தம் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களைப் பரத்தை, விபச்சாரி, விலைமகள், பொதுமகளிர், வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி, தாசி, கற்பற்றார் எனப் பல பதங்களால் அழைப்பர். உலகில் மனிதப் பிறவியே ஓர் உயர்ந்த நுணுக்கமான தத்துவப் படைப்பாகும். ஆணைப் பெண்ணுக்காகவும், பெண்ணை ஆணுக்காகவும் படைக்கப்பட்டமை ஓர் அரிய உண்மையாகும். இனிச் சங்க இலக்கியங்களிற் பரத்தமை பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
இடைச்சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தைத் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பரத்தையிற் பிரிவு தோன்றிவிட்டது.
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று விட்டான். சென்ற காலை, தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டுத் தலைவியை நாடிச் சென்று, முதல் மூன்று நாளும் அவள் சொற்கேட்டு, ஒழுகி நின்று, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது கூடி நிற்பான். பரத்தையிற் பிரிவைத் தணிக்க இவ்வரையறை வேண்டற்பாலதாகும். அக்கால மக்கள் குழந்தைப் பேற்றிற்குக் கொடுத்துள்ள சிறப்பும், சீரும், முக்கியத்துவமும் தெளிவாகின்றது. இதைத் தொல்காப்பியச் சூத்திரம் இவ்வண்ணம் கூறுகின்றது.
‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.’ – (பொருள். 185)
தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் மாட்டு வாயில்களை அனுப்புதல், நான்கு இனத்தார்க்கும் உரித்து என்பதைக் கீழ் வரும் சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு நால்வர் என்பது (1) அந்தணர் (2) அரசர் (3) வணிகர் (4) வேளாளர் எனும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.
‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்.’ – (பொருள். 220)
‘காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே.’ – (இறையனார் களவியல்.)
தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையிலிருந்த பழக்க வழக்கங்களுக்குத் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார் என்பது அவர் கூறும் ‘என்மனார் புலவர், ‘மொழிப’, ‘என்ப’ போன்ற பதங்களாற் தெளிவாகின்றது. இதிலிருந்து பரத்தைமை தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பே இருந்துள்ளமையும் புலனாகின்றது.
குறுந்தொகை
கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் பரத்தையர் பற்றிய செய்திகளையும் காண்போம். பரத்தையரை நாடிச் சென்று, திரும்பி வந்த தலைவனுக்குத் தோழி கூறியது. ‘உழவர் களையெடுத்து வரம்பில் வாடும்படி எறிந்து விடினும், அவரைக் கொடியவரென்று எண்ணாது, அவர் ஏருழும் நிலத்தில் மீண்டும் மலரும் நின்னூர் நெய்தலை நிகர்ப்பாய், எம்பெரும! நீ எமக்குத் துயர் பல புரிந்திடினும், நீயின்றி நாம் ஆற்றல் அற்றோராகி விடுவோம்.’
‘கைவினை மாக்கள்தஞ் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியர்ஏர் நிலம்பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின்னூர், நெய்த லனையை எம்பெரும நீயெமக்கு
இன்னா கியபல செய்யினும்
நின்நின்று அமைதல் வல்லா மாறே.’ – (309 – உறையூர் சல்லியன் குமாரன்.)
தலைவியைப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்ற தலைவன், சிலநாட்களில் அவளையும் பிரிந்து தன் மனை நாட, வாயில் மறுத்துத் தோழி கூறிய கூற்றுக்கள் இவை.
‘நீரில் நெடுநேரம் நின்று ஆடின் கண்கள் சிவந்து விடும். உண்டோர் வாயிடத்துத் தேனும் புளித்து விடும். எம்மைப் பிரிந்தாயானால், எம் தந்தைக்குரிய எம் ஊரில் தெருவிடத்து நடுங்கும் துயர் தரும் இன்னலைப் போக்கிய எங்களை எம்மில்லில் கொண்டு போய் விடுவாயாக!’ என்று கூறினாள் தோழி.
‘நீர்நீ டாடில் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில்தேனும் புளிக்கும்
தணந்தனை யாயின்எம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வங் களைந்த எம்மே.’ – (354- கயத்தூர்கிழான்.)
‘கரும்பின் செவ்வியை அழித்த தோளையும், நீண்ட நெடிய கூந்தலையும், சிறு வளையல்களையும், அணிந்த மகளிர்களது நலத்தைத் துய்த்துக் கைவிடுவாயாயின், மிகவும் நல்லனவாகும்!’ என்று தலைவன் தன் பரத்தையர்மேல் அக்கறையுள்ளான் என்று நகையாடித் தோழி வாயில் மறுத்த செய்தியையும் காண்கின்றோம்.
‘உழுந்துடைக் கழுத்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்ந்த சூளே’ – (384 – காம்போதியார்.)
