ஆய்வு: நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும்

முன்னுரை:   
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -தமிழ் இலக்கிய பரப்பில் ஒளவையார் பாடியதாகப் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன.  அந்த வரிசையில் சங்ககாலத் திணைப் பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல், ஞானக்குறள், அசதிக்கோவை, நன்னூற் கோவை, நாண்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனத்தந்தாதி, தனிப்பாடலில் ஒருபாடல், திருவள்ளுவமாலையில்; அமைந்துள்ள ஒரு வெண்பா போன்ற இலக்கியங்களின் ஆசிரியர் ஒளவையார் என்பதாகக் காணப்படுகின்றன.  ஆயினும், இவற்றை ஒருவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஒளவையார் பெயரில் காணலாகும் இவ்விலக்கியங்கள் ஒரே காலட்டத்தைச் சார்ந்ததை அல்ல.  வெவ்வேறு காலகட்டச் சமூக அமைப்பையும், அச்சமூக அமைப்பின் கருத்தியல், பண்பாட்டு இலக்கியக் கொள்கை அமைவுகளுக்கு ஏற்பவும்; அமைந்திருப்பவை.  எனவே இவற்றையெல்லாம் ஒருவரே பாடியதாகக் கொள்ள முடியாது. வேறுவேறு காலத்தில் வாழ்ந்த கவிஞர்களே ஒளவை எனும் பெயரில் எழுதியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும்.  வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தாகக் கருதப்படும் பல ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவை என்பதான சிந்தனைத் தோற்றம் தமிழ்ச் சிந்தனை மரபில் திணிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் ஒளவையார் என்னும் உருவகம் தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து வந்திருப்பதால் ஒளவையார்களை வகைப்படுத்தியும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

ஒளவையார் இத்தனை பேர்தான் என வரையறுப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு.  இருப்பினும், ஒளவைகள் மூவர் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர்.  “சங்க கால ஒளவையார் அகம், புறம் இரண்டையும் அகவற்பாவால் பாடியவராகையால் அவரது பாடல்களில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்பில்லை. இரண்டாம் ஒளவையார் பாடியனவாகக் கருதப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன ஒரே பாடு பொருளை உள்ளடக்கியமையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடமையாலும், தொகுப்பு நூல்களாக அமைந்தவையாலும் அவர் பாடியனவாக ஏற்கத்தக்கன.  மூன்றாம் ஒளவையார் தனிப்பாடல்களைப் படைத்தவராகவும் சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தவராகவும் ஏற்கத்தக்கவராவார்”1 என்ற மு.பழனியப்பன் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  இதன் மூலம் ஒளவையார் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்று வரையறுக்கலாம்.  இதில் அறநெறியும் பக்தியும் பாடிய இடைக்கால ஒளவையாரின் பாடல்களே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

“இடைக்காலத்தே தோன்றிய ஒளவையார், கம்பர், ஒட்டக்கூத்தர் முதலாய புலவர்களோடு சம காலத்தில் வாழ்ந்தவர் என்ற ஒரு கருத்தும் உண்டு.  புலவர் புராணம் என்ற நூலும், தமிழ் நாவலர் சரிதையும் ஒளவையாரைப் பற்றிப் பல சுவையான செய்திகளைக் கூறுகின்றன.  நீதி நூல்களைப் பாடிய ஒளவையார் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்.  இவருடைய காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு என்று அறிஞர் மு.அருணாசலம் குறிப்பிடுகின்றார்.  ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை இவரது காலம் 10ஆம் நூற்றாண்டு என்பார்.  ஒளவையார் சோழ நாட்டில் பாணர் குடியில் பிறந்தவர்.  பாணர்களில் பெண்களைப் பாடினி என்றும் பாட்டியர் என்றும் கூறுவது பண்டைய வழக்கம்.  ‘பாணர் வருக பாட்டியர் வருக’ என்பது மதுரைக் காஞ்சியில் இடம் பெறும் தொடர்.  பின்னாளில் பாட்டி மூதாட்டி எனப் பொருள்படும் உறவு முறை பெயராயிற்று.  இதனாலேயே ஒளவையை கிழவியாகச் சித்தரிக்கின்ற மரபு தோன்றியிருக்க வேண்டும் என்று ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையும், பேரா. ந.சுப்பிரமண்யமும் குறிப்பிட்டு உள்ளனர்”2

