ஆய்வு: புறநானூற்றில் வறுமையில் செம்மை

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை! வறுமை மனிதனுடன் நீங்காத தொடர்புடையது. இத்தொடர்பு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சற்றுக் காலங்கடந்து மனிதன் பக்குவமடைந்து உயர்வு தாழ்வு பேணும்போதுதான் வறுமையின் முழுப்பொருளாழம் கடைநிலை மக்களைத் தாக்கி உணர வைத்தது. குறிப்பாகச் சங்க இலக்கியக் காலத்தில் வறுமையின் தாக்கத்தை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்திய மனிதக் குலம் இன்றுவரை வறுமையைத் தீர்க்கப் போராடியும் வருகின்றது.

வறுமை மிகக் கொடியது
 இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்த வரையில் வறுமையின் காரணமாக ஒருவன் தவறான செயலில் ஈடுபடச் சமூகம் அவனைத் தூண்டி விடுமானால் சில நேரத்தில் அச்செயலைப் பொறுத்து அவன் எடுக்கும் முடிவுகள் தவறில்லை என்பதாகவும் கருதி விடுகின்றனர். வறுமை என்பது மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமையென்று மற்றவர்களும் உணரும் தேவை ஏற்பட்டபோது அதனைத் தீர்க்க மற்றவர்கள் முன்வராத நிலையில் வறுமைக்கு உள்ளானவன் எடுக்கும் முடிவு தவறானதாயினும் சரியாகவே கருதப்படும். தவறான முடிவாக இருக்குமானால் அம்முடிவிற்கும் பாடபேதம் கற்பிக்கும் நிலை இக்காலச் சூழலில் உள்ளது. ஒருவனின் வளர்ச்சியில் மற்றவனின் பங்கு இருப்பதைப் போலவே அவனுடைய வறுமைää தாழ்விலும் மற்றவரின் பங்கு இருக்கின்றது என்பதை உணர்ந்ததினாலேயே வறுமை ஒழிப்பிற்கு அனைவராலும் குரல் கொடுக்க முடிகின்றது. வறுமை தற்காலிகமானதுää இதனைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையினால்தான் வறுமைக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். வறுமை என்பது மனிதக் குலத்திற்கு எதிரானது என்ற கருத்தில் பிளவு இருக்க முடியாது. இதனை எதிர்ப்பதில் உள்ள சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் சமூகம் அவனை எதிர்கொள்கின்றது. வறுமை மிகக் கொடியது. வறுமையிலும் இளமையில் கொல்லும் வறுமையானது மிகவும் கொடுமையானது என்பது ஒளவையின் வாக்கு. இவ்வுலகத்தில் பிறந்து மகிழ்ச்சியாகவும் இயற்கையாகவும் சுற்றித் திரியும் இளமைப் பருவத்தில் இவ்வறுமை நமக்கு ஏன் வருகின்றது என்பதை அறியாமலே அதனில் உழன்று தலைமீது சுமந்து வாழும் இளமையான வாழ்க்கையானது கொடுமையானது என்பதை ஒளவை உணர்த்தி இருக்கின்றார். நீதியையும் அறநெறியையும் போதிக்கும் இலக்கியங்கள் வறுமையை எதிர்த்துள்ளன. வறுமையினால் மற்றவரிடம் இரந்து உயிர்வாழும் நிலை ஏற்படின் இவ்வுலகமே கெட்டழியட்டும் என்று வறுமையை உருவாக்கக் காரணமான சமூகத்தையே சாடுகின்றார் வள்ளுவர்.