அகநானூறு
அகநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது. மலர் மாலை அணிந்த தலைவன் தன் தலைவியைத் தனியே தவிக்க விட்டுப் பரத்தை ஒருத்தியோடு இன்பமனுபவிக்க விரும்பி அதற்கேற்ற ஒப்பனைகளையும் செய்து தெருவைக் கடந்து செல்லும் ஒரு காட்சி இது.
‘ … நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்..’ – (66: 7-9)
– (செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.)
பரத்தை ஒருத்தியை, அவளுடன் தன் கணவன் உறவு கொண்டிருப்பதாக ஒரு மனைவி சந்தேகப்பட்டு, அவளையும் அவனையும் சேர்த்துப் பழித்தாள். அதனால் குமுறுகிறாள் பரத்தை.
‘ .. துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப – நாம்அது
செய்யாம் ஆயினும், உய்யா மையின், .. ‘- (106: 5-7) -(ஆலங்குடி வங்கனார்)
ஒளியுடைய தொடியணிந்த மகளிர்கள் பழைமையான யாழினை இசத்துப் பாடவும், மிகவும் தண்மைவாய்ந்த முழவிலே குறுந்தடியால் அடித்து ஒலிமுழக்கவும், குளிர்ந்த நறுமணம் உடைய சந்தனம் மணக்கும் அவர்களின் தோள்களைத் தழுவியவனாக, இந்நேரத்திலும் பிறிதோர் இடத்தில் இருக்கின்றான் அவன். இப்படியிருந்தும், அவன் மனைவியானவள், எம்முடன் மனவெறுப்புக் கொள்ளுகின்றாள் என்று சொல்லுகின்றனரே!
‘.. ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட,
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, .. ‘ – (186: 10-14, – பரணர்)
தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருந்தான். தலைவி தன் குழந்தையுடன் வாடி வதங்கினாள். தலைவனுக்குத் தலைவிமேல் ஆசை பிறந்தது. பின், தலைவன் தன் வீட்டுக்கு வந்தான். தலைவி ஊடல் கொண்டாள். தலைவன், தலைவியின் தோழியை நாடினான். தோழி தலைவியிடம் சென்று ஊடல் தணிந்து, கூடல் கொள்ளுமாறு வேண்டி நின்றாள். ‘தேர்ப்பாகன் தேரில் தலைவன் வந்துள்ளான். நெகிழ் தோள்களையுடைய, ஊர் ஏற்றுக்கொள்ளும் முறைகளைக் கல்லாத பரத்தையரின் பரத்தமையைத் தாங்க முடியாமல் தலைவன் தவிக்கின்றான். நீயோ பயனின்றி ஊடி நிற்கின்றாய். இது உனக்குப் பொருந்தாது. மேலும், உன் மகனின் வருங்காலத்தையும் யோசித்துப் பார். அறிவுள்ள நீ இவ்வாறு நடக்கலாமா?’
‘ .. தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ? – மனைகெழு மடந்தை..’ – (316: 8-11,-ஓரம்போகியார்)
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் பரத்தைமை பற்றிப் பேசப்படுவதையும் பார்ப்போம். தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையுடன் கூடி வாழ்ந்து, மீண்டும் தலைவியை நாடி வருகின்றான் தலைவன் ஒருத்தன். தலைவி ஊடி நின்று அவன் செயலைக் கூறிப் பழிக்க, அவன் ‘யாரையும் நான் அறியேன்’ எனக் கூறித் தலைவியின் சினத்தைத் தணிக்க முயன்றான்.
‘ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ்இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகிற்
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள் – வாழிய, மடந்தை!..’ – (20: 1-7, – ஓரம்போகியார்)
பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன் மீண்டும் தலைவியை நாடி வருகின்றான். தோழி தலைவியின் ஊடலைக் கூறுகின்றாள். ‘யாதும் யான் அறியேன்’ எனத் தலைவன் மறுக்கின்றான். அவனுக்குத் தோழி கூறுகின்றாள்:- ‘நீ வரும் தெருவிலே உன்னை எதிர்பார்த்து, இழைகளை அணிந்தோரான பரத்தையர் பலர் காத்திருந்தனர். நீ அங்கே வந்ததும் பரத்தையர் உன்னைச் சூழ்ந்து கொண்டு தம்முடன் வருமாறு இழுத்தனர். உன்னுடைய நிலையை யானும் அன்று கண்டேன். அங்ஙனம் கண்டிருந்தும், ‘இன்று நீ யாரையும் அறியேன்’ எனக் கூறுகின்றாயே!’
