தொண்டைமண்டலப் பகுதிகளில் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் போன்ற வழிபாடுகள் பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்பட்டுள்ளன. தற்போது இச்சிறுதெய்வ வழிபாடுகள் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்படவில்லை. ஆனால் சமணசமய பெளத்தசமயக் கோயில்களில் ஐயனார், சாஸ்தா வழிபாடுகள் காணப்படுகின்றன (வேங்கடசாமி,2003:125-126).
ஐயனார்
ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் என்னும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்தத் தெய்வம் பெளத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெளத்தமதத்திலிருந்து சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பெளத்தமும் தமிழும் என்னும் நூலில் எழுதப் பட்டுள்ளது. சமணர்களுடைய கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத்தெய்வத்திற்குப் பிரம்மயட்சன், சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக்கோயிலில் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. ஏனைய சமணத்திருக்கோவில்களிலும் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறுதெய்வங்களில் ஒன்றாகும். சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். பெளத்தமதத்திலிருந்தும் சமணமதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பெளத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமையாதெனில், பெளத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை ஆகும். சைவக்கோவில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமாணக் கோவில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் பூசை முதலிய சிறப்பும்பெற்று இன்றும் விளங்குகின்றார் (வேங்கடசாமி, 2003 : 125 – 126).
தொண்டைமண்டலத்திற்கு உட்பட்ட மறைந்துபோன சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் மறையாமல் உள்ள சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் பின்வருமாறு காணலாம். கீழ்க்காணும் குறிப்புக்கள் அனைத்தும் சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும் (2003 : 131 – 152).
சென்னைமாவட்டம்
மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் சமணக்கோவில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக்கோவிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பதாகும். திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவராவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் பின்வருமாறு அமைகிறது:
மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிறந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா லொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.
அருகக்கடவுள் மயிலாப்பூரில் கோவில்கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் எனும் நூல்,
மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்
என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமி நாதசுவாமி பதிகம் என்னும் செய்யுள்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேமி நாதர்கோவில் மயிலாப்பூர்க் கடற்கரையில், இப்போது சாந்தோம் கோவில் என்று கூறப்படுகிற கிறித்துவரின் தோமையார்கோவில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒரு காலத்தில் கடல்நீர் இக்கோவிலை அழித்துவிடும் என்று அஞ்சி இக்கோவிலில் இருந்த அருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒருகல் எழுத்துச்சாசனம்,
வட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)க்
குடுத்தோம் இவை பழந்தீ பரா
என்று கூறுகிறது. இதனால் நேமிநாதர்கோவில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமையார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப்பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக்கடவுள் உருவங்கள் இருந்தன என்று தொல்பொருள் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒருபெரிய சமணத்திருவுருவம் இருந்ததையும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயிலாப்பூர் நேமிநாதர் பேரால் இயற்றப்பட்ட நூல் நேமிநாதம் என்பதாகும். நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் எனும் சமணர் மயிலாப்பூரில் இருந்தவர் என்பர். வேறு சமணக்கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் ஆயர் வீட்டிலும் உள்ளன. இவை தோமையார்கோவில் தோட்டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவைகளாகும். மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் சீனி. வேங்கடசாமி தன்னுடைய நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் (வேங்கடசாமி, 2003 :131-132).
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப் பெருமாள்கோவிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.
ஆநந்தமங்கலம்: இவ்வூர் ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. இங்கு கற்பாறையில் சமணத்திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்ததீர்த்தங்கரரின் உருவம். இத்தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆனந்ததீர்த்தங்கரருக்கு ஒரு யஷி குடைபிடிப்பதுபோன்றும் மற்றொரு யஷி சாமரை வீசுவதுபோன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை கொண்ட பரகேசரிவர்மனுடைய (பராந்தகன் 1) 38ஆவது ஆண்டில் (கி.பி.954-இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உள்ளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மணவர் வர்த்தமானப்பெரியடிகள் என்பவர் இவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவுகொடுக்கும் பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம் செய்ததையும் இச்சாசனம் (அரசாணை) கூறுகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத் திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.
சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்துகிடக்கிறது. இங்குள்ள அரசாணையால் இச்சினகரத்துக்கு திருகரணப்பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.
பெரியகாஞ்சிபுரம்: இங்குள்ள ஒருதோட்டத்தில் சமணத்திருவுருவம் ஒன்று இருக்கிறது. பெரிய காஞ்சிபுரத்துக்குப்போகும் பாதையில் ஒரு சமணத்திருவுருவம் இருக்கிறது. காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாதோத்காரி பெருமாள்கோவில் அருகில் ஒரு சமண உருவம் இருக்கிறது.
மாகறல்: இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோவில் ஒன்று உள்ளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோவிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன. இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோவில் இப்போது சிதலமைடைந்து கிடக்கிறது. சீனி.வேங்கடசாமி தன்நண்பர் ஒருவருக்கு இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் ( 2003 : 132 – 133).
ஆர்ப்பாக்கம்: இவ்வூர் மாகறலுக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோவில் உள்ளது.
விஷார்: இதும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத்திருவுருவங்கள் காணப்படுகின்றன.
குன்னத்தூர்: (திருபெரும்பூதூர் வட்டம்): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் (அரசாணை) பெரியநாட்டுப்பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப்பள்ளியாக இருக்கக்கூடும். இந்த வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் இனாம் சிற்றூர் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்கு சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.
கீரைப்பாக்கம்: (முந்தைய செங்கல்பட்டு வட்டம்): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் (அரசாணை) கி.பி.9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக்கோவிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும் சமணசங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் (அரசாணை) கூறுகின்றது.
திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவேயாகும். இங்கு எழுந்தருளியுள்ள அருகக்கடவுளுக்குத் திரைலோக்கியநாதர் என்றும் திருப்பருத்திக்குன்றாழ்வார் என்றும் சாசனங்களில் (அரசாணைகளில்) பெயர் கூறப்படுகின்றன. மல்லி சேன வாமனாச்சாரியார் மாணவர் பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனாச்சார்யர் என்னும் முனிவர் இக்கோவில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒரு சாசனம் (அரசாணை) தெரிவிக்கின்றது. இக்கோவிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேன வாமனாசாரியார் மேருமந்தரபுராணத்தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். இந்நூல்கள் இரண்டும் பிரபல சமணப்பெரியாராகிய ராவ்சாகிப் அ.சக்கரவர்த்தி நயினார் M.A.,I.E.S. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன. இரண்டாயிரம் குழிநிலம் இக்கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் (அரசாணை) கூறுகிறது. விஷார் என்னும் சிற்றூரார் விக்கிரமசோழ தேவரது 13வது ஆண்டில் இக்கோவிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. கைதடுப்பூர் சிற்றூர் அவைத்தார் திருப்பருத்திக்குன்றத்து ரிஷிசமுதாயத்தாருக்குக் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம்செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. இக்கோவிலில் உள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது:
தன்னளவிற் குன்றா துயராது தன்காஞ்சி
முன்னுனது மும்முனிவர் மூழ்கியது – மன்னவந்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா.
