முன்னுரை
இயற்கையின் மக்களான மானிடர்களின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்புவரை ஏதோ ஒருவிதத்தில் ஒன்றிக்காணப்படுகிறது. இன்பமும் துன்பமும் இணைந்தது மனிதவாழ்வு என்றாலும், மக்கள் வாழ்கிற சூழலுக்கும் கிடைக்கப் பெறுகிற வசதிகளுக்கும் ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாற்றமுள்ளதாகக் காணப்படுகிறது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட அவரவர் வாழும் நிலைக்கேற்ப வேறுபட்டு விளங்குகின்றன. மனிதனின் அறிவு நிலைக்கேற்ப அவன் பேசும் சைகையிலிருந்து திருந்திய நிலை வரை மாற்றமுள்ளதாகக் காணப்படுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் மாற்றமுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் பழங்குடி மக்களான முதுவர் வாழ்வியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.
முதுவர் அறிமுகம்
கேரள மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவர் பழங்குடி மக்களே ஆதிமுதற்கொண்டு வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர். இப்பழங்குடியினர் கேரளத்தில் இடுக்கிமாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலை, மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். “கேரளாவில் வசிக்கக்கூடிய முதுவர்கள் – மலையாள முதுவன் என்றும், தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய முதுவன் பாண்டிய முதுவன் என்றும் அழைக்கப்படுகின்றனர்” என்று ஜோஸ்வா தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியின மக்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
முதுவர் இனம்
முதுவர் இனம் என்பது நெருங்கிய உறவினரிடையே மணம் செய்து கொள்ள மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும் ஓர் இயல்பாகும் என்ற மானிடவியலறிஞரின் கருத்திற்கேற்ப முதுவர் பழங்குடியினர் பிற பழங்குடியினரிடமிருந்து வேறுபட்ட பண்புநலன்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேனீக்கள் மனித இனங்கள் என்னும் நூலில், ஆனைமலையில் வாழும் மலைமக்களும் திருவிதாங்கூர் – கொச்சிக்காடுகளில் வாழ்ந்துவரும் நாகரிகமடையாத மக்களும் திராவிட இனத்தைச் சார்ந்தவராவர் என்று எல்.ஏ.கிருஷ்ணஐயர் குறிப்பிடுகின்றார். இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதுவர் கலப்பினத்தவர் என்று மாக்கே குறிப்பிடுகின்றார். தர்ஸ்டனும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இப்பழங்குடியினர் உயர் சாதியினராகக் கருதப்படும் பிரமாணர், நாயர், தேவர், அகமுடையார், வெள்ளாளர் போன்ற இன மக்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். தங்கள் இனப் பெண்கள் மேற்குறிப்பிட்ட இனத்தாருடன் மண உறவு கொண்டாலும் திரும்பவும் தங்கள் இனத்தாருடன் சிறிது காலம் கழித்து சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர், மலைப்புலையன், காடர், வேடர் மன்னான் போன்ற இனமக்களைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதோ, அவர்களிடமிருந்து பொருட்களை உண்பதோ இல்லை என்கின்றனர்.
முதுவர் இனத்தார் தொல்தமிழரா அல்லது தொல்திராவிடரா என்று யூகிக்க அவர்கள் பேசும் மொழி, உடல் அமைப்பு பூர்வீகம் பற்றிய செய்திகள் போன்றவை உதவுகின்றன. முதுவர் மொழி என்பது தமிழும், மலையாளமும் கலந்தமொழியாக உள்ளது. “திராவிடர்கள் நீளமான மண்டையோடு குறுகிய உருவமும் சற்றுச்சப்பையான மூக்கும், கறுப்பு மயிரும் கொண்டவர்கள்” என்று ந.க.மங்களமுருகேசன் கூறுகிறார். இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் தாலுக்காவில் வாழ்கின்ற முதுவர்களின் உடலமைப்பும், தமிழர்களின் உடலமைப்பினை ஒத்துக்காணப்படுகிறது. முதுவர் என்பதற்கு தமிழ் அகராதியில் ஒருசார் மலைச்சாதியினர் (Ahilltrible) என்ற குறிப்பு காணப்படுகிறது. மேலும் முதுகுடிப்பிறந்தோன் என்ற பாடல் அடி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. இலக்கியச்சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது ‘முதுகுடி’ என்பது தொன்மையான குடி என்றும், முது என்ற சொல்லின் அடிப்படையில் பெயர்கொண்ட முதுவர் என்ற பழங்குடிகள் மலையில் வாழும் தொன்மையான இனத்தினர் என்றும் கொள்ள இடமளிக்கிறது.