‘ .. ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
மார்புதலைக் கொண்ட மாண்இழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்துவீழ் அரிப்பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்பு
பலர்கொள் பலகை போல
வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே!’ – (30:4-10, – கொற்றனார்)
பரத்தையை நாடிச் சென்ற தலைவன், தலைவியின் எண்ணம் உதிக்க வீட்டிற்கு வருகின்றான். தலைவியின் ஊடலையும், சினத்தையும் முன் பின் அறியாத் தலைவன், அவளைச் சமாதானப்படுத்தித் தருமாறு தோழியை வேண்டி நிற்கின்றான். அதற்குத் தோழி கூற்று இவ்வாறமைகின்றது. ‘எம்மை வேண்டி நிற்றலை விடுத்து, நின்பால் சினம் ஏதும் இல்லாதிருப்பவளாகிய பரத்தையிடம் சென்று அவளுக்கு அருள் புரிவாயாக! தனிமை எம்மை வதைத்த காலத்திலே, அது நீங்குமாறு காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள வயலிலே குளிர்ச்சிப் புது வெள்ளம் பாய்ந்து பரவினாற்போல, உன்னைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சியே எமக்கு இன்பந்தருவதாக உள்ளது. எமக்கு அதுவே போதும்’
‘.. முனிவில் பரத்தையை என்துறந் தருளாய்
நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்
புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென
மலிபுனல் பரத்தந் தாஅங்கு
இனிதே தெய்யநின் காணுங் காலே!’ – (230: 6-10, – ஆலங்குடி வங்கனார்.)
பரத்தை உறவால் தலைவியை மறந்து விட்டான் தலைவன். பின், தலைவியை நினைந்து தோழியைத் தூதனுப்புகின்றான் தலைவன். தோழி தலைவியை நாடித் தலைவனை மீண்டும் ஏற்குமாறு வேண்டத் தலைவியின் கூற்றுப் பின்வருமாறு அமைகின்றது. ‘தோழி! அவன் பொருந்தாப் பரத்தமையுடையவன் என்பதை அறிந்திருந்தும், யான் அவனிடத்தில் ஊடல் கொள்ளவில்லை என்கின்றனை. என் பழமை முதிர்ந்த குன்றூரிலே வயலைக் காவல் புரியும் மள்ளர்கள், தாம் சுடுகின்ற நத்தையை ஆமை முதுகிலே உடைத்து உண்பார்கள். எம் மனையில் மிகுதியான விருந்தினர்கள். அவர்களைக் கவனிப்பதில் என் கவனம் நிலைத்து விடும். யான் அவனைப் பல நாட்கள் சந்திக்கவில்லை. அதனால் அவன்மேல் ஊடல் கொண்டிலேன். அவன் எண்ணம்கூட எனக்குத் தோன்றவுமில்லை.’
‘.. தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி! புலவேன்
புழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந்து உடைக்கும்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்
நன்மனை நனிவிருந் தயரும்
கைதூ வின்மையின் எய்தா மாறே!’ – (280: 4-10, – பரணர்)
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில், தலைவியைப் பிரியேன் என்று கூறிப் பிரியத் தொடங்கும்போது தலைவன்மேல் சினம் கொண்டு ஊடிச் சீறினாள் தலைவி. ‘நீ பரத்தையருடன் கூடி உறவு வைத்துள்ளாய். அவர் நறுமணம் உன்னிலும் நாறுகின்றது. காலையில் சென்று மாலையில்தான் வீடு வருகின்றாய். பகலில் பரத்தையருடன் கூடி மகிழ்கின்றாய். இனியாவது பரங்குன்றைக் குறித்துப் பொய் ஆணையிடும் உன் செயலை நிறுத்திக் கொள்வாயாக!’
‘.. இனிமன்னும் ஏதிலர் நாறுதி: ஆண்டுப்
பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர்
மாலைக்கு மாலை வரூஉம்: வரைசூள் நின்
காலைப் போய் மாலை வருவு. . ‘ – (8: 47-50, நல்லந்துவனார்.)
‘தோழீ ! பரத்தையின் தோள் இன்பத்தை உண்டான். அதனால் நம்மைத் துறந்தான்’ என்று தனிமையில் வாடும் தலைவி ஒருத்தி, தன் தலைவனைச் சினந்து, வெறுத்து, ஊடி, நிற்கும் ஒரு காட்சி.
‘.. நாணாள்கொல் தோழி நயனில் பரத்தையில்
தோள்நலம் உண்டு துறந்தா னெனஒருத்தி ..’ – (12: 45-46, – நல்வழுதியார்)
அங்கு கூடிநின்ற பெண்கள் பலர், தலைவிக்கும் பரத்தைக்கும் இடையில் உண்டான பூசலைத் தடுத்து, இருவரையும் சாந்தப்படுத்தினர். ‘அழகிய மானைப் போன்றவளே! தலைவியோடு மாறுபட்டு நிற்பதைக் கைவிடு. உன்னை விரும்பி ஆடவர் தந்த பொருளெல்லாம் இந் நாடறிந்த உன் பொருள்களே!. இனிய பரத்தையரிடத்தே செல்பவனாகிய தலைவனை, அவன் தலைவியானவள் அவன் புரியும் தவறுகளைப் பொறுத்துக் குடும்பநலனைக் காத்தலன்றி, அவனைச் சினந்து ஒதுக்கி வாழ்தல் பொருந்துமோ? பொருந்தாதே!’ என்று பரத்தையிடம் கூறி, அவள் ஊடலைத் தணித்தனர்.