சைதாப்பேட்டைவட்டத்தில் மாங்காடு சிற்றூர்க் காமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது. இவ்வட்டம் திருஆலம் தர்மீஸ்வரர் கோவில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்பிடுகிறது. இது நேமிநாதர் கோவிலாக இருக்கக்கூடும். முந்தைய செங்கல்பட்டு வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் சிற்றூர்களும் மதுராந்தகம் வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் சிற்றூர்களும் பொன்னேரி வட்டத்தில் அருகத்துறை அத்தமணஞ்சேரி என்னும் சிற்றூர்களும் திருவள்ளுர் வட்டத்தில் அம்மணம்பாக்கமும் உள்ளன. இவை இங்கு சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.
புழல்: சென்னைக்கு வடமேற்கே 9 மைல் தூரத்தில் புழல் என்னும் சிற்றூர் உண்டு. இங்கு ரிஷபதேவருக்கு (ஆதிநாதர் பகவானுக்கு) ஒருகோவில் உண்டு. இதனால் புழல் சிற்றூர் பண்டைக்காலத்தில் சமணச்சிற்றூராக இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுச் சிற்பமுறையில் அமைந்திருந்த இந்தக் கோவிலின் கோபுரம் பழுதாகிவிட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச்சமணர் இக்கோவிலை வடநாட்டுச் சிற்பமுறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோவிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வில்லிவாக்கம்: இவ்வூரில் வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உள்ளது.
பெருநகர்: (பென்னகர்) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம், மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைல் தொலைவில் உள்ளது. இந்தச் சிற்றூர்க் கிழக்கே சமணக்கோவில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோவில் கற்களைக்கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள்கோவிலைக்கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது (வேங்கடசாமி, 2003 : 132 – 136).
முந்தைய வடஆர்க்காடு மாவட்டம் (வேலூர்)
கச்சூர்: காளாஸ்தி ஜமின் என்றழைக்கப்படும் கச்சூர் திருவள்ளூருக்கு வடக்கே 12 மைல் தொலைவில் உள்ளது; கச்சூர் மாதரபாக்கம் உள்ளது. இங்கு ஒரு சமண பஸ்தி உள்ளது.
நம்பாக்கம்: காளாஸ்தி ஜமின். இது திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு முன்பு ஒரு சமணக்கோவில் இருந்ததென்றும் பிற்காலத்தில் அக்கோவில் சைவக்கோவிலாக மாற்றப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இச்சைவக்கோவிலுக்கு மண்டிஸ்வர சுவாமி கோவில் என்று பெயர் வழங்கப்படுகிறது.
காவனூரு: குடியாத்தம் வட்டம், குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல் தொலைவில் உள்ள இந்தக் சிற்றூரில் சமணத்திருவுருவங்கள் உள்ளன.
குகைநல்லூர்: குடியாத்தம் வட்டம், திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள இவ்வூரில் சமண உருவங்கள் உள்ளன.
கோழமூர்: இது குடியாத்தம் வட்டம், குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல் தொலைவில் விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.
தென்னம்பட்டு: இது குடியாத்தம் வட்டம்; ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இச்சிற்றூரின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒருகல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக்கோவிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணி: இது விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல் தொலைவில் உள்ளது. இங்கு சமண உருவங்கள் காணப்படுகின்றன.
பெருங்கங்கி: வாலாஜாபேட்டை வட்டம். வாலாஜாபேட்டைக்கு வடக்கே 9 மைல் தொலைவில் உள்ள இவ்வூர் சமணரின் முக்கிய சிற்றூராகும். இங்கு ஏரிக்கரையிலும் கலிங்கின் அருகிலும் சிற்றூரில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.
சேவூர்: இது ஆரணி ஜாகீர்; ஆரணியிலிருந்து வடமேற்கே 2 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு பழைய சமணக்கோவில் உள்ளது.
திருமலை: (வைகாவூர் திருமலை) இது போளூர் வட்டம்; போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல் தொலைவிலும் வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல் தொலைவிலும் உள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு161/2 அடி உயரத்தில், மிகக்கம்பீரமாகக் காணப்படுகிறது. குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழையபெயர் கூறப்படுகிறது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத்திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக்கோவில்கள் உள்ளன. இக்குன்றில் இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர்காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவ சரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்பட்டுள்ளன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. செயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்கள நாட்டுநடுவில் வகை முகைநாட்டுப் பள்ளிச்சந்தம் வைகாவூர்த்திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம் என்று கல்வெட்டுக் கூறுகின்றது (S.I.IVOL.NO.98). கடைக்கோட்டூர்த் திருமலைப்பாவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆச்சாரியார் ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோவிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள் நல்லாத்தாள் என்பவர், ஸ்ரீவிஹார நாயக்கர் பொன்னெயில் நாதர் (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோவிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. பல்லவ அரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணிமங்கை என்பவரும் இக்கோவிலுடைய ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபதுகாசும் நிலமும் கொடுத்தசெய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டுக் கணிசேகர மருபோற் சூரியன் கலிங்கு என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினர் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள கீழ்க்கண்ட செய்யுள் கூறுகின்றது (S.I.I.VOL.NO.94):
அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்
அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்
கலைபுரியு மதிநிபுணன் வேண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்றன் றிருநாமத்தால் வாய்
நிலைநிற்குங் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடுழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.
விடால்: இது வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும் மற்றொருன்றை இராசகேசரிவர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக்காலத்தில் சமணமுனிவர் தங்கியிருந்தனர். குண கீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக குரத்தியாரையும் அவர் வழி மாணாக்கியாரையும் பாதுகாத்த செய்தி இங்குள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. இவ்வூருக்குச் சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம் என்று கல்வெட்டுக் கூறுகின்றது.
புனதாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) முந்தைய இது வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு வட்டத்தில் ஆனக்காவூருக்கு ஒரு கல்தொலைவில் இருக்கிறது. பண்டைக்காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக்கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக்கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் அங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற, அவர் பதிகம்பாடி ஆண்பனைகளைப் பெண்பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக்கோவில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டும் காணப்படுகிறது. இக்கோவில் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவர் கோவிலைக்கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வூர்ச் சமணக்கோவில் பாழ்படவே, இக்கோவிலைச் சேர்ந்த இரண்டு சமணத்திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும் இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோவில் செம்புக்கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத்திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தலபுராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.
திருவோத்தூர்: இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப்பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்கு சைவ சமணக் கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன்கோவிலில் சமணர் துரத்தப்பட்டசெய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர். இவ்வூர் மக்கள் இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோவில் இருந்ததென்றும் அக்கோவில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோவில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி சிற்றூரின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கருகில் உள்ள குட்டையில் சமணக்கோவிலின் செப்புக்கதவுகள் முதலியன புதைந்து கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.