சோழர்கால ஒளவையார் பாடிய நூல்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டம்), நல்வழி போன்றவையாகும். நீதி பாடிய ஒளவையார் குறித்த செய்திகள் பல நூல்களில் கூறப்பட்டுத் தொடக்கக் கல்வி வகுப்புகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.  இச்சமூகம் ஒளவையார் படைப்புகளை மட்டும் உயர்த்திப் பிடித்தற்கான காரணத்தை  இந்நிலையில் ஆராய்தல்  அவசியமாகும்.

ஆத்திசூடி :
தமிழின் அகரவரிசைப் படி பாடப்பெற்ற 108 பாடல்களால் ஆனது ஆத்திசூடியில் பல்வேறு நீதிக் கருத்துகளை ஒளவையார் கூறியுள்ளார்.  தொடக்க நீதியாக ஒளவையார் கூறியது அறம்செய விரும்பு என்பதாகும்.  ஆத்திசூடியில் 7 இடங்களில் இவ்வறத்தைப் பற்றியே பாடியுள்ளார்.

“அறம் செய விரும்பு”
“இயல்வது கரவேல்”
“ஈவது விலக்கேல்”
“ஐயம் இட்டு உண்”
“அறனை மறவேல்”
“கிழமைப்பட வாழ்”
“தானமது விரும்பு”            (ஆத்திசூடி:3,4,9,30,34,56)

எனப் பாடியுள்ளார்.  பிறருக்கு உணவளித்தல் முக்கியமான அறம் என கருதி இவ்வாறு பாடியிருக்கலாம்.

பெரியோரிடம் அல்லது சான்றோரிடம், பொதுவாக பிறரிடம் பேசும் போது எவ்வாறு பேச வேண்டும் என்பதை 18 இடங்களில் ஆத்திசூடியில் கூறியுள்ளார்.

“உடையது விளம்பேல்”
“ஞயம்பட உரை”
“சுளிக்க சொல்லேல்”
“நொய்ய உரையேல்”
“வாது முன் கூறேல்”
“வெட்டெனப் பேசேல்”    (ஆத்திசூடி:5,17,48,75,100,105)

என பேசும் விதம் குறித்துப் பல்வேறு இடங்களில் அழுத்திக் கூறியுள்ளார்.  இவைபோக உழவு தொழில் குறித்தும் பிறருடன் பழகும் போது எவ்வாறுப் பழக வேண்டும் என்பதையும் சிறுவர்க்கான நெறிகளையும் ஆத்திசூடியில் பாடியுள்ளர்.  ஆனால் பெண்ணைக் குறித்து பாடும் போது,

“தையல் சொல்கேளேல்”    (ஆத்திசூடி:63)

எனப் பாடியுள்ளார்.  ஒளவையார் பெண்ணாக இருந்தும் பல நூல் கற்றும் பல கவிதைகள் இயற்றியும் உலக அறிவு பெற்றிருந்த போதும் பெண்ணைக் குறித்து இவ்வாறு பாடியமைக்கான காரணத்தினை நோக்கின் ஆண் சமூகத்தின் அதிகார போக்கை உள்வாங்கி பாடியதே எனத்துணியலாம்.

கொன்றை வேந்தன் :
கொன்றை வேந்தனிலும் பெண் குறித்துப் பாடுகின்ற ஒளவையார்,

“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு”
“ஒருவனைப் பற்றி ஓர் அகத்து இரு”
“காவல் தானே பாவையர்க்கு அழகு”
“துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு”
“தூற்றும் பெண்டிர் கூற்று எனத்தகும்”
“பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்”

(கொன்றை வேந்தன்:5,10,15,41,42,66)