‘.. வச்சிய மானே! மறலினை மாற்றுமக்கு
நச்சினார் ஈபவை நாடறிய நும்மவே
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ? கூடா ..’ – (20: 84-87, – நல்லந்துவனார்)
கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில், தலைவியை நெடுநாள் பிரிந்து பரத்தையர் சேரியில் தங்கிவிட்டான் தலைவன். தலைவியைத் தனிமை வதைக்க அவள் அழுது புலம்பினாள். புதல்வனைக் கட்டி அணைத்து ஆறுதல் அடைந்து உறக்கம் கொள்ள முயலும் பொழுது, தலைவன் பரத்தையரைத் தன் வீட்டு முன் கொண்டு வந்து அவர்களுடன் பாடியாடும் துணங்கைக் கூத்தின் ஒலி வந்து தலைவியை எழுப்பி விடுகின்றதாம்.
‘.. அகலநீ துறத்தலின், அழுதுஓவா உண்கண், எம்
புதல்வனை மெய்தீண்டப், பொருந்துதல் இயைப வால,;
நினக்குஒத்த நல்லாரை நெடுநகாத் தந்து, நின்
தமர்பாடும் துணங்கையுள் அரவம்வந்து எழுப்புமே ..’– (மருதக்கலி 5: 11-14)
முற்பகலில் ஒருத்தியுடனும், நண்பகலில் இன்னொருத்தியுடனும், பிற்பகலில் வேறொருத்தியைத் தேடுகின்ற ஒரு தலைவனைப் பித்துப் பிடித்தவனென்று தலைவி கடிந்துரைக்கின்றாள்.
‘.. முன்பகல் தலைக்கூடி, நண்பகல் அவள்நீத்துப்,
பின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய், .. ‘ – (மருதக்கலி 9: 10-11)
தலைவன், கூந்தல் அழகி பரத்தையிடம் சென்று வந்தான். தலைவி சினங்கொண்டு ஊடி நின்றாள். அதற்குத் தலைவன் தான் காடைச் சண்டை பார்க்கப் போனதாகப் பொய் கூறி மழுப்பி விட்டான்.
‘நில், ஆங்கு: நில், ஆங்கு: இவர்தரல் – எல்லா! நீ
நாறுஇருங் கூந்தலார் இல்செல்வாய், இவ்வழி,
மாறு மயங்கினை போறி! நீ வந்தாங் கே
மாறு, இனி நின்னாங்கே நின், சேவடி சிவப்பச்,
செறிந்து ஒளிர் வெண்பல்லாய்! யாம்வேறு இயைந்த
குறும் பூழ்ப்போர் கண்டேம்: அனைத்தல்லது, யாதும்
அடுத்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது..’ – (மருதக்கலி 30: 1-7)
ஐங்குறுநூறு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது ஐங்குறுநூறு. அதில் பின்வரும் பாடலில் ‘தாய் சாகப் பிறக்கும்; நண்டையும், குட்டியைத் தின்னும் முதலையையும் உடைய ஊர் என்றதால், கலந்த மகளிர் தொன்நலம் கெடுக்கும் அன்பு இல்லாமையும், இனி முயங்க இருக்கும் மகளிர் நலம் நுகர்ந்து பிரியும் அருளின்மையும் உடையவன் தலைவன் என்பது தெளிவாகும்.’ என்று முடிகிறது.
‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னு முதலைத்து அவனூர்
எய்தினனாகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பதெவன் கொல் அன்னாய்!’ – (24)
தலைவன் பரத்தையருடன் புனலாடினான். இதைத் தலைவி அறிந்தாள். அவனோ அச் செயலை மறுத்து நின்றான். அப்போது தலைவி ‘நீ பரத்தையைத் தழுவிக்கொண்டு புதிய புனலில் ஆடியதைப் பார்த்தவர் ஒருவர் இருவர் அல்லர், பலராவர். ஆதலால் அதை நீ எனக்கு மறைக்க வேண்டாம்.’ என்று சினந்துரைத்தாள்.
‘ அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப் புனலாடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்:
பலரே தெய்ய எம்மறையா தீமே! ‘ – (64)
தலைவன் பரத்தையுடன் புனலாடினான். அதை அவன் மறுத்தும் வந்தான். அப்போது தோழி தலைவனை நோக்கி, ‘மகிழ்ந! பூக்களையுடைய மருத மரங்கள் நிறைந்திருக்கும் பெருந்துறையில் ஒருத்தி நின்னுடன் புனலாடினாள். அதை நீ மறைத்தாலும், இவ்வூரில் பலர் நின்னை அங்குக் கண்டனர். எனவே, ஊர் அலர் கூறத் தொடங்கி விட்டது. எனவே, இனி நீ மறைத்தும் பயன் ஏதும் இல்லை.’ என்று கூறினாள்.
