை குன்றிப் போகும் என்ற அறிவியல் உண்மையை,

“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.” (குறள். 17)

என்னும் குறள்வழி தெளிவுறுத்துகிறார். கடலால் சூழப்பட்ட உலகில், மழையை உருவாக்க உதவுவது கடல். அந்தக் கடலும் மழை இன்றிப் போனால் தன்னியல்பில் குறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். மனிதனுக்கு உணவாகி உதவுகிற கடல்வாழ் உயிரினங்களும் மழை இல்லாதுபோனால் அழிந்துபடும் என்பதனைக் குறிப்பதன்பொருட்டே ‘தன்நீர்மை குன்றும்’ என்று குறித்தார்.  

“கடலில் நீரின் உப்புக்கும் ஓர் அளவு உண்டு. கடலில் நீரின் தடிப்புக்கும் ஓர் அளவு உண்டு. இது மாறாமலிருக்க வேண்டுமானால் மேகம் கருக்கூடி கடல்நீரை அள்ளிக் கொண்டு போய் மலைகளில் பொழிந்து உப்பையும், தடிப்பையும் ஆற்றின் மூலம் ஆற்றி, மறுபடியும் கடலிற்கொண்டுவந்து சேர்த்தாக வேண்டும். இன்றேல் கடல்நீரின் உப்பு அதிகமாகும். நீரின் தடிப்பும் அதிகமாகும். உயிரினங்கள் அழிந்துபடும்” (கலைக்கதிர், 2007, ப. 37) என்ற அறிவியல் கருத்தியலின்படி உலகம் கடல்நீரால் சூழப்பட்டிருப்பினும், கடல் நீர் பயன்படுத்துவதற்கோ, பருகுவதற்கோ, வேளாண்தொழிலுக்கோ நேரடியாகப் பயன்தருவது இல்லை. ஆனால் மழை நீர் உற்பத்தியாவதற்கு ஆவியாக நின்று நிலைத்து மழைநீராக்கித் தரும் மூலப்பொருளாக விளங்கும் தன்மை உண்டு என்பது அறியத்தக்க செய்தியாகும். இதன் பொருட்டே திருவள்ளுவர் கடல்நீரின் சிறப்பினை நன்குணர்த்துகிறார் என்பது தெளிவாகும்.

உதவி கடலினும் பெரிது
உலகில் மற்றவர் அறிந்த, அளவிடற்கரிய பொருள் கடல்தான். அதன்பொருட்டே திருவள்ளுவர் மற்றவர் அறிந்த பொருளைக் கொண்டு அறியாப் பொருளை விளக்க முயல்கிறார். ஒருவர் செய்த நன்றியை மறவாத பண்பு இன்றியமையாதது. தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாதிருக்க வேண்டும். அவ்வாறு மறத்தலினும் இழிவானது வேறில்லை. தனக்கு முன்னர் எந்தவொரு உதவியும் செய்யாதிருக்க, ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவி அளவிடற்கரியதாகும். நன்றி என்பது பிறர்க்குச் செய்யும் நன்மை எனப் பொருள்படும். செய்ந்நன்றி என்பது செய்த நன்றி என்பதாகும். நன்றி என்பது அறம் என்ற கருத்தினை உணர்த்தி நிற்கின்றது. இதனை உணர்த்தும் இடத்திலும்,

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”    (குறள். 803)

என்று கடலைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார் திருவள்ளுவர்.    

உலகில் இன்னாருக்கு இன்னது செய்தால், இன்னது கிட்டும் என்பதே பொதுநியதியாக உள்ளது. ஒருவருக்கு நன்மை செய்தால் அதனால் விளையக்கூடிய பலன் என்பது கருதியே உலகில் நன்மைகள் செய்யப்படுகின்றன. இன்னாருக்கு இன்னது செய்தால் இன்ன பயன் நமக்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்து பாராமல், ஒருவர் செய்த உதவியின் தன்மையை, அளவை, பயனீட்டை ஆராய்ந்து பார்க்காமல், அவர் செய்த உதவியின் காலத்தை, தன்மை, சூழலை ஆராய்ந்து பார்த்தால் அவ்உதவியினால் வருகின்ற நன்மை கடலைவிடப் பெரியதாக நிற்கும் என்பது வள்ளுவர் தரும் அறவுரையாகும். இதன் பொருளை விளக்குவதற்குக் காட்சிப்பொருளாகிய கடலை உவமைகாட்டி மகிழ்கிறார் திருவள்ளுவர்.