என்கிறார்.  ஈண்டு பெண் அதிக உணவு உண்ணக் கூடாது என்பதற்கான காரணத்தினை நோக்குமிடத்து அதிக உணவு உடல் பருமனைக் கூட்டும்.  பெண்ணின் அழகு குறைவதோடு, ஆணுக்காக அவள் பணி செய்ய இல்லாது போய்விடும் என்பதேயாகும்.  இருப்பினும் இதில் முதலில் முக்கியத்துவம் பெறுவது பெண்ணின் அழகே. இது பெண் போகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளாள் என்பதனையே காட்டுகிறது.  இங்கு அவளின் அழகே முக்கியதுவப் படுத்தப்படுகிறது.  இதனாலேயே பெண்ணை உணவை குறைக்கச் சொல்லும் ஆண் ஆதிக்க சமூகச் கண்ணோட்டத்திலேயே இவ்வாறு பாடியுள்ளார்.

ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே ஆண் சமூகம் பெண்ணுக்கு வரையறுத்த கட்டுபாடு.  ஒருவனுக்கு ஒருத்தி எனக் கூறவில்லை, ஆண் சமூகம் வரையறுத்ததை ஒளவையார் இங்கு முன்மொழிந்துள்ளார்.  பெண் ஆணின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் எனும் கருத்தைப் பாடியுள்ளார்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது ஆண் தைரியமாகப் பயமின்றி எதிர்கொள்ள வேண்டும்.  ஆனால் பெண் பயத்துடன் மட்டுமே பிரச்சனைகளைக் காணவேண்டும்.  அவ்வாறு பிரச்சனையைப் பயமின்றி எதிர்கொள்ளும் பெண்ணை அக்கால ஆண் சமூகம் விரும்பவில்லை.  அவள் ஆபத்தனாவள் என எண்ணும் ஆண் சமூகப்போக்கைப் பெண் கவிஞராக இருந்து ஆண் பார்வையில் பாடியுள்ளார்.  ஏனெனில் நாலடியார் பெண் என்பவள் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதனைச் சுட்டியுள்ளது.

“எறியென்று எதிர்நிற்பிற் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ் பேய், இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை”     (நாலடியார்:363)

என்கிறது.  இந்த இலக்கிய மரபு வார்த்த வார்ப்பாகவே ஒளவையார் திகழ்கிறார்.  மனைவி தவறு செய்யக்கூடாது மீறி செய்தாள் அவள் தண்டிக்கப்படுவாள்.  ஆனால் ஆண் தவறு செய்தால் அதை ஏன்? என கேட்கக் கூட அக்காலச் சமூகம் தடை விதித்துள்ளது எனலாம்.  அவ்வாறு கணவனின் தவறைக் கூறும் பெண்ணை எமன் எனச் சித்தரித்துள்ளனர்.  பெண்ணாக இருந்து கொண்டே ஒளவையார் பெண்ணிற்கு பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தனில் பாடியுள்ளார்.

கொன்றை வேந்தனும் ஆத்திசூடி போல்  அகர  வரிசைப்படி அமைக்கப்பெற்று 91 பாடல்களால் பாடப்பெற்றுள்ளன.   “கொன்றை வேந்தன் நான்கு சொற்சீர் கொண்ட முழு அடிகளால் ஆனது.  நாற்சீர் கொண்டது அடியெனப்படும்.  இதனால் ஐந்தில் மட்டும் பொழிப்பு மோனை அமைய எஞ்சிய அனைத்தும் வழியெதுகையமைந்து இன்னிசையை நயம்பட வழங்குகின்றன.  அதனால் ஒருமுறை சொன்னாலே நினைவில் நிற்கும் கட்டமைப்பு முடையதாகிறது”3 என்கிறார் தமிழண்ணல்.

சொன்ன சொல் தவறாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்தைக் கூறவரும் ஒளவையார் ஆண், பெண் இருவருக்கும் இருவேறு நிலையில் நின்று கூறுகிறார்.
“கற்பு எனப்படுவது சொல்திறம்பாமை”    (கொன்றை வேந்தன்:14)

பெண்ணுக்கு எக்காலமும் உயிரை விட மேலானதாக வலியுறுத்தப்படுவது கற்பாகும்.  எனவே சொன்ன சொல் மாறாமல் நடப்பதற்கும் கற்பை முதன்மைபடுத்தினால் அது அவள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதால் கற்பை முன்னிலைப் படுத்திப்பாடியுள்ளார்.