‘பலர் இவண் ஒவ்வாய் மகழ்ந! அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே – மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னொடு ஆடினள் தண் புனல்-அதுவே.’ – (75)
தன்னை விட்டுத் தனியே புதுப்புனலில் ஆடிவிட்டுக் காலம் தாழ்த்தி வந்த தலைவனுடன் தலைமகள் ஊடல்கொண்டு ‘மகிழ்ந! தகுதியுடைய பரத்தையருக்குத் தோள் துணையாகி, புதிய நீரில் ஆடியதால் நின் கண்கள் மிக்க சிவப்பை அடைந்தன. அது உண்மையே அன்றோ! சொல்லுக. இது பற்றி யாம் புலத்தல் கொள்ளோம். நீ பொய்யாது கூறுக!’ என்று கேட்டாள்.
‘புலக்குவம் அல்லேம் பொய்யா துரைமோ
நலத்தகு மகளிர்க்குத் தோட்டுணை யாகி,
தலைப்பெயல் செம்புனலாடித்
தவநனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே!’ – (80)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு நூல்களை நீதி கூறும் அறம் சார்ந்த நூல்களாகவும், ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்ற ஆறு நூல்களை அகம் சார்ந்த நூல்களாகவும், களவழி நாற்பது என்ற ஒரு நூலைப் புறம் சார்ந்த நூலாகவும் வகுத்துள்ளனர். இனி, இவற்றில் பரத்தையர் பற்றிக் கூறும் நூல்களைக் காண்போம்.
திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது திருக்குறள் ஆகும். இதைத் திருவள்ளுவர் (கி.மு. 31) யாத்துத் தந்தனர். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி: நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பது பழமொழி. இதில், இரண்டு என்பது திருக்குறளையும், நாலு என்பது நாலடியாரையும் குறிக்கின்றது. திருக்குறளில் ‘வரைவின் மகளிர்’ என்ற ஓர் அதிகாரத்தில் பொது மகளிர் பற்றிப் பத்துக் குறள்களால் விபரித்துள்ளார்.
பொதுமகளிர் அன்பினால் விரும்பாதவர். அவர் பொருள் மேல் உள்ள ஆசையால் விரும்புவது போல் நடித்துப் பேசும் இன்சொல் ஒருவனுக்குத் துன்பத்தைத் தரும்.
‘அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.’ – (குறள் 911)
பொதுமகளிர் பொருளையே விரும்பிப் பொய்யாகத் தழுவுவர். இது ஓர் இருட்டறையில், தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவுதலுக்கு ஒப்பானதாகும்.
‘பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.’ – (குறள் 913)
அழகு முதலியவற்றால் செருக்குற்றுத் தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் அறிவுடையோர் விரும்பார்.
‘தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.’ – (குறள் 916)
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.
‘நிறைநெஞ்சம் இல்லவர் தோய ;வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.’ – (குறள் 917)
பொதுமகளிர் சேர்க்கை வஞ்சமும், கபடமும் நிறைந்தது. ஆய்வறிவற்றார்க்கு இது ஓர் அணங்கு (மோகினி) போல் தோன்றும்.
‘ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு’ – (குறள் 918)
வரைவின் மகளிர் ஒழுக்கம் கெட்டவர்கள். அவர்கள் மெல்லிய தோளைப் பற்றுவது ஆழ்ந்த நரக வேதனைக்குச் சமமானது என்கிறார் வள்ளுவர்.
‘வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.’ – (குறள் 919)
இரு மனமுடைய பொதுமகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம் மூன்றும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
‘இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.’ – (குறள் 920)
நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது நாலடியார். இதில் நாற்பது (40) அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஒருமித்து நானூறு (400) பாடல்கள் உள்ளன. முப்பத்தியெட்டாம் (38) அதிகாரத்தில் பொதுமகளிர் பற்றிப் பேசப்படுவதையும் காண்போம்.
விளக்கின் ஒளியும், பொதுமகளிர் நட்பும், இவ்விரண்டும் குற்றம் நீங்க ஆராயின், வேறாகமாட்டா. விளக்கின் ஒளி நெய் வற்றியவுடன் அணைந்து விடும். அதேபோல, பொதுமகளிர் நட்பும் பொருள் நீங்கியவுடன் ஒழிந்து விடும்.
‘விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வேறல்ல – விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே அவர் அன்பும்
கையற்ற கண்ணே அறும்.’ – (371)
அன்பு நீங்கிய மனமுடைய அழகிய கண்கொண்ட பொதுமகளிர்க்கு, பொருள் இல்லாதார், விடம்போல் கொடியவர் ஆவார். செக்கு ஆட்டும் இழிதொழிலோர் செல்வந்தராயின், அப்பொதுமகளிர்க்கு அவர்கள் சர்க்கரை போல் இனியவராவார்.
‘ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமில் லாதார் கடுஅனையர் – காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.’ – (374
பாம்பு போலவும், மீன் போலவும் காண்பிக்கும் விலாங்கு மீனைப் போன்ற தன்மையுடைய பொதுமகளிர் தோள்களை மிருகத்தையொத்த பகுத்தறிவற்ற மூடர்கள்தான் சேர்வார்கள்.