நாமநீர் உலகம்
இவ்வுலகம் நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்டது. உலகின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கினைக் கடல் சூழ்ந்துள்ளது. இதனால் நிலத்தைவிட அளவிலும் பரப்பிலும் அளப்பரியதாய்க் கடலே திகழ்கிறது. அது நிலத்திற்கும் நிலவாழ் மக்களுக்கும் எப்போதும் பெரும் அச்சத்தைத் தருவதாகவே அமைந்துள்ளது. இதன்பொருட்டே கடலால் சூழப்பட்ட உலகினைக் குறிப்பதற்கு ‘நாமநீர்’ என்ற சொல்லாக்கத்தை ஆள்கிறார் திருவள்ளுவர்.  

‘பிறனில் விழையாமை’ கருத்தினை விளக்குவதற்குக் கடலைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார் திருவள்ளுவர். அச்சத்தைத் தருகின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் பிறன் ஒருவனுக்கு உரிமையானவளின் தோள்களைச் சேராதவனே எல்லா நன்மைகளையும் பெறத்தக்கவனாக விளங்குவான் என்பதனை,

“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்”    (குறள். 149)

என்று குறிப்பிடுகிறார். கடலினை ‘நாமநீர்’ என்னும் சொல்லால் இங்கு குறிப்பிடுவது அறியத்தக்கது. அகலம், ஆழம், பொருளுடைமை என்ற பொருள்தரும் விதத்தில் இங்கு ‘நாமநீர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எல்லா வகைகளிலும் வளம் கொண்டதாக இருப்பினும், அச்சம் தருவதாக அமைந்துள்ளது. பிறர்க்கு உரியவளின் தோள்தோய்பவன் எல்லா நிலைகளிலும் அச்சத்தை அடைய வேண்டிய நிலைக்கு உள்ளாவான் என்பதனை விளக்குவதற்கு இங்குக் கடலைக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார் என்பது தெளிவாகிறது.   

கடலும் கப்பலும்
மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்வதற்குக் கடலும், நிலமும், வானும் வழிகளாக அமைபவை ஆகும். சங்க காலத்தில் கடல்வழியாகவும், நிலவழியாகவும் இடப்பெயர்வு நிகழ்ந்தவற்றை அறியமுடிகின்றது. கடல்வழியாகவும், நிலவழியாகவும் மக்கள் பயணம் செய்துள்ளதால், இவ்விரண்டிலும் வெவ்வேறு போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தித்தான் செல்ல முடியும். இதன் சிறப்பினை உணர்ந்த திருவள்ளுவர், பகைவரை வெல்லுவதற்குக் கருதும் காலமும், கருவியும், சூழலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றாலும் இடத்தின் தன்மையை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகையில் கடலை ஆள்கிறார்.  

“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து”    (குறள். 496)

நிலத்தில் ஊர்ந்துசெல்லத்தக்க வலிமைபொருந்திய தேர் கடலில் செல்வதற்குத் துணை செய்யாது. கடலில் ஓடக்கூடிய கப்பல், நிலத்தில் ஓடப் பயன்தராது, இவ்விரண்டின் தன்மைகளை அறிந்து செயலாற்றும்போதே வெற்றி கிட்டும் என்பதனை உணர்த்துவதற்குக் கடலைக் காட்சிப்படுத்தி விளக்குவதனைக் காணலாம்.  இடனறிதல், அதற்குத் தக்கவாறு செயலாற்றுதல் என்னும் அறமுரைத்தற்கு இக்குறளில் கடலில் செலுத்தும் நாவாய், நிலத்தில் செலுத்தும் தேர் ஆகிய இரண்டன் சிறப்பினையும் விளக்கியுள்ளதனைக் காணலாம்.

