உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள்
முன்னுரை
பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.
பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு
முருகு பொருநாறு பானிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக்காஞ்சி – மருவினிய
கோலநெடுநல் வாடை கோல் குறிஞ்சிபட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என்று பாடப்பட்டுள்ள பழம் பெரும்பாடலில் முதல்வரியில் இடம் பெற்றுள்ள முல்லை என்ற சொல் முல்லைப்பாட்டைக் குறிப்பதாகும். பத்துப்பாட்டு என்ற தொகைப் பெயரில் காணப்படும் பாட்டு என்பதைத் தம் பெயரிலேயே கொண்டுள்ள பாட்டுகளுள் இந்நூல் முதல் நூலாகும். இப்பாடல் 103 அடிகளைப் பெற்று பத்துப்பாட்டு காவிரிப்பூம்பட்டினத்து பாடல்களிலே மிகச்சிறிய பாடலாகும். இதனைப்பாடியவர் காவிரிப்பூம்படடினத்துப் பொன்வணிகனார் மகனார் நம்பூதனார் ஆவார், முல்லை நில மக்களின் வாழ்வியல், ஆயர் இனமக்களின் வாழ்க்கை முறைகளை விளக்குவதாக அமைவதோடு பண்பாட்டினையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. தமிழரது பண்பாட்டினைச் சித்தரிக்கும் முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு தமிழர் தம் பண்பாட்டின் சிறப்புகளை விளக்குகின்றது. தமிழரது பண்பாடுகளிலொன்றாக கடவுள் நம்பிக்கை இருந்ததென்பதனை கடவுள்களது பெயர்களைச் சுட்டுவதன் ஊடாக நப்பூதனார் விவரிக்கின்றார். முல்லை நிலக்கடவுள் திருமாலை வழிபட்டதனை முல்லைப்பாட்டு குறிப்பிடுகின்றது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்’ (தொல் 5)
என்ற வரிகள் முல்லை நில மக்கள் திருமாலை வழிபட்டமையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தெய்வ வழிபாடு பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திட்டது. முல்லை நிலமக்கள், ஆயரும், ஆய்ச்சியரும் இடையரும், இடைச்சியரும் ஒருங்கு கூடிக் குரவைக் கூத்தாடி திருமாலுக்கு வணக்கம் செலுத்தியதை கலித்தொகை இலக்கியமும்,
இவர்கள் வணங்கும் பெருந்தெய்வம் மால் திண்ணிதா
தெய்வமால் காட்டிற்று இவட்கு
என்று குறிப்பிடுகின்றது.
‘உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்தமால்’ என்னும் வரிகள் முல்லைக்குரிய தெய்வமான சங்கு, சக்கரம் ஏந்திய திருமாலைக் குறிக்கின்றன திருமால் எடுத்த வாமன அவதாரம் இதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
வாழ்வியல் ஒழுக்கம்
வாழ்வியல் தொடர்பான ஒழுக்கம் பற்றி முல்லைப்பாட்டு விளக்குகின்றது. பண்பாடெனப்படுவது நிலப்பண்பையும் உளப்பண்பையும் குறிக்கும் என்பதற்கேற்ப ஐந்திணைகளை வகுத்து முல்லைப்பாட்டில் முல்லை நிலத்திற்கேற்ப வாழ்வியல் ஒழுகலாறுகளை விவரிக்கிறது. ‘முல்லை சான்ற கற்பு’ என்று கற்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது முல்லைத் திணை போர் நிமித்தமாகவோ, பொருள் தேடல் நிமித்தமாகவோ பிரிந்து சென்ற தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் நிலைப்பாடு ஆகும். இதுவே முல்லைத் ததினையாகப் பேசப்படுகிறது. இத்திணையின் முதற்பொருளாக அமைந்த நிலம் காடுறை உலகம் ஆகும். பெரும் பொழுது கார்காலமும், சிறுபொழுது மாலைக்காலமும் குறிப்பாகக் கார்கால மாலைக்காலத்தைக் குறிப்பதாகும். நிலம், காலம் சார்ந்த இயற்கையின் அடிப்படையில் எழும் மனஉணர்வுகளை இந்த முல்லைப்பாட்டு சித்தரிக்கின்றது.
