விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.
சங்க காலத்தை ஆண்ட அரசன், வள்ளல், வீரன் பற்றிய செய்திகள்
நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும் அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் தம் நாட்டு மக்களுக்காக எதிரி நாட்டுடன் போர் புரிந்துப் பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி வறியவர்களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும் தம் மக்களையும் செழுமையுடனும் சீரும்சிறப்புமாக வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின்வழி அறியமுடிகிறது.
தித்தன் என்னும் சோழ மன்னன் உறையூரை ஆட்சி செய்தான் என்பது “வீரை வேண்மான் வெளியன் தித்தன்” (நற்.58) என்னும் பாடலடி விளக்குவதைப் பார்க்க முடிகிறது. மேலும்,
“எழுது எழில் சிதைய அமுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்” (நற்.379) என்ற பாடலடி தலைவியின் கண்களுக்கு சோழனின் குடைவாயிலில் உள்ள ஊரில் இருக்கின்ற நீல மலரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.அதுமட்டுமன்று,தலைவியின் கைகள் சிவந்திருத்தலைப் பாண்டிய மன்னனின் பொதியலில் பூத்த காந்தள் மலரைப் போன்று சிவந்தன என,
“மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே” (நற்.379)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.சோழன் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையும் கொண்டவர் என்று “படுமணி யானைப் பசும்பூட் சோழர்”(நற்.227)என்னும் பாடலடி விளக்குகின்றது.இப்பாடல்களின் வழி மன்னர்கள் சங்க காலத்தை ஆண்டு வந்தனர் என்றும் அவர்கள் செல்வ செழிப்புடன் நாட்டை வளர்த்தும் வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது.
வள்ளல்களின் கொடைத்திறம்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன் தன்னை நாடி இரவலர் வரும்போது அவர்களுக்கு யானைகளைக் கொடையாக வழங்கி இருக்கிறார் என்ற செய்தி,
“இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து கொடுத்த யானை போல” (நற்.237) என்னும் பாடலடிகளில் காணலாம்.மேலும், இரவலர்கள் அவரிடம் தேரினைப் பரிசாகப் பெற்றமையை, “விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்” (நற்.167)என்ற பாடலடியின் மூலம் அறியலாம். அதுமட்டுமன்றி காரி என்பவர் இரவுப் பொழுதில் குதிரை மீதேறிச் சென்று ஆநிரைகளைக் கூட்டமாகக் கொண்டுவந்தனர் என்பதை,
“மாஇரு முள்ளுர் மன்னன் மாஊர்ந்து
எல்லித் தரீஇய இனநிரைப்
பால் ஆன் கிழவரின் அழந்த இவள் நிலனே” (நற்.291)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.மேலும் தினைப்பயிரை வரையாது கொடுப்பவனின் வள்ளன்மை கருதிவரும் பரிசிலரைப் போல் கிளிகளும் வந்து உண்ணும் என்று,
“இறைஞ்சிய குரல்பைந் நாட்செந்தினை
வரையோன் வண்மைபோல”(நற்.376)
என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.இவ்வாறு வள்ளல்கள் கொடைத்திறம் கொண்டு மக்களை மகிழ வைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
காவல்
மிஞிலிஎன்னும் வீரர், வீரர்களின் பொலிவுடைய தோளில் கவசமுடையவனாகவும் அவன் பாரம் என்னும் ஊரினைக் காக்கக் கூடியவனாகவும் விளங்கியமையைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
“பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரந்து அன்ன மார்பின்” (நற். 265)
இவ்வாறு அரசர்களும் வள்ளல்களும் வீரர்களும் தம் மக்களையும் நாட்டையும் காக்கும் கடமையில்தவறாது இருந்திருக்கிறார்கள்.இவர்கள் நாட்டைக் காக்கும் கருவியாகப் பயன்படுத்திய ஆட்சித் திறம், வீரம், கொடை முதலியன புற விழுமியங்களாகும்.
பாதீடு
சங்க கால மக்கள் தங்களிடம் கிடைத்தப் பொருளைக் கூறுகட்டி பாதீடு செய்தார்கள்என்பதை,
“பிணச்சுவர் பன்றி தோல் முலைப் பினவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும்புகழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கொண்டி
குடிமுறை பகுக்கும் நெடு மலை நாட” (நற்.396)
என்னும் பாடலின் வழி அறியமுடிகிறது.எல்லாம் தனக்குத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நவீன காலத்தில் சங்க கால மரபான ‘பாதீடு’ பேரறமாக என்றும் போற்றக் கூடிய ஒன்றாக உள்ளது.இதனை எக்காலத்திற்கும் உரிய விழுமியப் பண்பாகும்.
