‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள்
சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக்கூறுகளையும் பண்பாட்டு உள்ளோட்டங்களையும் நாட்டார் வழக்காற்று இலக்கியங்கள் கொண்டு திகழ்கின்றன. இவ்விலக்கியப் பரப்பில் கல்வராயன் மலைவாழ் மலையாளி பழங்குடிகளின் பழமொழிகள் இக்கட்டுரையில் விளக்கம்பெறும்.
மூதறிவிலிருந்து தோன்றிய மொழி பழமொழி. நினைப்பிற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வருபவை என்பதை அதன் பெயரே உறுதிப்படுத்துகிறது.
தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் என ஆறுபொருள் இருப்பதாகச் சேந்தன் திவாகரம் கூறுகின்றது.
பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ் அவர்கள். பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது ஆகும் (2003:104).
தொல்காப்பியர் பழமொழியை, ‘முதுசொல்’ ‘முதுமொழி’ என்று குறிப்பிடுகிறார்
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்’ தொல். 391
‘ஏது நுதலிய முதுமொழி என்ப’ தொல். 165
தொல்காப்பியர் பழமொழியை ‘முதுமொழி’ ‘முதுசொல்’ என்ற பெயரால் அழைக்கிறார். இளங்கோவடிகள் ‘நெடுமொழி’ என்று அழைக்கிறார். திருவெம்பாவை ‘பழஞ்சொல்’ என்றும் குமரேச சதகம் ‘உலகமொழி’ என்றும் கொன்றை வேந்தன் ‘மூத்தோர் சொல்’ என்றும் அழைக்கின்றன. கம்பரும் பழமொழியை ‘மூதுரை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியர் பழமொழியை ‘பழம் வார்த்தை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். பார் புகழும் பாரதி பழமொழியைத் தனது பாடல்களில் புகுத்திப் பாடியுள்ளார். தொல்காப்பியர் காலந்தொட்டு இலக்கிய வழக்கில் பயின்று வந்ததை அறிகிறோம்.
பழமொழிகளை உலகிலுள்ள அனைத்துச் சமுதாயங்களும் ஆக்கம் செய்துள்ளன. முன்னேறிய சமுதாயமும் முன்னேற்றமில்லாப் பழங்குடிச் சமுதாயமும் பழமொழியைப் பயன்படுத்துகின்றன. சமுதாயத்தில் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தவும் தவறு செய்யும்போது இடித்துரைக்கவும் சமுதாயத்தில் இதைச் செய்யவும், இதனைச் செய்யக்கூடாது எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர் (2003:115). அந்தவகையில் கல்வராயன் மலைப் பழங்குடிகளான மலையாளிகள் மத்தியில் பயன்படுத்துகின்ற பழமொழிகளைப் பற்றி கீழே காணப்போகிறேம்.
1. தமிழக பழங்குடிகளை மூன்று பெரும் பிரிவினராகப் பிரிக்கலாம். 15,16- ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறி (குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளிலிருந்து) மலைப் பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்த பழங்குடியினருடன் கலந்து, பழங்குடிப் பெண்களை மணந்து அங்கேயே நிரந்திரமாகத் தங்கிவிட்ட பழங்குடிகள்.
2. தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் சிதறி வாழும் பழங்குடியினர்.
3. தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் பழங்குடியினர்.
தமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ‘மலையாளிகள்’ என்ற இனத்தைச் சார்ந்தவர்கள். இம்மலையாளிகள் ஏனைய பழங்குடிகளான தொதுவர், கோத்தர், பணியர், குரும்பர்போல பண்டையப் பழங்குடிகள் என்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கொல்லி மலை, பச்சை மலைப் போன்ற மலைகளில் பழங்குடி மலையாளிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களை மலையாளிகள் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ் மட்டுமே பேசுகின்றனர். எனவே, இவர்களைத் தமிழ் மலையாளிகள் என்றே கூறவேண்டும்.
நம்பிக்கைகள்
கல்வராயன் மலையாளிப் பெண்கள் எப்பொழுதும் சுமங்கலியாகவே இருக்க வேண்டும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. எனவே, விதவைகள் மறுமணம் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். பெண்கள் இறக்கும் பொழுதும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதே இவர்களுடைய எண்ணமாகும். அப்படி மறுமணம் செய்து கொள்ளாமல், விதவைகள் இருந்தால் வாழாவெட்டி என்று அழைக்கின்றனர்.
பழமொழிகள்
பழய மரபுகளும் மொழிக் கூறுகளும் பண்பாடுகளும் இன்னும் மாறாது இருப்பதை காட்டுவது நாட்டுப்புற பழமொழிகளே என்று கூறினால் அது மிகையாகாது. அதுபோல கல்வராயன் மலையாளிகள் பயன்படுத்தும் பழமொழிகளின் வாயிலாக அவர்களின் பண்பாடும் வினோத நம்பிக்கைகளும், பழைய சொல்லாட்சிகளும் வெளிப்படுகின்றன. ஆகவே, இம்மக்களின் பழமொழிகள் வாயிலாக அவர்களின் நம்பிக்கைகளைக் காட்டுவதே இதன் நோக்கமாகும்.