“நிற்க கற்றல் சொல் திறம்பாமை”    (கொன்றை வேந்தன்.50)

ஆணுக்கு எப்பொழுதும் அவன் கற்ற கல்விதான் சிறக்கச் செய்யும் என்பதால் கல்வி முன்னிலைப் படுத்தப்படுகிறது.

ஆண் ஆதிக்க சமூகம் பெண்ணை முன்னிலைப் படுத்துவதற்கு அவளது உடலை மையப் படுத்துகிறது. ஆணை முன்னிலைப்படுத்த அவனது அறிவைப் முன்னிலைப்படுத்துகிறது.  அதுவும் ஒரு பெண்ணின் படைப்பில் வெளிப்படுவது விந்தையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.  ஏனிந்த முரண்பாடு?என நோக்கின் ஆண் சமூக கட்டமைப்புகளை உள்வாங்கி ஏற்றுகொண்டமை என துணியலாம்.

மேலும் உடல் உழைப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகளை தன்னைவிட உருவத்தில் சிறியவரை கேலி செய்தலை தடுத்தல், புலால் உண்ணாமல் இருத்தல் போன்றவற்றை உலகியல் நீதியாகவும், சமூக ரீதியாகவும், தனி மனிதன் குறித்தும் கொன்றை வேந்தனில் பதிவு செய்துள்ளார்.

மூதுரை (வாக்குண்டாம்) :
முப்பது பாடல்களைக் கொண்ட மூதுரை விநாயகர் வணக்கம் வாக்குண்டாம் எனத் தொடங்குகிறது.  இதில் பல நீதிக் கருத்துக்களைப் பாடியுள்ளார்.  சான்றோரின் நற்குணம், அடக்ககுணம், வறுமையிலும் மேன்மை, சான்றோரின் பெருமை, தன்மை, மானம் என சான்றோர் குறித்த செய்திகள் மூதுரையில் பல்வேறு இடங்களில் பாடப்பட்டுள்ளன.

“உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கல்தூண்
பிளந்து இறுவது அல்லால், பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்”        (மூதுரை:6)

அறிவிற் சிறந்த சான்றோர் தன் மானம் இழந்து உயிர் வாழமாட்டார்கள்.

“அடக்கம் உடையார் அறிவு இலர்”என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா, மடைத் தலையில்
ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் அளவும்,
வாடி இருக்குமாம் கொக்கு        (மூதுரை:16)

சான்றோரின் அடக்க குணத்தைக் கண்ட அவர்கள் அறிவில்லதார் என எண்ணக் கூடாது.  அவ்வாறு எண்ணுதல் தோல்வியைத் தான் தரும்.
மேலும் இருவேறுபட்ட உறவினர்களின் தன்மை, கல்வி கற்றோன் சிறப்பு, கல்விஅறிவு இல்லாதான் நிலை, தீயவர்க்கு உதவிசெய்தல் கூடாது.  ஊழ்வினை, வாழ்வின் நிலையாமை என பல்வேறு நீதி கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்களின் வெவ்வேறு தன்மைகளைச் சுட்டுமிடத்து,

“இல்லாள் அகத்து இருக்க, இல்லாதது ஒன்று இல்லை,
இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்கு மேல், அவ் இல்
புலி கிடந்த தூறு ஆய்விடும்”        (மூதுரை:21)

எனப்படுகிறது.  நல்ல மனைவி இருந்தால் வீட்டில் வறுமை இருக்காது.  நல்ல குணம் இல்லாத மனைவி இருந்தும் இல்லாத நிலைதான் ஏற்படும்.  நல்ல மனைவி இருப்பதைக் கொண்டு சிறப்பாக விருந்து செய்வாள்.  தீயவள் இருக்கும் வீடு புலி பதுங்கி இருக்கும் புதர் போல ஆகும்.

