ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

இலக்கிய பரிணாம வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளிம்புநிலைக் கதையாடல்கள் அமைகின்றன. விளிம்புநிலை குறித்த கருத்தாடல்கள் வரலாறுகளில் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்த சூழலில், அவற்றை தைரியமாக வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய பெருமை புனைவுலகையே சாரும். இருப்பினும் விளிம்புநிலை குறித்த பதிவுகள் ஆரம்பத்தில் போதுமான அளவு இலக்கிய கவனிப்பைப் பெறவில்லை. ஆனால் இந்நூற்றாண்டில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனிக்கவனம் பெறுவது இலக்கிய பரிணாமத்தில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னும் விளிம்புநிலைக் கதையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றாலும் அதன் பலம் மற்றும் பலவீனத்துடன் நோக்கும் பார்வை புதிய நூற்றாண்டைச் சார்ந்தது. குறிப்பாக விளிம்புநிலை மக்கள் வாழ்வு பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் அதற்கே உரிய தன்மையில் யதார்த்தமாக தன்னை இனங்காட்டியுள்ளது.

பின் நவீனத்துவத்தின் கட்டவிழ்ப்பு
பின் நவீனத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிறப்பு என்பது, 1966ல் ழாக் தெரிதா ‘கட்டவிழ்ப்பு’ சிந்தனையை முன்வைத்த போதுதான் தோன்றியது எனலாம். அந்த வகையில் பின் நவீனத்துவம் என்பது இந்த நிமிடம் வரை முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையும், கட்டுப்பாடுகளையும் மறுவிசாரணை செய்ய வந்த கலாச்சார இயக்கமாகக் கொள்ளலாம்.

பின் நவீனத்துவ காலகட்டத்தில் விளிம்புநிலை மக்கள் தனிக்கவனம் பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாட்டைக் குறிப்பிட இயலும். கட்டவிழ்ப்பு என்பது எந்த ஒரு பொருளும் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய கருத்தியல்களில் மாற்றங்களை ஏற்று வாங்குவதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களின் விளைவாக அப்பொருளில் தோன்றும் புதுபுது அர்த்த தளங்களைத் தேடிக் கண்டடைதலே கட்டவிழ்ப்பு எனலாம். இது பற்றிக் கூறும் போது,

”கட்டுமானம் பெற்ற அமைப்பு, கட்டுமான அமைப்புகளிலிருந்து திமிறி – முரண்பட்டு – தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள முயலுகிறதாகக் கருத்திற் கொண்டு, கட்டுமானத்தை அவிழ்த்து உள்ளும் புறமும் ஒளிதேடுகிற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கட்டவிழ்ப்பு என்பர்”  (திறனாய்வுக்கலை, ப.146)

என்று ஜேக்கு டெர்ரிடா ஒரு கொள்கையாக முன்மொழிகிறார். அதாவது மையத்தில் இருக்க விரும்பும் ஒரு சக்தி இன்னொரு சக்தியை விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதனால் இரட்டை எதிர்நிலைகள் உருவாகின்றன. இவ்வுருவாக்கம் இதோடு நின்றுவிடாமல் மீண்டும் நிகழ ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் ஒரு பொருளைப் பற்றிய நமது பார்வை நிச்சயமின்மை கொண்டதாக இருக்கின்றது. இந்த நிச்சயமின்மை கோட்பாட்டைத்தான் தெரிதா, தனதுக் கட்டவிழ்ப்பு செயல்பாட்டின் மூலம் நிறுவுகின்றார்.