கடல்போன்றது காமம்
மிகுதியான அன்பினைக் குறித்துவரும் சொல் ‘காமம்’ ஆகும். பெரும்பாலும் அது மெய்யுணர்ச்சியைக் குறிப்பதாய் அமைகிறது. திருவள்ளுவர் காமத்திற்கு உவமையாகக் கடலைக் காட்டுகிறார். காமத்தைக் கடலோடு ஒப்பிட்டு, காமம் கடல் போன்றது என்று குறித்துள்ள திறம் பாராட்டுக்குரியதாகும்.

கடல்போன்ற எல்லையற்ற காமநோயில் வருந்தி நின்றாலும், ஆடவரைப் போன்று மடலேறாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அக்காலத் தலைவிக்குப் பண்டைச்; சமூகநெறி விதி வகுத்திருந்தது. இதனால் காமம் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடத்தற்கரிய பொருள்களாக விளங்கியமை தெளிவாகும். இதனை நன்குணர்ந்த திருவள்ளுவர் காமத்தைக் கடலாக்கிக் காட்டுவது அதன் பொருத்தப்பாட்டை உணர்ந்தே குறித்தது ஆகும். கடல்போன்ற காமச்சுழலில் சிக்கித் தவித்தாலும் அதனை அடக்கிக் கொண்டு வெளிப்படுத்தாமல் வாழ்கின்ற பெண்ணின் தன்மை பெருமையுடைத்து என்ற கருத்தினை விளக்குவதற்குக் கடலைக் காட்சிப்படுத்தும் போக்கினை,

“கடலன்ன காமம் உழன்றும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்”    (குறள். 1137)

என்னும் குறட்பாவில் காணலாம். கடல் போன்ற துயரை அனுபவித்தாலும் மடலேறுதலைப் பற்றி சிந்திக்காத பெண்மையே சிறப்புக்கு உரியது. அதைப்போல பெருமைக்கு உரியது இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை என்பதனை இக்குறளின்வழி அறமுரைத்தலைக் காணலாம். கடல் எஞ்ஞான்றும் கடத்தற்கரிய, அளவில்லாப் பொருள் என்பதனை விளக்குவதற்கு அதனைக் காமத்தோடு ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ள திறம் சிறப்புடைத்து.

காமக்கடல்
காமம் தீராக்காதல் என்ற பொருளைத் தருகின்றது. அது கட்டுக்குள் இல்லாதபோது கடலில் விழுந்தவன், அதன் சுழலில் சிக்கி மூழ்கி இறப்பது போலவும் செய்து விடுகின்றது. அத்தகு தீராக்காதலைக் காமக் கடலாக்கி உருவகப்படுத்திக் காட்டுகிறார். அளவற்ற காமத்தால் வருந்தி மெலியும் தலைவி, தான் கொண்ட காமநோய் கடல்போன்று பெருகிப் பெருகி, இடையறாது அலையாய்த் தவழ்ந்து தன்னை வருத்துகின்றது. ஆதலால் அதை நீந்திக் கரை சேர்வதற்கான, கடந்து செல்வதற்கு வேண்டிய பாதுகாப்பான தெப்பம் ஏதும் இல்லாதவளாக யான் வருந்தி நிற்கின்றேனே என்ற கருத்தினை,

“காமக் கடல்மன்னும் உண்டே, அதுநீந்தும்
ஏமப் புனைமன்னும் இல்”    (குறள். 1164)

என்னும் குறள்வழி தெளிவுறுத்துகிறார். உலகில் கடலும் காமமும் கரைகாண இயலாத இயல்புகளைக் கொண்டவை. காமமாகிய கடலை நீந்துவதற்கு அரிதின் முயன்றும் அதன் கரைகாண முடியாமல் வருந்தும் தலைவியின் நிலை உளவியலோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்கது. கடவுள் வாழ்த்தில் அறத்தைக் கடவுளாகவும், அதனை நீந்திக் கடப்பதற்கு இறைவன் திருவடிகளே உரிய புனையாக அமையும் உபாயத்தையும் குறித்த திருவள்ளுவர், இங்குக் காமத்தைக் கடப்பதற்கு வழியேதும் இல்லாது தவிக்கும் காமத் தவிப்பினைக் கூறியுள்ள திறம் நயமுடைத்து.