தலைவனைப் பிரிந்த நிலையில் தலைவி ஆற்றியிருத்தல் குறிப்பிடப்படுவதால் முல்லைக்குரிய இருந்தலும், இருத்தல் நிமித்தமும் என்னும் உரிப்பொருளைக் கொண்டிருக்கிறது.
செறி இலைக் காயா அஞ்சனம் மலர
முறி இணர்க் கொன்றை நான் பொன் கால
கோடல் குவிமுகை அங்கை அவிழ
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப (மு.பா 93-96)
என்ற வரிகள் முல்லை நிலத்துக்குரிய கருப்பொருட்களை விளக்குகின்றன.
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய அகத்தினை இயல்புகளை மட்டும் அல்லாமல், முல்லைக்குப் புறம்பாகக் கூறப்படும் வஞ்சித்தினையின் இயல்புகளையும் குறிப்பிடுகின்றது. போர் மேற்கொண்டு காட்டில் தலைவன் பாசறை அமைத்துத் தங்கியிருபது வஞ்சித்திணைப் பாற்பட்டதாகும். இருப்பினும் முல்லை ஒழுக்கமே முதன்மை பெற்றுள்ளது. கற்பின் வழுவாது பொற்புடன் இருத்தல் என்று முல்லைக்கு விளக்கம் செய்வர். எத்தகைய துன்பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்பர்.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் (தொ.1000)
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப இந்நூலில் பாட்டுடை மாந்தர்கள் பெயர் குறிப்பிடவில்லை.
கற்பு நெறி
மகளிர்க்குரிய பண்புகளில் சிறப்பானதாகப் போற்றப்படுவது கற்பு நெறியே முல்லைப்பாட்டு பழந்தமிழரின் கற்பு நெறி குறித்து மிகுதியும் பேசுகின்றது. வினை முடித்தற் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ள தலைவனை எண்ணி ஆற்றளாகிய தலைவியைக் கண்டு தலைவன் மீண்டு வரும் வரை ஆற்றியிருப்பாயாக என்று முதுபெண்டிர் கூறுகின்றனர். உடன்படாத தலைவிக்காக விரிச்சி கேட்கின்றனர். ஊரின் புறத்தே சென்று பெண்கள் முல்லை மலர்களையும் நெல்லையும் தூவி விரிச்சிக் கேட்டு நின்ற பொழுது இடையர் குல பெண்ஒருத்தி.
‘கொடுங்கோற் கோவலர் பின் நின்று
இன்னே வருகுவர் தாயர்’ (மு.பா.15-16) என்கிறாள்.
கன்றுகளைப் பார்த்து அவள் கூறிய நற்சொற்களைத் தாங்கள் கேட்ட பொழுது, போர் மேற்சென்ற தலைவன் வினைமுடித்து, போர் மேற்சென்ற தலவன் வினை முடித்து விரைவில் திரும்புவார் என்று ஆற்றுப்படுத்துகின்றனர். தலைவி ஆற்றாதாளாய் மீண்டும் மயங்குகின்றாள், நெட்டுயிர்க்கின்றாள் அணிந்துள்ள அணிகலன்கள் நெகிழ அம்பு தைத்த மயில் போல நடுங்கி நிற்கிறாள் இந்நிலையினை மாற்றிக் கொள்ளவும் தன் துன்பத்தைச் சற்று ஆற்றிக்கொள்ளவும் தன் நெஞ்சத்தை வேறொன்றின் மேல் திருப்பிக் கொள்ள கொட்டும் அருவியின் இன்னோசையில் செவி சாய்கின்றாள். அப்போது தலைவியின் காதுகள் நிரம்பும்படியாகத் தலைவன் வரும் ஆரவார ஓசை எழுந்ததையும், முல்லைப்பாட்டு, அடிகள் தெரிவிக்கின்றன. இவை தலைவியின் கற்பு நெறியையும், தலைவன் பிரிவால் வாடும் தலைவயின் ஆற்றியிருந்தலையும் விளக்குதலால் பண்டைத் தமிழரின் கற்பு நெறி வாழ்வின் ஆழம் புலப்படுகிறது.