அதிகாரத்தின் இருப்பு
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்று ஏதோ ஒன்றை அதிகாரத்திற்குள்ளாக்கியபடியே தான் உள்ளது. மையம் மட்டுமே விளிம்பின் மேல் அதிகாரம் செலுத்துவதில்லை. அந்த விளிம்புக்குள்ளும் ஏதேனும் ஒரு அதிகாரம் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது,

”அதிகாரம் என்பது பாதிக்கப்பட்ட விளிம்புநிலை வாதிகளை மட்டுமல்ல; ஆதிக்கம் செலுத்தும் மைய வாதிகளையும் மறு உருவாக்கம் செய்கிறது. அதிகாரமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அறிவின் நீட்சியாக அதிகாரமும் அதிகாரத்தின் நீட்சியாக அறிவும் இருக்கின்றன.”           (பின் நவீனத்துவம் என்றால் என்ன?, ப.85)

மேலும்,

 

”குற்றவாளி, பைத்தியம், தீவிரவாதி, சமூக விரோதி, வேசி போன்ற வார்த்தைகள் அதிகாரத்தின் உரையாடலாகும். இந்த வார்த்தைகளைப் பிரயோகிப்பவர்கள் தங்களது அதிகார உரிமையை நிலைநாட்டுபவர்கள்”  (மேலது) என்றும் குறிப்பிடப்படுகின்றது. இதுமட்டுமல்லாது வாழ்வின் கோரப்பைடியில் சிக்கி, பொருளாதாரப் போராட்டங்களால் அடிபட்டு, எழ முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடம் மட்டுமல்லாமல் வாழும் இடம் கூட ஒரு அதிகார மையத்திற்கு உட்பட்டதாகத்தான் உள்ளது.

பின் நவீனத்துவ உரையாடல்கள்
தெரிதாவின் முக்கியமான கோட்பாடாகக் ’கட்டவிழ்ப்பு’ விளங்குவதைப் போல, ஃபூக்கோவின் முக்கியமான கோட்பாடாக ‘உரையாடல்’ விளங்குகின்றது. உரையாடல் என்பது குறிகளால் ஒரு விஷயத்தைப் பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ விவரிப்பது. அந்த வகையில்,

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரத்தின் உரையாடல் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது”  (மேலது, ப.93)

என்று தனது பார்வையை வெளிப்படுத்துகின்றார் ஃபூக்கோ.

இத்தகைய உரையாடல்கள் காலத்திற்குக் காலம் மாற்றம் பெறுகின்றன. எந்த ஒரு செய்தியும் உரையாடலாக நிகழ்த்தப்பட்டு அது ஒவ்வொரு வடிவத்திலும், ஒவ்வொரு பெயரிலும் சமூகத்தில் நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று வரை சமூகத்தில் நிலவிய உரையாடல்கள் அனைத்துமே அதிகாரத்தின் உரையாடல்கள். அது சொல்வதைப் பிறர் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களை இயல்புநிலை பிறழ்ந்தவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுகின்றது.

ஆகவே அதிகாரமும் எதிர்ப்பும் ஒன்றுக்கொன்று உறவுடையவை. எதிர்ப்பே அதிகாரத்தை உருவாக்குகிறது. இந்த அதிகாரத்திற்கு எதிரான மாற்று உரையாடல்கள் நிகழ்த்தப்படும் போதே சமூகம் சமநிலை எய்தும். அந்தவகையில் பின் நவீனத்துவம் முன் வைத்த மாற்று உரையாடலே பெருங்கதையாடல்களின் தகர்வு.

பெருங்கதையாடல்களின் தகர்வு

பெருங்கதையாடல்கள் எப்பொழுதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டு ஏனையவற்றை தன்னுள் ஒடுக்கவோ அல்லது அழித்தொழிக்கவோ முயற்சிக்கின்றது. இத்தகைய சூழலில் பெருங்கதையாடல்கள் தனது இடத்தைத் தக்க வைக்க முயற்சிக்கும் போது, தனக்கான இடத்தைப் பெற சிறுகதையாடல்கள் அழுத்துகின்றன. அந்தவகையில் ‘ஒருமை’ என்ற சொல்லாடளுக்குள் பெருங்கதையாடல்கள் அனைத்தையும் ஒடுக்க முயற்சிக்கும் போது, அந்த ஒருமைக்குள் இருக்கும் வேற்றுமைகளை ‘வித்தியாசம்’ என்ற பெயரில் சிறுகதையாடல்கள் முன்வைக்கின்றன. இது பற்றிக் கூறும் போது,