முதுவர் பெயர்க்காரணம்
முதுவர் என்ற பெயருக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.
1. போரின் காரணமாகப் பாண்டிய நாட்டை விட்டு மக்கள் புறப்படும்போது, முதுகில் மீனாட்சி சிலையைச் சுமந்து கொண்டு வந்தார்கள்.
2. பாண்டியனுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டபோது தங்கள் குழந்தைகளை முதுகில் சுமந்து கொண்டு வந்தார்கள் மீனாட்சி சிலையை, பாண்டியனின் இறந்த உடல், குழந்தை என்ற மூவரையும் சுமந்து வந்ததாக மூன்று கதைகளின் மூலம் அறியமுடிகிறது. மேலும், முதுவர்கள் தங்களைப் பரம்பரையாகக் காடுகளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளாக நினைக்கவில்லை. தங்களிடையே வழங்கிவரும் கதைவழி தங்களுடைய முன்னோர்கள் மதுரையைச் சார்ந்தவர்கள் என்றும் நம்புகின்றனர். பாண்டிய மன்னர் ஆட்சியில் ஏற்பட்டபோர் அல்லது தொல்லைகளின் விளைவாகக் காடுகளில் குடியேறினர் என்று நம்புகின்றனர். மேலும், மதுரையை விட்டு மலைப்பகுதிகளுக்கு வரும்போது தங்களுடைய குழந்தைகளை முதுகின்மேல் சுமந்து வந்ததால் முதுவர் எனப்பட்டனர். இன்னொரு கருத்துப்படி மதுரையைவிட்டு வரும்போது தங்கள் குலதெய்வமான மீனாட்சி அம்மனின் உருவச்சிலையை முதுகில் சுமந்து வந்ததால் முதுவர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக, இவர்கள் எந்தக்காலத்தில் காடுகளில் குடியேறினர் என்பது எந்த முதுவர்களால் குறிப்பாக கூறமுடியவில்லை. ஆனால் “பாண்டிய அரசன் தென்னகத்தின்மீது படையெடுத்து வந்தபோது அல்லது தெலுங்கு நாயக்கர் 14-ஆம் ஆண்டில் போடிநாயக்கனூரைக் கைப்பற்றி ஆட்சிசெய்தபோது அவர்கள் குடிபெயர்ந்திருக்க வேண்டும். மற்றொருவர் கருத்துப்படி 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமதியர் தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தபோது இவர்களைக் காடுகளுக்குள் விட்டியிருக்கவேண்டும்” என்று எக்டர் தர்ஸ்டன் கூறுகிறார். இக்கருத்துக்களின் காரணங்களால் இப்பழங்குடியினர் முதுவர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.
முது – தொன்மையான குடி
“முது என்றால் வயதான என்ற பொருள் தரும் முது என்ற சொல்லுடன் ‘வ’ இணைந்து முதுவர் என்று ஆயிருக்கவேண்டும் முதுவர் என்ற பெயர்க்காரணம், தொன்மையான குடியிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும்” என்று கூறுகிறார். பக்தவச்சலபாரதி மேலும் கள ஆய்வின்போது மற்ற பழங்குடிகள் முதுவர் இனத்தாரை மூத்தோர் என்று அழைப்பதாக முதுவர்கள் கூறுவதால் மற்ற பழங்குடிகளைவிட இவர்கள் மூத்தகுடி மக்கள் என்பதை அறியமுடிகிறது. இலக்கியச்சான்றுகளும் முதுகுடி என்பது தொன்மையான குடி என்றே கூறுகின்றன.