திருப்பனம்பூர்: இது காஞ்சிபுரத்திலிருந்து பத்துமைலல் தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பெளத்தர்களுடன் சமயவாதம்செய்து வெற்றிபெற அகளங்கன் ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இச்சிற்றூரில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக்கோவிலுக்கு முனிகிரி ஆலயம் என்று பெயர். இது இம்முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்டபெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக்கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இச்சிற்றூரில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோவில்கள் உண்டு. இங்கு சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இக்கரந்தைக்கோவிலில் இடிந்துசிதைந்துபோன பழையகோவில் ஒன்றிருக்கிறது. இக்கோவில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோவில் கோபுரவாயிலில் கீழ்க்கண்ட பாடல் எழுதப்பட்டுள்ளது:
காவுவயல் சூழ்தடமும் கனத்தமணிக் கோபுரமும்
பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன்
மேவுபுகழ்த் திருப்பறம்பை விண்ணவர்கள்
போற்றிசெய்யத்
தேவரிறை வன்கமலச் சேவடியைத் தொழுவோமே.
பூண்டி: வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜப்பேட்டை வட்டத்தைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர்கோவில் என்னும் ஒரு சினகரம் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்து இக்கோவில் வரலாற்றினைக் கூறுகிறது. அதில் செயங்கொண்ட சோழ மணடலந்தன்னில் பயன்படுசோலைப் பல்குன்றக்கோட்டத்து வேண்டியது சுரக்கும் மேயூர் நாட்டுப்பூண்டி என்பது காண்டகு திருநகர் என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப்பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச்செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோவிலை அமைத்து வீரவீர சினாலயம் என்னும் பெயரிட்டு சிற்றூர்களையும் இறையிலியாகக்கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகிறது. இக்கோவிலிலிருந்த செம்பு உருவச்சிலை ஆரணிக்கோவிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணர்கோவில்களில் இக்கோவில் மிகப்பழைமையானது.
வள்ளிமலை: முந்தைய வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை எனும் சிற்றூர். இச்சிற்றூரில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக்குன்றின் கிழக்குப்பக்கத்தில் இயற்கையாக அமைந்த ஒருகுகை உண்டு. இதன் அருகில் கற்பாறையில் இரண்டு சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ் கன்னடமொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகிறது. மேற்கூறப்பட்ட சமணஉருவங்களின் கீழ்ப்பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார் என்றும் மற்றொரு கல்வெட்டு ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம் என்றும் மற்றோர் கல்வெட்டு பாலசந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை என்றும் கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே என்றும் கூறுகின்றன. இங்குள்ள சமண உருவங்களைக் கொண்டும் கல்வெட்டுக்களால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக்காலத்தில் இந்த மலையும் சிற்றூரும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப்பெற்றிருந்தது என்பது துணியப்படும்.
பஞ்சபாண்டவர் மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென்மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவர்மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உள்ளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவர்மலை என்று பெயர் கூறப்பட்டபோதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொருதொடர்பும் இல்லை. இதற்கு வழங்கப்படும் இன்னொருபெயர் திருப்பான்மலை ஆகும். இந்த மலையின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள செயற்கைக்குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்குமேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறுசுனையும் காணப்படுகின்றன. இக்குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடக்கையில் சாமரைபிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலப்பக்கத்தில் ஓர் ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முற்புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும் ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிப்பது போன்றும் காணப்படுகின்றன. இக்குகையின் வாயிற் புறத்தின்மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல்வெட்டுப்பொறிக்கப்பட்டுள்ளது. நந்திப்போத்தரசற்கு ஐம்பதாவது நாகசந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன். எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் பொன் இயக்கி என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்து. இக்குகையில் காணப்படும் சாமரை பிடித்தபெண் உருவம் இதில் குறிப்பிட்ட பொன் இயக்கியின் உருவம் என்றும் அதன்பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் அது கருதப்படுகிறது. இந்த மலையில் பொறிக்கப்பட்டுள்ள இன்னொரு கல்வெட்டும் உள்ளது. அது கி.பி.984-இல் அரசாட்சிக்கு வந்த இராசராசசோழனுக்குக் கீழ்ப்பட்ட இலாடராசன் வீரசோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில் இந்த மலை படவூர்க்கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத்திருப்பான் மலை என்று கூறப்பட்டுள்ளது. இந்த இலாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக்கோவிலுக்குத் தானம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் கூறகன்பாடி கற்பூர விலையையும் அந்நியாயவால தண்ட இறையையும் இக்கோயிலுக்குப் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான். இக்கல்வெட்டின் கடைப்பகுதி, இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங்கொள்வார் என எழுதப்பட்டுள்ளது. இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்; இத்தர்மத்தை ரஷிப்பான் பாததூளி என்தலை மேலன; அறமறவற்க அறமல்லது துணையில்லை என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கூறகன்பாடி சிற்றூர் என்பது பஞ்ச பாண்டவர் மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள கூறம்பாடி என்னும் சிற்றூர் என்று கருதப்படுகிறது. இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக்குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச்சந்தம் என்னும் பெயர்களும் இந்த மலை ஒருகாலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்தது என்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன.
பொன்னூர்: இது முந்தைய வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழநல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் இதுவும் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர்கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது. இவ்வூருக்கு இரண்டு மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது. இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள ஏலாச்சாரியாரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்புச் செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்.
தேசூர்: இது வந்தவாசி வட்டம்; வந்தவாசிக்குத் தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ள இங்கு சமணர் உள்ளனர்(Top.List.P:170,N.A.Dt.Mannual,P.25).
தெள்ளாறு: வந்தவாசியிலிருந்து தென்மேற்கே 8 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு சமணக்கோவில் உள்ளது(Top.List.P.170).
திரக்கோல்: வந்தவாசியிலிருந்து தென்மேற்கே 81/2 மைல் தொலைவில் உள்ள இக்குன்றின்மேல் மூன்று சமணக்கோவில்களும் மூன்று குகைகளும் உள்ளன (Top.List.P.170).
வெண்குன்றம்: வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் உள்ள இங்கு சமணக்கோவில் உள்ளது(Top.List.P.171),(சீனி. வேங்கடசாமி, 2003:136-143).
முந்தைய தென்னார்க்காடு (விழுப்புரம், கடலூர்)
கீழ்க்குப்பம்: (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக்குப்பம் சாலைகள் சேருமிடத்தில் உள்ள இவ்வூரில் சிற்றூர்தேவதை அம்மன்கோவிலில் மேற்புறம் ஒருசமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத்தோண்டியபோது இது கிடைத்துள்ளது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்குமேல் குடையும் இருபக்கங்களிலும் சாமரை வீசுவதுபோன்ற இரண்டுஉருவங்களும் உள்ளன.