விரிச்சிக் கேட்டல்
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னர் சகுனம் பார்க்கும் வழக்கம் பண்டு தொட்டே மக்களிடம் இருந்து வருகின்றது. இவ்வழக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் உண்டாவதாகும். சகுனம் பார்க்கும் வகையில் ஒன்று விரிச்சி வருங்காரியத்தை விரிவாக முன்னரே தெரிவிப்பது விரிச்சியாகும்.
தலைவன் பிரிவை ஆற்றியிருக்கின்ற தலைவியின் நிலையைப் பற்றி எடுத்துரைக்கும் இடத்தில் முல்லைப்பாட்டு பண்டைய மக்களின் விரிச்சிக் கேட்டல் என்னும் நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றது.
முல்லைப்பாட்டில் தலைவி தலைவன் பிரிவாற்றாமையை நினைத்து வருந்தும் பொழுது அவளைச் சுற்றியுள்ள முதுமை உடைய பெண்கள் முல்லைப் பூவையும், நெல்லையும் தூவி இறைவனிடம் நற்சொல் கேட்டனர்.
யாழ் இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
…………………………………………………………………..
பெருமுது பெண்டியர் விரிச்சி நிற்ப (மு.பா.8-11)
அவ்வாறு கேட்டு நிற்கும் போது அப்பக்கம் செல்வோர் சொல்லும் சொல் தமக்கு ஏற்றதாக இருப்பின் அவர்கள் மேற்கொள்ளும் செயல் இனிது நிறைவேறும் என நினைத்து நம்பிக்கை கொள்வார்.
போர்ப்பாசறை நிகழ்வுகள்
வஞ்சித்திணை சார்ந்த போர்ப்பாசறைப்பற்றி முல்லைப்பாட்டு குறிப்பிடுகின்றது. தலைவன் பகை நாட்டிற்கு சென்று அங்குள்ள காட்டை அழித்து முள்ளை வேலியாக அமைத்து தூண்களை நிறுவி கடல் போல அகலமாக பாசறை அமைத்தான் என்பதை,
கான்யாறு தழிஇய கல்நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு மைம்புதல் எருக்கி
……………………………………………………………………………
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்
படுநீர்ப் புணரியில் பரந்த பாடி (முல்லைப்பாட்டு 24-28)
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
பாசறையில் தலைவன் நிலை
கற்புக்காலத்தில் தலைவன் தலைவியை பிரியாது இருக்க நினைப்பதும் பொருள் காரணமாக அல்லது போர் காரணமாகப் பிரிய மனம் கொள்ளாது வருந்துவதும் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவியை நினைத்து ஆற்றாத நிலைப்பாடுடையவனாகின்றான்.
போர் காரணமாகப் பிரிந்த தலைவன் பாசறையில் இரவு தங்கி இருக்கும் பொழுது கண் உறக்கம் கொள்ளாமல்,
மண்டு அவர் நசையொடு கண்படை பெறா அது (மு.பா.67)
முதல் நாள் நடந்த போரில் நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்கின்றர்.