ஒரு பெண் நல்லவள் அல்லது தீயவள் என்பது ஆண் சமூகம் கட்டமைத்த மரபுகளின் வழியே தீர்மானிக்கப்படுகிறது.  ஆண் சமூகம் வரையறுத்த மரபுகளை ஏற்று நடக்கும் பெண்ணைப் போற்றி உயர்வாக வைத்து பாடி அவ்வாறு இல்லாத பெண்ணை இழிவாக பேசினால், பெண்கள் அப்பழிசொல்லுக்கு அஞ்சியோ அல்லது புகழுக்கு மயங்கியோ ஆண் சமூக மரபை ஏற்று நடப்பர்.  இவ்வாறு அக்கால ஆண் சமூகம் பெண்னை கட்டுக்குள் வைக்க பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளது எனலாம்.

“ஆழ அமுக்கி முகக்கினும், ஆழ்கடல் நீர்
நாழி முகவாது, நால் நாழி, – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும், தம்தம்
விதியின் பயனே பயன்”        (மூதுரை:19)

என்பதன் கண் பெண்ணுக்கு கணவன் நல்லவனாக இருந்தாலும், செல்வம் அதிகமாக இருந்தாலும் விதி வந்த வாழ்வு தான் அமையும் எனச் சுட்டுகிறார் ஒளவையார்.  இதன்வழியாகப் பெண்ணாகப் பிறந்தலே சமூகம் வார்த்த வார்ப்பில்தான் பெண் ஒடுங்க வேண்டும்.  மீறி வளர நினைத்தால் அதை அச்சமூகம் ஏற்காது என்பதே பெறப்படுகிறது.

நல்வழி :
விநாயகர் வணக்கத்தோடு நாற்பது பாடல்களைக் கொண்ட நல்வழி வாழ்வின் இன்றியாமையைப்பற்றிப் பேசுகிறது.  வாழ்வின் நிலையாமையை பல பாடல்களில் பாடியுள்ளார்.  மனித உடல் நிலையற்றது.  செல்வம் நிலையற்றது, நீதி தவறுவதால் ஏற்படும் தீமை, பிறர் மனைவியை நாடுவதால் உண்டாகும் அழிவு, விலை மகளிர் தொடர்பால் ஏற்படும் தீமை, உழவின் மேன்மை போன்றன பாடுபொருள்களாகக் காணப்படுகின்றன.

“ஆண்டு ஆண்டுதோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ? – மாநிலத்தீர் வேண்டா,
நமக்கும் அது வழியே, நாம் போம் அளவும்,
“எமக்கு என்” என்று, இட்டு, உண்டு, இரும்”        (நல்வழி:11)

என்பதன்கண் என்னதான் முயன்றாலும் இறந்தவர்கள் மீண்டும் வரப்போவதில்லை.  ஒரு நாள் நாமும் இறக்கத் தான் போகிறோம்.  எனவே இருக்கும் வரை பிறருக்கு தானம் அளித்து தானும் உண்க என்று கூறியுள்ளார் ஒளவையார்.  மேலும் பெரும்பான்மை அறம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.  அதுமட்டுமின்றி சமூகத்தில் பல்வேறான சாதிப் பிரிவுகள் இருப்பினும் ஒளவையார் ஒரு தெளிவான சிந்தனையினை முன்னிறுத்துகின்றார்.  கொடுப்பவர் எல்லாம் உயர்சாதியாகவும் கொடாதவர் தாழ்ந்த சாதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.  பசி பணியின் கொடுமையினைச் சுட்டுமிடத்து,

“ஒருநாள் உணவை ஒழி” என்றால், ஒழியாய்
இருநாளுக்கு ஏல்’ என்றால், ஏலாய், ஒரு நாளும்
என் நோ அறியாய் – இடும்பைகூர் என் வயிறே,
உன்னோடு வாழ்தல் அரிது”        (நல்வழி:12)

“சேவித்தும், சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும், போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்”        (நல்வழி:20)