கடலாற்றாக் காமநோய்
கடலினும் பெரிதும் காமநோய் என்பதனை, ‘கண்விதுப்பு அழிதல்’ என்னும் அதிகாரத்தில் வெளிப்படுத்துகிறார் வள்ளுவர். தலைவனைக் கண்டு அவன்மீது காதல் கொண்டாள் தலைவி. அவள்கொண்ட காமமோ அளவற்றது. அதற்குக் கடலும் ஒப்பில்லை. காமநோயால் அவள் வருந்துகிறாள். அவள் அவனைக் கண்டதால்தானே அவன் மீது காதல் கொள்ள நேர்ந்தது. அவனை அவளுக்குக் காட்டியவை அவள் கண்கள் தானே? எனவே, நான் வருந்துவதோடு இந்தக் கடலும் ஒப்பில்லை என்று கூறும்படியான பெரிய காமநோயை எனக்குத் தந்த கண்கள் அத்தீவினையாலே தாமும் தூக்கமில்லாமல் துன்புறுகின்றன. காமநோய், தலைவனைக் கண்டமையால் வந்தது. தான் கொண்ட காமநோய்க்கு இந்தக் கண்களே காரணமாயின என்கிறாள். இதனை,

“படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்”    (குறள். 1175)

என்னும் குறட்பாவில் தெளிவுறுத்துகிறார். விதும்பல் என்பது விருப்பத்தால் விரைதலாகும். கண்கள், தலைவனைக் காணும் விருப்பம் மேலிட்டு விரைவதைக் குறிப்பதாகும். கண்கள் அழுவது எதற்காக என்ற கேள்வியினை அவள் தனக்குள் கேட்டுக் கொள்;கிறாள். ஏனெனில் முதலில் அவை காட்டியதால்தான் அவள் நாயகனைக் காணமுடிந்தது. அப்படிச் செய்தவை, இப்பொழுது அழுவது அவளுக்கு வியப்பாக இருக்கிறது என்ற குறிப்பினை இப்பாடல்வழி தெளிவுறுத்துகிறார்.

கடல் தாண்டி விடும் தூது
கடல், கடத்தற்கு அரியது என்பது தெரிந்தும், ஒரு தலைவி, தன் நெஞ்சினைக் கடல் கடந்து சென்று தலைவனிடத்துத் தான் கொண்ட காதல் துயரை அவனிடத்துச் சொல்லி, தனது காதலைத் தீர்த்துவைக்குமாறு தூது வேண்டி நிற்கிறாள். கடல் கடத்தற்கு அரியது. காமமோ, கடலைவிடக் கடத்தற்கு அரியது என்ற அரிய கருத்தினை விளக்குவதற்கு இவ்விடத்தில் கடலைக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.

காதல் கொண்ட தலைவி, தன் நெஞ்சத்தினைப் பார்த்து நொந்து கொள்கிறாள். அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கிறாய். அதைவிட நீ எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு முயற்சி செய்யலாம் என்பதனை,

“உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சே”    (குறள். 1200)

என்னும் குறள்வழி குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் கடலைவிடக் காமநோய் தமக்கு வருத்தம் தருவதாய் இருக்கின்றது என்று வருந்தி நிற்கும் தலைவியின் உள்ளக் குறிப்பினையும், நெஞ்சத்தைக் கடலைத் தாண்டிச் சென்று தன் தலைவனிடம் தன் நிலையை உரைத்து வருமாறு தூது விடுக்கும் தலைவியின் நிலையினையும் உணர்த்தக் காணலாம். இதனோடு கடலையும் என்றாவது ஒருநாள் கடந்துவிடலாம்; ஆனால், காமம் கடத்தற்கரியது என்ற உளவியல் உண்மையைக் கருத்தாக்கியுள்ளதனைக் காணலாம்.

இவ்வாறு திருவள்ளுவர் கடலைப் பல்வேறு நிலைகளில் அறத்திற்கும், பொருளுக்கும், காமத்துக்கும் பொருந்தவரும் விதத்தில் ஆண்டுள்ள திறம் போற்றற்குரியதாய் அமைந்திருக்கின்றது.