திருவதிகை: கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப்போகும் சாலையில் 14 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. திருவதி என்றும் திருவீதி என்றும் இதை வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக்கோவில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தருமசேனர், சைவராகமாறி இவ்வூரில் சூலைநோய் தீர்ப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர்பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப்பள்ளியை இடித்து அக்கற்களைக் கொண்டுவந்து குணபரன் மகேந்திரவர்மன் என்னும் அரசன் இவ்வூரில் குணதர வீச்சுரம் என்னும் கோவிலைக்கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனால், இவ்வூரில் சமணரும் சமணமடமும் சமணக்கோவிலும் பண்டைக்காலத்தில் இருந்தசெய்தி தெரிகிறது. இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத்திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று 41/2 அடிஉயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இது இவ்வூர் சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று குமரப்ப நாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடிஉயரம் உள்ளது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 +13 – ஆவது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனார்கோவில்நிலம் அர்ஹதேவர் (அருகத்தேவர் = சமணக்கடவுள்) கோவில்நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்டசெய்தி இங்கு சமணக்கோவில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்தசெய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலேகூறப்பட்ட) இரண்டு சமணத்திருவுருவங்களும் இதன்உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற நால்முகநாயனார்கோவில் என்பதும் சமணக்கோவிலாக இருக்கக்கூடும். அருகக்கடவுள் நான்முகன் நான்கு அதிசய முகங்களையுடையவர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
திருப்பாதிரிப்புலியூர்: (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும் கடலூர் என்பது இதுவேயாகும். இது பண்டைக்காலத்தில் பாடலிபுரம் என்று பெயர்பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமணமடமும் சமணக்கோவிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமணமடம் மிகப் பழைமைவாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமணமுனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதியிலிருந்து வடமொழியில் மொழிப்பெயர்த்தார். இது சக ஆண்டு 880-இல் (கி.பி.458-இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysoure Archaeological Report 1990 – 1910. Page 45, 46). இப்பாடலிபுரச் சமணமடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம்மடத்தின் தலைவராக விளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர் பிறகு சைவமதத்தில்சேர்ந்து அப்பர் எனப் பெயர்பெற்றார். இங்கிருந்த சமணமடத்தை அக்கற்களைக் கொண்டுபோய் திருவதிகையில் குணதரவீச்சுரம் என்னும் கோவிலைக் குணபரன் என்னும் அரசன் கட்டினான் என்பர். இங்கு சமணர்கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் 4 அடி உயரம் ஒரு சமணத்திருவுருவம் காணப்படுகிறது.
திண்டிவனம்: திண்டிவனம் வட்டம். இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படிகின்றது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.
சிறுகடம்பூர்: இது திண்டிவனம் வட்டத்தில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ள ஏரிக்கரையின்மேல் உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத்திருவுருவம் இருக்கிறது. இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல் நின்றகோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திருஉருவமும் வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை நல்லநிலையில் இப்போதும் புத்தம்புதிதாகக் காணப்படுகின்றன. இப்பாறைக்குத் திருநாதர் குன்று என்று பெயர்கூறப்படுகிறது. இங்கு சந்திரநந்தி ஆசிரியரும் இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச்சாசனம் கூறுகின்றது. இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி.3 அல்லது 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.
மேல்சித்தாமூர்: (திண்டிவனம் வட்டம்) இங்குள்ள மல்லிநாதர் கோவிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமணமடம் உள்ளது. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச்சுவடிகளும் உண்டு. சமணர்கள் சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகியபோது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோவிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். இங்குள்ள கோவில்களில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.
தொண்டூர்: திண்டிவனத்திற்கு மேற்கே 6 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைல் தொலைவில் ஒரு குன்று பஞ்சபாண்டவர்மலை என்னும் பெயருடன் உள்ளது. இதில் இரண்டு குகைகளும் சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் இரண்டு அடிஉயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வூரில் வழுவாமொழிப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோவில் இருந்ததாகச் சாசனத்தினால் அறியமுடிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி வீளாகத்திற்கு, இவ்வூரைச்சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும் இந்தத் தானத்தைப் பாம்பூர்வச்சிர சிங்க இளம் பெருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வைபார்த்து வரவேண்டும் என்றும் இங்குள்ள சாசனம் கூறுகின்றது.
விழுப்புரம்: விழுப்புரம் வட்டத்தின் தலைநகரம். இங்குள்ள யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள பட்டாநிலம் என்னும் இடத்தில் முன்பு சமணக்கோவில் இருந்தது. இப்போது அக்கோவில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத்திருவுருவங்கள் Tate Park என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.
அரியாங்குப்பம்: இது புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு நான்கு அடிஉயரம் உள்ள சமணத்திருவுருவங்கள் உள்ளன. இதனை ஓர் ஆண்டி பிரமா என்னும் பெயருடன் பூசைசெய்து வருகிறார். அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூஉ எனக் கருதலாம்.
பாவண்டூர்: இது திருக்கோவிலூருக்குத் தென்கிழக்கில் ஒன்பது மைல் தொலைவில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணரும் சமணக்கோவிலும் இருந்திருக்க வேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறும் கொண்டை சமணக்கோவிலில் இருக்கிறது.
திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம் – திருநறுங்குணம்). இது திருக்கோவிலூர் வட்டம்; திருக்கோவிலூருக்கு 12 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடிஉயரம் உள்ள பாறைக்குன்றில் கோவில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உள்ளன. இக்கோவிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோவிலை அப்பாண்டைநாதர் கோவில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்கு சந்திரநாதர் கோவிலும் உள்ளது. இங்கு பல சாசனங்கள் காணப்படுகின்றன. குலோத்துங்கச்சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும் பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராசதேவரது 13ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித் திருநாள் சிறப்பு நடைபெற்றதையும் தை மாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம்தானம் செய்யப்பட்டதையும் திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்டசெய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன்தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோவில் தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உள்ளது.
ஒலக்கூர்: (திண்டிவனம் வட்டம்) இவ்வூரின் பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம் பிருதிவிவிடங்க குரத்தி என்னும் சமண ஆரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.
திருக்கோவிலூர்: திருக்கோவலூர் என்பது இதன்சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோவிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோவிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பது கருதத்தக்கது.
தாதாபுரம்: இதன்பழையபெயர் இராசராசபுரம்(திண்டிவனம் வட்டம்). இவ்வூர்ப் பெருமாள்கோவிலின் வடக்கு, மேற்கு சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்கு சமணக்கோவில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்மரான இராசராசதேவரது 21ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. குந்தவை ஜினாலயம் என்னும் சமணக்கோவிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன்மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்) கட்டி, அக்கோவிலுக்குப் பொன், வெள்ளிப்பாத்திரங்களையும் முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது. முந்தைய வடார்க்காடு மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் உள்ள சமணக்கோவிலையும் திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக்கோவிலையும் இந்த அம்மையார் கட்டியுள்ளார் (S.I.Vol.No.67 – 68).
வேலூர்: (திண்டிவனம் வட்டம்). இங்கிருந்த சமணக்கோவிலை ஜயசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.
வீரசேகரப் பெரும்பள்ளி: இது வந்தவாசி வட்டத்தில் உள்ள சளுக்கி என்னும் ஊரில் இருந்த குகைக்கோவில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.
பெருமண்டூ: (திண்டிவனம் வட்டம்) இங்குள்ள சந்திரநாதர் கோவில் மண்டபத்தூணில் உள்ள சாசனம், பெருமாண்டைநாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப்பெரும்பள்ளியைக் கூறுகிறது. இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது.
திட்டைக்குடி: (விருத்தாசலம் வட்டம்) இங்குள்ள வைத்தியநாதசுவமி கோவில் சாசனங்கள் மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச்சந்தத்தையும் இடைச்சிறுவாய் அமணன்பட்டு என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக்காலத்தில் இங்கு சமணர் இருந்தசெய்தி அறியப்படும்.
கீழுர்: (திருக்கோவிலூர் வட்டம்) இங்குள்ள சாசனம்,
கண்ணெனக்
காவியர் கயம்பயி லாவியூ ரதனில்
திக்குடை யிவரும் முக்குடையவர் தம்
அறப்பு மான திறப்பட நீக்கி
என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக்கடவுளுக்கு) உரிய நிலங்கள் இருந்தசெய்தி அறியப்படுகிறது.
பள்ளிச்சந்தம்: (திருக்கோவிலூர் வட்டம்) இங்குள்ள ஒரு சிறுகுன்றின்மேல் சிதைந்துபோன சென்னியம்மன் கோவில் என்னும் சமணக்கோவில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி.பி.1550-இல்) விஜயநகர அரசர் அச்சுததேவமகாராயர் காலத்தில் எழுதப்பட்டது. இதில் ஜோடிவரி, சூலவரி என்னும் வரிப்பணத்தை ஜம்பையிலிருந்த நாயனார் விஜயநாயக்கர் கோவிலுக்குத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது. இதில் கூறப்படும் ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்தலுக்கு ஒரு மைல் தொலைவில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று, பரகேசரி வர்மனின் (பராந்தகன்) 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. வாலையூர் நாட்டுப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோவிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்வதை இது கூறுகிறது. இதற்கு அப்பால் ஒரு மைலில் உள்ள ஒரு வயலில் இராசராசசோழனின் சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில் கண்டராதித்தப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோவில் குறிப்பிடப்படுகிறது. அன்றியும் கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமிநாதர் என்பவரின் உத்தரவை (கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால் ஜம்பை என்று கூறப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒருபகுதி சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்னும் பெயர்உடையது என்பதும் இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம்புகுந்தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும். அஞ்சினான்புகலிடம் என்பது அடைக்கலதானத்தைக் குறிக்கும். சமணர் ஆகாரதானம், ஒளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம் என்னும் இந்நான்கு தானங்களைச் சிறப்பாகக்கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமணநூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கலதானத்தைத்தான் அஞ்சினான் புகலிடம் என்று இந்தச் சாசனம் கூறுகின்றது.
சோழவாண்டிபுரம்: (திருக்கோவிலூர் வட்டம்) இங்கே கீரனூர் என்னும் சிற்றூரில் பஞ்சனாம் பாறை எனப்படும் கற்பாறைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்கு பண்டைக்காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர். சோழவாண்டிபுரத்தில் உள்ள ஆண்டிமலையில் 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலிகொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள தேவாரத்தை (கோவில்) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப்பாறையில் பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர். இங்குள்ள மற்றொரு சாசனம் சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டிக்கடவுளுக்கும் அருகக்கடவுளுக்கும் மாதவருக்கும் தானம்செய்ததைக் கூறுகின்றது. தானம்கொடுக்கப்பட்ட இவ்வூரைக் குரந்திகுணவீரபடாரரும் அவர் வழி மாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது. இதில் தானம்செய்த சித்தவடவன் என்பவர் வேலிகொங்கராயர் புத்தடிகள் என்று பெயர்பெறுவார். கோவல்நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலையகுலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே வேளிர்கொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர் சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும் பாரி குடும்பத்தில் பெண்கொண்டவர் என்றும் கூறப்படுகிறார் (ஓரி, பாரி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடைஏழு வள்ளல்களைச் சேர்ந்தவர்). இராஷ்டரகூட அரசன் கன்னரதேவர் காலத்தில் (10-ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சக்திநாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மந்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வூருக்கு அருகில் உள்ள தேவியகரம், எலந்துரை என்னும் ஊர்களிலுள்ள பார்சுவநாதர் முதலிய சமணஉருவங்கள் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சமணக்கோவில்களும் இருந்தசெய்தி சாசனங்களால் அறியப்படுகின்றன.
திருக்கோவிலூர் திருவீரட்டனமுடைய தேவருக்குரிய நிலம் தானம்செய்யப்பட்ட சாசனத்தில் பள்ளிச்சந்தமாகிய இயக்கிப்பட்டி குறிக்கப்படுகிறது. இதில் இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷிக்குத் தானம்செய்யப்பட்ட நிலத்தைக்குறிக்கும். இயக்கி யக்ஷி என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்றாகும். திருக்கோவிலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் நிலத்தைக்குறிக்கும் சாசனம் ஒன்று குளவிகுழி பள்ளிச்சந்தம் என்னும் நிலத்தைக்குறிக்கிறது. சிதம்பரத்துச் சாசனங்கள் திருவம்பலப்பெரும்பள்ளி நல்லூர் என்னும் ஊரையும் ஆற்றூரான ராஜாராஜ நல்லூரில் இருந்த பள்ளிச்சந்த நிலங்களையும் குறிப்பிடுகின்றன. திருவண்ணாமலைச் சாசனம் மதுராந்தக வளநாட்டு ஆடையூர்நாட்டு ஆடையூர் வடக்கில் ஏரி கீழ்பார்க்கெல்லை பள்ளிச்சந்தம் நிலங்களைக் குறிக்கின்றது. இன்னொரு சாசனம் தச்சூர் பள்ளிச்சந்தத்தைக் குறிக்கின்றது. இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக்கோவிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.
கொலியனூர்: (கோய்லனூர் என வழங்கும்). இது விழுப்புரம் வட்டத்தில் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக்கோவில் இங்கு உள்ளது. இங்கு சாசனங்களும் காணப்படுகின்றன. கோலியபுரநல்லூர் என்பது இதன்பழையபெயராகும். ஸவஸ்தி ஸ்ரீ நயினார் தேவர்பெருமானார் ஸ்ரீ கோவில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது. காளியுக்திஷ ஆனிமீ 10 ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ அசுரநாராயண தியாகசமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்லதம்பி முதலியார், பெரியதம்பியார், கொலியாபுர நல்லூர் நயினார் அருள்மொழி நாயகர் கோவில்பூசை திருப்பணிக்குப் பூருவமாக வடக்குவாசலில் மேற்கே உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திராதித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக்கொன்ற பாவத்திலும் போகக்கடவன் என்று ஒரு சாசனம் கூறுகிறது.
ஜினசிந்தாமணி நல்லூர்: விருத்தாசலம் வட்டம். இவ்வூர்ப்பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைத் தெரிவிக்கிறது.
வேடூர்: விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள சமணக்கோவில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.
எள்ளானாசூர்: திருக்கோவிலூர் வட்டம். திருக்கோவிலூருக்குத் தெற்கே 161/2 மைல் தொலைவில் உள்ளது. ஒரு பழைய சமணர்கோவில் இங்கு உள்ளது.
செஞ்சி: செஞ்சிக்கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன(Annul Report of Arch. Dept.Southern Circle madras.1912 – 1913:P.7), (வேங்கடசாமி,2003:144-152).