வாய்மை
வாய்மை என்பது சொல்லிய சொல்படி உண்மையாக நடந்து கொள்ளுதல் குறிப்பாகஇதனைஆணுக்குரிய அறமாக நற்றிணைப் பாடல் காட்டுகின்றது.
“நின்ற சொல்லர், நீடு தோறு இனியர்” (நற்.1)
“அம்ம வாழி, தோழி, காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே” (நற்.289)
என்ற பாடலடிகள் ஆணுக்குரிய குறிப்பிடத்தக்க அறம் வாய்மை என்று கூறுகின்றது.
இச்செய்தி பெண்களின் வாயிலாகச் சுட்டப்படுவதால் ஆண்களுக்கான அறச் செயலை வலுப்படுத்திக் காட்டுகிறார் புலவர்.
“சொன்ன சொல்லைக் காப்பது வாய்மை; காவாதது பொய்மை. வாய்மை பொய்மை என்ற நன்மை – தீமை மதிப்பீட்டு வாய்ப்பாட்டின் அடியொற்றிப் பேச்சின் அறங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்திட முடியும்” என்று தலித் சமூகத்தில் அறமும் ஆற்றலும் நூலில் (பக்.44) ராஜ்கௌதமன் கூறியுள்ளார்.
நிலையாமை
நிலையாமை ஒன்றே நிலையானது என்று அறிஞரின் கூற்றிற்கேற்ப மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானவைகளுடன் மனிதனும் நிலையற்றுப் போவது உண்மை.இளமை நிலையற்றது என்று பின்வரும் பாடல் மூலம் காணலாம்.
“இறந்த செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை” (நற்.126)
“முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை” (நற்.314)
ஆகிய பாடலடிகள் முதுமை அழிந்த இளமையை எய்துவது என்பதில்லை.எனவே ‘குறித்த பருவத்தைப் பயிர் செய்’ என்ற கூற்றிற்கேற்ப இளமையைச் சரியான காலங்களில் பயன்செய்து கொள்ள வேண்டும் என்று இளமை சார்ந்த விழுமியம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சான்றோர் செல்வம்
நிலையற்றுப் போகும் செல்வத்தின் மதிப்பீட்டினை வைத்து ஒருவரிடம் பழகுவதும் மரியாதை கொடுத்தலும் சமூகச் சிக்கலாகி வருகின்றன.
“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தார்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் என்பதுவே” (நற்.210)
சான்றோர் செல்வமே செல்வம் என்ற உட்பொருளைக் கொண்டு தன்னை ஆதரவாகக் கருதி வந்தவரைக் காப்பதுதான் சிறந்த செல்வம் எனக் கூறுகின்றது.இவ்வாறு கூறுவதன் மூலம் பொருளினால் வரும் செல்வம் செல்வமன்று என்று புலவர் உரைக்கிறார்.
பொருள் நிலையற்றது
பொருள் நிலையற்றது என்பதை உணர்ந்து, கிடைத்த பொருளைத் தான் மட்டும் உண்ணாது பிறருக்கும் கொடுத்தளித்தமையை, “பிறர்கென முயலுநர் பேரருள் நெஞ்சமொடு” (நற்.186)என்னும் பாடலடியின் மூலம் பார்க்க முடிகின்றது.இவ்வாறு நிலையாமை என்னும் அற விழுமியம் நற்றிணையில் அமைந்துள்ளது.
நட்பு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன் எத்தனை முறைவேண்டுமானாலும் ஆராய்ந்துப் பார்க்கலாம். ஆனால் நட்பு கொண்டபின் ஆராய்தல் கூடாது என்னும் நட்பின் இலக்கணத்தை,
“அரிய வாழி தோழி – பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்.32)
என்ற பாடலடிகளின் வழி அறிய முடியும்.மேலும் நட்பில் சிறு ஐயம்கூட நேராதபடி நடக்கும் நட்பு முதன்மையான நட்பாகும் என்று கூறுவதை,“ஒன்றுதும் என்ற தொன்றுபட நட்பின் காதலர்” (நற்.109)என்ற பாடலடியின் வழி அறியலாம்.இந்நட்பு அக்காலத்திலே சமூகத்தில் விழுமியமாக இருந்திருக்கின்றதைப் பார்க்க முடிகின்றது.