எடுத்து எறி எட்கம் பார்ய்தலின் புண்கவர்ந்த
பிடிக்கணம் மறந்த வெழம் வேழத்துப்
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து (மு.பா 69 – 76)
நகை தாழ் கண்ணி நல்வலம் திருத்தி
அரசு இருந்து பணிக்கும் முரசு முழங்கும் பாசறை (மு.பா 78 – 79)
தலைவன் மறுநாள் போரில் வெற்றி பெற்றவுடன் நிம்மதி பெருமூச்சுடன்
இன் துயில் வதியுநற் (மு.பா 80)
இனிதாக தலைவன் உறங்கினான் என்ற கருத்தின் மூலம் வீரம் நிறைந்தவனாக தலைவன் இருந்தது புலனாகின்றது.
மங்கையர் வார் சடை அணிதல்
பாசறையில் விளக்கேற்றும் மகளிர் தான் உடுத்தியிருந்த ஆடையுடன் வாளையும் சேர்த்து அணிந்திருந்தனர் என்பதை,
திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர் (மு.பா.46,47)
என்ற வரிகள் வாள் அணியும் பழக்கத்தை உணர்த்துகின்றது.
பொழுது அறிவித்தல்
வீரர்கள் நாழிகை அறிவதற்கு நாழிகை வட்டிலைப் பயன்படுத்தி இருக்கின்றனர். வட்டிலில் நீரிட்டு சிறு துளைவழியாக நீரினைக் கசிய விட்டு நீரை அளந்து காணும் கருவி நாழிகை வட்டில் குறுநீர்க் கன்னல் (மு.பா.58) என்ற வரி மூலம் அறிய முடிகின்றது.
மெய்க்காப்பாளர்
அரசருக்கு நம்பிக்கையான வீரர்களே அரசனின் மெய்க்காப்பாளாராக நியமிப்பது பண்டைய வழக்கமாகும்.
உடம்பில் உரைக்கும் உரையாநாவின்
படம்புகு மிலேச்சர் (மு.பா.65,66)
என்று முல்லைப்பாட்டு கூறுகிறது.
மன்னனிடம் ஒன்றைச் சொல்ல விழைபவர் அம்மன்னனை வணங்கி வாழ்த்திய பிறகே தாங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்திருக்கிறது.
அரசனது மெய்க்காப்பாளர் மெய்ப்பை என்னும் சட்டை அணியும் வழக்கம் கொண்டிருந்தனர்.
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை, வண்கண்யவனர் (மு.பா.60,61)
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.
முடிவுரை
முல்லைப்பாட்டு தமிழரின் கற்பு நெறி பற்றியே மிகுதியாகப் பேசுகின்ற போதும், வஞ்சித்தினை பற்றிய செய்தியும் விளக்கப்பட்டுள்ளது. விரிச்சிக் கேட்டல் வழக்கம், போர்ப்பாசறை அமைப்பு, நாழிகை வட்டில், மெய்க்காப்பாளர் நியமித்தல் ஆகிய பண்டைத் தமிழரின் வழக்கங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. முல்லைத் தினைக்குரிய ‘இருத்தல்’ என்னும் உரிப்பொருளுக்குச் சிறப்பாகப் பொருந்தி சிறந்த பண்பாட்டுப் பதிவாக முல்லைப்பாட்டு விளங்குகின்றது.
பார்வை நூல்கள்
1. சாந்தி செ – சங்க இலக்கிய மாண்பு, கவிஞன் பதிப்பு அகஸ்தீஸ்வரம்.
2. சுப்பிரமணியன், ச.வே.தொல்காப்பியம் (முழுவதும்) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
3. நாராயண வேலுப்பிள்ளை வித்வான்.ஆ. பத்துப்பாட்டு பகுதி – 1
4. நீலகண்ட பிள்ளை தா.சங்கத்தமிழர் வாழ்வியல், செம்மூதாய் பததிப்பகம், சென்னை – 14.
5. வளர்மதி வே. (ப.ஆ) – தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள், தமிழ்மரபு அறக்கட்டளை, ஈரோடு
* கட்டுரையாளர்: முனைவர் சு.மேரி சுபா செல்வராணி, உதவிப் பேராசிரியர், தமிழத்துறை, ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி