ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல்!

எழுத்தாளர் பிரபஞ்சன்நாவல் என்னும் இலக்கிய வடிவம் இக்கால இலக்கிய வகைகளுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்பாளிகள் மனிதநேய உணர்வு மிக்கவர்களாய் சமூக மாற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியே நாவல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டனர். நாவல் என்னும் இலக்கியவகை இன்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமகால வாழ்வின் எதிரொலியான இன்றைய நாவல்கள் காலத்திற்கு ஏற்ப பலவகைகளைக் கொண்டு சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல் எவ்வாறெல்லாம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.

சமூகப் பின்னணியும் நாவலும்
கல்வியினால் ஏற்பட்ட மாறுதல்கள் ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துப்போதல், சமுதாய மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென உந்துதல் போன்றவற்றால் தமிழ் நாவல் உலகில் மறுமலர்ச்சி உருவாயிற்று. இத்தகைய மாறுதல்கள் நிகழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இம்மறுமலர்ச்சி இலக்கிய உலகில் நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சமூக சிந்தனைகள் மக்கள் மனதில் உருவான பொழுதே மனிதனை மையமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள் தோன்றின. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் போது அந்த வாழ்வின் இயற்கை உந்துதலால் விளையும் தீமைகளை அகற்றுவதற்கான தேவையை உணர்த்துவதே நாவல் இலக்கியங்களின் நோக்கமாக அமைகின்றன.

“நாவல் இலக்கியம் சிறுகதையை விட சமுதாயப் பிரச்சனையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வகையாகும்”  (தமிழ் நாவல்கள்-ஓர்அறிமுகம்.ப.10) என்று கோ.வே.கீதா விளக்கம் தருகிறார். நாவல் வடிவத்தின் தனித்துவ நிலையே சமூக நடப்பியலை வெளிக்காட்டுவதே இந்த நெறிமுறை பிரபஞ்சன் நாவல்களில் நிறைய காணக் கிடைக்கின்றன.

சமய நிறுவனம்
ஒரு சமுதாயத்தை எதார்த்தமாகப் படைக்க விழையும் எழுத்தாளன் மதம் புனிதமானது சக்தி வாய்ந்ததெனினும் அதன் நன்மை, தீமைகளையும் தன் எழுத்தில் வடிக்க வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறான். சமுதாயங்களின் மையத்தில் அமையும் பல சிக்கல்களை வரையறுத்து ஒழுங்குபடுத்துவதற்குச் சமுதாயங்கள் பயன்படுத்தும் நம்பிக்கைகள், நெறிகள், மதிப்புகள் இவற்றின் தொகுதிகளே சமயம் சார்ந்த சமுக நிறுவனங்களாக அமைகின்றன. அந்த வகையில் ‘சந்தியா’ நாவலில் பிரபஞ்சன் இயேசு கிறிஸ்து பிறக்கின்ற மாதம் பற்றியும் அதனை மகிழ்ச்சியுடன்  வரவேற்கும் நிலையில் மக்கள் இருப்பதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிறிஸ்து புதுவருடத்தை உடன் கொண்டு வருகிறார். பழையன கழிந்து வாழ்வில் புதியதைப் புக வைக்கும் காலம் குளிர்காலம்”  (சந்தியா.ப.201)

கோயில்கள் கலைகளின் பிறப்பிடம் என்பதை நினைவூட்டும் விதமாக பிரபஞ்சன் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் இறைவனின் உருவத்தை சிறுகுழந்தையின் தோற்றமாக எடுத்துக் காட்டுகிறார்.

“உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்துமாதக் குழந்தை உட்கார்ந்து இருப்பது போல அத்தோற்றம் இருந்தது”   (கனவு மெய்ப்பட வேண்டும்.ப.231).

கல்விச்சூழல்

கல்வி என்பது சமுக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதே ஆகும். மனித சமூகம் நீண்ட நெடுங்காலமாக முயன்று தேடி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை மக்களிடையே வழங்கும் சாதனமாகக் கல்வி அமைகிறது.  கல்வி என்பது வேலைக்கு மட்டுமல்ல, சமுக சேவைக்கும் பயன்படும் என்பதை ‘சந்தியா‘ நாவலில் பிரபஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., வரை படித்த இளைஞன் அவன் வேலை இல்லாத இளைஞனாகச் சொல்லப்பட்டான். ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து ஊரில் சோம்பிக் கிடக்கும் லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவனாக அவன் இருக்க விரும்பவில்லை. இயல்பாகவே அவனுக்குள் இருந்த கருணை உள்ளம் அந்த அனாதை ஆசிரமத்தின்பால் சென்றது” (சந்தியா.ப.224).

 

கல்வி என்பதை எவ்வாறு கற்க வேண்டும் கற்றதையும், எவ்வாறு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை ஆசிரியர் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் சுட்டியுள்ளார்.
“அப்பா தமிழாசிரியர். வெறும் தமிழாசிரியராக அவர் இல்லை. தமிழைக் கசடறக் கற்றவர். மாணவர்களுக்கு வஞ்சம் இல்லாமல் வாரிக் கொடுத்துச் சொல்லிக் கொடுத்தவர்”
(கனவு மெய்ப்பட வேண்டும்.ப.11).

திறம்பட கற்றவர் தாம் பெற்ற கல்வியை, மற்றவர் பயன்பெறக் கூறுவர். மூத்தவர் தாம் பெற்ற அனுபவத்தையும் கேள்வி அறிவையும் பிறர் பயன்பெறக்  கூறுவர் என்பது பிரபஞ்சனின் எண்ணவோட்டமாகக் காணப்படுகிறது.