மனித நேயம்
உலகிற்குத் தேவையான பண்புகள், ஒரு நாட்டிற்குத் தேவையான பண்புகள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான பண்புகள், தனிமனிதர்களுக்குத் தேவையான பண்புகள் எனப் பண்புகள் பல வகைத் தன்மைகளில் அமைந்துள்ளன.
“மனித நேயம் என்பது மனிதன் மனிதனை மதித்துச் செல்லும் அன்பு” என்று மணவழகள், பண்டையத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, என்னும் நூலில் (ப.14) கூறியுள்ளார். மனித நேயத்தைத் தவமிருந்து பெற வேண்டியதில்லை, வருந்தி வரவழைக்க தேவையில்லை என்பதை,
“ஆன்றோர் செல்நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளிமே” (நற்.233)
என்னும் பாடலடிகள் காட்டுகின்றன.
தலைவன் இரவுக்குறிக்கு வரும் கொடிய வழியை எண்ணி அஞ்சி அவ்வழியில் வராதே என்று தோழி கூறுவதின் மூலம் அவளின் மனித நேய பண்பினை,
“நீர் அடு நெருப்பின் தனிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே, சாரல்
விலங்கு மலை ஆர் அறு உள்ளுதொறும்
நிலம் பரந்து ஒழுகும். என் நிறை இல் நெஞ்சே” (நற். 154)
என்னும் பாடலடிகளின் வழி அறியலாம்.
எவ்வுயிராயினும் தன்னுயிர் போல எண்ணி இரங்குதல் மனித நேயப் பண்பாகவே கொள்ளப்படுகிறது என்பதை, அன்றைய காலச் சூழலில் தான் வளர்த்த புன்னை மரத்தினைத் தன் உடன் பிறந்தாளாக எண்ணும் உயரிய பண்பினை உடைய தலைவியை,
“விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
…………………………………………………….
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே” (நற்.172)
என்ற பாடலடிகள்காட்டுகின்றன.பெற்ற மகளை விட வளர்த்த மரத்தினை உயர்வாக எண்ணிய பழந்தமிழரின் பாங்கினைப் பார்க்க முடிகிறது.இச்செயல்கள் எல்லாம் மனித நேயத்தைப் பறைசாற்றும் விழுமியங்களாகும்.
குலம் பார்க்காமை
இன்றைய சமூகச் சூழலில் நிலவுகின்ற பல்வேறு சிக்கல்களில் குறிப்பிடத்தகுந்த சிக்கலாகக்குலம் பார்ப்பது (சாதி என்ற பெயரில்) விளங்குகிறது.அவ்வாறு பார்ப்பதினால் சமூகத்தில் சீர்கேடும் உயிர் இழப்பும் ஏற்படுகின்றது. இவ்வாறு குலம் பார்க்காமல் அரசர் குலத்தில் பிறந்த மகன் பரதவர் குலப் பெண்ணை விரும்பினான் என்பதை,
“நீல நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே”( நற்.46)
என்னும் இப்பாடலின் வழி அறிய முடிகிறது.இன்றைய சூழலில் இவ்விழுமியம் வரவேற்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கின்றது.
சமயம் குறித்த விழுமியங்கள்
தமிழில் எப்பொழுது இலக்கியம் தோன்றியதோ அதற்கு முன்பே தமிழர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக விளங்கியுள்ளனர்.அம்மக்களின் நம்பிக்கை சார்ந்த மரபாக சமயம் அமைந்துள்ளது. மனிதன் இயற்கை சீற்றங்களைக் கண்டு தன்னை மீறிய சக்தி உள்ளதென்று அதற்கு அஞ்சி அதனைக் கடவுளாக வழிபட்டான்.கடவுள் தீயவற்றிலிருந்து நம்மைக் காப்பவர் என்றும் அதேசமயம் தீய செயல்களைச் செய்தால் நம்மை அழித்திடுவார் என்றும் நம்பி கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர்.இதன் மூலம் சமூகத்தில் எதிர்நிலை விழுமியங்கள் நடைபெறாமலிருக்க சமயம் உந்துதலாக அமைந்தது.
“மரபு வழிபட்ட நம்பிக்கைகள், வாழ்க்கைச் சடங்குகள் இறப்புப் பற்றிய எண்ணங்கள், நல்லன தீயன எனும் பாகுபாடுகள் வாழ்வில் பற்றுவிடுதல் ஆகிய உணர்வுகள் இவை அனைத்தும் உள்ளடக்கியது சமயம்” என்று தமிழ்க் களஞ்சியம் தொகுதி 4 (தமிழ் வளர்ச்சிக் கழகம், ப.452) கூறுகின்றது.