”பெருங்கதையாடல்கள் என்பது பேரடையாளத்துடனான ஒருமிப்பை வலியுறுத்தும் போது சிறு கதையாடல் வித்தியாசத்தை முதன்மைப்படுத்துகிறது. மற்றதாக இருக்கும் உரிமை என்பது ஒரு தன்னிலை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை அல்ல; மாறாக மற்றது மற்றதாக வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை, நியதியிலிருந்து விலகும் உரிமை”  (பின்நவீனத்துவம் – இலக்கியம் – அரசியல், ப.67)

என்கிறார் மார்க்ஸ்.

இவ்வாறு பெருங்கதையாடல்களில் தகர்வேற்பட்டு பல்வேறு இயக்கங்களாக மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றது. அவை போர் எதிர்ப்பு இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், வேலை இல்லாதோர் இயக்கங்கள், இன உரிமை இயக்கங்கள் என்பனவாகும். இவ்வாறு பல்வேறு இயக்கங்கள் வழி தங்களது உரிமைக்குத் தாங்களே குரல் கொடுக்கத் தொடங்கினர். இவை அதிகார வர்க்கங்கள் தம்மீது கட்டிய இறுக்கங்களைக் கட்டவிழ்க்கத் தொடங்கின. இவ்விடத்தில் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவர்களாய் அதிகார வர்க்கம் தம்மீது சுமத்திய கருத்துக்களுக்கு, கருத்து மாறுபாட்டை வெளிப்படுத்தத் துவங்கினர். இது பற்றிக் குறிப்பிடும் போது,

”கருத்து வேறுபாடுகளின் கருத்தொருமிப்பே சனநாயகமான ஒன்றிணைவாக இருக்க முடியும்”  (மேலது, ப.46)

என்கிறார் அ.மார்க்ஸ். இவ்வாறு ஒன்று தகர்க்கப்படும் போது அதன் இடம் அங்கு சூன்யமாகின்றது. அது போல பெருங்கதையாடல்களின் தகர்வினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் மாற்று நிலைதான் சிறுகதையாடல்கள்.

சிறுகதையாடல்கள்
பெருங்கதையாடல் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள மார்க்சீயம் போன்ற கதையாடல்களை துணைக்கழைத்துக் கொள்வது போல், சிறுகதையாடல்கள் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள எதையும் சார்ந்திருப்பதில்லை. தன்னை சுய அடையாளத்தோடு வெளிப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் நிலவும் சிக்கலான தன்மைகளை எந்தவிதத்திலும் ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொள்கிறது. மேலும் எதையும் முடிந்த முடிவாகக் கொள்ளாமல், காலத்திற்குக் காலம் மாறுபடும் தன்மை கொண்டவை. எங்கெல்லாம் ஒடுக்குமுறை தலைகாட்டுகிறதோ அங்கெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இது பற்றிக் கூறும் போது,

”அது தற்காலிகமானதாக, குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக குறிப்பிட்ட சம்பவம் மற்றும் குழு சார்ந்ததாக இருக்கும். அந்த வகையில் அது ஒரு நீதியாக, சிறு உண்மையாக, சிறு அறமாக விளங்கும்”    (மேலது, ப.68)

என்கிறார் அ.மார்க்ஸ். அந்தவகையில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவனை ‘இந்தியன்’ என்னும் ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவனிடம் வேற்றுமையைக் காட்டுகின்றனர். எதார்த்தத்தில் அவன் இரட்டை வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்படுகின்றான்.

அதாவது இரட்டை மனிதனாக, இரட்டை மொழிக்காரனாக இரட்டைப் பண்பாடுடையவனாக கட்டமைக்கப்படுகின்றான். இவ்வாறு வேறுபட்டனவாய் அவன் சமூகத்தில் சில கட்டுப்பாடுகளால் ஒடுக்கப்படும் போது, அங்கு அந்த கட்டுப்பாடுகளின் கட்டுடைப்பாக சிறுகதையாடல் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு விளிம்பு நிலை சார்ந்த தகர்விற்கு, பல கோட்பாட்டு இயக்கங்கள் முயன்றிருப்பதை உணர்ந்து கொள்ள இயலும். அதோடு இந்நிலைகளை புனைவுகள் எவ்வாறு எடுத்துச் சென்றிருக்கின்றன என்பதும் முக்கியமான ஒன்றாகும்.

தலித்திய பார்வை
பொதுவாக தலித் பெண்களை யாரும் காதலிப்பதில்லை. திருமணம் செய்து கொள்ள முன்வருவதுவும் இல்லை என்னும் கருத்தாக்கம் பொதுவாக நிலவக்கூடியது. இக்கருத்திற்கு மறுதலையாக பெருமாள் முருகனால் எழுதப்பட்டு, 2007ல் வெளியான கங்கணம் நாவல், ஒரு சில கருத்துக்களை முன்வைக்கின்றது. அதில் செல்வராசு என்னும் கதாப்பாத்திரம் எப்பொழுதும் முற்போக்கு சிந்தனைவாதியாகவும், பகுத்தறிவாளனாகவும் விளங்கக்கூடியவன். அவன் ஒரு தலித் இனப் பெண்ணை விரும்புகின்றான். இதை இகழ்வாகக் கேட்கும் கதை நாயகன் மாரிமுத்துவிற்கு பதில் கூறும் போது,

”அதுக்கென்னண்ணா, பக்கத்துல இருக்கறதால ஒட்டச்சீன்னு தெரீது. பொண்ணு கெடைக்காத எத்தன பேரு தர்மபுரிப்பக்கம் போயிக் கட்டிகிட்டு வர்றாங்க. அதெல்லாம் என்ன சாதீன்னு ஆருக்கு தெரியும்? கேட்டா கவுண்ட மூடுன்னுதான் சொல்றாங்க”  (கங்கணம், ப.256)

என்னும் மனநிலை, மாற்றத்தின் வெளிப்பாடு. மேலும் அந்நாவலில் மாரிமுத்துவாகட்டும், செல்வராசாகட்டும், இருவர் வயிலாகவும் வெளிப்படும் கருத்து வெளிப்பாடுகள், சாதியின் பெயரால் இன்னும் தங்களுடைய ஆசைகளையும், விருப்பங்களையும் மூட்டை கட்டிக்கொண்டு, ‘மரபு’ என்னும் மாபெறும் வலையில் சிக்கித் தவிக்க இனிமேலும் இயலாது என்பதை ஆசிரியர், பழைய மரபின் கட்டுடைப்பாகவும், புதிய மரபின் எழுச்சியாகவும் காட்டியிருப்பார்.

பெண்ணிய பார்வை
பெண்கள் என்றால் ஒட்டுமொத்த நிலையில் அவர்களை ஒன்றாக பார்க்க முடியாது. பெண்களுடைய பிரச்சனைகளில் பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை போன்றதல்ல, ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் தலித் பெண்களின் பிரச்சனைகள். அதே போலத்தான் பெண்களின் அகவாழ்வை பல்வேறு படைப்பாளிகள் சித்தரிக்கின்றனர். ஆனால் அவற்றினின்றும் வேறுபட்டது முஸ்லீம் பெண்களின் நிலை. பெண்கள் ’மரபு’ என்னும் பெயரால் தங்களுக்கு முகமூடி அணிகின்ற நிலையில், இவர்களோ கருப்பு அங்கிகளுக்குள் மதத்தில் புனிதத்தைக் கூறிக் கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றனர். இது அவர்களது புறவாழ்வு. அவர்களின் அந்தரங்க உலகையும் ஒரு முஸ்லீம் பெண் என்ற நிலையில் படைத்தளித்த பெண்படைப்பாளர் சல்மா அவர்கள். அவருடைய குறிப்பிடத்தக்க படைப்பு ‘இரண்டாம் சாமங்களின் கதை’.