‘பாம்பிற்கு ஒருதலை காட்டி யொருதலை
தேம்படு தென்கயத்து மீன்காட்டும் – அங்கு
மலங்குஅன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர்
விலங்கன்ன வெள்ளறி வினார்.’ – (375)
காட்டுப் பசுவைப் போல முதலில் இன்பம் உண்டாக நக்கி, தம்மிடம் கூடியவர்களின் கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்து கொண்டு, பிறகு எருதைப் போலக் கவிழ்ந்து படுத்துக் கொள்ளும் தாழ்ந்த நடத்தையுடைய பொதுமகளிரிடத்தில் காணப்படும் அன்பை, மயக்கம் அடைந்து எமக்குரியது என்று இருந்தவர் பலராலும் நகைக்கப்படுவர்.
‘ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறுஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.’ – (377)
பொதுமகளிர் தம் மனம் ஒருவனிடத்தில் இருக்க, கபடமாக அன்புடையார் போன்று செய்கிற எண்ணம் அனைத்தும் ஆராய்ந்து அறிந்த போதும், தீவினைச் செயல் நிறைந்த உடம்யுடையவர்கள் உண்மையை அறியமாட்டார்கள்.
‘உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் – தௌ;ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த வுடம்பி னவர்.’ – (380)
திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகத்தில், பலர்க்கும் தன்னிடமுள்ள
நீரைத் தரும் துறையினைப்போல் தன் தோள்களைத் தந்து வாழும் பொது மகளிரும், நாள்தோறும் சூதாட்டத்தைத் தேடி அலையும் நீதியில்லாச் சூதாடியும், மிக்க வட்டி வாங்கிச் சிறந்த பொருளை ஈட்டுபவனும் ஆகிய மூவரும் ஆசைக் கடலில் மூழ்குவர் என்று கூறுகின்றது.
‘தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் – இம்மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.’ – (81, – நல்லாதனார்.)
ஆசாரக் கோவை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது ஆசாரக் கோவையாகும். இதில், அறிவுடையவர் என்று கூறப்படும் கோலம் செய்யும் விலைமகளிர் வதியும் இடத்தோடு சேர்ந்து தம் இடத்தைச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிந்த உரிமை உள்ளதாயினும் தம் மனைவியர்க்கு விருப்பத்தைத் தருவன வேறு பலவாக ஆகிவிடும். அவை விரும்பத் தக்கவை ஆகாவாம். எனவே, விலை மகளிர் இருக்குமிடத்துக்கு அண்மையில் வாழலாகாது என்றவாறு.
‘வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தௌ;ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்.’ – (82, – பெருவாயின் முள்ளியார்.)
சிறுபஞ்சமூலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது சிறுபஞ்சமூலம் ஆகும். இதில், பருவம் வரப் பெறாத கன்னிப் பெண்ணும், மாதவிடாய் நீங்கியவளும், தவமுடைய காலத்தும் கோலம் கொள்வதில் நீங்காதவளும், கற்பைக் காவாத பொது மகளிரும், பிறர்க்கு உரியவளான மனைவியும் உள்ளிட்ட இந்த ஐவரையும் பகைவரைப் போல் வெறுத்துச் சேர மாட்டார் என்பர்.
‘பூவாதாள், பூப்புப் புறம்கொடத் தாள், இலிங்கி
ஓவாதாள் கோலம் ஒருபொழுதும் – காவாதாள்
யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டிவ் வைவரையும்
சாரார் பகைபோல் சலித்து.’ – (42, – காரியாசான்)
ஏலாதி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது ஏலாதி ஆகும். இதில், ஓர் உயிரையும் கொல்லான், மற்றவர் கொல்வதையும் விரும்பான், பொய் பேசான், மற்றவர் மனைவியின் மீது ஆசை கொள்ளான், சிறியார் கூட்டத்தைச் சேரான், மற்றவர் மறைவாய்க் கூறும் மறை பொருளில் நாட்டம் காட்டான், தீய சொற்களைப் பேச விரும்பான், என்ற இந்த இயல்புகள் முதன்மைப்படுதலில் மிக்கவனுக்கு உரியவையாகும்.
‘கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியார் ; இனம்சேரான் – சொல்லும்
மறையில் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை
இறையிற் பெரியாற் கிவை.’ – (19, – கணிமேதாவியார்)
ஐந்திணை எழுபது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது ஐந்திணை எழுபது ஆகும். பரத்தையரிடம் போய் வந்தான் தலைவன். அவனைத் தோழி தன் மொழியால் இணக்கம் செய்தாள். ‘நீர் நிலையில் மேய்ந்து வாழும் வரால் மீன் இனம் உலவுகின்ற குளிர்ந்த மருத நிலத்துத் தலைவனே! வளையலணிந்த தலைவியை நோக்காதவனாய், என் மனையை விட்டு நீங்கி அந்தப் பரத்தையர் சேரிக்கு செல்வதைப் பெரிய காரியமாக ஏற்படுத்திக்கொள்வது தக்கதோ!’ எனத் தோழி வினாவினாள்.