முதுவர்கள் பற்றிய தொன்மை கதை
முதுவர்களின் முன்னோர்கள் முன்னொரு காலத்தில் செல்வச் செழிப்பாக மதுரை மாநகரில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வணிகம் செய்தும் வேளாண்மை செய்தும் தங்களுடைய வாழ்வை நடத்தி வந்தனர். இவர்களுடைய கொள்வினை, கொடுப்பினை எல்லாம் அங்கேயே நடைபெற்றது. இவர்கள் அங்கேயே பெண் எடுத்தும், பெண் கொடுத்தும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், ஒற்றுமையுடனும், பழகி தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். மதுரையில் பாண்டிய மன்னன் ஆட்சி செய்த காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் கண்ணகியின் கணவனான கோவலன் வாணிபம் செய்வதற்காக மதுரை வந்து காவலர்களால் பிடிக்கப்பட்டு, தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதால் கொலை செய்யப்படுகிறான் பாண்டிய மன்னனின் செங்கோல் தாழ்கிறது. நடந்ததையறிந்த கண்ணகி கடுங்கோபம் அடைகிறாள். நீதி கேட்கிறாள். நீதி பொய்த்துப்போகவே கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அதுவரையிலும் செல்வச் செழிப்பாக இருந்த மதுரை மக்கள் அன்று தங்கள் உறைவிடத்தையும், உடைமைகளையும் விட்டுவிட்டு மதுரையிலிருந்து வெளியேறுகின்றனர். வெளியேறிய அம்மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அவர்களை எந்த நாட்டவரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. எனவே, வேறுவழியின்றி அவர்கள் அங்கியிருக்கும் காடுகளிலும், மலைகளிலும் தஞ்சம் அடைகின்றனர்.
“முதுவர்கள்” ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து காடுகளில் பிழைக்க வழியைத் தேடிக்கொண்டு அங்கேயே சிறுசிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டனர். அவர்களுக்குள்ளே எவன் பெரியவன் என்ற இடர்பாடுகள் வந்ததால், சொந்தங்களெல்லாம் ஒன்று சேர்த்து, தொடர்ந்து அடிக்கடி பூசல் ஏற்பட அவர்கள் இருபிரிவாகி ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு ஒரு கூட்டம் பிரியலாயிற்று. பின்பு தங்களுக்கென ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் சொல்படிதான் நடக்கவேண்டும் என்ற நிலை உருவாயிற்று. இன்று அந்நிலை சற்றுமாரி குடித்தலைவன் (மூப்பன்) என்று அழைக்கப்படுகின்றான்” என்று செல்வப்பெருமாள் கூறுகிறார். இப்பழங்குடி மக்கள் கண்ணகியைத் தெய்வமாக வழிபடுகின்றனர். கண்ணகி தெய்வத்திற்காக தங்கள் கழுத்தில் மாலையிட்டு கொடுங்கலூர் வரை செல்வது அம்மக்களிடம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. கண்ணகி வழிபாட்டை பகவதி வழிபாடு என்று கூறுகின்றார்கள்.
1. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
2. உரைசாப் பத்தினியை உயர்தோரேத்துவர்
3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
என்ற நிலைப்பாட்டினை இன்று வரை கடைபிடித்துவருகின்றனர். முதுவர் பழங்குடி மக்களுக்கென்று ஒரு தலைவன் உள்ளார். பெண் விதவையானாள் அவளை யாரும் அணுகாமல் இருப்பது, பிறவிப் பயனை நினைத்து வருந்துவது அடுத்து எப்படி அமையுமோ என்று அச்சம் கொள்வதும் இன்றளவும் முதுவர் பழங்குடி மக்களிடையே காணப்படுகிறது.