காலங்காலமாக பெண்களின் புறவடிவம் குறித்த வருணனைப் பதிவுகள் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. ஆனால் பெண்களின் ஆழ்மன உணர்வுகளின் பதிவுகளை அதன் உணர்வு நிலை மாறாமல் விளக்கியப் பதிவுகள் மிக சொற்பம்தான். அக்குறை தீரும் வண்ணம் சல்மா அவர்கள் தனது நாவலில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வாயிலாக, பெண் உலகம் குறித்து வெளிப்படையாக விவாதித்துள்ளார். இது போன்ற நாவல்கள்,

”எழுதியவற்றிலிருந்து எழுதாத வேறொன்றுக்கு வாசகனை நகர்த்திடும்” (ம.மணிமாறன்-www.madhavaraj.com) இலக்கிய வடிவங்களாகத் திகழ்கின்றன எனலாம்.

இதே போன்று விளிம்புநிலை மக்களின் பதிவுகளை நாவல்கள் தன்வரலாற்றுப் புனைவுகள், புலம்பெயர் இலக்கியங்கள் எனப் பல்வேறு நிலைகளில் வெளிக்காட்டியுள்ளன. அதிலும் தன்வரலாற்று புனைவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. அதாவது,

”’விளிம்புநிலை மக்களின் மேன்மைக்காகப் பேசுகிறோம்’ என்ற வெற்றுப் பதிவுகள், தன் வரலாற்றுப் புலம்பல்கள், காலாவதியாகிப் போன போராட்டப் பார்முலாக்களையே கையாண்டு வந்த நிலைமை மாறி, தம் வாழ்வனுபவங்களிலிருந்து உலகத்தினரைக் கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்துகின்ற போக்கு, நடப்பில் விளிம்புநிலையினர் குறித்த பிரதிகள் வழி வந்துள்ளமை என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்” (மாற்றுவெளி, ப.96)

என்று கூறும் ஆ.பூமிசெல்வனின் கருத்து அதன் உண்மை நிலையை எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு விளிம்பினின்று வெளிவர பல்வேறு கோட்பாட்டு இயக்கங்கள் பல்வேறு நிலைகளில் முயலுகின்ற போதிலும், அது ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு தன்மையில் தனது அதிகாரத்தை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆக அதிகாரம் சார்ந்த விஷயங்கள் அழிந்தொழியும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும் புனைவுகளும், அதன் வாயிலாக இயங்கும் கோட்பாட்டு இயக்கங்களும் பல்வேறு புதிய பெயர்களில் சமூகத்தில் உலா வருவதையும் தவிர்க்க இயலாது.

துணை நூல் பட்டியல்
1.கங்கணம், பெருமாள் முருகன், அடையாளம், திருச்சி மாவட்டம், முதற்பதிப்பு, 2007.
2.திறனாய்வுக் கலை, தி.சு. நடராசன், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்(பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை-600098, இரண்டாம் அச்சு, ஜூலை, 1998.
3.பின் நவீனத்துவம் – இலக்கியம் – அரசியல், அ.மார்க்ஸ், விடியல் பதிப்பகம், கோவை, 1996.
4.பின் நவீனத்துவம் என்றால் என்ன?, எம்.ஜி.சுரேஷ், அடையாளம் பதிப்பகம், திருச்சி, 2009.
5.மாற்றுவெளி, வீ.அரசு, சென்னை, டிசம்பர் 2010.
6.Mathavaraj.com/2010-11

rathi.r1988@gmail.com