சங்க கால பெண்கள் காதல் கொண்டு அதனால் நோயுற்றதைக் கண்ட தாய் முருகன் தீண்டி அணங்குறுத்துவான் என எண்ணி அவனை அமைதிப்படுத்தும் வகையில் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவாள் என்ற செய்தியை,
“அறியாத அயர்ந்த அன்னைக்கு வெறி என்
வேலன் உரைக்கும் என்ப; ஆகலின்” (நற்.273)
“பலிபெறு கடவுட் பணி, கலி சிறந்து” (நற்.251)
“மின்று நிமிர்ந்தன் வேலன் வந்தென” (நற்.81)
“எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி – வேண்டு அன்ன! கருந்தாள்” ( நற்.351)
என்னும் பாடலடிகளின்வழிக் காணலாம்.மேலும் இறைவன் தங்களைக் காக்கக் கூடியவன் என்று மக்கள் கருதியமையை,“எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்” (நற்.216)என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.
தத்துவம்
சமூக மக்களுக்கு இது சரி; இது சரியற்றது; இதை செய்; இதை செய்யக்கூடாது எனக் கூறுவது தத்துவார்த்தங்கள்.
நம்மில் வந்த ஒருவரைக் கைவிடாதிருத்தல்
தவறு செய்தவர் தண்டனையை அடைய வேண்டும்
தேவையற்று உயிர் துறத்தல் தவறு
எடுத்த செயலை செவ்வனே செய்தல் வேண்டு்ம்
ஆகிய தத்துவங்கள் கீழ்வரும் நற்றிணைப் பாடல்களின் மூலம் காணலாம்.
“தன்பெரும் பரப்பின் ஒன்ப நோக்கி
அங்கன் அரவிலையுனக்கும் துறைவனோடு” (நற்.4)
என்னும் இப்பாடலடிகளின்வழிக் காதல் கொண்ட பெண்ணைக் கைவிடாமல் அவளைத் திருமணம் செய்து கொள்வது விழுமியமாகும் எனச் சுட்டுவதை அறியலாம்.
தலைவன் ஒரு சமயம் தலைவியைப் பிரிவால் நடுங்க வைத்தான் என்பதினால் தலைவியைத் தோழி மற்றொருநாள் மறைந்திருக்க சொல்லி அந்நடுக்கத்தை தலைவனும் உணர வேண்டுமென்று சொல்கிறாள்.
“பூ விரி கானல் புணர் குறி வந்துநம்
மெல் இனர் நறும் பொழில் காணர்
அல்லர் அரும் படர் காண்கம் நாம் சிறிதே” (நற்.307)
என்பதை இப்பாடலடிகள் விளக்குகின்றன. இதன் மூலம் தவறு செய்தவன் தக்க தண்டனையை அடைய வேண்டும் என்ற தத்துவ செய்தியைப் பார்க்க முடிகின்றது.
தலைவனின் பிரிவால் வாடிய தலைவியின் உயிர் நீங்கக் கூடும். அவ்வாறு வீணாக ஒரு உயிர் நீங்குவது தவறு என,
“அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன்உயிர் கழியினும் நனி இன்னாதே” (நற். 227)
என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.மேலும், எடுத்த செயலை நன்கு முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்வதினால் மகிழ்ச்சியடைவர்; இல்லையேல் இகழ்ச்சியடைவர் என்பதை,
“செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
செய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே” (நற்.284 : 8-7)
என்ற பாடலடிகளின் மூலம் பார்க்க முடிகின்றது.இத்தத்துவங்கள் யாவும் மனிதனின் வாழ்வுக்கு அறம் செய்யக் கூடிய விழுமியங்களாகும். இதுவரையிலான நற்றிணைப் பாடல் வழியாகப் பெறப்பட்ட புற விழுமியங்களில் இருந்து, மனித இன அக, புற வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் விழுமியங்கள் ஆற்றும் பங்களிப்பை அறிந்துகொள்ள முடிகின்றது.
பயன்பட்ட நூல்கள்
இராஜ் கௌதமன் – தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், விடியல் பதிப்பகம், கோவை, 2008.
தமிழ் வளர்ச்சிக் கழகம் – தமிழ்க் களஞ்சியம், தொகுதி-4, சென்னை.
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – நற்றிணை நானூறு மூலமும் உரையும், சைவிசத்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை-18. 1952.
மின்னஞ்சல்: rajakavina@gmail.com.
* கட்டுரையாளர் – – கா.கஸ்தூரிபாய்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. –