இவர்கள் தங்களை கராளக் கவுண்டன் என்றும் மலைபூசி என்றும் மலையாளத்தான் என்றும் சொல்லிக் கொள்வதுண்டு.
பயிர்த்தொழில் தொடர்பான பழமொழி
‘காராலன் கல்லுமேலே போட்டாலும் வெளையும்’
‘காராளனுக்கு கல்லுமேலெ போட்டா கதுரு வெளெயும்:
முள்ளுமேலெ போட்டா மோத்து வெளெயும்’
சாமை, வரகு, கேழ்வரகு, தினை, சோளம் முதலியன இவர்களுடைய பயிர்கள். கரடு முரடான மலைச் சரிவுகளில் விவசாயம் செய்கின்றனர். எனவே, கல்லில் விதைப் போட்டாலும் ‘கதிர்’ விளையும் என்றும், முள்ளுமேல் போட்டாலும் ‘மோத்து’ விளையும் என்றும் நம்பியே பயிர் செய்கின்றனர்.
‘மொயெ பேஞ்சா வெளயும்: மொயெ பேய்லெண்ணா காயும்’
‘மொயெ பேஞ்சா வெரெக்கெ வேண்டிதான்
மானொம் காஞ்சா அறுக்கெ வேண்டிதான்’
இவர்களுடைய வேளாண்மை முழுவதும் மழையை நம்பியே நடைபெறுவதால் இவ்வாறு கூறுகின்றனர். விதை விதைத்தாலும் அறுவடை செய்தாலும், மழையைப் பொறுத்தே இருக்கிறது. என்பதை அழுத்தமாகக் கூறுகின்றனர். மேலும் விளைச்சல் சரியில்லை என்றாலும்கூட அதற்காக சோர்வடைவதில்லை. இவர்கள் இப்பொன் மொழிகளைச் சொல்லிக்கொண்டு ஆறுதல் அடைகின்றனர்.
‘பில்லு வெதைய நம்பலாம்
நெல்லு வெதைய நம்ப முடியாது’
புல்லின் விதை இயல்பாகவே முளைத்துவிடும். ஆனால், நெல்லின் விதை அப்படியல்ல. விதைப்பதற்கென்று தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்து விதைத்தால்தான் செழிப்பான விளைச்சல் தரும் என்பது நம்பிக்கை.
‘வெளையாத காட்டில வெதைய போட்டுக்கிட்டு
வெளையல வெளையல என்றதா’
விளையாத காட்டில் விதையைப் போட்டு விளையவில்லையென்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு விளைகின்ற காட்டில் விதையை விதைத்து மகசூழ் பெறலாம். விளையாத காடு என்பது ஒருவகையான விஷச்செடி முளைத்திருக்கும். அந்தச் செடி இருக்கும் காட்டில் எந்த விதை போட்டாலும் முளைக்காது. மகசூழும் கிடைக்காது என்பது இவர்களின் நம்பிக்கை.
திருமணம் தொடர்பான பழமொழி
”வேடெனெ வுட்டு காராளெனெ கெய் புடிச்செ சமாச்சாறொம்”
இவர்கள் திருமணத்தின் பொழுது வெடிவெடிக்கிறார்கள். ஆற்றாங்கரைக்குச் சென்று மணப்பெண் அரிசி, காசு இவைகளை, ஆற்றில் போட்டுவிட்டுப் பின்னர் தண்ணீர் கொண்டுவருவாள். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே மணமகன் தாலிகட்டுவான். அப்பொழுது மணப்பெண் இப்பழமொழியை கூறுவதாக அமைந்துள்ளது. அதாவது, ஒரு காலத்தில் இவர்கள் வேட பெண்களாக இருந்தார்கள், பின்னர் வேடர்களை விட்டு, காராளர்களை மணந்து கொண்டனர் என்பதையே இது காட்டுவதாக உள்ளது. திருமணத்தின் பொழுது வேட்டுபோடுவதும் வேடர்களின் பழக்கமாக இருந்திருப்பதால் இன்றும் அதன் எச்சம் காணப்படுகிறது. .இவ்வழக்கத்தினை வைத்தே இவர்கள், காஞ்சிபுரத்திலிருந்து பெயர்ந்து வந்து, மலையில் வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிகளான வேடர்களுடன் கலந்திருக்க வேண்டும் என்று கூறலாம்.