தற்போதுள்ள சமணஊர்களும் சமணரும்
சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி
சிங்கைவைகை திருப்புறம்பை அருகை தாசை
சினகிரிவண் தீபைசித்தை வீரை கூடல்
செஞ்சிமுத லூர்பேரை விழுக்கம் வேலை
கனகபுரி இளங்காடு துரக்கோல் வளத்தி
கன்னிலம்தச் சூர்குழசை வாழ்நாற் பாடி
வினிவிருதூர் வெண்குன்ற மோடாலை யாமூர்
விடையெய்யில் குறக்கோட்டை விளங்குங்
காப்பே
என்னும் செய்யுள் ஸ்ரீஆதிநாதர் பிள்ளைத்தமிழ்க் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத்துள்ள சமணர் ஊர்கள் கூறப்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. திருசாஸ்திரம் அய்யர் என்னும் சமணப்பெரியார் ஒருவர் ஜைனசமய சித்தாந்தம் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார் என்று சீனி. வேங்கடசமி குறிப்பிடுகிறார் (2003:195). இக்கட்டுரை இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் (1841) அச்சிடப்பட்ட வேதஅகராதி எனும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதை சீனி.வேங்கடசாமி கோடிட்டுக் காட்டுகிறார் (2003:195).
சமணர்களுடைய தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும் தீபங்குடி என்றும் சிற்றாமூர் என்றும் பெருமண்டூர் என்றும் இராசமகேந்திரம் என்றும் மேற்கே காஞ்சிபுரம் என்றும் திருப்பருத்திக்குன்றம் என்றும் பெரிகுளம் என்றும் மூடுபத்திரை என்றும் ஸ்ரீரங்கப்பட்டணம் என்றும் கனககிரி என்றும் காட்டியிருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரியமடமும் உள்ளது. இதனால், இவ்வூர்கள் சமணச்சிற்றூர்கள் என்பது விளங்கும். சமண ஊர்களின் ஜாபிதா என்னும் கையெழுத்து ஏட்டுச்சுவடி ஒன்று உள்ளது. இந்த நூலின் இறுதியில் இந்த ஜாபிதா சகாத்தம் 1738-இல் எழுதிக்கொடுத்த கய்பீத்து என்று காணப்படுவதால், இது கி.பி.1819-இல் எழுதப்பட்டதாகும். அதாவது 188 ஆண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டது. இந்நூலில் இக்காலத்துள்ள சமணர் ஊர்களின் பெயர்களும் கோவில்கள் எத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளது. அவற்றைக் கீழ்வருமாறு காணலாம். இருபிறைக்குறிக்குள் ந.கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக்கோவிலையும் இ.கோ. என்பது இடிந்து பாழ்பட்டுள்ள சமணக்கோவிலையும் குறிக்கும்.
துண்டீரதேசம் (தொண்டைமண்டலம்)
செஞ்சி, சேத்துப்பட்டு, துக்கிடி ஆகிய பகுதிகளில் உள்ள சமணச்சிற்றூர்களை சீனி.வேங்கடசாமி (2003:196 – 200) குறிப்பிட்டுள்ளார். இதனைப் பின்வருமாறு காணலாம். சித்தாமூர் (ந.கோ.3), தாயனூர், ஒதலபாடி, கோழப்புலியூர் (கொழப்பலூர்) (ந.கோ.1), கோனாமங்கலம், பெருங்குண நல்லூர், துளி, தச்சாம்பாடி, எய்யல், சிண்டிப்பட்டு, மலையனூர், தொறப்பாடி (ந.கோ.1), கொசப்பட்டு, கொமியாங்குப்பம், சீயப்பூண்டி, செவளாம்பாடி, கன்னலம் (ந.கோ.1), வளத்தி, அண்ணமங்கலம், கள்ளப்புலியூர் (ந.கோ.1), மஞ்சப்பட்டு (ந.கோ.1),கெளத்தூர் (ந.கோ.1), கென்னாத்தூர் (ந.கோ.1), திருவாபாடி, சிற்றருகாவூர் (ந.கோ.1), புளிமாந்தாங்கல், தொண்டூர் அருகன்பூண்டி, வீரணாமநல்லூர், எளமங்கலம (இ.கோ.1), அகரம், குறவன்புத்தூர் (பெரும்புகை), பெருமுகை (ந.கோ.1), சிறுகடம்பூர் (இ.கோ.1), சக்கிரபுரம், வடதரம், வயலாமூர் (ந.கோ.1), மொழியனூர், பேரணி, செண்டியம்பாக்கம்.
திருவோத்தூர் துக்கிடி: கரந்தை (ந.கோ.3), திருப்பறம்பூர் (ந.கோ.1), வள்ளை பெருங்கட்டூர், நாகல், நறுமாப்பள்ளம், வேளியநல்லூர், பனபாக்கம், நெல்லி, கரையூர் மேலப்பயந்தை வாழைப்பந்தல் (இ.கோ.1), கோயிலாம்பூண்டி (இ.கோ.1), தின்னலூர்.
வந்தவாசி துக்கிடி: கடனம்பாடி (இ.கோ.1), இராமசமுத்திரம், நெல்லியாங்குளம், எறமனூர், நல்லூர், வில்லிவனம், கூடலூர் (இ.கோ.1), தெள்ளாறு (இ.கோ.1), கூத்தவேடு, அகரகுறக்கொட்டை, விருதூர், பெரியகொறக்கொட்டை, சென்னாந்தல், செங்கம், பூண்டி, புத்தூர், பொன்னூர் (இ.கோ.1), இளங்காடு (ந.கோ1), சிந்தகம்பூண்டி, சாத்தமங்கலம் (ந.கோ.1), வங்காரம் (இ.கோ.1), அலகரம் பூண்டி, வெண்குணம், சேந்தமங்கலம் (ந.கோ.1), எறும்புர், நல்லூர், ஆயில்பாடி, பழஞ்சூர்.
திண்டிவனம் துக்கிடி: பெருமண்டை (ந.கோ.2), வேம்சூண்டி, ஆலக்கிராமம், இரட்டணை, விழுக்கம் (ந.கோ.1), எடையாலயம் (ந.கோ.1), கள்ளகுளத்தூர் (இ.கோ.1) வேலூர் (ந.கோ.1), வெள்ளிமேடு (அபிஷேகம் இல்லாத கோவில்.1), நெமிலி.
வழுதாவூர் துக்கிடி: மானமாவேலி, கரடிபாக்கம்.
எலவனாசூர் துக்கிடி: திருநறுங்கொண்டை (ந.கோ.1; இ.கோ.1), ஆக்கனூர், இருவேலிப்பட்டு.
திருக்கோவிலூர் துக்கிடி: வீரசோழபுரம், விளந்தை, கூவம், சாங்கியம், முட்டத்தூர்.
திருவண்ணாமலை துக்கிடி: பென்னாத்தூர், மலையனூர், சிறுகொற்கை, சோமாசிபாடி, கொளத்தூர்.
போளூர் துக்கிடி: இரண்டேசரிபட்டு, குண்ணத்தூர் (ந.கோ.1; இ.கோ.1), காப்பலூர், மண்டகொளத்தூர், திருமலை (ந.கோ.1; இ.கோ.4).