ஒரு மனிதனின் தவறான சிந்தனைக்கும் தீய வழிகளுக்கும் சமூகத்தால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வறுமைதான் காரணம் என்பதைச் சமூகமே அறிவதால் அவனின் தீய வழிகளைத் திருத்தும் முயற்சி சரியான வழியாக அமைகின்றது. இந்நிலை சங்க இலக்கியக் காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். வறுமை என்பது அவனுக்கானது. வறுமையை எதிர்த்து யாரும் போராட்டம் அல்லது வேறு வழிகளைக் கையாளவில்லை. ஆனாலும் வறுமையில் வாடிய புலவர்களும் கலைஞர்களும் பாணர்களும் இரவலர்களும் தவறான பாதையில் சென்றுவிடவில்லை. தாமும் தமது குடும்பமும் வறுமையில் வாடினாலும் பிறர்மீது குற்றமோ பழியோ சுமத்தவில்லை. பொய்யோ களவோ மிகுந்து காணப்படவில்லை. தங்களது உயர்போகும் வறுமையிலும் தீய நெறிகளைக் கடைப்பிடிக்காமல் மனத்தளவில் தவறான எண்ணங்களையும் வஞ்சங்களையும் வளர்க்காமல் வாய்மையோடு செம்மையான வாழ்வை நடத்தினர் என்பதுதான்ää குடும்ப வாழ்வின் உன்னதமாகக் கருதப்படுகின்றது. ஒன்றுää மன்னரின் அதிகாரத் தோரணையுடன் போட்டி போட்டு எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாது. மற்றொன்றுää வறுமை என்னும் வாழ்க்கை தனக்கானது என இயல்பாக ஏற்றுக்கொண்டது இந்த இரண்டு காரணங்களினால் வறுமை மீண்டும் மீண்டும் அதிகரித்து வந்துள்ளதை இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வறுமைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாத மன்னராட்சியும் அரசப் பரம்பரையும் வறுமையைத் தங்களை உயர்த்திக் காட்டும் அளவுகோலாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது உண்மை. தங்களுடைய படைச்சிறப்பையும் ஈகைத் தன்மையையும் பெருமையாகப் பேசுவதற்கு வறுமையால் வாடிய புலமை வாய்ந்த சான்றோர்கள் தேவைப்பட்டார்கள். இந்நிலையிலும் உண்மையாகவே உயர்நோக்கோடு வாழ்ந்த குடும்ப அமைப்பு சங்கக் காலத்திற்குச் சொந்தமானதாகும். ஈகையும் கொடையும் விருந்தோம்பலும் அதிகமாகக் காணப்பட்டன என்றால் மறுபுறம் வறுமையும் பஞ்சமும் மிகுந்திருந்தன என்பதை மறுக்க முடியாது.

 மன்னனிடம் உள்ள பொருள்கள் வறுமையைப் போக்க முயற்சி செய்தது என்பதோடு உயர்குடியினரின் புகழையும் ஈகைத்தன்மையையும் உயர்த்திப் பேசப் பயன்பட்டது. மக்களிடம் உள்ள வறுமையானது மன்னனுக்குரியது. மன்னனிடம் உள்ள செல்வங்கள் மக்களுக்குரியன. இரண்டும் சரிவிகிதமாக இல்லாமல் ஒருசாராரிடமே ஒன்று மட்டுமே மிகுதியாக இருந்ததினால் செல்வம் மன்னனையே நாடிச் சென்றது. வறுமை புலவர்களிடமே பொதிந்து கிடந்தது. பொருளைப் பெற வேண்டிய புலவர்கள் பொய் கூறவில்லை என்பதே உயர் விழுமியமாகக் கருதப்படுகின்றது. குடும்ப வறுமையை மனத்தில் கொண்டு இல்லத்தரசியானவள் எந்தவிதத் தவறான முடிவையும் எடுத்திராமல் கணவனால் கொண்டு வரப்படும் பொருளுக்காகக் காத்திருக்கின்றாள். வறுமையில் குடும்பம் என்னும் அமைப்பை எந்தவிதமான கீழ்நிலைக்கும் இட்டுச் செல்லவில்லை என்பது புறநானூறு வழிக் கிடைக்கும் செய்தியாகும். பொருளுக்காக மன்னனிடம் செல்லும் புலவனுக்குப் பொருள் கொடுக்கவில்லையாயின் கோபத்தோடு அவனைத் திட்டிச் செல்லாமல் அவனுடைய மனைவியையும் மக்களையும் வாழ்த்தி வெறுங்கையுடன் வீடு வந்து சேரும் உயர் பண்பைத் தனதாக்கிக் கொண்டிருந்தவர்கள் சங்கக் காலப் புலவர்கள்.

திருந்தா வாழ்க்கை
 புலவனின் வறுமையைப் பற்றிக் கூறும்போது பெருங்குன்றூர்க் கிழார் நேர்த்தியாக எடுத்துக் கூறியுள்ளார். விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு. தன்னுடைய வீட்டில் எவை இருந்தாலும் வீட்டைத் தேடி வரும் விருந்தினருக்குப் பகிர்ந்து கொடுத்து விருந்தோம்பல் செய்தல் சிறந்த பண்பாகப் பாதுகாத்து வந்தனர். விருந்தினர் வரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்று விருந்து உபசரிக்க முடியாத வாழ்க்கையாகிப் போய்விட்டது என்று தன் வறுமையைக் காட்டி நிற்கின்றார் பெருங்குன்றூர்க் கிழார்.

  “விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை”

 விருந்தினர்களைக் கண்டு ஒளிந்து கொண்டு வாழும் வாழ்க்கையைத் திருந்தா வாழ்க்கை என்று குறிப்பிடுகின்றார் பெருங்குன்றூர்க் கிழார். விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் மனப்பக்குவத்தையும் நாகரிகத்தையும் என்னுடைய வறுமையினால் இழந்துவிட்டேன் என்று குறிப்பிடுவதைத் திருந்தா வாழ்க்கையாக அடையாளப்படுத்துகின்றார். இந்;த வறுமை நிலையில் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் வாழும் நிலை வேண்டி பொய்யான புகழைக் கூறிப் பொருள் பெறுவதில்லை என்பதே தமிழர் பண்பாட்டின் அடையாளமாகக் கருத முடிகின்றது.

 முதல் நாள் பரிசில் வேண்டி வந்த பொழுது என் கையில் உள்ளதாகக் காட்டினாய். அதுவும் பொய்த்துப் போய்விட்டது. நான் வருந்திக் கூறியும் அதற்காக நீ நாணம் கொள்ளவில்iலை. மாறாக எனக்குப் பரிசில் தராமல் அனுப்பி வைத்தாய். அதனால் வெறுங்கையுடன் திரும்பிச் செல்கின்றேன். ஆனாலும் வெற்றி கொள்ளும் உனது அகன்ற மார்பை வாழ்த்திச் செல்கின்றேன் என்று பெருங்குன்றூர்க் கிழார் குறிப்பிடுகின்றார். பொருளில்லாமல் செல்லும் என்னுடைய குடும்பமானது எந்த நிலையில் இருக்கும் என்று விளக்குவதாக அவனுடைய பாடல் அமைந்துள்ளது. இதன் வழியாக வறுமையின் முழுமையையும் அதனால் தன்னிலை தாழாமல் வாழும் குடும்பத் தலைவனின் மாண்பும் உணர்த்தப்படுகின்றது.

“இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்த என்வாள் நுதற்படர்ந்தே!”

 எலியால் தோண்டப்பட்ட இடிந்த சுவருடைய வீடு என்பது அவ்வீட்டின் வறுமையைக் குறிக்கின்றது. குழந்தையானது இளம் வயதில் உணவாகக் கொள்வது தாய்ப்பாலாகும். பஞ்சத்தினால் உணவின்மையால் மனைவியின் மார்பில் சுரக்காமையால் பால் குடிப்பதையே மறந்த மகனைக் கண்டதே புறநானூற்றுப் புலவனின் வாழ்க்கை. அப்படி இருந்த போதிலும் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி என்ற குடும்பம்தான் பண்பாட்டைக் கணவன் மனைவி உறவு உயர்நெறிகளை வலியுறுத்தி நிற்கின்றது. தன் மனைவி மக்கள் வறுமையில் வாடினாலும் பொருள் கொடுக்காத மன்னனை வாழ்த்தும் தலைவனின் பண்பு போற்றுதலுக்கு உரியதாகக் கருதப்படுகின்றது.

வறுமையும் பஞ்சமும்
 பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தன்னுடைய இல்ல வறுமையைப் போக்கக் குமணனிடம் சென்றார். குமணன் பொருள் கொடுக்காமல் வறிதே திரும்பி வீடு வருவதாகத் தம்முடைய வறுமை நிலையை எடுத்துக்காட்டுவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. நாள்தோறும் சமையல் செய்யும் அடுப்பானது சற்றுச் சூடாகவும் பயன்பாட்டில் உள்ளதாகவும் இருக்கும். சாம்பல் பூக்கும் அடுப்பில் காளான் பூக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். நீண்ட குளிர்ச்சியும் சரியான ஈரப்பதமும் காளான் வளரும் இடங்களாகும். புலவனின் வீட்டு அடுப்பானது சமைத்துப் பல நாளாகிக் காளான் பூக்கும் தன்மையைப் பெற்றிருப்பதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுவது வறுமையையும் பஞ்சத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.

“ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம் தன்மகத்து முகம்நோக்கி”

 வறுமையினால் மனைவியின் மார்பில் பால் இல்லாமல் போனதால் பசியால் அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் முகத்தை நோக்கி இதழ் துடிக்கக் கண்ணீர் மல்கி என் மனைவி நிற்பாள். அவளின் துன்பம் போக்கப் பொருள் தருவாய் என வந்தேன். பொருளில்லாமல் வறிதே திரும்புகின்றேன் என்ற பாடல் குடும்ப வறுமையையும் கணவன்மீது மனைவி கொண்டிருக்கும் முழுமையான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வளவு கொடுமை நிறைந்த வறுமையைப் போக்கப் புலவன் ஒருபோதும் தவறான வழியைப் பயன்படுத்தவில்லை என்பதே உயர் பண்பாகும். புலவர் பெருஞ்சித்திரனார் குமணனைக் கண்டு பரிசில் கேட்கும்பொழுது தனது வறுமை பற்றிக் கூறும் பாடல். சங்கக் காலத்தில் வறுமையில் வாடிய வாழ்க்கை முறை தம் கண்முன் நிற்பதாகக் காட்சியளிக்கின்றது. நீண்ட ஆண்டுகளாக வறுமைத் துன்பத்தில் வாடியிருந்து சாவை எதிர்நோக்கியுள்ள குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளவள் மனைவி என்ற வறுமை நிலையைப் புலவர் எடுத்துக்காட்டுகின்றார். பல நாள்கள் உணவு சமைக்காத அடுப்பில் பூஞ்சை இருக்கும். அப்பழப்பட்ட வறுமையான வீட்டில் குப்பைமேட்டில் வளர்ந்திருக்கும் வேளைக் கீரையுடன் சோறு சேர்த்துக் கொள்ளாது உப்பையும் சேர்க்காது உண்டு வாழும் வாழ்க்கை சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

“பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்து தினவாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரைக்கொய் கண்ணகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று”

 உப்பில்லாத பசிய இலையை மட்டுமே உணவாகக் கொள்ளும் இல்வாழ்க்கையின் கொடுமையை யாரும் அறிந்திடக் கூடாது என்று மறைவாக உண்டு வாழும் வாழ்க்கையைச் சங்கக் காலத்து மக்கள் வாழ்ந்திருந்தனர். அழுக்கேறிய உடையையும் சுகாதாரமில்லாத நீரையும் கொண்டு இதுவே தங்களுக்கான வாழ்வென்றெண்ணி வாழ்வு நடத்தி வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட வறுமையான வாழ்க்கையையும் உன்னதமாகää உண்மையுடன் நடத்திச் சென்றது குடும்ப வாழ்வின் உயர்ந்த பண்பாகக் கருதப்படுகின்றது. குப்கைக் கீரையை உப்பில்லாமல் உணவாகக் கொள்ளும் நேரத்தில் யாருக்கும் தெரியக் கூடாது என்ற நிலை அக்குடும்பத்தில்  இருக்கின்றது.

உத்திகள் இரண்டு
 குழந்தையின் அழுகையை நிறுத்த இரண்டு வகையாக உத்திகளைக் கையாள்வர். ஒன்றுää இயற்கையை இனிமையான பொருள்களைக் கொண்டு புதுமையைக் காட்டிப் பசித் துன்பத்தை மறக்கச் செய்வது. மற்றொன்றுää எச்சரிக்கும் படியான அச்சமூட்டக்கூடிய பேய்ää விலங்கு என்று காட்டி அதன் கொடூரத்தைக் கொண்டு குழந்தையின் பசித்துன்பத்தை நீக்குவதாகும். பசியின் கொடுமையினால் பால் கிடைக்காமல் வீட்டிலுள்ள உணவுப் பாத்திரங்களை எல்லாம் தேடி அங்கும் பசிக்கான உணவு இல்லாதபோது குழந்தை அழுகையை மேற்கொள்கின்றது. அதே நேரத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் உத்தியாகத் தாய் நிலவைக் காட்டிச் சமாதானம் செய்கின்றாள். புலி வரவு காட்டி அச்சுறுத்துகின்றாள். தன் அழுகையை நிறுத்திக் கொள்ளாதவன் அப்பாவை எப்படி வெறுப்பாய் என்று கேட்டபோது அப்பாவை வெறுப்பதுபோல் முகம் சுளுக்கிக் காட்டி அழுகையை நிறுத்துகின்றான். குழந்தையின் சுளித்த முகம் கண்டு தாய் மனம் கலங்கி நிற்கின்றாள்.

“உள்ளில் வறுங்கலம் திறந்து அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்த நின்செவ்வி காட்டெனப் பலவும்
வினவல் ஆனா ளாகி”

என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல் வறுமையின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு குடும்பத்தின் வறுமை நிலைக்கு அத்தலைவன் பொறுப்பேற்க வேண்டும் என்ற செய்தியை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. பட்டினியால் வாடும் குழந்தைக்குப் பசி போக்க முடியாத தந்தையை வெறுக்கும் தன்மையைப் பார்க்க முடிகின்றது. தனது வறுமையின் உச்சக் கட்டத்தைக் குழந்தையும் அனுபவிக்க வேண்டி உள்ளது என்பதைக் கண்டு தலைவி மனம் வெதும்புவது குடும்ப வறுமையை எடுத்துக்காட்டுகின்றது. வறுமைத் துன்பத்தை ஏற்க முடியாத சூழலில்தான் எங்களைப் போல ஈதல் தன்மை கொண்டவர்கள் இல்லாது ஒழிந்து போகட்டும் என்று வாழ்க்கையை வெறுக்கின்றார்கள் சங்கக் காலத்துப் புலவர்கள். என் மனைவியின் உயிர் சிறிதளவு இருக்குமானால் அவள் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளின் அன்பைப் பாதுகாக்கப் பரிசுப்பொருள் இல்லையாயினும் பரவாயில்லை என்று மனைவியின்மீது கணவன் கொண்டிருக்கும் பற்றினையும் கணவன்மீது மனைவி வைத்திருக்கும் பற்றினையும் வறுமையிலும் இழக்காமல் பாதுகாப்பதுதான் இல்லறத்தின் உயர் தன்மையாகக் கருதப்படுகின்றது.

“அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ”

என்று பெருங்குன்றூர்க் கிழாரின் பாடல் வழியாக வறுமையால் வாடித் துடிப்பதைக் காட்டிலும் பிறக்காமல் இருப்பதே மேல் என்று வாழ்க்கையின்மீதுள்ள வெறுப்பை எடுத்துக்காட்டுகின்றது.

 தன்னுடைய வறுமையைப் போக்க மன்னர்களிடம் பொருள்தேடச் செல்வது புலவர்கள் மற்றும் கலைஞர்களின் இயல்பு. பொருள் வைத்திருக்கும் புரவலனும் இல்லையென்று மறுத்தால் பெருமையோடு வாழ்;ந்துவிட்டு வீடுதிரும்பும் மனநிலை புலவர்களுக்கு இருந்தது. பொருள் இருந்தும் இல்லையென்னும் பண்பைக் கொண்டுள்ள மன்னர்கள் இருப்பார்களேயானால் அவர்களின் குழந்தைகள் சீரும் சிறப்புமாக வாழ்க என்று வாழ்த்திவிட்டு (புறம். 196)ää தாம் வந்த பனியிலும் வெயிலிலும் சுணங்காது நடந்து சென்று வறுமையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தனது அன்பிற்கினிய மனைவியை நோக்கிச் செல்கின்றேன் என்ற செய்தியின் வழியாக ‘ஆவூர் மூலங்கிழார்’ என்னும் புலவரின் வாழ்க்கையில் வறுமையிலும் தம் மனைவி வாய்மையோடு இருந்தமையைக் காண முடிகிறது. பழுமரத்தில் இருக்கும் கனிகளைப் பறவைகள் கொத்தித் தின்பது போலப் புரவலர்களிடம் உள்ள பொருள் புலவருக்குச் சொந்தமானது. பல நாள்கள் சென்றாலும் கனிகளைக் கொடுக்கும் தன்மை கொண்டது பழுமரமாகும். இதே தன்மையைப் புரவலனிடம் காண முடியும். முதல்நாள்ää மறுநாள் என்று வேறுபாடு இல்லாமல் புலவருக்குக் கொடுப்பது புரவலரின் கடமையாகும். மலையில் பிறக்கும் அருவி கொள்ளிற்குப் பயனாவது போல் மரம் விடும் கனிகள் பறவைக்குப் பயனாவது போல் மலையில் இருக்கும் சந்தனம் மனிதருக்குப் பயனாவது போல் மன்னனிடம் உள்ள பொருள்கள் மக்களுக்கும் இரவலர்களுக்கும் உரியன.

முடிவுரை
 இல்லத்தின் கடமைகள் என்றெண்ணிச் செய்த உதவிகளும் உயர்பண்பு அடங்கிய அறங்களும் குடும்பத்தில் விளைகின்ற விளைபொருளாகவும் குடும்பத்தின் உயர்பண்பாகவும் செழுமைப்படுத்தப்படுகின்றன. குடும்பத்தின் வழியாகக் கிடைக்கப்பெறும் அறத்தையும் தவத்தின் வழியாகக் கிடைக்கப்பெறும் அறத்தையும் பிரித்துப் பார்த்துக் குடும்ப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வறுமையின் செம்மை பற்றிய செய்திகள் புலனாகின்றன.

cmkala59@gmail.com