‘கொயந்தெ குட்டி இல்லெண்ணா குத்திக்கிராங்கெ’
குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதலை முன்னிட்டு பச்சைக்குத்திக் கொள்வது வழக்கம் என்பதை காட்டுகிறது. பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இன்றும் கல்;வராயன் மலையாளிகளிடம் இருப்பதைக் காணலாம்.
விருந்து உபசரிப்பு தொடர்பான பழமொழி
”முதல் புருஷன கவனிச்சுட்டுதான் கள்ளப் புருஷன கவனிக்கனும்”
மலையாளிகளின் வீட்டிறகு விருந்திற்குச் சென்றால், வந்த விருந்தினரை முதலில் கவனித்துவிட்டு பின் அவர்களுடைய கணவர்களை கவனிப்பார்கள். வந்நவர்களுக்கே முதல் மரியாதை. இந்த பழமொழியைப் பார்க்கும் போது ஒரு காலத்தில் இவர்கள் வேட பெண்களாக இருந்தார்கள், பின்னர் வேடர்களை விட்டு, காராளர்களை மணந்து கொண்டனர் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.
‘காராளன ஏமாத்தி வாங்குனா கருவறுத்துடும்’
வெகுளியான இம்மக்கள், பல நூற்றாண்டுகளாக, வெளியாரிடம் ஏமாந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது உண்மை. மற்றவர்கள் இவர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே இந்த பழமொழியினைச் சொல்கிறார்கள். முன்பொரு காலத்தில் ஜாகீர்களிடமும் வியாபாரிகளிடமும் பெருமளவில் கடுக்காய், மூங்கில், கிளாக்காய் இன்னும் தானியங்களையும் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான, உப்பு, மிளகாய், துணிமணிகளைப் பெற்று வந்தனர். இவ்வித பண்டமாற்று முறையில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே.
‘அத்திப் பூ பூத்தால
ஆலங்காய் காய்த்தால’
ஒருவர் பல மாதம் அல்லது பல வருடங்களாக சொந்த பந்தங்களை பார்க்க வராமல் திடிரேன்று சொந்தங்கள் வீட்டிற்கு வருகை புரிந்தால், வந்ததின் நோக்கம் என்ன? என்று நேராக கேட்காமல் மரைமுகமாக விசாரிப்பதற்கு இவ்வாறு கூறுகின்றனர்.
உழைப்பு
‘என்னெக்கும் நம்மெ மலெயாளெத்தானா பொறந்தவனுக்கு,
மண்ணுலெ பேஞ்சாதான் கெஞ்சி’
‘நம்மெ கெய்யெ ஒடிச்சி கெஞ்சி குடிக்கவேண்டிதான்’
இவர்கள் ஆடு, மாடு, பன்றி போன்றவற்றை பெரிதும் விரும்பி வளர்க்கின்றனர். இவர்களுடைய பலமே உழைப்பு என்பதை இப்பழமொழிகள் மூலம் காட்டுகின்றனர். மேலும், அவர்களுடைய விரக்தியையும், ஆழ்ந்தத் துயரத்தையும் காட்டுகின்றன. இவர்கள் துயரத்தைப் போக்குவதற்காக மாலை நேரங்களில் சாராயம், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை குடித்துவிட்டு இன்பமாக ஆடுவதும், பாடுவதும் வழக்கம்.
‘ஆடுவதும் பாடுவதும் ஆம்பளெ சாதி: இதை எப்படிதான்
நம்புவெதோ பொம்பளெசாதி’
ஆண்களை எப்படிதான் புரிந்துகொள்வதோ! என்று ஆழ்ந்து சிந்தித்து இவ்வாறு கூறியிருப்பர் எனக்கருத இடமிருக்கிறது.
‘நாய்கு நல்ல நாள் பேயிக்கி பெரியநாள்’
நாய் வளர்பவர்கள் நாயிக்குத் தேவையான நல்ல உணவினை கொடுப்பார்கள். அதாவது பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில். ஆனால், பேயி பிடித்து இருக்கும் நபர்களிடமிருந்த பேயி ஓட்டுவதற்கு ஆடு, கோழி, பொறி, பொட்டுகடலை, பழவகைகள் போன்றவை வைத்து பேயி விரட்டுவார்கள். இந்த நடைமுறையை உணர்த்துவதற்காகச் சொல்லப்படுகின்ற பழமொழியாகும்
‘காவாளிக்கு யார் பெண் கொடுப்பா”
மலையாளிப் பெண்கள் உழைப்பவர்களைத்தான் மதிப்பார்கள். உழைக்கின்ற ஆண்மகனைத்தான் பெண்கள் திருமணம் செய்வார்கள். காவாயி என்பதற்கு உழைக்கத் தெரியாதவன் என்று பொருள்.