பூர்வீகம்
முதுவர்களின் பூர்வீகம் தமிழகம், அதுவும் மதுரை என்று அவர்கள் கூறுவது முதுவர் தமிழர்களாக இருக்கலாமோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. மேலும், மற்ற பழங்குடிகளைவிட வாழ்க்கை முறையிலும் இவர்கள் மாறுபடுகின்றார்கள். பழங்குடிகளாக இருப்பினும் திருமணம், வாழ்க்கைமுறை முதலியவற்றின் கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது முதுவர் இனத்தினர் தமிழர் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது.
பூர்வீகம் பற்றிய கதை
முதுவர்களின் பூர்வீகத்தைப்பற்றிய கதை அவர்களின் நம்பிக்கையையும், அவர்கள் காடுகளில் வாழ்வதற்கான காரணத்தையும் வெளிப்படுத்துகிறது. பாண்டிய மன்னனின் உடல் அடிமாலிக்கருகேயுள்ள “சேரன்தோடு”என்னும் இடத்தில் (இதுதான் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்குமான எல்லை) புதைக்கப்பட்டுள்ளது. பாண்டியன் மீண்டும் வந்துபிறப்பான் அவன் பிறக்கும் தினத்தில் கல்மாரி பூமாரி மலை பெய்யும், அன்ற நாட்டோ சேருவோம் என்கின்றார்கள்.
முதுவர்களின் உடல் அமைப்பு
முதுவர்களின் உடலமைபைப் பொறுத்தளவில் இரு வேறுபட்ட தோற்றம் பொலிவினைக் கொண்டுள்ளனர். சிலர் உயரமாகவும், சிலர் உயரம் குறைந்தும், சிலர் நல்ல அழகுடனும் உடற்கட்டுடனும், சிலர் எதிர்மாறாகவும், சிலர் தவிட்டுநிறம் கலந்த கறுப்பு நிறத்தை உடையவர்களாகவும், சிலர் கறுப்பு நிறத்தை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.
‘முதுவரு’க்குரிய அடையாளங்கள்
கையில் கத்தி, காதில்கடுக்கன், நெற்றியில் விபூதி தலையில் குடுமியும் கொண்டையும், தலைப்பாகையும் முதுகில் பொட்டணமும் கொண்டு வேட்டியின் இருமுனைகளையும், சேர்த்துப்பின்பக்கம் பிராமணர் உடுப்பது போல் தார்போடலும் காணப்படுகின்றன. பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பல நிற ஆடைகளை அணிகின்றனர். புடவையின் முந்தானையை வலது தோலின் மேற்புறமாக முடிச்சிட்டுக் குறக்கட்டு முறையில் புடவை அணிவர் தோளோடு சேர்த்து முதுகுப்புறம் குழந்தைகளைக் கட்டியிருப்பர் ஆகிய தன்மைகளை உடையவர்களாக விளங்குவர். இப்பழங்குடி பெண்கள் ஆண்களைக் கண்டால் ஒளிந்து கொள்கின்றனர்.
முடிவுரை
தொன்மையான குடி என்ற பொருளில் முதுவர் என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்று கருதமுடிகிறது. முதுகில் பெண்கள் இன்றும் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருப்பதால் முதுவர் என்ற பெயர் தோன்றியிருக்கலாம். இடப்பெயர்ச்சிக்குரிய காலகட்டம் வேறுபட்டாலும் இவர்கள் இடம்பெயர்ந்து சென்றது பாண்டிய நாட்டிலிருந்து தான் என்பதை கதைகளின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற பழங்குடிகளைவிட வாழ்க்கை முறையிலும் மாறுபடுவதுமான கருத்துக்களை இக்கட்டுரை முன்வைக்கிறது.
துணைநின்ற நூல்கள்
1. ஜோஸ்வா, முதுவர், புலையர் வாழ்வியல் ஓர் ஆய்வு, முனைவர்பட்ட ஆய்வேடு, கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை, கேரளா, 1998.
2. Edgar Thurton, cast and tribes of south India, Cosmo Publications, Delhi, Second Edition, 1975
3. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானுடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2009
4. கு.இராஜேந்திரன், முதுவர் இனப்பழங்குடியினர், சேகர் பதிப்பகம், புதுச்சேரி, 2008.
* கட்டுரையாளர்: – ரா.ரீனா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. –