‘உண்துறைப் பொய்கை வராஅல் இனமிரியும்
தண்டுறையூர தகுவதோ – ஒண்டொடியைப்
பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல்.’ – (52, – மூவாதியார்)
தலைவன் பரத்தையை நாடிச் சென்றிருந்தான். தன்னுடன் தலைவி ஊடல் கொண்டமையால் பாணனைத் தூதாக அனுப்பினான். தலைவி பாணற்கு வாயில் மறுத்தாள். தலைவி ‘பாண! நாள்தோறும் குற்றமில்லாது விளையாடும் என் மகனைப் பாதுகாவலாக நான் கொண்டுள்ளேன். எனவே, மருதநிலத் தலைவனின் ஒழுக்க நெறிகளை எடுத்துக் கூற வேண்டாம். தலைவன் பிரிந்தது என் தவறே என்றாலும் இருக்கட்கும். நீ இங்கிருந்து எழுந்து செல்வாயாக!’ என்று பாணனை நோக்கிச் சொன்னாள்.
‘பொய்கைநல் லூரன் திறம்கிளைத்தல் என்னுடைய
எவ்வ மெனினும் எழுந்தீக – வைகல்
மறுவில் பொலந்தொடிவீசும் அலற்றுஞ்
சிறுவ னுடையேன் றுணை.’ – (53, – மூவாதியார்)
திணைமாலை நூற்றைம்பது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது திணைமாலை நூற்றைம்பது ஆகும். தலைமகன் பரத்தையரிடம் சென்றான். அதனால் தலைவி புலந்து ‘செந்தாமரை மலருடன் ஒன்றாய்ப் பொருந்த வளர்ந்துள்ள செந்நெற் பயிரினது பசுமையான கதிர்க் குலைகளைக் கொண்ட, ஆற்று நீரில் குதித்து விளையாடும் பரத்தையரின் மார்பில் அணிந்துள்ள அழகிய மாலையின் வயப்பட்ட அவளது மனம் போல விளங்கம் மருத நிலத்தூர்த் தலைவனின் நட்பினின்றும் பகையில்லாது நீங்கித் துன்பத்துடன் வாழ்தல் நல்லதாகும்!’ எனச் சொன்னாள்.
‘ செந்தா மரைப்பூ உறநிமிர்ந்த செந்நெல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்து ஆடுவா – ளந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்று ஆற்றாமை நன்று.’ – (128, – கணிமேதாவியார்)
சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சேரன் தம்பி இளங்கோவினால் எழுதப்பட்ட நெஞ்சையள்ளும் ஒரு தமிழ்க் காவியமாகும். மாதவி விலைமகள் குலத்தைச் சேர்ந்தாலும் அத் தொழிலில் ஈடுபடாது கற்புக்கரசியாய் கோவலனுடன் மாத்திரம் வாழ்ந்து வந்தவள். மாதவியையும், அவள் மகள் மணிமேகலையையும் விலைமகள் குலத்திலிருந்து நீக்கிக் கற்புடைப் பெண்களாகக் காட்டிய பெருமை இளங்கோ அடிகளைச் சாரும். விலைமகள் குலம் இனி வேண்டாமென்று சிந்தைக்கு எடுத்துச் செயற்பட்டவர் இளங்கோ அடிகளாவர்.
இனி, சிலம்பதிகாரத்தில் நாகாக்கா வம்பப் பரத்தையர் பற்றி எவ்வாறு கூறுகின்றார் இளங்கோ அடிகள் என்பது பற்றியும் காண்போம்.
‘ .. குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு, இன்இள வேனிலொடு,
மலய மாருதம் திரிதரு மறுகில், .. ‘ – ( 5: 200 – 203)
‘ .. வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு,
கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே இ ..’ – (10: 219-222)
‘.. வறுமொழி யாளரொடு, வம்பப் பரத்தரொடு,
குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்குப்,
பொச்சாப்பு உண்டு, பொருளரை யாளர்
நச்சுக் கொன்றேற்கு, நன்னெறி யுண்டோ?
இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன். ..’ – (16: 63-67)
முடிவுரை
இதுவரை, (1) தொல்காப்பியம், (2) குறுந்தொகை, (3) அகநானூறு, (4) நற்றிணை, (5) பரிபாடல், (6) கலித்தொகை, (7) ஐங்குறுநூறு, (8) திருக்குறள், (9) நாலடியார், (10) திரிகடுகம், (11) ஆசாரக் கோவைஈ (12) சிறுபஞ்சமூலம், (13) ஏலாதி, (14) ஐந்திணை எழுபது, (15) திணைமாலை நூற்றைம்பது, (16) சிலப்பதிகாரம் ஆகிய பதினாறு பழந்தமிழ் நூல்களில் பரத்தமை பற்றிப் பேசப்படும் பாங்கினைக் கண்டோம்.