முடிவுகள்
சங்க கால வாழ்வியலில் கடல் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. தமிழர்கள் கடல்சார் வாழ்வியலில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தனர். கடலில் விளைந்த உப்பு, முத்து போல்வன எல்லா நிலவாழ் மக்களின் வாழ்வியலில் மிகமுக்கியப பங்காற்றியுள்ளமையால் சங்க காலத்தில் கடல் பற்றிய அறிதல் திறன் பெருவழக்கில் இருந்துள்ளது.  

சங்கப் பாடல் புனைவாக்கத்தில் கடல்சார் வாழ்வியல் முக்கியமான இடம் பெற்றிருந்தது. நெய்தல் திணைப் பாடல்கள் கடல்சார் வாழ்வியலைக் காட்சிப்படுத்தினா -லும், கடல், கடலின் சிறப்பு, இயக்கம், தோற்றம், ஆற்றல், அழிவு ஆகியனவற்றைப் பற்றிய சிந்தனைச் சங்கப் புலவர்களிடம் பெருமளவில் இருந்துள்ளது. இதனை அவர்தம் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

சங்க காலத்தில் மலை, கடல், வான், நீர், மழை, மண் போல்வன காட்சிப் பொருளாக மட்டுமன்றிக் கருத்துப் பொருளாகவும் புலவர்களால் ஆளப்பட்டுள்ளன. திருவள்ளுவர் கடலியல் அறிவினை மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்துள்ளார். கடலினைக் காட்சிப்பொருளாக மட்டுமல்லாமல் கருத்துப் பொருளாகவும் ஆண்டுள்ள திறம் திருக்குறளின் சிறப்புக்குச் சிறப்பினைச் சேர்க்கிறது.

கடலின் சிறப்பினை வியந்துரைக்கும் அறக்கடல், பெருங்கடல், நெடுங்கடல், நாமநீர், காமக்கடல் போன்ற சொற்கள் கடலின் சிறப்பினைக் காட்சிப்படுத்துவதற்கும், கருத்து விளக்கத்திற்கும் துணைநின்றுள்ள திறம் இதன்வழி தெளிவாகிறது. மக்கள் நன்கறிந்திருந்த கடலை, கருத்துவிளக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ள திருவள்ளுவரின் திறம் சிறப்புடைத்து.

பிறவியைப் பெருங்கடலாக்கியும், அறத்தையே கடவுளாக்கியும், நெடுங்கடலாக்கி யும், காமத்துயர நிலைப்பாட்டினைக் கடல்போன்று பரந்து விரிந்துள்ளதாக்கியும் காட்டி யுள்ள திறம் நினையும்தொறும் இன்பம் பயக்க வல்லது. மேலும், கடல் என்னும் காட்சிப் படிமம், அறம்-பொருள்-இன்பம் என்னும் மூன்றன் கூறுகளுக்கும் கருத்துப்பொருளாக்கியுள்ள திறம் திருவள்ளுவருக்கே சாலும் என்பதும் தெளிவுறுகிறது.

திருவள்ளுவர் ஒப்பாருமிக்காரும் இல்லாதவற்றை விளக்குவதற்கு அளக்கலாகாப் பொருள்களை எடுத்தாள்கிறார். சங்க இலக்கியத்தில் நிலத்தையும், நீரையும், வானையும் அளக்கலாகாப் பொருள்களாகக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு காட்சிப் பொருளாகவும், கருத்துப்பொருளாகவும், எல்லையற்ற ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்ட பொருளாகவும் விளங்கும் தன்மையினைக் கொண்டே கடலைக் காட்சிப் பொருளாகக் கொண்டார் என்பது அதன் பொருள் விளக்கத்தை அறிவதால் தெளிவாகும்.  

துணைநின்ற நூல்கள்,

1. பரிமேலழகர், (உ.ஆ.), திருக்குறள் மூலமும் உரைக்குறிப்பும், கழக வெளியீடு, சென்னை, 15ஆம் பதிப்பு 1990
2. தமிழண்ணல், (உ.ஆ.) திருக்குறள் நுண்பொருளுரை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2001
3. கலைக்கதிர், அறிவியல் இதழ்-சூன்-2007.

psmnthn757@gmail.com

* கட்டுரையாளர் – – முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா,  –