காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப்பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள்> புதுமையை விரும்புகிறவர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமுத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆண் சொல்வதைத் தான் பெண் கேட்டு நடக்க முடியும். குடும்பத்தில் பெண்ணைக் கலந்தாலோசித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை இருந்தது. குடும்பத் தலைவனாகிய ஆண் சொல்வதே முடிவு. அதை எவராலும் மாற்ற முடியாது.
இவற்றுக்கு எல்லாம் மேலாக கணவன் இறந்த பின் மனைவி உயிரோடு இருக்கக் கூடாது என்று ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டது. ஆனாலும் கணவனை இழந்த பெண்கள் எவ்வளவு சிறு வயதாக இருந்தாலும் அவர்களுக்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை உடுத்தி, உணவு முறைகளையும் மாற்றி எங்கும் வெளியில் விடாமல் கொடுமைப்படுத்தி வைத்திருந்தனர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப பெண்களைக் கொடுமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்த முறைகளை எல்லாம் மாற்றி, அவர்களுக்கு நல்லாழ்வளிக்க வேண்டுமென்று பல தலைவர்களும், கவிஞர்களும் போராடினார்கள்.
பெண் விடுதலைக்காகத் தன்னுடைய கவிதைகள், சிறுகதைகள் மூலம் போராடியவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் நம் புரட்சிக்கவி பாரதியார். கற்பென்றாலே அது பெண்ணுக்கு மட்டுமே உரியது எனக் கூறிய சமுதாயத்தில்,
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும், அஃது பொதுவில் வைப்போம்”
என்று உரக்கப் பாடியவர் பாரதியார். எந்தவொரு மூடக் கட்டுப்பாட்டையும் தகர்க்க நினைக்கும் போது பல இடையூறுகள் வரும். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி பெண்களுக்கு விடுதலை கொடுப்பதின் ஆரம்ப நிலையாக சில கருத்துக்களை முன் வைக்கிறார்.
“பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்” என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.
அவர் கூறிய இக்கருத்துக்கள் எல்லாம் அடிப்படையாகப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதை,
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்”
“விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்போம்
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பாராம்
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்”
என்ற இப்பாடலடிகளின் மூலம் உணர முடிகிறது. மேலும் பாரதியார் எழுதிய சிறுகதைகளிலும் அன்றைக்கு இருந்த சமுதாய மரபை உடைத்துக் கொண்டு வெளியே வரும் பெண்களைப் பார்க்கலாம்.
“சந்திரிகையின் கதை” என்ற சிறுகதையில் கோமதி ஐந்து பெண் குழந்தைகளுக்குத் தாயாகி, ஆறாவது பிரசவத்திற்கு நாட்கள் நெருங்கிய நிலையில் இருந்தபோது கிராமத்தில் பெருமழையும், சூறைக்காற்றும் மிகவும் உக்ரமாக வீசியதுடன் பூகம்பமும் ஏற்பட்டதால் அக்ரஹாரத்தில் உள்ள அனைத்து வீடுகளும் இடிந்து வீழ்ந்து விடுகின்றன. அப்பொழுது கோமதி, அவள் கணவனின் விதவையான தங்கை விசாலாட்சி இருவர் மட்டுமே உயிர்பிழைக்கின்றனர். நிறைமாத கர்ப்பிணி கோமதிக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் சிகிச்சையில் இருக்கின்றபோது விசாலாட்சியிடம் தான் இரு நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை. எனவே உன்னிடம் சில வார்த்தைகள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்கிறாள்.