ஆரணி சாகீர் துக்கிடி: திருமலைசமுத்திரம் (ந.கோ.1), ஆரணிப்பாளையம் (ந.கோ.1), புதுக்காமூர், நேத்தபாக்கம் (இ.கோ.1), பழங்காமூர், பூண்டி (ந.கோ.2), அறையாளம், நெல்லிப்பாளையம், மெருகம்பூண்டி, சேரி (இ.கோ.1), தண்டு குண்ணத்தூர், அக்கிராபாளையம், சென்னாந்தல் (ந.கோ.1), விராதகண்டம், மேட்டுப்பாளையம், தச்சூர் (ந.கோ.1) பில்லூர், ஒண்ணுபுரம்.
மேலைச்சேரி சாகீர் துக்கிடி: தேசூர் (ந.கோ.1), சீயமங்கலம், தெறக்கோவில் (ந.கோ.1; இ.கோ.1).
பழைய கும்பினி சாகீர் துக்கிடியில்: மேலத்திப்பாக்கம் (ந.கோ.1), ஆர்ப்பாக்கம் (இ.கோ.1), பெரும்பாக்கம், பூச்சிபாக்கம், நரியம்புத்தூர், மருதம், காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம் (ந.கோ.2), தாங்கி (மாகறல், பொன்னகரி என்னும் கிராமங்களில் இரண்டு சமணக்கோவில்கள் பழுதுண்டு கிடக்கின்றன).
கொலியநல்லூர் சாகீர் துக்கிடி: கஸ்பா (இ.கோ.2), கொலியநல்லூர், அகலூர் (ந.கோ.1), (கோலிய நல்லூரில் பண்டைக்காலத்தில் சமணருக்கும் இந்துக்களுக்கும் கலகம் நடந்து சமணர் துன்பமடைந்தனர் என்று தெரிகிறது. இந்நூலில் இக்கலகத்தைப் பற்றி எழுதியுள்ளபகுதி சிதைவுபட்டுக்கிடப்பதால் முழுச்செய்தியையும் அறியமுடியவில்லை. கொலியநல்லூர் அக்கி மஹமது சாகீர் கஸ்பா கொலியநல்லூரில் பூர்வீகம் ஜைனான் … அந்தச் சிற்றூரில் புருஷாள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம்…ஸ்திரிகள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம் 1…பிரசித்தமாய் அபிஷேகம்நடந்துவருகையில் செஞ்சியில் மாதங்கள் அதிகாரம் பண்ணுகையில் சமணமார்கத்தின்பேரில் துவேஷமாயி … போது கொலியநல்லூரில் வஸ்து ஜைனள் … க்ஷீணிச்சபோய் சிறு பேர்களிருந்தார்கள். அந்த மாதங்கள் நாளையில் 3 ஜினாலயம் … எடுபட்டுப்போச்சுது… என்று சிதைவுபட்டபகுதியில் காணப்படுகிறது (வேங்கடசாமி, 2003 : 196 – 199).
தொண்டைநாட்டில் முந்தைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதும் சமணர் அதிகமாக வாழுகின்றனர். ஆர்க்காடு, போளூர், வந்தவாசி வட்டங்களில் இவர்கள் அதிகமாக உள்ளனர். சமணர்கள் நயினார், உடையார், முதலியார், செட்டியார், ராவ், தாஸ் என்னும் பட்டபெயர்களைச் சூட்டிக்கொள்கிறார்கள்; நெற்றியில் சந்தனம் அணிகிறார்கள்; அகலமான நீண்டகோடாக அணிகிறார்கள்; பூணூலும் அணிகிறார்கள்; பிராமணரைவிட உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்; மாமிச உணவு புசிப்பதில்லை; இரவில் உணவு கொள்ளமாட்டார்கள். ஆகவே, அவர்கள் சூரியன் மறைவதற்குள்ளாக உணவு உட்கொள்கிறார்கள். சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், கலைமகள்பூசை முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். சமணக்கோயில்களின் அமைப்பு, சைவ வைணவக்கோவில்களின் அமைப்புப்போலவே உள்ளது. ஆனால், இந்தக் கோவில்கள் மிகச்சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. கோவில்களில் மூலவர் என்றும் உற்சவமூர்த்தி என்றும் திருவுருவங்கள் உள்ளன. சாஸ்தா, இயக்கி முதலிய பரிவாரத்தெய்வங்களின் உருவங்களும் இக்கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளவர் அனைவரும் திகம்பரசமணர். எனவே, இக்கோவில்களில் உள்ள திருமேனிகள் திகம்பர உருவமாக (ஆடையில்லாமல்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பரிவாரத்தெய்வங்கள் ஆடை உள்ளனவாக அமைக்கப்படுகின்றன. அருகக்கடவுள் அல்லது தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் நின்றகோலமாகவும் வீற்றிருக்கும் கோலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ, பெளத்தக்கோவில்களில் சில இடங்களில் கிடந்த (படுத்த) வண்ணமாகக் காணப்படுகிற பள்ளிகொண்ட திருவுருவங்களைப்போலச் சமணத்திருவுருவங்கள் கிடந்தவண்ணமாக அமைக்கப்படுவது இல்லை. சமணக் கோவில்களில் நாள்தோறும் காலை மாலைகளில் வழிபாடு நடைபெறுகிறது. சைவ வைணவக்கோவில்களில் நடைபெறுவதுபோலவே அபிசேகம், தீபஆராதனை, அர்ச்சனை முதலியவை சமணக்கோவில்களிலும் நடைபெறுகின்றன. வடமொழியில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. ஆண்டுதோறும் சமணக்கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது உண்டு. அவர்கள் உற்சவகாலத்தில் உற்சவமூர்த்திகளையும் பரிவாரத்தெய்வ உருவங்களையும் விமானத்திலும் வாகனங்களிலும் எழுந்தருளச்செய்கிறார்கள். சமணமூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும்போது அம்மூர்த்திகளுக்கு முன்னர்த் தருமச்சக்கரம் எழுந்தருளும். சைவ வைணவக்கோவில்களில் முறையே திரிசூலமும் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளுவதுபோல ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்த முக்குடைகளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார். பண்டைக்காலத்தில் பாடலிபுரம் (கடலூர்), ஜினகாஞ்சி (காஞ்சிபுரம்) முதலிய இடங்களில் சமணர்களின் மடங்கள் இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சமணர்களின் மடம் சித்தாமூரில் உள்ள மடம் ஒன்றுதான். சித்தாமூர் முந்தைய தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் இருக்கிறது. சித்தாமூர், வீரனாமூர், விழுக்கம், பெருமாண்டூர், ஆலக்கிராமம், வேலூர், தாயனூர் முதலிய ஊர்களில் இருக்கும் சமணர்கள் சேர்ந்து சித்தாமூர் மடத்துத்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மடத்துத் தலைவருடையபெயராவது டெல்லி கொல்லாபுர ஜினகாஞ்சி பெனுகொண்டா சதுர் சித்த சிம்மாசனாதீஸ்வர ஸ்ரீமத் அபநவ லக்ஷ்மீ சேனபட்டாரகப் பட்டாசாரிய வர்ய சுவாமிகள் என்பதாகும். சமணர்கள் வியாபாரிகளாகவும் கொடைவள்ளல்களாகவும் பயிர்த்தொழில் செய்பவர்களாகவும் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களாகவும் பல தொழில்செய்கிறார்கள். வடநாட்டுச்சமணரைப்போலத் தமிழ்நாட்டுச்சமணர் பெருஞ்செல்வம் உடையவர் அல்லர். தற்பொழுது இவர்களில் சிலர் சைவ சமயத்தலைவராக மாறிவருகிறார்கள் (வேங்கடசாமி,2003 :199-200).