அரசியல் சூழல்
பிரபஞ்சன் அவர்கள் அரசியலுக்கு ‘சந்தியா’ நாவலில் தனிவிளக்கம் தந்துள்ளார்.

“அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் வெளிப்படையான செயல்முறை தத்துவம் சரியா, தப்பா என்று தேர்வதும், இணைவதும் தம் கையில், சரியான தத்துவமும் சரியான மனிதர்களும் இணைகின்ற போது அரசியல் தரமானதும் உயர்வானதுமாக இருக்கிறது. அயோக்கியர் கையில் அரசியல் தஞ்சம் புகுகின்ற போது, அரசியல் அசிங்கமடைகிறது”  (சந்தியா.பக்.123-124).

அரசாங்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை மகாநதி நாவலில் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

“அரசாங்கங்கள் பொதுவாகவே, மூடர்களாலும் அதிமூடச் சட்டங்களாலும் நடத்தப்படுபவை அவைகள் முயலைப் பிடிக்கத் தூண்டிலைப் போடும் அறிவிலிகள்”.
(மகாநதி.ப.236)

இக்கால அரசியல் பிரதிபலிப்பாக பிரபஞ்சனின் ‘முதல் மழைத்துளி’ நாவலைச் சுட்டலாம்.

பொருளாதாரச் சூழல்
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முக்கியமானவையாகும். இத்தகைய தேவைகளைப் பெறுவதற்காகவே பொருளதார நிறுவனங்கள் உருவாகின்றன. சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய உதவுவது பணம்தான் என்பதை ‘தீவுகள்’ எனும் நாவலில் சீனுவின் பாத்திரப் படைப்பு மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.“அவனைக் கஞ்சன் என்கிறார்கள், ஒருவன் ஊதாரியாக இருப்பதுதான் தவறு என்பான் சீனு உலகத்தில் சேர்க்கத்தக்க பொருள்களில் முதலாவது பணம் என்பது அவள் சித்தாந்தம்”   (தீவுகள்.ப.21)

ஆணுக்கு திருமணச் சந்தையில் அவனை அறிமுகப்படுத்தி வைப்பதே அவனது படிப்பும், வேலையும் தான் என்பதை பிரபஞ்சன் ‘தீவுகள்’ நாவலில் சுட்டிக் காட்டுகிறார்.
“பையன் எம்.பி.ஏ. நல்ல வேலையில் இருக்கான்” (தீவுகள்.ப.8).

மனிதர்கள் உயர்ந்து இருக்கும் போதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்தவர்களாக அமைகின்றனர். என்பது பிரபஞ்சனின் வாக்காக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. ஒருவனுடைய உயர்வு அவனுடைய குடிப்பிறப்பைப் பொருத்தும் அமைகிறது அவனது குடும்பம், பெற்றோரின் பெருமை, அவனுடைய குடும்பத்தின் பழம்பெருமை முதலியன சிறப்புடன் விளங்கும்போது அவனுடைய மதிப்பும் உயர்ந்து காணப்படும். தாய், தந்தையைப் போலத்தான் பிள்ளைகளும் அமைவார்கள் என்னும் கொள்கையைக் கொண்டது இச்சமுதாயம் என்பதை ’கனவுகளைத் தின்போம்’ நாவலில் நேர்முகத் தேர்வில் கேட்கும் வினாவாக பிரபஞ்சன் எடுத்துக் காட்டியுள்ளார்.

“உங்க குடும்பம் உடைஞ்ச குடும்பமாமே. . . ?
உங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இல்லையாமே. … ?” (கனவுகளைத் தின்போம்.ப.232).

முடிப்பு
வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கலையுணர்வோடு தாம் கண்ட உண்மை நிகழ்வுகளுடன் இணைத்தே நாவல்களைப் படைத்திருக்கிறார் ஆசிரியர், சமயங்கள் மனிதனை மேம்படுத்தவே உருவாயின என்பதைச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கல்வி என்பது வேலைக்கு மட்டும் பயன்படுவதல்ல சமூக சேவைச் செய்யும் மனப்பான்மையை உருவாக்குவதும் கல்வியே என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அரசியல் வாழ்வு என்பது தன்னலமற்று இருக்க வேண்டும் என்பதை நாவல் வழி அறியமுடிகிறது. மனிதனின் மதிப்பு மிகுப் பொருளாக பணம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வேலை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் அவசியமான ஒன்றாகும். அதுதான் அவர்களுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி கொடுக்கும் களமாக அமையும் என்பதை நாவல்வழி அறியமுடிகிறது. மனிதர்களின் மனநிலை அவர்களின் குடிப்பிறப்பில் தான் அமையும் என்ற மனநிலையை நாவல்கள் வழியே மாற்றியமைத்துள்ளார் ஆசிரியர். சமயம், கல்வி, அரசியல் ஆகியவைச் சிறப்பாக அமைந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் சிறப்படைவர் என்பதை பிரபஞ்சன் தாம் படைத்த நாவல் கதாபாத்திரங்கள் மூலம் படைத்துக் காட்டியுள்ளார்.

துணைநூற்பட்டியல்
1. கீதா.கோ.வே (1979), தமிழ்நாவல்கள்-ஓர் அறிமுகம், அணியகம், சென்னை
2. பிரபஞ்சன், (1991), கனவு மெய்ப்பட வேண்டும், பூஞ்சோலைப் பதிப்பகம், சென்னை.
3. பிரபஞ்சன், (1995), சந்தியா, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
4. பிரபஞ்சன், (1998), மகாநதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
5. பிரபஞ்சன், (1996), தீவுகள், கவிதா பப்ளிகேஷன், சென்னை.
6. பிரபஞ்சன், (2000), கனவுகளைத் தின்போம், கவிதா பப்ளிகேஷன்,  சென்னை.

mscomputerkaranthai@gmail.com