மேற்கண்ட பாடல்களை அவரின் கூற்றாகவே ஒளவை வெளிப்படுத்தி உள்ளார்.  பிறரை அண்டி வாழ வேண்டிய நிலையே அக்கால சமூகச் சுழலில் ஒளவையாருக்கு நேர்ந்திருக்க வேண்டும்.  அச்சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பே ஒளவையை இவ்வாறு பாட தூண்டியிருக்க வேண்டும்.  அச்சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பும், தன் வயிற்றுப் பாட்டிற்காகப் பட்ட பாடுமே இப்பாடல்களில் வெளிப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட பாடலின் கருத்தை முன் வைத்து ஒளவையாரின் பாடல்களை ஆராயும் போது, பெரும்பாலும் தன்பாடல்களில் அறம், செய்தலையும், தானம் செய்தலையும் உயர்வாக வைத்தும் பாடியுள்ளார்.  மேலும் தானம் செய்ய வலியுறுத்தியும் உள்ளார்.  அவ்வாறு தானம் செய்யாதரை இழிவானோர் எனக் குறிப்பிடுகிறார்.

பசிப்பிணியால் தான்பட்ட துயரம் யாரும் படக்கூடாது என்பதற்காக ஒளவையார் நீதி நூல்களில் (அறம்) தானத்தை மிகுதியாகப் பாடியுள்ளார் என்று நோக்கவும் இடமுள்ளது. ஔவையாரைக் கூழுக்குப் பாடியவர் என்றும் கம்பனைப் பொன்னுக்குப் பாடியவர்  என்றும்  பேச்சு வழக்கில் கூறப்படுவது உண்டு. எனவே தன் வறுமை காரணமாகவே ஆண் சமூகத்திற்கு ஏற்ப பாடல் புனைந்துள்ளரோ? எனத் தோன்றுகிறது.   ஆனால் ஒளவையார் என்றாலே சமூகத்திற்கு நீதி கருத்துக்களை மட்டுமே கூறுவார், என்னும் எண்ணமே காலம்காலமாக அனைவர் மனத்திலும் பதிய வைக்கப்பட்டுள்ளது.  இதனாலேயே இவரை மட்டுமே சமூகம் முன்னிலைப் படுத்திக் காட்டியுள்ளது.  “சங்க கால ஒளவை பெற்ற புகழினும் மிகுபுகழ் பெற்றவர் இடைக்காலத்தில் வாழ்ந்து, நீதி நூல்கள் பாடித் தமிழர் உள்ளந்தோறும் இடம் பெற்ற ஒளவை ஆவர்”4 என்ற தமிழண்ணல் கூற்றும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒரு ஆண் கூறுவதை விட பெண்ணே கூறினால்  பெண்களிடம்  அது  மிகுந்த  தாக்கத்தை   உண்டாக்கும்  என்பதாலேயே ஆண் சமூகம் ஒளவையாரின் நீதி நூல்களை உலகறியுமாறு உரக்கப் பாடியுள்ளது.

முடிவுரை :
நீதி பாடி, பெண்ணுக்குக் கட்டுப்பாடும் ஒழுக்கமும்  மட்டுமே போதித்த காரணத்தினால்தான் நீதி நூல் பாடிய ஒளவையாரின் பாடல்கள் சிறுவர்களின் ஆரம்பக் கல்வியில் போதிக்கப்பட்டும், பல்வேறு இலக்கிய வரலாறுகளில் குறிப்பிடப்பட்டும் உள்ளன எனலாம்.

நீதி பாடிய ஒளவையாரும் ஆண் கவிஞருக்கு நிகராக கருதப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அக்கால சமூகத்தில் செல்வாக்கின்றி பசியின் கொடுமையால் பல நாட்கள் வாடி இருக்கலாம். அதனாலேயே தன் பாடலில் பசியின் கொடுமையை வெளிப்படையாகப் பாடியுள்ளார்.

அடிக்குறிப்புகள்
1.    பழனியப்பன்.மு., (க.ஆ) ஒளவையார், சுப்பிரமணியன்.ச.வே மெய்யப்பன்.ச.(ப.ஆ) தமிழ் பெருங்கவிஞர் தொகுதி இரண்டு, ப.43
2.    ஹரி. விஜய லெட்சுமி., தமிழ் இலக்கிய வரலாறு, பக்.233-234.
3.    தமிழண்ணல்., இந்திய இலக்கியச் சிற்பிகள் ஒளவையார், ப.67
4.    மேலது, ப.56.

bpsstree@gmail.com

* கட்டுரையாளர் : – முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 –