திருப்பருத்திக்குன்றம்
காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் சிறப்புற்று விளங்கும் சமணத்தலம் ஜினகாஞ்சி என அழைக்கப்பெறும் திருப்பருத்திக்குன்றமாகும். இத்தலம் கி.பி.6-ஆம் நூற் றாண்டிலிருந்து சமணசமயம் முக்கியத்துவம்வாய்ந்த தலமாகத் திகழ்கிறது. பல்லவர் ஆட்சியின்போது தோற்றுவிக்கப்பட்ட மகாவீரர்கோவில் படிப்படியாக விரிவாக்கம்பெற்று வளர்ந்திருப்பதைக் காணலாம். இக்கோவில் சோழர்காலத்திலும் விசயநகர மன்னர்களது ஆட்சியின்போதும் அதற்குப்பின்னரும் பல்வேறு தானங்களைப் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலுள்ள நான்கு வித்தியா ஸ்தானங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டுவந்திருக்கிறது (சீதாராம் குருமூர்த்தி,2008:164).
வர்த்தமானர்கோவில்
திருப்பருத்திக்குன்றத்திலுள்ள வர்த்தமானர்கோவில் பெரிய அளவில் பல்வேறு கருவறைகளையும் மண்டபங் களையும் கொண்டு தற்போது விளங்குகிறது. இதில் மூலவராகிய மகாவீரர், புஷ்பதந்தர் மற்றும் தருமதேவி ஆகியோருக்கும் பத்மபிரபா, வசுபூஜ்யர், பார்சுவநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களுக்கும் இரண்டு தொகுதிகளாகக் கருவறைகள், அர்த்தமண்டபங்கள், முகமண்டபங்கள் காணப்படுகின்றன. முதற்தொகுதி கருவறைகளைக் (மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி) கொண்ட கட்டட அமைப்பினைத் திரைலோக்கியநாதர்கோவில் எனவும் இரண்டாவது தொகுதியினைத் திரிகூடபஸ்தி எனவும் பொதுவாக அழைப்பது மரபாகும். இவை இரண்டிற்கும் பொதுவாக மகாமண்டபமும் அதனையடுத்து பலிபீடம், மானஸ்தம்பம் ஆகியவையும் காணப்படுகின்றன. இவையன்றி திருச்சுற்றுமதிலைஒட்டி பிரம்மதேவர், ரிஷபநாதர் ஆகியோரது கருவறைகளும் ஐந்துமுனிவர்களுக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட முனிவாசமண்டபங்களும் தானியச்சேமிப்பு அறையும் உள்ளன. திருச்சுற்றுமதிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளவாயிலில் மூன்று நிலைகளைக்கொண்ட கோபுரம் காணப்படுகிறது (சீதாராம் குருமூர்த்தி, 2008 : 164 – 165).
திரைலோக்கியநாதர்கோவில்
மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரது கருவறைகள் கொண்ட கட்டிட அமைப்புத் திரைலோக்கியநாதர்கோவில் எனப்படும். இக்கோவிலின் மூன்று கருவறைகளுள் காலத்தால்முந்தியது மகாவீரர் கருவறையும் அதற்குமுன்பாக உள்ள அர்த்தமண்டபமும் முகமண்டபமும் ஆகும். இங்கு பல்லவமன்னனாகிய சிம்மவர்மனது (கி.பி.556) ஆட்சிக்காலத்தில் முதன்முதலாகக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது மகாவீரருக்கு மட்டுமென கோவில் எழுப்பப்பட்டதால், இது வர்த்தமானீஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் இது கருங்கல் கட்டிடமாகத்திகழவில்லை. செங்கல்லால் கட்டப்பெற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. காலப்போக்கில் இது பழுதுபட்டதால், முதல் குலோத்துங்கசோழன் காலத்தில் (கி.பி.1070 – 1120) புதியதாகத் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள கருவறை வட்டவடிவ பின்புறத்தினைக்கொண்ட தூங்கானை மாட (கஜபிருஷ்டம்) அமைப்பில் உள்ளது. இது செங்கல், சுண்ணாம்புச்சாந்து ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவை கருங்கல்லாலான அடித்தலத்தையும் மணற்கல்லாலான மேற்குப்பகுதியையும் கொண்டு விளங்குகின்றன. இவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியில் மிளிர்கின்றன. இந்த மண்டபங்களிலூள்ள தூண்களும் கல்வெட்டுக்களும் முதல் குலோத்துங்கன் காலத்தவையாகும் (சீதாராம் குருமூர்த்தி, 2008 : 165).
சங்கீதமண்டபம்: திரைலோக்கியநாதர்கோவில் திரிகூடபஸ்தி ஆகியவற்றின் முகமண்டபங்களுக்கு முன்பாக பெரிய அளவில் 61 அடிநீளமுள்ள மகாமண்டபம் கட்டப் பட்டிருக்கிறது. இதனைச் சங்கீதமண்டபம் என அழைப்பது வழக்கமாகும். இதில் பல்வேறு அமைப்புகளைக்கொண்ட இருபத்தினான்கு தூண்கள் உள்ளன. இத்தூண்கள் அனைத்தும் விஜயநகரகாலக் கலைப்பாணியில் திகழ்கின்றன. இந்தச் சங்கீத மண்டபத்தை இரண்டாம் புக்கன் என்னும் விஜயநகர மன்னனது அமைச்சராகிய இருகப்பா என்பவர் கி.பி.1387 (அல்லது 1388)-ஆம் ஆண்டு கட்டியதாக அறியப்படுகிறது. இவரது சிற்பம் ஒன்று சங்கீதமண்டபத்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சங்கீதமண்டபத்தின் கூரையில் ஏராளமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஓவியங்களில் பெரும்பான்மையானவை மறைந்து விட்டபோதிலும் வர்த்தமான மகாவீரருடைய வாழ்க்கை வரலாறு தொடர்புடைய சில சித்திரங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. இவை காலம் செல்லச்செல்ல அழிந்தமையால் கி.பி.17-ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசர்கள் ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஓவியங்கள் வரையப் பட்டிருக்கின்றன. இவ்வாறு இம்மண்டபத்தில் இரண்டு காலங்களைச் சார்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன (சீதாராம் குருமூர்த்தி, 2008 : 165 – 166).
துணைநூல் பட்டியல்
சீதாராம் குருமூர்த்தி., 2008, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு, சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி – 6, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 1, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 4, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, சமயங்கள் வளர்த்த தமிழ், சென்னை: எம். வெற்றியரசி.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 5, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, சமணமும் தமிழும், சென்னை: வசந்தா பதிப்பகம்.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 2, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2004, பெளத்தமும் தமிழும், சென்னை: நாம் தமிழர் பதிப்பகம்.
annaiyappan.s.a@gmail.com
*கட்டுரையாளர் – முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. –