‘மலை ஏறுனாலும் மச்சான் துணை வேனும்’
மலையாளி மக்கள் மலைகளில் சென்று தேன் அறுக்கச் செல்வார்கள். அப்படிசெல்லும் பொழுது துணைக்கு மச்சானைத்தான் அழைத்துச்; செல்வார்கள். அண்ணன், தம்பிகளை அழைத்துச் செல்வதில்லை. பெண் கொடுத்த மச்சானை அழைத்து சென்றால் தனக்கு பாதுகாப்பாக இருப்பான். சகோதரர்களை அழைத்து சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்காக அழைத்து செல்வதில்லை.
‘தனக்குப் போகத் தர்மம்’
எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் எழையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைத்தால் தனக்கு வேண்டியதை எடுத்துவைத்துக்கொண்டு மிதம் இருந்தால் தான் உதவி செய்ய வேண்டும் என்பதை குறிப்பதாகும்
‘ஆத்துல போட்டாலும் அளந்து போடு’
ஒருவருக்கு பொன், பொருட்கள் கடன் கொடுப்பதாக இருந்தாலும் தானமாக கொடுப்பதாக இருந்தாலும் அளந்து கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் குடும்பத்தை சரியாக நடத்திச் செல்ல முடியும். இல்லையெனில் வாழ்க்கை சரியாக இருக்காது
‘தன்னவன் இல்லாத பொலப்பு
தடிக்கொண்டு அடிக்காது’
ஒரு வேலையை செய்யும் பொழுது உரிமையுடையவர் அருகிலிருந்து செய்தால் நன்றாக இருக்கும். விரைவில் செய்து முடிக்கலாம். உரிமையுடையவர் அருகில் இல்லாத வேலை நன்றாக இருக்காது. இதனைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகின்றது.
‘காராளன் சொத்து
பாதாளம் போனாலும் விடாது’
ஒருகாலத்தில் மலையாளிகள் மலையில் கிடைக்கும் ஏலக்காய், கடுக்காய், தாண்ரி போன்ற எண்ணற்ற பொருட்களைப் எடுத்துக்கொண்டு மலையின் கீழேயுள்ள மக்களிடம் கொடுத்து பண்டமாற்றில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவர்கள் கீழேயுள்ள மக்களால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எனவே, ஏமாறாமல் இருப்பதற்கான எச்சரிக்கையை வெளிப்படுத்துவதற்கான பொன்மொழியாக இப்பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள். மலையாளிகளின் உழைப்பை ஏமாற்றி சாப்பிடுகின்றவன் பாதாளத்தில் சென்று மறைந்தாலும் மலையாளிகளின் உழைப்பு அவர்களைச் சும்மா விடாது, நிச்சயம் வினைப்பயனை அடைவார்கள் என்பதான நம்பிக்கையை இப்பழமொழி வெளிப்படுத்துகின்றது.
முடிவுரை
கல்வராயன் மலை மலையாளிகளின்; பழமொழிகளை விளக்கும் வாயிலாக, தொழில், உறவுமுறை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், வேளாண்மை, திருமணம் போன்ற பண்பாட்டுக் கூறுகளின் பொருண்மைகளை அறிய முடிகின்றது. இத்தகைய பழமொழிகள் சிந்தனையைத் தூண்டி வாழ்விற்கு; ஊன்றுகோலாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையாளிகளது அனைத்துப் பழமொழிகளையும் சேகரித்து ஆய்வு செய்யின்; அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்றையும் மீட்டுருவாக்கம் செய்யலாம்.
உசாத்துணை
1. பக்தவத்சலபாரதி, 2007. தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம்.
2. சக்திவேல், சு. 2003. நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
3. தமிழண்ணல், 2011. தொல்காப்பியம். மதுரை: செல்லப்பா பதிப்பகம்.
4. ராஜ் கௌதமன், 2019. தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு. சென்னை: பாவை பிரிண்டர்ஸ்.
5. ஜார்ஜ் தாம்ஸன், தமிழில் எஸ்.வி.ராஜதுரை. 2014. மனித சாரம். சென்னை: நியூ செஞ்சுரி புக் அவுஸ்.
6. புதியவன், இலக்கிய அறிவியல்
தகவளாளிகள்.
ல.காட்டாளி 79 கூச்சிக்கல்வளைவு
பொட்டியம்மா 70 கூச்சிக்கல்வளைவு
இராமசாமி 37 கெங்கப்பாடி
அண்ணாமலை 50
வெள்ளையன் 67 ”
உண்ணாமலை 52
புளியந்தொரை சடையன் 70
தீர்த்தன் 44 ”
பழனிச்சாமி 36 ”
அ.மாயவன் 36
* கட்டுரையாளர்: முனைவர் சு.குமார், தமிழ்த் துறைப் பேராசிரியர், ஸ்ரீ வினாயகா கலை ரூ அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை.
Pilckumar1983@gmail.com