“முதலாவது நீ விவாகம் செய்து கொள். விதவை விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும், பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்கும் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால் நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பில் போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துப்போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு, உதவி செய்யும் சபையாரைக் கண்டு பிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத்தேடி வாழ்க்கைப்படு” (மகாகவி பாரதியார் கதைகள் ப.178-179) என்று கோமதி விசாலாட்சிக்கு அறிவுரை கூறுவதாகக் காட்டியுள்ளார். குருதியோடு கலந்துவிட்ட பண்பாடு உணர்வுகளுக்குள் சிக்குண்டு தவிக்காமல் கணவன் இறந்த பின் பெண்கள் மறுபடியும் திருமணம் செய்வதை ஆதரித்து குடும்பத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் நற்சிந்தனைக்கும் உறுதுணையாக இருப்பவளே பாரதியின் புதுமைப் பெண் கோமதி.
பாரதியின் ‘சந்திரிகையின் கதை’ விசாலாட்சி பத்து வயதில் ருதுவாகும் முன்பு கணவனை இழந்த கைம்பெண் கோலம் ஏற்காமல் வாழ்பவள். அண்ணி விசலாட்சியின் அறிவுரைப்படியும் தனக்கு இயல்பாக இருக்கும் மன தைரியத்துடன் தொண்டுள்ளத்தோடு விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரேசலிங்க பந்தலு தம்பதியாரைச் சந்திக்கின்றாள். விசாலாட்சி அவரிடம் தனக்கு தகுந்த ஒரு வரன் பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அத்தம்பதியரும் கோபாலய்யர் விசாலாட்சிக்கு ஏற்றவர். திருமணம் செய்து கொள்ள கோபாலய்யருக்கு விருப்பமுள்ளதா எனக் கேட்போம் என்று கேட்க கோபாலய்யர் வேலைக்காரி மீனாட்சியைக் காதலிப்பதாகக் கூறிவிடுகின்றார். பின்பும் மனத்தளர்வின்றி தனது உறவுக்காரியும் தோழியுமான முத்தம்மா வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறி வீரேசலிங்க பந்தலு வீட்டில் இருந்து கிளம்பிவிடுகிறாள். முத்தம்மா வீட்டில் தங்கியிருக்கின்ற போது அவளது கணவன் சோமநாதய்யர் விசாலாட்சியிடம் இன்பம் துய்க்க முயன்று நெருங்கிய போது துணிந்து இடுப்பிலே வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது மார்புக்கு நேரே காட்டி “வெளியே போம்” என்று கர்ஜித்து சோமநாதய்யரையே வெளுவெளுக்கச் செய்து பாரதியின் அச்சம் தவிர்த்த புரட்சிப் பெண்ணாக விசாலாட்சி படைக்கப்பட்டுள்ளாள். பின் விசுவநாத சர்மாவைக் காதலித்து மணம் முடிக்கிறாள்.
தமது படைப்புக்களில் புதுமைப்பெண்களையும் புரட்சிப் பெண்களையும் படைத்துக் காட்டுகிறார் பாரதியார். பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்ந்தால் தான் பெண்ணினம் மட்டுமல்ல இந்தச் சமுதாயமும், நாடும் முன்னேறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லாமல் தனது கவிதைகளிலும், பிற படைப்புக்களிலும் பாரதியார் பெண் விடுதலையை மிகத் துணிச்சலோடு எழுதியுள்ளார். இன்று பெண் விடுதலை குறித்துப் பாடுவதும் எழுதுவதும் எளிது. ஆனால் அன்று பெண்ணடிமைத் தனம் மிகுதியாக இருந்த காலத்தில் பாரதியாரின் படைப்புக்கள் பெண் விடுதலையின் விடியலுக்கான புரட்சிப் படைப்புக்களாக இருந்தன என்று சொல்வதில் பெருமை கொள்ளலாம்.
துணைசெய்த நூல்கள்:
பாரதியார் கவிதைகள் – நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் – சென்னை (2014)
மகாகவி பாரதியார் கதைகள் – சேது அலமி பிரசுரம்
மகாகவி பாரதி பார்வைகள் – கவிதா பப்ளிகேஷன்
Yogam Thomas <yogamthomas@gmail.com>
*கட்டுரையாளர் – – செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். –