தலைவன் பரத்தையை நாடுவான், அவனுக்குப் பாணன் உதவுவான், தலைவி சினங்கொண்டு ஊடுவாள், அவளைத் தோழி, பாங்கி சினம் தணிப்பார், பரத்தைக்கு விறலி உதவுவாள் ஆகிய செயல்கள் பரத்தமைக்கு உரம் போட்டு வளர்ப்பது என்பது பாரறிந்த உண்மையாகும். பரத்தமை மன்னர் காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தது. அன்று பரத்தையர் ஆடற்கலைகளிலும் முன்னிலையில் நின்றனர்.
வையை நதியில் புது வெள்ளம் வந்துவிட்டால் ஊரே திரண்டு, நதிக்கரையை அடைந்து, நீராடி மகிழ்வர் மக்கள். இன்னும், தலைவியரின்றித் தனியே வந்த தலைவர் துணங்கைக் கூத்தாடியும், பாணன், விறலி ஆகியோர் உதவியுடன் பரத்தையர் உறவு கொண்டு, அவர் மனம் குளிரப் பொன்னும், பொருளும் கொடுத்துத் தாமும் இன்புற்றிருப்பர்.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பரத்தமை நிலைத்திருந்தது. ஆனால், தொல்காப்பியர் பரத்தமையின் நன்மை, தீமைகள் ஒன்றும் கூறாது, பரத்தமை அன்று எவ்வாறு நடைமுறையில் இருந்ததையும், யார் யார் இதில் பங்கேற்றனர், என்பதை மட்டும் கூறிச் சென்றார்.
திருவள்ளுவர், பொதுமகளிரைப் பற்றி ஓர் அதிகாரம் திருக்குறளில் அமைத்துள்ளார். அதில் பரத்தமையினால் ஏற்படும் தீமைகளை நிரல்படுத்தி, அவை மனித சமுதாயத்துக்கு ஏற்றதல்ல என்று யாருக்கும் அஞ்சாது, இடித்துரைத்து முதலடி எடுத்து வைத்த பெருமை திருவள்ளுவரைச் சாரும். திருக்குறளுடன் நாலடியார் ஒத்துப் போகின்றது. நாலடியாரில் பொருள்மேற் காதல் கொள்ளும் இரு மனத்தினரான பொதுமகளிருடன் ஒரு தொடர்பும் வைத்திருக்க வேண்டாமென்று பல எடுத்துக்காட்டுகளையும், ஆதாரங்களையும் நம் மத்தியில் வைத்து எச்சரிக்கின்றார்.
சிலப்பதிகாரத்தில் விலைமகளிர் குடும்பத்தில் பிறந்த மாதவியைக் கோவலனுடன் மட்டும் தொடர்பு படுத்தி, கோவலன் மாதவியைப் பிரிந்த பின், அவளைத் துறவறம் பூணப்பண்ணி, இருவருக்கும் பிறந்த மகளான மணிமேகலையையும் துறவறம் பூணப்பண்ணி, விலைமாதர் குடும்பத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து, பரத்தமை உறவு வேண்டாமென்ற ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய பெருமை இளங்கோவைச் சாரும். இன்னும், எட்டுத்தொகை நூல்களில் ஆறு நூல்களான (1) குறுந்தொகை, (2) அகநானூறு, (3) நற்றிணை, (4) பரிபாடல், (5) கலித்தொகை, (6) ஐங்குறுநூறு ஆகியவற்றில் பரத்தமை சமுதாயத்துக்கு விரோதமானது என்று கூறப்படவில்லை. ஆனால், பரத்தமையை ஒரு விழாவாகவும், கொண்டாட்டமாகவும் நடாத்தி, நீரில் பாய்ந்து ஆடிப்பாடி, மகிழ்ந்து, இன்புற்றிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஆறு நூல்களான (1) திரிகடுகம், (2) ஆசாரக் கோவை, (3) சிறுபஞ்சமூலம், (4) ஏலாதி, (5) ஐந்திணை எழுபது, (6) திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றில் பரத்தமை வேண்டா என்ற குரல் எழுந்தள்ளது. அக்காலத்தில் முடிதரித்த மன்னர்கள்கூட விலைமாதர் குலத்தை அழித்து ஒழிக்க ஆணை பிறப்பித்ததாகச் செய்திகள் யாண்டும் கண்டிலேம். ‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே!’ என்ற வாசகம் யாவர் மனத்திலும் பதிந்து, உறைந்து, உருகு நிலையில் இருந்துள்ளதையும் நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது. இனி, நாம் இவற்றை ஒதுக்கி விட்டு, ‘ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தமிழன் கோட்பாட்டைத் தாரக மந்திரமாக்குவோம். அன்றே பரத்தமை தானே பறந்து போய் விடும்.
wijey@talktalk.net